உயிர்ப்பிச்சை அளிக்கப்பட்ட சித்ரரதன் என்ற கந்தர்வன் எழுந்து அர்ஜுனனைத் தொழுதான். கங்கை சீராக ஓடிக்கொண்டிருந்தது.
“நான் அங்காரபர்ணன் என்ற பெயரை விட்டுவிடுகிறேன். சித்ரரதன் என்ற பெயரும் இனிமேல் எனக்குச் செல்லாது. அந்த எழில்மிகு ரதத்தை உன் அஸ்திரத்தால் எரித்துவிட்டாய். என்னுடைய உயிரை நீ கொடுத்ததனால் நான் தவம் செய்து பெற்ற வித்தை ஒன்றை உனக்கு பரிசளிக்கிறேன்.”
யுதிஷ்டிரர் அர்த்தராத்திரியில் அர்ஜுனன் என்ன வித்தைப் பெறப் போகிறான் என்று ஆர்வமாகப் பார்த்தார்.
“இந்த வித்தையின் பெயர் சாக்ஷூஷி. இதை மனு சந்திரனுக்குக் கொடுத்தார். சந்திரன் விஸ்வாவஸு என்னும் கந்தர்வனுக்குக் கொடுத்தார். விஸ்வாவஸு எனக்குக் கொடுத்தான். குருபரம்பரையாக இது எனக்கு வந்தது. அற்பமனிதர்களுக்குக் கொடுத்தால் இந்த வித்தை அழிந்துவிடும்.”
வித்தையைச் சொல்லித்தராமல் வித்தையின் மஹிமைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போனான். யுதிஷ்டிரர் பொறுமை இழந்தார். குந்தி அந்தக் கங்கைக்கரையில் இருந்த ஒரு மரத்தடியில் சென்று நகுலசகதேவர்களுடன் அமர்ந்துகொண்டாள். பீமன் யுதிஷ்டிரர் அர்ஜுனன் மூவரும் அங்காரபர்ணன் என்ற அந்த கந்தர்வனிடம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“அது என்ன வித்தையப்பா?” என்று வாய்விட்டுக் கேட்டான் பீமன்.
“இந்த மூன்று லோகங்களில் எந்த ஒன்றை எவன் தன் கண்ணால் எத்தகையதாக பார்க்க விரும்புவானோ அவன் அதனை அத்தகையதாகப் பார்க்கமுடியும். அதுதான் அந்த வித்தை”
மூவரும் விழிவிரிய ஆச்சரியப்பட்டார்கள்.
“ஆறுமாத காலம் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தால் இந்த வித்தையை அடையலாம். விரதானுஷ்டங்கள் சிலவை இருக்கிறது. அதைச் செய்தபின் அந்த வித்தையை உன்னிடம் வரும்படி செய்வேன். மேலும் உங்களுக்கு நான் சில பரிசுகள் வழங்க ஆசைப்படுகிறேன்”
“என்ன பரிசுகள்?” யுதிஷ்டிரர் கேட்டார்.
“அர்ஜுனனுக்கும் அவனது சகோதரர்களான உங்களுக்கும் கந்தர்வலோகத்தில் பிறந்த குதிரைகளில் ஆளுக்கு நூறு கொடுக்கிறேன். அவை நினைத்த வர்ணமும் நினைத்த வேகமும் எடுக்கும். அதோடு மட்டுமல்லாமல் நினைத்த போது வந்து நின்று நினைத்த காரியத்தை நிறைவேற்றும். இளைத்தாலும் பலமுள்ளதாக இருக்கும். வேகத்தில் பின்வாங்காது.”
தனது திறமையில் நம்பிக்கை வைத்த அர்ஜுனனுக்கு கந்தர்வனிடம் ஏதோ தானம் வாங்குவது போல கசந்தது.
“கந்தர்வா! உன்னுடைய வித்தை ஞானம் எல்லாவற்றையும் நீயே வைத்துக்கொள். எனக்கு வேண்டாம்” என்று மறுத்துவிட்டான்.
