துருபதன் இப்போது வேக வேகமாகச் செயல்பட்டான். பயத்தில் உடம்பெங்கும் வேர்த்திருந்தது. கழுத்தில் மாலை அணிந்து கொண்ட சிறுபெண்ணை பெற்ற தந்தையாக இருந்தாலும் பீஷ்ம அபவாதம் வந்துவிடும் என்று பயந்துகொண்டு சிகண்டினியை அரண்மனையை விட்டுத் துரத்திவிட்டான்.
தந்தையால் அனாதையாக்கப்பட்ட அந்த சிறுபெண் தேசமெங்கும் சுற்றித் திரிந்தாள். பல தேசங்களைக் கடந்து கடைசியில் கங்கோத்பத்திக்கு வந்து சேர்ந்தாள். இயற்கை எழில் கொஞ்சும் அந்த இடத்தில் ஒரு ரிஷி தவம் செய்துகொண்டிருந்தார். சுற்றிலும் ரிஷிக்கூட்டம். தாடியும் ஜடாமுடியுமாக நிறைய தலை தென்பட்டது. அவர்களுக்கு நடுவில் கடும் தவத்தில் இருந்தவரை யாரென்று வேறொரு ரிஷியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.
“இவர் இஷீகர். பிரம்மரிஷி. தபோபலம் மிக்கவர்” என்று சொன்னார் ஒரு ரிஷி.
அப்போதிலிருந்து அவருக்கு சிஸ்ருஷைகளை செய்ய ஆரம்பித்தாள். அவளும் ரிஷிகளைப் போல மரவுரி தரித்துக்கொண்டு நியமநிஷ்டைகளோடு கங்கோத்பத்தியிலேயே அவர்களுடன் தங்கிவிட்டாள்.
காலம் உருண்டது. அவளது சிஸ்ருஷைகளில் மனம் மகிழ்ந்த இஷீகர் அவளிடம் “பெண்ணே! கங்கை உற்பத்தியாகும் இவ்விடத்தில் விபஜனம் என்று ஒரு உத்ஸவம் வரப்போகிறது. இதில் பங்குபெருவதற்கு தும்புரு என்னும் கந்தர்வராஜன் வருவான். மன்மத ஸ்வரூபீ. அவனை சந்தோஷப்படுத்த முயற்சி செய்.”
“என்ன செய்ய வேண்டும்?”
“அவனுக்கு செம்மையாக பணிவிடை செய். அவன் உனக்கு நன்மை செய்வான்” என்றார் இஷீகர்.
விபஜன உத்ஸவம். கங்கை உற்பத்தி ஸ்தானத்தில் கந்தர்வர்களின் கூட்டம் ஆடிப்பாடி மகிழ்ந்தது. தும்புருவின் பாடல் கந்தர்வகானம் என்பதற்குச் சான்றாக விளங்கியது. சௌந்தர்யம் ததும்பும் பெண்களும் மிகவும் அழகான ஆண்களும் கந்தர்வர்களுள் மிகுதியாக இருந்தனர். சந்தோஷம் மட்டுமே வாழ்க்கை என்று குதூகலமாக இருந்தது. சிகண்டினி தும்புருவுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தாள்.
உத்ஸவத்தின் இறுதியில் இரு கந்தர்வர்கள் சிகண்டினியை ஒரு மரத்தின் மறைவில் சந்தித்தார்கள். சிகண்டினி பார்வையைக் கேள்வியாக்கினாள்.
“நீ மிகவும் அழகாக இருக்கிறாய்” என்று ஒரு கந்தர்வன் முன்னே வந்தான்.
தலையைக் குனிந்து நின்ற சிகண்டினி வாய் திறக்காமல் நின்றாள்.
“என் புருஷ ரூபத்தை உனக்குத் தருகிறேன். உன் ஸ்திரீ ரூபத்தை எனக்குத் தருவாயா?” என்று கேட்டான்.
சிகண்டினி தனது தந்தையால் விரட்டியடிக்கப்பட்ட நிகழ்ச்சியை ஒரு கணம் நினைத்துப்பார்த்தாள். பெண்ணாக இருந்ததனால் பீஷ்மரை எதிர்க்க இயலாது போய்விடும் என்ற பயத்தில் தன்னை விரட்டிவிட்டார் என்று மனதுக்குள் பொங்கினாள். சிறிது நேரம் கழிந்தது.
“சரி” என்றாள் சிகண்டினி.
