Friday, March 9, 2018

பதிவ்ரதா காந்தாரியும் குந்தியின் அதிதி பூஜையும்


திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோர் கிடுகிடுவென்று வளர்ந்து யௌவனப் பருவத்தை அடைந்தார்கள். இப்போது பீஷ்மருக்கு ஒரு பெரும் கடமை வந்தது. இவர்கள் மூவருக்கும் விவாஹம் செய்துவைக்க வேண்டும். பல்வேறு தேசங்களுக்கு ஒற்றர்களையும் பிராமணர்களையும் அனுப்பி பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டார்.

குந்திபோஜராஜனுக்கு அழகு நிரம்பிய பெண்ணொருத்தி இருந்தாள். காந்தாரதேசத்து ஸுபலனுக்கு ஒரு பெண் யௌவனமும் அழகும் நிரம்பி விவாஹத்துக்குக் காத்திருந்தாள். மத்திரதேசத்தில் இப்பூமியிலேயே இல்லாத அளவுக்கு சௌந்தர்யமான பெண்ணொருத்தி இருப்பதாக அந்த தேசம் சென்றுவந்த பிராமணர்கள் பீஷ்மரிடம் தெரிவித்தார்கள்.
பீஷ்மரின் தர்பார் தாண்டி இருந்தது அந்த மண்டபம். சிவப்பு வர்ணத்தில் இருந்த உயர்ந்த ஆசனத்தில் பீஷ்மர் அமர்ந்திருந்தார். பக்கத்தில் இளைஞனான விதுரன் இருந்தார்.
“விதுரா! என்னாலும் ஸத்யவதியினாலும் மஹாத்துமாவான வியாஸராலும் இந்தக் குலம் கெடுதி அடையாமல் காப்பாற்றப்பட்டது. நீங்கள் பிறந்தவுடன் எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை”
விதுரர் அமைதியாக பீஷ்மரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
“அப்படிப்பட்ட இந்தக் குலம் கடல் போல பெருக வேண்டும் என்று நினைக்கிறேன். யதுகுலத்தில் ஒருத்தியும் ஸுபலனின் பெண்ணும் மத்திரதேசத்தவனின் பெண்ணும் நமக்கு தகுதியானவர்கள். அந்த க்ஷத்ரிய அரசர்களிடம் கேட்டு விவாஹம் செய்யலாமென்று இருக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?”
“நீங்களே எங்கள் தந்தை. நீங்களே எங்கள் தாய். ஆசாரியரும் நீங்களே. ஆகையால் இக்குலத்திற்கு எது நன்மையோ அதை நீங்களே முடிவு செய்து எங்களுக்கு அருள வேண்டும்”
கைகூப்பினார் விதுரர்.

“யாரங்கே!” கனத்த குரலுடன் கை தட்டினார் பீஷ்மர்.
வாயிற்காப்போன் ஓடிவந்தான்.
“காந்தார தேசத்துக்குச் சென்று வந்த பிராமணரை இங்கே அழைத்து வா!”
அவன் விரைவாக வெளியேறி அந்த பிராமணருடன் வந்தான்.
“ஸுபலனின் புத்ரி பெயர் என்ன?”
“காந்தாரி”
“அவளது குண விசேஷங்கள் என்ன?”
“வரப்பிரசாதியான ஈஸ்வரனைத் துதித்து புண்ணியவதியான அந்த காந்தாரி நூறு புத்திரர்களைப் பெற வரம் பெற்றுள்ளாள்” அடக்கமாகவும் அளவாகவும் பேசினார் அந்த பிராமணர்.
அவர் வெளியேறிய பின்னர் பீஷ்மர் விதுரனின் பக்கம் திரும்பினார். அவர் அதை ஆமோதிப்பது போல தலையசைத்தார்.