“அர்ஜுனா! பிராமணனுக்கு கை வஜ்ரம். க்ஷத்ரியனுக்கு ரதம் வஜ்ரம். வைசியர்களுக்குக் கொடை வஜ்ரம். நான்காம் வர்ணத்தவர்களுக்கு தொழில் வஜ்ரம். க்ஷத்ரியனானக் உனக்கு ரதமே வஜ்ரம் அதில் பூட்டும் குதிரைகளே உனக்கு முக்கியம்”
“பரவாயில்லை.. எனக்கு எதுவும் வேண்டாம்.” முகத்தைத் திருப்பிக்கொண்டான் அர்ஜுனன். பீமனுக்கு கொஞ்சம் கண்ணைக் கட்டியது. இன்னும் சிறிது நேரத்தில் கிழக்கு வெளுக்க ஆரம்பித்துவிடும். மரத்தடியில் குந்தியும் நகுலசகதேவர்களும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
“நீ எனக்கு உயிர் கொடுத்ததால் மனம் மகிழ்ந்து நான் வித்தைகளைக் கொடுக்கிறேன். இப்படி நீ நினைத்துக்கொண்டால் உன்னுடைய அக்நேயாஸ்திரத்தை எனக்குக் கொடு. பதிலுக்கு நான் என் வித்தையை உனக்குச் சொல்லிக்கொடுக்கிறேன்”
“ஸ்நேகிதனே! நான் அக்நேயாஸ்திரத்தைக் கொடுக்கிறேன். நீ அந்த கந்தர்வலோக குதிரைகளைக் கொடு” என்று சிரித்தான் அர்ஜுனன்.
எல்லோரும் கங்கைக்கரையின் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டார்கள். எல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போது அர்ஜுனனுக்கு இவன் ஏன் நம்மிடம் சண்டைக்கு வந்தான் என்ற கேள்வி மனதுக்குள் குடைந்துகொண்டிருந்தது.
”யாருக்கும் தீங்கில்லாமல் அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த எங்களிடம் நீ ஏன் சண்டைக்கு வந்தாய்?”
“பரதஸ்ரேஷ்டனே! ஒரு பிராமணனை புரோஹிதனாக வைத்துக்கொண்டு, அவர்கள் பின்னால் செல்பவர்களை யக்ஷர்களோ ராக்ஷஸர்களோ கந்தர்வர்களோ பிசாசங்களோ பக்ஷிகளோ நாக்ங்களோ எதிர்ப்பதில்லை.”
“உன்னை நாங்கள் எதிர்க்கவேயில்லையே! பின்னர் ஏன் சண்டையிட்டாய்?”
“ஒரு ஆணுக்கு பெண் அருகிலிருக்கும்போது வரும் அவமானங்களை அவன் பொறுத்துக்கொள்ளமாட்டான். நீங்கள் நதியில் இறங்கக்கூடாது என்று சொன்னவுடன் நகர்ந்திருந்தால் யுத்தம் நேர்ந்திருக்காது. அர்ஜுனா! பிரம்மச்சரியம் சிறந்த தர்மம். நீ அதை தவறாமல் கடைபிடித்திருக்கிறாய். அதனால் உன்னிடம் நான் தோற்றேன். புலன்களை அடக்காதவனாக இருந்தாலும் எவனொருவன் புரோஹிதன் ஒருவனை வைத்திருக்கிறானோ அவனை எதுவும் அண்டாது. அந்தப் புரோஹிதர் சுத்தராகவும் பொய் பேசாதவராகவும் தர்ம சிந்தனையுள்ளவராகவும் இருக்க வேண்டும். தபதியின் வம்சத்தை விருத்தி செய்பவனே! தாபத்யனே! பிராமணனை வைத்துக்கொள்ளாத அரசன் வெறும் சூரத்தனத்தால் இந்தப் பூமியை வெல்வது சுலபமல்ல. ஆகையால் பிராமணனை வைத்து ராஜ்ஜியத்தை நீடுடி காலம் ஆள்வாயாக”
கரையில் பக்கத்தில் அமர்ந்தவாறே இருந்த பீமன் தூக்கத்தில் சரிந்துவிட்டான். யுதிஷ்டிரர் கண்களை மூடிமூடித் திறந்தார். கீழிமை மேலிமையை காந்தம் போல இழுத்தது. அர்ஜுனன் சுறுசுறுப்பாக இருந்தான். பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் உத்வேகத்துடன் விழித்திருந்தான்.
