Sunday, March 11, 2018

வியாஸர் காட்டிய இந்திரர்கள்




சாப விமோசனத்தினால் சோகம் தோய்ந்த முகத்தோடு இருந்த நான்கு இந்திரர்களும் சங்கரரிடம் பின்வருமாறு முறையிட்டார்கள்.
“துர்லபமான சாபவிமோசனம் எங்களுக்கு மனுஷ்ய லோகத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் நேரடியாக மனுஷ்யர்களின் கர்ப்பத்திலிருந்து ஜனிக்க மாட்டோம். ஆனால் தர்மன், வாயு, இந்திரன், அசுவினி தேவர்கள் ஆகிய தேவர்களே எங்களை ஒரு தாயினிடத்தில் கர்ப்பாதானம் செய்யவேண்டும்”
புதிதாக அங்கு வந்திருந்த இந்திரன் ஈஸ்வரனிடம் “நான் என்னுடைய வீரியத்தினால் பிறப்பவனை இவர்களுக்கு ஐந்தாமவனாகக் கொடுப்பேன்” என்றான்.
அந்த ஐந்து இந்திரர்களுள் முதலாமவன் விஸ்வபுக்; இரண்டாமவன் பூததாமன்; மூன்றாமவன் பராக்கிரமசாலியான சிபிச்சக்கரவர்த்தி, நாலாமவன் சாந்தி; ஐந்தாமவன் தேஜஸ்வி. ராஜலக்ஷ்மியாகிய அந்த பெண்ணை அவர்களுக்கு பாரியையாக பூலோகத்தில் கொடுத்தார்.
பிறகு அந்த ஈஸ்வரர் அவர்களுடன் சேர்ந்து திருமாலிடம் சென்றனர். அளவற்ற அவதாரங்கள் எடுக்கும் அவரும் ஈஸ்வரர் சொன்னபடியே நியமித்தார். தேவர்களில் முதன்மையானவனான நரன் என்னும் தேவதையை இந்திரனுக்கு ஜனிக்கும்படியான ஜிஷ்ணு என்பவனாக நிச்சயித்தார் நாராயணர். அவனே அர்ஜுனன்.
அவர்கள் அனைவரும் கூடியிருக்கும் பொழுது திருமால் தலையிலிருந்து ஒரு வெண்மையான கேசமும் ஒரு கறுப்பான கேசத்தையும் எடுத்தார். அந்த இரண்டு கேசங்களும் தேவகி ரோகிணி என்னும் இரண்டு யாதவகுலத்து ஸ்த்ரீ கர்ப்பங்களில் பிரவேசித்தன. அந்த இரண்டு கேசங்களில் வெண்மையாக இருந்த ஒன்று பலராமனாகவும் கறுத்த நிறமான கேசம் கேசவனாகவும் பிறந்தது.
வியாஸரின் இந்தக் கதையை ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தான் துருபதன். திருஷ்டத்யும்னனை இதைச் சொல்வதற்கு முன்னர் வெளியே அனுப்பியிருந்தார் வியாஸர்.
“துருபதா! அந்த மலையின் குகையில் இந்திர ரூபத்துடன் அடைக்கப்பட்டவர்களே இங்கே வீரர்களான பாண்டவர்களாக இருக்கிறார்கள். திவ்யரூபத்துடன் இருக்கும் இந்த திரௌபதி அவர்களுக்காக முன்னரே நிச்சயிக்கப்பட்டவள்தான். இவளுடைய ரூபம் சந்திரனையும் சூர்யனையும் போல ஒளியுள்ளதாக இருக்கிறது. தேகமணம் வெகுதூரம் வீசுகிறது. உன் மேல் எனக்கிருக்கும் அன்பின் காரணமாக உனக்கு சிறிது நேரம் திவ்ய திருஷ்டியைத் தருகிறேன். தேவ ரூபத்துடன் கூடிய பாண்டவர்களை நீ காண்பாயாக”
வியாஸர் இப்படிச் சொன்னதும் துருபதனுக்கு திவ்ய திருஷ்டி சித்தித்தது. வியாஸருக்கு வலதுபுறம் இருந்த சுவற்றில் நேரில் காண்பது போலக் காட்சிகள் ஓடியது. துருபதனுக்கு மட்டும் பிரத்யேகமாகத் தெரிந்தது. அதில்...