உடனே அந்த கந்தர்வன் சிகண்டினியின் பெண் ரூபத்தை வாங்க்கிக்கொண்டு அழகிய ஸ்திரீயானான். அவனது புருஷ ரூபத்தை வாங்கிக்கொண்ட சிகண்டினி புஜபலம் மிக்க அழகான சிகண்டி ஆனாள்.
சிகண்டிக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. தன்னிடம் இருந்து பெண் ஸ்வரூபம் வாங்கிக்கொண்டு சென்ற அந்த கந்தர்வனும் மகிழ்வதைக் கண்டு சந்தோஷமடைந்தான். பின்னர் அஸ்திரசஸ்திர வித்தைகளைத் தெரிந்துகொண்டுதான் பாஞ்சாலம் செல்ல வேண்டும் என்று உறுதிபூண்டான்.
அங்கிருந்து இன்னும் மேலே புத்புதகம் என்ற இடத்திற்கு சென்றான். தேவர்களின் நடமாட்டம் ஜாஸ்தியாக இருக்கும் இடம் அது. அங்கு வருபவர்களிடம் தேவலோகத்து அஸ்திரங்களை அப்யஸித்தான். தனது வீரதீர பராக்கிரமங்களை வளர்த்துக்கொண்டு பாஞ்சால தேசம் வந்தடைந்தான்.
அரண்மனை வாயிற்காப்போனுக்கு அடையாளம் தெரியாமல் தடுத்தான்.
“வழியை விடு! நான் சிகண்டினி. ஆணாக திரும்பியிருக்கிறேன்”என்று அவனது வழிமறித்த வேலைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான். அடையாளம் தெரியாமல் முழித்த துருபதனிடம் இதுவரை நடந்தது என்ன என்பதை விளக்கினான்.
பெருமூச்சோடு எழுந்து நின்ற துருபதனுக்கு சிகண்டி சொல்வது அனைத்தும் வியப்பாக இருந்தது. ஒரு பெண் ஆண் உரு எடுக்க முடியுமா? இதென்ன சித்து வேலையா? என்று அவனுக்கு சந்தேகம் இருந்தது.
தோளில் தாங்கியிருந்த வில்லை எடுத்து பாணம் ஒன்றைத் தொடுத்தான். அம்பெய்த போது அது அரண்மனை வாசலில் இருந்த ஒரு மரத்தின் கிளையை ஒடித்து விண்ணில் ஏறியது.
குனிந்து துருபதனின் காலைத் தொட்டுக் கும்பிட்டான்.
“பிதாவே! இனி நீர் பீஷ்மரிடம் பயம் கொள்ள வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றான் சிகண்டி.
துருபதன் தோளை உயர்த்தி நிமிர்ந்தான்.
**
அங்கே ஹஸ்தினாபுரத்தில் அம்பிகை அம்பாலிகை இருவருடனும் விசித்திரவீரியன் சுகித்துக்கொண்டிருந்தான். சகோதரிகள் இருவரும் ஒற்றுமையுடன் விசித்திரவீரியனைப் பூஜித்தார்கள். அரண்மனையிலிருந்து இல்லற சுகங்களை அனுபவிப்பது ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோளாக இருந்தான். பீஷ்மர் ராஜாங்க காரியங்களை பார்த்துக்கொண்டார்.
ஏழு வருட காலங்கள் அம்பிகை அம்பாலிகை இருவரிடமும் விசித்திரவீரியன் ரமித்துக்கடந்தான். புத்ரோத்பத்தி செய்யும் நிலையில் அவன் இல்லை. கடைசியில் க்ஷயரோகம் (காசநோய்) அவனை பிடித்துக்கொண்டது. அரண்மனை வைத்தியர்கள் பலர் அவனை சூழ்ந்து பல நாட்கள் வைத்தியம் செய்தார்கள். கடைசியில் சிகிச்சை பலன் இன்றி ஒரு நாள் யமலோகம் அடைந்துவிட்டான். கங்காபுத்ரர் பீஷ்மர் அவனுக்கும் பிரேத காரியங்களைச் செய்துமுடித்தார். தனக்குப் பிறந்த இரு பிள்ளைகளையும் பறிகொடுத்த சத்யவதி சொல்லொனாத் துயரில் மூழ்கினாள். செம்படவனின் நோக்கம் நிறைவேறாமல் போனது.
