பலராமரும் மற்றும் சில வ்ருஷ்ணிகுலத்தவர்களும் சன்னியாசியைக் கண்டு வணக்கத்தோடு அவர் கண் திறக்கும் தருணத்திற்காகக் காத்திருந்தனர். சிறிது நேரம் அமைதியாய்க் கழிந்த பின்னர் கண்களில் கருணை சுர்க்க கண் திற்ந்தான் அர்ஜுனன்.
“நீங்கள் அனைவரும் இங்கே அமருங்கள்.” என்று தான் அமர்ந்திருந்த கற்பாறைக்கு அருகில் கையைக் காட்டினான். அவனைச் சுற்றி அனைவரும் உட்கார்ந்தார்கள்.
பலராமர் எழுந்து கை கூப்பினார்.
“தபோதனரே! உம்மைப் பார்த்தால் பல க்ஷேத்திரங்களையும் தீர்த்தங்களையும் வனங்களையும் பார்த்தவர் போலத் தெரிகிறது. எங்களுக்கும் நீங்கள் கண்டவைகளை தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன்” என்று பவ்யமாகக் கேட்டார்.
அர்ஜுனன் தனது இந்த வனவாசப் பர்வத்தில் கண்ட அனைத்தையும் ஒன்றுவிடாமல் அழகாக பிரவசனம் செய்தான். அனைவரும் அவனது கதையில் கட்டுண்டு கிடந்தார்கள்.
“இந்த யதி நம்முடைய தேசத்துக்கு அதிதியாக வந்திருக்கிறார். இவரை நாம் மரியாதை செய்து அனுப்ப வேண்டும். எங்கு தங்க வைக்கலா ம்?” என்று கேட்டான் சாத்யகி. பலராமருடன் அனைவரும் யோசனையில் இறங்கினார்கள். அப்போது கண்ணபிரான் அங்கு வந்தார்.
"கேசவா! வா..வா... சரியான சமயத்தில் வந்திருக்கிறாய்” என்று கிருஷ்ணரின் கையைப் பிடித்துக்கொண்டார் பலராமர்.
“என்னண்ணா?” என்றார் ஒன்றும் தெரியாததுபோல.
“இவர் பல க்ஷேத்திரங்களுக்கும் தீர்த்தங்களுக்கும் சென்று வந்திருக்கும் சன்னியாசி. நமது தேசத்துக்கு அதிதி. இப்போது இங்கே மழைக்காலம். இந்த மாரிக்கால நான்கு மாதமும் இங்கேயிருந்து தவமியற்றலாம் என்று எண்ணியிருக்கிறார். எங்கே தங்கவைக்கலாம் சொல்.. சொல்...”
“அண்ணா! நீங்கள் தான் பெரியவர். உங்களுக்குதானே எங்கே தங்கவைக்கலாம் என்று தெரியும். நான் யார் இதைச் சொல்வதற்கு?” என்று சொன்னவர் கடைக்கண்ணினால் கபடசன்னியாசி வேஷத்திலிருந்த அர்ஜுனனை ஒரு கணம் பார்த்துக்கொண்டார்.
பலராமருக்கு பரம திருப்தி. கண்ணனைக் கட்டிக்கொண்டார்.
“நாலுமாதமும் இந்த சன்னியாசி சுபத்திரையின் கன்னியாந்தபுரத்தில் போஜனம் செய்துகொண்டு தோட்டத்தில் இருக்கும் கொடிப்பந்தல்களில் வசிக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. நீ அனுமதி கொடுத்தால் யாதவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். என்ன சொல்கிறாய்?”
“இளமையும் இன்சொல்லும் இவருக்கு இயற்கையாகவே இருக்கிறது. இவர் கன்னியாந்தபுரம் சமீபத்தில் வசிப்பது என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இருந்தாலும் பெரியவர் நீர் சொல்கிறீர்கள் என்பதால் தர்மம் அறிந்தவர் என்பதால் அப்படியே செய்கிறேன்.”
