Monday, March 12, 2018

யமுனை நதிக்கரையில்....


துவாரகா மக்களுக்கு அர்ஜுனன்-சுபத்ரா திருமணத்தில் கிருஷ்ணனின் லீலை இருக்கிறது என்கிற விஷயம் கசிய ஆரம்பித்தது. “விப்ருதுஸ்ரவஸுக்கு முன்னமே தெரியுமாம். அர்ஜுனனைக் கட்டிக்கொண்டு இதைச் சொல்லியிருக்கிறான்” என்று பேசிக்கொண்டார்கள்.

பலராமர், அக்ரூரர், விப்ருது, சாத்யகி என்று பல முக்கிய யாதவர்களை அழைத்து காண்டவபிரஸ்தம் சென்று சுபத்ராவுக்கு சீர் கொடுத்து கௌரவித்து அர்ஜுனனையும் தர்மாதிகளையும் பார்த்துவிட்டு அத்தை குந்தியையும் நமஸ்கரித்துவிட்டு வரலாம் என்று கிருஷணன் ஆலோசனை நடத்தினார். யாரார் என்னென்ன பொருட்கள் கொண்டு வரவேண்டும் எவ்வளவு சேகரிக்க வேண்டும் எப்படியெல்லாம் ஏற்றி இறக்க வேண்டும் என்று விஸ்தாரமாக ஆலோசனை நடத்தப்பட்டது.
ராஜபாட்டை முழுக்க பொன்னாலும் பொருட்களாலும் நிரப்பட்ட ரதங்கள் அணி வகுத்து நிற்க பெருமையோடு முதல் ரதத்தில் கிருஷ்ணரும் பலராமரும் ஏறிக்கொண்டார்கள். துந்துபி வாத்தியங்கள் முழங்க அனைவரும் காண்டவபிரஸ்தம் நோக்கிப் புறப்பட்டார்கள்.
நகரத்தின் எல்லையில் கிருஷ்ணபலராமர்கள் வந்துவிட்டார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் யுதிஷ்டிரர் நகுலசகதேவர்களை அனுப்பி எதிர்கொண்டு அழைக்கச்சொன்னார்.
நகரத்தின் வீதிகளில் துளிக்கூட குப்பை இல்லை. அலம்பிவிட்டது போல பளீரென்று இருந்தது. வீதியின் இருபுறமும் மாடமாளிகைகள் இருக்க அவற்றின் சாளரங்களை இணைத்து தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. நடைபாதைகளில் புஷ்பங்கள் இறைத்திருந்தார்கள். அகில் சந்தனக் குழம்புகளை சாலையோரங்களில் தெளித்திருந்தார்கள். மயக்கும் மணம் வீசியது. ஆங்காங்கே ஸ்ரீகிருஷ்ணரின் ரதம் நிறுத்தப்பட்டு அவருக்கு பூஜை செய்யப்பட்டது. பலராமர் இடுப்பில் இருகைகளையும் புதைத்துப் பெருமிதமாக தனது தம்பியைப் பார்த்துக்கொண்டு நின்றார்.
அனைவராலும் பூஜிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணன் யுதிஷ்டிரரின் அரண்மனை வந்தடைந்தார். யுதிஷ்டிரர் ஓடோடு வந்து எதிர்கொண்டு அழைத்து கண்ணனின் உச்சி மோந்தார். கட்டியணைத்தார். பீமன் அருகில் இருந்தான். கிருஷ்ணன் அவனை விஜாரித்தார். யாதவர்கள் அனைவரையும் தர்மபுத்திரர் தனித்தனியாக விஜாரித்தும் அவரவர்களுக்குத் தக்கபடி ஆசீர்வாதம் செய்தும், ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டும், ஆலிங்கனம் செய்தும் மரியாதை செலுத்தினார். குந்தியும் திரௌபதியும் பாண்டவர்களுடன் வந்து இணைந்து கொண்டு கிருஷ்ணரையும் பலராமரையும் நலம் விஜாரித்தார்கள்.
