Friday, March 9, 2018

பாண்டவர்கள் ஜனனமும் பாண்டுவின் மரணமும்



பலவானாகிய பீமன் பிறந்தபிறகு பாண்டு உலகிலேயே சிறந்த மற்றொரு புத்திரனை உற்பத்தி செய்வதற்கு தகுந்த தேவதை யார் என்று சிந்தித்துக்கொண்டு காட்டில் ஒரு கற்பாறையில் அமர்ந்திருந்தான். மாத்ரியும் குந்தியும் இரு குழந்தைகளோடும் குடில் வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

பாண்டு குந்தியை அருகில் அழைத்தான். குழந்தைகளை மாத்ரியிடம் பார்த்துக்கொள்ளும்படி ஒப்படைத்துவிட்டு பாண்டுவிடம் வேகமாக வந்தாள்.
“மனிதனின் முயற்சியும் தெய்வத்தின் செயலையும் ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது இந்த உலகம். காலாகாலத்திற்கு செய்யும் கருமங்களினால் தெய்வத்தின் செயல் கைக்கூடுகிறது. தெய்வங்களில் முதன்மையானவன் இந்திரன். அவன் சோர்வேயடையாதவன் என்றும் பராக்கிரமசாலி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் அவனை வேண்டுவோம். அவனால் உண்டாகும் புத்திரன் மிகச்சிறந்தவனாகயிருப்பான்.”
மஹரிஷிகளையும் சில பிராமணோத்தமர்களையும் கலந்து ஆலோசித்தான். பின்னர் குந்தியை கடும் நியமங்களோடு ஒரு வருஷகாலம் இருக்கச் சொன்னான். பின்னர் பாண்டு தானும் ஒற்றைக்காலில் நின்றுகொண்டு இந்திரனை நோக்கித் தவமிருந்தான். உதயம் முதல் அஸ்தமனம் வரை இப்படி ஒற்றைக்காலில் நின்று கொண்டு கடுமையான தியானம் செய்தான்.
ஒரு நாள் அந்திசாயும் நேரத்தில் அந்த காடே கோடி சூர்யபிரகாசமாக மாறியது. ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருந்த பாண்டுவின் முன் இந்திரன் தோன்றினான்.
“பாண்டு! மூன்று உலகங்களிலும் பெயர் பெறப்போகும் ஒரு தலைசிறந்த புத்திரனை நான் உனக்கு கொடுப்பேன்” என்று வாக்கு தத்தம் செய்தான்.
நியமங்களோடு குந்தி காத்திருந்ததின் பலன் கிடைத்தது என்று மகிழ்ந்தாள்.
“குணவதி குந்தியே! இந்திரன் உனக்கு அனுக்ரஹம் செய்து நாம் விரும்பியபடியான புத்திரனை தரப்போகிறான். தேவேந்திரனை அழை” என்று கேட்டுக்கொண்டான்.
இருகை கூப்பி துர்வாஸஸ் சொல்லிக்கொடுத்த மந்திரத்தைச் சொன்னாள். மனதில் இந்திரனை ஆவாஹனம் செய்தாள். இந்திரன் தோன்றினான். குந்தியுடன் தேவலோகம் போனான். சிறிது நேரத்தில் அர்ஜுனனை உண்டு பண்ணினான். பூர்வ பல்குனியும் உத்தரபல்குனியும் சேர்ந்த பகலில் பால்குன (பங்குனி) மாஸத்தில் பிறந்ததனால் அவன் பால்குனன் அல்லது பல்குனன் என்று பெயர்பெற்றான். அவன் பிறந்ததும் மிகக் கம்பீரமான ஒரு அசரீரீ வாக்கு விண்ணிலிருந்து ஒலித்தது.
