Sunday, March 11, 2018

ஐவரும் அடைந்த அபூர்வ பிக்ஷை




பீமனும் அர்ஜுனனும் ஒரு பெரிய கோட்டைக்கு அரண் போல நின்றுகொண்டிருந்தார்கள். சாதாரண தடியைக் கையில் பிடித்திருப்பதுபோல ஒரு மரத்தைப் பிடிங்கி கையில் வைத்திருந்தான் பீமன். அர்ஜுனன் வருபவர்களில் எத்தனை பேரை ஒரே அடியில் வீழ்த்தலாம் என்று கணக்கு பண்ணிக்கொண்டிருந்தான்.
பாண்டவர்களுடன் சென்று கொண்டிருந்த பிராமணர்கள் இப்போது கோபத்தில் கண் சிவந்தார்கள். தோளில் போர்த்தியிருந்த மான் தோல் உடையை உதறினார்கள். கமண்டலங்களை ஓரத்தில் வீசினார்கள்.
“நீங்கள் பயப்படாதீர்கள். அவர்களை நாங்கள் ஒரு கை பார்த்துக்கொள்கிறோம்” என்று முஷ்டி மடக்கினார்கள்.
அர்ஜுனன் சிரித்தான். பீமன் பலமாகச் சிரித்தான்.
“நீங்கள் அந்த ஓரத்தில் நின்று வேடிக்கைப் பாருங்கள். நானும் பீமனும் பந்தாடிவிட்டு வருகிறோம். நான் நூற்றுக்கணக்கான அம்புகளை ஸர்ப்பங்கள் போல ஒரே சமயத்தில் வர்ஷிப்பேன்.”
வில்லை வளைத்துவிட்டான் அர்ஜுனன். பீமன் பக்கத்தில் மலைபோல நின்றான்.
“பிராமணர்கள் யாராவது இந்த சமயத்தில் எதிர்ப்பதற்கு வந்தால்... தயங்கவேண்டாம்... வெட்டித் தள்ளுங்கள்...” வெறியோடு கத்திக்கொண்டே கர்ணனும் சல்லியனும் முன்னேறினார்கள்.
கர்ணன் அர்ஜுனனை எதிர்க்க முன்னே வந்தான். மத்ரதேசத்தரசன் சல்லியன் பீமனை நோக்கி சண்டையிட ஓடினான். கர்ணன் வில்லை எடுத்து அம்பு தொடுப்பதற்குள் அர்ஜுனனிடமிருந்து சரமாரியாக அம்புகள் வந்தன. “சாதாரண பிராமணனுக்கு தனுர்வேதத்தில் இத்தனை தேர்ச்சியா?” ஒரு கணம் பிரமித்தான் கர்ணன். ஏற்கனவே ஸ்வயம்வர மண்டபத்தில் இலக்கை அடித்து வீழ்த்தியதிலிருந்து அவன் மேல் சந்தேகப் பார்வையை வீசிக்கொண்டிருந்தவனுக்கு வெளியே வந்து இதுபோல் அவன் அம்பெய்யும் திறமையைக் கண்டவன் ஆவேசம் வந்தது போல சண்டையிட ஆரம்பித்தான்.
அர்ஜுனன் அசரவேயில்லை. கர்ணன் அனுப்பும் அம்புகளை அந்தரத்தில் அறுத்தான். கர்ணனுக்கு ஒரே ஆச்சரியம். இந்த வில்லாளி யார்?
“பிராமண ஸ்ரேஷ்டனே! உன் கைகளின் வேகத்தையும் பராக்கிரமத்தையும் பாராட்டுகிறேன். நீ யார்? ஏன் பிராமண ரூபத்தில் ஒளிந்திருக்கிறாய்? மானுட ரூபமெடுத்து வந்த தனுர்வேதம் நீயா? பரசுராமனா? ப்ரத்யக்ஷமாக வந்த இந்திரனா? விஷ்ணுவா? ”
ஆச்சரியத்தில் வாய் மூடாமல் பேசினான் கர்ணன். அர்ஜுனன் எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாகக் கர்ணனை நோக்கினான்.