”சுபத்ரா எங்கே?” என்று அர்ஜுனனைப் பார்த்து விஜாரித்துக்கொண்டே அருகில் வந்தார் பலராமர். அதற்குள் அக்ரூரர் பின்னால் பார்த்து கண்ணை அசைக்க பெரிய பெரிய அண்டாக்கள் போன்ற பாத்திரங்களில் திரவியங்கள் நிரப்பி யாதவ சேவகர்கள் எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு உள்ளே சென்றார்கள்.
ஒவ்வொரு அண்டாக்களிலும் ரத்னமும், பவிழமும், முத்தாஹாரங்களும் வாயிலிருந்து வழியும் வரை இருந்தது. தூக்கிக்கொண்டு செல்வோர் ஆட்டியதால் தரையெங்கும் இறைந்திருந்தது. கிருஷ்ணரும் பலராமரும் அங்கு வந்த பிறகு சுபத்திரைக்கு ஏழு ராத்திரிகள் கல்யாண உற்சவம் நடந்தது. அப்போது ஸ்ரீகிருஷ்ணர் விதம்விதமான பொருட்களைப் பாண்டவர்களுக்கு சீதனமாகக் கொடுத்தார்.
ரதங்கள் ஆயிரம், சாரதிகளுடன். கறவைப் பசுக்கள் பதினாயிரம். வெண்ணிறமான குதிரைகள் ஆயிரம், மை நிறமுள்ள கேசத்தையுடைய ஐநூறு கோவேறு கழுதைகளையும், வெளுத்தவை ஐநூற்றையும் கொடுத்தார். நன்றாக அலங்காரம் செய்யப்பட்ட வேலைகளில் சுறுசுறுப்புள்ள இளமைப் பருவத்துப் பெண்டீர் ஆயிரம். ஏறத்தக்க லக்ஷம் குதிரைகள். கட்டிகளாகவும் நெருப்புக்குப் ஒப்பான உயர்ந்த பொன்னை பத்து மனிதர்கள் தூக்கும் அளவிற்குக் கொண்டு வந்து கொட்டினார். பொன் மாலைகள். கன்னியாதனமாக இப்படி மிகுதியான பொருட்களை கிருஷ்ணரும் பலராமரும் பாண்டவர்களுக்கு அளித்தார்கள்.
நிறைய நாட்கள் அந்த வ்ருஷ்ணி குலத்தவர்கள் அந்த அரண்மனையில் ஆடிக் களித்தபிறகு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் தேசம் சென்றார்கள். பலராமரும் புறப்பட தயாரானார். அத்தை குந்தி சுபத்திரையுடன் அங்கே வந்து நின்றாள். பலராமர் சுபத்திரையிடம் சென்று அவளை ஆரத்தழுவிக்கொண்டாள். பக்கத்தில் இருந்த திரௌபதியிடம் கைகூப்பி “இவன் இனிமேல் உன் அடைக்கலம்” என்றார். குந்தியின் காலில் விழுந்து நமஸ்கரித்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார். விடுவிடுவென்று அந்த சபையை விட்டு நடந்து ரதமேறி துவாரகா சென்றுவிட்டார்.
கிருஷ்ணன் அர்ஜுனனுடன் அங்கேயே இருந்தான். ஒன்றாக வேட்டையாடினார்கள். தோள்மேல் கை போட்டுக்கொண்டு வனமெங்கிலும் திரிந்தார்கள். யமுனைக்குச் சென்று நீராடினார்கள். சந்தோஷமாக நாட்கள் கழிந்தது. சுபத்திரை அபிமன்யுவைப் பெற்றெடுத்தாள். ( அபி-பயமற்றவன்; மன்யு-கோபமுள்ளவன்). இவன் பிறந்ததும் யுதிஷ்டிரர் பதினாயிரம் பசுக்களையும் பிராமணர்களுக்கு பொன்னையும் பொருளையும் வழங்கினார். பத்து வகையான தனுர்வேதத்தையும் தேவலோகம் மற்றும் மானுடலோகத்திலுள்ள அனைத்து வித்தைகளையும் அர்ஜுனனிடமிருந்து அபிமன்யு கற்றுக்கொண்டான்.
