Monday, March 12, 2018

யுதிஷ்டிர பட்டாபிஷேகம்


பாண்டவர்களின் வருகையால் அரண்மனை களை கட்டியது. துரியோதனனின் மனைவி காசிராஜனின் மகள். அவள் மற்ற திருதராஷ்டிர புத்திரர்களின் மனைவிகளோடு திரௌபதியை மரியாதை செய்து அழைத்தாள். அந்தப்புரத்தில் நுழைந்த குந்தியும் திரௌபதியும் காந்தாரிக்கு நமஸ்காரம் செய்தார்கள். காந்தாரி அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்தாள். அப்போது திரௌபதியை அவள் தழுவிக்கொண்டாள். சட்டென்று அவள் மனதில் “இவள் தான் நம் புத்திரர்களுக்கு நமன்” என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. துணுக்குற்றாள்.

”விதுரர் இங்கே வந்திருக்கிறாரா?” என்று வினவினாள் காந்தாரி.
“இங்கேதான் இருக்கிறேனம்மா” விதுரர் பதில் கொடுத்தார்.
“விதுரரே! ராஜபுத்ரியான குந்தியை அவள் மருமகளோடும் அவள் கொண்டு வந்த சீர் வரிசைகளோடும் பாண்டுவின் கிரஹத்திற்கு சீக்கிரமே அழைத்துப் போகவேண்டும். அங்கே அவர்கள் மகிழ்ந்திருக்கட்டும்” என்றாள்.
"அப்படியே ஆகட்டும்” என்று தலை வணங்கிச் சொன்னார் விதுரர்.
**
வஸந்தமும் வெப்பமும் மாறி மாறி காலம் ஓடியது. கிருஷ்ணனும் பாண்டவர்களுடன் சிலகாலம் அஸ்தினாபுரத்தில் வசித்திருந்தார். ஒரு நாள் திருதராஷ்டிரரிடம் இருந்து பாண்டவர்களுக்கு அழைப்பு வந்தது. விரைந்து சென்று வணங்கினர். ஆஜானுபாகுவாக பக்கத்தில் பீஷ்மர் நின்றிருந்தார். அவையில் துரோணர் கிருபர் என்று மரியாதைக்குரியவர்களின் தலைகள் தென்பட்டன.
“யுதிஷ்டிரா!” வாஞ்சையுடன் அழைத்தான் திருதராஷ்டிரன். பீஷ்மர் கண்களில் சிரிப்பு.
“இந்த ராஜ்ஜியம் பாண்டுவினால் விஸ்தரிக்கப்பட்டது. உனது தந்தை எனது கட்டளையை மீறியதில்லை. நீயும் மீறமாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு”
விஷயத்தில் பொடி வைத்தான் திருதராஷ்டிரன். பீமனும் அர்ஜுனனும் திருதராஷ்டிரனைக் கூர்ந்து நோக்கினார்கள். பரந்த சபையில் இவர்கள் ஐவர் இருக்க விதுரர் மற்றும் பீஷ்மரோடு திருதராஷ்டிரனும் இன்னபிற அமைச்சர்களும் அமர்ந்திருக்க வாயிற்காப்போர்கள் சிறியதாக தெரியும் அளவிற்கு வெகுதூர வாசலில் நின்றிருந்தார்கள். பெரும் சபை அது.
“என் மைந்தர்கள் அனைவரும் துராத்துமாக்கள். அகங்காரத்தின் உருவங்கள். என் கட்டளையை ஒருபோதும் மதிக்கமாட்டார்கள். கர்விகள். இவர்களோடு மீண்டும் விரோதம் வேண்டாம். நீ பேசாமல் காண்டவபிரஸ்தத்துக்கு சென்றுவிடேன். தேவேந்திரனைப் போல அர்ஜுனன் உன்னைக் காப்பான். அங்கே உங்களை யாராலும் அசைக்கமுடியாது. கிருஷ்ணனிடமும் கேட்டுக்கொள். அவனும் சம்மதிப்பான்”
இவர்கள் பின்னாலேயே கிருஷ்ணனும் அந்த அவைக்கு வந்து தூரத்தில் அமர்ந்திருந்தான். பாண்டவர்கள் ஐவரும் கிருஷ்ணன் அமர்ந்திருக்கும் இடம் சென்று சுற்றி அமர்ந்துகொண்டனர். ஆலோசனை செய்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டேயிருக்கும் போது திருதராஷ்டிரன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து நின்றான்.
“விதுரா!”
திருதராஷ்டிரன் பக்கத்தில் ஓடிச்சென்று நின்றார் விதுரர்.
