Friday, March 9, 2018

திருதராஷ்டிரன் - பாண்டு - விதுரன் ஜனனம்



*சத்யவதி வெகுநேரம் மௌனம் காத்தாள். இருக்கைகள் மற்றும் சிலைகளோடு சேர்ந்து அவர்களும் பொம்மைகள் போல அமர்ந்திருந்தார்கள். பீஷ்மரே மீண்டும் பேச்சைத் துவங்கினார்.

“பரதவம்சத்தின் சந்ததியை அபிவிருத்தி செய்வதற்கு நானே ஒரு உபாயம் கூறுகிறேன்”
நிமிர்ந்து உட்கார்ந்தாள் சத்யவதி. கண்களில் சோர்வுடன் கூடிய ஆர்வம் தொற்றிக்கொண்டது.
“தீர்க்கதமஸ் பலியின் சந்ததி விருத்திக்குச் செய்தது போல... விசித்ரவீரியனின் பாரியைகளோடு கலந்து புத்ரோத்பத்தி செய்வதற்கு யாராவது நல்ல குணமுள்ள பிராமணனை தனம் கொடுத்தாவது நாம் கூட்டிவர வேண்டும்”
இப்போது சத்யவதி சுறுசுறுப்பானாள்.
“தீர்க்கதமஸின் கதை புராணகாலத்துக்கு சரியாக இருக்கும். உனது பிதா உன்னை நாட்டைக் காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அவரது கட்டளையைக் காப்பாற்றும் பொருட்டு நான் சொல்வதையும் நீ கேட்க வேண்டும். உன் சகோதரனின் பாரியைகளுக்கு நீ புத்திர செல்வம் கொடு”
“அன்னையே! மூவுலகமும் தருகிறேன் என்று தேவர்களே வந்து சொன்னாலும் நான் என் பிரதிக்ஞையை விடேன். மன்னித்துவிடுங்கள்”
பீஷ்மரின் உறுதியைப் பார்த்து சத்யவதி பிரமித்தாள்.
“நீ விரும்பினால் உன்னாலும் மூவுலகைப் படைக்க முடியும். சந்ததி விருத்திக்கு நீதான் ஒரு உபாயம் சொல்லவேண்டும்”
”நீதான் இக்குலத்திற்கு தலைமகள். ராஜமாதா. ஸ்திரீகள் நிறைய குல ரஹஸியங்கள் வைத்திருப்பார்கள். ஆகையால் நான் ஸத்தியத்தை விடாமலும் நமது குலம் கெடாமலும் இருக்குபடியான உபாயத்தைச் சொல்லி தர்மம் காப்பாய்”
இதைச் சொன்ன பீஷ்மர் சத்தியவதியைக் கூர்ந்து பார்த்தார். அவரது கண்கள் ஈட்டி போல அவளைக் குத்தியது.
“பீஷ்மா! இந்த ஆபத்காலத்தில் உன்னிடம் நான் இதைச் சொல்வது உசிதம். நீ இதை யாரிடமும் சொல்லத்தகாது. நமது குலத்திற்கு நீதான் தர்மம். நீதன் ஸத்யம். நீதான் ஆதாரம். நான் சில நிஜங்களை இப்போது சொல்வேன். அதைக் கேட்டு ஆராய்ந்து நீயே முடிவுசெய்”
என்ற தழுதழுத்த குரலில் ஆரம்பித்த சத்தியவதி தனது பூர்வ கதையைச் சொன்னாள். உபரிசரவஸிடம் பிறந்து செம்படவனிடம் வளர்ந்து பராசரருக்கு படகோட்டி க்ருஷ்ண த்வைபாயனரை மகனாகப் பெற்று மீண்டும் கன்னித்தன்மை அடைந்தது வரை ஒரே மூச்சில் சொன்னாள்.
பீஷ்மர் பொறுமையுடன் கேட்டார். மேகத்திலிருந்து சூரியன் வெளியே வந்தது போல சத்தியங்கள் சத்தியவதியின் வாயிலிருந்து கொட்டியது.