**
பீஷ்மர் காந்தார தேசத்துக்கு தூது அனுப்பினார். ஸுபலன் திருதராஷ்டிரனுக்குப் பெண் பார்ப்பதாகக் கேள்விப்பட்டவுடன், ஒரு குருடனுக்கு தனது பெண்ணைத் தருவதா? என்று தயங்கினான். மனைவியுடன் விவாதம் செய்தான். கடைசியில் பீஷ்மரின் பராக்கிரமங்களுக்குப் பயந்து காந்தாரியை திருதராஷ்டிரனுக்குத் தருவதாக வாக்களித்தான்.
தான் மணக்கவிருப்பவருக்கு கண் இல்லை என்று தெரிந்தவுடன் பதிவ்ரதா தர்மத்தை அனுசரிப்பவளான காந்தாரி ஒரு துணியை எடுத்து பல மடிப்பாக மடித்து கண்களைக் கட்டிக்கொண்டாள். பக்கத்திலிருந்த தோழி ஒருத்தீ அவளது கைகளைப் பற்றி “ஏன் கண்களை மூடிக்கொண்டாய்?” என்று கேட்டாள்.
“அவரை எந்த வகையிலும் இகழாமல் இருக்க வேண்டும் என்று கட்டிக்கொண்டேன். அவருக்குத் தெரியாமல் எனக்கு மட்டும் எதற்கு கண்கள் இருக்க வேண்டும்?” என்று பதில் கேள்வி கேட்டாள்.
ஸுபலனின் புத்திரன் சகுனி தனது சகோதரியோடும் ரதம் ரதமாய் பொருட்களும் தானியங்களும் பசுக்களையும் அழைத்துக்கொண்டு கௌரவர்களின் தலைநகரான அஸ்தினாபுரம் வந்தான். காந்தாரியின் பத்து தங்கைகளும் அக்காளின் விவாஹம் காண கூடவே வந்திருந்தார்கள்.
காந்தாரி திருதராஷ்டிரன் விவாஹம் பல தேசத்து அரசர்களும் சிற்றரசர்களும் மஹாஜனங்களும் பங்கு பெற வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸகோதரியுடன் வந்த சகுனிக்கு பதில் மரியாதைகள் செய்து மீண்டும் காந்தார தேசத்துக்கு அனுப்பினார் பீஷ்மர். சிறந்த பெண்ணாகிய காந்தாரி தனது வணக்கத்தினாலும் ஒழுக்கத்தினாலும் நன்மதிப்பைப் பெற்றாள். இருவருக்கும் கண் இல்லை என்று ஆகிவிட்டபடியால் பீஷ்மர் மிகவும் விசனப்பட்டார்.
தனது ஜ்யேஷ்ட புத்ரி இப்படி ஒரு குருடனுடன் தானும் கண்களை இழந்தக் கஷ்டப்படுவதை காணச் சகியாத ஸுபலன் அவளது பத்து சகோதரிகளையும் திருதராஷ்டிரனுக்கு பாணிக்கிரஹணம் செய்துகொடுத்தான். பின்னரும் பீஷ்மர் நூற்றுக்கும் மேற்பட்ட ராஜபுத்ரிகளைத் தேடிக் கூட்டிவந்து திருதராஷ்டிரனுக்கு விவாஹம் செய்துவைத்தார்.
**
[பாண்டுவின் திருமணத்திற்கு முன்னர் குந்தியின் கதை வருகிறது. அதைப் பார்த்துவிட்டு பின்னர் பாண்டுவின் விவாஹம் பற்றிப் பார்ப்போம்]
**
வஸுதேவரின் பிதா சூரன். யாதவ ஸ்ரேஷ்டன். அவனுக்கு ப்ருதை என்று ஒரு பெண் பிறந்தாள். அந்த சூரனின் ஸ்நேகிதன் குந்திபோஜன். அவனுக்கு சந்ததியில்லை. ஆகையால் தனக்குப் பிறக்கும் முதல் குழந்தையை உனக்கு தத்தாகக் கொடுப்பேன் என்று ஸத்தியம் செய்திருந்தான். அதன்படி அந்த ப்ருதை என்பவளை குந்திபோஜனுக்கு தத்துக் கொடுத்தான்.