“ஏ பிராமணனே! என்னோடு பிரதி யுத்தம் செய்ய இந்திரன் மற்றும் பாண்டு புத்திரனான அர்ஜுனனால் மட்டுமே முடியும். பாண்டவர்கள் அனைவரும் அர்ஜுனனோடு சேர்த்து வாரணாவத அரக்குமாளிகையில் தீக்கிரையாகிவிட்டார்கள்.”
“கர்ணா! நான் பரசுராமனல்ல. தனுர்வேதமுமல்ல. என்னுடைய குருவின் ஆசியினாலும் உபதேசத்தினாலும் பிரம்மாஸ்திரம் இந்திராஸ்திரம் ஆகியவற்றில் தேர்ச்சி உடையவன். இப்போது உன்னை ஜெயிக்க போகிறேன். அசையாமல் நில். இல்லையென்றால் தோற்றேன் என்று ஒப்புக்கொள். உன்னை விட்டுவிடுகிறேன்”
சவாலாகப் பேசினான் அர்ஜுனன். கர்ணனுக்கு சுர்ர்ரென்று கோபம் தலைக்கேறியது. அம்பு தொடுப்பதற்கு முன்னர் அர்ஜுனன் கர்ணனின் வில்லை முறித்தான். உடனே தனது ரதத்திலிருந்த இன்னொரு வில்லை எடுத்து நாணேற்றினான். அந்த வில்லையும் முறித்தான் அர்ஜுனன். தொடர்ந்து அம்புகளை வர்ஷித்தான் அர்ஜுனன். அங்கமெல்லாம் அடிபட்ட கர்ணன் ஓடினான். ஆயுதமில்லாத அவனைத் துரத்துவது வீரனுக்கு அழகல்ல என்று நின்ற அர்ஜுனன் திரும்பவும் இன்னொரு வில்லை எடுத்துக்கொண்டு எதிரில் வரும் கர்ணனைப் பார்த்தான்.
இம்முறை அர்ஜுனன் இன்னும் உக்கிரமானான். கர்ணன் கை வில்லுக்கும் அம்புக்கும் போவதற்கு முன்னால் சர்ப்பங்களைப் போல அம்புகளை தொடர்ந்து ஏவினான். கர்ணன், அர்ஜுனனின் பிரம்மதேஜஸுக்கு முன்னால் நிற்க முடியாமல் பின்வாங்கி ஓடிவிட்டான்.
சல்லியனும் பீமனும் இரு பெரும் யானைகள் போல துவந்த யுத்தம் செய்தார்கள். அவர்கள் ஒருவரையொருவர் தோளில் அடித்துக்கொண்டு இழுத்துக் கீழே போட்டு புரட்டுவது சடசடசடசட என்ற தொடர் ஒலி கரகோஷம் போல எழுந்தது. சல்லியன் இழுப்பதும் பீமன் இழுப்பதுமாக வழவழவென்று சென்று கொண்டிருந்த யுத்தத்தை பீமன் சல்லியனை இரண்டு கைகளினாலும் தலைக்கு மேலே தூக்கிக் கீழே போட்டதோடு நின்றது.
பீமனின் ஆத்திரம் அதோடு அடங்காமல் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தை வேரோடு பிடுங்க யத்தனித்தான். தர்மபுத்திரர் அதைப் பார்த்து அவன் அருகில் ஒடிவந்து கண் ஜாடையால் ”பிடிங்கினால் மாட்டிக்கொள்வோம்” என்று எச்சரிக்கை செய்தார். அண்ணாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அமைதியானான் பீமன்.
துரியோதனன் தன்னெதிரே யுதிஷ்டிரர் இருந்தும் அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் சண்டை செய்யாமல் இருந்தான். யுதிஷ்டிரர் தனது வில்லை எடுத்து அவனைக் குறிபார்க்க துவங்கியம் அவர்களுக்குள் யுத்தம் துவங்கியது. அவனது நாணை அறுத்து வில்லை முறித்தார் தர்மர். அவனும் தோற்று ஓடினான்.
