Friday, March 9, 2018

கிந்தம முனிவர் கொடுத்த சாபம்


வஸுஷேணனின் சொப்பனத்தில் சூரியன் பிராமண ரூபத்தில் வந்தான்.

“வீரனே! நாளைக் காலை இந்திரன் ஒரு பிராமணனாக உன் க்ரஹம் வருவான். உன்னுடைய கவச குண்டலங்களை பிக்ஷையாகக் கேட்பான். கொடுத்துவிடாதே!ஞாபகம் இருக்கட்டும்”
“என்னிடத்தில் பிராமணன் கேட்டு இல்லையென்று எப்படிச் சொல்வேன்? அதுவும் அவன் தேவர்களுக்குத் தேவன். என்னால் மறுக்க இயலாது.”
“அப்படியென்றால் அந்த இந்திரனும் உனக்கு ஒரு வரம் அருளுவான். அப்போது சக்தியாயுதம் வேண்டும் என்று கேள். வருங்காலத்தில் உன் சத்ருக்களை அழிக்க அது பயன்படும்”
சட்டென்று அந்த உருவம் மறைந்துவிட்டது. திடுக்கிட்டு மஞ்சத்திலிருந்து எழுந்து உட்கார்ந்த வஸுஷேணன் தூக்கத்தில் தானும் உளறியதை நினைத்துப்பார்த்தான். பொழுது விடிந்ததும் முக்கியமான ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று உணர்ந்தான். கனவில் வந்த பிராமணன் யார்? என்ற யோசனையில்ஆழ்ந்து போனான். மீண்டும் உறங்கப்போனான்.
பொழுது புலர்ந்தது. நித்யானுஷ்டானங்களை செய்தான் வஸுஷேணன்.
தேஜோன்மயமான ஒரு பிராமணன் வஸுஷேணனிடம் வந்தான்.
“ப்ரபோ! உங்களுடைய கவசமும் குண்டலங்களும் பிரமாதமாக இருக்கின்றன. எனக்கு தானமாகத் தருவீர்களா?” என்று இருகை ஏந்தினான்.
வஸுஷேணன் சிரித்தான். தருவானோ தரமாட்டானோ என்று எதிர்பார்ப்பில் ஏக்கத்தோடு காத்திருந்தான் பிராமண வேடத்தில் வந்த இந்திரன்.
சட்டென்று இடுப்பிலிருந்த உடைவாளை உருவினான். சரக்சரக்கென்று தோளோடு ஒட்டியிருந்த கவசங்களை அறுத்தான். நெஞ்சில் குருதி பெருகியது. காதுகளோடு சேர்த்து மாட்டியிருந்த குண்டலங்களையும் சேதித்து அவனிடத்தில் கொடையாக அளித்தான்.
மேனி முழுவதும் உதிரம் சொட்ட நின்றவனைப் பார்த்த இந்திரனனுக்கு தூக்கிவாரிப் போட்டது. இப்படி ஒரு அரிய செய்கை செய்தவனை நோக்கி ”ஆஹா.. இதில் நான் பரம திருப்தியடைந்தேன். உனக்கு எதாகிலும் வேண்டுமானால் கேள்” என்றான்.
“எதிரிகளை சம்ஹாரம் செய்யும் சக்தியாயுதம் ஒன்றை நீங்கள் தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான் வஸுஷேணன்.
சக்தியாயுதத்தை வஸுஷேணன் இடத்தில் கொடுத்துவிட்டு “தேவர்கள், அஸுரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், ராக்ஷசர்கள் என்று எவர் மேல் இதை நீ பிரயோகித்தாலும் அவர்கள் மடிவது உறுதி” என்றான் இந்திரன்.
மகிழ்ந்த வஸுஷேணனிடம் மீண்டும் பேசினான் இந்திரன்.
“ஆனால் யாரையாவது ஒருவரைக் கொன்ற பின் மீண்டும் இந்த சக்தி ஆயுதம் என்னிடம் வந்துவிடும்”
கைகூப்பி அதை ஏற்றுக்கொண்ட வஸுஷேணன் பார்க்கும்போதே வாசல் வரை நடந்து சென்று பின்னர் காற்றோடு காற்றாக மறைந்து போனான் இந்திரன்.
[க்ருணு, க்ரதீ என்றால் சேதிப்பது. கவசகுண்டலங்களை அறுத்து தனது உடலை சேதித்துக்கொண்டதனால் கர்ணன் என்ற பெயர் பெற்றான். ராதை எடுத்து வளர்த்ததினால் ராதேயன் என்ற ஒரு பெயரும் அவனுக்கு உண்டு.]
