ஸம்வரணன் புதுத் தெம்பு வந்தவனாய் எழுந்து நின்றான். மலைச்சரிவிலிருந்த அந்த வனத்தில் தலையைத் தூக்கிப் பார்த்தால் சூரியன் தெரியும் இடத்திற்கு நடந்து வந்தான். அன்னாந்து சூரியனைப் பார்த்துக் கொண்டு தவமியற்றத் துவங்கினான். அப்படித் தவமியற்றும் போது மனதில் வசிஷ்டரை நினைத்துக்கொண்டான். இரவும் பகலும் ஒரே நினைவாக நின்றுகொண்டிருந்தான். பன்னிரெண்டாவது தினம். வசிஷ்டர் நேரே தோன்றினார்.
மூடிய கண்களைத் திறக்காமல் தவத்தில் இருந்தான் ஸம்வரணன். தனது திவ்யஞானத்தினால் அவனது மனம் தபதியினால் அபகரிக்கப்பட்டது என்பதை அறிந்துகொண்டார் வசிஷ்ட ரிஷி. இருந்தாலும் அவனது விருப்பத்தை அறிந்துகொள்ள அவனருகே சென்றார்.
“இந்தத் தவத்தினால் நீ அடைய விரும்பது என்ன?” என்றார்.
“தபதி எனும் பேரழகியைக் கண்டேன். அவளை மணம் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்”
உடனே அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே வசிஷ்டர் நின்ற கோலத்திலேயே விண்ணை நோக்கி காற்றிலே ஏற ஆரம்பித்தார். அந்த பிரம்மரிஷி ஒரு நொடியில் லக்ஷம் யோஜனை தூரம் சென்றார். பின்னர் சூரியனைப் பார்க்க நின்று கொண்டு
“நான் வசிஷ்டன்”
”மஹரிஷியே! உமக்கு என்ன தேவையோ அதை நான் தருவேன். கேளும்”
வசிஷ்டர் உடனேயே ஸம்வரணனுக்காக பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்று ஆரம்பிக்கவில்லை. முதலில் சூர்யபகவானைத் துதித்தார்.
“கிரஹங்களுக்கு அதிபதியே! ஜனனமில்லாதவரே! உலகத்தின் பெருவிளக்கே! எல்லாப் பிராணிகளுக்கும் அந்தராத்மாவே! உலகங்களுக்கு ஒரு கண்ணாக இருப்பவரே! மூன்று வேத ரூபியே! முக்குணங்களாலாகிய சரீரங்களைத் தரிப்பவரே! ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வர ஸ்வரூபியே! மஹா தயாளுவே! ஞானத்திற்கு நிதியான ஸவிதாவை நமஸ்கரிக்கிறேன்”
சூரியன் குளிர்ந்து போனான்.
“உம்மால் துதிக்கப்பட்ட நான் இப்போது உமக்கு வரம் கொடுக்கும் ஸ்திதியில் இருக்கிறேன். இப்போது உம்மால் சொல்லப்பட்ட இந்த துதி என்னிடம் பக்தி கொண்டவர்கள் பூஜை செய்வதற்குரியது. இதை பூஜிப்பவர்களுக்கு நான் வரம் கொடுப்பேன். நீர் கேளும்”
உள்ளமும் குளிர்ந்து சிரித்தான் சூரியன்.
“ஸாவித்ரிக்கு இளையவளான இந்த தபதியை ஸம்வரண ராஜாவுக்காக பெண் கேட்டு வந்திருக்கிறேன். அவன் தர்மாத்மா. உயர்ந்த புத்தியுள்ளவன். பெரும் கீர்த்தி படைத்தவன்” என்று வேண்டி நின்றார் வசிஷ்டர்.
“அரசர்களில் சிறந்தவன் ஸம்வரணன். பெண்களில் சிறந்தவள் தபதி. கொடுக்காமல் இருக்க முடியுமா? தருகிறேன்” என்றான் உள்ளன்புடன் சூரியன்.
