Sunday, March 11, 2018

கணிக நீதியில் தோன்றிய எரிக்கும் உபாயம்



கணிகரின் ராஜநீதிகளைக் கேட்டுக்கொண்டிருந்த திருதராஷ்டிரன் துரியோதனன் சகுனி கர்ணன் துச்சாதனன் ஆகியோருக்கு நேரம் போனதே தெரியவில்லை. அரண்மனையில் விளக்குள் ஏற்றப்பட்டன. சாயந்திரம் சூடாகப் பால் வழங்கப்பட்டது. கணிகர் மீண்டும் ஆரம்பித்தார். இப்போது ஒரு கொடும் நீதியை குலை நடுங்கச் சொன்னார்.
“அரசே! புத்திரனாக இருந்தாலும் மித்திரனாக இருந்தாலும் சகோதரனாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும் ஆசாரியனாக இருந்தாலும் நம்மிடம் பகைத்துக்கொண்டால்...”
இந்த இடத்தில் கணிகரே நிறுத்திவிட்டார். துரியோதனன் தூண்டில் போட்டான்.
“பகைத்துக்கொண்டால்...”
சபை அமைதியாக இருந்தது. எங்கும் நிசப்தம்.
“கொன்றுவிட வேண்டும்” கணிகர் அந்த அமைதியைக் குலைத்துச் சொன்னார்.
திருதராஷ்டிரன் ஒரு முறை எழுந்து நின்றுவிட்டு தடவிக்கொண்டே உட்கார்ந்தான்.
“விஷம் அல்லது வஞ்கத்தினால் கொன்றுவிட வேண்டும்”
பொறாமை வடியும் துரியோதனனின் கண்கள் இன்னும் கொழுந்துவிட்டு எரியத்துவங்கியது.
“கர்வத்தோடு தான் செய்யும் காரியகாரணம் தெரியாமல் துர்மார்க்கத்தில் போனவன் குருவாக இருந்தாலும் தண்டிக்க வேண்டும். ஒருவன் மேல் கோபம் கொண்டிருந்தாலும் அதை மறைந்து சிரித்துக்கொண்டே சம்பாஷணை செய்துகொண்டிருக்க வேண்டும். நாஸ்தீகர்களையும் ரிஷிகள் முதலானவர்களையும் அயல்தேசங்களில் தூதர்களாக நியமிக்க வேண்டும்.”
இரவு நீண்டுகொண்டிருந்தது. தீப்பந்தகளும் மாடத்து விளக்குகளும் பெரும் பெரும் நீளமான் வெங்கல விளக்குகளும் நின்று எரிந்து கணிகரின் மொழிகளைக் கேட்டுக்கொண்டிருந்தன.
“தர்மத்தை அதிகமாகச் செய்பவனுக்கு அது அர்த்த காமங்களைக் கொடுப்பதால் துன்பம் உண்டாகிறது. பொருளாசையில் அதிகமாக பொருளீட்டுபவனுக்கு தர்மமும் காமமும் கெடுவதினால் துயரம் உண்டாகிறது. காமம் அதிகமாகத் தலைகாட்டுபவனுக்கு பொருளும் அறமும் கெடுவதினால் துக்கமுண்டாகிறது.”
கேட்டுக்கொண்டே இருந்தார்கள். சிறிது இடைவெளி விட்டு வயிற்றுக்குக் கொஞ்சம் கவனித்துக்கொண்டார்கள்.
“மந்திராலோசனை செய்வதற்குக் கூட சில நியமங்கள் இருக்கிறது”
தெம்பாக ஆரம்பித்தார் கணிகர்.
“இராத்திரியில் ஆலோசனை செய்யக்கூடாது. யாராவது கவனித்துக்கொண்டிருக்கும் போதும் ஆலோசனை செய்யக்கூடாது. “
“எங்கெல்லாம் ஆலோசனை செய்யலாம்?” துச்சாஸனன் கேட்டான்.
