துருபதராஜன் த்ருஷ்டத்யும்னனிடம் க்ருஷ்ணையை மணந்துகொண்டு போனவன் அர்ஜுனனா என்பதைக் கேட்டறிய அரண்மனை வாசலுக்கே வந்து நின்றான்.
“யார்?” என்று கண்களில் ஆர்வம் பற்றி எரியக் கேட்டான் துருபதன்.
“இந்திரனுக்கு ஒப்பான தோற்றமுடைய அந்த பிராமண ரூபத்தில் லக்ஷியத்தை அடித்தவன் அர்ஜுனன் என்பது என் எண்ணம். நம்முடைய க்ருஷ்ணையை அவன் அழைத்துக்கொண்டு போனபோது துரத்திச் சென்ற கர்ணனின் வில்லை முறித்துத் துரத்தினான். மேலும் சல்லியன் போன்றவர்களை ஒரு பெரும் மரத்தை பிடிங்கிச் சுழற்றியவன் பீமனாகத்தான் இருக்கக்கூடும்.அவர்கள் எல்லோரும் பிக்ஷை எடுத்துச் சென்றார்கள். குடிலில் அவர்களது தாயார் இருந்தார். கிருஷ்ணையிடம் கொடுத்துப் பாகம் செய்து அனைவரும் உண்டார்கள். கால்பாகத்தில் கிருஷ்ணை படுத்துக்கொண்டாள். தலைப்புறத்தில் அவர்களது அன்னை உறங்கினாள். மேலும் இரவு அவர்கள் பேசிக்கொண்டது பிராமணர்களின் பேச்சோ வைசியர்களின் பேச்சோ அல்ல.. படைபலம், குதிரைகள், யுத்தமுறைகள் என்று எல்லாம் க்ஷத்ரியப் பேச்சு. ஆகையால் அரக்குமாளிகை தீயின் பிடியிலிருந்து அவர்கள் தப்பிவிட்டார்கள் என்று நாம் கேள்விப்பட்டது உண்மைதான்”
துருபதன் முகத்தில் வெற்றிச் சிரிப்புப் படர்ந்தது. தனது முதல் சபதம் நிறைவேறிய திருப்தியில் பக்கத்தில் இருந்த அரண்மனைச் சேவகனை அழைத்தான்.
“நீ ஓடிப்போய் அரசவைப் புரோஹிதர் ஒருவரை அழைத்து வா” என்று விரட்டினான்.
புரோஹிதர் வந்து வந்தனம் செய்தார்.
“நீர் அங்கு போய் அவர்கள் மஹாத்மாக்களாகிய பாண்டவர்களா என்று நான் அறிய விழைகிறேன் என்று கேட்டு வரவும்”
குயவன் குடிலில் ஐவரும் அன்னையுடன் அமர்ந்திருந்தார்கள். புரோஹிதர் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
”வீரர்களே! துருபதராஜன் தங்களைப் பற்றிச் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார். உங்களின் பிறந்த வம்சபரம்பரையை அறிந்துகொள்ள பிரியப்படுகிறார். பாண்டு மஹாராஜாவின் உயிருக்கொப்பான நண்பராக இருந்தார். பாஞ்சாலராஜர் தனது புத்ரியை பாண்டுமஹாராஜாவுக்கு மருமகளாக்கிப் பார்க்க சித்தம் கொண்டிருந்தார். அந்த அர்ஜுனன் தான் தனது பெண்ணை அடைந்திருக்கிறானா என்றும் தனது விருப்பம் நிறைவேறியிருக்கிறதா என்றும் தெரிந்துகொள்ள என்னை உங்களிடம் விசாரிக்க அனுப்பியிருக்கிறார்”
தர்மபுத்திரர்தான் அந்த புரோஹிதருக்கு எதிரே நின்றுகொண்டிருந்தார். அருகில் பீமஸேனன் இருந்தான்.