”கந்தர்வனே! தாபத்யனே என்று என்னை தபதியென்பவளை வைத்து கூப்பிட்டாயே, யாரந்த தபதி? நான் உண்மையை அறிய விரும்புகிறேன்”
“தபதி என்பவள் சூரியனின் பெண். சாவித்ரிக்கு இளையவள். தவத்தை தனமாக உடையவள் தபதி. தேவர்கள் அஸுரர்கள் யக்ஷர்கள் கந்தர்வர்கள் என்று எந்த பெண்ணிடமும் இல்லாத அழகு அவளுக்கு கொட்டிக்கிடந்தது. அவளுக்கு பதினான்கு வயது எட்டியது. அவளுடைய அழகுக்கும் அறிவுக்கும் ஒழுக்கத்திலும் குணத்திலும் கல்வியிலும் ஈடான ஒரு கணவனை மூன்று லோகங்களிலும் இருப்பதாக சூரியன் நினைக்கவில்லை. அதனால் அவளுடைய கன்னிகாதானம் பற்றியும் அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை.
ரிஷனுடைய புத்திரன் ஸம்வரணராஜன் என்பவன் சூர்ய உபாசனை செய்துவந்தான். உபவாசத்தினாலும் தியானத்தினாலும் சூர்யனை ஆராதனம் பண்ணினான். தினமும் சூர்யன் உதயமாகும் போது பூஜை செய்வான். அந்த அரசர்களில் சிறந்தவனுக்கு தனது புத்ரி தபதியைக் கொடுக்கலாம் என்று நினைத்தான் சூர்யன். ஸம்வரணராஜன் பூலோகத்தில் சூரியன் போல பூஜிக்கப்பட்டான். அன்பர்களுக்கு சந்திரனைப் போல குளிர்ச்சியாகவும் பகைவர்களுக்கு சூர்யனைப் போல தகிக்கக்கூடியவனாகவும் இருந்தான்.
ஒருநாள் ஸம்வரணராஜன் மலை வனம் ஒன்றில் வேட்டையாடிக்கொண்டிருந்தான். எங்கும் நில்லாமல் வெகுநேரம் குதிரையை விரட்டி விரட்டி அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தான். அந்தக் குதிரை பசியும் தாகமுமடைந்து அவன் ஓட்டிக்கொண்டிருக்கும் போதே இறந்து விழுந்துவிட்டது. அந்த வனத்திலிருந்து மலைமேல் ஏறி பாதை எதுவும் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே களைத்து வந்துகொண்டிருந்தான். அப்போது இரு மரங்களுக்கு இடையே நீண்ட கண்களையுடைய நிகரற்ற அழகுடைய ஒரு கன்னிகையைக் கண்டான்.
ஆதித்தியனின் ஒளிக்கற்றையில் துளி தவறி விழுந்து பெண்ணானது போல ஜொலித்தாள். அவள் நின்ற இடத்தில் அவளைச் சுற்றி ஒளி வீசியது. அவளே ஒரு பொற்சிலை போல தகதகவென்று நின்றிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் இருந்த மரம் செடி கொடிகளிலெல்லாம் அவளிடமிருந்து எழுந்த ஒளிக்கிரணங்கள் பட்டு அவைகளும் பொன்மயமாகக் காட்சியளித்தது. அவனது நெஞ்சை மன்மதபாணம் அடித்தது.
“மூவுலகிலும் நிகரற்ற அழகியே! நீ யார்? யாருடைய பெண்? ஆபரணங்கள் பல பூட்டிக்கொண்டாலும் ஆபரணங்களே ஆசைப்படும் ஆபரணமே! தாமரையிதழ் போன்ற கண்களையுடையவளே! உன் முகத்தைக் கண்டவுடன் மன்மதன் என்னைப் பிடித்து ஆட்டுகிறானே!! நீ யார்.. சொல்...சொல்...சொல்....”
பிதற்ற ஆரம்பித்தான் ஸம்வரணன். லேசாக இதழோரத்தில் மந்தகாசப் புன்னகை ஒன்றை உதிரவிட்டவள் அப்படியே காற்றோடு காற்றாக மறைந்த்போனாள். அரசனுக்கு பித்து பிடித்தது. நாலா திக்கும் கழுத்து சுளுக்கும் வரை திரும்பிப்பார்த்து சோர்ந்து போய் சிலையாய் நேரம் போனதே தெரியாமல் நின்றிருந்தான்.
ராஜஸிம்மமான அவன் கடைசியில் தரையில் விழுந்து அழுதான். புவியாளும் மன்னவன் பெண்ணைக் காணாமல் கதறினான். சற்று நேரத்தில் மெல்லிய வெள்ளை ஆடை உடுத்தி காற்றில் நீண்ட கருங்கூந்தல் புரள அவள் ஸம்வரணன் கண்ணில் தென்பட்டாள். தரையிலேயே விழுந்து கிடந்தவன் காண்பது கனவா நனவா என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கையில் அவன் காதறுகே சென்று காமத்தை ஊட்டும் படி ரஹஸ்யமாக “ராஜனே! பகைவர்களை அடக்குபவனான நீ இப்படி தரையில் விழுந்து கிடக்கலாகாது. எழுந்திரு.. எழுந்திரு” என்றாள்.
