Friday, March 9, 2018

பாதாளலோகத்தில் பீமன்



பீமனின் பிரதாபங்களை துரியோதனன் விரும்பவில்லை. எப்போதும் எரித்துவிடுவது போல அவனைப் பார்த்து குமுறுவான். எப்படியாவது அவனைக் கொன்றுவிட வேண்டும் என்று சமயம் பார்த்துக் காத்திருந்தான் துரியோதனன்.

கங்கைக்கரை ஓரம். பிரமாணகோடி. துரியோதனன் அங்கே ஜலக்கிரீடைகளுக்குப் பிறகு சுத்த வஸ்திரங்கள் மாற்றிக்கொள்வதற்கும் ஓய்வு எடுத்துக்கொள்வதற்கும் வர்ணமயமான சில கூடாரங்களைக் கட்டினான். துரியோதனின் நூறு பேர்களுடன் தனது சகோதரர்கள் புடைசூழ பீமன் நெட்டையாய் ஆகிருதியாக மதயானை போல நடுவில் செல்வான்.
ராஜபாலகர்கள் ஆனதால் அரண்மனையிலிருந்து அவர்களுக்கு அயர்ச்சி ஏற்படும் போது சாப்பிட தாம்பாளம் தாம்பாளமாக பட்சணங்கள் அடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கில் சேவகம் செய்ய ஆட்கள் அனுப்பப்பட்டார்கள். கங்கை நீரில் குதித்து கும்மாளமிட்ட பின்பு அனைவரும் கூடாரத்துக்குள் வந்து வஸ்திரங்களை மாற்றிக்கொண்டு அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்த விதம் விதமான பதார்த்தங்களைப் புசித்தார்கள்.
துரியோதனன் அப்போது ஒரு சூழ்ச்சி செய்தான்.
“பீமா! இன்று நாம் வெகுநேரம் விளையாடிவிட்டோம். இங்கேயே தங்கிவிட்டு நாளை அரண்மனை செல்வோம். காலையிலும் எழுந்து விளையாடலாம்.”
“ஓ! நல்ல யோசனை துரியோதனா! சாப்பிடுவதற்கு காலையில் அன்னம் கிடைக்குமல்லவா?”
“தாராளமாகக் கிடைக்கும். ஏற்கனவே காவல்காரர்களிடம் சொல்லிவிட்டேனே”
நிறைய சாப்பிட்டதால் பீமனுக்குக் கண்களை சுழற்றிக்கொண்டு வந்தது. தர்மண்ணாவும் அர்ஜுனன் நகுல சகதேவத் தம்பிகளும் எங்கே இருக்கிறார்கள் என்றுகூட அவனால் பார்க்கமுடியவில்லை. அந்த மாளிகை போல இருந்த கூடாரத்தின் ஒரு ஓரத்தில் படுத்து சவம் போல உறங்கினான்.
துரியோதனன் அந்த கூடாரத்தின் அருகில் படர்ந்திருந்த கொடியொன்றை இழுத்துப் பறித்தான். விடுவிடுவென்று பீமன் உறங்கிக்கொண்டிருக்கும் இடத்துக்கு வந்தான். அந்தக் கொடிகளினால் அவனுடைய கை கால்களை இறுகக்கட்டினான். தன்னுடைய தம்பிகள் இன்னும் மூன்று பேரைக் கூப்பிட்டு பீமனை அலேக்காகத் தூக்கி கங்கையில் தொபகடீர் என்று வீசி எறிந்தான்.
ஜலத்திற்குள் மூழ்கும் போது விழித்துக்கொண்ட பீமன் கை கால்களை நீச்சல் அடிப்பதற்காக உதறிய போது அந்தக் கொடிகள் பிய்த்துக்கொண்டுக் கட்டுக்கள் அவிழ்ந்தது. காலை கீழே இரண்டு தடவை உந்தியதில் மேலே வந்துவிட்டான்.
சொட்டச் சொட்ட ஈரத்துடன் கூடாரத்துக்குள் பீமன் நுழைவதைப் பார்த்த துரியோதனனுக்கு உடம்பெல்லாம் எரிந்தது. ச்சே தப்பித்துவிட்டானே என்று உள்ளங்கையை அழுத்திக் குத்திக்கொண்டான்.
“அண்ணா! என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. நன்கு தூங்கிக்கொண்டிருந்த நான் கங்கை நதியின் உள்ளே சென்றுகொண்டிருந்தேன். கைகால்களை உதறி மேலே வந்துவிட்டேன். இது எப்படி நடந்திருக்கும்?” என்று கூடாரத்தின் கொல்லையில் நின்றிருந்த தர்மபுத்திரரிடம் கேட்டான் பீமன்.