”இவர் சத்தியமே பேசுகிறவர். ஜிதேந்திரியர். சன்னியாஸாஸ்ரமத்தை வகிப்பவர். இவரை கன்னியாந்தப்புரத்திற்கு அழைத்துக்கொண்டு செல். சுபத்திரையிடம் இவருக்குப் போஜனம் அளித்து பானம் பருகுவதற்குக் கொடுக்கச் சொல். ராஜோபசாரமாக இருக்கட்டும்”
“அப்படியே செய்கிறேன்” என்று சொன்ன ஸ்ரீகிருஷ்ணர் அங்கே அமர்ந்திருந்த அர்ஜுனனைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தன் ரதத்தில் ஏறி துவாரை நோக்கிச் செலுத்தினார்.
அரண்மனையில் ருக்மணியையும் சத்யபாமாவையும் அழைத்தார்.
“பாண்டு புத்திரனான அர்ஜுனன் இங்கே தீர்த்தயாத்திரைக்கு வந்திருக்கிறான்” என்றார்.
“அர்ஜுனனை நாம் எப்போது காண்போம் என்று நாங்களிருவரும் ஆசைப்பட்டோம்.”
கிருஷ்ணர் பக்கத்தில் இருந்த அந்த சன்னியாசி அதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டார். நிஜரூபம் தெரியாமல் வந்திருக்கும் அர்ஜுனனை அனைவரும் பூஜிக்கிறார்கள் என்று தெரிந்து கிருஷ்ணரும் மகிழ்ந்தார். விளையாட்டாக தனது அன்புக்குரியவனான அர்ஜுனனை அவரும் பூஜித்தார். அரைக்கண்ணால் அதைக் கண்டு நானத்துடன் ரசித்தான் அர்ஜுனன்.
தனது சகோதரியான சுபத்திரை ஒரு ஓரமாக நின்றிருந்தாள்.
“சுபத்திரா! இங்கே வாம்மா.... இந்த ரிஷியைப் பார். இவர் நம் தேசத்துக்கு அதிதியாக வந்திருக்கிறார். உன்னுடைய கன்னியாந்தபுரத்தில் வசிக்கப்போகிறார். இந்த யதியை நீ தினமும் பூஜித்துவா. இதை நான் மட்டும் சொல்லவில்லை. அண்ணா பலராமரும் இதைத்தான் விருப்பப்படுகிறார்.”
தனது வேல் போன்ற விழிகளால் சுபத்ரா அந்த ரிஷியை பாதாதிகேசம் பார்த்தாள். சன்னியாசி வேஷத்தில் கபடமாக வந்திருக்கும் அர்ஜுனனுக்கு அவளது பார்வையால் குறுகுறுவென்றிருந்தது. மன்மதன் மலரம்பு இல்லாமல் மலர் ஈட்டியை அவன்மேல் எறிந்தான்.
“அவர் என்ன சொல்கிறாரோ அவையனைத்தும் தயங்காமல் செய்துகொடு... சரியா?” என்றார் ஸ்ரீகிருஷ்ணர். காதில் அணிந்திருந்த வைரக்குண்டலங்கள் அசைந்தாட தலையசைத்தாள் சுபத்திரா.
”முன்பெல்லாம் கூட யாதவர்களைத் தேடிவந்த யதிகள் கன்னியாந்தப்புரங்களில்தான் வாசம் செய்தார்கள். கன்னிகைகள் சோம்பலாக இல்லாமல் அவர்களுக்கு பணிவிடைகள் செய்தார்கள். நீயும் அதையெல்லாம் அனுசரி” என்று கிருஷ்ணன் கூடுதலாக சில விஷயங்களை வேண்டுமென்றே சொன்னான்.