”சோ”வென்று மழை பிடித்துக்கொண்டது. சொட்டச் சொட்ட நனைந்துகொண்டே யுத்தம் தொடர்ந்தது.
துச்சாசனன் சஹதேவனுடனும் துச்சலன் நகுலனோடும் சண்டையிட்டார்கள். இரண்டிலுமே நகுலசஹதேவர்கள் ஜெயித்தார்கள். அப்போது சில கௌரவர்கள்,
“நீங்கள் எல்லோரும் இந்த குரூர காரியத்தை விட்டு வெளியே வாருங்கள். பிராமணர்களிடத்தில் சண்டை எதற்கு? இருவர் மட்டும் கொடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் பிராமணர்களுக்கு நமஸ்காரம். வாருங்கள். நாம் நம் நகரம் செல்வோம்”
சண்டையிட்டுக்கொண்டிருந்த அனைவரும் கலைந்தார்கள். பிராமணர்கள் அந்த யுத்தத்தின் நடுவில் நின்று கொண்டு ஜெயித்த அந்த பிராமண ஸ்ரேஷ்டர்களைப் பெருமிதமாகப் பார்த்தார்கள். கலைந்து சென்றவர்களில் சில அரசர்கள் திரும்பி வந்தார்கள்.
“இவர்கள் பிராமணர்களாக இருக்கும் பட்சத்தில் மன்னிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் இவர்களோ க்ஷத்ரியர்களாக இருப்பின் நாம் மீண்டும் யுத்தத்துக்கு அழைத்து அடிப்போம்”
இது வளர்ந்துகொண்டே இருக்கிறதே என்று தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணரும் பலராமரும் அருகில் வந்தார்கள். குந்தி புத்திரர்களான அவர்களுக்கு உதவும் பொருட்டு அந்த அரசர்களிடம் பேசினார்கள்.
“இந்த திரௌபதி தர்மமாக அடையப்பட்டவள். உங்கள் சண்டை நியாமற்றது” என்று அவர்களிடம் சமாதானம் பேசினார். கிருஷ்ணரின் சொல்கேட்டு அந்த அரசர்கள் வந்தவழியே திரும்பினார்கள். ஜனக்கூட்டத்தின் மத்தியில் பீமனும் அர்ஜுனனும் மழை மேகத்திலிருந்து வெளியே வந்த சூரியன் போல பிரகாசித்தார்கள்.
சாயங்காலம் ஆகிவிட்டது. குயவன் குடிலில் குந்தி வருத்தமுடன் காத்திருந்தாள். அவளது மனதில் விதம்விதமான எண்ணங்கள் வந்துபோயின. “துரியோதனாதிகள் இவர்களைக் கண்டுபிடித்துக் கொன்றிருப்பார்களோ? “ என்று மனம் பதைபதைத்தாள். மழை விட்டிருந்தது. அர்ஜுனன் அந்த குயவன் குடிலுக்குள் காலடி எடுத்து வைத்தான்.
குடிலுக்குள் குந்தி தனித்திருந்தாள். வாசலில் ஐவரும் நின்றுகொண்டிருக்க பீமனும் அர்ஜுனனும் குரல் கொடுத்தார்கள்.
“தாயே! நாங்கள் ஒரு பிக்ஷை கொண்டு வந்திருக்கிறோம்”
சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டார்கள்.
“வழக்கம் போல ஐவரும் சேர்ந்து புசியுங்கள்” என்று வெளியே வந்து பார்க்காமலேயே பதிலுரைத்தாள் குந்தி.
ஐவரும் உள்ளே நுழையாமல் அன்னை சொன்னதை திகைப்புடன் கேட்டுக்கொண்டே நின்றார்கள். குந்தி வெளியே வந்து பார்த்தாள். அங்கே பிக்ஷை என்று சொல்லப்பட்ட திரௌபதி நின்றிருந்தாள். நகுலனும் சகதேவனும் அன்னை அருகில் ஓடிவந்து ஸ்வயம்வர மண்டபத்தில் நடந்ததைச் சொன்னார்கள். நாம் தவறாக ஐவரையும் பகிர்ந்து உண்ணச் சொல்லிவிட்டோமே என்று நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
திரௌபதியின் கையைப் பிடித்துக்கொண்டாள். யுதிஷ்டிரரிடம் வந்தாள் குந்தி.