“கூடாரத்தின் ஓரத்தில் படுத்திருந்தாயா பீமா? உருண்டு விழுந்திருப்பாய்” என்று சமாதானம் சொன்னார் தர்மர்.
திரும்பவும் இரவு உணவு உண்டுவிட்டு இன்னொரு இடத்தில் படுத்து அயர்ந்து உறங்கினான் பீமன். நள்ளிரவில் எழுந்து சுற்றும்முற்றும் பார்த்தான் துரியோதனன். ஆங்காங்கே குறட்டை சப்தத்துடன் மொத்த கூடாரமும் உறங்கிக்கொண்டிருந்தது. பீமன் ஒரு ஓரத்தில் சயனத்தில் இருந்தான். யாருக்கும் தெரியாதபடி பூனை போல நடந்து வெளியே வந்தான் துரியோதனன்.
கூடாரத்தின் அருகில் இருந்த பெரிய அரசமரத்தின் பின்னால் தலைக்கு முண்டாசுடன் ஒருவன் காத்திருந்தான். துரியோதனனைப் பார்த்தவுடன் “வந்தனங்கள் அரசே” என்று வணங்கினான்.
“கொண்டு வந்திருக்கிறாயா?”
“ம்... அங்கே பாருங்கள்” என்று மரத்தின் அடியில் கையைக் காட்டினான்.
மூங்கிலில் வட்டம் வட்டமான பெட்டிகள் பத்து அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. ஒன்றைத் திறந்து காட்டினான் அவன்.
சட்டென்று இரண்டு பாம்புகள் தலையைத் தூக்கிப் படமெடுத்தன. தூரத்தில் எரியும் விளக்கின் வெளிச்சம் அந்தப் படமெடுத்த பாம்பின் தலையில் டாலடித்தது.
”மூடு.. மூடு...” என்று துரியோதனன் ரகஸிய குரலில் சொன்னான்.
“வா.. அந்தப் பெட்டிகளை எடுத்துக்கொண்டு என் பின்னாலே வா...” என்று அடிமேல் அடிவைத்து நடந்து சென்றான் துரியோதனன். அந்தப் பாம்பாட்டிக்கு உதவி புரிய இன்னொருவன் அடுத்த மரத்தின் பின்னால் நின்றிருந்தான். அவனும் இவனும் பெட்டிகளைக் கையிலும் தலையிலும் சுமந்து கொண்டு கூடாரம் செல்லும் துரியோதனனைப் பின் தொடர்ந்தார்கள்.
பீமன் உறங்கிக்கொண்டிருக்கும் இடத்தைக் காட்டி துரியோதனன் அந்தப் பாம்பாட்டியிடம் “அதோ.. குண்டாக சிறு மலைபோல படுத்திருக்கிறானே.. அவனைத் தான்.. பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கையைக் காட்டிவிட்டு தன்னுடைய சயன இடத்திற்கு விடுவிடுவென்று சென்றுவிட்டான்.
அந்த பாம்பாட்டிகள் இருவரும் ஒவ்வொரு பெட்டியிலிருக்கும் பாம்புகளையும் கைகளால் அள்ளி தூங்கிக்கொண்டிருக்கும் பீமனின் வயிற்றின் மேலும் முகத்திலும் தொடையிலும் பொத் பொத்தென்று போட்டார்கள். வெகுநாட்களாக அடைத்துவைக்ப்பட்டிருந்த அந்த விஷமுள்ள பாம்புகள் அவன் அகன்ற மார்பில் கொத்தின. தொடையில் போட்டவைகள் மர்மஸ்தானத்தில் கொத்தின. எதையும் சட்டை செய்யாமல் தூங்கியவன் ஏதோ எறும்பு கடித்ததுப் போல எழுந்து பார்த்தான்.
மேனியைச் சுற்றிலும் எல்லா பாம்புகளும் இறுக்க சுற்றிக்கொண்டிருந்தன. கொசு அடிப்பது போல ஒவ்வொன்றாக கையால் அடித்தும் நசுக்கியும் கொன்றான். பின்னர் அவனுக்கு எதிராக வந்த துரியோதனின் சாரதியைப் பார்த்து அவனுக்கு இதில் தொடர்பு உள்ளதோ என்ற சந்தேகத்தில் புறங்கையால் அவனது பின்னந்தலையில் தட்டினான். அவன் குப்புற விழுந்து உயிர் விட்டான்.