சுபத்திரைக்கு மனதில் வேறு எண்ணங்கள் முளைத்தன. தோள்களில் பந்து போன்ற திமில் இருந்தது. புஜபலங்கள் நிறைந்த க்ஷத்ரியன் போலத்தான் அந்த ரிஷி அவளுக்குத் தெரிந்தார். யோசனையுடன் கிருஷ்ணரைப் பார்த்துச் சொன்னாள் “நீர் சொன்னபடியே செய்கிறேன். இந்த பிராமண ஸ்ரேஷ்டரை எனது பணிவிடைகளினால் சந்தோஷப்படுத்துகிறேன்”
கன்னியாந்தப்புரத்திலேயே கொஞ்ச காலம் வசித்தான் அர்ஜுனன். அவன் முன்னால் அங்குமிங்கும் சென்று வந்த சுபத்திரையை ஓரக்கண்ணால் கண்டு ரசித்தான். மனம் முழுவதும் அவள் மீது காதலில் அலைந்தது. அவள் அழகுக்கு முன்னால் திரௌபதி கூட நிற்க முடியாது என்று நினைத்துக்கொண்டான். காமன் அங்குசம் போட்டு அவனது தீர்த்தயாத்திரையை இந்த இடத்தில் நிறுத்திவிட்டான்.
ஸ்வாஹா தேவியைக் கண்ட அக்னிதேவன் போல அவள் மேல் அதீத ஆசையை வளர்த்துக்கொண்டான். ஏற்கனவே கதன் என்னும் யாதவன் அர்ஜுனனின் பராக்கிரமங்களைப் பற்றி சுபத்திரையிடம் சொல்லியிருந்தான். ஒரு முறை மின்னல் வெட்டி இடிச்சத்தம் கேட்டபோது அர்ஜுனனை அதற்கு உபமானமாகச் சொல்லி கிருஷ்ணரும் அவன் வரலாற்றை அவளுக்குச் சொல்லியிருந்தார்.
சுபத்திரை அர்ஜுனன் மீதான பிரியத்தை அப்போதிலிருந்தே வளர்த்துக்கொண்டாள். வீதியில் இரு யாதவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் போது கூட “யே! அர்ஜுனன் கூட என் முன்னே நிற்க முடியாது. நீ பெரிய ஆளோ?” என்று வசனம் பேசிக்கொள்வார்கள். ஒரு முறை தோழி ஒருத்தியின் வீட்டில் நடந்த சுபநிகழ்ச்சியில் ஒரு சிறு குழந்தையை “நீ அர்ஜுனனைப் போல யாரும் வெல்லமுடியாத வில்லாளி ஆவாய்” என்று ஆசீர்வதிக்கக் கண்டு அவன் மீது அப்போதே மையலுற்றாள்.
அவனுடைய அழகைப் பற்றியும் பலர் பாராட்டும் அவனது திறமைகளைக் கேட்டும் காதலில் தவித்தாள். யாதவர்களில் எவனெல்லாம் குருஜாங்கல தேசம் சென்று திரும்புகிறார்களோ அவர்களையெல்லாம் அழைத்து “அர்ஜுனனைப் பார்த்தாயா? அவன் எப்படியிருப்பான்?” என்று கதை கேட்பாள். இப்படி அர்ஜுனனைப் பற்றி பலமுறை பலபேரிடம் விசாரித்ததில் அவனது பிம்பத்தை தனது இருதயத்தில் பத்திரமாக வைத்துப் பூட்டியிருந்தாள் சுபத்திரை.
பொய்த் தவத்தில் மூழ்கி அரைக்கண்கள் திறந்து சுபத்திரை நடந்து போவதைப் பார்த்து ரசிக்கும் அந்த ரிஷி வேஷத்தில் இருந்தவனை இன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்தாள். அடிக்கடி நாண் எடுத்து பூட்டியதால் அவனது புஜங்களில் புண்ணாகி அது ஆறிப்போன வடு இருந்தது. நீண்ட சர்ப்பங்களைப் போல புஜங்கள் இருந்தன. அவளுக்கு இவன் அர்ஜுனன் தானோ என்ற சந்தேகம் வலுத்தது.
“முனிவரே!”
கண்களில் கருணாசாகரத்தை வரவழைத்துக்கொண்டு சுபத்திரையை ஆசி வழங்குவது போல கையைத் தூக்கி “என்ன வேண்டுமம்மா?” என்று கேட்டான் அர்ஜுனன்.
