பீமனைக் காணாத தர்மர் திருதிருவென முழிப்பதைக் கண்ட குந்தி கலக்கமுற்றாள்.
“பீமன் உங்களுடன் இல்லையா?”
“நேற்றிரவு இருந்தானம்மா! காலையில் காணவில்லை.துரியோதனன் எங்களுக்கு முன்னால் அரண்மனை அடைந்திருப்பான் என்று சொல்லி எங்களையும் அழைத்துவந்துவிட்டான்.” என்றார் வருத்தத்துடன் தர்மர்.
”ஊஹும் அவன் இங்கு வரவில்லையே.. உன் தம்பிகளுடன் சேர்ந்து அவனைத் தேடு..” என்று விரட்டினாள் குந்தி.
தர்மரும் மற்ற தம்பிகளும் அரண்மனைத் தோட்டத்தில் தேடினார்கள். ”பீமா..பீமா..” என்று அவர்கள் வாய்விட்டுக் கத்தியதில் அந்தப் பிரதேசத்தில் இருந்த பறவைகள் அனைத்தும் மரங்களை விட்டுப் சடசடத்துப் பறந்தன. தோட்டத்திலிருந்து கங்கைக்கரை வரை சுற்றும் முற்றும் பார்த்தபடியே ஓடினார்கள். பீமன் அகப்படவில்லை. கொல்லப்பட்டிருப்பானோ.. என்று அச்சப்பட்டனர். மீண்டும் தடதடவென்று அரண்மனைக்கு ஓடி வந்தார்கள்.
“அம்மா! வனங்களிலும் நதிக்கரையிலும் தேடினோம். பீமனைக் காணோம்” என்றார் கையைப் பிசைந்தபடி தர்மர்.
“யாரங்கே!” என்று அழைத்த குந்தியினிடம் ஒரு வீரன் ஓடிவந்து குனிந்து வணக்கம் சொல்லி நின்றான்.
“விதுரரை இங்கே அழைத்துவா...” என்றாள்.
விதுரர் வந்து ஆசனத்தில் அமர்ந்தார். பீமனைத் தவிர்த்து எஞ்சியோர் எதிர் ஆசனத்தில் அமர்ந்திருந்த குந்தியின் அருகில் நின்றுகொண்டிருந்தார்கள். தர்மர் கண்களில் பீதி.
“நேற்று துரியோதனன் தனது சகோதரர்களுடன் இவர்களையும் கங்கையில் ஜலக்கிரீடை செய்ய அழைத்துப்போனான். இதில் பீமனை மட்டும் காணவில்லை. பீமன் பலசாலி. துரியோதனனுக்கு பீமனைக் கண்டால் எப்போதுமே ஆகவில்லை. ராஜ்ஜிய ஆசையில் பீமனைக் கொன்றிருப்பானோ என்று நினைக்கிறேன். என் மனம் கலங்குகிறது. வயிறு எரிகிறது” படபடவென்று பேசிவிட்டு கண்ணீர் சொரிந்தாள் குந்தி.
“உஷ்ஷ்...” என்று உஷார்படுத்தினார் விதுரர்.
“இது போல அவன் கொடியவன். கொன்றிருப்பான். என்றெல்லாம் எல்லோரிடமும் சொல்லாதே! உன்னுடைய மற்ற புத்திரர்களையும் கொன்றுவிடுவான். வியாஸ பகவான் சொன்னது போல உன் புத்திரர்கள் தீர்க்காயுஸு பெற்றவர்கள். கவலையை விடு. இனியும் இதுபோல பேசாதே! பீமன் வீடு வந்து சேருவான்”
இதைச் சொல்லிவிட்டு விதுரர் தனது மனைக்கு சென்றுவிட்டார். குந்தி தன்னுடைய நான்கு பிள்ளைகளையும் கட்டி அணைத்தபடி பீமனுக்காகக் காத்திருந்தாள். ஏங்கினாள். தவித்தாள்.
**
பாதாள லோகத்தில் எட்டாம் நாள் பீமசேனன் விழித்துக்கொண்டான். எட்டு குடம் அந்த யானை பலம் தரக்கூடிய ரஸத்தைக் குடித்து அது செரித்துவிட்டது. அவன் எழுந்தவுடன் அருகிலிருந்த நாகர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.
