Monday, March 12, 2018

இல்லம் திரும்பிய இந்திரன் மகன்


துவாரகையிலிருந்து காண்டவபிரஸ்தம் கிளம்புவதற்கு தயாரானான் அர்ஜுனன். புதுமணத் தம்பதிகளாக இருந்ததால் வெட்கத்தினால் சிவந்தும் நாணமேறியக் கண்களுடனும் அவன் அருகிலேயே சுபத்ரா அமர்ந்திருந்தாள். நேற்றைய பொழுதின் காதல் விளையாட்டுகளின் தாக்கம் இன்னும் அவளிடம் இருந்தது. அவன் சோர்வின்றி இருந்தான்.

“சுபத்ரா! நாம் காண்டவபிரஸ்தம் செல்ல வேண்டும். நீயே அரண்மனைக்குச் செல். அங்கு சென்று ஒரு முக்கியமான வேலை நிமித்தம் நான் வெளியே செல்கிறேன், என்று சொல். பின்னர் சைப்யம், ஸுக்ரீவம், மேகபுஷ்பம், வலாஹகம் என்று நான்கு வெண்மையான குதிரைகள் பூட்டப்பட்ட தேரை நீயே இங்கு கொண்டு வா. ஆயுதங்களை எடுத்து ரதத்தில் போட்டுக்கொள். யாரேனும் உன் தோழிகள் கேட்டால் ஒரு முக்கியமான வேலை என்று சொல். எல்லா ஆயுதங்களையும் மறக்காமல் எடுத்துவா. கதாயுதம் கூட.. வில்லும் அம்பறாத்தூணிகளில் சரங்களையும் நிறைத்துக்கொள். தேவைப்படும்”
ஏதோ போருக்குத் தயாராவது போல தனது இளம் கணவன் பட்டியலிட்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள் சுபத்ரா. ஏன் எதற்கு என்றெல்லாம் எதிர்க் கேள்வியெல்லாம் கேட்காமல் பதிவிரதையாதலால் உடனே ராஜ கிருஹம் நோக்கி நடந்தாள். பாதி தூரத்தில் தோழிகளும் அவளோடு சேர்ந்துகொண்டனர். அவர்கள் ஏதோ பாடலை முணுமுணுத்தபடி இவளது கைக்கோர்த்து அரண்மனை நோக்கி நடந்து வந்தார்கள்.
காவலாளிகள் இருவர் அங்கே நின்று கொண்டிருந்தார்கள்.
“நான் ஒரு வேலையாக அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். சைப்யம், ஸுக்ரீவம் ஆகிய குதிரைகளைப் பூட்டிய கிருஷ்ணனின் ரதத்தைக் கொண்டு வாருங்கள்." கட்டளையிட்டாள் சுபத்ரா.
கழுத்தில் கிங்கிங்கிணிகள் ஒலிக்க குதிரைகள் பூட்டிய தேர் வந்து நின்றது. ரதத்தின் பின்னால் ஆயுதங்களை ஏற்றச் சொன்னாள். காவல்காரர்கள் வித்யாசமாகப் பார்த்தார்கள். அவளது சகிகளுக்கு ஆச்சரியம். சுபத்ரா எங்காவது யுத்தம் செய்யப் போகிறாளா? விழிவிரியப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
தேரில் குதித்து ஏறினாள். கடிவாளங்களைப் பற்றினாள். இரண்டு முறை அந்த கயிற்றை சொடக்கினாள். குதிரைகள் பறந்தன. அர்ஜுனன் இருக்குமிடம் வந்தடைந்தாள்.
“உன் கட்டளையை நிறைவேறிவிட்டேன். இனி காண்டவபிரஸ்தம் எளிதாகச் செல்லலாம். ஓட்டுங்கள்” என்று ரதத்திலிருந்து இறங்கினாள்.
