Monday, March 12, 2018

அர்ஜுன சன்னியாசி



”அப்போது அங்கு வந்தவர் மகிமையுள்ள நாரத மஹரிஷி”
“உம்” என்றான் அர்ஜுனன். வர்க்கை என்ற அந்த அப்சரஸ் கதையைத் தொடர்ந்தாள்.
நாங்கள் ஐவரும் அவரை வலம் வந்து நமஸ்கரித்தோம். பின்னர் வாய் பேசாமல் துயரத்துடன் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நின்றோம்.
“உங்கள் துயரத்திற்கு என்ன காரணம்?” என்று கேட்டார் நாரத மஹரிஷி.
பிராமணனை நாங்கள் சீண்டிப் பார்த்தக் கதையைச் சொன்னோம். பின்னர் அந்த பிராமணன் அளித்த சாபத்தையும் அதன் விமோசனத்தையும் சொன்னோம்.
“தென்சமுத்திரக்கரையில் புண்ணியமானதும் ரம்மியமுமான ஐந்து தீர்த்தங்கள் இருக்கிறது. நீங்கள் அனைவரும் உடனே அங்கே சென்று முதலையாக நீந்துங்கள். பாண்டு புத்திரனான தனஞ்செயன் அங்கு வருவான். அப்போது உங்களுக்கு இந்த சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்கும்” என்று உபாயம் சொல்லி அருளினார்.
இதைச் சொன்னவுடன் நாரதர் ஒரு புகையாக மேலே எழும்பி மறைந்துவிட்டார்.
அவர் வாக்கின் பேரில் நாங்கள் இங்கே வந்து முதலையாய்க் கிடந்தோம். இன்னும் நான்கு பேர் பக்கத்து தீர்த்தங்களில் முதலையாகக் கிடக்கிறார்கள். நீ சென்று அனைவருக்கும் சாப விமோசனம் தர வேண்டும். இது என் வேண்டுகோள்.
அந்த அப்ஸரஸின் பேச்சுக்கிணங்க ஒவ்வொரு தீர்த்தமாக இறங்கி முதலையாக இருந்தவர்களை அழகிய அப்சரஸாக மாற்றினான். அனைவரும் கண்ணைக் கவரும் நெஞ்சை அள்ளும் ஸர்வாலங்கார பூஷிதைகளாக கரையில் ஜொலித்தார்கள்.
அழகுடன் ஜொலித்துக்கொண்டிருந்த அந்த அப்ஸரஸ்களைக் கண்டவுடன் அர்ஜுனனுக்கு சித்ராங்கதையின் ஞாபகம் வந்தது. உடனே மணலூருக்கு ஓடினான். அங்கு சென்று சித்ராங்கதையுடன் சேர்ந்து பப்ருவாகனன் என்ற புத்ரனை உண்டு பண்ணினான். பின்னர் சித்ரவாகனனிடத்தில் சென்றான் அர்ஜுனன்.
“அரசனே! கன்னியாசுக்லமாக பப்ருவாகனனை நீ வாங்கிக்கொள். நான் கடன் நீங்கியவன் ஆவேன்.”
சித்ராங்கதையின் கண்களில் நீர் முட்டியது.
“சித்ராங்கதையே! நீ இங்கேயே இரு.பப்ருவாகனனைப் போஷித்து வா. இந்திரப்பிரஸ்தம் வந்த பிறகு நீ என்னுடன் சேர்ந்திருப்பாய். குந்தி, பீமன், தர்மன் மற்றும் என் சகோதரர்களை நீ அங்கே வந்து பார்க்கலாம். யுதிஷ்டிரர் பூமி முழுவதையும் ஜெயித்து ராஜசூய யாகம் செய்யப்போகிறார். அதற்கு உன் பிதாவும் வருவார்.நீ அவர்களுடன் வந்து சேர். ராஜசூய யாகத்தில் நாம் பார்ப்போம். புத்திரனைக் காப்பாற்று. அவன் தர்மப்படி பூருவம்சத்தை விருத்தி பண்ணுகிற பாண்டவர்களின் புத்திரன். என் பிரிவினால் வருந்தாதே” என்று சொல்லி புறப்பட்டான்.
