Friday, March 9, 2018

என்னோடு மோதிப் பார்...


சிலம்பக்கூடம் சுற்றிலும் முத்துச்சரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தது. வைடூர்யங்களினாலும் ரத்னங்களினாலும் பொற்தோரணங்களினாலும் பிரகாசித்தது. திருதராஷ்டிரன் பெரிய ரதமேறி புறப்பட்டான். அந்தப்புர ஸ்திரீகளும் அலங்காரமான ரதங்களில் பின் தொடர்ந்தார்கள். சபையோரும் பிராமணரும் கூட வந்தார்கள். கிருபர் ஸோமதத்தன் பூரிஸ்ரவஸ் மற்ற கௌரவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு திருதராஷ்டிரன் நகரத்துக்கு வெளியே இருந்த சிலம்பக்கூட மைதானத்துக்கு வந்தான்.

அங்கே விஸ்ராந்தியாக உட்கார்வதற்கு மஞ்சமிட்டிருந்தார்கள். காந்தாரி குந்தி ஆகியோர் அதிலேறி அமர்ந்தார்கள். பொதுஜனங்கள் பார்ப்பதற்கு படிகள் போன்று அந்த காட்சிசாலையைச் சுற்றி கட்டியிருந்தார்கள். மொத்த நகரமுமே அந்த வித்தைகளைக் காண்பதற்கு கூடியிருந்தது. மக்கள் வெள்ளமும் அவர்கள் இட்ட இரைச்சலும் மாபெரும் சமுத்திரம் அலையடித்து ஓசை எழுப்பது போல இருந்தது.
ஆகாயத்தைக் கிழிப்பது போல துந்துபி வாத்தியங்கள் முழங்கின. திரண்டிருந்த ஜனங்கள் அந்த சப்தத்தைக் கேட்டு அமைதியானார்கள்.
வெண்மையான வஸ்திரத்தோடும் பளீரென்ற யக்ஞோபவீதத்துடனும் வெளுத்த தலைமயிரும் தாடியுமாக துரோணாசாரியார் அந்த அரங்கத்தினுள் பிரவேசித்தார். அவருடன் ஜ்யேஷ்டரான தர்மபுத்திரர் நிமிர்ந்த நெஞ்சுடன் உள்ளே நுழைந்தார். உயர்ந்த ஆசனத்தில் வியாஸர் அமர்ந்திருந்தார். துரோணர் வியாஸருக்கு வந்தனம் செய்து பூஜை செய்ய அனுமதி பெற்றார்.
வரிசையாய் நின்ற பிராமணர்கள் வேதம் சொல்ல மங்கள காரியங்கள் பல நடந்தது. திருதராஷ்டிரன் பொன்னும் முத்தும் பவளவமும் ரத்னங்களையும் வாரி வாரி கிருபருக்கும் துரோணருக்கும் தக்ஷிணையாக அளித்தான். ஸுகத்தையும் புண்ணியத்தையும் தரக்கூடியதுமான புண்ணியாஹவாசனத்தைச் செய்தார்கள்.
மங்கள காரியங்கள் முடிந்ததும் ஒருமுறை வாத்திய முழக்கம் செய்தார்கள். வேலைக்காரர்கள் பலர் பலவிதமான ஆயுதங்களைக் கொண்டு வந்து மைதானத்தின் மத்தியில் வைத்தார்கள். பின்னர் மஹாரதர்களும் புண்ணிய சிரேஷ்டர்களூமான ராஜகுமாரர்கள் வந்தார்கள். அவர்கள் விரல்களுக்கு உடும்புத் தோலினால் ஆன விரலுறைகள் அணிந்திருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் கிருபரும் துரோணருக்கும் மரியாதைகள் பல செய்தார்கள். அபிவாதனம் செய்தார்கள். இரு ஆசாரியர்களும் அவர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதம் செய்தார்கள். பிறகு புஷ்பங்களினால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களுக்கும் அஸ்திரங்களுக்கும் அர்ச்சனை செய்து பூஜித்தார்கள்.