தேவதேகங்களோடு க்ரீடமும் பொன்னாடைகளும் ஆபரணங்களும் தரித்த திவ்ய புருஷர்கள் ஐவர் இருந்தார்கள். வாடாத மலர் மாலைகள் தரித்திருந்தார்கள். இங்கே பிராமண ரூபத்தில் மிகவும் எளிமையாக அமர்ந்திருந்தவர்கள் பொற் கிரீடங்களை அணிந்துகொண்டு சுந்தர புருஷர்களாக காட்சியளித்தார்கள். அதில் அர்ஜுனனும் இருக்கக்கண்டு ஆனந்தமடைந்தான் துருபதன்.
இது தேவ மாயை. தனது சிற்றறிவுக்கு எட்டாது என்று உணர்ந்த துருபதன் ராஜலக்ஷ்மியாகிய அந்த திரௌபதியை பாண்டவர்களுக்கு விவாஹம் செய்துகொடுக்க முடிவுசெய்துவிட்டான்.
தனது ஆசனத்திலிருந்து எழுந்து வியாஸர் இருக்குமிடத்திற்கு ஓடினான். அவரது காலடியில் பொதேர் என்று விழுந்து அவரது பாதசரணங்களைப் பிடித்துக்கொண்டான். அவர்மேல் எழுந்த மரியாதையிலும் பக்தியிலும் அவன் கண்ணில் உருவான கங்கையைக் கொண்டு அவரது பாதத்தை கழுவினான்.
“ரிஷி ஸ்ரேஷ்டரே! இப்படி காண்பிப்பது உமக்கு புதுமையல்லவே!” என்று மீண்டும் மீண்டும் நமஸ்கரித்தான் துருபதன்.
“ராஜனே! இதில் நீ திருப்தியடைந்திருந்தாலும்... பூர்வகாலத்து ராஜரிஷிகளின் பூர்வ சரித்திரத்தையும் சொல்கிறேன் கேள்”
இப்புவியில் நிதந்து என்ற ராஜரிஷியொருவன் இருந்தான். அதிவீரன். பராக்கிரமசாலி. அவனுக்கு ஐந்து புத்திரர்கள். இனியன செய்வார்கள். இன்சொல் பேசுவார்கள். தர்மம் தெரிந்தவர்கள். சூரர்கள். வேள்விகள் புரிபவர்கள். ஸால்வேயன், சூரஸேனன், ஸ்ருதஸேனன், திந்து ஸாரன், அதிஸாரன் ஆகிய அந்த ஐந்து வீரர்களும் வில்லாளிகள்.
சிபியின் புதல்வி பௌமாஸ்வி என்பவள் இந்த ஐந்து ராஜபுத்திரர்களையும் ஸ்வயம்வரத்தில் வரித்தாள். அவளே அந்த ஐந்து வீரர்களுக்கும் பாரியையாக இருந்தாள். நிதந்து புத்திரர்களுக்கு ஐந்து புதல்வர்களை ஐந்து காலங்களில் ஈன்றாள். அப்படிப் பிறந்த பௌமாஸ்வியின் புத்திரர்களுக்கு பிறந்தவர்களின் வம்சத்திற்கு ஸால்வேயர்கள், சூரஸேனர்கள், ஸ்ருதஸேனர்கள், திந்துஸாரர்கள் மற்றும் அதிஸாரர்கள் என்று பெயர் பெற்றனர்.
இப்படி பௌஸ்மாவி அநேகருக்கு ஒரு மனைவியாக பூமியில் பெயர் பெற்றிருந்தாள். அந்த பௌஸ்மாவி போலவே உன் மகளான கிருஷ்ணையும் ஐவருக்காக விதிக்கப்பட்டிருக்கிறாள்.
பூர்வ ஜென்மத்தில் அவள் ஒரு ரிஷிகன்னிகை. அழகாகயிருந்தும் கணவன் வாய்க்காததால் கடுந்தவம் புரிந்து சங்கரரைத் தோன்றச் செய்தாள். அவரிடம் ”பதியைக் கொடும்” என்று ஐந்து முறை வரம் கேட்டாள். அவரும் “அப்படியே ஆகட்டும்:” என்று சொல்லி மறைந்தார். ஆகவே அவளுக்கு ஐந்து பதிகள் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவளேதான் நாளாயனியாகப் பிறந்து மௌத்கல்யரை அடைந்து பின்னர் சிவபெருமானைத் துதித்து அவரிடம் வரம் பெற்றவள். இது தேவ ரஹஸ்யம். ஆகையால் உனக்கு மட்டும் சொன்னேன். இதன் ரஹஸ்யத்தை நீ காக்க வேண்டும். தேவர்களுடைய ராஜலக்ஷ்மிதான் உனது யாகத்தில் பிறந்தாள். அதுவும் பாண்டவர்களுக்காகத்தான். ஐவருக்கு ஒரு மனைவியாக பிரம்மதேவரால் படைக்கப்பட்டிருக்கிறாள். இனிமேல் உன் விருப்பம் போலச் செய்”
வியாஸர் எழுந்துவிட்டார்.
