Friday, March 9, 2018

அங்கதேசத்து அதிபதி கர்ணன்


அர்ஜுனன் கர்ணனை யாரிவன்? என்று புருவம் உயர்த்திப் பார்த்தான். கர்ணன் அந்த அவையின் முக்கியஸ்தரான துரோணரை அனுமதி கோருவது போலப் பார்த்தான். துரோணரும் அவனை வில் வித்தைகள் செய்து காட்ட அனுமதியளித்தார்.

அந்த மிகப்பெரிய சிலம்பக் கூடத்தைச் சுற்றிலும் அமர்ந்திருப்பவர்கள் அதிசயிக்கும்படி அர்ஜுனன் எப்படி இலகுவாக விற்பயிற்சியைக் காட்டினானோ அதுபோலவே கர்ணனும் பாணங்கள் விட்டான். இரண்டாவது முறை கர்ணன் மூலமாக அந்த வித்தைகளைக் கண்டு இரசித்தார்கள். தனது சகோதரர்களுடன் அமர்ந்திருந்த துரியோதனன் விழிகள் அகல விரிய அந்தக் காட்சிகளைப் பார்த்து குதூகலமடைந்தான்.
இதுவரை அர்ஜுனன் ஒருவனே பெரிய வில்லாளி என்று நினைத்திருந்த அனைவருக்கும் கர்ணன் அதிர்ச்சி அளித்தான். துரியோதனன் தனது இருக்கையிலிருந்து எழுந்து கர்ணனைப் பார்க்க ஓடினான். வில்லோடு நின்றவனை ஆரத்தழுவிக்கொண்டான். “ஹே கர்ணா! உனது வரவு நல்வரவாகுக: இந்த கௌரவர்களுடைய ராஜ்ஜியத்தை உன்னிஷ்டம் போல உபயோகித்துக்கொள்ள உனக்கு அனுமதி வழங்குகிறேன்” என்று பூரிப்புடன் கூறினான்.
துரியோதனனைக் கைகூப்பி வணங்கிய கர்ணன் “அரசே! உங்களுடன் நான் ஸ்நேகத்தை விரும்புகிறேன். நான் அர்ஜுனனுடன் துவந்த யுத்தம் செய்ய ஆசைப்படுகிறேன்.” என்றான் துடிக்கும் கண்களுடன்.
“பகைவரை அடக்குபவனே! உனக்கு நான் எப்போது ஸ்நேகனாவேன். என்னுடன் சேர்ந்து ராஜபோகங்களை அனுபவி. என் பகைவரை ஒழி! அவர்கள் தலைமேல் உன் காலை வை” என்று ஆனந்தக் கூத்தாடினான். பீஷ்மர், கிருபர், துரோணர், விதுரர் என்று பெரியோர்கள் அனைவரும் அந்தக் காட்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
அர்ஜுனனுக்கு துரியோதனன் தன்னை மனதில் வைத்துக்கொண்டு இப்படி பேசியதாக நினைத்தான்.
“கர்ணா! நீ என்னால் வீழ்த்தப்படுவாய்!” என்று கண்கள் சிவந்து உறுமினான் அர்ஜுனன்.
பலமாகச் சிரித்தான் கர்ணன். பாண்டவர்கள் ஆக்ரோஷமான அர்ஜுனனைக் கண்டு பெருமிதம் அடைந்தார்கள். ஜனத்திரளின் இரைச்சல் அதிகமானது. இடியிடிப்பது போல கர்ணன் பேச ஆரம்பித்தான்.