“புத்திரனே! நான் அறியாமல் உங்கள் அனைவரையும் பகிர்ந்துகொள்ளும்படி சொல்லிவிட்டேன். இந்த பாஞ்சால ராஜபுத்ரிக்கு அதர்மம் நடக்கக்கூடாது. என்ன செய்யலாம்?” என்று கேட்டாள்.
“அர்ஜுனா! இவள் உன்னால் ஜெயிக்கப்பட்டவள். ஆகையால் நீயே விவாஹம் செய்துகொள்” என்றார்.
“அண்ணா! முதலில் நீங்களும், பின்னர் பீமண்ணா, அதன் பின்னர் நானும் எனக்குப் பின்னர் நகுல்சகதேவர்களும் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும் என்பது மரபு. தர்மம். இப்படியிருக்கையில் பாஞ்சால தேசத்து ராஜனுக்கும் தர்மத்திற்கும் புகழிற்கும் எது தகுதியோ அதை ஆராய்ந்து நீர் செய்யவேண்டும். நீர் எந்த முடிவு எடுத்தாலும் உமக்கு நாங்கள் கட்டுப்படுவோம்”
கையைக் கட்டிக்கொண்டு அடக்கத்துடன் சொன்னான் அர்ஜுனன்.
குயவன் குடிலின் திண்ணையில் அமர்ந்திருந்த பாண்டவர்கள் அனைவரும் க்ருஷ்ணையையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். ஒவ்வொருவர் மனதிலும் திரௌபதியை வரித்தார்கள். அவர்கள் ஐவருக்குள்ளும் மன்மதன் ஏககாலத்தில் வந்து புகுந்துகொண்டான்.
யுதிஷ்டிரர் தனது தம்பிமார்களின் எண்ண ஓட்டத்தை அறிந்துகொண்டார். வியாசர் முன்பே சொன்னதையும் நினைத்துப் பார்த்தார். பின்னர் சகோதரர்களுக்குள் சண்டை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக “இந்த சிறப்புள்ள திரௌபதி நாம் அனைவருக்கும் பாரியையாவாள்” என்றார்.
தங்களது ஜ்யேஷ்டரான தர்மபுத்திரரின் இந்த சொல்லைக் கேட்டு பாண்டவர்கள் அனைவரும் பரவசம் அடைந்தார்கள். திரௌபதியிடம் உற்சாகம் குறையாமல் இருந்தார்கள். அப்போது தூரத்தில் இருவர் வருவது தெரிந்தது. ஐவரும் குந்தியும் திரௌபதியும் அவர்களது குழம்பிய தருணத்தைச் சற்று தள்ளி வைத்துவிட்டு யார் வருகிறார்கள் என்று பார்த்தார்கள்.
கிருஷ்ணரும் பலராமரும் அவர்களை நெருங்கினார்கள். தர்மர் நடுநாயகமாக அமர்ந்திருக்க அவரது சமீபத்தில் மற்ற நால்வரும் குந்தியும் தபோதனர்கள் போல அமர்ந்திருக்கக் கண்டார்.
தர்மரிடத்தில் நேரே சென்று கையைப் பற்றிக்கொண்டார். பின்னர் அவருடைய பாதங்களில் வந்தனம் செய்தார்.
“நான் கிருஷ்ணன்” என்றார். அவரைத் தொடர்ந்து பலராமரும் அவ்வாறே செய்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் கிருஷ்ணரும் பலராமரும் தனது தந்தையின் சகோதரியான குந்தியிடம் சென்று பாதவந்தனம் செய்தார்கள். தர்மபுத்திரரும் அவர்களிடம் குசலம் விசாரித்தார்.