குந்திபோஜன் அரண்மனையில் எப்போதும் அதிதிகள் கூட்டம் இருக்கும். அப்படி அதிதிகளாக வரும் பிராமணர்களை பூஜித்து அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்யும் பொறுப்பை தன் மகளான ப்ருதையிடம் கொடுத்திருந்தான் குந்தி போஜன். நித்தமும் வரும் ரிஷிகளுக்கு பணிவிடைகள் செய்துகொண்டிருந்தாள்.
ஒரு நாள் துர்வாஸஸ் என்ற மிகவும் கோபக்கார ரிஷி அவர்கள் அரண்மனைக்கு வந்தார். குந்திபோஜன் ப்ருதையிடம்...
“மகளே! இவர் மிகவும் சினம் கொள்பவர். இவரது மனம் கோணாமல் நடந்துகொள்ளம்மா” என்று அறிவுறுத்தி அவரிடம் அனுப்பி வைத்தான். ப்ருதை அம்முனிவருக்கு ஒரு வருஷ காலம் போஜனம் கொடுத்து தயிர் நெய் போன்றவைகளைக் கொடுத்து சிஷ்ருஷை செய்துவந்தாள். அவருக்குத் துளிக்கூட கோபம் வரவில்லை.
அந்த துர்வாஸஸ் முனி த்ரிகால ஞானி. எதிர்காலத்தில் ப்ருதைக்கு வரும் ஆபத்தை நினைத்து அவளுக்கு ஒரு வரம் அருளினார்.
“குந்தி! உனக்கு நான் ஒரு மந்திரம் சொல்லிக்கொடுக்கிறேன். அந்த மந்திரத்தினால் நீ எந்த தேவதையை ஆவாஹனம் செய்கிறாயோ.. அந்தத் தேவதையின் மஹிமையோடு ஒரு புத்ரன் உனக்குப் பிறப்பான்”
ஆசீர்வாதம் செய்து அவளுக்கு அந்த மந்திரத்தை காதோடு உபதேசம் செய்தார். உபதேசம் பெற்றவுடன் அவருக்கு நமஸ்காரம் செய்தாள் குந்தி. மனசுக்குள் ஏதோ குறுகுறுவென்று இருந்தது. இளம் பெண். மேனியெங்கும் ஏதோ புதுரத்தம் பாய்வது போல உணர்ந்தாள். துர்வாஸ மஹரிஷி வாழ்த்திவிட்டு சென்றார்.
கொஞ்ச காலம் நகர்ந்தது. அவளது மனசுக்குள் துர்வாசமஹரிஷி உபதேசம் செய்த மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு நாள் காலை அரண்மனை மாடத்தில் நின்றிருந்தவளுக்கு அந்த மந்திரம் ஞாபகம் வந்தது. மனசுக்குள்ளே அந்த மந்திரத்தின் மகிமையை எப்படி அறிவது என்கிற தேடல் ஏற்கனவே இருந்துகொண்டே இருந்ததால் அதை பரீக்ஷித்துப் பார்க்க எண்ணினாள்.
ஸ்நானம் செய்து தலை கோதிக்கொண்டு இருந்தவள் நேரே தெரிந்த சூரியனை தியானித்தாள். மேகங்கள் சூரியனைச் சூழ்ந்து கொண்டு அவளது மாடத்துக்கு அருகில் ஜோதிர்மயமாக கண்ணைப் பறிக்கும் ஒளி வந்தது. அந்த அற்புதத்தைப் பார்த்து திகைத்துக்கொண்டு நின்றவள் முன் ஒரு தேவன் தோன்றினான்.
“நீங்கள் யார்?” என்று நாணத்துடன் விஜாரித்தாள் குந்தி.
“நான் தான் சூரியன். ரிஷியின் மந்திரத்தினால் என்னை அழைத்துள்ளாய். உனக்கு நானொரு புத்திரனை இப்போது தரப்போகிறேன்”: என்றான்.
குந்தி நடுங்கினாள்.
“நானொரு கன்னிகை. இது தர்மம் ஆகாது. நான் அவரது மந்திரத்தை பரீக்ஷித்துப் பார்க்கவே அதை தியானம் செய்தேன். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கெஞ்சினாள்.
