Sunday, March 11, 2018

ஜீவித்திருப்பவர்களுக்கு ஜல தர்ப்பணம்


பீமன் இரவு முழுவதும் கங்கைக்கு தென்பகுதிக் காடுகளுக்குள் ஒரு மதயானை போல சலசலத்துச் சென்றுகொண்டிருந்தான்.
**
வாரணாவதத்தில் விடிந்தவுடன் ஒரு பெருங்கூட்டம் அந்த அரக்குமாளிகையைச் சுற்றி நின்று கொண்டு பாண்டவர்களுக்காக வருத்தப்பட்டது.
“பாண்டவர்களை எரிப்பதற்காகத்தான் இந்த வீடு கட்டப்பட்டிகிறது” என்றார் ஒரு பெரியவர். முதுகு கூன் விழுந்திருந்தது.
“திருதராஷ்டிரனின் மகக் தான் எரித்தான். அதுவும் அந்த குருடனின் அனுமதியோடு செய்திருக்கிறான்.” என்றான் பக்கத்தில் நின்ற இளைஞன் ஒருவன். இதற்கிடையில் சிலர் முக்கால்வாசிக்கு மேல் எரிந்த அந்த மாளிகையை அணைக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். பெரும் பெரும் பாத்திரங்களில் தண்ணீர் கொண்டு வந்து விசிறியடித்தார்கள்.
“பீஷ்மரும் கிருபரும் துரோணரும் இருக்கும் சபையில் இப்படியொரு அதர்மம் நிகழலாமா?” கழுத்து ஆடிக்கொண்டே இருக்கும் பாட்டி ஒருத்தி தொண்டையில் சல்லடை வைத்தது போலப் பேசினாள்.
அதற்குள் அங்கே கொஞ்சமிருந்த தீயும் அணைக்கப்பட்டு மாளிகைக்குள் அகப்பட்டுக்கொண்ட பாண்டவர்களை அடையாளம் கண்டுகொள்ள சில இளைஞர்கள் ஓடினார்கள். உள்ளே நிரபராதியான வேடச்சியும் அவளது பிள்ளைகளும் கரிக்கட்டையாக கிடந்ததைப் பார்த்து “ஆ! ஆ! யதுவம்சத்தவளாகிய குந்தியும் பாண்டு புத்திரர்களும் இப்படி சாம்பலாயினரே!” என்று ஓலமிட்டனர்.
“இங்கே பாருங்கள்! வாயிலில் புரோசனனும் இறந்துகிடக்கிறான்” என்று இன்னும் சிலர் கூச்சலிட்டார்கள். கூக்குரல்களும் அழுகைகளும் வேதனை நிரம்பிய முகங்களுமாக அந்த பிரதேசம் காணப்பட்டது. திருதராஷ்டிரனுடைய பிள்ளைகளுக்கு சாபங்களை சகட்டுமேனிக்கு வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரனுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது.
“ஆ! பாண்டு புத்திரர்கள் தீக்கு இரையாகிவிட்டார்களா! என்னால் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லையே!” என்று குலுங்கிக் குலுங்கி அழுதான். ஆழமாகயிருக்கும் குளம் கோடைக்காலத்தில் மேலே உஷ்ணமாகவும் அடியாழத்தில் குளிர்ச்சியாகவும் இருப்பது போல வெளியே துக்கப்படுவது போல நடித்தாலும் உள்ளே மகிழ்ந்தான்.
“குந்திக்கும் அவளது புத்திரர்களுக்கும் பரிசுத்தமாகவும் சிறப்பாகவும் கிரியைகள் செய்ய வேண்டும். வாருங்கள். அனைவரும் கங்கைக்கரைக்குச் செல்லலாம்” என்று கிளம்பினான் திருதராஷ்டிரன்.
பீஷ்மர் விதுரர் துரோணர் கிருபர் என்று மூத்தவர்கள் கிளம்ப பின்னாலேயே கௌரவர்கள் அனைவரும் ஒற்றை ஆடையில் ஆபரணங்களையும் தலைப்பாகைகளையும் களைந்து வருத்தம் தோந்த முகத்துடன் சென்றார்கள்.
கங்கை அங்கே வருபவர்களின் பாவங்களைக் களைய ஓடிக்கொண்டிருந்தாள். ஜலதர்ப்பணம் செய்வதற்காக அனைவரும் கரையில் அமர்ந்தார்கள். திருதராஷ்டிரன் பெருங்குரலெடுத்து “ஆ! யுதிஷ்டிரா.... ஆ! பீமா... ஓ! பல்குனா!! இரட்டையர்களே!! நீங்களும் போனீரா?” என்று அழுதவண்ணம் தர்ப்பணம் செய்யத் தயாரானான்.