“நீர் வெகுதூரம் நடையாய் நடந்து பல தேசங்கள், தடாகங்கள் , காடுகள், நதிகள் என்று பார்த்திருப்பீர்கள். அதைப் பற்றியெல்லாம் எனக்குச் சொல்வீர்களா?” என்றாள் கண்கள் படபடக்க. அதில் அர்ஜுனனின் இதயம் தடதடக்க பல வேடிக்கையான வார்த்தைகளால் கதை சொன்னான். அவன் அநேக கதைகள் சொன்னதும் சுபத்திரை அது அர்ஜுனன் தான் என்பதை நிச்சயம் செய்துகொண்டாள்.
“
“முனிவரே! நீர் காண்டவபிரஸ்தம் சென்றதுண்டா? என் அத்தையாகிய குந்தியைப் பார்த்திருக்கிறீர்களா?” என்றாள் ஆர்வத்துடன். கண்கள் அவன் கண்களை விழுங்கியபடி இருந்தது.
“உம். பார்த்திருக்கிறேன்” ஒரு வார்த்தையில் நிறுத்திவிட்டான் அர்ஜுனன்.
“அங்கே யுதிஷ்டிரர் தனது சகோதரர்களுடன் சந்தோஷமாக இருக்கிறாரா?”
“இருக்கிறார்.” அவ்ளோதான். அதற்குமேல் பேசவில்லை.
“பீமன் தனது கடமைகளைச் செய்து வருகிறாரா?”
“வருகிறார்”. இவள் என்னைப் பற்றிக் கேட்பதற்குப் பதிலாக வீட்டில் இருக்கும் அனைவரையும் விஜாரிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு அவளிடம் விளையாடினான் அர்ஜுனன். கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லி நிறுத்தி அவளைச் சீண்டினான். அவனது வழிக்கு வந்தாள் சுபத்திரை.
“நீங்கள் பார்த்தனைப் பார்த்திருக்கிறீர்களா? அவனைக் கண்டாவது அல்லது கேட்டாவது இருக்கிறீர்களா? அவன் வில்லுக்கு யாரும் சமானம் இல்லையாமே?”
அவளின் இந்தக் கேள்விக்கு விழுந்து விழுந்து சிரித்தான் அர்ஜுனன்.
“முனிவரே! ஏன் இப்படி சிரிக்கிறீர்கள்?” என்றாள் பொய்க்கோபத்துடன் சுபத்திரை.
“குந்திதேவி புத்திரர்களோடும் மருமகளோடும் சந்தோஷமாக இருக்கிறாள். அர்ஜுனன் சன்னியாசி ரூபத்தில் துவாரகையில் இருக்கிறான்” என்றான் கண்களைச் சிமிட்டியபடியே. நாணத்தில் தலை குனிந்தாள் சுபத்திரை. கால்களால் நிலத்தைக் கீறி கோலம் போட்டாள்.
“அர்ஜுனன் நாந்தான். என்னைப் பார்த்தும் கண்டுபிடிக்காமல் இருக்கிறாயே! உன் மீது எனக்கு அளவில்லாப் பிரியம் இருக்கிறது. ஒரு நல்ல நாளில் உன்னை நான் விவாஹம் செய்துகொள்வேன்”
எழுந்து அவளது மூச்சுக்காற்று படும் இடம் வரை வந்து நடந்து சென்றான்.
சுபத்திரைக்கு வெட்கம் வந்தது. காதல் ஊற்று பெருக்கெடுத்தது. மஞ்சத்தில் குப்புறப் படுத்துக்கொண்டு அர்ஜுனனைப் பற்றிய சிந்தனையோடே அன்னபானம் இன்றி இருந்தாள். அதன்பிறகு சன்னியாசிக்கு என்று அவள் செய்துகொண்டிருந்த பணிவிடைகளைச் செய்யவில்லை. அவனைப் பார்த்தாலே நாணம் பிறந்து கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.
