யுதிஷ்டிரர் ராஜ்ஜியமாள்வதற்கு தகுதியானவன் என்பதை அறிந்துகொண்ட திருதராஷ்டிரன் மந்திரிகளுடன் அவருக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம் செய்வதற்கு ஆலோசனை செய்யத் துவங்கினான். இதைக் கேள்விப்பட்ட துரியோதனாதிகள் தங்கள் பிதாவே யுதிஷ்டிரருக்கு யுவராஜா பட்டாபிஷேகம் செய்ய ஆசைப்படுகிறாரே என்று மிகவும் வருத்தமடைந்தனர்.
ஒருவருட காலம் யுதிஷ்டிரரின் ராஜாங்க செயல்பாடுகளில் திருப்தியடைந்த திருதராஷ்டிரன் அவரை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்தான். யுதிஷ்டிரர் தனது அடக்கத்தினாலும் ஒழுக்கத்தினாலும் சாந்தகுணத்தினாலும் தனது தர்மநெறி தவறாமையினாலும் அனைவரின் நன்மதிப்பைப் பெற்று சிறந்து விளங்கினார்.
பீமஸேனன் கத்திச் சண்டையிலும் கதாயுத்தத்திலும் ரதயுத்தத்திலும் பலராமரிடம் பாடம் பயின்றான். பலசாலியாக இருந்தாலும் தனது சகோதரர்களுக்குக் கட்டுப்பட்டிருந்தான்.
அர்ஜுனன் வில்வித்தையில் நிகரற்றிருந்தான். நேராக, வளைவாக, அகலமாக என்று விதம்விதமான பாணங்களில் வேடிக்கை காட்டினான். ஊசி போன்ற பாணங்கள், முன்னும் பின்னும் முள்ளுள்ள பாணங்கள், அர்த்தசந்திர பாணங்கள் இவைகளை துரிதமாக விடுவதிலும் குறிதவறாமல் அடிப்பதிலும் சிறந்தவனாக இருந்தான்.
துரோணருக்கு அர்ஜுனனைப் பார்க்கும்போதெல்லாம் அவனது ஒப்பாரும் மிக்காருமில்லாத வில் வித்தையில் தன்னை மறந்துபோவார். தனது மகன் அஸ்வத்தாமனை விட அர்ஜுனன் மேல் பாச மழை பொழிந்தார்.
அரண்மனைத் தோட்டத்தில் ஒருநாள் மாலை அர்ஜுனனிடம் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தார் துரோணர்.
“பார்த்தா! என்னுடைய குரு யார் என்று உனக்கு தெரியுமல்லவா? அக்னிவேச்யர். அவர் அகஸ்தியரிடம் தனுர்வேதம் பயின்றார். அப்படிப் பயின்றதை ஒரு நல்ல பாத்திரத்திலிருந்து இன்னொரு நல்ல பாத்திரத்தில் சேர்க்க ஆரம்பித்தேன். நான் தவத்தினால் பெற்றது பிரம்மசிரஸ் என்னும் அஸ்திரம். உனக்குப் பரிசாகக் கொடுத்தேனே அது எனது குருவின் கிருபை. என்னிடம் அளிக்கும் போதே இது பூமி முழுவதையும் தகித்துவிடும். மனிதர்களின் மேல் எய்துவிடாதே என்று சொன்னார். ஆகையால் அதை நீ மிகவும் ஜாக்கிரதையாக பிரயோகிக்க வேண்டும்”
மரங்களின் கிளைகள் சாமரம் போல அசைய குளிர்ந்த காற்று வீசியதில் துரோணரின் உத்தரீயம் கொடிபோல பறந்தது. அர்ஜுனனுக்கு அப்போது பதினைந்து பிராயங்கள் ஆகியிருந்தது. அரும்பு மீசையும் தீர்க்கமான பார்வையும் கொண்டிருந்தான். கவனமாக குருவின் சொல் கேட்டிருந்தான்.
“அர்ஜுனா! உன்னிடம் நான் இப்போது குருதக்ஷிணை கேட்பேன். தட்டாமல் தரவேண்டும்”
“அப்படியே ப்ரபோ!” என்றான் மரியாதையோடு.
“யுத்தகாலத்தில் நான் போர்புரியும் போது நீ எனக்கு எதிராக நின்று யுத்தம் செய்ய வேண்டும். அதுதான் நான் வேண்டும் குருதக்ஷிணை” என்று சொல்லிவிட்டு அர்ஜுனனை ஊடுருவிப் பார்த்தார். ஏதோ காரணத்திற்காக குரு இப்படிக் கேட்கிறார் என்று புரிந்தது. ஆனால் “அப்படியே செய்கிறேன்” என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் வரவில்லை.
சந்தோஷத்தில் இறுகக் கட்டிக்கொண்டார். உச்சி மோந்தார்.
