Monday, March 12, 2018

ஸுந்தோபஸுந்தர்கள்



யுதிஷ்டிரரின் தர்ம ஆட்சி இந்திரபிரஸ்தத்தில் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு நாள் ஆகாய மார்க்கமாக தேவலோக ரிஷி நாரதர் அங்கு வந்தார். நேரே யுதிஷ்டிரரின் சபையில் வந்து இறங்கினார். காதுகளில் பொற்குண்டலங்கள் ஆடிக்கொண்டிருந்தது. வெள்ளிக்குடையைப் பிடித்திருந்தார். முகத்தில் பிரம்மதேஜஸ் பொங்கியது.

[நாரதரின் குண விசேஷங்கள் பற்றிய இரண்டு பக்க குறிப்பு வருகிறது. இதில் நாரதரின் புத்தி பலம், ஆன்ம பலம், பக்தி பலம், தேஜோ பலம் என்று பல அரிய செய்திகள் இடம் பெற்றிருக்கிறது. முடிந்தால் தனி பதிவாக பின்னர் எழுதுகிறேன்]
நாரதர் வந்திறங்கியதும் சிம்மாசனத்திலிருந்து எழுந்து எதிர்கொண்டு அழைக்க ஓடினார் யுதிஷ்டிரர். அவருக்கு அபிவாதனம் செய்தார். பின்னர் கிருஷ்ணாஜினம் போடப்பட்ட ஆஸனத்தில் அவரை அமரவைத்தார். பின்னர் அவருக்குப் பூஜை செய்து நின்ற போது “நீயும் அமரலாம்” என்று நாரதர் சொன்னவுடன் சென்று தனது ஆசனத்தில் தர்மன் அமர்ந்தார். அருகில் இருந்த ராஜ்ய சேவகனை அழைத்தார். அவன் காதில் ஏதோ சொல்லியனுப்பினார்.
சிறிது நேரத்தில் திரௌபதி அங்கு வந்தாள். நேரே நாரத மகரிஷியின் காலில் விழுந்து வந்தனம் செய்தாள். நாரதர் அவளுக்கு அநேக ஆசீர்வாதங்களை வழங்கினார். பின்னர் “நீ செல்லலாம்” என்று உள்ளே அனுப்பினார்.
”புகழ்பெற்ற உங்கள் ஐவருக்கும் பாஞ்சாலி ஒரே தர்ம பத்னியாக இருக்கிறாள். அவள் பொருட்டு உங்களுக்குள் விரோதம் வளர்ந்துவிடக்கூடாது. அதற்கான வழிமுறைகளை நீங்களே வகுத்துக்கொள்ளுங்கள். முன்பொரு காலத்தில் ஸுந்தோபஸுந்தர்கள் என்ற சகோதரர்கள் யாராலும் வெல்லமுடியாமல் இருந்தார்கள். ஆனால் ஒரு பெண்ணின் பொருட்டு அவர்கள் இருவரும் அடித்துக்கொண்டு செத்தார்கள். அதுபோல இல்லாமல் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்”
யுதிஷ்டிரர் எழுந்திருந்தார்.
“மஹா முனிவரே! ஸுந்தோபஸுந்தர்கள் யார்? அவர்களது கதையை நீங்கள் எங்களுக்கு அருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்.
“ஹிரண்யகசிபுவின் அஸுர வம்சத்தில் வந்தவன் நிகும்பன். அவனுக்கு ஸுந்தன் உபஸுந்தன் என்று இரு புத்திரர்கள். இருவரும் ஒரே எண்ணமுள்ளவர்கள். அவர்களுக்கு ஆஸனம் ஒன்று. கிருஹம் ஒன்று. ராஜ்யம் ஒன்று. படுக்கை ஒன்று. போஜனம் ஒன்று. ஒருவனை விட்டு மற்றொருவன் உண்ணமாட்டான். பேசமாட்டான். மூவுலகையும் ஜெயிப்பதற்காக விந்தியமலை அருகே தவமியற்றச் செய்தார்கள். அவர்கள் நீண்ட காலம் உக்கிரமான தவம் செய்தார்கள். காற்றைப் புசித்தார்கள். கால் கட்டைவிரலில் நின்றார்கள். கையிரண்டும் விண்ணை நோக்கித் தூக்கியிருந்தார்கள். அவர்களின் தவத்தின் உக்கிரம் எப்படியிருந்தது தெரியுமா?”
சபை முழுவதும் அந்தக் கதையில் மூழ்கியிருந்தது. நாரதரின் இந்தக் கேள்வியில் அனைவரும் வெளியே வந்தார்கள்.