“மேல்மாடியிலும் குன்றின் மேலும் ஜனங்கள் இல்லாத விசாலமான இடங்களிலும் ஆலோசனை செய்யலாம். ஆனால் நமக்கு நம்பத்தகுந்த ஒருவன் அங்கே காவல் புரியவேண்டும்.. அப்படி ஆலோசனை செய்யும் பட்சத்தில் சிலரை அருகே வைத்துக்கொள்ளக்கூடாது என்று நீதி சாஸ்திரம் சொல்கிறது”
“ஆங்... யாரையெல்லாம்” கர்ணன் கேட்டான்.
“நாணத்தான் குருவி, ஆண் பெண் கிளிகள், சிறுவர்கள், மூடர்கள் மற்றும் பித்தர்களை அருகே சேர்க்கக்கூடாது. ராஜநீதி தர்க்கசாஸ்திரம் இதிஹாசங்கள் நன்றாகத் தெரிந்த பிராமணர்களிடம் ஆலோசனை செய்யவேண்டும். ஆறுகாதுகளை தாண்டிப் போன மந்திரம் உடைந்துவிடும் என்று நீதிசாஸ்திரங்கள் சொல்கிறது. ஆகையால் எந்த ஆலோசனையும் நம்மை மீறி ஆறுதடவைக்கு மேல் செல்லக்கூடாது. “
மடை திறந்த வெள்ளம் போல கணிகர் ராஜநீதிகளைக் கொட்டிக்கொண்டிருந்தார்.
“தேகம் இளைத்து நோயினால் வருந்தி தண்ணீர் குடிக்காமல் ஆகாரம் இல்லாமல் நம்பிக்கையே துளிக்கூட நெஞ்சில் இல்லாமல் இருக்கும் எதிரி சேனையை அடித்தால் வெற்றி நிச்சயம். பொருள் கிடைத்தவன் பொருள் உள்ளவனிடம் செல்ல மாட்டான். காரியம் முடிந்தவனிடத்தில் ஸ்நேகம் இருக்காது. ஆகையால் எல்லாக் காரியங்களையும் பூர்த்தி செய்யாமல் மிச்சம் வைக்க வேண்டும்.”
மடமடவென்று ஒரு வெள்ளி கூஜா நிறைய இருந்த தண்ணீரைப் பருகினார்.
“ம்.. சரி.. கடைசியாக சில வார்த்தைகள். சத்ருவை சிறிதாக முளைக்கும் போதே கவனிக்காமல் விட்டுவிட்டால் அவன் பனைமரம் போல வேரூன்றி விடுகிறான். காலம் மிக முக்கியமானது. சிறு நெருப்பு போல தன்னை காலம் காலமாக விருத்தி செய்துகொள்கிறவன் பின்னர் ஒரு பெருங்கூட்டத்தையே சாப்பிட்டுவிடுவான். எஃகினால் செய்யப்பட்ட கூர்மையுள்ள கத்தி உறையில் மறைந்திருக்கும். ஆனால் தக்க சமயத்தில் வெளியே வந்து பகைவர்களை அறுத்துவிடும். அதுபோல காலத்தை எதிர்பார்த்து காத்திருந்து எதிரிகளின் உயிரை எடுத்துவிட வேண்டும். “
பெருமூச்சு விட்டான் திருதராஷ்டிரன். துரியோதனனும் கர்ணனும் துச்சாஸனனும் சகுனியும் இவ்வளவு நேரம் நடந்த ராஜநீதிகளைக் கேட்டு மூளையில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
”ராஜாவே! பாண்டவர்கள் உம்முடைய சகோதரர்களின் புத்திரர்கள். ஆனால் மிகவும் பலசாலிகள். அவர்களிடமிருந்து உம்மையும் உம் புத்திரர்களையும் காப்பாற்றிக்கொள்ளும். இவ்வளவு நேரமாக நான் சொன்ன ராஜநீதிகளை அலசி ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுப்பீர்களாக”
எழுந்தார். உத்தரீயத்தை சரி செய்துகொண்டு அங்கிருந்து வெளியேறினார். இன்னும் சற்று நேரத்தில் கிழக்கில் வெள்ளி முளைப்பதற்கு தயாராக இருக்க அனைவரும் தத்தம் இல்லங்களுக்கு திரும்பினார்கள். திருதராஷ்டிரன் பெரும் கவலை பீடிக்க தூக்கம் வராமல் தவித்தான்.