பன்னிரண்டு இரவுகள் சமாதி நிலையில் காத்திருந்தான் ஸம்வரணன். பின்னர் விண்ணில் வசிஷ்டர் இறங்கிவருவது தெரிந்தது. அவருடன் கூடவே தபதியும் வந்தாள். ஸம்வரணன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. ஆகாயத்தில் இருந்து மின்னல் துண்டொன்று நழுவியது போல பிரகாசமாக தபதி வந்திறங்கினாள். வசிஷ்டர் அவளை ஸம்வரணனுக்கு பாணிக்கிரஹணம் செய்துவைத்தார்.
தபதி கிடைத்த மகிழ்ச்சியில் அவனுக்கு நாடு திரும்ப இஷ்டமில்லை. அந்த மலைச்சாரல் வனத்திலேயே காலத்தை இன்பமாகக் கழிக்க எண்ணி அவனது அமைச்சனையே ராஜ்ஜியத்தை ஆளச் சொன்னான். பன்னிரண்டு வருஷ காலம் தபதியுடன் அந்த வனத்தில் ரமித்திருந்தான்.
அந்த பன்னிரண்டு வருஷகாலமும் ஸம்வரணனின் தேசத்தில் இந்திரன் மழையை வர்ஷிக்கவில்லை. வறட்சியில் பஞ்சம் ஏற்பட்டது. செல்வமில்லாததால் எல்லோரும் சண்டையிட்டுக்கொண்டனர். வீடு விட்டு தேசாந்திரியாக அலைந்தவர்கள் அடித்துக்கொண்டு இறந்தார்கள். நாடெங்கும் வீதிகளில் பிரேதங்கள் கிடந்து யமபுரம் போல ஆனது.
வசிஷ்ட மஹரிஷிக்கு ஞானதிருஷ்டியில் இது தெரிந்தது. அவர் ஸம்வரணனை கல்யாணம் செய்து விட்டுவிட்டு வந்த காட்டிற்குச் சென்றார். அவனைத் தபதியுடன் மீண்டும் நகரத்திற்கு அழைத்து வந்தார். நகரத்தின் எல்லையில் அவன் தபதியுடன் கால் வைத்ததும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது. பாளம் பாளமாக வெடித்திருந்த நீர் நிலைகள் நிரம்பின. பயிர்கள் செழித்தன. ஊர் மலர்ந்தது.
அந்த ஸம்வரண ராஜன் தபதியுடன் பன்னிரண்டு வருஷகாலம் யாகங்களும் ஹோமங்களும் செய்து தேவாதிதேவர்களை திருப்தியடைய வைத்தான்.
**
அர்ஜுனன் இந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த போது கங்கைக்கரையில் விடிந்திருந்தது. அங்காரபர்ணன் அலுக்காமல் கதை சொல்லிக்கொண்டிருந்தான். ஸம்வரணன் கதையை இவ்வாறாக முடித்தான்.
“அர்ஜுனா! அந்த தபதிக்கும் ஸம்வரணராஜனுக்கும் குரு என்பவனைப் பெற்றான். அந்த குருவம்சத்தில் நீ வந்ததால் உன்னை தாபத்யன் என்றேன்”
ஒருமுறை தூங்கி எழுந்த குந்தியும் நகுலசகதேவர்களும் காட்டினுள் சென்று சில கனிகளைப் பறித்து வந்தார்கள். யுதிஷ்டிரரும் பீமனும் பாஞ்சால தேசத்து ஸ்வம்வரத்துக்குப் எப்போது செல்லப்போகிறோம் என்ற ஆவல் கண்களில் மிதக்க உட்கார்ந்திருந்தார்கள். அர்ஜுனன் மீண்டும் அங்காரபர்ணன் என்ற சித்ரரதனாகிய கந்தர்வனிடம் மீண்டுமொரு கேள்வி கேட்டான்.
