Friday, March 9, 2018

வ்யுஷிதாஸ்வன், உத்தாலகர் கதைகள்


[இது நானெழுத ஆரம்பித்த வ்யாஸபாரதத்தின் ஐம்பதாவது பதிவு. பொறுமையுடன் படித்துக் கமெண்டி மகிழ்வோர்க்கு வந்தனங்கள்]

பாண்டுவின் புத்ரோத்பத்தி கவலையால் குந்தியும் மனமுடைந்தாள்.
”அரசே! உம்மைத் தவிர வேறொரு புருஷனை சந்ததி விருத்திக்காகக் கூட சேர மாட்டேன். நீரே தர்மப்படி என்னுடன் சேர்ந்து புத்திரர்களை பெறுவீர். மனதாலும் இன்னொருவரை நான் அடையேன்”
பாண்டு பார்வையை எங்கோ தொலைத்துவிட்டு வெறுங்கூடாக அமர்ந்திருந்தான். அருகில் இருந்த குந்தியே மேலும் பேசினாள்.
“நான் பூரு வம்ச ராஜா ஒருவரின் கதையைக் கேட்டிருக்கிறேன். அதை இப்போது உங்களுக்கும் சொல்கிறேன். கேளுங்கள்”
பாண்டு நிதானமாகத் திரும்பினான். குந்தி கதையை ஆரம்பித்தாள்.
வ்யுஷிதாஸ்வன் பூரு வம்சத்து கியாதி பெற்ற ராஜா. தர்மிஷ்டன். புஜபலம் மிக்கவன். பத்துயானை பலம் கொண்டவன். அந்த ராஜஸிம்மமான வ்யுஷிதாஸ்வன் பல யாகங்கள் செய்தான். அதில் விசேஷம் என்னவென்றால் தேவர்களும் பிரம்மரிஷிகளும் அந்த யாகத்தில் வந்து பங்கு எடுத்துக் கொள்வதுடன் அந்த வேலைகளிலும் ஈடுபடுவார்கள். அவன் வஸந்தகாலத்து சூர்யன் போல ஜனங்கள் மத்தியில் வலம் வந்துகொண்டிருந்தான்.
சமுத்திரங்களை எல்லையாக உடைய அனைத்து தேசங்களையும் வென்று எல்லா வர்ணத்தவர்களையும் தனக்குப் பிறந்த புத்திரர்களை பிதா காப்பாற்றுவது போல பாதுகாத்தான் என்று வ்யுஷிதாஸ்வனை எல்லோரும் புகழ்ந்தார்கள்.
நான்கு திசைகளுக்கும் திக்விஜயம் செய்து எல்லா அரசர்களையும் வென்று அஸ்வமேத யாகம் செய்தான். இந்திராதி தேவர்களும் பிராமணர்களும் அதில் கலந்துகொண்டார்கள். இந்திரன் ஸோமரசத்தினாலும் பிராமணர்கள் தக்ஷிணைகளாலும் பரமதிருப்தியடைந்தார்கள். அளவற்ற ரத்னங்களை சம்பாதித்து அந்த தனங்களினால் மேலும் மேலும் பல யாகங்களை செய்தான்.
அநேக தரம் ஸோம ரஸத்தைப் பிழிந்து இந்திரனுக்கு கொடையளித்தான். ஸோமலதை உண்டாகும் இடங்களை அபிவிருத்தி செய்தான். அவனுடைய அனைத்துவிதமான யக்ஞாதிகர்மங்களுக்கு உறுதுணையாக நின்றவள் அவனது தர்மபத்னி பத்ரை. அவள் கக்ஷீவானின் புத்ரி.
அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் அன்புமாரி பொழிந்து அநேக வருஷங்கள் சேர்ந்திருந்தார்கள். அவள் மேல் அளவில்லா பிரியத்தோடு இருந்த வ்யுஷிதாஸ்வன் க்ஷயரோகத்தால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தான். அப்போது அவர்களுக்கு புத்ரன் உண்டாகவில்லை.
அவன் இறந்தபின் மிகவும் துயரமடைந்த பத்ரை புலம்பினாள். அவனது பிரேதத்தின் மீது கட்டிக்கொண்டு அழுதாள்.