“இவர் துருபதராஜாவின் புரோஹிதர். இவருக்கு விசேஷ பூஜை செய்யுங்கள்”
அவருக்கு ஆசனம் கொடுத்து பூஜை செய்தார்கள். பின்னர் நிதானமாக தர்மபுத்திரர் பேச ஆரம்பித்தார்.
“பாஞ்சாலராஜன் மன விருப்பப்படி பெண்ணைக் கொடுக்கவில்லை. ஒரு பந்தயம் வைத்து அதில் ஜெயிப்பவனுக்கு பெண்ணைக் கொடுத்தார். அதில் வர்ணம், குலம், கோத்திரம், ஒழுக்கம் போன்றவைகளைப் பற்றிய விதிமுறைகள் இல்லை. வில்லை நாணேற்றுபவனுக்கும் லக்ஷியத்தை அடிப்பவனுக்கும் பெண் என்று சொல்லப்பட்டது. அவ்வாறாகவே மஹாத்மாவான இவன் ஜெயித்தான்.”
அர்ஜுனன் பதிலேதும் பேசாமல் கைகட்டிப் பக்கத்தில் நின்றிருந்தான்.
“அசக்தனால் அது நானேற்றப்பட முடியாது. அஸ்திர தேர்ச்சியில்லாதவனாலும் கீழ்க்குலத்தோனாலும் அந்த லக்ஷியத்தை அடித்து வீழ்த்த முடியாது. அதுபற்றி இனிமேல் துருபதராஜர் கவலை கொள்வது நல்லதல்ல. இலக்கை வீழ்த்தியவன் சாமானியன் அல்ல”
இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருந்தபோது வெளியே புரவியின் குளம்பொலி கேட்டது. வீரனொருவன் குதித்து இறங்கினான்.
“எல்லோருக்கும் அரண்மனையில் அன்னம் சித்தமாகயிருக்கிறது. விசேஷமான விருந்து தயாராகிக்கொண்டிருக்கிறது. மஹாராஜா ரதங்களை அனுப்பியிருக்கிறார். அனைவரும் வரவேண்டும்” என்று கை கூப்பினான்.
அனைவரும் குயவன் குடிலிலிருந்து வெளியே வந்தார்கள்.
கண்களைப் பறிக்கும் ஒளியிடன் அரசர்கள் சவாரி செய்வதற்கு தகுதியான ரதங்கள் வெண்நிறப் புரவிகள் பூட்டி தயாராக நின்றது. பொற்தாமரைகள் கொண்டு அந்த ரதங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புரோஹிதருக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள். உயர்ந்த தேர்களில் அனைவரும் ஏறினார்கள். குந்தியும் கிருஷ்ணையும் ஒரு தேரில் ஏறினார்கள்.
புஷ்பமாலைகளை அணிவித்தார்கள். வாசனாதி திரவியங்களைக் கொடுத்துப் பூசிக்கொள்ளச் சொன்னார்கள். மங்கள தீபங்கள் ஏற்றி அரண்மனை புதுப்பொலிவுடன் ஜொலித்துக்கொண்டிருந்தது. புரோஹிதர் தர்மபுத்திரரிடம் பேசியதை துருபதனிடம் பகிர்ந்துகொண்டார். தர்மர் பிடிகொடுக்காமல் பேசியது துருபதனுக்கு வருத்தமாக இருந்தது.
அவர்கள் பாண்டவர்கள்தானா என்பதை அறிந்துகொள்வதற்காக மாளிகையில் பல திரவியங்களை குவித்தான். நானாவித பழங்கள், புஷ்ப மாலைகள், கவசங்கள், பசுக்கள், கயிறுகள், விதைகள், சிற்ப வேலைகுரிய சாதனங்கள், விளையாட்டுக்குரியவைகள் என்று அனைத்தையும் சேகரித்தான். மேலும் பிரகாசமுள்ள கேடகங்கள் கத்திகள் விசித்திரமான குதிரைகள் தேர்கள் உயர்ந்த தனுஸுகள் பலவகை அம்புகள் பொன்னால் அலங்கரிக்கப்பட்ட சக்தி ஆயுதங்கள், தடிகள், ஈட்டிகள், முசுண்டி, கோடாலி என்று பலவிதமான ஆயுதங்களையும் ஒரு இடத்தில் அவர்கள் பார்வை படும்படி தோதாக வைத்தான்.