“குந்தியே! கார்த்தவீர்யனுக்கு ஒப்பானவனும் சிவனுக்கு ஈடான பராக்கிரம் உடையவனும் தேவேந்திரனைப் போல ஜயிக்க முடியாதவனுமாகிய இந்தப் புத்திரன் உனக்கு நீங்காப் புகழை பெற்று உன் வம்சத்தை பெருமைப்படுத்தப் போகிறான். விஷ்ணு எப்படி ஆனந்தத்தை விருத்தி செய்வாரோ அதே போல விஷ்ணுவுக்கு ஒப்பான அர்ஜுனன் உன் மகிழ்ச்சியை அபிவிருத்தி செய்வான். சிறந்த பலமுள்ள இவன் தலைமையில் அரசர்களை ஜயித்து சகோதரர்களுடன் சேர்ந்து மூன்று அசுவமேதங்களை நடத்துவான். காண்டவ வனத்தை அழித்து அக்னிக்கு திருப்தியேற்படுத்துவான். சங்கரரை யுத்தத்தில் சந்தோஷப்படுத்தி அவரிடமிருந்து பாசுபதம் என்கிற அஸ்திரத்தை அடையப்போகிறான்.”
இப்படி பலவாறாக அப்போது பிறந்த அர்ஜுனனைப் பற்றி அசரீரீ ஒலிக்கும் போது ஆகாயத்தில் துந்துபி வாத்தியஒலி கேட்டது. தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். கத்ருவின் புதல்வர்களாகிய நாகர்களும் வினதையின் புத்திரர்களான கருடன் முதலியவர்களும், கந்தர்வர்களும், அப்ஸரஸுகளும், பரத்வாஜர், கஸ்யபர், கௌதமர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி, வஸிஷ்டர், அத்ரி பகவான் என்று ஒரு பெரும் கூட்டமே வந்தது. அனைவரும் புஷ்பமாலைகளைத் தரித்திருந்தனர். அலங்காரங்களுடன் அவர்கள் கானம் செய்தார்கள். அதற்கு அப்ஸரஸ்கள் நர்த்தனம் ஆடினார்கள். மஹரிஷிகள் வேதம் சொன்னார்கள்.
இவையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பாண்டு மிகவும் மகிழ்ந்தான். அங்கு கூட்டம் கூட்டமாக குழுமியிருந்த தேவர்களை பூஜித்தான். அப்படி பூஜிக்கப்பட்ட தேவர்கள் பாண்டுவை ஆசீர்வதித்தார்கள்.
“பாண்டுவே! தேவர்களின் அனுக்ரஹத்தால் தர்மதேவதையின் அம்சமாக முதல் புத்திரன் பிறந்தான். வாயுவே பலசாலியான பீமனாய்ப் பிறந்திருக்கிறான். தேவேந்திரன் அனுக்ரஹஞ்செய்து அர்ஜுனனாகப் பிறந்தான். நீ தேவர்களுக்கே பிதாவாகிவிட்டாய். நீ புண்ணிய புருஷன். உனக்கு மேல் யாருமில்லை. பிதிர்களின் கடனிலிருந்து நீ விடுபட்டாய்”
பின்னர் அனைவரும் புறப்பட்டு தேவலோகம் சென்றடைந்தனர். மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினான் பாண்டு. தனிமையில் இருந்த குந்தியை அழைத்தான்.
“குந்தி! என்னுடைய மகிழ்ச்சிக்கு இப்போது எல்லையேயில்லை! அழகான புத்திரர்கள் வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்று சிரித்துக்கொண்டே அவள் கைகளைக் கோர்த்துக்கொண்டான்.
குந்தி கலவரமடைந்தாள்.
“நான்காம் புத்திரனை எந்த ஆபத்தர்மமும் விதிக்கவில்லை. இதற்குமேல் ஆசைப்படும் பெண் கற்பில்லாதவளாவாள். ஐந்தாம்புத்திரனை விரும்பினாள் வேசியாவாள். இதற்கு மேல் வேண்டாமே” என்று அவனிடம் கைக் கூப்பினாள்.
குந்திக்கும் காந்தாரிக்கும் புத்ரர்கள் பிறந்தபின் ஒரு நாள் மாத்ரி பாண்டுவிடம் ரஹஸ்யமாக “வீரரே! குந்தியே சிறந்தவள். நான் அவளுக்கு ஒரு படி கீழே தான். எனக்கு அதனால் வருத்தமில்லை. காந்தாரிக்கு நூறு பிள்ளைகள் பிறந்தது. எனக்கு துக்கமில்லை. நீங்கள் என்னை குந்திக்கு சமமாக மதிக்கிறேன் என்று சொன்னதால் கேட்கிறேன்... குந்திபோஜன் மகள் எனக்கும் அனுக்ரஹம் செய்தால்... உமக்கு இன்னமும் சந்ததி விருத்தியாகும்” என்றாள்.