”விந்தியமலை புகையைக் கக்கியது. அப்போது அவர்களின் தவத்தைக் கண்டு தேவர்கள் அச்சமுற்றனர். ஸ்த்ரீகளையும் ரத்னங்களையும் பல முறை காட்டி ஆசை மூட்டினார்கள். அவர்கள் கொண்ட உறுதியை விடவில்லை. கடைசியில் பிரம்மதேவர் அவர்கள் முன் தோன்றினார். இருவரும் அவருக்கு கை கூப்பி வந்தனம் செய்தார்கள்.
“எங்களுடைய தவத்தினால் நீங்கள் சந்தோஷமடைந்துள்ளீர்கள். நாங்கள் இருவரும் மாயைகளையும் அஸ்திரங்களையும் அறிந்தவர்களாகவும் பெரும் பலம் வாய்ந்தவர்களாகவும் நினைத்தால் நினைத்த ரூபமெடுக்ககூடியவர்களாகவும் மரணமில்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். இதுவே நாங்கள் வேண்டும் வரம்”
நான்முகன் மெல்ல நகைத்தவாறே “மரணத்தைத் தவிர நீங்கள் வேண்டிய மற்றவைகள் உங்களுக்கு தந்தேன்” என்றார்.
இரு அசுரர்களுக்கும் இது ஏமாற்றமாக இருந்தது. உடனே பிரம்மதேவரிடம் “நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் கொல்லலாமே ஒழிய மற்ற எவராலும் எதாலும் எங்கும் எங்களுக்கு மரணம் நிகழக்கூடாது.” என்று வேண்டினார்கள்.
“மரணத்தைப் பற்றிய உங்களது கோரிக்கையையும் ஏற்று அந்த வரத்தைத் தருகிறேன்” என்று சொல்லி மறைந்தார் பிரம்மா.
ஜடாமுடிகளைக் களைந்து கிரீடம் தரித்து உயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு மிகவும் சந்தோஷமாக அந்தச் சகோதரர்கள் இருவரும் கொண்டாட்டமாக பொழுதைக் கழித்தார்கள். பல வருஷங்கள் ஒரு தினம் போலச் சென்றது.
மூவுலகையும் வெல்வதற்காக ஸுந்தோபஸுந்தர்கள் இருவரும் பெரும் சேனையுடன் புறப்பட்டார்கள். இந்திரலோகத்தை ஜெயித்தார்கள். பூமியின் உட்புறமாக சென்று பாதாள லோகத்தையும் பிடித்தார்கள். பின்னர் பிராமணர்களின் ஹோமங்களைத் தடுத்தார்கள். ரிஷிகளைக் கொன்றார்கள். அந்தணர்கள் அனைவரும் அனுஷ்டானங்களை விட்டுவிட்டு ஓடினார்கள். புலி சிங்கம் போன்ற கொடிய மிருகங்களின் ரூபங்களை எடுத்துக்கொண்டு தவமியற்றும் ரிஷி சிரேஷ்டர்கள் அனைவரையும் வேட்டியாடினர்.