சூரியதேவனுக்கு கோபம் வந்தது.
“ஏ பெண்ணே! ஏனிப்படி அந்த துர்வாஸ ரிஷியையும் என்னையும் அவமானம் செய்கிறாய். இப்போது என்னிடமிருந்து புத்ரசந்தானத்தை நீ ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றால் உங்கள் குலத்தையே சபித்துவிடுவேன்” என்று மிரட்டினான்.
“நானின்னும் விவாஹம் ஆகாதவள். என்னுடைய கன்னித்தன்மை கெட்டுவிடுமே” என்று சோகத்துடன் கேட்டாள் குந்தி.
:”அதுபற்றிக் கவலைப்படாதே! நாமிருவரும் கலந்து ஒரு பிள்ளை இப்போது பெற்றவுடன் நீ மீண்டும் கன்னிகை ஆகிவிடுவாய். கலங்க வேண்டாம்” என்று ஆறுதல் கூறி அவளுடன் கலந்தான் சூரியன்.
உடனே அவர்களுக்கு அந்த மாடத்திலேயே ஒரு புத்ரன் பிறந்தான். அவனுக்கு பிறந்த போதே காதில் கர்ணகுண்டலங்களும் மார்பில் ஒரு கவசமும் இருந்தது. அவன் பிற்காலத்தில் கர்ணன் என்று பெயர் பெற்றான். சூரியன் குந்திக்கு உடனே கன்னித்தன்மையை அளித்தான்.
கையில் குழந்தையுடன் கன்னிமாடத்தில் நின்றிருந்த அந்த யதுவம்சத்து புத்ரியாகிய குந்தி ஒன்றும் புரியாமல் நின்றாள். குனிந்து பார்த்தாள். அந்தக் குமாரன் சிரித்தான். நெஞ்சைக் கல்லாகிக்கொண்டு ஊரார் பார்த்தால் தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என்று அந்தக் குழந்தையை ஒரு பெட்டியில் வைத்தாள். அந்தப் பெட்டி நிறைய ரத்னங்களை நிரப்பினாள். தன்னுடைய அணிகலன்களையெல்லாம் கழற்றி அவனுக்குப் பக்கத்தில் இட்டாள்.
யார் கண்ணிலும் படாமல் அந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து பக்கத்தில் ஓடும் நதியில் விட்டாள். அந்தப் பெட்டி எந்த சுழலிலும் மாட்டிக் கவிழாமல் பத்திரமாக நீரில் சென்றது.
வெகுதூரத்திற்கு அப்பால் நதியில் முகம் அலம்ப வந்தான் ஒரு ஸூதபுத்திரன். ராதை என்பவளின் கணவன். இருவரும் புத்திர சந்தானம் இல்லாமல் வெகுநாளாக மனவருத்தத்துடன் இருந்தார்கள். பெட்டியில் சிரித்தபடி வரும் குழந்தையைக் கண்டவுடன் அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. குழந்தையைப் பெட்டியோடு தூக்கிக்கொண்டு வீட்டிற்கு ஓடினான்.
ராதையும் அந்த ஸூதபுத்திரனும் அவனுக்கு பெயர் சூட்டுவதற்கு அமர்ந்தார்கள்.
“இவன் தனத்துடன் கூடப் பிறந்திருக்கிறான். அதனால் வஸுஷேணன் என்று பெயர் சூட்டுவோம்” [ வஸு = த்ரவ்யம்; ஸேனன்=சம்பந்தப்பட்டவன் ; ரத்னங்களோடும் கவச குண்டலங்களோடும் கிடைத்தவன்]
நாட்கள் ஓடியது. அவன் எல்லா அஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். பிராமணர்களுக்கு என்றால் எதையும் தந்துவிடுவேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு வளர்ந்தான். சூரியன் சாயும் வரை சூர்யோபாசனை செய்வான்.
ஒரு நாள் இரவு வஸுஷேணன் தூக்கத்தில் சொப்பனம் ஒன்று கண்டான்.
அதில்...

No comments:

Post a Comment