வரிசையில் அனைவரும் அமர்ந்திருக்க விதுரரும் பீஷ்மரும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். தாயாகிய கங்கை எதிரே ஓடிக்கொண்டிருக்க அதே கங்கை பீஷ்மரின் கண்கள் வழியாகவும் கொட்டினாள். பீஷ்மரை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் விழித்தார் விதுரர். ஊராரை நம்பவைப்பதற்காக அவரும் ஜல தர்ப்பணம் செய்வதற்காக வந்திருந்தாலும் மனசுக்குள் பாண்டவர்கள் இந்த நேரத்தில் எவ்வளவு தூரம் சென்றிருப்பார்களோ? என்று தவித்துக்கொண்டிருந்தார்.
“குந்தியே! ஒரே இரவில் நீயும் ஸ்வர்க்கம் சென்றாயோ? பீமனும் தனஞ்சயனும் மகாரதர்கள் ஆயிற்றே! தர்மதேவதை கொடுத்தவனும் பொய்யாமொழியனுமான யுதிஷ்டிரனும் போய்விட்டானா? எனது ஹ்ருதயம் வெடிக்கிறதே!” இப்படிப் பலவாறு அழுது அரற்றினார் பீஷ்மர். மனது ஒடிந்து போய்...
ஜலதர்ப்பணம் செய்யத் தயாரான பீஷ்மரை பக்கத்தில் அமர்ந்திருந்த விதுரர் கண்களாலேயே வேண்டாம் என்பது போல சமிக்ஞை செய்தார். பீஷ்மருக்கு புரியவில்லை. பின்னர் யாருக்கும் தெரியாமல் பீஷ்மருடைய காதில் பாண்டவர்கள் மரிக்கவில்லை என்பதைச் சொன்னார் விதுரர். அவர் கண்களில் ஒரு திடீர் சந்தோஷம் மின்னியது. “நீர் ஜலதர்ப்பணம் செய்யாதேயும். அரண்மனைக்கு வந்தால் இன்னும் தெரிவிக்கிறேன்” என்று நீரை தர்ப்பணமாகச் செய்யாமல் பக்கத்தில் வழியவிட்டுவிட்டு இருவரும் புறப்பட்டார்கள்.
இருவரும் ஒரே ரதமேறி புறப்பட்டார்கள். போகும் வழியில் “எவ்வாறு பாண்டவர்கள் தப்பித்தார்கள்?” என்று கண்கள் சுருக்கிக் கேட்டார் பீஷ்மர். விதுரர் துரியோதனாதிகள் மற்றும் சகுனி போட்டத் திட்டத்தை தான் அறிந்துகொண்டதைப் பற்றியும் கனகனை அனுப்பி சுரங்கம் வெட்டச் சொன்னதையும் பின்னர் வேடுவச்சியுடன் சேர்த்து அவளது புத்திரர்களுக்கும் தீ வைத்து மாளிகையை கொளுத்திவிட்டு தப்பித்தது பற்றியும் சொன்னார்.
“கங்கைக்கரையில் ஒரு செம்படவ ராஜனை நிறுத்தி இயந்திரங்கள் பூட்டிய கப்பலொன்றில் ஏற்றி கங்கைக்குக் அக்கரையில் விட்டுவிட்டேன். தப்பித்துவிட்டார்கள். உங்கள் கவலையை விடுங்கள்” என்றார் இதழ்களில் புன்னகை தவழும் விதுரர். பீஷ்மரும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டார்.
“எப்பொழுது ஹஸ்தினாபுரம் வருவார்கள்?” விஜாரித்தார் பீஷ்மர்.
“காலம் கனியும் வரை அவர்கள் மறைந்தே வாழ்வார்கள்.” என்று முடித்துக்கொண்டார் விதுரர். அவரை ஆரத்தழுவிக்கொண்டார் பீஷ்மர்.
“அன்பனே! உன்னுடைய மதியூகம் வியக்கவைக்கிறது. யுக்தியாகவும் செயல்பட்டிருக்கிறாய். உன்னை என்ன பாராட்டினாலும் தகும்” என்று வாயார வாழ்த்தி விடைபெற்றார்.