**
குந்திபோஜனின் புத்ரியான ப்ருதை யௌவனம் அடைந்து விவாஹத்திற்கு தயாரானாள். பல ராஜகுமாரர்கள் அவளை அடைய பிரியப்பட்டார்கள். குந்திபோஜன் ஸ்வயம்வரத்திற்கு நாள் குறித்து அனைவரையும் அழைத்தான். ஸ்வயம்வர மண்டபத்தில் எல்லா தேசத்து அரசர்களும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுள் ஒளி பொருந்தியவனும் இரண்டாவது இந்திரனைப் போன்று இருந்தவனான பாண்டுவை பார்த்தவுடனேயே மனதில் வரித்தாள் குந்தி.
கையிலிருந்த மாலையை பாண்டுவின் கழுத்தில் அணிவித்து அவளது விருப்பத்தைத் தெரிவித்தாள். ஸ்வயம்வரத்தில் கலந்து கொண்ட பிற அரசர்கள் தத்தம் தேசங்களுக்கு வருத்தத்துடன் திரும்பினர். குந்திபோஜன் வெகு விமரிசையாக பாண்டுவுக்கு குந்தியை விவாஹம் செய்துகொடுத்தான். கௌரவஸ்ரேஷ்டனான பாண்டுவும் குந்தியும் இந்திரனும் இந்திராணியும் போன்று ரதமேறி அஸ்தினாபுரம் சென்றனர். குந்திபோஜன் ஒரு பெரிய ராஜவீதி நிறையும் அளவிற்கு ரதங்களிலும் வண்டிகளிலும் பொன்னும் பொருளும் கொடுத்து ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்பி வைத்தான். பாண்டு அவளை பட்டத்தரசியாக்கிக்கொண்டான்.
**
பாண்டு ராஜ்ஜியம் ஆண்டு கொண்டிருந்த போது பீஷ்மர் அவனுக்கு இன்னொரு விவாஹத்துக்கு ஏற்பாடு செய்யப் புறப்பட்டார். பிராமணர்கள் மஹரிஷிகள் முதிர்ந்த மந்திரிகள் மற்றும் சதுரங்கசேனைகளுடன் மத்ரராஜனின் தேசம் சென்றார். நகரத்தின் வாயிலில் மத்ரராஜன் சல்யன் பீஷ்மரை எதிர்கொண்டு அழைத்தான்.
அரண்மனைக்கு அழைத்து வந்து அவரது சிரமம் போக மதுபர்க்கம் கொடுத்தான். பிறகு சபைக்கு அழைத்து வந்து உயர்ந்த ஆசனம் கொடுத்து அவர் வந்ததன் காரணத்தைக் கேட்டான்.
”மத்ரதேசத்து அதிபதி சல்யனே! உன் சகோதரியான கற்புக்கரசி மாத்ரியை நான் பாண்டுவுக்காக கேட்கிறேன். நீயும் நானும் சம்பந்தம் செய்துகொள்ள தகுதியானவர்கள். என்ன சொல்கிறாய்?” என்று கம்பீரமாக கேட்டார் ராஜசிம்மமாகிய பீஷ்மர்.
“உங்களை விட சிறந்த சம்பந்தி யாராக இருக்க முடியும்? மிகவும் சந்தோஷம். ஆனால்...”
சல்லியன் சற்று தயங்கினான். பீஷ்மர் கண்களை உருட்டிப் பார்த்தார்.
“ஆனால்...” அவரும் கேட்டார்.
“எங்களது குலவழக்கப்படி பொன்னோ பொருளோ பெற்றுக்கொண்டுதான் பெண்ணைக் கொடுப்பது வழக்கம். இப்படி திடுதிப்பென்று கொடு என்றால் எப்படி?” என்று இழுத்தான் சல்லியன்.
இடியிடியென்று அரண்மனை கூரை இடிந்து கீழே விழுமளவிற்கு சிரித்தார் பீஷ்மர். சல்லியன் ஒன்றும் புரியாமல் பார்த்தான். தனது ஆசனத்திலிருந்து கைதட்டி அவருடன் வந்த ஒரு வயதான மந்திரியைக் கூப்பிட்டார். அந்த மந்திரி அவரருகில் ஓடி வந்தார். அவரது காதில் கிசுகிசுத்தார் பீஷ்மர்.
”இது ஆர்ஷம் எனப்படும் விவாஹம். இரண்டு கோக்களை வாங்கிக்கொண்டு பெண் தருவார்கள். உன் அரண்மனை வாசலில் சென்று பார். கட்டிக்கட்டியாக தங்கப்பாளங்கள், ரதம் ரதமாக ரத்னங்கள், பெட்டி பெட்டியாக மணிகள், மூட்டை மூட்டையாக முத்துகள் என்று பல்வேறு ரதங்களில் கொண்டு வந்திருக்கிறேன். அவற்றைப் பெற்றுக்கொண்டு உனது சகோதரியைக் கொடு”
கிட்டத்தட்ட ஒரு கட்டளை போலவே தொனித்தது பீஷ்மரின் குரல்.