“ஆகவே! அந்த க்ருஷ்ண த்வைபாயணன் வேதங்களை நான்காக வகுத்ததனால் வ்யாஸன் என்ற பெயர் பெற்றான். கறுத்த நிறத்தினால் கிருஷ்ணன் என்றும் சொல்லப்பட்டான். சிறந்த தபோபலம் உள்ளவன். நீயும் நானும் கட்டளையிட்டால் சகோதரனின் பாரியயைகளுடன் கூட புத்ரோத்பத்தி செய்வதற்கு தகுதியானவன் வ்யாஸன். நான் நினைக்கும் போது வருவேன் என்று கூறிச் சென்றிருக்கிறான்.”
அங்கே நிறுத்தினாள். கவனமாகக் கேட்டுக்கொண்டும் அவளுக்கு முதுகு காட்டியும் நின்றிருந்த பீஷ்மர் திரும்பி சத்யவதியைப் பார்த்தார். அவளது சத்தியம் கண்களில் தெறித்தது. பீஷ்மர் கை கூப்பி அவளைத் தொழுதார். கண்களில் நீர் வர சத்யவதி
“நீ ஒப்புக்கொண்டால்.. நான் வியாஸனை நினைக்கிறேன். அவன் வருவான். புத்திரர்களை உண்டாக்குவான்”
"தாயே! வியாஸன் பெயரைக் கேட்டதுமே எனக்கு கை கூப்பத் தோன்றுகிறது. இடம் காலம் உனக்குத் தெரியும். நமது காரியம் நிறைவேற நீ சொன்னது தகும். தர்மம் அர்த்தம் காமம் என்று மூன்று புருஷார்த்தங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. பொருள் தொடரும் பொருளீட்டத்தையும், தர்மம் தொடரும் தர்மானுஷ்டானத்தையும், காமஸுகம் தொடரத்தக்க காமபுருஷார்த்தத்தையும் தனித்தனியே ஆராய்ந்து செய்யும் தைரியசாலியே புத்திசாலி. ஆகையால் தர்மம் உள்ளது நமது குலத்துக்கு நன்மை பயக்கும் சிலாக்கியமான நீ சொன்ன உபாயம் எனக்குப் பிடித்திருக்கிறது”
வெகுநேரமாக குழம்பியிருந்த மனம் தெளிவுற்றத்தில் சத்தியவதி நிம்மதியடைந்தாள். உள்ளூர நாட்டைக் காப்பாற்றுவதற்கான உபாயம் கிடைத்ததில் சந்தோஷம் பிறந்தது.
சாயங்கால வேளையின் பொன் நிறமான வெய்யில் அந்த மண்டபத்தை ஒளியூட்டியிருந்தது. எதிரில் பீஷ்மர் நின்றுகொண்டிருக்க கண்களை மூடி வ்யாஸரை ஒரு கணம் தியானித்தாள்.
கண்ணைத் திறந்தபோது கமண்டலமும் கையுமாக ஜடாமுடியுடன் தேஜோன்மயமாக வியாஸர் எதிரில் நின்றிருந்தார். அவரை ஒரு கணம் ஒளிவட்டமொன்று சூழ்ந்து மறைந்தது. பல வருடங்கள் கழித்து தனது ஜ்யேஷ்ட குமாரனைக் கண்டதனால் அவரது கைகளைப் பற்றிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். தனது கமண்டலத்திருந்து நீரை எடுத்து அவள் தலையில் தெளித்தார். வந்தனம் செய்தார். பீஷ்மர் அந்த பாசம் ததும்பும் காட்சியைப் பார்த்து நெகிழ்ந்துபோனார்.
“தர்மத்தின் ஸ்வரூபத்தை அறிந்தவளே! உனக்கு எது விருப்பமோ அந்தக் கட்டளையை நிறைவேற்ற வந்திருக்கிறேன். என்ன வேண்டும்? சொல்” என்றார்.