[ஸம்பவ பர்வம் முடிந்தது]
**
காலையில் திரும்பவும் திருதராஷ்டிரன் மாளிகைக்குச் சென்று தன் பிதாவை வைத்து பாண்டவர்களை வாரணாவதம் அனுப்பிவிட வேண்டும் என்று துடித்தான் துரியோதனன். ஸ்நானம் செய்து பிற்பகல் நேரத்தில் திருதராஷ்டிரன் எதிரில் நின்றான்.
“புத்ரா! சொல்லப்பா...” வாஞ்சையுடன் கேட்டான் திருதராஷ்டிரன்.
“பாண்டவர்களால் நமக்குக் கெடுதல் உண்டாகும். நான் சொன்னது போல அவர்களை வாரணாவதம் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டான்.
“பாண்டு எப்பவுமே தர்மம் தவறாதவன். தன்னுடைய சுற்றத்தார்களிடம் நியாயமாக இருந்தவன். என் விஷயத்தில் தர்மப்படி நடப்பவனாகவே இருந்தான். அவனுடைய புத்திரனும் பாண்டு போலவே தர்மம் தவறாமல் இருக்கிறான். சத்குணங்கள் நிரம்பியவன் யுதிஷ்டிரன். உலகத்தில் கியாதி பெற்றவனாக இருக்கிறான். அவனுடைய பிதிர்பிதாமஹர் வழியாக வந்த ராஜ்ஜியத்தை எப்படி பலவந்தமாக பிடுங்க முடியும்? பாண்டுவினால் ஆதரிக்கப்பட்ட இந்த ஜனங்கள் அவர்களுக்கு ஆதவரவாக நம்மைக் கொன்றுவிடும். ஜாக்கிரதை”
தந்தை மீண்டும் மீண்டும் தர்மனுக்கு சாதகமாகப் பேசுவதால் எரிச்சலுற்றான் துரியோதனன்.
“சரிதான். மக்கள் அவன் பக்கம். ஆனால் நான் மந்திரிகளுக்கு திரவியங்களும் நிறைய வெகுமதிகளையும் கொடுத்து என் பக்ஷத்தில் வைத்திருக்கிறேன். அவர்களை வைத்துக்கொண்டு நாம் காய் நகர்த்தலாம். நீங்கள் அவர்களை வாரணாவத நகரத்துக்கு பிரயாணப்படுத்துவதற்கு தயாராக்குங்கள்”
“இதை நானும் எண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் பீஷ்மர், துரோணர், விதுரன், கிருபாசாரியார் போன்றவர்கள் குந்திபுத்திரர்களை இந்த ஊரை விட்டு வெளியேற்றுவதை நிச்சயம் அனுமதிக்கமாட்டார்கள். இந்த குருவம்சத்தவர்களுக்கு நாமும் பாண்டவர்களும் சமம்தானே? நல்லவைகளை நினைப்பவர்கள் நமக்கும் வித்தியாசம் பாராட்டமாட்டார்கள். நம்முடைய இந்த கெட்ட எண்ணம் தெரிந்தால் நம்மைக் கொன்றுவிடுவார்கள் துரியோதனா”
கெஞ்சுகிறான் கண்ணில்லாத திருதராஷ்டிரன்.
”பிதாவே! பீஷ்மர் எப்பவுமே எந்தக் கட்சியிலும் சேரமாட்டார். கவலையில்லை. துரோணரின் புத்திரரான அஸ்வத்தாமா என் பக்கத்தில் இருக்கிறார். ஆகையால் புத்திரர் இருக்கும் பக்கத்தில் தந்தையும் இருப்பார். கிருபரும் துரோணரும் அவர் புத்திரரும் இருக்குமிடத்தில்தான் அவரும் சேருவார். விதுரர் ஒருவர்தான் ரகசியமாக எதிரிகளிடத்தில் நட்பு வைத்திருக்கிறார். ஆனால் போஜனம் நம்மால்தான் அவருக்குக் கொடுக்கப்படுகிறது. ஆகையால் நீர் எதுபற்றியும் கவலைப்படாமல் அவர்களை வாரணாவதம் அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யும். என் மனதைக் குளிர்வித்து திருப்திப்படுத்தும்”
கைகூப்பி வேண்டினான் துரியோதனன்.
