Friday, March 9, 2018

அம்பையின் தவம்



பீஷ்மரும் சத்தியவதியும் அந்தப் பெண்ணை விசித்திரமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

“என்னைக் கவர்ந்து வந்து வீரத்தை நிலைநாட்டிய உங்களுக்குத் தர்மமும் தெரியும் என்று நினைக்கிறேன்” என்றாள் அலட்சியமாக.
பீஷ்மரை விட சத்யவதி கொதித்தாள்.
“என்ன வேண்டும் உனக்கு? சுற்றி வளைத்துப் பேசாதே!” சட்டென்று தடுத்தாள். சத்தத்தினால் வாயிற்காப்போன் பதற்றமடைந்து அவனது கையில் பிடித்திருந்த வேல் கீழே விழுந்து “டொய்ங்...” எதிரொலித்தது.
அம்பை அசரவில்லை.
“நான் ஸௌபல தேசத்தரசன் சால்வனை ஏற்கனவே வரித்துவிட்டேன். என் தந்தையும் அதற்கு சம்மதித்திருந்தார். ஸ்வயம்வரத்தில் அவனுக்குதான் மாலை போடுவதாக இருந்தேன். அதற்குள்...”
”உன் பெயர்?”
“அம்பை”
பீஷ்மர் தீவிர யோசனையில் மூழ்கினார். அம்பை அங்கேயே நின்று கொண்டிருந்தாள். சத்யவதி பீஷ்மர் என்ன சொல்லப் போகிறார் என்று அவர் முகம் பார்த்துக் காத்திருந்தாள். அரண்மனையில் இருக்கும் பிராமணர்கள் மற்றும் நீதிமான்கள் சிலரை உடனே அங்கே அழைத்து வர உத்தரவிட்டார். அவர்களுடன் ஒரு மணி ஆலோசனை நடத்தினார்.
“இன்னொரு ஆடவனின் பேரில் ஆசை வைத்தவள், விவாஹ மந்திரங்களைக் கூறி மேடையில் ஒருவனுக்காக ஆசீர்வதிக்கப்பட்டவள், வாக்காலும் மனசாலும் இன்னொருவனுக்கு கொடுக்கப்பட்டவள் ஆகியோர் விலக்கப்பட வேண்டியவர்கள். ஆகையால் இந்த அம்பை என்னுடைய சகோதரனுக்கு வேண்டாம்”
அந்த அறிவிப்பில் ஆனந்தமடைந்தாள் அம்பை.
“அண்ணா! இன்னொருவனிடம் ஆசை வைத்த இவளிடம் என்னை விவாஹம் செய்துகொள்ளும்படி நிர்பந்திக்காதீர்கள்” என்று விசித்திரவீரியன் வேறு பிரத்யேகமாகக் கேட்டுக்கொண்டான்.
“நல்லது” என்றார் பீஷ்மர்.
உடனே எதிர்பட்ட முகூர்த்தத்தில் அம்பிகை, அம்பாலிகை ஆகிய இருவரையும் விசித்ரவீரியனுக்கு சாஸ்திரபிரகாரம் மணமுடித்து வைத்தார். திருமணம் வெகு விமரிசையாக அரண்மனையில் நிறைவடைந்தது. விருந்தாளிகளும் அண்டை தேசத்து அரசர்களும் விருந்து உண்டு கிளம்பினார்கள்.
மறுநாள் காலையில் அம்பையை அழைத்தார் பீஷ்மர்.
“பெண்ணே! நீ விரும்பிய சால்வனையே சென்று மணந்துகொள். உன்னை சுதந்திரமாக விடுகிறேன். நான் விவாஹ சம்பந்தம் இல்லாவதன். இந்திரியங்களை ஜெயித்துவிட்டேன். உன் விவாஹத்தைப் பார்த்துக்கொள்” என்றார்.