அப்போது சத்யவதி அங்கிருந்த அரண்மனை புரோகிதரை வியாஸருக்குப் பூஜை செய்யச் சொன்னாள். வியாஸரை ஒரு ஆஸனத்தில் அமர்த்திப் பாதங்களுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தார்கள். மனது குளிர்ந்து அமர்ந்திருந்தவரிடம் சத்யவதி தனது தேவையைச் சொன்னாள்.
“பிரம்மரிஷியே! நீ எனக்கு முதல் புதல்வன். விசித்ரவீரியன் எனது கனிஷ்ட குமாரன். பீஷ்மன் தனது பிதாவுக்கு எப்படியோ அப்படியே நீ எனக்கு. சந்தனு புத்திரனான பீஷ்மன் தனது தந்தைக்குச் செய்து கொடுத்த ஸத்தியத்தைக் 
காப்பாற்றுவதற்காக சந்ததி அபிவிருத்தி செய்வதிலும் ராஜ்ய பரிபாலனம் செய்வதிலும் ஆர்வம் காட்டாமல் இருக்கிறான். ஆகையால் நீ உன் சகோதரனுக்காகவும் வம்ஸ விருத்திக்காகவும் நானும் பீஷ்மனும் சொல்வதைக் கேட்கவேண்டும்”

புதிர் போடுவது போல பேசினாள் சத்யவதி. ஆசனத்தில் அமர்ந்திருந்த வ்யாஸர் திரிகால ஞானியானாலும் அவளே சொல்லட்டும் என்று காத்திருந்தார். அவருக்கு அருகில் இருந்த ஆசனத்தில் பீஷ்மர் அமர்ந்து இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்.
“உன் இளைய சகோதரனின் பாரியைகள் இருவரும் தேவ கன்னிகைகள் போல் இருப்பார்கள். யௌவனத்தோடு கூடிய அழகிகள். அவர்களுக்கு நீ ஸந்தானத்தை உண்டு பண்ணி இந்தக் குலத்துக்கான சந்ததியை விருத்தி செய்வாய்.”
வியாஸர் அர்த்தபுஷ்டியாக சிரித்தார்.
“தர்மங்கள் தெரிந்த தாயே! உன் கட்டளைப்படி தர்மத்தை நிலைநாட்டும் பொருட்டு நீ விரும்பியதை நான் செய்வேன். இந்த புத்ரோத்பத்தி சாஸ்திரங்களில் சாஸ்வதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சூரியனுக்கும் வருணனுக்கும் ஒப்பான புதல்வர்களை அவர்களுக்கு நான் கொடுக்கப்போகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை”
அவர் பேசுவதை நிறுத்திவிட்டு சத்தியவதியையும் பீஷ்மரையும் பார்த்தார். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புருவம் சுருக்கிப் பார்த்துக்கொண்டார்கள். பின்னர் வியாஸரை கேள்வியாய்ப் பார்த்தார்கள். அங்கே பார்வைகள் பாஷையில்லாமல் பேசிக்கொண்டிருந்தன.
நிபந்தனை என்ன?
“இந்த அரசிகள் இருவரும் ஒரு வருஷ காலம் நான் சொல்கிற விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். விரதத்திற்குப் பின்னர் சுத்தர்களாக ஆவர். இந்த விரதமில்லாமல் என்னை சேர முடியாது”
நிறுத்திக்கொண்டார். சத்யவதி தவித்தாள். ராஜா இல்லாத தேசமாக தவித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்த்தில் வியாஸன் இன்னும் ஒரு வருடம் காத்திருக்கச் சொல்கிறானே என்று கவலைப்பட்டாள். பீஷ்மர் குனிந்து சத்தியவதியின் காதில் ரகசியமாக ஏதோ சொன்னார். அவள் எழுந்து பேசினாள்.