“அர்ஜுனா! தேவர்களோ அசுரர்களோ அரசர்களோ எவருமே போரில் உனக்கு ஈடாகமாட்டார்கள். உனக்கு சமமாக யாரையும் உருவாக்க மாட்டேன் என்று நான் சங்கல்பித்திருந்தேன். அதுபோலவே, உனக்கு கற்பித்த அளவிற்கு எவருக்கும் நான் போதிக்கவில்லை. போதிக்கக்கூடாது என்பதற்காக மட்டும் அல்ல அவர்களால் அதற்குமேல் கிரஹித்துக்கொள்ளும் திறன் இல்லை. என் மகன் அஸ்வத்தாமனையும் சேர்த்துதான் சொல்கிறேன்”
அர்ஜுனனுக்கு பெருமையாக இருந்தது. உடம்பு முழுவதும் புது ரத்தம் பாய்வது போல ஒரு உணர்வு. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.
“ஹே! அர்ஜுனா! எனது சிஷ்யர்களை விடு.. நானே உனக்கு நிகரானவன் இல்லை. ஆனால் உன்னை மிஞ்ச ஒருவர் இருக்கிறார்.”
பேச்சை நிறுத்தினார் துரோணர். அர்ஜுனன் தலையைத் தூக்கி அவரைப் பார்த்தான்.
“அவர் எல்லா லோகங்களையும் ஜெயிப்பவர். எல்லா ஆயுதங்களையும் வைத்திருப்பவர். உலகமெல்லாம் அவரால் காக்கப்படுகிறது. அவரிடமே லயமாகிறது. அர்ஜுனா! அவரிடமிருந்துதான் இந்த உலகம் உண்டானது. உலகத்தின் சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கு கர்த்தாவும் உலகமனைத்துவாகவும் அவரே இருக்கிறார். இறந்ததும் நிகழ்வதும் வருவதுமாகிய இந்த பிரபஞ்சம் அவரே! அவரைப்போல ஒருவர் பிறந்ததில்லை. பிறக்கப்போவதுமில்லை. அவர் யார் தெரியுமா?”
புதிர்போட்டார் துரோணர். அர்ஜுனன் கைகட்டி நின்றுகொண்டிருந்தான். காற்றில் கேசம் அலைபாய்ந்தது.
“யதுகுலத்தில் தோன்றிய அவர் உன் மாதுல புத்திரர். நீ அவருக்கு அத்தை மகன். அவருக்கு உன்னிடம் ஸ்நேகம் அதிகமிருக்கும். இருவரும் உயிருக்குயிராக பழகுவீர்கள். காளியனையும் கம்ஸனையும் வதம் செய்த கிருஷ்ணர்தான் உன்னைவிட பராக்கிரம் மிக்கவர். நந்தகோபருடைய கோகுலத்தில் க்ருஷ்ணர் வளர்ந்துவரும்போது இந்திரன் அவரைப் பணிந்து சில வார்த்தைகள் சொன்னான்.”
சூரியன் அஸ்தமனமாகி க்ருஷ்ண பக்ஷத்து சந்திரன் தோன்றினான். தோட்டத்தின் சுவர்ப்புறங்களில் தீவட்டிகள் ஏற்றப்பட்டன. மங்கலான அரைவெளிச்சத்தில் நின்றுகொண்டு இருவரும் இன்னும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“ப்ரபோ! என்னுடைய அம்சமானவனும் பூலோகத்தில் புருஷர்களின் உத்தமனுமான குந்திபுத்திரர்களில் கனிஷ்டன் மாவீரன் பாண்டுபுத்திரன் அர்ஜுனன் என்பவன் உமக்கு பூபாரம் ஒழிப்பதில் உதவி செய்வான். அவனுக்கு அபயம் கொடும்”
“என்று இந்திரன் ஸ்ரீகிருஷ்ணரை வேண்டிக்கொண்டான். அதற்கு அவர் “இந்திரா அஸ்திர வித்தையில் மகோன்னதமான திறமையுள்ள அர்ஜுனனை நான் அறிவேன். நீ கவலைப்படாதே. எங்கள் இருவரிடையே திகழப்போகும் ஸ்நேகம் போல இவ்வுலகில் இருக்காது. அவனிடம் நண்பனாயிருப்பவன் எனக்கும் நண்பன். அவன் விரோதி எனக்கும் விரோதி. என்னுடைய தனமெல்லாம் அவனது. அவன் இல்லாமல் நான் ஜீவித்திருக்கமாட்டேன் என்றார்” ஆகையால் அர்ஜுனா உனக்கு ஒப்பானவனும் மிக்கானவனும் இவ்வுலகில் அவரைவிட யாருமில்லை.”