முன்னும் பின்னும் வீரர்களும் சேவகர்களும் சூழ ரதங்கள் அரண்மனை வாசலை அடைந்தது. குந்தியும் கிருஷ்ணையும் இறங்கி அரண்மனையின் அந்தப்புரத்திற்கு சென்றார்கள். மங்கையர்கள் குந்தியை எதிர்கொண்டு அழைத்து மகிழ்ச்சியுடன் உள்ளே அழைத்துச்சென்றார்கள்.
ராஜசிம்மங்களான பாண்டவர்கள் கிருஷ்ணாஜினத்தை உத்தரியமாகத் தரித்திருந்தார்கள். ஆனால் மஹா சர்ப்பத்தின் உடலைப் போல நீண்ட கைகளை உடையவர்களாயிருந்தனர். அவர்களது புஜங்களின் திரட்சியைப் பார்த்த ஆடவர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள். விலையுயர்ந்த ஆசனங்களில் அமர்ந்தார்கள். பின்னர் விருந்துசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள். பொன் மற்றும் வெள்ளி மயமான பாத்திரங்களில் பலவிதமான பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
சிறப்பான விருந்து. உண்டு முடித்தபின் துருபதராஜனால் அந்த அநேக திரவியங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள். எல்லா பொருட்களையும் விட்டு யுத்தத்திற்கு உரிய சாமான்கள் இருக்குமிடம் சென்று அவற்றை கையில் எடுத்து அதன் விவரங்களைப் பேசிக்கொண்டார்கள். துருபதனும் மந்திரிமார்களும் அதைக் கண்டு சந்தோஷமடைந்தார்கள். பாண்டுவின் புத்திரர்கள்தான் என்று துருபதன் நிச்சயம் செய்துகொண்டான்.
துருபதன் தர்மபுத்திரரை அழைத்துப் பேசலானான்.
“நீங்கள் க்ஷத்ரியர்களா? பிராம்மணர்களா? மாய ரூபத்தோடு அலையும் சித்தர்களா? கிருஷ்ணையைப் பார்ப்பதற்காக அன்று தேவர்களும் வந்திருந்தார்கள். நீங்கள் யார் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. அரசர்களிடத்தில் சத்தியம்தான் பிரகாசிக்கும். யாகம் செய்வது குளம் வெட்டுவது போல பொய் சொல்லாதிருப்பதும் தர்மம்தான். நீங்கள் யார் என்பதைச் சொன்னவுடன் சாஸ்திரப்பிரஹாரம் விவாஹம் செய்வதற்கான பூர்வாங்க காரியங்களை ஆரம்பிப்பேன்”
தர்மம் துருபதன் கண்களில் தெரிந்த அசௌகரியத்தையும் வருத்தத்தையும் காணச் சகியாமல் சிரித்துக்கொண்டே சத்தியம் பேச ஆரம்பித்தார்.
“பாஞ்சால ராஜரே! உமக்குச் சந்தோஷம் உண்டாகட்டும். நாங்கள் க்ஷத்ரியர்கள்”
துருபதன் முகம் சந்தோஷத்தில் ஒளிபடர ஆரம்பித்தது.