“புருஷனில்லாத பெண் எவளாகியும் ஜீவித்திருக்கக் கூடாது. கணவனில்லாத பெண்ணிக்கிற்கு இறப்பே சிறப்பு. உம்வழியில் நானும் வருகிறேன். என்னையும் அழைத்துக்கொள்ளும். அதிர்ஷ்டமில்லாதவளாகிய நான் பூர்வஜென்மத்தில் ஆண்பெண்ணை பிரித்திருப்பேன் போலும். அப்படிப்பட்ட தீவினைகளால் இப்போது நான் துன்பப்படுகிறேன்”
ஜோதிமயமாக ஏதோ ஒன்று அவனது பிரேதத்திலிருந்துக் கிளம்பி விண்ணொக்கிச் சென்றது. கண்ணைக் கூசும் ஒளியின் மையப்புள்ளியிலிருந்து அசரீரியாக அது பேசியது.
“அன்பின் பத்ரையே! எழுந்து செல். கண்களைத் துடைத்துக்கொள். நானே உன்னிடத்தில் புத்திரர்களை உண்டாக்குகிறேன். ருதுஸ்நானம் கழிந்த பிறகு உன் படுக்கையில் சதுர்த்தசி தினமும் அஷ்டமி தினத்திலும் நானே வந்து சேருவேன்.”
அந்தப் பதிவ்ரதையான பத்ராதேவி அந்த அசரீரீயீன் வாக்குப்படி அந்தந்த தினங்களில் அவளது சயன அறையில் காத்திருந்து மூவரைப் பெற்று ஸால்தவதேசத்துக்கு அரசர்களாக்கினாள். பின்னர் நால்வரைப் பெற்று மத்தரதேசத்துக்கு அதிபதியாக்கினாள்.
இந்தக் கதையைச் சொல்லி முடித்த குந்தி..
“இந்தப் பூர்வ கதையில் உள்ளது போல நான் உங்களுடன் சேர்ந்தே புத்திரர்களைப் பெறுவேன். ஆகையால் இன்னொரு ஆடவனை நாடமாட்டேன்” என்றாள்.
பாண்டு அவளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான்.
“குந்தியே! வ்யுஷிதாஸ்வன் காலத்தில் பெண்கள் கட்டில்லாதவர்களாகவும் பூர்வ சுதந்திரர்களாகவும் இருந்தார்கள். தர்மசாகரமான ரிஷிகளிடமிருந்து அறிந்துகொண்ட ஒரு பழமையான தர்ம ரஹஸ்யத்தை உன்னிடம் சொல்லப்போகிறேன். கேள்.
அக்னிக்கு விறகுகளும், சமுத்ரத்திற்கு நதிகளும், யமனுக்கு ஸர்வபிராணிகளும் பெண்களுக்குப் புருஷர்களும் எப்போதும் போதுமனாதாக இருந்ததில்லை. ஸ்திரீகளுக்கு ஒவ்வோர் புருஷன் மேலும் ஆசையிருக்கிறது. முற்காலத்தில் தங்கள் புருஷர்களை மீறி விபசரித்தும் அவர்களை பாபம் பீடிக்கவில்லை. உத்தாலகர் என்னும் புகழ்பெற்ற ரிஷி இருந்தார். அவருக்கு ஸ்வேதகேது என்ற பெயர்பெற்ற புத்திரர். அவரும் பெரிய ரிஷி.
உத்தாலகரும் அவரது மனைவியும் வெயில் மழை பனி புயல் என்று எதற்கும் அச்சப்படாமல் தவமியற்றினார்கள். ஸ்வேதகேது தாய்தந்தையர்க்கு பணிவிடைகள் செய்வார். ஒரு நாள் தள்ளாடியபடி நரையும் மூப்பும் எய்திய ஒரு பிராமணர் வந்தார். அவரை வரவேற்று காய் கனிகள் கொடுத்து உபசரித்தார்கள். ஸ்வேதகேதுவும் கூடமாட சிஷ்ருஷைகள் அந்த பிராமணருக்குச் செய்தார்.
களைப்பு நீங்கிய அவர் உத்தாலகரைப் பார்த்து “ரிஷியே! இந்தப் பாலகன் மிகவும் ப்ரியமுள்ளவனாக இருக்கிறான்.உமது புத்திரன் என்று நினைக்கிறேன். நீர் பெரும் பாக்கியசாலி” என்றார்.