“கந்தர்வனே! எங்கள் குரு வம்சத்து ராஜாவுக்கு புரோஹிதராக இருந்த வசிஷ்டர் இருந்தார் என்ற கதையைச் சொன்னாய். அவருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? அவர் எப்படிப்பட்டவர்?”
சித்ரரதன் அர்ஜுனனின் ஆர்வத்தை மெச்சினான். அவனுக்கு வசிஷ்டரின் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
“அர்ஜுனா! வசிஷ்டர் பிரம்மாவின் மானஸ புத்திரர். வருணனுடைய வீரியத்திலிருந்து பிரம்மாவின் அனுக்கிரஹத்தால் பிறந்தவர். வசிஷ்டர் என்றால் இந்திரியங்களை ஜெயித்தவர் என்பது பொருள். அவர் அருந்ததியின் பர்த்தா. மனிதர்களால் வெல்லப்படாத காமக்குரோதங்கள் வசிஷ்டரால் எப்படி வெல்லப்பட்டதோ அதுபோலவே அவரது எதிரிகளையும் அவர் ஜெயித்தார். விஸ்வாமித்ரர் செய்த பிழைகளை பொறுத்துக்கொண்டு குசிக வம்சத்தவர்களை அழிக்காமலிருந்தார். புத்திரசோகம் தாக்கியபோதும் விஸ்வாமித்ரரை அழிக்கும் வல்லமையிருந்தும் அடங்கியிருந்தார். இக்ஷ்வாகு வம்சத்தவர்கள் வசிஷ்டரைச் சேர்ந்து இப்புவனியை அடைந்தார்கள்.”
கனியைப் புசித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தவர்கள் கங்கை நீரை அள்ளி கைகளைத் துடைத்துக்கொண்டு நடந்தபடி சம்பாஷித்தார்கள்.
“பாண்டவ ஸ்ரேஷ்டனே! அந்த ப்ரம்மரிஷி ராஜஸ்ரேஷ்டருக்கெல்லாம் ப்ருஹஸ்பதி போல யாகங்களை செய்தார். வேதமும் சாஸ்திரமும் தர்மம் தெரிந்தவராகிய அவரை புரோஹிதராக வரித்தபின்னர் ராஜாக்கள் அனைத்து சௌபாக்கியங்களையும் அடைந்தார்கள். ஆகையால் அது போல ஒரு புரோஹிதரை உங்களுக்காக அமர்த்திக்கொள்ளுங்கள். பூமியை ஜெயிக்க விரும்பிய அரசன் இதுபோன்ற பிராமணனை தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும்”
இத்தோடு இந்த உரையாடல் முடிந்ததென்று நகுலசகதேவர்களும் குந்தியும் அமர்ந்திருந்த மரத்தடியில் இருந்து எழுந்திருந்தார்கள். யுதிஷ்டிரர் வெகுதூரத்தில் கங்கையில் முங்கி எழுந்திருந்தார். பீமன் கங்கையைக் கலக்கிக் குளித்துக்கொண்டிருந்தான். அர்ஜுனன் மேலும் வசிஷ்டர் பற்றியும் விஸ்வாமித்திரர் பற்றியும் அறியும் ஆவலில் இருந்தான். கந்தர்வனை அவன் லேசில் விடுவதாகயில்லை.
“கந்தர்வனே! என்ன காரணத்தால் வசிஷ்டருக்கும் விஸ்வாமித்ரருக்கும் விரோதம் உண்டாயிற்று?”