“ராஜா இல்லாத தேசம் அழிந்துபோகிறது. தர்மங்கள் தவறுகிறது. மழையில்லை. தேவதையில்லை. ராஜஸ்திரீகள் கர்ப்பத்தை உடனே தரிக்கும்படி வழி செய். அதனால் நீ உடனே கர்ப்பத்தையுண்டு பண்ணு. பீஷ்மன் அதை வளர்ப்பான்”
வியாஸர் என்ன சொல்லப்போகிறார் என்று காத்திருந்தார் பீஷ்மர். சத்தியவதி தவித்தாள்.
“உடனே புத்ரோத்பத்தி வேண்டுமென்றால்...”
“வேண்டுமென்றால்..” பட்டென்று கேட்டாள் சத்யவதி.
“என்னுடைய விகாரரூபத்தை அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் விரதம்.”
”விகாரரூபம் எப்படி இருக்கும் வ்யாஸா?”
“சகிக்க முடியாத துர்கந்தத்துடன் இருப்பேன்”
“ஓ!”
“கறுத்த நிறத்துடன் செம்பட்டையான தாடியுடனும் ஜடாமுடியுடனும் குச்சி குச்சியாய் இளைத்த மேனியுடன் விகார ரூபனாய் வருவேன்”
கேட்கும்போதே சத்தியவதிக்கு கூசியது. இருந்தாலும் தேசத்தின் நலன் கருதி இந்த புத்ரோத்பத்தியின் மருமகள் இருவரையும் ஈடுபடுத்தவேண்டும் என்று உறுதிபூண்டாள்.
“நல்ல புத்திரன் பிறப்பானா?”
“அவள் உயர்ந்த கர்ப்பத்தை தரிப்பாள். அந்தப் புத்திரனுக்கும் நூறு புத்திரர்கள் பிறந்து குருவம்சம் வளரும்”
சத்யவதி நிம்மதியடைந்தாள். அடுத்தகட்ட வேலைகளுக்குத் தயாரானாள். வியாஸர் ஆசனத்திலிருந்து எழுந்தார்.
“அம்பிகையை வெண்ணிற ஆடையில் அலங்காரங்கள் செய்து சயன அறையில் காத்திருக்கச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
சத்யவதி அந்தப்புரத்திற்கு ஓடினாள். அம்பிகையை தனிமையில் அழைத்து ரகசியமாகப் பேசினாள்.
“இந்த பரதவம்சத்தைக் கைதூக்கி விடும் பொறுப்பு உன்னிடத்தில் உள்ளது. நான் அதிர்ஷ்டமில்லாதவள். என்னால் இந்த சந்ததி வளரவில்லை. இந்திரனுக்கு ஒப்பான ஒரு புத்திரனைப் பெற்று நமது குலத்தை தழைக்கச் செய். அவன் தான் இந்த பெரிய ராஜ்ய பாரத்தை தாங்க முடியும்”
இப்படி வெகுநேரம் அம்பிகையிடம் பேசி அவளைச் சரிக்கட்டினாள்.
பின்னர் அம்பிகையின் ருதுஸ்நானம் கழிந்த பிறகு அவளை அலங்காரங்கள் செய்து வெண்பட்டு உடுக்கவைத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலிருக்கும் சயன அறையில் காத்திருக்கவைத்தாள்.
“அம்பிகை! இன்று பாதி ராத்திரியில் உன் மைத்துனர் இங்கு வருவார். அவர் இன்று உன்னுடன் சேரப்போகிறார். தூங்கிவிடாதே! அவரை எதிர்பார்த்துக் காத்திரு” என்று சொல்லிவிட்டு சயன அறையை விட்டு கிளம்பினாள்.
அம்பிகை அபிஷ்டு போல பீஷ்மர் வரப்போகிறார் என்று நினைத்தாள். அல்லது கௌரவ வம்சத்து வீரர்கள் யாராவது வருவார்கள் என்று ஆசையாக காத்திருந்தாள்.