மாத்ரியை நன்கு அலங்கரித்து மன மகிழ்ச்சியுடன் பீஷ்மரிடம் ஒப்படைத்தான் சல்லியன். அவளுடன் ரதமேறி ஹஸ்தினாபுரம் வந்தடைந்தார் பீஷ்மர். அரண்மனை புரோகிதர்கள் நல்ல நாள் பார்த்துக்கொடுக்க முறைப்படி பாண்டுவுக்கு மாத்ரியையும் விவாஹம் செய்துவைத்தார். குந்தி மற்றும் மாத்ரியுடன் மகிழ்ச்சியாக காலம் கழித்துவந்தான் பாண்டு.
முப்பது நாட்கள் இன்பமயமாகக் கடந்தது. பின்னர் இப்புவியை வெல்வதற்கு திக்விஜயம் புறப்பட்டான் பாண்டு. பீஷ்மர், திருதராஷ்டிரன் மற்றும் அரண்மனைப் பெரியோர்களை நமஸ்கரித்து ரதகஜதுரகபதாதிகளுடன் சென்றான். முதலில் தசார்ண தேசத்தரசனை வென்றான். பின்னர் ராஜகிருஹம் என்னும் நகரம் சென்றான். அது மகததேசத்துக்கு உட்பட்டது. அங்கு தீர்க்கன் என்னும் அரசன் தான் பெரிய வீரன் என்ற மமதையில் திரிந்துகொண்டிருந்தான். அவனைக் கொன்றான்.
பின்னர் மிதிலாபுரிக்குச் சென்று அங்கு விதேகராஜர்களை வென்றான். காசிதேசம் ஸும்ஹ தேசம் என்று எல்லா தேசங்களுக்கும் திக்விஜயம் செய்து அனைவரையும் வென்றான். அந்தந்த தேசத்திலிருந்து கிடைத்த பொன்னும் ரத்னங்களும் முத்துக்களும் பவழங்களும் குதிரைகளும் யானைகளும் கணக்கிலடங்கா. அஸ்தினாபுரத்தை தலைநகராகக் கொண்ட கௌரவர்கள் தேசத்து எல்லைகளை பெரிதாக்கினான். நாடு விஸ்தாரமானது.
அனைத்து தேசங்களிலும் வென்றவைகளை ஹஸ்தினாபுரத்துக்கு பாண்டு கொண்டு வரும் போது அந்த ஊரே நின்று வேடிக்கை பார்த்தது. பாண்டு முதலில் வர அவன் வென்ற பொருட்கள் பல ரதங்களிலும் குதிரைகளிலும் நீள் வரிசையாக நீண்டு இரண்டு மூன்று கிராமம்வரை நின்றது. பீஷ்மர் ஹஸ்தினாபுர எல்லைக்கு ஓடிவந்து கட்டிப் பிடித்து உச்சிமோந்தார். சத்யவதியும் அவனது தாயார் அம்பாலிகையும் ஒருவருக்கொருவர் கண்களில் சந்தோஷம் மிதக்க பார்த்துக்கொண்டனர்.
“இந்தப் பொருட்கள் அனைத்தும் உங்களுக்கே சமர்ப்பணம்” என்று சத்யவதி, அம்பாலிகை பீஷ்மர் ஆகியோரைப் பார்த்துச் சொல்லி குனிந்து நிமிர்ந்தான். பாண்டுவின் இந்த பராக்கிரமத்தால் திருதராஷ்டிரன் அஸ்வமேதயாகம் போன்ற அநேக யாகங்களைச் செய்தான்.
தூரதேசங்களுக்குத் திக்விஜயம் செய்து பல யுத்தங்கள் செய்து வெற்றிபெற்ற வீரனான பாண்டுவிற்கு ஹஸ்தினாபுர நகர வாழ்வு பிடிக்கவில்லை. மீண்டும் ஒரு திக்விஜயம் செய்யலாம் என்று நினைத்தான். ஆனால் இம்முறை அவனது இருமனைவிகளுக்கும் இதில் உடன்பாடில்லை. ஆகையால் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு இமயமலையின் தென்பக்கமிருக்கும் வனம் சென்றான்.
கவசத்தோடும் ராஜ அலங்காரங்களுடன் பாரியைகளுடன் அந்த வனத்தில் திரிந்துகொண்டிருந்தவனை தேவதை என்று வனத்தில் வசிப்பவர்கள் எண்ணினார்கள். அவனுக்குப் பிரியமானவைகளை திருதராஷ்டிரன் நாட்டிலிருந்து காட்டிற்கு தினமும் அனுப்பிக்கொண்டிருந்தான்.