சித்ராங்கதை கண்களில் நீர் முட்டியது. தனது பிள்ளையுடனும் தகப்பனுடனும் அவனுக்குப் பிரியாவிடை கொடுத்தாள். அர்ஜுனன் அங்கிருந்து கிளம்பி கேரள தேசம் வழியாக கோகர்ண க்ஷேத்திரத்தை நோக்கிச் சென்றான்.
*

மேற்கு சமுத்திர ஓரத்தில் இருந்த க்ஷேத்திரங்களுக்கும் தீர்த்தங்களும் சென்று கடைசியில் பிரபாஸ தீர்த்தம் வந்தடைந்தான். அப்போது அவனுக்கு கதன் என்னும் யாதவன் ஒருவன் நட்பாகி “கிருஷ்ணனுடைய தங்கை சுபத்திரையின் அழகு சொல்லில் அடங்காது.” என்று காதல் நெருப்பு மூட்டிவிட்டுச் சென்றான். அந்த நினைப்பில் அவன் உருகிக்கொண்டிருந்த போது அவளை எப்படி அடையலாம் என்று திட்டம் தீட்டினான்.
கற்பனையில் சன்னியாசி ஆனான். ஜடாமுடியும் கமண்டலக் கையுமாக சன்னியாசி வேஷத்தில் தந்திரமாகக் கிருஷ்ணனுடைய ராஜ கிருஹத்தில் நுழைந்து சுபத்திரையைக் கவர்ந்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டான்.
தலையை மொட்டையடித்துக்கொண்டான். திரிதண்டம் ஏந்தினான். கமண்டலம் ஒரு கையில். அக்ஷமாலையை விரலுக்கிடையில் மோதிரம்போல் சுற்றிக்கொண்டான். சின்னச் சின்னத் தூறலாக ஆரம்பித்த மழை பெரும் மழையாக காற்றோடு சேர்ந்துகொண்டுக் கொட்டியது. அடி பெருத்த பெரும் ஆலமரம் ஒன்று அருகில் இருக்க அதனடியில் நுழைந்துகொண்டான். ஸ்ரீகிருஷ்ணபகவானை மனதில் நினைத்தான்.
அங்கே சத்தியபாமாவுடன் திவ்யசயனத்தில் இருந்த ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தில் புன்னகை அரும்பியது. சத்தியபாமாவுக்கு கிருஷ்ணர் இப்படி திடீரென்று சிரித்தது ஆச்சரியமாக இருந்தது.
“பகவானே! ஏன் சிரித்தீர்? நானும் தெரிந்துகொள்ளலாமா?”
புருஷோத்தமன் வாய் திறக்காமல் தனது திவ்யஞானத்தால் அர்ஜுனன் மனதில் நினைத்துக்கொண்டதை எண்ணி எண்ணி சிரித்தான். சத்யபாமா திரும்பத் திரும்பக் கேட்டு அலுப்புற்று கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
”சத்யபாமா! என் அத்தை மகன் அர்ஜுனன் வியவஸ்தை காரணமாக தீர்த்தயாத்திரை சென்றான். அதை முடித்து திரும்பி வரும் வழியில் சுபத்திரையை மனதில் நினைத்தான். அவளை யதி வேஷம் தரித்து துவாரகைக்கு வந்து அடையலாம் என்று சிந்தித்தான். அந்த சந்தோஷத்தினால் சிரித்தேன். கோபிக்காதே” என்று அவளின் தாவாங்கட்டையைச் செல்லமாகப் பிடித்தான்.

சயனத்திலிருந்து எழுந்தார். சபைக்கு வந்தார்.
