ஸ்வயம்வர சபை அரசர்களால் நிறைந்திருந்தது. அணிகலன்களோடும் ஆயுதங்களோடும் வந்திருந்த ராஜாக்கள் மதயானைகள் போல திமிறிக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
“திரௌபதி எனக்குத்தான்” என்று சங்கல்பத்தோடு எழுந்திருந்து அந்த லக்ஷியம் இருக்கும் இடத்திற்குச் சென்றார்கள். அப்படிச் செல்லும்போது இதுவரையில் நண்பர்களாக இருந்த அரசர்கள் கூட பொறாமையோடு “இவன் ஜெயித்துவிடக்கூடாதே” என்று மனதில் பொசுங்கிக்கொண்டிருந்தார்கள்.
தேவக்கூட்டங்கள், ஆதித்யர்கள், ருத்திரர்கள், வஸுக்கள், அஸ்வினி தேவர்கள், சப்த மருத்துக்கள்... என்று விண்ணுலகத்தோர் அனைவரும் அந்த ஸ்வயம்வர மண்டபத்தின் வானவீதியில் நின்றார்கள். இவர்கள் போதாதென்று யமனும் குபேரனும் தங்களது விமானத்தில் வந்து நின்று இந்த ஸ்வயம்வரத்தைக் காணும் ஆவலில் நின்றார்கள்.
பலராமரும் கிருஷ்ணரும் அடுத்தடுத்த யாதவர்கள் வ்ருஷ்ணி குலத்தவர்கள் வரிசையில் சிரித்த முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். கிருஷ்ணரின் கடைக்கண் பார்வைக்குக் கட்டுப்பட்டு அவர்கள் எவரும் ஆசனத்தை விட்டு எழுந்திருக்கவில்லை. மதங்கொண்ட பெரும் யானைகள் போன்ற உருவம் படைத்த ஐவரும் பிராமணர்கள் மத்தியில் அமர்ந்திருந்தார்கள். அவர்களது முகம் மலர்ந்திருந்தது.
யதுகுல திலகன் கிருஷ்ணன் அவர்களை அடையாளம் கண்டு கொண்டான். பக்கத்தில் அமர்ந்திருந்த பலராமரிடம் அவர்களை அடையாளம் காட்டினான். பலராமரும் அவர்கள் அமர்ந்திருந்த திக்கிற்கு கண்களை ஓடவிட்டு பார்த்து சந்தோஷப்பட்டார். கிருஷ்ணரையும் பலராமரையும் தவிர வேற ராஜபுத்திரர்கள் எவருக்கும் பஞ்ச பாண்டவர்களை இன்னாரென்று தெரியவில்லை.
திரௌபதி ஸ்வயம்வர மண்டபத்தின் மேல் திசையின் ஓரத்தில் நின்றிருந்தாள். அவளைக் கண்ட பொழுதில் யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன், சஹதேவன் என்று குந்தி புத்திரர்கள் அனைவரும் மன்மத பாணங்களால் அடிக்கப்பட்டார்கள். அந்த ஸ்வயம்வரத்தில் அநேக ராஜர்களின் வில்வித்தை பரீக்ஷப்படுகிறது என்ற சேதி கேட்டதும் கருடர்கள், நாகர்கள், அஸுரர்கள் என்று பெருங்கூட்டம் ஆகாயத்தில் கூடிவிட்டது.
புல்லாங்குழல்களின் கீதம் கேட்டது. வீணைகள் இசைக்கும் ஒலி அங்கே எங்கும் எதிரொலித்தது. திடீரென்று விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தது. ஒரு திவ்ய பரிமளம் அங்கே வீசியது. நாற்புறங்களிலும் தேவ விமானங்கள் தேவர்களைச் சுமந்து வந்து நின்றுகொண்டிருந்தார்கள்.
இப்போது ராஜாக்கள் அனைவரும் தங்களது பராக்கிரமங்களைக் காட்ட துவங்கினார்கள். கர்ணன், துரியோதனன், சால்வன், சல்லியன், அசுவத்தாமா, வங்கதேசத்தரசர்கள், பாண்டியன் போன்றவர்கள் கிரீடங்களையும் முத்துமாலைகளையும் தோள் வளையல்களையும் அங்கமெங்கும் தரித்தவர்களாக படாடோபத்துடன் வலம் வந்தார்கள். தங்களுடைய வெற்றிகளைப் பற்றியும் பராக்கிரமங்களையும் பிரஸ்தாபித்தார்கள்.