பீஷ்மரை வணங்கி விட்டுத் தனது தோழிகள் சிலரை அழைத்துக்கொண்டு அம்பை ஸௌபல தேசத்துக்குச் சென்றாள். சால்வன் ராஜசபையில் வீற்றிருந்தான். தன்னைக் கண்டு காதலுடன் எதிர்கொண்டு அழைப்பான் என்று நினைத்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
“எங்கே வந்தாய்?” என்று உறுமினான் சால்வன்.
“பீஷ்மரிடம் உன்னை வரித்ததைச் சொன்னேன். அவரிடமும் அவர் தம்பியிடமும் அனுமதி பெற்று உன்னை மணக்க வந்திருக்கிறேன். என்னை நீ ஏற்றுக்கொள்வாயாக” என்றாள்.
“வேறொருவன் அபகரித்துச் சென்ற உன்னை நான் விவாஹம் செய்துகொள்ள மாட்டேன். அரசர்களுக்கு முன்னால் என்னை ஜெயித்து உன்னைத் தூக்கிச்சென்றான் அந்த பீஷ்மன். நீ அவனிடமே போகலாம்.” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டான் சால்வன்.
அம்பை மீண்டும் ஹஸ்தினாபுரம் வந்து பீஷ்மரிடம் வாதாடினாள்.
”நீர் தர்மம் தெரிந்தவர். அரசர்களை ஜெயித்து என்னைக் கவர்ந்து வந்தவர் நீர்தான். இப்போது நான் வரித்தவனும் என்னை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்கிறான். ஆகையால் நீரே என்னை விவாஹம் செய்துகொள்ளும்.”
”நான் ஜிதேந்திரியன். யாரையும் விவாஹம் செய்துகொள்ளமாட்டேன். நீ திரும்பவும் சால்வனிடமே சென்று கேட்டுப்பார்” என்று திருப்பியனுப்பினார்.
திரும்பவும் சால்வனிடம் செல்வாள். அவன் மறுப்பான். பீஷ்மரிடம் வருவாள். அவர் ஜிதேந்திரியன் என்று சொல்வார். விசித்ரவீரியனுக்கும் உன் மேல் இஷ்டமில்லை என்று சொல்வார். அம்பை மீண்டும் சால்வனிடம் ஓடுவாள். இப்படி பல முறை நடந்தது.
ஆறு வருடங்கள் சால்வனிடமும் பீஷ்மரிடமும் நடையாய் நடந்து தேய்ந்தாள் அம்பை. உள்ளம் சோர்ந்தாள்.
கடைசியில் “மற்றொருவன் ஜெயித்தவளை நான் அடையமாட்டேன்” என்று சால்வனும் “நான் ஜிதேந்திரியன்” என்று பீஷ்மரும் அவளை நிராகரித்துவிட்டார்கள்.
ஹஸ்தினாபுர அரண்மனை வாசலில் நின்று அழுதாள் அம்பை. கண்களிலிலிருந்து தாரை தாரையாய் நீர் கொட்டியது. ஊராரே பார்த்து உச் கொட்டி விசனப்பட்டார்கள். வரித்தவனும் கை விட ஜெயித்தவனும் வேண்டாம் என்று விரட்ட இப்படியொரு கேவலமான நிலைக்கு வந்ததை எண்ணி எண்ணி அழுதாள்.
பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாய்க் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
“இந்த பீஷ்மனை நான் கொல்வேன்” என்று சூளுரைத்தாள். கண்கள் சிவந்தன.
தலைவிரி கோலமாக விடுவிடுவென்று அங்கிருந்து கிளம்பி நேரே இமயமலைச் சரிவுக்குச் சென்றாள். அங்குள்ள பாஹுதா நதிக்கரையில் தவமியற்றத் துவங்கினாள். இரவுபகல் வெயில்மழை புயல்காற்று என்று பாராது கடும்தவம் மேற்கொண்டாள். தனது கால் கட்டைவிரலில் நின்று உக்கிரமாக பன்னிரெண்டு வருஷகாலம் அந்தத் தவம் தொடர்ந்தது. அவளது தவத்தால் தேவர்கள் நடுங்கினார்கள்.