அங்கிருந்த பிராமணர்களுக்கு அரண்மனையிலிருந்து கொண்டு வந்த பக்ஷணங்களைக் கொடுத்தாள். புது வஸ்திரங்களை தானமளித்தாள்.
“கடிவாளங்களைப் பிடிப்பதில் உனக்கு நிகர் யாருமில்லைஎன்று முன்னர் என்னிடம் சொன்னாயே.. இன்று நீயே காண்டவபிரஸ்தம் வரை தேரைச் செலுத்து” என்றான் அர்ஜுனன்.
குதிரைகளுக்கு பூஜையிட்டாள். அதற்குள் அர்ஜுனன் சன்னியாசி வேஷத்தைக் களைந்தான். கவசங்களை அணிந்துகொண்டான். தும்பைப் பூ நிறத்தில் வெள்ளை வஸ்திரத்தை தரித்துக்கொண்டான். பிரம்மாண்டமான வில்லைக் கையில் பிடித்துக்கொண்டு துள்ளி ரதத்தில் ஏறினான். சாரதியாக சுபத்திரை. கடிவாளங்கள் கையில் இருக்க போகலாமா? என்பது போல அர்ஜுனனைப் பார்த்தாள். கண்களை மூடித் திறந்து போகலாம் என்பது போல தலையசைத்தான் பார்த்தன்.
கன்னியாந்தபுரத்துப் பெண்கள் அனைவருக்கும் இது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. ஒருவருக்கொருவர் இதைப் பற்றிப் பேசிக்கொண்டு இரைச்சல் அதிகமானது.
“சுபத்திரை பாக்கியமானவாள். அர்ஜுனனுக்கு மனைவியாக காண்டவபிரஸ்தம் ஆளப் போகிறாள்.” என்றெல்லாம் தோழிகள் இரைந்து பேசி வாழ்த்தினார்கள். ஒவ்வொருவருடைய குரலும் சுபத்திரையின் செவியை எட்டியபோது அவள் கால் ரதத்திலிருந்து மேலேறி மிதந்தது போல உணர்ந்தாள்.

“சட்...” என்ற கடிவாளத்தின் உதறலில் குதிரை ஓட்டம் பிடித்தது. ரதத்தின் பின்னால் புழுதி மேகம் போல சூழ்ந்தது.
“ஆஹா.. யாதவ குல லக்ஷ்மியான சுபத்ரை அர்ஜுனனுடன் நாடாளப் போகிறாள்” என்று வழியில் பார்த்த சிலர் கூறினார்கள்.
“ஹே! நமது தேசத்துப் பெண்ணை அர்ஜுனன் கவர்ந்து செல்கிறான். அவனை விடாதீர்கள். பிடியுங்கள். அடியுங்கள்” என்று பலர் துரத்த ஆரம்பித்தார்கள். அர்ஜுனன் அவர்களை நோக்கி அம்பு மழை பொழிந்தான். சிதறி ஓடினார்கள்.
ரைவதக மலையை இப்போது தாண்டிக்கொண்டிருக்கிறான். அந்த மலையில் விப்ருதுஸ்ரவஸ் என்னும் யாதவன் கிருஷ்ணனின் கட்டளையினால் அங்கு ஒரு பெரும் சேனையுடன் காவல் இருந்தான். அவன் பலத்தில் பலராமருக்கு ஒப்பானவன். கிருஷ்ணன் ஊரில் இல்லாததால் அவன் தான் அப்போது தேச ரக்ஷகன். ஜனங்கள் ஒரு ரதத்தைத் துரத்திக்கொண்டு ஓடி வருவதும் அவர்களை நோக்கி அந்த ரதத்திலிருப்பவன் அம்பெய்வதையும் பார்த்தவுடன் தனது சேனையை ஏவினான்.
ரைவதக மலைச்சாரலில் ஒரு பெரும் படை புழுதி கிளப்பி இறங்குவதைப் பார்த்தாள் சுபத்திரை.