“மஹரிஷியே! சங்கரரிடத்திலேயே இப்படி இவள் வரம் வாங்கியமையால் நான் என்னச் சொல்லக் கடவது? விதியினால் இது இப்படிச் செய்யப்படுகிறது. நானென்ன நடுவில் செய்வது? ஈஸ்வரரால் இது விதிக்கப்பட்டிருக்கிறது. தர்மமோ அதர்மமோ என்னுடைய தவறு ஏதுமில்லை. இவர்கள் நிச்சயித்தப்படியே பாணிக்கிரஹணம் செய்துகொள்ளட்டும்”
என்று சொல்லிவிட்டு அவரை வணங்கினான் துருபதன்.
வியாஸர் பின்னர் அவனை எச்சரிக்கும்படி பேசினார்.
“வெறும் மானிடர்களின் விவாஹத்தில் இது நியாயமாகாது. இவர்கள் தேவர்கள். அவளும் தன் முன் ஜென்ம தவத்தால் ஐவருக்கு பாரியையானாள். தெய்வத்தன்மையுள்ள திரௌபதி மற்றும் பாண்டவர்கள் போல உள்ளவர்களுக்கே இந்த விவாஹம் சாஸ்திர விஹிதமாகும்.”
இதன் பின்னர் தனியாக அமர்ந்திருந்த துருபதனும் வியாஸரும் குந்தியும் அவளது புத்திரர்களும் திருஷ்டத்யும்னனும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார்கள்.
கிருஷ்ணத்வைபாயனர் யுதிஷ்டிரரின் கையைப் பிடித்துக்கொண்டு “ஜ்யேஷ்டனே! புஷ்ய நக்ஷத்திரமான இந்த சுபதினத்தில் க்ருஷ்ணையைப் பாணிக்கிரஹணம் செய்துகொள்” என்றார்.
பின்பு பீமன் மற்றும் அர்ஜுனாதிகளைப் பார்த்து “தருமனுக்குப் பின்னர் நீங்களும் முறையே திரௌபதியின் கரம் பற்றிக்கொள்ளுங்கள்”
வியாஸரின் இந்த வாக்கு அவர்களுக்கு அமுதானது. திரௌபதியை மங்கள ஸ்நானம் செய்வித்துப் பட்டாடைகளையும் ஆபரணங்களையும் பூட்டுவதற்காக அழைத்துச்சென்றார்கள். ராஜாவின் ஸ்நேகிதர்களும் பிராமணர்களும் மந்திரிப்பிரதானிகளும் விவாஹம் பார்க்கக் குவிந்தார்கள். ஐவரும் மங்கள ஸ்நானம் செய்துவிட்டு புத்தாடைகளையும் அங்கமெங்கும் வளையல்கள் மற்றும் கவசங்களை அணிந்துகொண்டும் ராஜகம்பீரத்தோடு அங்கே வந்தார்கள்.
தௌமியர் அக்னி வளர்த்தார். கிருஷ்ணையின் கரத்தை தர்மரிடத்தில் கொடுத்தார். வேதத்தில் கரைகண்ட தௌமியர் பாணிக்கிரஹணம் செய்துகொண்ட யுதிஷ்டிரரையும் க்ருஷ்ணையையும் அக்னியை வலம் வரச் செய்தார். அப்போது விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்கின.
”அரசே! இனி மற்ற ராஜகுமாரர்களும் இதுபோல பாணிக்கிரஹணம் செய்துகொள்ளலாமே” என்று துருபதனைப் பார்த்துக் கேட்டார் தௌமியர்.
”அப்படியே செய்யுங்கள்” என்றான் துருபதன்.
பின்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக கிருஷ்ணையைப் பாணிக்கிரஹணம் செய்துகொண்டார்கள்.
அங்கு ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. மனிதர்களுடைய விவாஹம் அல்ல அது என்பதை அது பறைசாற்றியது.