துரோணர் கண்ணசைவில் உத்தரவு தந்ததும் அனைவரும் தங்களது ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். குழு பயிற்சி போல அனைவரும் முதலில் விற்களை எடுத்துக்கொண்டார்கள். நாணேற்றினார்கள். அம்புகளை வில்லில் தொடுத்து நாண் சப்தமெழுப்பியும் உள்ளங்கை சப்தமும் எழுப்பி பார்க்கக் குழுமியிருந்தவர்களை மூர்ச்சையுறச் செய்தார்கள்.
ஜ்யேஷ்டராகிய யுதிஷ்டிரர் முதல் மற்றவர்களும் அங்கே வியப்புறும்படி ஆயுதப் பயிற்சி செய்தார்கள். காட்சிசாலையின் நடுவிலிருந்து அவர்கள் விட்ட அம்புகளில் சில பார்வையாளர்கள் அணிந்திருந்த மாலைகளில் தைத்தது. இன்னும் சிலருக்கு அவர்கள் தலையில் சூடிக்கொண்டிருந்த புஷ்பங்களில் புகுந்தது.
பெயர் அடையாளமுள்ள பாணங்களால் சிலர் பெரிதும் சிறிதுமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த குறிகளை அடித்தார்கள். பார்வையாளர்களில் சிலர் தங்கள் மேல் அம்பு பாய்ந்துவிடுமோ என்று தலையைக் குனிந்து கொண்டார்கள். தங்களைக் கடக்கும் அஸ்திரங்களைப் பிடித்துவிடுவது போல சிலர் தைரியத்துடன் எத்தனித்துத் தோற்றார்கள். விதம்விதமான வித்தைகளைக் கண்டு அந்த பார்வையாளர்கள் பிரமித்துப்போயிருந்தார்கள்.
லக்ஷக்கணக்கானோர் இந்தக் காட்சிகளைப் பார்த்து “ஆஹா.. நல்லது.. நல்லது..” என்று பரவசத்தோடு கூவினார்கள். திடீரென்று அந்த மைதானத்துக்குள் யானைகளும் குதிரைகளும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. சிலர் குதிரைகளில் பாய்ந்தேறி புழுதிபறக்க அந்த மைதானத்தில் விரைந்துகொண்டே அங்கிருந்த குறிகளை அடித்தார்கள். ”டிங்..டிங்..டிங்..” என்று ஒரு கையில் கத்தியும் மறுகையில் கேடயுமாக கத்திச் சண்டைப் போட்டார்கள்.
கூட்டமே தலையைத் திரும்பிப் பார்க்கும்படி பீமஸேனனும் துரியோதனனும் கையில் கதாயுதத்தோடு அந்த காட்சிசாலைக்குள் நுழைந்தார்கள். இரண்டு மலைகளுக்கு கால்கள் முளைத்து நடந்துவருவது போல இருந்தது அந்தக் காட்சி.
கச்சை கட்டிக்கொண்டு இருவரும் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டார்கள். கதைகள் மோதிக்கொள்ளும் சப்தம் இரு பர்வதங்கள் மோதிக்கொண்டு பிளந்துகொள்வது போல இருந்தது. வலமும் இடதுமாக சுழன்று சுழன்று சண்டையிட்டார்கள்.
திருதராஷ்டிரனுக்கு விதுரர் விளக்கமளித்தார். கண்ணை மூடி அமர்ந்திருந்த காந்தாரிக்கு குந்தி உதவிசெய்தாள்.
துரியோதனனுக்கும் பீமஸேனுக்கும் நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். துரியோதனன் பீமனைத் தள்ளும் போது “துரியோதனா! வெல்க... வெல்க” என்று கோஷமிட்டும் பீமன் துரியோதனனை துவைக்கும் போது “பீமா! நீதான் வெல்வாய்.. வெல்க.. வெல்க...” என்றும் கட்சி கட்டிக்கொண்டு ஆதரித்தார்கள்.