“பிரபோ! தேரை நிறுத்தட்டுமா? இல்லை நீங்கள் செலுத்துகிறீர்களா? என்ன செய்ய வேண்டும்?” என்று தயங்கினாள்.
“இல்லையில்லை. நிறுத்தாதே. அந்த சைனியத்தின் நடுவே செலுத்து. நான் போர் புரிந்து நீ பார்க்க வேண்டாமா?”
“ஆஹா! ஊரார் உங்கள் வில் வித்தையைப் பாராட்டும் போது நாம் பார்க்க மாட்டோமா என்று ஏங்கியிருக்கிறேன். இன்று அந்த பாக்கியம் எனக்கு. உள்ளே விடுகிறேன் பாருங்கள்”
கடிவாளங்களை இழுத்து விட்டாள். குதிரைகள் சீறிப் பாய்ந்தன. அர்ஜுனன் சுழன்று சுழன்று அம்பெய்தான். ஒரு முறை வலது கையில். மறு முறை இடது கையில் இருந்தது வில். விசாலமான வானத்தையே மறைக்குமளவிற்கு சரமாரிப் பொழிந்தான். அங்கே அவன் விட்ட பாணங்களினால் இருட்டிப்போயிற்று. அந்த யுத்தத்திற்கு வந்தவர்களில் பலர் பீதியடைந்தார்கள்.
ஒரு சமயம் அவன் தொடர்ந்து விட்ட அம்புகளினால் எதிரில் போர் புரிய வந்தவர்களின் கவசங்களை உடைத்தான். மறுமுறை அனைவரின் கையிலிருந்த வில்லும் உடைந்தது. தேர்ச்சக்கரங்களை அம்பினால் அறுத்தான். சுபத்திரைக்கு ஆச்சரியம் அடங்கவில்லை. ஒரு மனிதனால் இப்படிச் சுழன்று சுழன்று ஆயிரமாயிரம் ஆட்களை பந்தாடமுடியுமா? இவன் நரனா? நாரயணனா?
அனைவரையும் வீழ்த்திவிட்டு அவளைப் பார்த்தான் பார்த்தன். சுபத்திரை கையிரண்டையும் எடுத்துக் கும்பிட்டாள். வெள்ளையாடை உடுத்தியிருந்த அர்ஜுனன் மதியகாலத்து சூர்யன் போல ஜொலித்தான். நினைத்தால் அந்தச் சேனையை அழித்திருக்கலாம். ஆனால் சுபத்திரை தேசத்தவர்களைக் கொல்வதற்கு அவனுக்கு மனம் வரவில்லை. நிராயுதபாணிகளாக்கி நிறுத்தினான்.
அப்போது பொன்மயமான ஒரு ரதம் அங்கு நடுவில் வந்து நின்றது. ஒருவன் குதித்து இறங்கினான். அவன் விப்ருதுஸ்ரவஸ். அர்ஜுனனை நோக்கி ஓடிவந்தான்.
“அர்ஜுனா!” என்று நா தழுதழுக்கக் ஆலிங்கனம் செய்துகொண்டான்.
“நீ இங்கு சன்னியாசியாக வெகுநாட்கள் வசிப்பதை ஸ்ரீகிருஷ்ணனால் அறிந்துகொண்டேன். சுபத்திரையின் மேலுள்ள அன்பினால் நீ அப்படிச் செய்தாய். தவறில்லை. நீ க்ஷேமமாகச் செல்.”
அந்த சைனியம் அப்போது பேசாமல் நின்றது. அர்ஜுனன் இப்போது ரதத்தை செலுத்தினான். குதிரைகள் கனைத்துக்கொண்டு முன்பைவிட வேகமாக ஓட்டம் பிடித்தன. அந்த சைனியத்திலிருந்த பலர் இப்போது “அர்ஜுனன் நமது தேசத்துப் பெண்ணைக் கவர்ந்து கொண்டு செல்கிறான்... வாருங்கள்... பிடியுங்கள்...” என்று கூவிக்கொண்டே துவாரகாவை நோக்கி ஓடினார்கள். விப்ருதுஸ்வரஸ் செய்வதறியாது திகைத்தான்.