ஒவ்வொருநாள் கடந்த பின்னர் கிருஷ்ணை மீண்டும் கன்னித்தன்மை அடைந்தாள். கணவனின் மூத்த சகோதரனிடத்தில் (அர்ஜுனன் கணவன் என்று வைத்துக்கொண்டால்) கணவனும் மாமனும் என்னும் எண்ணத்தையும், கணவனின் கடைத் தம்பியினிடத்தில் கணவனும் மைத்துனனும் என்ற எண்ணத்தையும் இதற்கிடையில் இருப்பவர்களிடம் கணவன் மாமன் மைத்துனன் என்னும் மூவகை எண்ணத்தையும் வைத்திருந்தாளாம்.
விவாஹம் முடிந்ததும் துருபதன் சீர் நிறையச் செய்தான். பொற்கடிவாளங்கள் போட்டு நான்கு குதிரைகள் பூட்டிய நூறு ரதஙக்ள், பொற்குன்றுகள் போல பொன்னால் தாமரைப்பூ வடிவான பொன் அம்பாரிகள் போட்ட நூறு யானைகள், ஆடை ஆபரணங்கள், நூறு தாதிப்பெண்கள் என்று தாராளமாகச் செய்தான். விவாஹத்திற்குப் பின்னர் ரத்னங்கள் நிரம்பிய அந்த பாஞ்சால நகர மாளிகையில் சந்தோஷமாக இருந்தனர்.
குந்திக்கு கிருஷ்ணை தினமும் நமஸ்காரம் செய்வாள். துருபதன் அளித்த தாதிப்பெண்கள் பணிவிடைகள் செய்ய ராஜமாதாவாக வலம் வந்தாள் குந்தி. திரௌபதியை வாழ்த்தி பல உபதேசங்கள் செய்தாள்.
“இந்திரனுக்கு இந்திராணி போலவும், அக்னிக்கு ஸ்வாஹா தேவி போலவும், சந்திரனுக்கு ரோஹிணி போலவும், நளனுக்கு தமயந்தி போலவும், குபேரனுக்கு பத்ராதேவி போலவும், வசிஷ்டருக்கு அருந்ததி போலவும் திருமாலுக்கு ஸ்ரீதேவி போலவும் நீ உன் கணவர்களுக்கு இருப்பாயாக. தீர்க்காயுள் உள்ள புத்திரர்களைபொ பெறுவாயாக. யாகத்திற்குரிய பத்னியாகவும் பதிவிரதையாகவும் இருப்பாய். நம்மைத் தேடி வந்த விருந்தினர்கள், முனிவர்கள், இளைஞர்கள், முதியோர்கள், பெரியோர்களை முறைப்படி ஆதரி. தர்மத்தில் அன்புள்ள நீ ராஜ்ஜாபிஷேகம் பெறுவாய்.”
அன்பாய் ஆசீர்வதித்த மாமியாரைக் கண்ட திரௌபதிக்கு கண்களில் ஜலம் கட்டியது. மீண்டுமொருமறை குந்திக்கு பாத வந்தனம் செய்யும் போது கண்ணீர்ச் சொட்டுகளினால் பாதத்தை ஈரமாக்கினாள்.
”இப்போது பட்டு உடுத்தின உன்னைக் கண்டு எப்படி சந்தோஷிக்கிறேனோ அதுபோலவே உனக்குப் புத்திரர்கள் பிறந்தவுடன் மகிழ்வேன்” என்றாள் குந்தி ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டே.
பாண்டவர்களுக்குத் திருமணம் ஆன பின்னர் ஸ்ரேயஸ்பதியான கிருஷ்ண பகவான் நிறைய பரிசுகளை அனுப்பினார். கோடிக்கணக்கான பொன் நாணயங்கள் தங்கக் கட்டிகள் விசித்திரமான பொன் ஆபரணங்கள், நூற்றுக்கணக்கான பாத்திரஙக்ள், பற்பல தேசத்து பணிப்பெண்கள், பத்ரங்கள் எனப்படும் யானைகள், உயர்ந்த குதிரைகள் என்று யுதிஷ்டிரரை அன்பு வெள்ளத்தில் திணற்டித்தார்.
மாளிகை முழுவதும் பரிசுப் பொருட்களோடு யுதிஷ்டிரரும் பீமனும் அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் மகிழ்ந்திருந்தார்கள். குந்திக்கும் துருபதனுக்கும் மன நிறைவு.
[வைவாஹிக பர்வம் முடிந்தது]

No comments:

Post a Comment