“அர்ஜுனா! கான்யகுப்ஜ தேசத்தில் குசிகரின் புத்திரர் காதி ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தார். அவருடைய புத்திரர் விஸ்வாமித்திரர். புஜபலமும் சைன்ய பலமும் மிக்கவராக இருந்தார். அவர் சேனைகளுடன் பெருங்காட்டில் வேட்டையாடிக்கொண்டிருந்தார். அந்த மலை முழுவதிலும் உள்ள வனத்திலிருக்கும் மான்களையும் பன்றிகளையும் விரட்டி விரட்டி வேட்டையாடினார். பசியும் களைப்பும் மிகுந்து நா வறண்டது. தண்ணீராவது எங்கேயாவது கிடைக்குமா என்று காட்டில் அலைந்தபோது வசிஷ்டரின் ஆஸ்ரமம் கண்ணில்பட்டது. தனது சேனையோடும் மந்திரிமார்களோடும் உள்ளே நுழைந்தார்.
விஸ்வாமித்திரர் களைப்புற்று வந்ததினால் வசிஷ்டர் அவருக்கு விருந்தளிக்க எண்ணினார். இத்தனை பேருக்கும் வசிஷ்டரால் என்ன தரமுடியும் என்று மனசுக்குள் எண்ணினார் விஸ்வாமித்திரர். வசிஷ்டரின் ஆஸ்ரமத்தில்தான் காமதேனுவாகிய நந்தினி என்கிற பசு வளர்ந்து கொண்டிருந்தது. வசிஷ்டரே அதை நேரடியாக போஷித்துக்கொண்டிருந்தார்.
“தேனுவே! இந்த ராஜனும் இவரது சேனையும் புசிப்பதற்கு வேண்டியவற்றைக் கொடு” என்று நந்தினியிடம் கட்டளையிட்டார் வசிஷ்டர்.
ஆவிபறக்கும் அன்ன மலை ஒன்றை முதலில் கறந்தது. பருப்பு, துவையல், மோர், ரஸம் ஆகியவைகளை சிறு சிறு குட்டைகள் போல கொடுத்தது. பிறகு தயிர் வாய்க்கால்கள் உருவாகின. பக்கத்திலேயே நெய்க் கிணறுகள் முளைத்தன. சர்க்கரைப் பொங்கல் குளம் போல தாராளமாத் தோன்றியது. கரும்புத் தோட்டத்தை அறுத்துக் கொண்டு வந்து விண்ணையெட்டுமளவிற்கு அடுக்கப்பட்டது. இன்னதென்று இனம் காண முடியாத பக்ஷணங்களும் பானங்களும் குவிக்கப்பட்டன. அமிர்தத்துக்கு ஒப்பான லேகியங்கள் தருவிக்கப்பட்டன. தேன் ஆறு போல பக்கத்தில் ஓடியது. மைரேயம் எனும் உயர்ந்த சாராயம் சிற்றாறாக ஓடியது.
இவையெல்லாம் முடிந்த பிறகு விருந்தினர்களை கௌரவிக்க ரத்னங்களையும் ஆடைகளையும் கொடுத்தது.
விஸ்வாமித்திரரும் அவரது சேனையும் வாய் பிளந்து அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் பரம திருப்தி. நந்தினைப் பற்றி பலவாறாகச் சிலாகித்துப் பேசினார் விஸ்வாமித்திரர்.
“பிராமணரே! நான் பத்துகோடி பசுக்கள் தருகிறேன். போதவில்லை என்றால் எனது ராஜ்ஜியத்தையும் உன் பேரில் எழுதித்தருகிறேன். அந்த நந்தினியை என்னிடம் கொடுத்துவிடும்”
அப்போதே வசிஷ்டர் அவிழ்த்து தன் கையில் கொடுத்துவிடுவார், அதை அழைத்துக்கொண்டு தனது நாட்டிற்கு சென்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் அங்கே நின்றிருந்தார் விஸ்வாமித்திரர்.
“தேவதைகளுக்கும் அதிதிகளுக்கும் பிதிர்க்களுக்கும் எம்மை புரோஹிதராக வைத்து யாகம் செய்பவர்களுக்கும் ஆதாரமாக இந்த நந்தினி என்னோடு இருக்கிறது. உமது ராஜ்ஜியத்தையே இதற்காக என்னிடம் கொடுத்தாலும் இதை உமக்குத் தரலாகாது” என்றார் வசிஷ்டர்.