துவாரகையினுள் ஓடிய மக்கள் ஸுதர்மை என்கிற சபைக்குள் சென்று அங்கிருக்கும் காவலாளியிடம் அர்ஜுனனின் செய்கையைச் சொன்னார்கள். யுத்தம் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்ட அந்த காவலாளி யுத்த பேரிகையை முழங்கினான்.
பக்கத்தில் இருந்த உள் தீவிற்கு அந்த பேரிகையின் சப்தம் எட்டியது. வ்ருஷ்ணிகள் அனைவரும் உடனே அங்கிருந்து கிளம்பினார்கள். எல்லோரும் அந்த ஸுதர்மை என்ற சபையில் கூடினார்கள். அந்தக் காவலாளி ஜனங்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட அர்ஜுனன் சுபத்திராவைக் கவர்ந்துசென்ற கதையைச் சொன்னான். கிருஷ்ணரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்.
மதுபானம் செய்ததினால் சிவந்திருந்த அந்த வ்ருஷ்ணிகளின் கண்கள் இப்போது இரத்தம் போல ஆனது. மது மயக்கத்திலிருந்த சிலர் “சீக்கிரம் ரதத்தைப் பூட்டுங்கள். ஈட்டிகள் வேல்கள் தனுசுகளை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் போய் சுபத்ராவை மீட்டு வருவோம். தயாராகுங்கள் உடனே!” என்று இரைந்தார்கள்.
அவர்களுக்கு நடுவில் பலராமர் வீற்றிருந்தார். அவரும் கள்ளுண்ட மயக்கத்தில் இருந்தார்.
“நிறுத்துங்கள்! நீங்களாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம். எல்லாம் அறிந்த கிருஷ்ணன் இங்கே அமர்ந்திருக்கிறான். அவனிடம் கேட்டு முடிவு செய்வோம்” என்றார் பலராமர்.
“கிருஷ்ணா! ஏன் தலை குனிந்து அமர்ந்திருக்கிறாய்? உன்னால் நாங்கள் அர்ஜுனனுக்கு மரியாதை செய்தோம். ஆனால் அவன் அதற்கு தகுதியானவன் அல்லன். அன்னம் உண்ட இடத்திலேயே அந்த பாத்திரத்தை உடைத்தவன் போல இருக்கிறது இந்த அர்ஜுனன் செய்த காரியம். நம்மையெல்லாம் அவமதித்து சுபத்திரையைக் கவர்ந்துவிட்டான். ஒருவன் காலால் மிதிப்பதை பாம்பு பொறுத்துக்கொள்ளாது. அதுபோல அவன் என் தலை மீது கால் வைத்துவிட்டான்”

[சுபத்ராஹரணபர்வம் முடிந்தது]
ஏற்றி இறக்கி சத்தமாகவும் கோபமாகவும் பேசினார் பலராமர். அவருக்கு அனைத்து வ்ருஷ்ணிகளும் ஆதரவாக ஒத்துப் பேசினார்கள். அவர்கள் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்த கிருஷ்ணர் பின்னர் பேச ஆரம்பித்தார்.
“நான் சொல்வதைக் கேளாமல் நீங்கள் சென்றால் அவ்வளவுதான். அர்ஜுனன் இந்தக் குலத்திற்கு அவமானம் செய்யவில்லை. கன்னியை தானமாகப் பெறுவதற்கு அந்த வீரனுக்கு விருப்பமில்லை. கன்னியைப் பிச்சையெடுக்க எந்த வீரன் விரும்புவான்? தன்னுடைய பலத்தினால் ஒரு பெண்ணை சுயமாக வரிப்பது க்ஷத்ரியர்களின் குணவிசேஷம். பராக்கிரமத்தால் பலாத்காரமாக கொண்டு சென்றிருக்கிறான். சுபத்திரை அதிர்ஷ்டசாலி.”