தேவசேனாதிபதியான முருகப்பெருமானிடம் அவர்கள் ஓடினார்கள். அவர் அம்பையின் தவத்தை மெச்சினார். இவ்வளவு உக்கிரமாக தவமியற்றும் அவளது குறிக்கோளையும் தெரிந்துகொண்டார். அவளை அனுக்ரஹிக்கவும் சந்தோஷப்படுத்தவும் அவள் முன்னே தோன்றினார்.
தனக்கு முன்னால் பளீர் வெளிச்சம் பரவுவதை உணர்ந்து இமை திறந்தாள் அம்பை. கண்கள் கூசியது. அந்த வெளிச்சத்தின் நடுவில் ஷண்முகர் தோன்றினார்.
“அம்பை! உனது தவத்தை மெச்சினேன். இந்த தாமரைமலர்கள் கட்டிய தேவலோகத்து மாலையை உனக்குத் தருகிறேன். இதை அணிந்து போர் புரிபவன் பீஷ்மரைக் கொல்வான்”
தனது தவம் பலித்ததில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள் அம்பை.
*
அந்த வாடாத தாமரைபுஷ்ப மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு இமயத்தின் சரிவிலிருந்து புதிய உத்வேகத்துடன் வேகமாக இறங்கினாள். இந்த மாலையை அணிந்து கொண்டு பீஷ்மருடன் போர் புரிய ஒரு க்ஷத்ரியனைத் தேட ஆரம்பித்தாள்.
“சால்வன் ஒரு மூடன். வேறு ஆண் என்னைக் கவர்ந்துவிட்டான் என்று சொல்லி என்னை ஏற்கவில்லை. பீஷ்மனால் எனது வாழ்க்கை கெட்டுப்போனது. அவனும் என்னை ஏற்கவில்லை. க்ஷத்ரியர்களே! உங்களில் யாரொருவர் இந்த மாலையை அணிந்துகொண்டு பீஷ்மனைக் கொல்வீர்களோ அவர்களுக்கு நான் பாரியை ஆவேன்”
இந்த வேண்டுகோளை பார்க்கும் க்ஷத்திரியர்கள் அனைவரிடமும் சொல்வாள். பீஷ்மரின் பராக்கிரம் அறிந்த எவரும் அவளை நெருங்குவதற்கு பயந்தார்கள். பித்து பிடித்தது போல எல்லா தேசமும் சுற்றி எல்லா அரண்மனை வாசல்களையும் மிதித்தாள். தன்னுடைய கோரிக்கையை எல்லா அரசர்களிடமும் சொல்வாள். அவர்கள் பீஷ்மர் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே பின் வாங்குவார்கள். வெறுப்புடன் அடுத்த தேசம் போவாள்.
இது போல ஐந்து வருடங்கள் கடந்தது.
இறுதியில் அவள் பாஞ்சால தேசத்தை அடைந்தாள். இருகரங்களையும் மேலே தூக்கிக்கொண்டு துருபதனின் அரண்மனை வாசலை அடைந்தாள். அங்கு தனது நிலையைச் சொல்லிக் கதறி தவத்தினால் ஷண்முகர் கொடுத்த மாலையையும் காட்டி பீஷ்மரைக் கொல்ல உதவி கேட்டாள்.
“துருபதராஜனே! நான் பீஷ்மனால் அணுஅணுவாகக் கொல்லப்படுகிறேன். நான் கதறிஅழுதும் ஒரு ராஜபுத்திரனும் என் துணைக்கு வரவில்லை. க்ஷத்திரியர்களே அழிந்துவிட்டார்களோ என்று அச்சப்படுகிறேன். இக்ஷ்வாகு வம்சத்தின் பெரியவனான உன்னிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறேன். என்னைக் காப்பாற்று” என்று தஞ்சமடைந்தாள்.