அர்ஜுனனுக்கு மேனி முழுவதும் சிலிர்த்தது. தன் வாழ்வின் இந்த ரகஸியத்தைச் சொன்ன துரோணரை மீண்டும் ஒருமுறை காலில் விழுந்து வணங்கினான்.
முன்னிரவு நேரம் முடிந்து பின்னரவு தொடங்கியிருந்தது. வானத்தில் குளிர்ச் சந்திரன் பால் வெண்ணையைப் பாய்ச்சி அந்த தோட்டத்திற்கு ஒளியேற்றியிருந்தான். துரோணரும் அர்ஜுனனும் இல்லம் திரும்பினார்கள்.
**
அர்ஜுனன் கதாயுத்ததிலும் கத்திச் சண்டையிலும் தேர்ச் சண்டையிலும் தேர்ந்தான். சகதேவன் நீதிசாஸ்திர ஞானத்தை தேவேந்திரனிடமிருந்து அடைந்தான். அஸ்திர சாஸ்திரங்களிலும் யானை குதிரைகளின் பழக்கத்திலும் பாண்டியத்தியம் அடைந்திருந்தான். நகுலன் சித்திரயுத்தம் செய்பவனாகவும் அதிரதர்களில் சிறந்தவனாகவும் இருந்தான்.
நாட்டை விஸ்தரிப்பதற்காக யுத்தம் செய்யக்கிளம்பிய அர்ஜுனன் ஸௌவீரராஜன் என்ற யவன தேசத்து அதிபதியை முதலில் வென்றான். பின்னர் விபுலன் தத்தாமித்திரன் என்று கிழக்கு தேசத்தவர்களான பதினாயிரம் மஹரதர்களை ஒற்றைத்தேராளியாக ஜெயித்தான். பின்னர் தென் திசையை வாகை சூடினான். பதினைந்தே வயது நிரம்பிய அர்ஜுனன் பல்வேறு தேசங்களை வென்று ரதம் ரதமாக வண்டி வண்டியாக தனக்குவியலைக் கொண்டு வந்து சேர்த்தான்.
திருதராஷ்டிர புத்திரர்கள் பாண்டவர்களின் இந்த செயல்திறனைக் கண்டு அச்சப்பட்டார்கள். தங்களைவிட எல்லாவற்றிலும் உயர்ந்தவர்களைப் பார்த்து பயப்பட்டு அவர்களை குற்றமுள்ளவர்களாக நினைத்தார்கள். தேசத்தை விருத்தி செய்து கஜானாவையெல்லாம் பாண்டுபுத்திரர்கள் நிரப்பினார்கள். அவர்களது புகழ் எட்டுத்திக்கும் பரவியது. நாட்டு மக்களுக்கு பாண்டவர்கள் மீது அன்பும் நம்பிக்கையும் பிறந்தது.
இதையெல்லாம் கேள்வியுற்ற திருதராஷ்டிரனுக்கு பொறாமையினால் பாண்டவர்கள் மீது கெட்ட எண்ணம் உண்டாயிற்று. மஞ்சத்தில் விழுந்தாலும் தூக்கம் வராமல் தவித்தான்.
பலசாலியான பீமஸேனனையும் வில்லாளியான அர்ஜுனனையும் கண்டு கௌரவர்கள் பயந்தார்கள். துரியோதனன் அவர்களைக் கண்டு சொல்லொணா துக்கத்தில் புரண்டான். கர்ணனும் சகுனியும் கண்டபடி வழிகாட்ட பாண்டவர்களைக் கொல்ல பலவகையில் திட்டம் தீட்டினான் துரியோதனன். விதுரரின் மதியூகமான அறிவுரைகளால் அதிலெல்லாம் தப்பித்து பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தில் காலத்தைக் கழித்தார்கள்.
நகரத்து ஜனங்கள் நாற்சந்திகளில் நின்று தேசத்தின் போக்கைப் பற்றிப் பலவாறாக பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
“கண்ணில்லாமையால் திருதராஷ்டிர மஹாராஜாவால் ராஜ்ஜியம் ஆளமுடியவில்லை. இப்போது மட்டும் எப்படி ஆள்வார்? சத்யசந்தரான பீஷ்மர் ராஜ்ஜியம் ஆள மாட்டேன் என்று மறுத்து விரதமிருக்கிறார். ஆகையால் இளையவரும் அறிவில் முதிர்ந்தவருமான யுதிஷ்டிரருக்கு ராஜ்யாபிஷேகம் செய்வதுதான் சரி. அவரே பீஷ்மருக்கும் திருதராஷ்டிரருக்கும் அவரது புத்திரர்களுக்கும் ராஜபோகங்களை அளிப்பார்”
இரவில் மாறுவேஷத்தில் சென்ற ராஜாங்கத் தூதுவர்கள் இந்த விஷயங்களைக் கேட்டறிந்து கொண்டு துரியோதனனிடம் ரஹசியமாகச் சொன்னார்கள். அவனது துன்பம் எல்லை கடந்தது. மக்களின் இந்தப் பேச்சு அவனுக்குப் பொறுக்கவில்லை. பிதாவைத் தனிமையில் சந்தித்தான்.