துரோணருக்கு போட்டி வேறுபக்கம் செல்வது போலிருந்தது. பக்கத்தில் வாய் பிளந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த தன் மகன் அஸ்வத்தாமாவை அழைத்தார்.
“அஸ்வத்தாமா.. இவர்கள் இருவரும் சண்டையிடுவதைப் பார்த்தால் கோஷ்டி பிரிந்து ஆதரிக்கும் இவர்களிடையேயும் கைகலப்பு வரும் போலிருக்கிறது. ஆகையால் நீ சென்று இருவரையும் விலக்கிவிடு”
அஸ்வத்தாமா கதாயுத்தம் செய்துகொண்டிருந்த இருவர்களையும் ஒதுக்கிவிட்டான்.
“பீமா.. குருவின் ஆக்ஞை.. நிறுத்து...” சுழற்றிய கதையை கீழேவிட்டான் பீமன்.
“துரியோதனா.. குருவின் கட்டளை.. ஆயுதத்தை கீழே போடு” என்றதும் துரியோதனனும் கதையை போட்டான்.
“உங்களூடையை வேகத்தையும் வித்தையையும் காட்டியது போதும். நீங்கள் வெளியேறுங்கள்”
அஸ்வத்தாமா இதுபோல சொன்னதும் இருவரும் முறைத்துக்கொண்டே கலைந்து சென்றார்கள்.
துரோணர் சபைநடுவே வந்து நின்றார்.
”இவன் இந்திரனுக்கு ஒப்பானவன். ஆயுதங்களில் நிபுணன். என் புத்திரனை விட எனக்கு நல்ல நண்பன் .அர்ஜுனனைப் பாருங்கள்”
இப்படி குருவால் அறிமுகப்படுத்தப்பட்ட அர்ஜுனன் கைவிரல்களில் உறை அணிந்திருந்தான். கையில் இந்திரதனுஸ் வைத்திருந்தான். சந்தியாகாலத்து சிவப்பு மேகம் போல நின்றிருந்தான். கூட்டம் அவனைக் கண்டு பெருங்குரலெடுத்துப் பாராட்டி ஆர்ப்பரித்தது.
“அழகுள்ளவனே”
“தர்மிஷ்டனே”
“கௌரவர்களைக் காப்பாற்றுபவனே! “
“எல்லா அஸ்திரங்களும் தெரிந்தவனே”
“நல்லொழுக்கத்தில் சிறந்தவனே”
“ஞானத்திற்கு நிதியானவனே”
இப்படி பல்வாறக கோஷங்கள் எழுப்பிக்கொண்டு காத்திருந்தார்கள்.
திருதராஷ்டிரனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. யாரேணும் பயிற்சியில் புதிதாக சேர்ந்துகொண்டார்களா? அசாதாரண பயிற்சி கொண்டாடினார்கள். இப்போதைக்கு திருதராஷ்டிரனுக்குத் துணை விதுரர் மட்டும்தான்.
“என்ன சப்தம் விதுரா/’?
”மஹாராஜரே! குந்தி மற்றும் பாண்டு புத்திரனான பல்குனன் கவசத்துடன் களமிறங்கியிருக்கிறான். அவனை வரவேற்கும் பொருட்டுதான் எல்லோரும் அவன் புகழ் பாடுகிறார்கள். மஹாரதனாம். வில் வித்தையில் கெட்டிக்காரனாம்”
ஆக்னேயாஸ்திரத்தை விட்டான். ஒரு மூலையில் தீப்பிடித்துக்கொண்டது. அதை அணைப்பதற்காக வாருணாஸ்திரத்தை ஏவினான். மேகாஸ்திரம் எய்தான். ஆகாயத்தில் மேகம் உண்டானது. வாயுவாஸ்திரத்தை விட்டவுடன் அந்த அரங்கத்தையே தூக்கிக் கொண்டுபோகும்படி காற்று வீசியது. திடீரென்று இரு மலைகள் அந்த மைதானத்தில் நடுவில் தோன்றியது. பர்வாதஸ்திரத்தை ஏவியிருந்தான் அர்ஜுனன்.