“வேந்தனே! மஹாத்மாவான பாண்டுவின் புத்திரர்கள். நான் குந்தியின் ஜ்யேஷ்டபுத்திரன். யுதிஷ்டிரன். லக்ஷியத்தை அடித்தவன் அர்ஜுனன். மரத்தை வேரோடு பிடிங்கித் துரத்தியவர்களை அடித்தவன் பீமன். அழகுள்ளவர்களா அங்கே வீற்றிருக்கும் இருவரும் நகுலசஹதேவர்கள். கிருஷ்ணையுடன் அங்கிருப்பவள் எங்களது தாயார் குந்தி. நீர் எங்களுக்கு முக்கியமான ஆதரவு”
இதைக்கேட்டவுடன் துருபதன் கண்களில் கங்கை பொங்கியது. ஆனந்தக்கண்ணீர் வடித்தான். பின்னர் அவர்கள் அரக்குமாளிகையிலிருந்து தப்பித்ததைக் கேட்டறிந்தான். தர்மபுத்திரர் எவ்வாறு அங்கிருந்து தப்பித்தார்கள் என்றும் திருதராஷ்டிர புத்திரர்களின் சதிவேலைகள் பற்றியும் விஸ்தாரமாகச் சொன்னார். கையிரண்டையும் சிம்மாசனத்தில் ஆவேசமாகக் குத்திக்கொண்டு திருதராஷ்டிரனைச் சபித்தான். பின்னர் ஆறுதலாக யுதிஷ்டிரரைத் தழுவிக்கொண்டு தேற்றினான். அவர்களுக்கு ராஜ்ஜியம் வாங்கித்தருவதாக வாக்குத்தத்தம் செய்தான்.
அனைவரையும் ஒரு பெரிய மாளிகையில் கிரஹப்பிரவேசம் செய்தான் துருபதன். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தவன் எல்லோருக்கும் பரிசுகளை வாரி வழங்கி இன்பமாகச் சிலகாலம் கழித்தான். பின்னர் ஒரு நாள் சுபமுகூர்த்தம் பார்த்து விவாஹப் பேச்சை ஆரம்பித்தான்.
“அர்ஜுனன் சுபதினமாகிய இன்று சாஸ்திரப் பிரகாரம் பாணிக்கிரஹணம் செய்துகொள்ளட்டும்”
யுதிஷ்டிரர் துருபதனைப் பார்த்தார்.
“அரசரே! எனக்கும் இன்னும் விவாஹம் ஆகவில்லை. ஆதானல் நான் முதலில் விவாஹம் செய்துகொள்ள நீர் அனுமதி வழங்கவேண்டும்” என்றார்.
“தர்மரே! என் பெண்ணை சாஸ்திரப் பிரஹாரம் நீர் விவாஹம் செய்தாலும் சரி அல்லது உம்மிஷ்டப்படி கிருஷ்ணையை யாருக்குச் செய்வித்தாலும் சரி” என்றான் துருபதன்.
ஆனால் பாஞ்சாலராஜன் இடிந்து விழுவதைப் போல பதில் சொன்னார் தர்மபுத்திரர்.
“ராஜரே! நாங்கள் ஐவருமே திரௌபதியை விவாஹம் செய்துகொள்வோம். அவள் எங்களுக்கு மனைவியாய் இருப்பாள்”
துருபதன் முகத்தில் ஈயாடவில்லை. இது சரியா? இயற்கை இதை மன்னிக்குமா? ஆயிரமாயிரம் கேள்விகள் அவனது நெஞ்சை அம்புகளாய்த் துளைத்தன. யுதிஷ்டிரர் வாய்பேசமுடியாமல் நின்றிருந்த துருபதனிடம் மேலும் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்.
“ரத்னம் போன்ற உம் மகள் அர்ஜுனனால் பந்தயத்தில் ஜயிக்கப்பட்டாள். கிடைத்த எதுவாகிலும் சேர்ந்து அனுபவிப்பது என்பது எங்களுக்குள் உடன்பாடு. என் அன்னையும் அனைவரையும் பகிர்ந்துகொள்ளச் சொன்னாள். தர்மப்பிரகாரமே கிருஷ்ணை எங்களை கணவனாக அடையலாம். அனைவரும் அக்னி சாக்ஷியாக அவளை விவாஹம் செய்துகொள்கிறோம்”
“நீர் அதர்மம் பேசலாமா? ஒருவனுக்கு அநேக மனைவிகள் இருக்கலாம். அது சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒருத்திக்கு பல கணவர்கள் என்பதை எங்கும் கேள்விப்பட்டதில்லை. நீர் சொல்வது தர்மமேயில்லை”
வார்த்தைகளில் கொஞ்சம் உஷ்ணம் தடவிப் பேசினான் துருபதன்.