”முனிவரே! நான் அரசன். க்ஷத்ரியன். நீர் அமைதியாக தவம் செய்யும் பிராமணர். வேதாத்தியயனம் செய்பவர். உமக்கு எதற்கு வீண் பிடிவாதம்? பத்துக்கோடி பசுக்களை வாங்கிக்கொண்டு என்னிடம் அந்த நந்தினியை ஒப்படைத்துவிடுங்கள். நான் பலாத்காரமாக பசுவைக் கொண்டு போக மாட்டேன்” சாந்தமாகவே சொன்னார் விஸ்வாமித்திரர்.
“நீர் க்ஷத்ரியர். சேனை பலம் கொண்டவர். அப்படித்தான் அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்றால் பலாத்காரமாக நந்தியினை கொண்டு போங்கள். ஆட்சேபணையில்லை.” சொல்லிவிட்டு ஒதுங்கி நின்றார் வசிஷ்டர்.
விஸ்வாமித்திரர் ஆசனத்திலிருந்து எழுந்து சென்று நந்தினை இழுத்தார். நகவில்லை. நாலைந்து சேனை வீரர்களைக் கூட்டி வந்து இழுக்கச்சொன்னார். ஊஹும். நகரவில்லை. கசையடி கொடுத்தார்கள். தடிகளால் பலம் கொண்டமட்டும் அடித்தார்கள். ஊஹும். எதற்கும் காமதேனு மசியவில்லை. விஸ்வாமித்திரரின் சேனை முழுவதும் போராடியது. எல்லோரும் அடித்துத் துரத்த முற்பட்ட போது “அம்மா” என்று கதறிக்கொண்டு இங்குமங்கும் ஓடியது.
வசிஷ்டரால் அது படும் பாட்டைக் காணச் சகிக்கவில்லை.
“நந்தினியே! விஸ்வாமித்திரரால் நீ பலவந்தமாக இழுக்கப்படுகிறாய். நீ கதறும் சப்தம் என் மனதைப் பிசைகிறது. பொறுமையுள்ள பிராமணனாகிய நான் இதற்கு என்ன செய்ய முடியும்” என்று கேட்டார்.
“கொடியவர்களாகிய விஸ்வாமித்திரரின் சேனையினால் அடிக்கப்பட்டும் இழுக்கப்பட்டும் சித்ரவதை செய்யப்படுகிறேன். நீர் ஏன் சும்மா இருக்கிறீர்? எதுவும் செய்யக்கூடாதா?”
“நந்தினியே! க்ஷத்ரியர்களுக்கு பராக்கிரமம் வன்மை. பிராமணர்களுக்குப் பராக்கிரமம் பொறுமை. ஆதலால் உனக்கு இஷ்டமிருந்தால் செல்” என்று ஆஸ்ரமத்திற்குள் நுழைய முனைந்தார்.
“நீர் என்னை விடாவிட்டால் என்னை அவர்கள் பலாத்காரமாக கொண்டு போக முடியாதே” என்று கெஞ்சியது.
“சரி! நந்தினியே நான் உன்னை விடவில்லை. முடிந்தால் இங்கேயே நீ நிற்கலாம்.”
”நிற்கலாம்” என்ற வார்த்தை நந்தினியின் காதுகளில் எட்டியபிறகு அதற்கு புது சக்தி வந்தது. கோபத்தினால் கண்கள் சிவந்தது. அடுத்தது அது என்ன செய்யப்போகிறதோ என்று விஸ்வாமித்ர சேனை பயந்தது.
நந்தினி அடுத்தது என்ன செய்யும் என்பதை நாளை பார்க்கலாம்.
No comments:
Post a Comment