எல்லோரும் அதிசயத்துப் பார்த்துக்கொண்டிருக்க அந்தர்த்தானமென்னும் அஸ்திரத்தை ஏவி அவனே மறைந்துகொண்டான். ஆசாரியருக்கு அன்பனாக அந்த அர்ஜுனனுக்கு இன்னும் சில குறிகள் கொடுத்தார்கள். ஒரு இரும்புப் பன்றியை லக்ஷியமாக சுழலவிட்டார்கள். அந்த இரும்புப் பன்றியின் வாயில் ஐந்து பாணங்களை ஒரே பாணம் போல எய்தான். மாட்டுக் கொம்பு ஒன்றை மேலிருந்து கீழாக கயிற்றில் தொங்கவிட்டார்கள். இருபத்தோரு பாணங்களை அதன் மேல் தொடர்ந்து தைத்தான்.
பிரமிக்கத்தக்க அர்ஜுனனின் ஆற்றலைக்கண்டு அந்த கூட்டம் ஆஹாகாரம் செய்தது. எல்லா வித்தைகளும் காட்டப்பட்டு சபை ஓய்ந்திருந்தது. அப்போது யாரோ அந்த சிலம்பக்கூடத்தின் வாசலில் நின்று சப்தமாக தோள் தட்டுவது கேட்டது. அந்த தோள் தட்டுவது பூமி வெடிக்கப்படுவது போலிருந்தது. எல்லோரும் அந்த அரங்கத்தின் வாயிலைப் பார்த்த்படி எழுந்திருந்தார்கள். துரோணரை சூழ்ந்து நின்றிருந்த பாண்டவர்கள் ஐவரும் வாசலை உற்று நோக்கினார்கள். அஸ்வத்தாமாவுடன் துரியோதனனும் அவனது நூறு சகோதரர்களும் எழுந்து நின்று பார்த்தார்கள். கையில் கதையுடன் கம்பீரமாக துரியோதனன் எழுந்து நின்றது அஸுரர்களை சம்ஹாரம் செய்து தேவக்கூட்டம் சூழ்ந்திருந்த இந்திரன் போல நின்றான் துரியோதனன்.
மனிதர்கள் வழிவிட்டு நதிக்கு விலகுவது போல இருகரைகளாக ஒதுங்கினார்கள். குந்திக்கு கன்னிப் பருவத்தில் பிறந்தவனாகிய கர்ணன் உள்ளே நுழைந்தான். மலர்ந்த கண்கள். இடுப்பில் கத்தி. வில்லை ஏந்திய பர்வதமொன்று காலல் நடப்பது போன்று அங்கே பிரவேசித்தான்.
அங்கே அமர்ந்திருக்கும் அனைவரும் இளக்காரமாகப் பார்த்தான். கிருபருக்கும் துரோணருக்கும் வந்தனம் செய்தான். அர்ஜுனன் நின்றிருந்த பக்கம் திரும்பி
:”அர்ஜுனா! நான் உன்னைவிட அதிகம் வித்தை காட்டுவேன். மிகவும் கர்வப்படாதே” என்றான் அலட்சியமாக. அமர்ந்திருந்த அனைத்து ஜனங்களும் இந்தப் பேச்சைக் கேட்டதும் எழுந்து நின்றார்கள். அர்ஜுனனின் பராக்கிரமத்தால் அசந்து போய் சோர்வடைந்திருந்த துரியோதனன் உற்சாகமாக எழுந்திருந்தான். அர்ஜுனனுக்கு வெட்கமும் கோபமும் ஏறியது.
அங்கே ஒரு மாபெரும் யுத்த காட்சிக்கு அரங்கம் தயாராகிக்கொண்டிருந்தது:

No comments:

Post a Comment