“பிதாவுக்கு நமஸ்காரம்!”
குரல் வந்த திக்கில் திரும்பிய திருதராஷ்டிரன் வந்திருப்பது தனது மகன் துரியோதனன் என்று குரலை வைத்து அடையாளம் கண்டுகொண்டான்.
“மகனே! துரியோதனா” என்று ஆதரவாகக் கையிரண்டையும் விரித்துக்கொண்டு அவன் பக்கம் வந்தவனிடமிருந்து அகன்று சென்றான் துரியோதனன்.
“நகரத்து மக்கள் பிதற்றுகிறார்கள். தர்மனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்யவேண்டும் என்று ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாம் உங்களால் வந்த வினை. யுவராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்து அவனை ஆளவிட்டீர்கள். அவனது தந்தையான பாண்டுவும் உம்மை ஆளவிடாமல் ஆட்சி செய்து நற்பெயர் சம்பாதித்துக்கொண்டான். இப்போது அவனது தந்தை வழியில் யுதிஷ்டிரனும் அந்த பெயரைப் பெற்றான். உமக்குப் பிறந்திததினால் நீரும் நாடாளாமல் நாங்களும் ஆளாமல் அவர்களிடம் பிக்ஷைக்கு நின்று அவமானப்படுகிறோம்”
குமைந்து குமைந்து பேசினான் துரியோதனன். புத்திர பாசத்தில் சிறந்தவனான திருதராஷ்டிரன் மனம் உடைந்தான். நல்ல வார்த்தைகள் பேசி தனது பிள்ளையை திருத்த நினைத்தான்.
“பாண்டு தர்மம் தவறாதவன். அவனது புத்திரர்களும் அவ்வழியே இருக்கிறார்கள். குணங்கள் நிரம்பினவன் தர்மன். மனிதரில் சிறந்தவனாக இருப்பவனை நாம் எப்படி அவமதிப்பது? பாண்டு எப்போதும் மந்திரிகளை ஆதரித்து அவன் பக்கத்தில் நிறுத்தியிருந்தான். சேனையும் அவன் பேச்சையே கேட்டது. பாண்டுவின் புத்திரர்களும் அப்படியே இருப்பதால் இந்த தேசத்து மக்கள் நம்மை எப்படி மதிப்பார்கள்? நாம் அதர்ம காரியம் எதாவது செய்தால் நம்மைக் கொன்றுவிட்டு இந்த தேசத்திலிருந்து வெளியே சென்றுவிடுவார்கள். நம்மால் என்ன செய்யமுடியும்?” என்று கையைப் பிசைந்தான் திருதராஷ்டிரன். நல்லபுத்தி சொல்ல ஆரம்பித்தவன் புத்ரபாசம் மேலோங்க அவனிடமே ஆலோசனை கேட்டு பேச்சை நிறுத்தினான்.
“தந்தையே! பீஷ்மர் எந்த பக்ஷமும் சேரமாட்டார். துரோணரின் புத்திரர் அஸ்வத்தாமா என் பக்ஷத்தில் இருக்கிறார். புத்திரன் இருக்கும் பக்கம் துரோணரும் இருப்பார். இதில் சந்தேகமில்லை. கிருபர் நம் பக்ஷத்தில்தான் இருப்பார். ஏனெனில் அவரது மருமகன் அஸ்வத்தாமா என் பக்கத்தில். விதுரர் நமக்கும் பந்து. எதிரிகள் இடத்தில் அன்பு வைத்திருப்பவர். ஆனால் நம்மை எதிர்க்கும் அளவிற்கு செல்லமாட்டார். ஆகையால் பாண்டவர்களை குந்தியுடன் வாரணாவதத்திற்கு அனுப்பிவிடும். என் நெஞ்சில் தீயாக எரியும் துக்கத்தை இந்த செய்கையினால் அணையச்செய்யுங்கள்.”
இதைச் சொல்லும்போது துரியோதனனின் கண்கள் பொறாமைத் தீயில் மின்னின. அதை அறிய திருதராஷ்டிரனுக்கு கண்ணில்லாத காரணத்தினால் பிள்ளையின் துக்கத்தைப் போக்க எதாவது செய்யவேண்டும் என்று சிந்தனையில் பக்கத்தில் இருந்த சிம்மாசனத்தின் கைகளைத் தேடிப்பிடித்து ஊன்றி பொத்தென்று உட்கார்ந்தான்.
No comments:
Post a Comment