பேச்சை நிறுத்தினார் கிருஷ்ணர். ஒட்டு மொத்த யாதவசேனையும் அவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது. தொடர்ந்தார்....
“சிவபிரானைத் தவிர அர்ஜுனனை யாராலும் வெல்ல முடியாது. இந்திரனும் இந்திராதி தேவர்களும் கூட அவனை ஜெயிக்கமுடியாது. மேலும் அவன் செல்லும் ரதமும் அதிலிருக்கும் ஆயுதங்கள் என்னுடையவை. அப்படியிருக்கும் போது அவனுக்குத் தோல்வி ஏது? அவனுடன் சமாதானம் செய்து கொள்வோம். மேலும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது”
அந்த சபை முழுவதும் அமைதியாயிருக்க லேசான ஒரு காற்றடித்து அங்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்குகளின் திரிகளை நாட்டியமாடச் செய்தது.
“அவன் என் அத்தை மகன். எதிரியல்ல.” என்று பொட்டில் அடித்தது போல முடித்தார்.
அவனிடம் சமாதானம் செய்துகொள்ளலாம் என்று பேரிகைகளுடன் அர்ஜுனனைத் துரத்தினார்கள். யாதவர்கள் மீண்டும் பேரிகையோடு பின்னால் வருவதைக் கண்டு எரிச்சலடைந்த அர்ஜுனன் சுபத்திரையிடம்
“அசுத்தர்களும் அதர்மகளுமாகிய இந்தக் குடியர்களை இப்போது மேலோகம் அனுப்பிவிடுகிறேன்” என்று தனுசைக் கையில் எடுத்தான். அம்பை எடுத்துத் தொடுப்பதற்குள் கால்களில் ஈரம் ஏற்பட்டதைப் பார்த்து கீழே குனிந்தான். சுபத்திரை அவன் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள்.
“சுபத்ரா! ஏனிப்படி அழுகிறாய்?”
“ஸ்வாமி. அவர்களை கொன்றுவிடாதீர்கள். உம்முடைய பராக்கிரமம் எனக்குத் தெரியும். கண நேரத்தில் நீங்கள் பொசுக்கிவிடுவீர்கள். ஆனால் யாதவ குலத்தை அழிப்பதற்காக நான் வ்ருஷ்ணிகளுக்குக் கலியாக பிறந்தேன்” என்று பழிப்பார்கள்.
“சரி! நீயே ரதத்தைச் செலுத்து. அவர்கள் நம்மைப் பிடிக்காத வேகத்தில் ஓட்டு” என்றான் அர்ஜுனன்.
சுபத்ரா ரதத்தை வேகமாகச் செலுத்தினாள். யாதவர்கள் பின்னால் மன்னிப்புக் கேட்டு துரத்தி வந்தார்கள்.அவர்களால் அர்ஜுனனின் ரதத்தினைப் பிடிக்கவே முடியவில்லை. சூரியன் இறங்கி நிலா தோன்றி பின்னர் சூரியன் தோன்றும் நேரமாகியும் சுபத்ரா ரதமோட்டிக்கொண்டிருந்தாள். வனங்களும் கிராமங்களும் நகரங்களும் வந்துபோயின.
இந்திரபிரஸ்தத்தின் எல்லைக்கு வந்துவிட்டான். உள்ளே செல்ல பயந்தான். இன்னொரு பெண்ணுடன் அரண்மனைகுள் நுழைந்தாள் திரௌபதி என்ன சொல்வாளோ என்று நினைத்துக்கொண்டு ஒரு திட்டம் வகுத்தான்.
