Friday, March 9, 2018

ஆணி மாண்டவ்யர்


மாண்டவ்யர் என்ற பிராமணர் ஒரு தீர்த்தயாத்திரை விரும்பி. எல்லாத் தர்மங்களும் தெரிந்தவர். ஸத்யமும் தவமும் அவருக்கு இரு கண்கள். தேசந்தோறும் இருக்கும் கிராமங்களில் தங்கி தீர்த்தயாத்திரை செய்துவந்தார். அப்படியிருக்கும்போது ஒரு புண்ணிய தீர்த்தத்தின் அருகில் ஆஸ்ரமம் கட்டிக்கொண்டு வசிக்கலானார்.

ஒரு நாள் மௌன விரதம். ஆஸ்ரம வாசலில் இருக்கும் அரசமரத்தின் அடியில் கையிரண்டையும் தலைக்குமேலே கூப்பியவண்ணம் தூக்கிக்கொண்டு கண்களை மூடி தவமாய் நின்றிருந்தார். அப்படி தவத்திலிருக்கும்போது பொருட்களை கொள்ளையடித்து மூட்டையாய்க் கட்டி தூக்கிக்கொண்டு திருடர்கள் சிலர் ஓடிவந்தார்கள். தூரத்தில் ராஜாங்க காவலாளிகள் துரத்தியபடி வந்தார்கள்.
திருடிய பொருட்களோடு அந்தக் கொள்ளையர்கள் ஆஸ்ரமத்தின் உள்ளே அடைக்கலம் புகுந்தார்கள். குதிரையில் துரத்திக்கொண்டு வந்த சேனையாட்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். மஹரிஷி இன்னமும் தவம் கலையாமல் நின்றிருந்தார். சுற்றும்முற்றும் பார்த்த அவர்கள் மாண்டவ்ய மஹரிஷியைப் பார்த்து....
“பிராம்மணோத்தமரே! கொள்ளையர்கள் எங்கே சென்றார்கள்? நீங்கள் பார்த்தீர்களா?” என்று கேட்டார்கள். காவலாளிகள் நாலாபுறமும் கண்களால் அலைந்துபார்த்துக்கொண்டிருந்தார்கள். மௌனவிரதத்திலிருந்த மாண்டவ்ய மஹரிஷி பதிலேதும் சொல்லாமல் தவத்தில் நின்றிருந்தார்.
இரண்டு காவலர்கள் ஈட்டியோடு ஆஸ்ரமத்திற்குள் சென்று தேடினர். கொள்ளையர்கள் அங்கே ஒளிந்திருந்தார்கள். அனைவரும் சேர்ந்து கொள்ளையர்களைக் கைது செய்து நகரம் அழைத்துச்சென்றார்கள். அப்போது அங்கிருந்த சில காவலாளிகளுக்கு மாண்டவ்யர் மேலே சந்தேகம் பிறந்தது. மாண்டவ்யர் கொள்ளையர்களின் கூட்டாளியோ என்று நினைத்துக்கொண்டு கொள்ளையர்களோடு சேர்த்து அவரையும் கைது செய்து அரசனிடம் கொண்டு சென்றார்கள்.
அரசன் கொதிப்படைந்தான். அந்தத் திருடர்களுடன் சேர்த்து மாண்டவ்யரையும் கழுவிலேற்ற உத்தரவிட்டான். காவலாளிகளின் மடத்தனத்தால் அவரையும் சூலத்தில் ஏற்றினார்கள். பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சூலங்களில் ஏற்றப்பட்ட திருடர்கள் உடனே உயிரிழக்க மாண்டவ்யர் மட்டும் ஆகாரமில்லாமல் உயிரையும் விடாமல் கழுவிலேயே சூலம் சொருகிய நிலையில் தவமியிற்றி நின்றிருந்தார். ரிஷிகள் அநேகம் பேர் சூழ்ந்துகொண்டு இப்படியிருப்பவரிடம் இரக்கம் கொண்டார்கள்.
“பிராமணரே! நீர் இந்த சூலத்தில் ஏற்றப்படுவதற்கு என்ன பாபம் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள்.
“நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. யாருக்கு தீங்கும் ஏற்படுத்தவில்லை” என்று பதிலுரைத்தார்.
இன்னும் கொஞ்ச காலம் கழிந்தது. முன்னர் திருடனை துரத்திக்கொண்டு வந்த அதே காவலாளிகள் மாண்டவ்யரின் ஆஸ்ரமம் வழியாக வந்தார்கள். சூலம் நட்டு அதில் கழுவில் ஏற்றிய மாண்டவ்யர் இன்னமும் உயிரோடு இருப்பதைப் பார்த்தார்கள். அந்த ஆணி சொருகிய நிலையிலும் தவமியற்றும் அவரைப் பார்த்ததும் பயந்து அரசனிடம் ஓடினார்கள்.
ராஜாவுக்கு தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று தோன்றியது. அவரும் மாண்டவ்யரின் இடத்திற்கு விரைந்தார்.
“நான் உங்களுக்கு அநீதி இழைத்துவிட்டேன். தவறு செய்துவிட்டேன். நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும்” என்று அவரை ஏற்றியிருக்கும் கழுவின் முன் மண்டியிட்டான். அவரும் அவ்வரசனை மன்னித்தார்.
“இவரை கழுவிலிருந்து இறக்குங்கள்” என்று உத்தரவிட்டான். சூலத்தைப் பெயர்த்து நான்கைந்து பேர்களாய் அவரை இறக்கி அந்த சூலத்தை அவரது உடலிலிருந்து உருவினார்கள். கழுத்துக்கும் விலா எலும்புக்கும் நடுவில் சிக்கியிருந்த இரும்பை அகற்ற இயலவில்லை. அதனால் அதை அடியில் வெட்டிவிட்டான் அந்த அரசன்.
அந்த சூலத்துண்டுடன் அவர் எங்கும் சஞ்சரித்தார். ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்வதற்கு மலர் பறித்து வைத்திருக்கும் புஷ்பக்குடலையை அதில் மாட்டிக்கொண்டு பகவானையே நினைத்துத் திரிந்தார். அந்த சூலம் அவருடனேயே ஒட்டி இருந்ததால் அவரை ஆணி மாண்டவ்யர் என்று அழைத்தார்கள்.
அவர் தர்மதேவதையின் க்ரஹத்திற்கு சென்றார். அங்கே உயர்ந்த ஆசனத்தில் தர்மதேவதை அமர்ந்திருந்தான்.
“ஏ தர்மதேவதையே! நான் இப்படிப்பட்ட கஷ்டத்தை அனுபவிக்க அறியாமல் செய்த தீவினை என்ன? உடனே எனக்குச் சொல்” என்று கடுகடுவென்று கேட்டார். அவர் பிரம்மஞானி. தர்மதேவதை தன் வீட்டின் படியேறிக் கேட்ட ஆணி மாண்டவ்யரிடம்
“தவசிரேஷ்டரே! நீங்கள் சிறு வயதில் தட்டாணைப் பிடித்து அதன் வாலில் எஃகுவைக் கட்டி இம்சித்தீர். ஆகையால் இதை அனுபவிக்கிறீர். ” என்றான்.
“எந்த வயதில்?”
“நீர் குழந்தைப் பருவத்தில் செய்தது”
“பன்னிரெண்டு வயது வரை எதைச் செய்தாலும் அதனால் பாபம் வந்து சேராது.”
“ஏன்?”
“அந்தப் பிராயம் வரை சாஸ்திரங்களை அவன் அறியான். உபதேசங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கிடையாது. சிறிய குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? பிராம்மணவதம் மிகப் பெரியது”
தர்மதேவதை ஆணி மாண்டவ்யரின் குரலுக்கு நடுங்கினான். பெரிய தவறு இழைத்துவிட்டோம் என்று இப்போது வருந்தினான்.