நேரம் ஓடியது. அரண்மனையில் ஆங்காங்கே எரியும் தீபங்கள் அணைந்து சயன அறையின் இருபுறங்களில் சில விளக்குகள் விட்டுவிட்டு எரிந்துகொண்டிருந்தன. அந்த அறையைக் கடப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. சத்யவதி தனது அறையில் தவம் போல காத்திருந்தாள். பீஷ்மர் தனது அறையில் தூக்கம்வராமல் ஹஸ்தினாபுரத்தின் எதிர்காலத்தை எண்ணி புரண்டு புரண்டு படுத்திருந்தார்.
நடு நிசி கடந்தது. வியாஸர் அப்போது அம்பிகை காத்திருந்த சயன அறைக்குள் புகுந்தார். விகார ரூபத்துடன் அவர் வந்ததைப் பார்த்தாள் அம்பிகை. செம்மட்டை ஜடையும் ஜொலிக்கும் கண்களும் செம்மட்டை தாடியும் கறுத்த தேகத்துடன் நுழைந்த அவரைப் பார்த்ததும் அவளுக்கு உடனே பயம் தொற்றிக்கொண்டது. இரு கண்களையும் இருக்க மூடிக்கொண்டாள். சத்யவதிக்கு கொடுத்த வாக்கின்படி அவளுடன் கலந்தார் வியாஸார்.
அதன்பிறகு நேரே சென்று தன் தாயைச் சந்தித்தார் வியாஸர். பிரம்ம முஹுர்த்த வேளையில் துடிதுடிப்பாய் இருந்தாள் சத்யவதி.
“வந்துவிட்டாயா வியாஸா? வா.. வா.. இவளுக்கு நல்ல புத்திரன் பிறப்பானா?” என்று ஓடிவந்து கேட்டாள்.
“பதினாயிரம் யானைகளின் பலம்கொண்டவனாக இருப்பான். சிறந்த புத்தியும் ஸ்ரேஷ்டனுமான ஒரு ராஜரிஷி பிறப்பான். அவனுக்கும் நூறு புத்திரர்கள் பிறப்பார்கள்”
சத்யவதியின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. ஆனால் வியாஸன் தொங்கு முகத்துடன் நின்றார்.
“ஏன் வருத்தமாக இருக்கிறாய் வியாஸா?”
“அவளுக்குப் பிறப்பவன் குருடாக இருப்பான்”
“ஏன்?”
“என்னைக் கண்டதும் பயந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டாள் அம்பிகை. கடைசிவரை கண்களைத் திறக்கவேயில்லை”
“குருவம்சத்தவர்களுக்கு குருடன் ராஜ்ஜியம் ஆளத் தகுதியற்றவன். ஆகவே ராஜாவாக தகுதியிருக்கும்படி இவளின் தங்கை அம்பாலிகையிடம் ஒரு புத்திரனி உற்பத்தி பண்ணுவாய். அவளும் யௌவனமும் அழகும் நிரம்பியவள். குருவம்சத்திற்கு இரண்டாவது புத்திரனை ஆளத்தகுதியோடு படைப்பாய்” என்று வேண்டிக்கொண்டாள்.
“சரி.. அந்தக் காலம் வரும்போது நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார் வியாஸர்.
நாளடைவில் குருடனாக ஒரு பிள்ளை பெற்றாள் அம்பிகை.
சத்யவதி துக்கமடைந்தாள். அம்பாலிகையை அழைத்து என்ன நடக்கும் என்பதை தெளிவாக விவரித்தாள். பின்னர் வியாஸனை வரவழைத்தாள்.
அதேவிகார ரூபம் கொண்டு அம்பாலிகையின் சயன அறைக்குச் சென்றார். அவரது குரூரமான ரூபத்தைக் கண்டு பயந்து உடல் வெளிறிப்போனாள் அம்பாலிகை. அவளுடன் கலந்துவிட்டு வியாஸர் அவளிடம் “என்னுடைய விகார ரூபம் கண்டு வெண்மையடைந்தாய். உன்னுடைய புத்ரன் வெண்மையாகவே இருப்பான். அவனுக்கு பாண்டு (வெண்மை) என்றே பெயர் இருக்கும்”: என்று சொல்லிச் சென்றார்.