“ஹே அர்ஜுனா! இந்த சபை யாவருக்கும் பொது. இதில் நீயென்ன விசேஷம்? பராக்கிரமங்கள் உடைய அரசர்களே பெரியவர்கள். ராஜதர்மம் பலத்தில் அடங்கியிருக்கிறது. வில் அம்புகளால் பேசு. சொல்லம்புகள் வீரனுக்கு அழகல்ல. இப்போது உன் குருவிற்கு எதிரே உனது தலையைக் கொய்துவிடுகிறேன் பார்”
சவால் விட்டான் கர்ணன். அர்ஜுனன் துடித்தான். துரோணாசாரியாரை வணங்கி அனுமதி பெற்றான். தர்மர், பீமன், நகுலன், சகதேவன் என்று அனைவரும் ஓடிவந்து அர்ஜுனனைக் கட்டிக்கொண்டார்கள். தோளைத் தட்டி தைரியமூட்டினார்கள். கர்ணனை துரியோதனனும் அவன் சகோதரர்களும் தழுவிக்கொண்டார்கள். அவனும் அங்கே ஒரு யுத்தத்துக்குத் தயாரானான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கிருந்தோ கருமேகங்கள் அந்த அரங்கை சூழ்ந்தன. சட்டென்று அந்த மேகக்கூட்டத்தினுள் பளிச் பளிச்சென்று வெள்ளி ரேகைகள் போல மின்னல் வெட்டிப் பிரிந்தது. இந்திரன் தன்னுடைய புத்திர ஸ்நேகத்தினால் மழைமேகம் போல திரண்டு வந்திருப்பதாக ஸூர்யன் தெரிந்துகொண்டு தனது புத்திரனான கர்ணனுக்காக அந்த மேகங்களை நாசம் செய்து பிரகாசமாக தனது கிரணங்களைக் காட்டினான்.
காந்தாரியின் அருகில் அமர்ந்திருந்த குந்திக்கு அப்போதுதான் அர்ஜுனனுடன் மல்லுக்கு வந்தவன் தனக்குப் பிறந்தவன் என்று புரிந்துகொண்டாள். காந்தாரியின் மடியில் மூர்ச்சையாகிச் சரிந்தாள். விதுரர் இதைப் பார்த்து ஓரத்தில் நின்றுகொண்டிருந்த வேலைக்காரிகளைக் கைதட்டி அருகே அழைத்தார்.
“உடனே சந்தனக்குழம்புகளை எடுத்து வாருங்கள்.” என்று உத்தரவிட்டார். அவர்கள் அதைக் கொண்டு குந்தியின் மூர்ச்சையை தெளிவித்தார்கள்.
கர்ணனின் மேல் சூரியக்கிரணங்களும் அர்ஜுனனின் மேல் மேகக்கூட்டத்தின் நிழலும் படிந்திருந்தது. பீஷ்மர் துரோணர் கிருபர் போன்றவர்கள் அர்ஜுனன் நின்ற பக்கமும் துரியோதனாதிகள் கர்ணன் நின்ற பக்கமும் அமர்ந்திருந்தார்கள்.
மிகவும் தீவிரமான துவந்த யுத்தம் ஆரம்பிக்க இருந்தபோது கிருபர் எழுந்திருந்தார்.
“கர்ணா! சற்றுப் பொறு” என்றார்.
அரங்கமே அவர் பக்கம் திரும்பிப் பார்த்தது.
“உன்னுடன் போட்டியிடப்போகிறவன் குந்தியின் இளைய மகன். பாண்டு புத்திரன். இதுபோல நீயும் உன் தாயார் மற்றும் தந்தையின் பெயரைச் சொல். கூடவே உன்னுடைய ராஜவம்சத்தைப் பற்றியும் தெரிவித்துவிட்டு யுத்தம் செய். குலம் கோத்திரம் அறியாதவர்களுடன் ராஜகுமாரர்கள் யுத்தம் செய்ய மாட்டார்கள் என்று உனக்குத் தெரியுமா?”
மலர்ந்த தாமரை மழையில் நனைத்து தொங்கியது போல தலை குனிந்தான் கர்ணன். தான் என்ன குலம் என்று எப்படிச் சொல்வான்?
துரியோதனன் துடித்தான். தனது இருக்கையை விட்டு எழுந்து நின்று உரத்தக் குரலில் பேசலானான்.
“ஆசாரியரே! சாஸ்திரங்களில் உள்ளபடி ராஜாக்களின் ஜாதி மூன்று வகை. நல்லகுலத்தில் பிறந்தவன், சூரன் மற்றும் சேனையை நடத்துபவன்.”
அரங்கினுள் ஆரவாரம் அடங்கியது. அங்கு திரண்டிருந்தோர் அனைவரும் துரியோதன் என்ன சொல்லப்போகிறான் என்று கூர்ந்து கவனிக்கத் தொடங்கினர்.
“ஜலத்திலிருந்து அக்னியும், பிராமண ஜாதியிலிருந்து க்ஷத்ரிய ஜாதியும் கல்லிலிருந்து இந்த லோகமும் உண்டாயிருக்கிறது. அந்த சக்தி எங்கும் வியாபித்திருக்கிறது. ராஜாவாக இல்லாதவனோடு இந்த அர்ஜுனன் போர் புரியமாட்டான் என்றால்....”