பாண்டு நெருங்கி நின்ற மாத்ரியின் தலையைத் தூக்கினான். கண்களில் நீர் கட்டியிருந்தது. கண்ணிரைத் துடைத்தான்.
“குந்தியிடம் நான் கேட்பதற்கு மிகவும் அவமானமாக இருக்கிறது. என்னைப் பார்த்து நீர் பரிதாபப்பட்டால் நீரே எனக்காக அவளிடம் பேச வேண்டும்:” என்று வேண்டிக்கொண்டாள்.
வனத்தில் இருந்த நீர்வீழ்ச்சியின் அருகில் குந்தி ஸ்நானம் செய்து தலை உலர்த்திக்கொண்டிருந்தாள். பாண்டு அவளிடம் நெருங்கி...
“குந்தி! மாத்ரி மிகவும் விசனப்படுகிறாள். உன்னையும் அவளையும் நான் வேறுவேறாகப் பார்த்ததில்லை. இந்திரன் தேவராஜ்யத்தை அடைந்த பிறகும் கீர்த்திக்காக பல யாகங்கள் செய்தான். மந்திரங்களை அறிந்த பிராமணர்கள் புகழுக்காக பெரியோர்களிடம் படிந்து போகிறார்கள். அவளுக்கு புத்திரபாக்கியம் அளிக்கும் அந்த மந்திரத்தை உபதேசித்து நீயும் பெரும் புகழ் பெறுவாயாக”
பத்துப் பன்னிரெண்டு மரங்களுக்கு அப்பால் நின்றிருந்த மாத்ரியை அங்கே அழைத்தாள் குந்தி. அனுகூலமாக அவளின் தோளில் கைபோட்டு அருவிக்கு அழைத்துச்சென்றாள். ஸ்நானம் செய்துவிட்டு வந்த மாத்ரிக்கு சாஸ்திரோக்தமாக அனுஷ்டானுத்துடன் துர்வாஸஸ் அருளிய அந்த மந்திரத்தை உபதேசம் செய்தாள்.
சயனத்தில் படுத்து அஸ்வினி தேவர்களை மனதில் நினைத்தாள் மாத்ரி. அவர்கள் இருவரும் வந்து அழகில் சிறந்த்வர்களான நகுலன் மற்றும் ஸஹதேவன் என்ற இரட்டையர்களை உண்டு பண்ணினர். அப்போதும் அசரீரி ஒலித்தது.
“இவர்கள் இருவரும் அஸ்வினி தேவர்களுக்கு மேல் தர்மமும், பக்தியும், ஒழுக்கமும் கல்வியும் பலமும் அழகும் குணங்களும் பொருந்தியவர்களாக இருப்பார்கள். இவர்களைவிட அழகானவர்கள் இந்தப் பூமியில் கிடையாது”
இதற்குப் பின் சதஸ்ருங்கமலையில் வசிக்கும் ரிஷிகள் கூட்டமாக பாண்டுவின் குடிலுக்கு வந்து நாமகரணம் செய்தார்கள்.
குந்தியின் ஜ்யேஷ்ட புத்திரனுக்கு யுதிஷ்டிரன் (யுத்தத்தில் புறங்காட்டாதவன்) என்றும் ,நடுவனை பீமஸேனன் (எல்லோரும் பயப்படத்தக்கவன்) என்றும், மூன்றாமவனை அர்ச்சுனன் (சுத்தன் = குற்றமில்லாதவன்) என்றும், மாத்ரியின் புத்திரர்களில் முதலாமவனை நகுலன் (ஸர்ப்பங்களுக்குக் கீரியைப் போல் பகைவர்களுக்குப் பயங்கரமானவன்) இரண்டாமவனை ஸகதேவன் (தாயாரைப் பற்றிய வேற்றுமையின்றி மற்ற ஸகோதரர்களுடன் ஒத்திருப்பவன்) என்று மனமகிழ்ந்து சொன்னார்கள்.