கிருஷ்ண பகவான் இதை ஞானதிருஷ்டியினால் அறிந்து கொண்டு ருக்மிணிதேவியை அர்ஜுனனுக்கு போஜனம் கொடுக்க ஏற்பாடு செய்தார். அர்ஜுனனும் சித்தபிரமை பிடித்தவன் போல இருந்தான். சுபத்திரை காதல் ஏக்கத்தில் இளைத்துப்போனாள்.
சுபத்திரையின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டத்தைக் கவனித்த தேவகிக்கு அவள் மேல் சந்தேகம் எழுந்தது. ருக்மிணியைப் பிடித்து “சுபத்திரைக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டாள்.
ருக்மிணி என்ன சொல்வது என்பது போல நெளிந்தாள்.
"அம்மா! சன்னியாசக் கோலத்தில் வந்தவன் அர்ஜுனன். அவனைக் கண்டு இவள் மையல் கொண்டாள். நீரும் சோறும் இல்லாமல் அவனையே நினைப்படி மஞ்சத்தில் இருக்கிறாள்.”
நேரே சுபத்திரை கிடக்குமிடம் சென்ற தேவகி “சுபத்ரா! நீ கவலையை விடு. நான் வசுதேவரிடமோ அல்லது கிருஷ்ணனிடமோ இதை தெரிவித்து உன் துன்பம் தீர்க்கிறேன்” என்று அவளைப் பார்த்து ஆதரவாகச் சிரித்தாள்.
விடுவிடுவென்று அங்கிருந்து நடந்து போய் வசுதேவர் அமர்ந்திருந்த அறைக்குச் சென்றாள்.
“சுபத்திரை சுகமாக இல்லை. சன்னியாசியாக கபடவேடமிட்டு வந்திருப்பவன் பாண்டவனாகிய அர்ஜுனன்.அவனை திருமணம் புரிய சுபத்திரை சித்தமாயிருக்கிறாள். நீங்கள்தான் அக்ரூரன் கிருஷ்ணன் சாத்யகி ஆகியோரிடம் கலந்து பேசி இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்”
வசுதேவர் அவர்களை அழைத்தார். பின்னர் அன்றிலிருந்து பன்னிரெண்டாவது தினத்தில் விவாகம் நடத்தவேண்டும் என்று குறித்துக்கொண்டார்கள்.
சுபத்திரை விவாகத்தில் பலராமரின் கணக்கு வேறாக இருக்கும் என்று எண்ணினார் கிருஷ்ணர். ஆகையால் அவருக்குத் தெரியாமல் விவாகம் நடத்த ஒரு திட்டமிட்டார். துவாரைக்கு அருகில் இருக்கும் கடலில் உள்ள ஒரு தீவில் மஹாதேவ உற்சவம் இரவுபகலாக முப்பத்துநான்கு நாட்கள் நடக்கவிருப்பதாகவும் அதற்கு யாதவர்கள் அனைவரும் இன்றிலிருந்து நான்காவது நாள் தங்கள் பெண்டு பிள்ளைகளோடு கப்பல்களில் ஏறிச் செல்லவிருப்பதாகவும் பறையறிவிக்கச் சொன்னார் கிருஷ்ணர்.
எல்லா யாதவர்களும் கடற்கரையில் குவிந்தார்கள். கப்பல்கள் பல சமுத்திரத்தில் நங்கூரமிட்டு நிற்க அதை கரையில் உள்ளோர் அடைவதற்காக குட்டிப் படகுகள் கரையோரத்தில் கட்டிப்போடப்பட்டிருந்தன. குழந்தைகளும், குமரிகளும், இளைஞர்களும், முதியவர்களும் ஏராளமானோர் கப்பலுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள்.
தடதடக்கும் இதயத்தோடும் படபடக்கும் கண்களோடும் சுபத்திரை கண்ணனை நெருங்கி “அந்த சன்னியாசி பகவான் இன்னமும் பன்னிரெண்டு நாட்கள் இங்கே இருப்பாராம். அவரது பூஜைக்கு இடையூறில்லாமல் யார் அவருக்கு சிஷ்ருஷைகள் செய்வார்கள்?” என்று ஒன்றும் அறியாத பெண் போலக் கேட்டாள்.