யுதிஷ்டிரர் சிறிது நேரம் மௌனம் காத்தார்.
“மஹாராஜனே! தர்மம் நுட்பமானது. எது தர்மம் என்பது நாமறியோம். முன்னோர்கள் விட்டுச் சென்ற பாதையை அனுசரிக்கிறோம். என்னுடையது சத்ய வாக்கு. முன்பொரு நாள் வியாஸபகவான் இதையேதான் என்னிடம் சொன்னார். சந்தேகம் வேண்டாம். இது தர்மமே”
தீர்க்கமாக பேசி நிறைவுசெய்தார் தர்மர்.
இப்போது இதைப் பற்றி எதுபேசினாலும் வம்புக்கு வழிவகுக்கும் என்று எண்ணினான் துருபதன். வெள்ளிச் சொம்பில் இருந்த நீரை வாயில் சரித்துக்கொண்டான். சிந்திய நீரை உத்தரீயத்தில் துடைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் பேசினான்.
“தர்மபுத்திரரே! நீரும் குந்தியும் என் புத்ரன் திருஷ்டத்யும்னனும் கலந்தாலோசித்து இன்னது செய்யவேண்டும் என்று நாளைக் காலையில் சொல்லுங்கள். பார்க்கலாம்” என்றான்.
அப்போது சபையின் வாசலில் ஒளியுடன் வெண்மையான வஸ்திரத்தோடும் வெண் தாடியோடும் கையில் கமண்டலத்துடன் வியாஸபகவான் தோன்றினார். துருபதனும் சபையோரும் ஆச்சரியத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். துருபதன் தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து அவரை எதிர் கொண்டழைக்க ஓடினான்.
துருபதனும் திருஷ்டத்யும்னனும் வியாசரை பொன் ஆசனத்தில் அமர வைத்து பாத பூஜை செய்தார்கள். குசலம் விசாரித்துக்கொண்டார்கள். சபை சிறிது நேரம் அமைதியாக இருந்தது. திரிகாலஞானியாகிய வியாஸபகவானால் எதன் நிமித்தம் அவர்கள் மௌனிகளாக அமர்ந்திருக்கிறார்கள் என்று உணர்ந்துகொண்டார்.
துருபதன் தொண்டையை செருமிக்கொண்டே ஆரம்பித்தான்.
“வியாஸபகவானுக்கு வந்தனம். ஒருத்தி பலருக்கு எப்படி பாரியையாகக் கடவாள்? தர்மம் எப்படி பரிசுத்தமாகயிருக்கும்? பகவான் உள்ளது உள்ளபடி கூற வேண்டும்”
கை கூப்பினான் துருபதன்.
”லோகத்திற்கும் வேதத்திற்கும் விரோதமானதும் நிச்சயமாக யாவர்க்கும் தெரியாததாகவும் இந்த தர்மத்தின் விஷயத்தில் யார்யாருக்கு என்னென்ன அபிப்பிராயம் என்பதை முதலில் தெரிவியுங்கள்”
வியாஸபகவானே விரோதமான தெரியாத தர்மம் என்று ஆரம்பித்து வைத்தார். துருபதன் தொடர்ந்தான்.
“இது வேதத்திற்கும் உலகத்திற்கும் விரோதமானது. ஒருத்தி பலருக்கு பாரியையாவது இல்லையே. இந்த நடை முன்னோர்களாலும் அனுசரிக்கப்படவில்லையே. ஆகையால் இது அதர்மம். செய்யக்கூடாது.”
திருஷ்டத்யும்னன் எழுந்து வியாஸபகவானை வந்தனம் செய்தான்.