அரசர்கள் பலர் புஜபலங்களைக் காட்டிக்கொண்டு அந்த வில்லிருக்கும் பகுதிக்கு வந்தார்கள். சிலர் அதைத் தூக்கும் போதே கிரீடம் நழுவ கீழே விழுந்தார்கள். இன்னும் சிலர் நாணேற்று போது கை அறுபட்டு ரத்தத்தை உதறிக்கொண்டு வெளியேறினார்கள். அங்கு குழுமியிருந்த மக்கள் வெள்ளம் ஹாஹாகாரம் செய்தார்கள்.
அப்போது சேதி தேசத்து ராஜாவான சிசுபாலன் கைகளைத் தனது வலிமையான தோள்களில் தட்டிக்கொண்டு எழுந்திருந்தான். ஒரு ராஜ சிம்மம் போல நடந்து வந்து வில்லைத் தூக்கி நாணேற்றுவது வரை வந்துவிட்டான். அம்பை நேராக நிமிர்த்தும் போது கால் மடிந்து கீழே விழுந்தான். விழுந்தவன் திரும்பச் சென்று தனது ஆசனத்தில் அமராமல் நேரே ரதத்தைப் பூட்டினான். சேதி தேசம் சென்றுவிட்டான்.
அடுத்து ஜராசந்தன் வந்தான். அவன் வில்லை எடுக்க நடந்து வரும்போதே பூமி அதிர்ந்தது. அவனது பலம் அனைவரையும் அதிரச்செய்தது. இவனுக்குதான் திரௌபதி மாலை சூடுவாளோ என்று அனைவரும் ஆச்சரியத்துடன் காத்திருந்தார்கள். வில்லைத் தூக்கி நிறுத்தினான். நாணை அம்பு பூட்டுவதற்கு இழுத்தபோது கையை அடித்தது. போட்டுவிட்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நகர்ந்துவிட்டான்.
சல்லியன் வந்தான். அவனும் அந்த இரும்பு நாணினால் கையில் அடிவாங்கினான். அவமானத்துடன் அங்கே இருக்க விரும்பாமல் தன் ரதமேறி வீரர்களையும் அழைத்துக்கொண்டு அந்த ஸ்வயம்வர மண்டபத்திலிருந்து தனது மத்ரதேசம் சென்றடைந்தான்.
அகங்காரம் நிறைந்தவனும் மஹா பலசாலியும் திருதிராஷ்டிர புத்திரனுமாகிய துரியோதனன் எழுந்திருந்தான். சகோதரர்கள் கரகோஷமிட்டார்கள். “ஜெய” கோஷம் மண்டபத்தை நிறைத்தது. தூரத்தில் நின்றிருந்த திரௌபதியை விழியால் விழுங்கிக்கொண்டே அந்த வில்லிருக்கும் இடத்திற்கு சென்றான். ஒரு எள்ளளவு அவனால் அம்பை நாணில் நிறுத்தமுடியவில்லை. இரும்பு நாண் திருப்பியடித்தது. மேலே கட்டியிருந்த அந்த லக்ஷியத்தைப் பார்த்துக்கொண்டே அண்ணாந்து விழுந்தான். வெட்கம் அவனைப் பிடிங்கித் தின்றது.
ஸுர்யபுத்திரனும் ஸுதபுத்திரனுமாகிய கர்ணன் சிம்ம கர்ஜனையோடு எழுந்திருந்தான். வில் வித்தையில் பண்டிதனாகிய கர்ணன் ஜெயித்துவிடுவானென்று அந்த சபையிலும் விண்ணில் தங்களது விமானங்களில் நின்றிருந்த வானத்து தேவர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மிகவும் அலட்சியமாக நடந்து வந்தான். சிரமமில்லாமல் தூக்கினான். நாண் பூட்டும் போது மயிரிழையில் அது பிசகிப் போய் நாண் அவனது கையை அடித்தது. துடிதுடித்து வில்லை கீழே போட்டுவிட்டு சென்றுவிட்டான்.