சத்யவதி வியாஸரைச் சந்தித்து “எல்லாம் நல்லபடியாக நடந்ததா?” என்று விசாரித்தாள்.
“என்னுடைய ரூபத்தைக் கண்டு வெண்மையடைந்தாள். ஆகையால் அவளுக்கு நல்ல வீரனாகவும் ராஜலக்ஷணங்கள் நிரம்பினவானகவும் ஒளியினால் ஜ்வலிப்பவனாகவும் ஒரு புத்திரன் பிறப்பான். ஆனால் அவன் வெண்மை நிறத்தோடு பிறப்பான்” என்று சத்யவதியைப் பார்த்துச் சொல்லிவிட்டுச் சென்றார்.
பேறுகாலத்தில் அம்பாலிகை நல்ல புத்திரன் ஒருவனைப் பெற்றாள். ஆனால் அவன் வியாஸர் சொன்னது போல வெண்மை நிறத்தோடு பிறந்தான்.
குருடனும் வெண்மை நிறத்தையுடவனுக்கும் பீஷ்மர் பிராமணர்களைக் கொண்டு ஜாதகர்மம் போன்ற கிரியைகளைச் செய்துவைத்தார். அம்பிகையின் புதல்வன் குருடனாயிருப்பதில் சத்யவதிக்கு ஏகத்துக்கும் வருத்தம். தனது புத்திரனான வியாஸனை அழைத்து “அம்பிகைக்கு ஒரு நல்ல வாரிசை நீ தரவேண்டும்” என்று மீண்டும் கேட்டாள் சத்யவதி.
“அதே விதிகள்தான் அம்மா!” என்று சொல்லிவிட்டு பிறகு வருவதாகச் சொல்லிச் சென்றார் வியாஸர்.
சத்யவதி அம்பிகையிடம் இது போன்று நடக்கப்போகிறது என்று சொல்லிவைத்தாள். அந்த குறிப்பிட்ட தினத்தன்று ஏற்கனவே விகார ரூபத்தைப் பார்த்து பயந்திருந்த அம்பிகை தனது அப்ஸரஸுக்கு ஒப்பான அழகுடைய வேலைக்காரியை வியாஸரிடத்திற்கு அனுப்பிவைத்தாள்.
அந்த வேலைக்காரி அவரது விகார ரூபத்தைப் பொருட்படுத்தாமல் அவரை நமஸ்கரித்து அவர் அனுமதித்தபின் மஞ்சத்தில் ஏறினாள். அவரிடம் அருவருப்படையாமல் காமஸுகத்தைக் கொடுத்தாள். கலந்த பின்னர் வியாஸர்
“நீ அடிமைத்தனம் நீங்கியவளானாய். உனக்குப் பிறக்கப் போகும் புத்ரன் தர்மாத்மாவாகவும் உலகத்திலுள்ள புத்திமான்கள் எல்லோரையும்விட சிறந்தவனாகவும் இருப்பான்” என்று ஆசி கூறி புறப்பட்டார்.
க்ருஷ்ண த்வைபாயனரின் அந்தப் புத்திரன் விதுரன் என்று அழைக்கப்பட்டான். திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் சகோதரனாகப் பிறந்தான். நீதி சாஸ்திரங்களின் நுட்பம் தெரிந்தவன். அவன் தர்மதேவதை. ஆனால் தர்மதேவதையாகிய அவன் ஆணிமாண்டவ்யர் என்ற ரிஷியின் சாபத்தால் விதுரனாப் பிறந்தான்.
ஆணி மாண்டவ்யர் யார்? அவரது சாபம் என்ன? அடுத்த பாகத்தில்.....

No comments:

Post a Comment