“பலவானே! இந்த ரஸத்தைக் குடித்ததனால் இப்போது உனக்கு பதினாயிரம் யானை பலம் வந்துவிட்டது. போரில் யாராலும் வெல்லமுடியாதவனாகிவிட்டாய். இங்கே உள்ளே சென்று ஸ்நானம் செய்துவிட்டுச் செல்”
பீமசேனன் அங்கே ஸ்நானம் செய்தான். அவனுக்கு புதிய வெண்நிற வஸ்திரங்கள் தந்தார்கள். மங்களமான சில கங்கணங்கள் கட்டிவிட்டார்கள். பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த பரமான்னத்தை புசித்தபின் சற்று இளைப்பாறினான் பீமன். பின்னர் நாகர்களிடம் விடைபெற்றுக்கொண்டான். வாஸுகிக்கு மிக்க மகிழ்ச்சி. சில நாகர்களை விட்டு மேலே கொண்டு போய் விடச்சொனான் வாஸுகி.
நாகர்களில் சிலர் பீமனை கொண்டு வந்து ராஜாங்கத் தோட்டத்தில் விட்டார்கள். பின்னர் பீமன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே காற்றில் மறைந்துபோனார்கள்.
குந்தியையும் தன் சகோதரர்களையும் பார்ப்பதற்காக அரண்மனைக்குள் ஓடினான். கவலைரேகைகள் முகத்தில் படர உட்கார்ந்திருந்த குந்திக்கு நமஸ்காரம் செய்தான். தர்மபுத்திரருக்கு வணக்கம் சொன்னான். பின்னர் தம்பிகளை இரு கைகளாலும் கட்டிக்கொண்டு உச்சி மோந்தான். பிள்ளைகள் அனைவரும் அன்பாய் கட்டிக்கொண்டு மகிழ்ந்ததைப் பார்த்தவுடன் குந்தி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.
யுதிஷ்டிரர் பீமனைத் தோளோடு தோள் சேர்த்து அணைத்துக்கொண்டார். பீமன் துரியோதனன் செய்த தீமைகளை அடுக்கினான். பின்னர் நாகலோகத்தில் தனக்குக் கிடைத்த மரியாதையையும் பதினாயிரம் யானை பலம் கிடைப்பதற்கு ஹேதுவான ரஸத்தைப் பற்றியும் சொன்னான். குந்தியும் சகோதரர்கள் ஐவரும் ஒன்றாக உட்கார்ந்து மகிழ்ச்சியாக இவையனைத்தையும் பகிர்ந்துகொண்டார்கள்.
“பீமா. இதைப் பற்றி யாரிடமும் பேசாமலிரு. துரியோதனன் துஷ்டன். நம்மை அழிப்பதில் குறியாயிருக்கிறான். இனிமேல் நாம் ஐவரும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.”
ஜ்யேஷ்டரான தர்மர் இப்படிச் சொன்னதும் நால்வரும் சரியென்று தலையாட்டினார்கள்.
துரியோதனன் அடிபட்ட பாம்பு போல சீறிக்கொண்டிருந்தான். தன்னுடைய திட்டங்கள் அனைத்தும் வீணாகப்போய்விட்டதே என்று பொருமிக்கொண்டிருந்தான்.
**
திருதராஷ்டிரன் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு அஸ்திரவித்தையைக் கற்றுக்கொண்டுக்க ஏற்பாடு செய்தான். நாணற் கட்டையில் பிறந்தவரான கிருபாசாரியாரைத் தேடி அவரை குருவாக நியமித்து அனைவரையும் குருகுலவாசம் செய்ய கிருபரிடம் அனுப்பினான். அவர் சாஸ்திரங்களிலும் வேதங்களிலும் கரைகண்டவர்.
**
[இங்கே கிருபாசாரியாரின் பிறப்பு பற்றிய கதை வருகிறது. அவர் நாணல் கட்டையில் பிறந்தவர்]
கௌதம மஹரிஷியின் புத்திரர் சரத்வாணன். அவரும் கௌதமர் என்றே அழைக்கப்பட்டார். அவர் பாணங்களுடன் பிறந்தார். கௌதம மஹரிஷி வேதாத்தியியனத்தில் அவரை ஈடுபடுத்த முடியவில்லை. கௌதமருக்கு தனுர்வேதத்தில் மட்டுமே விருப்பம் இருந்தது. அவர் எல்லா அஸ்திரங்களையும் அடைந்தார்.