கர்ணனுக்குப் பிறகு எந்த ராஜாவும் ஆசனத்தை விட்டு எழுந்திருக்கவில்லை. திருஷ்டத்யும்னன் இனி யார் வருவார் என்று பயந்தான். திரௌபதி கையில் மாலையோடு ஏமாற்றத்தோடு காத்திருந்தாள். இவ்வளவு பெரிய போட்டிக்கு ஏற்பாடு பண்ணியிருக்ககூடாதோ என்று முதலில் நினைத்த துருபதன் பின்னர் நிச்சயம் அர்ஜுனன் கடைசி நேரத்திலாவது வந்து லக்ஷியத்தை அடித்து திரௌபதியைக் கரம் பிடிப்பான் என்று உறுதியாக நம்பினான்.
கிருஷ்ணர், பக்கத்தில் அமர்ந்திருந்த பலராமரிடம் கையைக் கொடுத்து காதருகில் சென்று “பாண்டு புத்திரனான அர்ஜுனன் ஜெயிக்கப்போகிறான்” என்று சந்தோஷமாகச் சொன்னார். பலராமரும் உளமன்போடு மகிழ்ச்சியடைந்தார்.
அர்ஜுனன் அந்த வில்லை நாணேற்றிட நினைத்தான். அதுவரை பாண்டவர்களை யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
அந்த ஸ்வயம்வர மண்டபத்தில் அரசர்கள் அனைவரும் ஓய்ந்துவிட்டனர். எந்த க்ஷத்ரியருக்கும் எழுந்து சென்று நாணேற்ற துணிவில்லை. அப்போது பிராமணர்களின் மத்தியிலிருந்து மத்தியான்ன சூரியன் போல அர்ஜுனன் எழுந்திருந்தான். மண்டபமே திரும்பிப் பார்த்தது. அவன் அமர்ந்திருந்த பிராமணர்களின் வரிசையில் பசபசவென்று பேசிக்கொண்டார்கள்.
“க்ஷத்ரியர்கள் நிரம்பிய சபையில் ஒரு பிராமணன் வில்லைத் தொடலாமா?” என்று வயதுமுதிர்ந்த ஒரு பிராமணர் கேட்டார்.
“எல்லா அரசர்களின் மத்தியிலும் இந்தச் சிறு பையன் அவமானப்படப் போகிறான். இவனால் பிராமண குலத்திற்கே அசிங்கம் நேரப்போகிறது” என்று அர்ஜுனன் வயதை ஒத்த ஒரு எலும்பும் தோலுமாக உள்ள இளைஞன் அவதூறாகப் பேசினான்.
“யே! பேசாமல் உட்கார். அவமானம் வேண்டாம்” என்று சிலர் தடுத்தார்கள்.
”ஆஹா. இவன் யௌவன வயசில் இருப்பவன். கைகள் இரண்டும் யானையின் துதிக்கை போல் உள்ளது. பருத்த தோள்கள். மேரு மலையைப் போல தைரியமுள்ளவனாக இருக்கிறான். இவன் இந்த லக்ஷியத்தை அடையும் தகுதியுள்ளவன். இவனைத் தடுக்காதீர்கள்”
ஒரு பெரும் கோஷ்டியாக நின்ற பிராமணர்கள் அர்ஜுனனுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.
அங்கு அமர்ந்திருந்த அரசர்கள் விழி விரிய பார்த்துக்கொண்டிருக்கும் போதே நிதானமான நடந்து வில்லிருக்கும் இடத்திற்கு வந்தான் அர்ஜுனன். அவனது தேஜஸினால் ஸ்வயம்வர மண்டபம் ஜொலித்தது. திரௌபதி கையில் மாலையோடு நிற்க அவளருகில் திருஷ்டத்யுமனன் அர்ஜுனனைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.
“இந்த தனுஸை பிராமணர்கள் நாணேற்றலாமா?” என்று சவால் விடுவது போலக் கேட்டான் அர்ஜுனன்.
“பிராமணன், க்ஷத்ரியன், வைசியன் மற்றும் நான்காம் வர்ணத்தவன் என்று எவன் வேண்டுமானாலும் நாணேற்றலாம். எவன் நாணோற்றுகிறானோ அவனுக்கு இதோ இங்கே நிற்கும் என் சகோதரியைக் கொடுப்பேன். இது சத்தியம்” என்றான்.