சற்று நிறுத்திவிட்டு எல்லோர் முகங்களையும் பார்த்தான் துரியோதனன். அங்கிருந்த அனைவரும் என்ன சொல்லப்போகிறான் என்று எழுந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“இந்தக் கர்ணனை இப்போதே அங்கதேசத்துக்கு அதிபதியாக்கி ராஜாவாக பட்டாபிஷேகம் செய்கிறேன்” என்று துரியோதனான் சொன்னது அரங்கம் முழுவதும் எதிரொலித்தது.
"தந்தையே! பிதாமகரே! உங்கள் இருவரிடமும் இந்தக் கர்ணனை அங்கதேசத்து ராஜாவாக பட்டாபிஷேகம் செய்ய அனுமதி கோருகிறேன்”
ஏற்கனவே ஸ்தம்பித்துப்போயிருந்த இருவரும் வாயைத் திறக்காமல் சரியென்று தலையாட்டினார்கள்.
பிராமணர்களுக்கு அங்கே ராஜ்யாபிஷேகம் செய்யப்போவதற்கு வேண்டிய சாமக்கிரியைகளைச் செய்யச்சொன்னான். ஆயிரம்பதினாயிரம் பசுக்களை கொண்டுவரச்சொல்லி கோதானம் செய்தான். “இவன் அங்க தேசத்துக்கு அதிபதியாக தகுதியானவன்” என்று பிராமணர்கள் வழிமொழிந்தார்கள்.
தங்க சிம்மாசனம் கொண்டு வரப்பட்டது. கர்ணனை அதில் அமரச்செய்து நெற்பொரிகளும் புஷ்பங்களும் நிரம்பின பொற்குடங்களினால் அங்கராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டான். துரியோதனன் க்ரீடம் அணிவித்தான். தோள் வளைகளாலும் கைக் கடகங்களாலும் அரசர்கள் மார்பில் அணிந்துகொள்ளும் பெரிய தங்க ஆரங்கள் போன்ற அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டவுன் தேவதுந்துபி வாத்தியங்கள் முழங்கின. பேரிகைகள் ஒலிக்கப்பட்டது. ராஜ்யலக்ஷ்மியை அடைந்தான் கர்ணன்.
சிம்மாசனத்திலிருந்து எழுந்திருந்த கர்ணன் துரியோதனனைப் பார்த்து “நீ கொடுத்த இந்த ராஜ்யத்திற்கு ஈடாக நீ என் உயிரையே கேட்டாலும் தருவேன். வேந்தே! உன் சொற்படியே நடப்பேன்” என்றான் நா தழுதழுக்க.
அவனை ஆரத்தழுவிக்கொண்டான் துரியோதனன். இருவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
“உன்னுடைய ப்ரியத்தையும் ஸ்நேகத்தையும் மட்டுமே விரும்புகிறேன்” என்றான்.
மீண்டும் இருவரும் தோளோடு தோள் சேரக் கட்டிக்கொண்டார்கள்.
அப்போது அந்த அரங்கத்தின் வாயிலில் ஒரு கிழவன் வந்தான். நடை தளர்ந்து கையில் தடி பிடித்து ஊன்றி நடந்து மெதுவாக முன்னேறினான். மேல் வஸ்திரம் நழுவியது. கூட்டம் இப்போது அந்தக் கிழவனை வேடிக்கைப் பார்த்தது.
கர்ணனை நெருங்கியவன் “புத்திரனே!” என்று கதறி அழைத்தபடி அப்படியே கட்டி அணைத்துக்கொண்டான். கண்களில் நீர் திரண்டிருந்தது. அவனது கண்ணீரால் கர்ணனின் அபிஷேகம் கண்டு ஈரமாய் இருந்த தலையை மீண்டும் நனைத்தான். தந்தைப்பாசம் பீறிட்ட தருணத்தில் பீமஸேனன் உரக்கச் சிரித்தான்.
“கர்ணா! ஸூத புத்திரனே! நீ அர்ஜுனனுடன் போர் புரியத் தகுதியானவல்ல. உன் குலத்துக்கு தகுதியான சாட்டையை எடுத்துக்கொண்டுக் கிளம்பு. யக்ஞாதிகர்மங்களின் போது அக்னியின் பக்கத்திலிருக்கும் ஹவிஸைச் சாப்பிடுவதற்கு நாய்க்கு எப்படி தகுதியில்லையோ அதுபோல ராஜ்ஜியம் ஆள்வதற்குக்கு உனக்கு அருகதை கிடையாது.”