பின்னர் திரௌபதி ஐந்து கணவர்களிடமிருந்தும் ஐந்து புத்திரர்களைப் பெற்றாள். யுதிஷ்டிரருக்கு பிரதிவிந்தியன், பீமசேனனுக்கு சுதசோமன், அர்ஜுனனுக்கு சுருதகர்மா, நகுலனுக்கு சதானீகன், சகதேவனுக்கு ஸ்ருதசேனன் என்று ஒவ்வொரு வருட இடைவெளியில் ஈன்றெடுத்தாள். தௌம்யரிஷி இவர்கள் அனைவருக்கும் ஜாதகர்மம் போன்றவைகளைச் செய்துவைத்தார்.
[ஹரணாஹரண பர்வம் முடிந்தது]
பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் வசித்தாலும் பீஷ்மர் மற்றும் திருதராஷ்டிரனின் கட்டளையினால் அநேக பகையரசர்களை வென்றார்கள். எல்லையை விஸ்தரித்தார்கள். தர்மராஜரின் அரசாட்சியில் தர்மம் தழைத்தோங்கியது. பருவங்கள் தவறாமல் மழை பொழிந்தது. தானியங்கள் செழித்தன. செல்வம் கொழித்தது. பிராமணர்கள் தங்களது வேதக் கடமைகளை தவறாது செய்தார்கள். இந்திரபிரஸ்த வாழ்வு இன்பமயமாக நகர்ந்துகொண்டிருந்தது.
ஒருநாள் அர்ஜுனன் கிருஷ்ணபகவானை நோக்கி
“கிருஷ்ணா! தாபமாக இருக்கிறது. வா யமுனைக்குச் சென்று நீராடி விளையாடிவிட்டு வருவோம்” என்று சொல்லிக் கையைப் பிடித்து இழுத்தான்.
“சரி... நமக்கு வேண்டியவர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு போவோம். அப்போதுதான் பொழுது போகும்” என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
கிருஷ்ணார்ஜுனர்கள் இருவரும் தர்மரிடம் அனுமதி பெற்று அநேகம் பேருடன் யமுனைக்குச் சென்றார்கள். யமுனைக் கரையில் காண்டவ வனத்தைக் கண்டார்கள். மான், குரங்கு, புலி, சிங்கம் என்று பலவிதமான விலங்குகள் அங்குமிங்கும் திரிந்தன. பன்னக ராஜா தக்ஷகனுக்கு வசிப்பிடம் அதுதான். ஆங்காங்கே பக்ஷிகளின் ஓசை எதிரொலித்தது. அடிபெருத்த பெரிய மரங்களின் அடர்ந்த கிளைகளினால் சூர்ய ரஸ்மி வனத்துக்குள் புகாமல் இருண்டு கிடந்தது.
கிருஷ்ணார்ஜ்ஜுனர்களோடு சத்யபாமா, ருக்மினி, திரௌபதி மற்றும் சுபத்திரை ஆகியோரும் யமுனா நதிதீரம் சென்றிருந்தார்கள். மதுவகைகள் ஏராளமாக இருந்தது. அனைவரும் அதைப் பருகிக் களித்தார்கள். ஜலத்தில் இறங்கி நீந்தி விளையாடினார்கள். மது உண்ட மயக்கத்தால் ஒருவரையொருவர் விளையாட்டாக அடித்துக்கொண்டார்கள். வேண்டுமென்றே சிரித்துக்கொண்டார்கள். புல்லாங்குழல்கள், வீணைகள் மிருதங்கங்கள் போன்ற வாத்தியங்களை இசைத்து மகிழ்ந்தார்கள்.
கிருஷ்ணனும் அர்ஜுனனும் அந்த இடத்திலிருந்து இன்னும் ரம்மியமாக இருக்கும் பிரதேசத்துக்குள் சென்றனர். அங்கே இருந்த உயர்ந்த ஆசனஙக்ளில் இருவரும் வீற்றிருந்தார்கள். இதுவரை நடந்த விஷயங்களைப் பேசிக் களித்திருந்தர்கள்.