அவரது தனுர்வேதத் திறமையைக் கண்டு தேவேந்திரன் பெருந்துயரம் அடைந்தான். அவரது அஸ்திர வித்தைகளைக் கண்டு அச்சமுற்று அதைக் கலைக்க ஜாலவதி என்னும் தேவகன்னிகையை அனுப்பினான்.
அந்த ஜாலவதி ஒயிலாக நடந்து சரத்வானின் ஆஸ்ரமத்தை அடைந்தாள். அவளது வருகையில் அவர் காமமுற்றார். அவர் விழிகள் விரிய அவளைப் பார்த்தார். ஒற்றை ஆடையில் இருந்த அவளைக் கண்டதும் அவரது வில்லும் அம்பும் கைகளிலிருந்து நழுவி கீழே விழுந்தது.
ஆனாலும் அவர் மன உறுதியோடு இருந்தார். இருந்தாலும் மன வேறுபாட்டினால் அவரது வீரியம் நழுவியது. அந்த ஆஸ்ரமத்தை விட்டு உடனே வெளியேறினார். அப்படி வெளியேறிச் சென்றுகொண்டிருக்கும் போது நாணல் தண்டில் அவரது வீரியம் துளி விழுந்தது. பின்னர் அது இரண்டு பாகமாக பிரிந்தது. அதில் ஆணும் பெண்ணுமாக இரட்டையர்கள் பிறந்தார்கள்.
அந்த கௌதம மஹரிஷியின் ஆஸ்ரமத்தின் சமீபத்தில் சந்தனு மஹாராஜா வேட்டையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவனது படையில் இருந்த வீரன் ஒருவன் இந்த இரண்டு குழந்தைகளையும் கண்டெடுத்தான். வில்லும் அம்பும் அங்கே கிடந்தது. வில் அம்போடு அந்தக் குழந்தைகளையும் எடுத்து சந்தனு ராஜாவிடம் காட்டினான்.
சந்தனு கிருபை கூர்ந்து “இது என் பெண். இது எனது பிள்ளை” என்று அன்புடன் அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அக்குழந்தைகளுக்கு ஜாதகர்மங்களைச் செய்வித்து கிருபையுடன் வளர்த்தான். அப்படி தன்னால் கிருபையுடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஆதலால் கிருபன் என்று கிருபி என்று நாமகரணம் சூட்டினான்.
அவர்களுடைய பிதாவாகிய கௌதமரும் அரண்மனைக்கு வந்து போய்க்கொண்டிருந்தார். கிருபர் அவரிடம் தனுவேதத்தை கற்றறிந்தார். கிருபருக்கு அவரது பிதா பிரயோகம், சம்ஹாரம், கல்பம், ரஹஸ்யம் என்ற நான்கு வகையான தனுர்வேதத்தைப் பயிற்றுவித்தார்.
[பிரயோகம் = விடுப்பது; சம்ஹாரம் = திரும்பியெடுப்பது; கல்பம் = மந்திரசித்திக்குரியது; ரஹஸ்யம் = அவற்றின் ஸ்வரூப ஞானம். முக்தம் = விட்டுவிடக்கூடிய பாணம்; அமுக்தம் = விடாமல் உபயோகிக்கத்தக்க கத்தி முதலியவை; முக்தாமுக்தம் = விட்டு திரும்பியெடுக்கத்தக்க அஸ்திரங்கள்; மந்திரமுக்தம் = எடுக்கமுடியாமல் மந்திரத்தால் பிரயோகிக்கப்படு அஸ்திரம்; சஸ்திரம் = வெறும் ஆயுதம்; அஸ்திரம் = மந்திரத்தோடு கூடியது; ப்ரத்யஸ்திரம் = அஸ்திரத்தைத் தடுக்கும் அஸ்திரம்; பரமாஸ்திரம் = எதிர் அஸ்திரமில்லாத அஸ்திரம்; ஆதானம் = எடுப்பது; ஸந்தானம் = தொடுப்பது;]
யாதவர்களும் பிற தேசத்திலிருந்து வந்த மற்ற அரசர்களும் கிருபரை ஆசாரியராக அடைந்து பல அஸ்திர சஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றார்கள்.