“எனது மனைவி குசிகருடைய பெண். என்னிடம் மிகுந்த அன்பு உள்ளவள். பதிவ்ரதைகளில் அருந்ததி போன்றவள். என்னோடு தவமியற்றி இப்படி வற்றிப்போயிருக்கிறாள். இந்த ஸ்வேதகேது இவளிடத்தில் பிறந்தான். தயை உள்ளவன். பொய்யாமொழி”
வந்திருந்த பிராமணருக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
“ரிஷியே! எனக்குப் புத்திரனில்லை. ஒரு பாரியை வேண்டும். கண் பார்வையற்றவன். வயதாகிவிட்டது. ஆனால் பிதிர்க் கடனிலிருந்து மீள வேண்டுமென்றால் ஒரு புத்ரன் வேண்டும். உமது பாரியை எனது கோத்திரத்திற்கு ஒத்தவளாக இருக்கிறாள். இவளை அழைத்துக்கொண்டு போக அனுமதியும்”
குடிலுக்குள் இருந்த அனைவரும் ஸ்தம்பித்துப்போயினர். மான்குட்டியின் கண்களைப் போல அந்த ரிஷிபத்னியின் கண்கள் அலைபாய்ந்தது. மரவுரியும் மேனிகு கிருஷ்ணாஜினத்தையும் அணிந்திருந்த அவளுக்கு தனது வேலைகளை செய்துகொள்ளவே சக்தியற்றவளாக இருந்தாள். அவ்வளவு நேரமும் தவத்திலேயே இருந்ததினால் பேசக்கூட திராணியில்லை. அந்த வயது முதிர்ந்த பிராமணர் ஒரு கையில் தடியை ஊன்றியிருந்தார். மறு கையில் அந்த ரிஷிபத்னியின் கையைப் பிடித்து இழுத்து “வா போகலாம்” என்றார்.
இதுவரை இந்தக் கூத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்வேதகேதுவுக்கு கோபம் தலைக்கேறியது.
“ஓய்! துஷ்டப் பிராமணரே! பதிவிரதையான எனது தாயரை விடும். உமக்கே தாயார் போன்றவள். பிரம்மரிஷியான எனது பிதா சாந்தஸ்வரூபி. பேசாமலிருக்கிறார். கற்பையும் தவத்தையும் நல்லொழுக்கங்களையும் அணிகலன்களாக உடைய எனது தாயாரை விடும். தவறு செய்யாதீர்கள்”
இப்படி இரைந்த ஸ்வேதுகேதுவை மிரட்சியோடு பார்த்தார் அந்தப் பிராமணர். பின்னர் கெஞ்ச ஆரம்பித்தார்.
“கசியபகோத்திரனே! நீ புத்திரனாக பிறந்ததினால் உனது தந்தையார் பிதிர் கடனிலிருந்து விடுபட்டார். நான் முதியவன். எனக்கு யார் பெண் தருவார்? ஆகையால் ஒரே ஒரு புத்திரனை பெற்றவுடன் மீண்டும் உன் தாயாரை உன்னிடம் திருப்பித் தந்துவிடுகிறேன்”
மன்றாடிப் பார்த்தார். ஸ்வேதகேதுவின் கோபம் பன்மடங்காகப் பெருகியது.
“உமக்கு வெட்கமாகயில்லையா?” என்று சீறினார்.
உத்தாலகர் இந்த சண்டைக்கு சாட்சியாக நின்றிருந்தார். பின்னர் அவர்
“குழந்தாய்! நீ கோபம் கொள்ள வேண்டாம். இது புராதன தர்மம்தான். பூமியில் எந்த வர்ணங்களிலும் ஸ்திரீகளுக்கு கட்டில்லை. அவ்வாறிருந்தும் அவர்கள் குடும்பத்திலிருந்து தவறி நடக்கவில்லை. ருதுகாலம் வந்த போது புருஷனை விடாமல் இருந்தார்கள்”
இந்த தர்மம் ஸ்வேதகேதுவிக்கு சகிக்காமல் இருந்தது. அப்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர் ஒரு தர்மத்தை வகுத்தார்.