“பிராமண சிரேஷ்டரே! நன்நடத்தையோடு இருக்கிற ஜ்யேஷ்ட சகோதரன் தன் இளையவன் பாரியையிடம் எப்படி சேர முடியும்? தர்மம் நுட்பமானதால் எங்களால் தெளிவாக அறிய முடியவில்லை. க்ருஷ்ணை ஐவருக்கு பாரியை ஆகலாம் என்பதை எங்களால் ஏற்கமுடியவில்லை”
வியாஸர் அவையில் இருந்த யுதிஷ்டிரரைப் பார்த்தார். யுதிஷ்டிரர் திருஷ்டத்யும்னனைப் பார்த்து பேசினார்.
“என் வாக்கு பொய் சொல்வதில்லை. என் புத்தி என்றும் அதர்மத்தில் செல்லாது. தர்மங்களில் கரைகண்டவளும் கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஜடிலை என்பவள் சப்தரிஷிகளுடன் சேர்ந்திருந்தாள் என்று புராணங்களில் கேள்விப்படுகிறோம்.”
புராண சம்பந்தம் இருப்பதாக யுதிஷ்டிரர் சொன்னதும் அவை நிசப்தமானது.
“ரிஷிபுத்திரியான வார்ஷி (மாரிஷா) என்பவள் கதையைச் சொன்னால் நீங்கள் மூர்ச்சையாகிவிடுவீர்கள்” பொடி வைத்தார் தர்மர். சபை நிமிர்ந்தது. காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தது.
“மனதாலும் வாக்காலும் துய்மையடைந்த பிரசேதஸுகள் என்று ஒரே பெயர் கொண்ட பத்து சகோதர்களிடம் வார்ஷி சேர்ந்திருந்தாள்.”
பத்து பேரா? துருபதன் அதிர்ந்தான். திருஷ்டத்யும்னன் செய்வதறியாது திகைத்தான்.
“மேலும்... பெரியோருடைய சொல் தர்மம். பெரியோர் எல்லாரையும் விட மாதா முதன்மையானவள். அவள் ஐவரும் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று சொன்னாள். அதனால் இதை சிறந்த தர்மமென்று சொல்கிறேன்”
தனக்குத் தெரிந்த தர்மத்தை ஆணி போல அந்தச் சபையில் அடித்துவிட்டு அமர்ந்துவிட்டார் தர்மர்.
அவையோரத்தில் அமர்ந்திருந்த குந்தி எழுந்திருந்தாள்.
“ஆமாம். நான் தான் பிக்ஷை என்றதும் ஐவரையும் பகிர்ந்துகொள்ளச் சொன்னேன். இது சத்தியம்” என்றாள்.
வியாஸர் சிரித்துக்கொண்டார். குந்தியைக் கண்ணாலேயே ஆமோதித்தார்.
“பாஞ்சால ராஜனே! இது எல்லோருக்கும் எக்காலத்திற்கும் உள்ள தர்மம்தான் என்பதைப் பற்றியும் இது சாஸ்திரப்படி கடைபிடிக்கலாம் என்பதைப் பற்றியும் சொல்லப்போகிறேன். யுதிஷ்டிரன் சொன்னபடியே இந்த தர்மம் பொய்யில்லை. சந்தேகப்பட வேண்டாம்” என்றார்.
தனது ஆசனத்திலிருந்து எழுந்த வியாஸபகவான் துருபதன் அமர்ந்திருக்கும் இடத்துக்குச் சென்று அவனது கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு ராஜகிருஹத்துக்குள் பிரவேசித்தார். பாண்டவர்கள், குந்தி, துருபதன், திருஷ்டத்யும்னன் என்று எல்லோரும் அங்கு குழுமியிருக்க அநேகருக்கு ஒரு மனைவி இருப்பது எப்படி தர்மமாகும் என்பதையும் துருபதனின் மகளாக அக்னியில் ஜனித்த கிருஷ்ணை ஐவருக்குப் பத்தினியாக இருப்பதை அவள் வரமாக வாங்கி வந்திருப்பதைப் பற்றியும் சொல்லத் தொடங்கினார்.
நாளை நாளாயனியின் கதை....
No comments:
Post a Comment