ஒவ்வொரு வருஷத்துக்கு ஒருவராக அனைவரும் பிறந்தார்கள். தேவர்களைப் போல ரூபத்துடன் இருந்தார்கள். மிகுந்த பராக்கிரமசாலிகளான தனது புத்திரர்களைக் கண்டு பாண்டு மிகுந்த உத்ஸாகத்துடனும் திருப்தியாகவும் இருந்தான். அந்த இமயமலைக் குன்றில் இருந்த ரிஷிகளும் ரிஷிபத்னிகளும் பாண்டவர்கள் ஐவரையும் தங்கள் பிள்ளைகளைப் போல வளர்த்தார்கள்.
பாண்டு திரும்பவும் மாத்ரி விஷயமாக குந்தியிடம் வந்து மீண்டும் ஒருமுறை அந்த மந்திரத்தை உபதேசம் செய்ய கேட்டான்.
“மன்னவா! கெட்ட நடத்தையுள்ளவள் மாத்ரி. ஒரு முறை உபதேசித்தால் இரு தேவர்களை வேண்டி இரு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டாள். இன்னொரு முறை உபதேசித்தால் அவளிடம் நான் தோற்றுவிடுவேன். இன்னும் இரண்டு பிள்ளைகள் பெற்றுவிடுவாள். தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீர்கள்” என்று கைகூப்பி ஒதுங்கிக்கொண்டாள் குந்தி.
நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அந்த ஐவரும் வளர்ந்தார்கள்.
வஸுதேவர் மற்றும் யாதவர்கள் பாண்டுவிற்கு வனத்தில் புத்திரலாபம் ஏற்பட்டதை அறிந்தார்கள். அனைவருக்கும் சந்தோஷம். பின்னர் யாதவர்கள் வஸுதேவரிடம் ‘பாண்டுவின் புத்திரர்களுக்கு ஜாதகர்மம் முதலிய சம்ஸ்காரஙக்ள் செய்வதற்கு நம்முடைய புரோகிதரை வனத்துக்கு அனுப்பவேண்டும்:” என்று சொன்னார்கள்.
ஒரு புரோகிதரை வனத்துக்கு அனுப்ப முடிவு செய்த வஸுதேவர் பொன் வெள்ளி உணவு பதார்த்தங்கள் மற்றும் நிறைய வேலைக்காரிகள் மற்றும் வேலைக்காரர்களையும் அனுப்பினார். அவையெல்லாம் கொண்டு வந்த புரோகிதரை பூஜித்தான். உபநயனம் உபாகர்மா முதலியவை அங்கே செய்விக்கப்பட்டது. உபநயனம் ஆன பின்பு வேதாத்தியயனத்தில் கரைகண்டவர்களாயினர்.
அந்த சதஸ்ருங்கமலை ரிஷிக்கூட்டத்தில் சர்யாதியின் ஜ்யேஷ்ட குமாரனாகிய சுக்ரனும் இருந்தான். கடல்சூழ்ந்த இந்த பூமியை வில்லினால் ஜெயித்தவன் அவன். நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்தவன். பிதிர்களை குளிர்வித்து இந்த மலையில் காய் கனிகள் புசித்துக்கொண்டு தவமியற்றிக்கொண்டிருக்கிறான். அவன் அந்த பாண்டவர்களுக்கு தனுர்வேதமாகிய வில்வித்தையை பயிற்றுவித்தான். அர்ஜுனன் அதில் மிகவும் சிறப்பாக தேர்ச்சியுற்றான். பீமஸேனனுக்கு கதாயுத்தம் சொல்லிக்கொடுத்து பெரியாளாக்கினான். யுதிஷ்டிரர் ஈட்டியில் தேர்ந்தார். நகுலசகதேவர்கள் கத்தி கேடயங்களில் விற்பன்னர் ஆனார்கள்.