கிருஷ்ணர் அர்த்தபுஷ்டியாக சிரித்தார்.
“யதுபுத்ரியே! உன்னை விட யாரால் அவரை சிறப்பாகப் பார்த்துக்கொள்ள முடியும்? நீயே இங்கிருந்து அவருடைய எல்லாக் காரியங்களையும் செய்” என்று அனுமதி அளித்துவிட்டு ஜாடையாக கண் சிமிட்டி எல்லோரையும் அழைத்துக்கொண்டு அந்தத் தீவிற்குச் சென்றுவிட்டார்.
இரண்டாவது சொர்க்கம் போலிருந்தது அந்தத் தீவு. யாதவர்கள் அனைவரும் அங்கே மகிழ்ந்திருந்தார்கள். ஆட்டமும் பாட்டுமாக அங்கே பொழுதைக் கழித்தனர். மஹாதேவ பூஜையும் நடைபெற்றது.
இங்கே துவாரகையில் அர்ஜுனனையும் சுபத்திரையும் மட்டும் தனியே மோகித்துக் கிடந்தனர். எல்லாம் பேசி கடைசியில் விவாகம் புரிந்துகொள்வது பற்றி ஒரு நாள் பேச்சு எழுந்தது.
“சுபத்ரா! தந்தை, சகோதரன், தாய், மாதுலன், தந்தையின் தந்தை, தந்தையின் சகோதரன் இவர்கள் கன்னிகையைத் தானம் செய்துகொடுக்கலாம். இவர்கள் அனைவருமே இப்போது மஹாதேவ உற்சவத்திற்காக உள்தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். என்னுடைய உறவினர்களும் வெகுதூரத்தில் இருக்கிறார்கள். ஆகையால் நாம் இருவரும் காந்தர்வ விவாஹம் புரிந்துகொள்வோம்”
நைச்சியமாகப் பேசினான் அர்ஜுனன். சுபத்ரா வாய்மூடி பேசாமல் இருந்தாள். எப்போது விவாகம் என்று உள்ளம் துள்ளிக்கொண்டிருந்தது. அர்ஜுனன் மேலும் பேசினான்.
”சாஸ்திரப்பிரகாரமாக தனது தந்தையினால் ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டவள் பத்னி. தன்னைக் காப்பாற்றுவதற்காக கன்னிகாதானத்தில் பெறப்பட்டவள் பார்யை. வரனுடைய தந்தையால் தர்மமாக பெறப்பட்டு வீட்டுக்கு அழைத்துவந்து வயது வந்தபின் அவரால் விவாஹம் செய்துவைக்கப்பட்டவள் தாரம் அல்லது பிதிர்கிருதை. தானே விரும்பிப் புத்ரோத்பத்திக்காக காந்தர்வ விவாகம் செய்துகொள்ளப்பட்டவள் பிரஜாவதி. தன்னுடைய கணவனை தானே வரித்துக்கொள்பவன் ஜாயை. இதில் பத்னி, தாரம், பார்யை, ஜாயை ஆகியோர்க்கு அக்னிசாக்ஷியாக விவாஹம் செய்ய வேண்டும். காந்தர்வ விவாஹத்திற்கு ஹோமம் கிடையாது.மந்திரஙக்ள் கிடையாது. நாம் காந்தர்வ விவாஹம் புரிந்துகொள்வோம்.”
ஒரு இரவு முழுவதும் இதுபோன்ற விவாஹ தர்மங்கள் பற்றிப் பேசிக்கொண்டேயிருந்தான் அர்ஜுனன். கண்கொட்டாமல் அவனைப் பார்த்தபடி அருகில் அமர்ந்திருந்தாள் சுபத்ரா. கன்னங்களை தனது மடக்கிய காலின் முட்டியின் மேல் ஒருக்களித்து வைத்து பேசும் அவனை ரசித்துக்கொண்டிருந்தாள்.