ஸுந்தோபஸுந்தர்களின் இந்த செய்கைகளைக் கண்டு சூரிய சந்திரர்கள் நவக்ரஹங்கள், ஸப்தரிஷிகள் அஸ்வினி தேவர்கள் ஆகியோர் துயரம் அடைந்தனர். எல்லா திசைகளையும் ஜெயித்தார்கள். எதிரிகளே இல்லாதவர்களாகிவிட்டார்கள். குருக்ஷேத்திரத்தில் வாசம் செய்ய ஆரம்பித்தார்கள்.
தேவாதிதேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் ஓடினார்கள். ஸுந்தோபஸுந்தர்களின் அக்கிரமங்களையும் அழிச்சாட்டியங்களையும் எடுத்துரைத்தார்கள். இதற்கு ஒரு உபாயத்தை அவர்தான் காட்டவேண்டும் என்று வேண்டினார்கள்.
பிரம்மா சிறிது நேரம் யோசித்தார். பின்னர் விஸ்வகர்மாவை அழைத்தார்.
”மூவுலகத்தோரும் ஆசைப்படும்படியான ஒரு பெண்ணை உருவாக்கு” என்று கட்டளையிட்டார். விஸ்வகர்மா நான்முகனுக்கு நமஸ்காரம் செய்து ஆகச் சிறந்த பெண் ரூபத்தை சிந்தனை செய்தான். உலகந்தோரும் இருக்கும் அசைவன அசையாதவைகளில் இருந்து காட்சிக்கு இனியதாக உள்ளவைகளைக் கொண்டு ஒரு பெண்ணை தயாரித்தான். கோடிகோடியான ரத்னங்களிலிருந்து எள்ளளவு எடுத்து அவளது அவயங்களில் பதித்தான். மூன்று லோகங்களில் இருக்கும் ஸ்தீரிகளில் அவளைப் போன்றதொரு அழகை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்.
அவளைப் பார்ப்பவர்களின் பார்வை ஒரு இடத்தில் பதிந்து போனால் அதைவிட்டு அந்தக் கண்கள் அகலாதவாறு அவளது தேகம் இருந்தது. நினைத்த ரூபம் எடுப்பவளாக அவள் படைக்கப்பட்டிருந்தாள். அந்த தேவ சபையே ஆச்சரியமாக அவளைப் பார்த்தது.
பிரம்மாவிடம் சென்று நமஸ்கரித்தாள்.
“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள்.
அநேக இரத்தினங்களில் இருந்து எள்ளளவு எள்ளளவாக எடுத்து அவளைப் படைத்ததினால் அவளுக்கு “திலோத்தமை” என்று பெயரிட்டார் பிரம்மதேவர்.