அர்ச்சுனனின் வில்லாற்றலைக் கண்டு பிரமித்த சுக்ரன் “இவன் வில் வித்தையில் எனக்கு சமமானவன்” என்று பாராட்டிவிட்டு பளபளக்கும் பெரிய வில்லையும், கத்தியையும், மஹாஸர்ப்பங்களுக்கு ஒப்பான பிரகாசமுள்ள விபாடம், க்ஷுரம், நாராசம் என்னும் பாணங்களை சந்தோஷத்துடன் அவனுக்குக் கொடுத்தான்.
குருவம்சத்தை விருத்தி செய்பவர்களாகிய பாண்டவர்கள் ஐவரும் திருதராஷ்டிர புத்திரர்கள் நூறு பேரும் ஜலம் நிறைந்த பெரிய தடாகத்தில் தாமரை புஷ்பங்கள் வளருவது போல கொஞ்ச காலத்திற்குள் வளர்ந்தார்கள்.
**
வருடங்கள் உருண்டோடின. அது ஒரு வசந்த காலம். வனம் எங்கும் புஷ்பித்திருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் பச்சை. வனத்தில் தனியாக சஞ்சரித்துக்கொண்டிருந்த பாண்டுவுக்கு காமம் மேலிட்டது. நடந்து வந்துகொண்டிருந்தான். அப்பொது எதிரே ஸ்நானம் செய்து மெல்லிய வஸ்திரத்துடன் மாத்ரி எதிரில் வந்துகொண்டிருந்தாள்.
மாத்ரியின் எழிலைக் கண்டதும் காமஸுகம் பாண்டுவுக்கு தலைப்பட்டது. உடனே அவளை அருகில் அழைத்து அணைத்துக்கொள்ள முற்பட்டான். மாத்ரி அவனை விடுத்து விலகினாள். அவளை பலாத்காரமாகக் கட்டியணைத்து புணர்ச்சியில் ஈடுபட்டான் பாண்டு. மான் வடிவில் இருந்த கிந்தம முனிவர் கொடுத்த சாபத்தை மறந்தான்.
மாத்ரியை விட்டு எழுந்தவுடன் காலதேவன் அவனது கணக்கை முடித்து அழைத்துக்கொண்டு போனான். மாத்ரி திடுக்கிட்டாள். அவனது பிரதேதத்தின் மீது படுத்து அழுதாள். பின்னர் பெருங்குரலெடுத்து புத்திரர்களைக் கூப்பிட்டாள். காய் கனிகளை பறித்துக்கொண்டிருந்த குந்தியின் காதுக்கு அவளது அழுகுரல் எட்டியது. பதறியடித்துக்கொண்டு குரல் வந்த திக்கில் ஓடினாள். பாண்டவர்கள் ஐவரும் அவள் பின்னாலேயே ஓடினார்கள்.
சற்று தூரத்தில் புல்தரையில் அமர்ந்திருந்த மாத்ரி தென்பட்டாள்.
“புத்திரர்களே நீங்கள் அங்கேயே நில்லுங்கள். நீங்கள் மட்டும் அருகில் வாருங்கள்” என்று குந்தியை அழைத்தாள்.
பக்கத்தில் வந்த குந்தியிடம் நடந்ததை தெரிவித்தாள். பின்னர் இருவரும் பாண்டுவின் பிரேதத்தின் மீது கிடந்து அழுதார்கள். புத்ரர்களும் அருகில் வந்து பார்த்து கண்ணீர் உகுத்தார்கள். ரிஷிகள் ஏற்பாடுகள் செய்ய அந்த வனத்திலேயே பாண்டுவுக்கு யுதிஷ்டிரர் சிதை மூட்டினார். அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே “என்னால் தானே அவருக்கு இப்படி ஆயிற்று” என்று சொல்லிக்கொண்டே மாத்ரி சிதையில் எரியும் தனது பர்த்தாவான பாண்டுவுக்கு நமஸ்காரம் செய்தாள். பின்னர் சடசடவென்று அந்த சிதையுள் இறங்கி தனது உயிரையும் மாய்த்துக்கொண்டாள்.
பதின்ம வயதில் இருந்த பாண்டவர்கள் ஐவரும் குந்தியும் கதறிக் கதறி அழுதார்கள். தீ ஜ்வாலையில் ஐவரின் அழுத முகங்களும் சிவப்பாக பழுத்திருந்தது.

No comments:

Post a Comment