“இதுமுதல் பதியை விட்டு விபசரிக்கும் பெண்ணுக்கு கர்ப்பத்தைக் கொன்ற பாபம் வரும். அதேபோல பால்யகாலத்திலிருந்து கற்புநெறியில் நிற்கும் பாரியையை விட்டு விபசரிக்கும் ஆண்களுக்கும் இதே பாபம் ஏற்படும். புத்திர ஸந்தானத்துக்காக கணவனாலேயே கட்டளையிடப்பட்ட மனைவி அவ்வாறு செய்தால் அவளும் மிகப்பெரிய பாபத்தை அடைவாள்”
அந்த ஆஸ்ரமத்தில் அப்போது இருந்த அனைவரும் உறைந்துபோய் நின்றார்கள்.
”குந்தி! ஸௌதாஸன் என்னும் ராஜாவினால் அவளது பாரியை மதயந்தி என்னும் உத்தமஸ்திரீ வஸிஷ்டருடன் சேர்ந்து அஸ்மகன் என்ற புத்திரனைப் பெற்றாள். அதுவும் அவளது பர்த்தாவின் விருப்பம்தான். கௌரவர்களின் வம்சம் தழைப்பதற்காக க்ருஷ்ண த்வைபாயனருடன் சேர்ந்து எங்களது தாய் அம்பாலிகை எங்களைப் பெற்றெடுத்தாள்.”
குந்தி குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.
“பதிவ்ரதையே! ருதுகாலங்களில் மட்டும் ஸ்திரீ கணவனை மீறி நடக்கக்கூடாது. ஏனைய காலங்களில் அவள் ஸ்வதந்திரமாக இருக்கத்தக்கவள்.”
இன்னமும் குந்திக்கு அது ஏற்புடையதாக இல்லை.
“தர்மமோ அதர்மமோ பர்த்தா எதைச் சொல்கிறானோ அதை பாரியை செய்யவேண்டும் என்று வேதம் தெரிந்தவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள். நான் புத்திரனை விரும்புகிறேன். நானாக அதை உன்னிடம் உண்டாக்க யோக்கியதை அற்றவனாக இருக்கிறேன். என் கட்டளையில் தவத்திற் சிறந்த பிராமணனைக் கொண்டு குணங்கள் நிரம்பிய புத்திரர்களை பெற்றுக்கொள். உன்னால் நான் நல்ல லோகங்களை அடைய வாய்ப்பு ஏற்படுத்திக்கொடு”
பாண்டு இப்படி வேண்டிக்கொண்டவுடன் குந்தி நீண்ட யோசனையில் ஆழ்ந்தாள்.
“க்ஷத்திரியரே! கணவன் பாரியையை வேண்டிக்கொள்வது என்பது பெரிய பாபம். இப்போது நான் உங்களுக்கு ஒரு சந்துஷ்டியான செய்தி ஒன்று சொல்வேன். நான் சிறு பெண்ணாக இருக்கும்போது என் பிதாவின் அரண்மனைக்கு வரும் அதிதிகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலிருந்தேன். அப்போது துர்வாஸஸ் என்ற கோப முனிக்கு சிஷ்ருஷைகள் செய்தேன். சிறந்த மஹிமை பொருந்திய அவர் ஒரு மந்திரம் எனக்கு அருளினார். அந்த மந்திரத்தால் எந்த தேவதையை ஆவாஹனம் செய்தாலும் அந்த தேவதைக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்கு வசப்படுவான். அந்த தேவதையின் அனுக்ரஹத்தால் எனக்கு புத்திரன் உண்டாவான். பிராமணர் சொல் தவறாது. என் பிதாவின் க்ருஹத்தில் இது நடந்திருக்கிறது. உம் அனுமதியின் பேரில் நான் தேவதையை வருவிப்பேன். அந்த புத்திரன் சந்ததியில்லாதமையினால் உமக்கு உண்டான வருத்தத்தைப் போக்குவான்”
பாண்டுவிற்கு சந்தோஷம் பன்மடங்கானது.குந்தியை ஒரு தெய்வத்தைப் போல பார்த்து மனதுக்குள் நமஸ்கரித்தான்.

No comments:

Post a Comment