“பாண்டு புத்திரனான அர்ஜுனன் பிரபாஸ தீர்த்தம் வந்திருக்கிறார்” என்று ஒற்றர்கள் வந்து மதுசூதனரிடம் சேதி சொன்னார்கள்.
தனது தேரில் புறப்பட்டு அர்ஜுனனைக் காண தனியே சென்றார். புறப்படுவதற்கு முன்னர் சில அரண்மனைச் சேவகர்களைக் கூப்பிட்டு சில கட்டளைகள் கொடுத்துவிட்டு பிரபாஸ தீர்த்தம் சென்றார்.
அர்ஜுனன் சன்னியாச வேஷத்தில் நிற்பதைக் கண்டு சிரித்தார். கிருஷ்ணரை நோக்கி ஓடிவந்தான். இருவரும் ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்துகொண்டார்கள். ஆலமரத்தடியில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். நீ ஏன் தீர்த்த யாத்திரை வந்தாய் என்று அறியாத சிறுவனாக கிருஷ்ணன் கேட்க அர்ஜுனனும் முழுக் கதையையும் சொன்னான்.
பின்னர் இருவரும் ரைவதக பர்வம் என்னுமிடத்திற்கு கிளம்பினார்கள். இங்கு வருவதற்கு முன்னரே கிருஷ்ணன் இட்ட கட்டளையினால் அரண்மனை சேவகர்கள் அந்த மலையை அலங்கரித்து போஜனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தோரணங்களும் நாடக நாட்டியக் கலைஞர்களுமாக ரைவதக பர்வம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் அவர்கள் நாடகம் காட்டினார்கள். சிறு குழுக்களாகப் பிரிந்து நர்த்தனம் ஆடினார்கள். இவைகளின் ஊடே பலவகையான பதார்த்தங்களுடன் விருந்தும் அளிக்கப்பட்டது.
அவர்களுக்கு சம்பாவனைகள் செய்து அனுப்பிவிட்டு கண்ணன் எதிரில் அமர்ந்திருக்க உயர்ந்த மஞ்சத்தில் படுத்துக்கொண்டே தான் பார்த்த க்ஷேத்திரங்களையும் தீர்த்தங்களையும் பற்றி நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தான். சிரித்த முகத்துடன் ஸ்ரீகிருஷ்ணர் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். களைப்பு மேலிட அந்த மஞ்சத்தின் சொகுசினால் கண்கள் சொருக பேசிக்கொண்டிருக்கும் போதே தூங்கிவிட்டான் அர்ஜுனன்.
காலையில் வீணை மீட்டி அர்ஜுனனை துயில் எழுப்பினார்கள். ஒரு குழுவாக நின்றவர்கள் அவன் துதி பாடினார்கள். கிருஷ்ணர் வந்தார். அவருக்கு மரியாதை செய்தான் அர்ஜுனன்.
“நான் இங்கேயே சிலகாலம் வசிக்கலாமா?” என்று அவரிடம் அனுமதி பெற்றான்.
“தாராளமாக..” என்று இருகை விரித்துச் சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர்.
அவனிடம் விடைபெற்றுக்கொண்டு ஸ்ரீகிருஷ்ணர் துவாரகை வந்தடைந்தார்.
[அர்ஜுன வனவாச பர்வம் முடிந்தது]
அர்ஜுனன் கிருஷ்ணன் ஏற்பாடு செய்த வேலைக்காரர்களால் சௌக்கியமாக ரைவதக பர்வத்தில் வசித்துவந்தான். ஒருநாள் அந்த பர்வதத்தில் கிரிபூஜை என்னும் திருவிழா நடைபெற்றது. வ்ருஷ்ணிகுலத்தவர்களுக்கு பிரதான பூஜை. பொன்மயமான தேர்களில் ஏறி குடும்பம் குடும்பமாக அந்த மலையில் யாதவர்கள் குவிந்தார்கள். ஆங்காங்கே மேடையமைத்து நர்த்தனம் ஆடினார்கள். சிறு சிறு மண்டபம் போன்ற இடங்களில் சங்கீதக் கச்சேரி நடந்தது. நாடகம் ஒரு பக்கம் விடிய விடிய போய்க்கொண்டிருந்தது.