திருதராஷ்டிரனும் சகுனியும் துரியோதனனும் பாண்டவர்களுடைய மரணத்தைக் கொண்டாடினார்கள்.
துரோணர் கிருபர் ஆகியோர் பாண்டவர்களை தர்மம் காத்திருக்கும் என்று உறுதியாக நம்பினார்கள். ஊர் மக்கள் சிலரும் இதுபோலவே நினைத்து நிதானமடைந்து வீடு திரும்பினார்கள்.
**
பீமனின் ஒவ்வொரு அடியும் இடிபோல பூமியில் இறங்கியது. அருகில் இருந்த மரங்களும் கிளைகளில் ஒட்டியிருந்த பழுத்த இலைகளும் கீழே விழும்படி நடுங்கின. ஒவ்வொரு அடிக்கும் எழும் காற்று தரையில் இருந்த பல செடிகளைச் சாய்த்தது. குந்தியை தோளில் ஏற்றியிருந்தான். சகோதரர்கள் அவன் பின்னே வழி தொடர்ந்தார்கள்.
இருளைப் பகல் போல பாவித்து நடந்துகொண்டிருந்தான். கண்களில் வெறி தேங்கியிருந்தது. துரியோதனாதிகள் அந்த க்ஷணம் கையில் கிடைத்தால் அனைவரையும் பரலோகம் அனுப்பியிருப்பான். அவனது நடைக்கு ஈடுகொடுக்க முடியாமல் சகோதரர்கள் தவித்தார்கள். அவனது திமில் போன்ற தோளில் அமர்ந்திருந்த குந்திக்கு மூர்ச்சை உண்டாயிற்று.
ஆறுகள் கடந்தார்கள். மேடு பள்ளங்களைக் கடந்தார்கள். துரியோதனன் ஆட்களில் அகப்பட்டுக்கொள்ளக்கூடாது என்பதே நோக்கம். அந்த இரவில் இருபத்துநான்கு யோசனை தூரம் கடந்துவிட்டார்கள். கொஞ்ச தூரமாக குந்தியும் நடந்துவந்துகொண்டிருந்தாள். அவளுக்கு தாகம் இழுத்தது.
“இனிமேல் ஓர் அடி என்னால் எடுத்துவைக்க முடியாது. மரண தாகமாக இருக்கிறது. திருதராஷ்டிர புத்திரர்கள் என்னை வந்து பிடித்துக்கொள்ளட்டும் பரவாயில்லை. ஏய் பீமா!.. பீமா...” என்று முன்னால் சென்றுகொண்டிருந்தவனைக் கூப்பிட்டாள் குந்தி.
தாயை இந்தக் கோலத்தில் பார்ப்பதற்கு பீமன் வருத்தப்பட்டான். துரியோதனன் மீதான அவனது கோபம் இன்னும் தலைக்கேறியது. பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் கிளையை அதே வேகத்தில் முறித்துத் தூர எறிந்தான். குந்தியும் சகோதரர்களும் அவனின் அந்த தோற்றத்தைக் கண்டு அச்சப்பட்டார்கள். இருள் விலகி கதிரவன் தொடுவானத்தில் தன் அன்றைய பயணத்தைத் துவங்கியிருந்தான். மங்கலான வெளிச்சம் அந்த அத்துவானக் காட்டுக்குள் பரவியிருந்தது.
“இன்னும் சற்று தூரம் செல்வோம். பெரிய மரம் எதாவது தென்பட்டால் இளைப்பாறுவோம். வாருங்கள்..” என்று துளிக்கூட சிரமம் இல்லாமல் குந்தியை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் பீமன். நா வறண்டு போன சகோதரர்கள் அனைவரும் வாய் திறக்காமல் பின் தொடர்ந்தார்கள். பார்த்தன் சுருண்டுவிடுவான் போலவும் நகுலசகதேவர்கள் வாடி வதங்கிப்போயும் யுதிஷ்டிரர் துவண்டும் காணப்பட்டார்கள்.
ஒரு பெரிய ஆலமரம் பல்லாயிரம் கிளைகள் பரப்பி நின்றுகொண்டிருந்தது. குந்திக்கு சந்தோஷம். நகுலசகதேவர்கள் அதன் வேரடிக்கு ஓடினார்கள். யுதிஷ்டரும் அர்ஜுனனும் நடை தளர்ந்து போய் உட்கார்ந்தார்கள். குந்தியும் நடுவில் அமர்ந்துகொண்டாள்.
பீமன் எதையோ உன்னிப்பாக காதுகொடுத்துக் கேட்டான்.