திரவியங்கள் கொடுத்து தம் வசம் வைத்திருந்த மந்திரிகளை ஒரு அவசரக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தான். அனைவரும் குழுமியபின் அவர்களிடம் “நீங்கள் அனைவரும் வாரணாவதம் நகரத்தின் எழிலைப் பற்றி நாளை சபையில் பாண்டவர்கள் முன்னால் வர்ணிக்க வேண்டும். உங்களது வர்ணிப்பினால் அவர்கள் அந்த நகரத்துக்கு அப்போதே செல்ல வேண்டும்” என்று கட்டளையிட்டான்.
மறுநாள் சபை கூடியது. தர்மருடன் சேர்ந்து அவரது தம்பிகளும அவையை அலங்கரித்தனர். சொல்லி வைத்தது போல ஒரு முதிய மந்திரி வாரணாவதத்தின் அருமை பெருமைகளைப் பற்றி பேசினார்.
பாண்டவர்கள் அந்த நகரத்தைப் பார்க்க வேண்டும் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அவர்களின் எண்ணத்தை ஊகமாக அறிந்துகொண்டான் திருதராஷ்டிரன்.
“குழந்தைகளே! துரோணாசாரியரிடத்திலும் கிருபரிடத்திலும் வில்லும் வேலும் கற்றுக்கொண்டீர்கள். இப்படியே இல்லாமல் நீங்கள் மாறுதலுக்காக எங்காவது ஒரு இடத்திற்கு சென்று வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். வாரணாவதத்தின் அழகை இந்த மந்திரிபிரதானிகள் வர்ணிக்கும் போது இந்தக் குருடனுக்கே பார்க்க ஆசையாயிருக்கிறது. அங்கு இருக்கும் ஆலயத்தில் உத்ஸவம் நடக்க இருப்பதாக கேள்விப்படுகிறேன். நீங்கள் அனைவரும் அங்கே சென்று சில காலம் ஓய்வெடுத்து விளையாடிவிட்டு வரலாமே.”
யுதிஷ்டிரனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பீஷ்மர், துரோணர், விதுரர், கிருபர், அஸ்வத்தாமா காந்தாரி மற்றும் தாய்மார்கள் அனைவரையும் மரியாதை செய்து துக்கமாகச் சொன்னார்.
“திருதராஷ்டிரர் கட்டளையினால் நாங்கள் வாரணாவத நகரத்திற்குச் செல்கிறோம். நீங்கள் எல்லோரும் எங்களை ஆசீர்வதிக்கவேண்டும். உங்களின் ஆசீர்வாதங்களினால் எங்களைத் துன்பம் தீண்டாது”
யுதிஷ்டிரரின் இந்த மரியாதையில் அங்கிருந்தவர்கள் உள்ளம் குளிர்ந்தார்கள்.
“எல்லாக் காலங்களிலும் எல்லா தெய்வங்களினால் க்ஷேமமாக இருப்பீர்கள். எவ்வகையிலும் ஒரு தீங்கும் நேராமலிருக்கும்.”
ஆசீர்வாதத்தினால் மகிழ்ச்சியடைந்த பாண்டவர்கள் வாரணாவதத்திற்கு புறப்பட்டார்கள்.
அரண்மனை உள்ளேயிருந்த தூணுக்குப் பின்னால் இருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த துரியோதனன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவனது மாமாவையும் சகோதரர்களையும் வெற்றிப் பெருமிதத்தில் பார்த்தான். சகுனியும் கர்ணனும் துரியோதனனும் உடனே ஆலோசனை செய்தார்கள். குந்தியையும் அவள் புத்திரர்களையும் உயிரோடு எரித்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள்.
யாரை வைத்து எப்படி எரிப்பது?
திட்டமிட்டுவிட்டு அங்கு ஓரமாக நின்றிருந்த காவலாளியைக் கூப்பிட்டு ஒருவனை அழைத்துவரச்சொன்னான். அவன் வரும்வரையில் அவர்கள் காத்திருந்தார்கள். நாம் நாளை வரை காத்திருப்போம்.

No comments:

Post a Comment