அப்போது ஆச்சா மரம் போல பெரிய பிராமணன் ஒருவன் வந்தான். அவன் உருக்கிவிட்ட தங்கம் போன்ற நிறத்தான். செம்பட்டை மீசையும் தலைக் கேசமும். உயரத்துக்கு தக்க பருமனாகவும் இருந்தன். தாமரையிதழ் போன்ற கண்கள். ஜ்வலிப்பதுபோலிருக்கும் அந்த பிராமணன் அவர்களை நெருங்கி வரும்போது அவன் அக்னியாக இருப்பானோ என்ற சந்தேகத்தில் கிருஷ்ணர் ஆசனத்திலிருந்து எழுந்து நின்றார். பக்கத்தில் அர்ஜுனனும் அப்படியே செய்தான்.
“கிருஷ்ணார்ஜுனர்களே! நான் பிராமணன். எப்போதும் அதிக போஜனம் செய்வேன். உங்களிடம் யாசகம் கேட்கிறேன். என் பசியைத் தீர்த்து வையுங்கள்” என்று வேண்டினான்.
“நீர் எவ்வகையான உணவு கொடுத்தால் திருப்தியடைவீர்? அதை அடைய முயற்சிக்கிறோம்” என்று அர்ஜுனன் கேட்டான்.
“எனக்கு அன்னம் வேண்டான். நான் அக்னி. எனக்கு வேண்டிய உணவை நீங்களே அளியுங்கள்”
இருவரும் பார்த்துக்கொண்டார்கள்.
“இந்த காண்டவ வனத்தை இந்திரன் காப்பாற்றுகிறான். இங்கே அவனது ஸ்நேகிதன் தக்ஷகன் வசிக்கிறான்.”
“நீதான் அக்னியாயிற்றே! எரிப்பதில் உனக்கென்ன சிரமம்?” என்று கேட்டான் அனைத்தும் அறிந்த கிருஷ்ணன்.
“நான் எரித்தால் தக்ஷனின் நண்பனாகிய இந்திரன் மழை பொழிந்து அழித்துவிடுகிறான். அதனால் எனக்குப் பிடித்த இந்தக் காட்டை என்னால் எரிக்க முடியவில்லை”
“நீ ஏன் இந்தக் காட்டை எரிப்பதற்கு இவ்வளவு முயற்சி எடுக்கிறாய்?” என்று கேட்டான் அர்ஜுனன்.
”இந்திரனுக்கு ஒப்பானவனும், கொடையளிப்பதில் தனக்கு ஈடு இணையில்லாதவனும், சிறந்த புத்தியுள்ளவனுமாகிய சுவேதகி என்ற அரசன் ஒருவன் இருந்தான். அவன் நிரம்பின தக்ஷணைகள் கொடுத்து நிறைய வேள்விகள் செய்தான். அவனுக்கு யாகங்களும் தானங்களுமே பிரதானமாக இருந்தது. அதை விடுத்து ராஜாங்க காரியம் எதையும் அவன் நடத்தவில்லை.
ரித்விக்குகளைக் கொண்டு பன்னிரெண்டு வருடங்கள் செய்யக்கூடிய சத்ரயாகம் செய்தான். எப்போதும் புகை கண்களைத் தாக்கியதால் ரித்விக்குகள் மிகவும் சிரமம்டைந்தார்கள். கஷ்டப்பட்டு எப்படியோ அந்த சத்ராயாகத்தை முடித்துவிட்டு கிளம்பினார்கள். அந்த ராஜா இன்னும் நூறு வருஷகாலத்துக்கு ஒரு யாகம் செய்ய முடிவு செய்தான். நிறைய தக்ஷிணைகள் கொடுத்தும் பிராமணர்கள் யாரும் அந்த யாகத்தைச் செய்ய முன் வரவில்லை. அவர்களைக் கெஞ்சிக் கேட்டான் சுவேதகி. ஆனால் அவர்கள் அவன் வேண்டுதலுக்குச் செவி சாய்க்கவில்லை.