யாராலும் தனுர்வித்தையில் வெல்லமுடியாதவனான அர்ஜுனன் அந்த தனுஸை ஒரு முறை பிரதக்ஷிணம் வந்து வணங்கினான். கிருஷ்ணனை மனதில் நினைத்துக்கொண்டான். சுலபமாகக் கையில் ஏந்தினான். ஒரு நொடியில் நாணேற்றிவிட்டான். “அட! யாரிந்த பிராமணன்?” என்று கேள்விக்குறியோடு புருவம் உயர்த்தி அந்த மண்டபம் முழுவதும் ஆச்சரியத்தில் வாய் பிளந்தது.
ஒன்றன் பின் ஒன்றாக சரக்.....சரக்...சரக்...சரக்....சரக்.. என்று ஐந்து அஸ்திரங்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த யந்திரத்தின் துளை வழியாகச் செலுத்தி அந்த மீன் போன்ற லக்ஷியத்தை அடித்தான். கடையாக ஐந்தாவது அம்பு அதை துளைத்தபோது பொத்தென்று தரையில் விழுந்தது.கரகோஷத்தினாலும் ஜெய கோஷங்களினாலும் மண்டபம் அதிர்ந்தது. மண்டபத்தின் நாற்புறங்களிலிருந்தும் பூமாரி பொழிந்தது. துந்துபி வாத்தியங்கள் முழங்கின. துருபதன் ஆனந்தமடைந்தான்.
லக்ஷியத்தை அடித்தவன் நேரே விடுவிடுவென்று நடந்து சென்று யுதிஷ்டிரர் மற்றும் தனது சகோதரர்கள் இருக்குமிடத்தை அடைந்தான். கிருஷ்ணை கையில் மாலையுடன் அன்னநடையில் அர்ஜுனனைப் பார்க்க நடந்தாள். வழக்கமாகப் பார்ப்பவர்களுக்கே புதியதாகத் தெரிந்தாள். இதழ்களில் புன்னகை அரும்பியிருந்தது. வாக்கில்லாமல் பார்வையினாலேயே பேசிக்கொண்டு நடந்தாள். ஸ்வயம்வர மண்படம் ஆவலுடன் இதைப் பார்த்துக்கொண்டிருந்தது. துரியோதனன் கர்ணன் சகுனி போன்றோர் இதை அருவருக்கத்தக்க காட்சி போல முகம் சுளித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
கிருஷ்ணரும் பலராமரும் வெற்றிக்களிப்பில் நிற்கும் அர்ஜுனனை பெருமிதத்தோடு பார்த்தார்கள்.
க்ஷத்ரிய வீரர்களைக் கடந்தாள் கிருஷ்ணை. மண்டபத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்த பிராமணக் கூட்டத்தின் அருகே வந்தாள். அங்கு இந்திரனுக்கு ஒப்பாக நின்றிருந்த அர்ஜுனனின் கழுத்தில் மாலையிட்டாள். அந்தக் காட்சி தேவேந்திரனை இந்திராணி மாலையிட்டது போலவும், அக்னியை ஸ்வாகாதேவி போலவும், விஷ்ணுவை லக்ஷ்மி போலவும், மன்மதனை ரதிதேவி போலவும், மஹேஸ்வரனைப் பார்வதி போலவும் இருந்தது. பிராமணர்கள் தங்களுக்கு வெற்றி ஏற்பட்டத்தில் மிகவும் சந்தோஷமடைந்திருந்தார்கள். திரௌபதியைக் கரம் பற்றி அர்ஜுனன் முன்னே செல்ல அவன் கரம் பற்றி அவள் பின் தொடர மற்ற சகோதரர்களும் பின்னே வர ஸ்வயம்வர மண்டபத்திலிருந்து புறப்பட்டான்.
க்ஷத்ரிய ராஜாக்கள் தங்களுக்கும் ஏதோ பேசிக்கொண்டார்கள்.
“இந்த துருபதனை நம்பி நாம் ஸ்வயம்வரத்துக்கு வந்தோம். இந்த துராத்துமாவான துருபதன் நம்மை ஏமாற்றி தனது பெண்ணை ஒரு பிராமணனுக்குக் கொடுக்கிறான்.” ஏதோ தேசத்து ராஜாவொருவன் முதல் குரல் எழுப்பினான்.
“எல்லா அரசர்களையும் அழைத்து அன்னம் பரிமாறி அவமதித்திருக்கிறான். தேவசபை போன்ற இவ்விடத்தில் ஒரு க்ஷத்ரியர் கூட இவனுக்குக் கிடைக்கவில்லையா? இவனையும் இவன் புத்திரனையும் கொல்வோம். நம்மை விட்டு பிராமணனுடன் நடந்து செல்லும் கிருஷ்ணையையும் தீயில் இட்டுக் கொளுத்துவோம்” என்று இன்னொருவன் ஆவேசமாகப் பேசினான்.