மருமகள் இருவரும் தங்களது பர்த்தா இறந்துபோனதை எண்ணியெண்ணி அழுதார்கள். அரண்மனையே இருளடைந்து ஒரு சில மூலைகளில் ஒன்றிரண்டு சோகையாக எரியும் தீப்பந்தங்கங்களால் சோகத்தை உணர்த்தியது.
பீஷ்னரை தனியே அழைத்துப் போனாள் சத்தியவதி.
“புருஷ ஸ்ரேஷ்டனே! உனது சகோதரர்கள் இருவருமே சந்ததியில்லாமல் மிக இளமையிலேயே ஸ்வர்க்கம் சென்றுவிட்டார்கள். வாரிசு இல்லாமல் தேசம் திண்டாடுகிறது. க்ஷத்ரியர்களின் சிம்மமே! இப்போது உன்னிடத்தில் நான் ஒரு காரியம் ஒப்படைக்கப்போகிறேன். மறுப்பேதும் சொல்லாமல் நீ அதை செய்துமுடிக்கவேண்டும்”
வெளியே இருள் கரைந்துகொண்டிருந்தது. இருவருக்கும் தூக்கம் வரவில்லை. பல தர்மநியாயங்களைப் பற்றி அரண்மனை மண்டபத்தில் அமர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள்.
“உன் சகோதரனின் பாரியைகளான இந்த காசி தேசத்து பெண்கள் இருவரும் யௌவனம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். சௌந்தர்யம் ததும்பும் புத்ரர்களை உற்பத்தி செய்ய விருப்பப்படுகிறார்கள். நீ அவர்களுடன் சேர்ந்து புத்ரோத்பத்தி செய்வாயாக. இது நமது தேசத்திற்கும் முக்கியமான ஒன்று” என்றாள் சத்யவதி.
பீஷ்மர் ஒன்றுமே பேசாமல் சாளரம் வழியாக வெளி இருட்டை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார். சத்யவதி பீஷ்மர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதில் ஆர்வமாக இருந்தாள்.
”தாயே! என்னை நிர்பந்தப்படுத்தாதீர்கள். சூரியன் ஒளியை இழக்கலாம். வாயு தனது ஸ்பரிச குணத்தை இழக்கலாம். நீர் தனது ரஸத்தை இழக்கலாம். பூமி தன் மணத்தை இழக்கலாம். அக்னி உஷ்ணத்தை இழக்கலாம். ஆகாயம் சத்தத்தை விடலாம். சந்திர கிரணங்களின் குளிர்ச்சி விடலாம். இந்திரன் தன் சக்தியை இழக்கலாம். தர்மதேவதை தர்மத்தை விட்டாலும் விடுவர். ஆனால் நான் ஸத்தியம் தவறமாட்டேன். என்னை நெருக்காதே!”
கையிரண்டையும் அகல விரித்து பீஷ்மர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். சத்தியவதி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள். தேசத்தைக் காப்பதற்கு சந்ததி வேண்டும் என்கிற நெருக்குதல் அவளுக்கு இருந்தது. ராஜமாதா என்ன செய்யப்போகிறாள் என்று ஒரு பெரிய தேசமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
“அழியாத பராக்கிரமம் உள்ளவனே! ஸத்தியம் தவறமாட்டாய் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் ஆபத்கால தர்மம் என்று ஒன்று உள்ளது. நம்முடைய குலத்தின் தொடர்ச்சி வேண்டும். தர்மம் கெடாமல் நம் சுற்ற்த்தார் சந்தோஷிக்கும்படியான காரியத்தை நீ செய்யவேண்டும்”
கைகூப்பி வேண்டிக்கொண்டாள் சத்தியவதி.
பெரிய இக்கட்டில் இருக்கிறோம் என்று உணர்ந்தார் பீஷ்மர். தர்மங்கள் பல அறிந்தவர். சாளரத்தின் வழியே வெளியே உஷத்காலத்தின் தொடக்கமாக அடிவானத்திலிருந்து வெளிச்சம் புறப்பட்டிருந்தது. அவருக்கும் ஒரு உத்தி தோன்றியது.
“அரசியே! க்ஷத்ரியன் ஸத்தியம் தவறுவது தர்மசாஸ்திரங்களில் அங்கீகரிக்கப்படவில்லை. சந்தனுவின் சந்ததி அழிந்து போகவும் விடமாட்டேன். ஆபத்தர்மமும் ராஜநீதியும் அடங்கிய ஒரு புராதன க்ஷத்ரிய தர்மத்தை உங்களுக்குச் சொல்வேன். அதனை நீங்கள் கேட்டு ஒரு முடிவுக்கு வரலாம்” என்றார்.