கறுத்த கண்களையுடையவளே! உன்னால் இந்த மன்மதன் கூர்மையான அம்புகளால் என் நெஞ்சைத் துளைக்கிறான். கின்னரர்களின் கீதம் போல பேசுகிறாய். அதுவே புது இசையாக இருக்கிறது. என் உயிர் உன் வசமாகிவிட்டது. தயவு செய்து என்னை மணந்து கொள். உன்னைப் பார்த்தபின் எந்த பெண்ணையும் பார்க்க இயலாமல் இருக்கிறேன். விவாகங்களுள் காந்தர்வ விவாஹம் சிறந்தது. வா நாமிருவரும் விவாஹம் செய்துகொள்வோம்”
கிட்டத்தட்ட அவளது கையைப் பிடித்து இழுக்காத குறையாகப் பக்கத்தில் வந்து நின்று கேட்டான். இரண்டு அடிகள் பின்னால் சென்றாள்.
“நான் தகப்பனுக்கு அடங்கிய கன்னிகை. என் தந்தையாகிய ஆதித்யரை நமஸ்கரித்து தவம் செய்து வேண்டிக்கொள். அவர் உனக்குக் கொடுக்க விருப்பப்பட்டால் நான் உன்னை அடைவேன். உலகுக்கே தீபம் போன்ற சூர்யனுடைய பெண்ணான சாவித்ரிக்கு இளையவள் நான். தபதி என் பெயர்”
அவளது பெயரைச் சொன்னவுடன் உடனே சர்ரென்று மேலே எழும்பினாள். கொஞ்சதூரம் வரை கண்ணுக்குத் தெரிந்தவள் மேகத்தோடு மறைந்துபோனாள். கையை மேலே தூக்கி அவளைப் பிடித்துவிடும் தோரணையில் இருந்த ஸம்வரணன் அப்படியே வெகுநேரம் நின்றான். பின்னர் “தபதி..தபதி..தபதி..” என்று வனமெங்கும் பைத்தியம் போல அலைந்தான்.
மீண்டும் தரையில் விழுந்தான். மேனியெங்கும் புழுதியும் கேசம் கலைந்தும் பித்துப் பிடித்தவன் போலக் கிடந்தான். வெகுநாட்களாக வேட்டையாடப் போன மன்னன் நாடு திரும்பவில்லையே என்று அமைச்சன் ஒருவன் ஸம்வரணனைத் தேடி வனத்துக்குள் வந்தான்.
வெகுநேரம் அந்த வனத்தினுள் தேடினான். கடைசியில் ஒரு கற்பாறை அருகே இருந்த மரத்தடியில் குப்பைப் போலக் கிடந்த மன்னனைக் கண்டு மனம் வெம்பி ஓடினான். பசியினாலும் களைப்பினாலும் விழுந்துவிட்டான் என்று ஊகித்துக்கொண்டு குளிர்ந்த ஜலம் எடுத்து வந்து அவன் முகத்தில் தெளித்து அவனை எடுத்து தனது மடியில் வைத்துக்கொண்டான். அந்த அமைச்சன் பின்னால் ஒரு பெரும் சேனையே அரசனைத் தேடி வந்திருந்தது.
“உன்னைத் தவிர சேனைகளை நாட்டுக்குப் போகச் சொல்”
மன்னனின் உத்தரவு வந்தவுடன் சேனைகளை அனுப்பிவிட்டு அவனுடன் இருந்தான். மன்னன் அந்த வனத்தினுள் கொட்டிய அருவி ஒன்றில் குளித்தான். மனசும் உடம்பும் குளிர்ந்தது.
“நீயும் நம் நகரத்துக்குச் செல்லலாம். நான் ஒன்றை நோக்கித் தவமியற்றுகிறேன். கிடைத்தால் நாடு வருவேன். போய் வா” என்று அவனையும் அனுப்பிவிட்டு தபதியை அடையும் உபாயம் எது என்று தனிமையில் அமர்ந்து யோசித்தான்.
பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாய் எழுந்திருந்து......
No comments:
Post a Comment