“என்ன பீமா?” என்றார் யுதிஷ்டிரர்.
“அண்ணா! ஸாரங்கள் என்னும் நீர்ப்பறவையின் இனிமையான் கூவும் சப்தம் என் காதில் விழுகிறது. அருகில் ஏதோ நீர்நிலை இருக்கிறது. நான் சென்று நீர் அள்ளி வருகிறேன்”
“ஜாக்கிரதையாக சென்று வாப்பா” என்று அனுப்பினார் தர்மர்.
குரல் வந்த திசையை பிடித்துக்கொண்டு வெகுவேகமாக சென்றான் பீமன். அந்த மரங்களுக்குக்கிடையே ஒரு பெரும் தாமரை பூத்தத் தடாகத்தைக் கண்டு ஆனந்தமடைந்தான். கரையில் அமர்ந்து அள்ளியள்ளிக் குடித்தான். பின்னர் இறங்கி அந்த தடாகமே கலங்குமளவிற்குக் குளித்தான். சகோதரர்களுக்கு ஜலம் எடுப்பதற்காக தோளில் கிடந்த உத்தரீயத்தை அலசிவிட்டு அதை நனைத்து எடுத்துக்கொண்டான். தண்ணீர் போதுமோ போதாதோ என்றெண்ணி தாமரை இலைகளை ஒரு தொண்ணை போல குவித்து நீரை நிரப்பிக்கொண்டு விரைவாக வந்தான்.
அங்கே அவன் கண்ட காட்சி அவனைக் குலைய வைத்தது. பட்டு மஞ்சத்தில் தூங்கிய தாயார் குந்தி அந்த ஆலமர வேரை தலைக்கு வைத்து படுத்திருந்தாள். பக்கத்தில் இவ்வளவு தூரம் நடந்த களைப்பில் சகோதரர்கள் அனைவரும் பிரேதம் போல கிடந்து தூங்கினார்கள். பீமனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
“ராஜ்ஜியம் ஆளும் தகுதியிருந்தும் நாங்கள் இப்படிக் கிடந்து கஷ்டப்படுகிறோம். விதுரரின் புத்தி சாதுர்யத்தால் இந்த உயிரை இழக்காமல் இருக்கிறோம். நாம் ஏன் இப்படிக் காடுகளில் அலையவேண்டும். இப்போதே அவகாசம் கிடைத்தால் துரியோதனாதிகளும் கர்ணனும் சகுனியும் கையில் அகப்பட்டால் க்ஷணப் பொழுதில் யமலோகத்துக்கு அனுப்பிவிடுவேன். ஆனால் தர்மாத்மாவான என் அண்ணன் அப்படி யுத்தத்துக்கு சம்மதிக்கமாட்டாரே”
தனியே புலம்பினான் பீமன். அவனுக்கு துளிக்கூட தூக்கம் வரவில்லை. தண்ணீரில் நனைத்துக்கொண்டு வந்திருந்த உத்தரீயத்தை அந்த மரத்தின் அடிவாரத்தில் வைத்தான். தாமரையில்லை தொண்ணைகளையும் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு கண்களை இமைக்காமல் அமர்ந்திருந்தான்.
[ஜதுக்ருஹபர்வம் முடிந்தது]
அனைவரும் சிரமம் தாங்காமல் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு அடர்ந்த வனம். புதிதான இடம். பீமன் கண் அயராமல் சகோதரர்களும் குந்தியும் எழுவதற்கு காத்திருக்கிறான். தூரத்தில் ஒரு ஆச்சாமரத்தின் மேலிருந்து இரு கண்கள் தூங்கும் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது. கார்காலத்து மேகம் போல கறுப்பாக அது நின்றிருந்தது. அது மனிதன் போலில்லை. பெரிய உருவம். சிவந்த கண்கள். சிவந்த மீசை. சிவந்த தலைமுடி. கோரப்பற்களுடன் விகாரமான ரூபத்தோடிருந்தான். அவனுடைய கழுத்தே மரம் போன்றிருந்தது. கைகள் அவன் ஏறி அமர்ந்திருந்த மரத்தின் இருகிளைகள் அளவிற்கு நீண்டிருந்தது. மனிதர்களின் வாடையை மோப்பம் பிடித்து அங்கே வந்திருந்தான்.
அவன் தான் ஹிடிம்பன். நர மாமிஸம் தின்னும் ராக்ஷசன்.

No comments:

Post a Comment