“திலோத்தமா! ஸுந்தோபஸுந்தர்கள் என்னும் அரக்கர்களிடம் செல். உன்னுடைய தேஜோன்மயமான அழகினால் அவர்களுக்கிடையே விரோதம் உண்டாகும்படி செய்.”
“அப்படியே ஆகட்டும்” என்ற திலோத்தமை அந்த தேவர் சபையை ஒரு முறை திருவலம் வந்தாள். அவள் பிரதக்ஷிணம் செய்யும் போது பிரம்மதேவர் கிழக்குப் புறம் இருந்தார். சங்கரர் தென்புறத்திலும் தேவர்கள் வடபுறத்திலும் இருந்தார்கள். ரிஷிகள் நாற்புறமும் கூடியிருந்தார்கள். அவள் பிரதக்ஷிணம் வரும்போது இந்திரனும் சங்கரரும் சஞ்சலமடைந்தார்கள். தென்புறம் வரும் போது சங்கரருக்கு அந்தத் திசையில் ஒரு முகம் முளைத்தது. மேற்க்கு திசை வரும்போது அங்கு ஒரு முககும் வடதிசையில் ஒரு முகமும் கீழ்த்திசையில் ஒரு முகமும் மலர்ந்து நான்முகரானார். இந்திரன் அவள் செல்லும் திசையெல்லாம் கண்களை உண்டாக்கி சகஸ்ரநேத்திரனானான்.தேவக்கூட்டமெல்லாம் அவள் மேலேயே கண்ணாக இருந்தார்கள். அவள் செல்லும் காரியம் ஜெயம் என்று அனைவரும் நம்பிக்கையுடன் பிரம்மாவிடம் விடைபெற்றார்கள்.
ஸுந்தோபஸுந்தர்கள் எதிரிகள் யாரும் இல்லாததால் வனப் ப்குதிகளில் மகிச்சியுடன் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள். தேவலோகத்தின் உயர்ந்த பொருட்களைக் கொண்டு வந்து விந்தியமலைச்சாரலில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தவண்ணம் இருந்தார்கள். அப்போது ஒற்றையாடையில் கவர்ச்சி சிந்தும் கண்களுடன் திலோத்தமை அங்கு சென்றாள்.
மதுபான மயக்கத்தில் இருந்த அசுரர்கள் இருவரும் அவளைக் கண்டதும் காமவசப்பட்டனர். ஸுந்தன் வலக்கையையும் உபஸுந்தன் இடக்கையையும் பிடித்துக்கொண்டு “இவள் எனக்குத்தான்” என்று இழுத்தார்கள். புருவம் நெறித்தார்கள்.
“இவள் என்னுடைய மனைவி. நீ மரியாதை செய்” என்றான் ஸுந்தன்.
“இவள் உனக்கல்ல. என்னுடையவள்” என்றான் உபஸுந்தன்.
இருவருக்கும் வெறி ஏறியது. கள்ளுண்ட மயக்கதில் இருந்த இருவரும் கதைகளை எடுத்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டார்கள். பயங்கரமான அந்த அசுரர்கள் இருவரும் அந்தப் பெண்ணின் பொருட்டால் அடித்துக்கொண்டு செத்து விழுந்தார்கள்.
பிரம்மா அவ்விடம் வந்தார்.
“சூரியன் சஞ்சரிக்கும் காலமெல்லாம் நீயும் இருப்பாய். ஆனால் உன்னுடைய பிரதிபலிக்கும் ஒளியால் யாரும் உன்னைப் பார்க்க முடியாது” என்று வரமளித்தார். இந்திரன் திரிலோகத்தையும் ஆளத்தயாரானான்.
இப்படி நெருங்கிய ஸ்நேகிதம் நிரம்பியவர்களாகவும் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்த ஸுந்தோபஸுந்தர்கள் இருவரும் திலோத்தமைக்காக அடித்துக்கொண்டார்கள். மரணமடைந்தார்கள். அதுபோல அல்லாமல் நீங்கள் அனைவரும் திரௌபதியைக் காரணமாக வைத்து சண்டையிடக்கூடாது. அவளுடன் வசிக்கும் உபாயத்தைக் கண்டறிந்து சுகமாக இருக்கக்கடவீர்” என்று நாரதர் கதையை முடித்தார்.
தேவரிஷியாக நாரதர் முன்னிலையில் பாண்டவர்கள் ஒரு விதி செய்துகொண்டார்கள்.
“கிருஷ்ணை ஒவ்வொருவன் கிரஹத்திலும் ஒரு வருஷம் வசிப்பாள். நமக்குள் ஒருவன் திரௌபதியோடு இருக்கும்போது இன்னொருவன் பார்த்தால் அவன் பன்னிரண்டு மாதம் பிரம்மசாரியாக வனம் போக வேண்டும்”
அனைவரும் இதை ஒத்துக்கொண்டார்கள். நாரதருக்கு சந்தோஷம். வந்த காரியம் முடிந்ததென்று அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
[ராஜ்யலாப பர்வம் முடிந்தது]
*