பலராமர் சோமரஸம் பருகிக் களித்திருந்தார். பாடல் இசைக்கும் கந்தர்வர்கள் புடைசூழ ரேவதியுடன் அங்குமிங்கும் சென்றுகொண்டிருந்தார். யாதவ அரசன் உக்கிரசேனன் பல பாடல் மங்கையருடன் உலாவினான். பிரத்யும்னன், சாம்பன் ஆகியோர் உயர்ந்த வஸ்திர்ங்கள் தரித்தும் கழுத்தில் மலர் மாலைகளை அணிந்துகொண்டும் கள்ளுண்டு மயங்கித் திரிந்தனர். அக்ரூரர், ஸாத்யகி உள்ளிட்ட அனேக யாதவ சிரேஷ்டர்கள் பெண்களால் சூழப்பட்டும் ஆடலும் பாடலுமாக ரைவதக பர்வதத்தில் சுற்றி சந்தோஷமாக இருந்தார்கள்.


ஸ்ரீகிருஷ்ணர் தனது ஸ்திரீகளுடன் பொன்னால் ஆன ரத்தினங்கள் இழைக்கப்பட்ட ரதத்தில் வந்திறங்கினார். அங்கே வந்திருந்த பிராமணர்களுக்கு தானங்கள் பல அளித்தார். கபட சன்னியாசி வேஷத்தில் திரிந்த அர்ஜுனன் அவரை கடைக்கண்ணால் பார்த்து விஷமமாகச் சிரித்தான். அதைப் புரிந்துகொண்ட கிருஷ்ணர் தனது ஸ்திரீகளை விட்டுவிட்டு அவனை ஒதுக்கிக்கொண்டு நகர்ந்தார்.
அவர்கள் இருவரும் கூட்டத்திலிருந்து விலகிச் சென்றுகொண்டிருக்கையில் தோழிகளுடன் சுபத்திரையைப் பார்த்தார்கள். அர்ஜுனன் மனதைப் பறிகொடுத்தான். அவளைக் கண்ட கண்கள் வேறு எதையும் பார்க்காமல் நிலைகுத்திக் கிடந்தன. ஸ்ரீகிருஷ்ணர் அவனது இடுப்பில் ஒரு முறை முட்டியால் இடித்து தன் பக்கம் திருப்பினார். சன்னியாசி வேஷத்தில் இருந்த அர்ஜுனன் அவரின் முகம் பார்க்க முடியாமல் வெட்கப்பட்டான்.
“அர்ஜுனா! இதென்ன கூடாத காரியமாக இருக்கிறது. காட்டிலிருக்கும் ஜிதேந்திரியனுக்கு சிற்றின்பத்தில் மனம் லயிக்கிறதே” என்று கிண்டலடித்தான் கிருஷ்ணன்.
தலையை தொங்கப்போட்டுக்கொண்டான் அர்ஜுனன்.
“இவள் என் உடன் பிறந்தவள். சுபத்திரை. என் பிதாவின் அன்பு மகள். உனக்கு விருப்பமிருந்தால் சொல், நான் என் பிதாவிடம் உனக்காக பெண் கேட்கிறேன்” சீண்டினான் கிருஷ்ணன்.
“வஸுதேவருடைய பெண். வாஸுதேவனின் சகோதரி. இவள் அழகில் மயங்காதவர் இப்பூவுலகில் இருக்கமுடியுமா? இவளை நான் அடைய என்ன செய்யவேண்டும். ஜனார்த்தனரே! உபாயம் சொல்லும்” கைகூப்பினான் அர்ஜுனன். கூட்டத்திலிருப்பவர்கள் யாரேனும் ஒரு சன்னியாசி தன்னிடம் கை குவிப்பதை பார்த்துவிடப்போகிறார்களே என்று ஒரு மரத்தின் பின்னால் அவனை இழுத்துக்கொண்டு போனான் கிருஷ்ணன்.