“எங்களால் உன் வேகத்துக்கு ஈடு கொடுத்து யாகங்கள் செய்ய முடியவில்லை. நீ ஈஸ்வரனை தியானித்துக்கொள். அவரை நோக்கித் தவம் இரு. அவரே இங்கு வந்து உனக்கு யாகங்கள் நடத்தித் தருவார்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.
ஈஸ்வரனை நோக்கிக் கடும் தவம் இருந்தான் சுவேதகி. கடைசியில் அவன் முன்னே சர்வேஸ்வரன் தோன்றினார்.
“என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
:நான் இன்னும் நூறு வருஷஙக்ள் யாகம் செய்யப்போகிரேன். நீரே பிராமணராக வந்து யாகம் செய்ய வேண்டும்”
“வீரனே! இப்போது என்னால் அதைச் செய்ய இயலாது. ஆனால் நாம் ஒரு உடன்படிக்கை செய்துகொள்வோம்”
என்ன என்பது போலப் பார்த்தான் சுவேதகி. பேசத் திராணியில்லை அவனுக்கு.
“நீ பன்னிரெண்டு வருஷஙக்ள் நெய்யால் அக்னிக்கு திருப்தி செய். யாகத்தின் முடிவில் நான் திரும்பவும் வருவேன்” என்றார். அவனுடம் இடைவிடாமல் பன்னிரெண்டு வருஷ காலம் அக்னி மூட்டி அதில் நெய் வார்த்தான். இறுதியில் சங்கரர் மீண்டும் தோன்றினார்.
“சுவேதகி இப்பவும் என்னால் உனக்கு யாகம் செய்விக்க இயலாது. என்னுடைய அம்சமாக இப்பூவுலகத்தில் துர்வாசஸ் என்ற மஹரிஷி இருக்கிறார். அவர் எனக்காக உனக்கு யக்ஞம் செய்வார்” என்றார். பின்னர் துர்வாசரைப் பார்த்து சங்கரர் சுவேதகிக்கு யாகம் வளர்க்கச் சொன்னார்.
“அப்படியே ஆகட்டும்” என்று ஈஸ்வரனிடத்தில் தலை வணங்கிச் சென்ற துர்வாசர் பின்னர் சுவேதகி அந்த பன்னிரெண்டு ஆண்டுகள் செய்யப்படும் சத்ரயாகத்தையும் செய்தான். அந்த யாகம் நடத்தவுடன் அனைவரும் தத்தம் தேசம் சென்றார்கள். பின்னர் சுவேதகி என்னும் அந்த ராஜரிஷி எல்லோராலும் போற்றப்பட்டான்.
சத்ரயாகத்தில் பன்னிரெண்டு வருஷகாலம் நெய்யுண்ட அக்னிக்கு திருப்தி உண்டாயிற்று. அதானால் மற்ற ஹோமங்களிலிருந்து திரவியங்களைக் கொண்டு செல்லவில்லை. அதனால் ஒளி குன்றிப்ப்போனான். வாட்டமடைந்தான். பின்னர் நேரே பிரம்மலோகம் சென்று பிரம்மாவைச் சந்தித்தான்.
“அக்னியே! காண்டவவனம் சத்ருக்களின் கூடாரமாகி விட்டது. நீ இவைகளை எரித்துச் சாம்பலாக்கிப் புசித்துவிடு. இந்த நோயிலிருந்து விடுபடுவாய்” என்றார் பிரம்மா.
பின்னர் அக்னி அந்தக் காட்டைத் தின்ன ஆரம்பித்தான். ஆயிரக்கணக்கான யானைகள் துதிக்கையில் நீர் கொண்டு வந்து அணைத்தது. அநேக அநேக பாம்புகள் மிகுந்த கோபத்தோடு தனது தலைகளினால் தண்ணீர் கொண்டு வந்து அழித்தது. இப்படி அக்னி காண்டவனத்தை எரிக்கப் போகும் போது மீண்டும் மீண்டும் தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இது போல எரிந்த அக்னி ஏழு முறை அவிக்கப்பட்டது.
அக்னி மிகவும் ஆத்திரமடைந்தான்.

No comments:

Post a Comment