”சுபத்ரா! கிருஷ்ணை நாமிருவரும் இப்படியே உள்ளே சென்றால் கடும் சொற்களைச் சொல்வாள். ஆகையால் நான் இங்கேயே இருக்கிறேன்.நீ இடைச்சிகளுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் போல உள்ளே செல். எனது அன்னையிடத்திலும் திரௌபதியிடத்திலும் ஆசீர்வாதம் பெற்றுக்கொள். பின்னர் நான் உள்ளே வருகிறேன்”
“நீர் என்ன செய்யச் சொன்னாலும் செய்வேன்” தீர்மானமாகச் சொன்னாள் சுபத்திரை.
அங்கிருந்து கொண்டே இடையர்களை வரவழைத்தான். தலையில் முண்டாசுடன் ஒரு பெருங்கூட்டம் வந்தது.
“சிறு வயதுள்ள இடையர் குலப் பெண்கள் அனைவரும் திரௌபதியைப் பார்க்கச் செல்லும் சுபத்ராவுடன் வரவேண்டும். சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள்” என்று துரிதப்படுத்தினான்.
சிவப்பு வண்ணத்தில் பட்டுடுத்திக்கொண்டாள் சுபத்ரா. இடைச்சிகளின் கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்து கொண்டு அரண்மனையை நோக்கிச் சென்றாள். கோபாலர்களின் கோபஸ்திரீகள் போல உள்ளே சென்றாள்.
நேரே சென்று அத்தையாகிய குந்தியை நமஸ்கரித்தாள். குந்திக்கு சுபத்திரையை நன்றாகத் தெரியும். அவளை உச்சிமோந்து ஆசீர்வதித்தாள். பின்னர் திரௌபதியிடம் சென்று காலில் விழுந்து வந்தனம் செய்து எழுந்திருந்தாள். பின்னர் “நான் உனக்கடிமை” என்று சொன்னாள். திரௌபதி இந்த மரியாதையில் விழுந்தாள். அவளை ஆலிங்கனம் செய்துகொண்டாள்.
“நீ சிறந்த கணவனைப் பெறுவாய். அவனுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். கணவனின் அன்புக்கு உரியவளாவாய். சிறந்த புத்திரனைப் பெறுவாய்” என்று ஆசீர்வாதங்களை அடுக்கினாள். மனம் குளிர்ந்தாள் சுபத்திரை. பின்னர் குந்தி சுபத்திரையை அழைத்து அருகில் உட்காரவைத்துக்கொண்டு வஸுதேவரின் புகழ்பாடினாள்.
இதற்கிடையில் பின்னாலேயே யாதவர்கள் காண்டவ பிரஸ்தம் வந்தடைந்தார்கள். வண்டி வண்டியாக சீர்வரிசைகள் ஏற்றியிருந்தன. கலகலவென்று சத்தமாக இருந்தது. அந்த சீர் சாமான்கள் சுற்றியிருக்க அர்ஜுனன் நடுவில் வந்தான். ஊர் ஜனங்கள் மீண்டும் அர்ஜுனனைப் பார்த்த சந்தோஷத்தில் குதூகலம் அடைந்தார்கள்.
அரண்மனையினுள் பிரவேசித்தான் அர்ஜுனன். யுதிஷ்டிரரையும் பீமனையும் காலில் விழுந்து வந்தனம் செய்தான். பக்கத்தில் நின்ற குந்திக்கு பிரத்யேகமாய் நமஸ்கரித்தான். நகுலனையும் சகதேவனையும் ஆரத்தழுவிக்கொண்டான். திரௌபதி சுபத்திரையுடன் பக்கத்தில் நின்றிருந்தாள். அவளுக்குக் கோபமில்லை என்றதும் அவனது சந்தோஷம் இரட்டிப்ப்பானது. பின்னர் தனது சகோதரர்கள் அனைவருக்கும் வனவாஸ யாத்திரையைப் பற்றிக் கதை சொன்னான் அர்ஜுனன். கிருஷ்ணையும் சுபத்ராவும் குந்தியும் ஒரு பஞ்சணையில் அமர்ந்து இந்தக் கதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களின் சிரிப்பொலி அரண்மனை முழுவதும் எதிரொலித்தது.

No comments:

Post a Comment