“அர்ஜுனா! ஸ்வயம்வரம்தான் க்ஷத்ரியர்களுக்கு தர்மமான விவாஹம். பலவந்தமாக கவர்ந்துசெல்வதும் கூட க்ஷத்ரியர்களுக்கு தர்மம்தான். காலம் கனியும் வரை காத்திரு. பின்னர் என் சகோதரியை பலவந்தமாக கவர்ந்து சென்று விடு. ஸ்வயம்வரம் வைத்தால் அவள் உன்னை வரிப்பாளோ மாட்டாளோ” என்று சொல்லி வெடியாய்ச் சிரித்தான் ஸ்ரீகிருஷ்ணன். அர்ஜுனனை கண்டமேனிக்கு ஏற்றிவிட்டான்.
தனக்கு அனுக்கமான சில தூதர்களை அழைத்தான் ஸ்ரீகிருஷ்ணன். இந்திரபிரஸ்தத்தில் இருக்கும் தர்மருக்கும் குந்திக்கும் இதுவிஷயமாகச் சொல்லி அனுப்பினான். அதிசீக்கிரம் சென்று அனுமதி வாங்கிக்கொண்டு திரும்பவும் வந்து விபரம் சொன்னார்கள். கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நிம்மதியாக இருந்தது. அர்ஜுனனை அழைத்து இக்காரியத்தை எவ்விதம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை செய்து விட்டு தனது தூதர்களுடன் துவாரைகைக்குத் திரும்பினான் ஸ்ரீகிருஷ்ணன்.
நாள் குறித்த்க்கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார் கிருஷ்ணன். அந்த நாளில் ரைவதக பர்வதத்திலிருந்து இறங்கினான் அர்ஜுனன். துவாரை நோக்கி நடைப்பயணமாகச் சென்றான். நகரின் சமீபத்தில் எழில் கொஞ்சும் சோலையில் தங்கினான். ரைவத மலையின் கிரிபூஜை உற்சவம் முடிந்து யாதவர்கள் அனைவரும் தத்தம் இல்லம் திரும்பியிருந்தார்கள்.
சுபத்திரையின் நினைவில் ஒரு கற்பாறையின் மேல் அமர்ந்திருந்தான். அவளது நடையும் பேச்சும் வனப்பும் அவனை என்னவோ செய்தது. சிந்தையில் தோன்றி தோன்றி மறைந்தாள் சுபத்திரை. அவள் நினைவால் அவன் அனுதினமும் வாடினான். கற்பனையில் அவளருகே நின்று அவளோடு பேசுவது போலவும் ஆலிங்கனம் செய்துகொள்வது போலவும் நினைத்துக்கொண்டு சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தான்.
குதிரையின் குளம்பொலிக் கேட்டது. உஷாரானான். அப்போது யாதவ வீரர்கள் சிலர் பலராமர் தலைமையில் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள்.
என்ன செய்வது? என்று மனது அடித்துக்கொள்ள அவர்கள் அவனிடம் வரும்வரை அமைதியாக கற்பாறையில் தவம் செய்வது போல அமர்ந்துவிட்டான் அர்ஜுனன்.
பலராமர் குதிரையிலிருந்து குதித்து இறங்கினார். உடனே பப்ரு, ஸாம்பன், பிரத்யும்னன், கதன், ஸாரணன், விதூரதன், ஹரிதன் என்று யாதவ வீரர்களும் இறங்கி அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.
கண்களைத் திறப்பதா வேண்டாமா என்ற யோசனையில் கற்பாறையின் மேல் கற்சிலையாய் இருந்தான் அர்ஜுனன்.

No comments:

Post a Comment