பீஷ்மர் இந்தப் பயிற்சிகளில் திருப்தியடையாமல் இன்னும் சிறப்பாக யாரேனும் குரு கிடைப்பாரா என்று தேடினார். அப்போது துரோணரைப் பற்றி அறிந்துகொண்டார்.
**
[இங்கு துரோணர் பிறந்த கதை வருகிறது]
பரத்வாஜர் பெருமை வாய்ந்த மஹரிஷி. அவர் இந்திரியங்களை ஜெயித்தவர். ஸ்நானத்திற்காக கங்கைக்கு சென்றார். அப்போது அங்கு ஒரு அப்ஸரஸ் போலொருத்தி ஸ்நானம் செய்துகொண்டிருந்தாள். அவள் பெயர் க்ருதாசி. கரையின் சமீபத்தில் காத்திருந்தார் பரத்வாஜர். அவள் நீரிலிருந்து எழுவது போலில்லை. இருந்தாலும் பரத்வாஜர் அவளை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த க்ருதாசி அணிந்திருந்த மேலாடை விலகியது.
இந்தக் காட்சியைக் கண்டவுன் பரத்வாஜரின் வீரியம் நழுவியது. உடனே அதை துரோணம் எனும் பாத்திரத்தில் பிடித்தார். அந்தக் குடத்தில் பிறந்தவர்தான் துரோணர்.
அவர் வேத வேதாத்தியாயனங்களை அத்யனம் செய்தார். காஸ்யபர் அக்னியிடமிருந்து அஸ்திரம் பெற்றுக்கொண்டிருந்தார். அந்த அஸ்திர வித்தையை தேவகாரியத்துக்காக காஸ்யபரிடமிருந்து பரத்வாஜர் பயின்றுகொண்டார். பரத்வாஜர் அக்நிவேஸ்யருக்கு ஆக்நேயாஸ்திரத்தைக் கொடுத்தார். அந்த அக்நிவேஸ்ய முனிவர் ஆக்நேயாஸ்திரத்தை துரோணரிடம் கொடுத்தார்.
பரத்வாஜருக்கு ஸ்நேகிதனாகிய ப்ருஷதன் என்ற அரசன் இருந்தான். அவனுடைய புத்திரன் துருபதன். ஒவ்வொருநாளும் துருபதன் ஆஸ்ரமத்திற்குச் செல்வான். அங்கே துரோணருடன் விளையாடுவான்.
ப்ருஷதன் காலமாகிய பின்னர் துருபதன் வடபாஞ்சால தேசத்தை ஆட்சி புரிந்தான். அப்போது மகிமைகள் பல பொருந்திய பரத்வாஜ மஹரிஷியும் ஸ்வர்க்கம் சென்றார். துரோணர் அங்கேயே ஜபதபங்களுடன் வசித்தார். சரத்வானின் புத்ரியாகிய கிருபியை துரோணர் பத்னியாக அடைந்தார். அவர்களுக்கு அஸ்வத்தாமா என்னும் புத்திரன் பிறந்தான். பிறந்தவுடன் அவன் உச்சைஸ்ரவவம் என்னும் குதிரையைப் போல கனைத்தான். அப்போது அசரீரி பேசியது.
“இவனின் உரத்த சப்தம் குதிரையின் கனைப்பு சப்தம் போலிருந்ததால் அஸ்வத்தாமா (அஸ்வம் - குதிரை; ஸ்தாமா-சப்தமுடையவன்) என்று அழைக்கப்படுவான்”
துரோணர் அந்தப் புத்திரனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
அப்போது துரோணர் எல்லா வித்தையும் தெரிந்தவரும் எல்லா ஆயுதங்களையும் பிடித்தவருமாகிய பகைவரைத் துவம்சம் செய்பவருமாகிய பரசுராமர் தன்னுடைய எல்லா பொருட்களையும் பிராமணர்களுக்குத் தானம் புரிவதாகக் கேள்விப்பட்டார்.
No comments:
Post a Comment