பத்னிகளுடன் ஆரண்யத்தில் ஆனந்தமாகப் பொழுது போக்கிக்கொண்டிருந்தான் பாண்டு. வேட்டையாடுதலை முதன்மையாக வைத்திருந்தான். இப்படி ஒரு நாள் வனத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தபோது தூரத்தில் இரு மான்கள் புணர்ச்சியில் இருப்பதைக் கண்டான்.
உடனே வில்லை வளைத்து ஐந்து அம்புகளை அந்த ஆண் மான் மீதும் பெண் மான் மீதும் எய்தான்.
“ஐயோ!” என்று ஒரு ஆணின் கதறல் சப்தம் கேட்டதும் பயந்து வில்லை கீழே போட்டான் பாண்டு.
கிந்தம முனிவர் என்னும் ரிஷிகுமாரர் ஆண் மான் உரு எடுத்து பெண் மான் உருவில் இருந்த தனது மனைவியுடன் சேர்ந்திருந்தார். வலியால் துடித்த அவர் மிகுந்த வேதனையுடன் மான் உருவிலிருந்தே பேசத் தொடங்கினார்.
“விபரீத புத்தியுள்ளவர்களும் பாபகாரியங்களிலேயே எப்போதும் மூழ்கியிருப்பவர்கள் கூட இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் தயங்குவார்கள். மதி எப்போதுமே விதிலை வெல்லமுடியாது. விதிதான் மதியை வெல்கிறது. விதிவசமாக வரும் பயன்களை மதியுள்ளவன் கூட அனுபவிக்கிறான். தர்மத்தையே ஆதாரமாகக் கொண்ட பரதவம்சத்தில் பிறந்த நீ இப்படிச் செய்யலாமா?”
“மானே! வேந்தர்களுக்கு சத்ருவதம் போலத்தான் மிருக வதமும். க்ஷத்ரியனின் சாஸ்திரபிரஹாரம் அது ஒன்றும் செய்யக்கூடாததல்ல. மேலும் ஸத்ரயாகம் செய்யும் பொருட்டு எல்லா தேவதைகளின் நலனையும் உத்தேசித்து அகஸ்திய மாமுனி ஜலத்தைத் தெளித்து காட்டிலிருந்த மிருகங்களை வேட்டையாடினார். எல்லாம் செத்து மடிந்தன. நீ என்னை தூஷிக்காதே!” பாண்டு தெளிவாகத் தனது தரப்பு வாதத்தை வைத்தான்.
“அரசனே! மிருகங்களைக் கொல்பவனைப் பற்றி நான் தூஷிக்கவில்லை. நான் புணரும் காலம் வரைக்கும் நீ பொறுமையுடன் இருந்திருக்க வேண்டும். சந்ததி விருத்திக்காக இந்த பெண் மானுடன் உத்ஸாகமாக சேர்ந்திருந்தேன். உயர்ந்த பௌரவ வம்சத்தில் பிறந்தவனான நீ செய்த இக்காரியம் மிகவும் கொடியது. ஸ்வர்க்கத்துக்கும் புகழுக்கும் விரோதமானது.”
“இவ்வளவு பேசும் நீர் யார்? ஏன் மான் உருவில் இருந்தீர்?” கையைப் பிசைந்துகொண்டே கேட்டான் பாண்டு.
“நான் கிந்தமன் என்னும் முனிவன். காமஸுகத்தில் ஆசையிருந்தும் மானிடரிடத்தில் ஏற்பட்ட வெட்கத்தினால் மான் உரு எடுத்துக்கொண்டு பெண் மானாகிய என் பத்னியிடம் சேர்ந்திருந்தேன். நான் முனிவன் என்று தெரியாமல் அம்பு எய்தி கொன்றதால் உன்னை பிரம்மஹத்தி தோஷம் தீண்டாது. ஆனால்....”
கிந்தம மஹரிஷி நிறுத்தினார். மானின் கண்களிலிருந்து நீர் அருவியாய்க் கொட்டியது.
“ஆனால்.. நீயும் காமஸுகத்தில் மூழ்கி கலவியிருக்கும்போது உனது உயிர் பிரிந்துவிடும்” என்று சாபம் கொடுத்தார். அடுத்த கணம் அவரது உயிர் அதாவது அந்த மானின் உயிர் பிரிந்துவிட்டது.
இருபுறமும் அழகான மனைவிகள் அமர்ந்திருக்க இந்த சாபமே தனது காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க அந்தக் காட்டுக் குடிலின் வாசலில் சோகத்தில் ஆழ்ந்திருந்தான் பாண்டு.

No comments:

Post a Comment