“அந்த பிராமணர்களை யாரும் கொன்றுவிடாதீர்கள். ஏனெனில் நமது ராஜ்ஜியம், வாழ்வு தனம் புத்ர பௌத்திரர்கள் மற்றுமுள்ள நமது செல்வம் அனைத்தும் பிராமணர்களுக்காகவே இருக்கிறது.”
இந்த கூக்குரல்களுக்குப் பின்னர் அநேக ராஜாக்கள் ஆயுதங்களோடு துருபதனைத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். சற்று நேரத்திற்கு முன்பு எழில் கொஞ்சும் இடமாக இருந்த அந்த ஸ்வயம்வர மண்டபம் ஒரு யுத்தகளம் போலக் காட்சியளித்தது. துருபதன் மண்டபத்தை விட்டு ஓடிப்போய் அர்ஜுனன் பீமனோடு நடந்து சென்றுகொண்டிருந்த பிராமணர்களிடம் தஞ்சமடைந்தான். அவன் பயத்தினால் அப்படிச் செய்யவில்லை. அந்த பிராமணர்கள் மத்தியில் இருப்பது பாண்டவர்கள்தானா என்று கடைசியாக ஒரு முறை சோதனை செய்ய எண்ணினான்.
விரல்களுக்கும் மணிக்கட்டுகளுக்கும் தோலுறைகள் அணிந்துகொண்டு ஒரு கூட்டமாக க்ஷத்ரியர்கள் துரத்திக்கொண்டு வந்தார்கள். அந்த பாதைக்கருகில் நின்றிருந்த ஒரு மரத்தை தனது இருகைகளினால் வேரோடு பிடுங்கினான் பீமன். இலைகளை உதறினான். கதாயுதம் போல கையில் மரத்தோடு நின்றான். பக்கத்தில் நின்றிருந்த அர்ஜுனன் ஆச்சரியமாக பீமனைப் பார்த்தான். தனது பெரும் தனஸை கையில் ஏந்தி தன்னை எதிர்க்க வருபவர்களை குறி பார்த்து நின்றான் அர்ஜுனன்.
மண்டபத்திலிருந்து பலராமரை இழுத்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார் கிருஷ்ணர். தூரத்தில் கையில் மரத்தோடு ஒருவனும் பெரிய தனுஸோடு இன்னொருவன் நிற்கக்கண்டு பரமானந்தம் அடைந்தார்.
“சிம்மம் போலவும் வ்ருஷபம் போலவும் நடந்து கொண்டு பனைமரம் உயரம் இருக்கும் வில்லோடு நிற்கிறானே இவன் அர்ஜுனன் தான். ஒரு விருக்ஷத்தைப் பலத்தினால் பிடிங்கி அரசர்களை அடிப்பதற்கு நிற்கிறானே அவன் வ்ருகோதரன் தான். வணக்கமுள்ளவரும் பசுமை நிறத்தவரும் அழகிய மூக்கையுடையவருமாக தாமரை புஷ்பம் போல கண்களையுடையவர் தர்மபுத்திரர். கிருத்திகா புத்திரர்களான இரண்டு சுப்பிரமணியர்களைப் போல இருப்பவர்கள் அஸ்வினி புத்திரர்களான நகுலசகதேவர்கள். இது என் ஊகம். பாண்டவ புத்திரர்கள் அரக்கு மாளிகையிலிருந்து குந்தியுடன் தப்பித்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அது நிஜம்” என்றார்.
“நமது அத்தையாகிய குந்தி புத்திரர்களுடன் விடுபட்டதைக் கண்டு நான் சந்தோஷமடைந்தேன்” என்று கிருஷ்ணனைக் கட்டிக்கொண்டார் பலராமர்.
யுத்தம் முடியவில்லை. அந்த சாதாரண அரசர்களுக்குப் பின்னே ஒரு பெரும் சைனியம் பாண்டவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. குதிரைகள் புழுதியை விண்ணளவுக்கு ஏற்றியிருந்தன.
அர்ஜுனனும் பீமனும் பரந்த மார்போடு விரைப்பாக தயார் நிலையில் நின்றார்கள்.
No comments:
Post a Comment