“அம்பையே! நான் எனது சக்திக்கு தகுத்தாற்போல சைனியம் வைத்திருக்கிறேன். வேறு அரசர்களிடம் பயம் எதுவுமிருந்தால் என்னிடம் சொல். ஒரு கை பார்க்கிறேன். சிறந்த அஸ்திரவித்தை தெரிந்த பீஷ்மருடன் யுத்தம் செய்யுமளவிற்கு நான் தேர்ச்சி பெற்றவன் அல்ல. ஆகையால் அவரை அழித்து உன்னைக் காப்பதற்கு எனக்கு சிரமம்” என்று சொன்னான்.
அம்பையின் கண்களில் கோபம் கொப்பளித்தது. க்ஷத்ரியர்களில் பீஷ்மரை எதிர்க்க எவருக்கும் துணிச்சல் இல்லை என்பது தெரிந்தவுடன் களைப்படைந்தாள். தாமரைபுஷ்பங்களால் தொடுத்த மாலை கொடுத்தாலும் பீஷ்மரை எதிர்க்க பயப்படும் க்ஷத்ரியர்களை பெண்கள் என்று பழித்தாள்.
துருபதன் அரண்மனைக்குள் செல்ல நகர்ந்தான்.
அம்பை அங்கிருந்து கிளம்பும் போது கையிலிருந்த மாலையை அரண்மனை வாசலில் இருந்த கதவில் தொங்கவிட்டுச் சென்றாள். இதைக் கண்ட துருபதன் அவளை துரத்தினான்.
“யே பெண்ணே! அம்பை!! இந்த மாலையை உன்னுடன் கொண்டு போ.. எங்களுக்குள் விரோதம் மூட்டாதே. உனக்கு புண்ணியமாகப் போகும்..”
துருபதனின் கதறலைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அம்பை ஓடினாள்.
“நான் சொன்னபடி நீ செய்! இதுதான் விதி! இது மானிடச் செயலென்று நினைக்காதே. எவன் இந்த மாலையை எடுத்து தன் கழுத்தில் போட்டுக்கொள்கிறானோ அவன் தான் பீஷ்மனைக் கொல்லப் போகிறான்”
வீதியெங்கும் எதிரொலிக்கும்படி இதைச் சொல்லிக்கொண்டே ஓடி மறைந்தாள் அம்பை.
துருபதன் கவலையில் ஆழ்ந்தான். ஒரு காவலாளியைப் போட்டு அந்த மாலையை யாரும் தொடாதவாறு ஸ்ரத்தையாக கவனித்துக்கொண்டான். அரண்மனையைக் கடப்பவர்கள் அதிசயமாக அதைப் பார்த்துக்கொண்டே நகர்வார்கள். பின்னர் சில காலத்திற்குப் பிறகு அந்த மாலையை யாரும் எடுக்கமாட்டார்கள் என்று நம்பி காவலைத் தளர்த்தினான். வருஷங்கள் ஓட அந்த மாலையைப் பற்றி மறந்தே போனான் துருபதன்.
ஒரு நாள் துருபதனின் பெண் அரண்மனை வாசலில் விளையாடிக்கொண்டிருந்தாள். வெகுதொலைவில் நின்று கொண்டிருந்த துருபதனுக்கு வாசலில் மாட்டியிருந்த மாலை பற்றி நினைவுக்கு வந்தது. அங்கிருந்தே காவலாளிகளுக்கு எச்சரித்தான். அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்தச் சிறுபெண் மாலையை எடுக்க ஓடினாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மாலையை எடுத்து கழுத்தில் போட்டுக்கொண்டாள்.
அந்த மாலையைக் கழுத்தில் போட்டுக்கொண்டவள் சிகண்டினி!!
துருபதன் செய்வதறியாது திகைத்தான்.

No comments:

Post a Comment