ஐந்து யானைகளுடன் கூடிய சரஸ்வதி என்னும் நதிபோல திரௌபதி பாண்டவர்களுடன் கூடியதாலும் அவர்கள் ஒவ்வொருவரும் திரௌபதியுடன் கூடியதாலும் மிகுந்த சந்தோஷமாக இருந்தார்கள்.
நீண்ட காலம் ஆனந்தமாகச் சென்றது.
ஒருநாள் பிராமணன் ஒருவன் அர்ஜுனனின் மாளிகை வாசலில் வந்து நின்று குரல் கொடுத்தான்.
“இந்த அக்கிரமத்தைக் கேட்க ஆளில்லையா? சாந்தமான பிராமணனின் சொத்து கொள்ளை போகிறது”
வெளியே ஓடிவந்தான் அர்ஜுனன்.
“என்னவாயிற்று?”
“என்னுடைய பசுக்களை திருடர்கள் கவர்ந்து சென்றார்கள். நீங்கள்தான் மீட்டுத் தரவேண்டும். ஆறில் ஒரு பங்கை வரியாக வாங்கும் ராஜா ஜனங்களின் துயரை நீக்கி ரக்ஷிக்க வேண்டும். இல்லையேல் பாபிஷ்டனாகிறான்”
தனஞ்செயனின் ஆயுதங்கள் யுதிஷ்டிரர் கிருகத்தில் இருந்தது. இப்போது திரௌபதி யுதிஷ்டிரருடன் இருக்கும் காலம். அங்கே சென்றால் நிபந்தனையை மீறியவன் என்ற அவப்பெயர் வரும். என்ன செய்யலாம் என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தான் அர்ஜுனன். அங்கே நின்றிருந்த பிராமணன் புலம்ப ஆரம்பித்தான்.
“புலியின் குகையை அது இல்லாத போது அல்ப நரி மிதிக்கிறது. பிராம்மணனுடைய ஹவிஸ் காக்கைகளினால் கெடுக்கப்படுகிறது. இதைக் கேட்பார் இல்லையா?”
அழும் இந்த பிராமணனை ரக்ஷிக்காவிட்டால் தர்மம் காக்க தவறியவன் ஆகிவிடுவோம். அண்ணாவாகிய தர்மம் இல்லத்தின் வாசற்படி மிதித்தால் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி சத்தியம் தவறியவன் ஆகிவிடுவோம். பின்னர் பன்னிரெண்டு மாதகாலம் வனவாசம் செல்ல வேண்டும். சரீரமே போனாலும் பரவாயில்லை. பிராமணனின் பசுக்களை மீட்க வேண்டும்.
இவ்வாறு மனதில் எண்ணிக்கொண்டு தர்மர் மாளிகையினுள் புகுந்தான். தனது ஆயுதத்தை எடுத்துக்கொண்டு முகத்தை மூடிக்கொண்டே வெளியே வந்துவிட்டான்.
வில்லை எடுத்துக்கொண்டு வந்தவன் அந்த பிராமணனையும் தேரில் ஏற்றிக்கொண்டு பசுக்களை கவர்ந்து சென்றவர்களின் திசையில் விரைந்தான். அதிசீக்கிரத்தில் அவர்களைக் கண்டுபிடித்து சரமாரி பொழிந்து அவர்களை வதைத்து பசுக்களை மீட்டு பிராமணனிடம் ஒப்படைத்தான். கண்களில் கண்ணீரோடு அதைப் பெற்றுக்கொண்ட பிராமணன் அவனை ஆசீர்வதித்தான்.
அரண்மனை திரும்பிய அர்ஜுனன் தர்மரிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.
“நான் நாம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டேன். ஆகையால் வனம் செல்கிறேன்”
“அர்ஜுனா! பெரியவன் கிரஹத்தினுள் சிறியவன் நுழைவது தர்மலோபமில்லை. சிறியவன் இருக்கும்போது நான் நுழைந்தால் அதுதான் பிழை. நீ எங்கும் செல்ல வேண்டாம். இங்கேயே இரு.” என்று நா தழுதழுக்க கேட்டுக்கொண்டார் தர்மபுத்திரர்.
“கபடமாக தர்மம் செய்வது தகாது. நான் சத்தியத்திலிருந்து விலகமாட்டேன். ஆயுதத்தைத் தொட்டு சத்தியம் செய்கிறேன்”
அர்ஜுனன் பிரம்மசாரியாக வனவாசம் கிளம்பிவிட்டான். ஒன்றல்ல இரண்டல்ல பன்னிரெண்டு மாதங்கள்.

No comments:

Post a Comment