“உத்தராயணம் விவாகத்திற்கு சிறந்தது. வைகாசி மாதம் உசிதம். சுக்ல பக்ஷம், ஹஸ்த நக்ஷத்திரம் திருதியை திதி மகர லக்னம். இவையனைத்துமே விவாஹம் செய்வதற்கு மிகவும் சிறந்தது. மைத்ரம் என்னும் முஹூர்த்தம் நம்மிருவருக்கும் மிகவும் சிறப்பானது. இன்றிரவு இவையனைத்தும் ஒன்று சேர்ந்து வருகிறது. ஜகத்தின் கர்த்தாவாகிய நாராயணன் கூட அறியா வண்ணம் நாம் விவாகம் செய்துகொள்ளலாம்” என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கூப்பிட்டான் அர்ஜுனன்.
கிருஷ்ணனை சிந்தித்திக்கொண்டிருந்த சுபத்ரா கண்களை நீர் மறைக்க அமர்ந்திருந்தாள். அர்ஜுனன் தனது கொடிப்பந்தல் வீட்டிற்குள் சென்று இந்திரனை வேண்டினான். உடனே இந்திரன் தனது மனைவியான இந்திராணியுடனும் நாரதர் மற்றும் தேவக்கூட்டங்களுடன் குசஸ்தலி என்னும் அந்த இடத்திற்கு வந்தான். கந்தர்வர்களும் தேவலோகத்து நாட்டியப் பெண்களும் குவிந்தனர்.
சுபத்திரை கிருஷ்ணனை எண்ணித் தவித்தாள். இரவில் பலராமர் அந்தத் தீவில் தூங்கிக்கொண்டிருக்க அக்ரூரர் சாத்யகி என்னும் தன்னுடைய நெருங்கிய பந்துக்களுடன் துவாரகாபுரிக்குள் சரியான நேரத்தில் நுழைந்தார்.
இந்திரன் மற்றும் தேவாதிதேவர்கள் முன்னிற்க சாஸ்திரபிரகாரம் அர்ஜுனனுக்கு அங்கே விவாஹம் நடந்தது. காசியப மஹரிஷி ஹோமம் செய்தார். நாரதர் முதலானோர் நிறைய ஆசீர்வாதங்களை வழங்கினார்கள். தேவேந்திரன் அர்ஜுனனுக்கு ஸ்நானம் செய்வித்து கிரீடம் தோள் வளை என்று அனைத்து ஆபரணங்களையும் பூட்டினான். இந்திரனை தோற்கடிக்கும் தோற்றமுடையவனாக ஆனான் அர்ஜுனன்.
ஹோமம் வளர்த்து பாணிக்கிரஹணம் செய்துகொண்டான்.
“அர்ஜுனனும் சுபத்திரையும் ஒருவருக்கொருவராக பிறந்தவர்கள். உத்தம லக்ஷணங்களோடு இருக்கிறார்கள்” என்று கிருஷ்ணர் பாராட்டினார். கந்தர்வர்களும் அப்ஸரஸ்களும் ரிஷிகளும் தேவர்களும் என்று துவாராகபுரி விருந்தினர்களால் நிறைந்திருந்தது. அனைவரும் அந்த விவாகத்தில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் வழங்கினார்கள்.
“அர்ஜுனா! இருபத்தியிரண்டு நாட்கள் நீ இங்கே வசிக்கலாம். பின்னர் சைப்யம், ஸுக்ரீவம் ஆகிய இரண்டு உயர்ந்த ஜாதிக் குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறி காண்டவ பிரஸ்தம் செல்லலாம். அதுவரை யதி வேஷத்தில் அவளுடன் நீ இந்த கிருஹத்தில் இருக்கலாம்”
இப்படிச் சொல்லிவிட்டு ஸ்ரீகிருஷ்ணர் உள்தீவுக்குச் சென்றார். விவாகம் முடிந்த அர்ஜுனனும் சுபத்திரையும் களித்திருந்தார்கள்.
சுபத்திரையுடன் காண்டவபிரஸ்தம் செல்வது அவ்வளவு சுலபமானதல்ல என்று அப்போது அர்ஜுனனுக்குத் தெரியாது.
No comments:
Post a Comment