“வாஸுதேவரே! யாருக்கும் தெரியாமல் மறைந்து வசிக்கிறோம். எப்படி உம்மால் கண்டுபிடிக்க முடிந்தது?”
கிருஷ்ணர் ஒரு மாயச் சிரிப்பு சிரித்தார்.
“வேந்தே! அக்னியை யாராவது பொத்தி வைக்க முடியுமா? பாண்டவர்களை மிஞ்சி வேறு யாரால் இதுபோல பராக்கிரமங்களை நிகழ்த்திக் காட்ட முடியும்? நல்லகாலம் அரக்கு மாளிகைத் தீயில் இருந்து தப்பித்தீர்கள். பாபிஷ்டனான துரியோதனனின் எண்ணம் நிறைவேறவில்லை. இங்கும் அரசர்கள் யாருக்கும் தெரியவேண்டாம். நாங்கள் இருவரும் விடுதிக்குச் செல்கிறோம்”
கிருஷ்ணரும் பலராமரும் அவர்களிடத்தில் விடைபெற்று விடுதிக்குச் சென்றார்கள்.
**
குயவன் சாலைக்கு பீமார்ஜ்ஜுனர்கள் செல்லும் போதே திருஷ்டத்யும்னன் ரகசியமாக பின் தொடர்ந்து வந்தான். யாருக்கும் தெரியாமல் அந்த குயவன் குடிலுக்கு நாற்புறங்களிலும் காவல் வைத்தான். ஐவரும் பிக்ஷை கொண்டு வந்து தர்மபுத்திரரிடம் கொடுப்பார்கள். அப்போது குந்தி திரௌபதிக்கு அதை எப்படி பகிர்ந்து உண்ண வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாள்.
“பெண்ணே! முதல் பாகத்தை எடுத்து தானம் கொடு. மீதமிருப்பதை இரண்டு பாதிகளாகப் பிரி. ஒரு பாதியை யுதிஷ்டிரன், அர்ஜுனன், நகுலன், சகதேவனுக்குக் கொடு. மறு பாதியை மீண்டும் இரண்டாகப் பிரி. அதில் ஒரு பாதி உனக்கும் எனக்கும். மறு பாதி முழுவதும் பீமனுக்குக் கொடு. அவன் சிறுவயது முதலே அதிகம் புசிப்பவன்” என்று சொல்லி சிரித்தாள்.
திரௌபதி அப்படியே செய்தாள். சகதேவன் தர்ப்பைகளினால் படுக்கை தயார் செய்தான். ஐவரும் படுத்த பின்னர் தலைமாட்டில் குந்தியும் அவர்களது கால்மாட்டில் திரௌபதியும் படுத்துக்கொண்டார்கள். இரவு முழுவதும் சேனை குதிரை படை யுத்தம் என்று பல்வேறு விஷயங்கள் பேசுவார்கள். திரௌபதி துளியும் விசனப்படாமல் மகிழ்ச்சியாக காலம் கழித்தாள்.
குடிலுக்குள் எட்டிப் பார்த்த திருஷ்டத்யும்னனுக்கு அதிர்ச்சி. தனது சகோதரி தரையில் படுத்து மஞ்சமில்லாமல் உறங்குகிறாள் என்று சோகமடைந்தான். மேலும் அவர்கள் பேசிக்கொண்டதையெல்லாம் காது கொடுத்துக் கேட்டிருந்தான். உடனே தந்தையிடம் விவரம் தெரிவிப்பதற்காக விரைந்தான்.
அரண்மனை வாசலில் நின்றிருந்த துருபதன் த்ருஷ்டத்யும்னன் வராமல் துடித்தான். அவன் வருவது தெரிந்ததும் ஓடிச்சென்று
“கிருஷ்ணை எப்படியிருக்கிறாள்? யாரால் கொண்டு போகப்பட்டாள்? பாண்டு புத்திரர்கள் பிழைத்திருக்கிறார்களா? அர்ஜுனன் தான் ஜெயித்தானா??” என்று தவிப்புடன் கேட்டான்.
[ஸ்வயம்வரபர்வம் முடிந்தது]

No comments:

Post a Comment