துரியோதனன் கண்களில் கோபம் தெறித்தது, கர்ணன் தலைகுனிந்து நின்றான். அவனருகில் அந்த சாரதி அங்கவஸ்திரத்தினால் தன் வாய்பொத்தி அழுதுகொண்டிருந்தான். கர்ணனின் வித்தையில் வியந்தவர்கள் எல்லாம் இப்போது வருத்தப்பட்டார்கள்.
“வ்ருகோதரா! இப்படி அடாது பேசாதே. க்ஷத்ரியன் என்பவன் யுத்தம் செய்யவேண்டும். சூரர்களுக்கும் நதிகளுக்கும் மூலம் தேடாதே! அக்னி ஜலத்திலிருந்து உண்டானது. அஸுரர்களைக் கொல்லும் வஜ்ராயுதம் தசீசியுடைய எலும்பினால் செய்யப்பட்டது. சுப்ரமண்யரை அக்னிபுத்ரர் என்றும் க்ருத்திகா புத்திரர் என்றும் ருத்ரபுத்திரர் என்றும் கங்கா புத்திரரென்றும் கேள்விப்படுகிறோம். விசுவாமித்திரர் என்னும் க்ஷத்ரியர் அழியாத பிராம்மணத்தன்மையை அடைந்தார்.”
அவனுக்கு மூச்சு வாங்கியது. சபை அமைதியாய் இருந்தது. மேலும் தொடர்ந்தான்.
“நமது ஆசாரியர் துரோணர் குடத்தில் பிறந்தார். க்ருபர் கௌதமருடைய வம்சத்தில் நாணல் தண்டில் பிறந்தார். உங்களுடைய பிறப்பும் எங்களும் தெரியும்! வாயை அடக்கு”
கொதித்தான் கர்ணன். அவன் கொதிப்பை அடக்கும் விதமாக அமைந்தது துரியோதனின் பேச்சு.
“இவன் அங்கதேசத்துக்கு மட்டுமல்ல. இந்தப் புவிக்கே ராஜாவாகும் தகுதிபடைத்தவன். இப்போது நான் சொன்னவைகளில் எவனுக்கு சம்மதம் இல்லையோ.. ரதமேறி வில்லை வளையுங்கள். இப்போதே முடிவு செய்துவிடலாம்” என்று கர்ஜித்தான்.
சூரியன் அஸ்தமித்தான். இருள் படரத் துவங்கியது. பீஷ்மர், விதுரர், துரோணர், கிருபர், குந்தி ,திருதராஷ்டிரன், காந்தாரி என்று எல்லாப் பெரியவர்களும் வாயடைத்துக் கிளம்பினர். ஜனக்கூட்டம் அர்ஜுனனைப் பற்றியும் கர்ணனனைப் பற்றியும் துரியோதனனைப் பற்றியும் பேசிக்கொண்டே கிளம்பினர். தீப்பந்தங்களும் இன்னபிற விளக்குகளும் ஏற்றப்பட்டன. கர்ணனின் கையைக் கோர்த்துக்கொண்டு துரியோதனனும் வெளியேறினான்.
காலையிலிருந்து பல்வேறு வித்தைகள் கண்ட அந்த அரங்கம் வெறிச்சோடிப்போனது.
குந்திக்கு கர்ணன் தன் பிள்ளை என்று தெரிந்து அவனது வீரதீர பராக்கிரமத்தினால் சந்தோஷமடைந்தாள். துரியோதனன் அர்ஜுனனை வெல்லும் சக்தியோடு கர்ணன் நண்பனாகக் கிடைத்துவிட்டான் என்று சந்தோஷமடைந்தான். கர்ணன் துரியோதனன் என்ற மஹாராஜன் தனக்கு ஸ்நேகிதனாகக் கிடைத்துவிட்டான் என்று சந்தோஷமடைந்தான்.
யுதிஷ்டிரர் மட்டும் அர்ஜுனனுக்கு ஒப்பானவன் எவனுமில்லை என்று எண்ணியிருந்தோமே, ஆனால் அவனுக்கு நிகராவன் என்று கர்ணன் வந்துவிட்டானே என்று மனம் நொந்திருந்தார்.

No comments:

Post a Comment