வெளியே விடிந்திருந்தது.
**
பீஷ்மர் கதை சொல்லத் தொடங்கினார்.
”ஹேஹயதேசத்தரசன் கார்த்தவீரியார்ச்சுனன் பரசுராமருடைய பிதாவை வதம் செய்தான். பரசுராமர் பெருங் கோபம் அடைந்தார். அவரது கோடலியால் கார்த்தவீரியார்ச்சுனனின் ஆயிரம் கைகளையும் அறுத்தெறிந்தார். க்ஷத்ரிய வம்சத்தையே பூண்டோடு அழிக்கும் பொருட்டு ஒற்றைத் தேராளியாக தேசங்கள் எங்கும் சுற்றினார் பரசுராமர்.
கண்ணில் படும் க்ஷத்திரியர்கள் அனைவரையும் கொன்றொழித்தார். இதுபோல இருபத்தியோரு தலைமுறை க்ஷத்திரியர்களை ஒழித்துக்கட்டினார். அப்போது பூமியில் க்ஷத்திரியர்களே இல்லாமல் அழிக்கப்பட்டனர். க்ஷத்ரிய ஸ்திரீகள் அனைவரும் வேதங்களில் கரைகண்ட பிராமணர்களுடன் சேர்ந்து புத்ரோத்பத்தி செய்துகொண்டார்கள்.”
சத்யவதி விழிகளை அகலத் திறந்துகொண்டாள். பீஷ்மர் கடைசியாகச் சொன்ன வரிகளில் ஆச்சரியமடைந்தாள். சலனமேயில்லாமல் பீஷ்மர் தொடர்ந்தார்.
“கல்மாஷபாதனுடைய பாரியையான மதயந்திக்கு வசிஷ்டரால் புத்திரர்கள் பிறந்தார்கள். க்ஷத்ரிய ஸ்திரீகள் பிராமணர்களுடன் கூடி புத்திரர்கள் அடைவது புராதன பழக்கம். இதன்பின்னர் க்ஷத்ரியஜாதி பெரிதும் அபிவிருத்தியடைய ஆரம்பித்தது”
சத்யவதிக்கு எங்கோ ஒளி தெரிந்தது.
“தாயே! தீர்க்கதமஸ் என்னும் ரிஷியின் உபாக்யானம் சொல்கிறேன். ஆபத்தர்மம் அடங்கிய கதை. இதிலிருந்து நீங்கள் ஒரு உபாயம் தேடிக்கொள்ளலாம்” என்று ஆரம்பித்தார்.
உசத்யர் என்று கியாதி பெற்ற ஞானமுள்ள ரிஷியொருவர் இருந்தார். அவரது கனிஷ்ட சகோதரர் தேவபுரோஹிதரான ப்ருஹஸ்பதி. உசத்யரின் பாரியை மமதை கர்ப்பமடைந்திருந்தாள். ப்ருஹஸ்பதி அவள் மேல் ஆசை கொண்டார். ஆறுமாத கால கர்ப்பமாக இருந்த மமதையின் வயிற்றிலிருந்து அந்த ரிஷிகுமாரன் ”இந்த கர்ப்பத்தில் இருவர் இனிமேல் வசிக்க இடமில்லை” என்று ப்ருஹஸ்பதியைத் தடுத்தான். அவரின் வீரியம் வீணாகப் போயிற்று. அப்போது ப்ருஹஸ்பதி கர்ப்பத்திலிருந்த அந்த ரிஷிகுமாரனுக்கு “நீ குருடனாகப் பிறக்கக்கடவாய்” என்று சாபமிட்டார்.
குருடனாகப் பிறந்தவர் தீர்க்கதமஸ். அவர் ப்ரத்வேஷி என்னும் கன்னிகையை விவாஹம் செய்துகொண்டார். அவர்கள் இருவருக்கும் கௌதமர் போன்ற புத்திரர்களை உண்டு பண்ணினார். வேத வேதாங்கங்களில் கரைகண்ட தீர்க்கதமஸ் பசு தர்மங்களைப் படித்து அறிந்துகொண்டார். பின்னர் பசுவை அடைய முற்பட்ட போது ரிஷிக்கூட்டத்தினர் அனைவரும் “ஆஹா! இவர் வரைகடந்து போகிறார். இனி இவர் ஆஸ்ரமத்தில் வசிக்கத்தக்கவர் அல்ல” என்று இழித்துரைத்தார்கள்.