“ராஜ்ஜிய அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை தயார் செய்யச் சொல். யுதிஷ்டிரனுக்கு இப்போதே ராஜ்யாபிஷேகம் செய்யப் போகிறேன். பிராமணர்களுக்கும் நகரத்திலுள்ள பெரிய மனிதர்களுக்கும் அழைப்பு அனுப்புங்கள். மந்திரிகளையும் பந்துக்களையும் அழைக்க வேண்டும். ஆயிரம் கோ தானம் செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள். பிராமணர்களுக்கு கிராமங்களை தானம் செய்ய வேண்டும்”
விதுரர் சந்தோஷத்தில் விக்கித்து நின்றார். பீஷ்மர் ஏற்கனவே பாண்டவர்களைப் பார்த்து பெருமிதத்துடன் நின்றிருந்தார். துரோணரும் கிருபரும் சந்தோஷத்தின் எல்லையில் இருந்தார்கள்.
“விதுரா! நீ ஓடிப்போய் கிரீடங்களையும் முத்து மாலைகளையும் பொன்னாலான மாலைகளையும், அரைஞானையும் பொற்பூணூலையும் அரைக்கச்சையையும் கொண்டு வா. ஆயிரத்தெட்டு யானைகளில் கங்கை நீர் கொண்டு வரட்டும். குந்தியின் ஜ்யேஷ்ட புத்திரன் யுதிஷ்டிரன் இராஜ வாகனத்தின் மீதேறி மக்கள் ஜெய கோஷமிட வலம் வரட்டும். எனக்கு உபகாரம் செய்த பாண்டுவுக்கு நான் செய்யும் பிரதியுபகாரமாக இருக்கட்டும்”
பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர் என்ற பெரும் அறிஞர் கூட்டம் “சரி...சரி...சரி...” என்று ஆதரித்து கோஷம் எழுப்பினார்கள். ஒரு ஓரத்தில் நின்றிருந்த அத்தையின் முகத்தைப் பார்த்தார் ஸ்ரீகிருஷ்ணர். அவளுடைய ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை என்பதுபோல அமர்ந்திருந்தாள்.
“அரசர்க்கு அரசே! உம்முடைய இந்தச் செயல் கௌரவர்களுக்கு கீர்த்தி தரக்கூடியது. இதை உடனே நடத்துங்கள்” என்றார் கிருஷ்ணர்.
சில நாழிகைகள் ராஜ்யாபிஷேகத்தை நடத்துவதற்கான முஸ்தீபுகளில் சென்றது. அனைவரும் பெரிய மனிதர்களுக்காகக் காத்திருக்க அங்கே கிருஷ்ண த்வைபாயனர் ப்ரவேசித்தார். குந்தியும் பீஷ்மரும் அவையோரும் அவர் ராஜ்யாபிஷேகம் செய்து வைப்பதை சிலாக்கியமாகக் கருதினர். அனைவரும் வேண்டிக்கொள்ள அவரே யுதிஷ்டிரரருக்கு பட்டாபிஷேகம் செய்ய ஒப்புக்கொண்டார்.
கிருஷ்ணர், கிருபர், துரோணர், தௌமியர், வியாஸர் என்று அனைவரும் சேர்ந்து யுதிஷ்டிரரை சிம்மாசனத்தில் அமரவைத்தார்கள். பொற்குடத்தில் கொண்டு வரப்பட்ட கங்கை நீரால் வியாஸர் யுதிஷ்டிரருக்குப் பட்டாபிஷேகம் செய்தார். எல்லோரும் “ஜய..ஜய” என்று வெற்றி கோஷமிட்டார்கள். யானை மீதேறி அஸ்தினாபுரத்தை வலம் வந்தார். அரண்மனைக்குள் அவர் பிரவேசிக்கும் முன்னர் காந்தாரியின் புத்திரர்களான துரியோதனாதிகள் அனைவரும் சென்று திருதராஷ்டிரனை தங்களுக்கு வஞ்சம் இழைத்துவிட்டதாக முறையிட்டனர்.
கிருஷ்ணன், குருவம்சத்தார் அனைவரும் சபையில் அமர்ந்திருக்க பட்டாபிஷேகம் ஆன யுதிஷ்டிரரிடம் திருதராஷ்டிரன் பேசினார்.
“யுதிஷ்டிரா! ராஜ்யாபிஷேகம் ஆயிற்று. நீ உடனே காண்டவபிரஸ்தம் செல். ஆயுவும் புரூரவஸும் நகுஷனும் யயாதியும் காண்டவபிரஸ்தத்தில்தான் வாசம் செய்தனர். பூருவம்சத்தவர்க்கு அதுதான் ராஜதானி. புதன் புத்திரனான புரூரவஸின் லோபத்தனத்தினால் ரிஷிகள் அதனை அழித்தார்கள். ஆதலால், நீ சென்று காண்டவபிரஸ்தத்தை விருத்தி செய்.”
பாண்டவர்கள் இதற்கு மறுபேச்சே பேசவில்லை. சபையில் பெரியவர்களுக்கு நமஸ்கரித்து தேர்கள், குதிரைகள், யானைகள், காலாட்படைகளோடும் அங்கிருந்து புறப்பட்டார்கள். பாண்டவர்கள் மீதிருந்த அன்பின் காரணத்தினால் அவர்கள் பின்னாலேயே அஸ்தினாபுரத்து மக்களும் புறப்பட்டார்கள். சகுனியும் துரியோதனனும் அப்படிப் புறப்பட்ட மக்களை “பாண்டவர்களுடன் சேர்ந்து யாரும் செல்லக்கூடாது” என்று தடுத்தார்கள்.