“நீ மனுஷ்ய ஜென்மம் எடுப்பாய்” என்று சாபமிட்டார். பின்னர் பாபம் வந்து சேர்வதற்கு ஒரு வரம்பு ஏற்படுத்தினார்.
:இதுமுதல் இந்த உலகத்தில் தான் செய்த வினைக்கு ஒரு பயன் உண்டாவதற்கு ஒரு வயது வரம்பு சொல்கிறேன். பதினான்கு பிராயங்கள் வரை பாபம் வந்து சேராது”
தர்மதேவதை அதனால் விதுரர் வடிவமாக மனுஷ்ய ஜென்மம் எடுத்தார். தர்மசாஸ்திரத்திலும் ராஜநீதியிலும் சிறந்து விளங்கினார் விதுரர். எல்லோருக்கும் நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபட்டார்.
**
திருதராஷ்டிரன், பாண்டு மறும் விதுரர் பிறந்ததும் நாடு செழித்தது. பிரஜைகள் கவலைகள் இன்றி சந்தோஷமாக இருந்தனர். தர்மம் தழைத்தோங்கியது. ஏழைகள் யாருமில்லை. விதவைகள் யாருமில்லை. ஹஸ்தினாபுரம் மேகக்கூட்டம் போன்ற கோபுரங்களோடும் மாட மாளிகைகளோடும் அரண்மனைகள் நெருங்கியிருந்ததால் தேவேலோகம் போல காட்சியளித்தது. அந்த ராஜ்ஜியத்தில் பிஷ்மரால் ஏற்படுத்தப்பட்ட தர்மசக்கரம் சுழன்றுகொண்டே இருந்தது. மூவரையும் தனது புத்திரர்களைப் போல பார்த்துக்கொண்டார்.
பிரம்மசாரிகளாக அத்தியயனஞ் செய்துவைக்கப்பட்டார்கள். சாஸ்திரங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. சரீரப் பயிற்சியில் தேர்ச்சியடைந்தார்கள். யௌவனப் பருவம் அடைந்தார்கள். தனுர் வேதத்திலும் வேதத்திலும் கதாயுத்தத்திலும் கத்தி கேடயங்களிலும் யானைப் பழக்கத்திலும் ராஜ நீதி சாஸ்திரங்களிலும் கரைகண்டவராயினர்.
திருதராஷ்டிரன் வேதாத்தியயனத்தில் ஊக்கம் நிறைந்தவன். ராஜநீதி சாஸ்திரத்தில் கரைகண்டவனானான். யானை பலம் நிரம்பியவன். தனுர்வேதத்திலும் குதிரையேறுவதிலும் கதாயுத்தத்திலும் கத்திகேடகங்களிலும் யானை பழக்கத்திலும் பலவகையான அஸ்திரசஸ்திரங்களிலும் நீதி சாஸ்திரம் மற்றும் ராஜநீதிகளிலும் கரைகண்டவன் பாண்டு. தாஸியிடம் பிறந்த விதுரர் பால்ய வயதில் இருக்கும்போதே எல்லா தர்மங்களையும் உபதேசிக்கும் மந்திரியாக திருதராஷ்டிரனுக்கு பீஷ்மரால் நியமிக்கப்பட்டார்.
தேசங்களில் அறிஞர்களால் “அவனியில் சிறந்தவை எவை?” என்று பேசப்பட்டவைகளில் “வீரப்புத்திரர்களைப் பெற்றதில் அம்பிகா அம்பாலிகா இருவரும், தேசங்களுக்குள் குருஜாங்கலதேசமும், தர்மம் தெரிந்தவர்களுள் பீஷ்மரும், நகரங்களில் ஹஸ்தினாபுரமும்” சிறந்தவையாக இருந்தது.
கண்ணில்லாமல் பிறந்ததனால் திருதராஷ்டிரனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்ய இயலவில்லை. தாஸிக்குப் பிறந்ததனால் விதுரருக்கும் மணிமுடி தரிக்கும் தகுதியில்லை. அதனால் பாண்டு ராஜாவானான்.

No comments:

Post a Comment