தீர்க்கதமஸின் மனைவியும் அவரை ஏசினாள். அவர் மிகவும் கோபமடைந்து ”புருஷனை விட்டிருக்கும் ஸ்தீரிகளுக்கு அபகீர்த்தியும் தூஷணைகளும் எப்போதும் உண்டாகக்கடவது” என்று சபித்தார். அந்த பிராம்மண ஸ்திரீ இதனால் மிகவும் கோபமுற்றாள்.
“;புத்திரர்களே! இவரைக் கங்கையில் தள்ளுங்கள்” என்று உத்தரவிட்டாள்.
கௌதமர் முதலிய அவரது புத்திரர்கள் அனைவரும் அந்தக் குருடரான தீர்க்கதமஸை ஒரு ஓடத்தில் கட்டி கங்கையில் தள்ளிவிட்டனர். அந்த ஓடமானது பல தேசங்களைக் கடந்து சென்றது.
ஒரு நாள் பலியென்னும் ராஜா நதிக்கரைக்கு ஸ்நானத்திற்கு வந்தான். ஓடத்தில் ரிஷி ஒருவர் இருப்பதைக் கண்டு அவரை விடுவித்தான். பின்னர் தனது தேசத்துக்கு வந்து தனக்கு புத்ரோத்பத்தி செய்துதர வேண்டும் என்று வேண்டினான் அந்த க்ஷத்ரியன்.
தீர்க்கதமஸிடம் தனது மனைவி ஸுதேஷ்னையை அனுப்பினான். ஆனால் ஸுதேஷ்னை தனது ஏவலுக்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை அந்தக் குருடரான தீர்க்கதமஸிடம் அனுப்பினாள். அவளிடம் கக்ஷீவான் முதலான பதினோறு புத்திரர்களை உண்டு பண்ணினார். அவர்கள் அனைவரும் அழகாக வேதம் ஓதினார்கள். பலி என்னும் அந்த அரசன் “ஆஹா! என்னுடைய புத்திரர்கள் எவ்வளவு அழகாக வேதமோதுகிறார்கள்” என்று மகிழ்ந்தான்.
தீர்க்கதமஸ் “இவர்கள் என்னுடைய புத்திரர்கள். ஸுதேஷ்னைக்குப் பிறந்தவர்கள் அல்ல இவர்கள்.” என்று அவனிடம் தர மறுத்துவிட்டார். பின்னர் பலி ஸுதேஷ்ணையிடம் புத்ரோத்பத்தியின் ராஜதர்மத்தையும் அவசியத்தையும் எடுத்துரைத்து மீண்டும் தீர்க்கதமஸிடம் அனுப்பினான்.
“உனக்கு சூரிய தேஜஸோடு அங்கன், வங்கன், களிங்கன், புண்ட்ரன், ஸும்ஹன் என்ற புத்திரர்கள் உண்டாவர். புவியில் அவர்கள் பெருமையைப் பேசும் தேசங்கள் இருக்கப்போகின்றன” என்று ஆசீர்வதித்து புத்ரோத்பத்தி செய்தார்.
இவ்வாறு பலியாகிய க்ஷ்த்ரியனின் வம்சம் தீர்க்கதமஸ் என்னும் பிராமணரால் உண்டாக்கப்பட்டு அங்கம், வங்கம், களிங்கம், புண்ட்ரம், ஸும்ஹம் என்று பெயர்பெற்ற தேசங்களாகத் திகழ்கிறது.”
சத்யவதி இந்தக் கதையைக் கேட்டு சிலையாய் நின்றாள்.
“அம்மா! இதற்குப் பின் நீ உன் விருப்பம் போல செய்யலாம்”
பீஷ்மர் பக்கத்திலிருந்த பெரிய வெங்கலக் குடத்திலிருந்து ஒரு வெள்ளி பாத்திரம் நிறைய தண்ணீர் எடுத்து மடமடவென்றுக் குடித்தார். சத்தியவதியின் பக்கம் திரும்பி அமர்ந்துகொண்டார்.
சத்யவதி...... கண்ணை மூடி யோசனையில் ஆழ்ந்தாள்.
No comments:
Post a Comment