காண்டவபிரஸ்தத்தை பாண்டவர்கள் அடைந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணர் இந்திரனை நினைத்தார். தேவலோகத்தில் இந்திரன் உடனே அவர்களுடைய தேவதச்சனாகிய விஸ்வகர்மாவை அழைத்தான்
“இன்றுமுதல் அந்த நகரம் அழகில் சிறந்த இந்திரபிரஸ்தம் என்ற பெயரில் புகழ்பெற்று பூமியில் இருக்கும் தேவலோகமாகத் திகழ வேண்டும்”
அடுத்த கணம் பூலோகத்தில் கிருஷ்ணர் முன்னால் நின்றான் விஸ்வகர்மா.
“ப்ரபோ! நான் என்ன செய்ய வேண்டும்?”
“இந்திரனுடைய அமராவதிக்கு நிகரான நகரமாக இதை நிர்மாணம் செய்.” என்று கட்டளையிட்டார் கண்ணபிரான். அவ்விடத்தில் பாண்டவர்கள் சாந்திஹோமம் செய்தார்கள். விஸ்வகர்மா தனது வேலையைத் துவங்கினான்.
விஸ்வகர்மா மாட மாளிகைகளை உருவாக்கினான். ஆங்காங்கே தாமரைத் தடாகங்கள் முளைத்தன. மாமரத்திலிருந்து பலவிதமான மரங்கள் ஆங்காங்கே நட்டுவைக்கப்பட்டு சிறிது நேரத்தில் காய் தள்ளத் துவங்கின. நந்தினி என்ற ஒரு நதி அந்த நகரத்தைச் சுற்றி ஓடியது. கோக்களும் குதிரைகளும் மேய்ந்தன. வீதிகள் ஒழுங்கோடு நிர்மாணிக்கப்பட்டன. மயில்களின் நடனமும் குயில்களின் பாட்டும் அந்த நகரத்தின் அமைதியைப் பறைசாற்றின.
மொத்தம் முப்பத்திரண்டு வாயில்கள் கொண்ட நகரம். ராஜ வாஹனத்தில் கிருஷ்ணனுடன் யுதிஷ்டிரர் பிரவேசித்தார். சகுனி, துரியோதனன், கர்ணன் என்று பெரும் கௌரவக் கூட்டமே அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். வியாஸருக்கும் விஸ்வகர்மாவுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு யுதிஷ்டிரர் அரண்மனையினுள் ஓடிவந்தார். கண்கள் அரக்கப்பரக்க ஸ்ரீகிருஷ்ணரைத் தேடியது.
“யாதவ திலகமே! உம்மால் எனக்கு இந்த ராஜ்ஜியம் கிடைத்தது. பாண்டவர்களுக்கு எந்த ஆபத்துக்காலத்திலும் நீரே கதி. உங்கள் அனுக்கிரஹத்தால் நாங்கள் ராஜ்யாதிகாரத்தில் இருக்கிறோம்” என்றார்.
“யுதிஷ்டிரா! உம்முடைய சக்தியினால் இந்த ராஜ்ஜியம் கிடைத்தது. தகப்பன் பாட்டன் என்று வம்சாவழியாக வரும் ராஜ்ஜியம் உனக்குக் கிடைக்காமல் போகுமா? திருதராஷ்டிர புத்திரர்கள் கெட்ட நடத்தையுள்ளவர்கள். மேன்மேலும் சந்தோஷமாயிருக்க பிராமணர்களைக் காப்பாற்றும். மஹிமை பொருந்திய நாரத மாமுனிவர் இன்னும் சற்று நேரத்தில் இங்கே வருவார். அவரது அறிவுரைகளை வாங்கிக்கொள்ளுங்கள். அவரின் உபதேசத்தின்படி ஆட்சி செலுத்தும்”
குந்தியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் சமுத்திரமானது.
“நீ நாதனாக இருப்பதினால் நாங்கள் உயிர் பிழைத்து இருக்கிறோம். அரக்குமாளிகை தீப்பற்றியது உனக்குத் தெரிந்திருக்கிறது. நீ இல்லையென்றால் நாங்கள் பிழைப்பதெப்படி? உன்னைப் பார்த்தவுடனேயே எங்கள் துயரங்கள் விலகிவிடுகின்றன. கோவிந்தா!”
கண்ணபிரான் தன் அத்தையாகிய குந்தியை வணங்கி விடைபெற்றார். பலராமருடன் குதிரையேறி துவாரகா நகரம் சென்றார்.
**
யுதிஷ்டிரர் தர்மபரிபாலனம் செய்துகொண்டிருக்கிறார். திரௌபதியுடன் பாண்டவ சகோதரர்களுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறாள்.
அப்போது நாரதமகரிஷி தர்மபுத்திரைப் பார்க்கும் பொருட்டு அஸ்தினாபுரம் வந்தார்.

No comments:

Post a Comment