கங்கையின் அடியில் இருந்து காலையில் சூரியன் புறப்பட்டான். விடிந்து வெகுநாழிகைகள் கழித்து கண்ணைத் திறந்தான் பீமன். உடனே எதிரில் தெரிந்தான் துரியோதனன். அவனுக்கு பெரிய ஆச்சரியம். விஷமுள்ள பாம்புகளாலும் இவனை எதுவும் செய்யமுடியவில்லையே! என்று கண்கள் சிவந்தான். இவனை எப்படி தீர்த்துக்கட்டுவது என்று யோசிக்கும் வேளையில் மாமன் சகுனி நியாபகம் வந்தான்.
ஒரு ரதத்தை எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு விரைந்தான். மாமனை அவனது அறையில் சென்று சந்தித்து விவரங்கள் கூறினான்.
“நான் கவனித்துக்கொள்கிறேன் மருமானே! கவலைப்படாதே”
“எப்படி அவனை தீர்த்துக்கட்டுவது?”
“வலனன் என்றொரு சமையற்காரன் இருக்கிறான். அவனை விசேஷ பட்சணங்கள் செய்யச்சொல்கிறேன். அதில் சில பட்சணங்களில் காளகூட விஷத்தைத் தடவிவிடுகிறேன். அவைகளை பீமன் உண்ணுவதற்குக் கொடுப்போம். விஷம் உடலில் பரவி இறந்துவிடுவான்” என்று அரண்மனையே அதிரும்படி சிரித்தான்.
துரியோதனன் புதுத்தெம்போடு பிரமாணகோடிக்குச் சென்று கூடாரத்தை அடைந்தான். பிற்பகல் நேரத்தில் விசேஷமாகச் செய்யப்பட்ட பட்சணங்கள் வந்து சேர்ந்தன. அனைவரும் புசிக்கும்போது பீமனுக்கு மட்டும் ஒரு பெரிய பொற் தாம்பாளத்தில் முட்டாகக் குவித்து அந்த பட்சணங்கள் பறிமாறப்பட்டன. அதில் காளகூடமெனும் விஷம் தடவப்பட்டிருந்தது.
சிறிதும் சலனமேயில்லாமல் அனைத்து பட்சணங்களையும் சாப்பிட்டான். ஒரு பெரும் ஏப்பம் விட்டு ஜீரணம் செய்தாகிவிட்டது என்று அடையாளப்படுத்திவிட்டு மீண்டும் விளையாட ஓடினான். துரியோதனனும் சகுனியும் வாயை மூடாமல் இதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பின்னர் துரியோதனனும் சகுனியும் பல சதித்திட்டங்களைத் தீட்டினார்கள். எதிலும் பீமனை வீழ்த்தமுடியவில்லை.
யுயுத்ஸு இந்த கெட்ட திட்டங்களை அறிந்துகொண்டு விதுரரிடம் போய் சொன்னான். அவர் பாண்டவர்களைக் கூப்பிட்டு எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தார்.
வ்ருகோதரனைக் கொல்லாமல் தூக்கமில்லை என்று சங்கல்பம் செய்துகொண்ட துரியோதனன் மீண்டும் அவர்களை அரண்மனையிலிருந்து பிரமாணகோடிக்கு ஜலக்கிரீடை செய்ய அழைத்துக்கொண்டு சென்றான். அதற்கு முன்னால் மாமா சகுனியிடம் ஆலோசனை கேட்டான்.
“கங்கையில் நம் கூடாரத்துக்கு சற்று தூரத்தில் தண்ணீரில் அநேக சூலங்களை நடுங்கள். இவனுக்கு வயிறு முட்ட காளகூட விஷம் தடவிய ஆகாரங்களைக் கொடுத்து அந்த சூலத்தின் மேல் தள்ளிவிடுவோம். ஏற்கனவே விஷம் அருந்தியதால் தள்ளாடுவான். சூலத்தின் மேல் வீசியவுடன் அது குத்திச் செத்து மடிவான்” என்று உயர்ந்த யோசனை கூறினான் சகுனி.
அரண்மனையில் தன்னுடைய அந்தரங்க பணியாளர்களிடம் ரகசியமாக கங்கை நதியின் ஒரு இடத்தில் ஆயிரம் சூலங்களை நடச்சொன்னான். முன்னேற்பாடுகள் முடிந்தவுடன் பாண்டவர்களின் பக்கம் போய் நட்பாகச் சிரித்தான் துரியோதனன்.
“நாமனைவரும் மீண்டும் பிரமாணகோடிக்குச் சென்று ஜலக்கிரீடை செய்து விளையாடலாமா?” என்று ஸ்நேகபாவத்துடன் அழைத்தான். பாண்டவர்களும் கௌரவர்களும் அநேக ரதங்களில் ஏறி மீண்டும் கங்கைகரையோரம் இருக்கும் பிரமாணகோடியென்னும் இடத்துக்கு வந்தார்கள்.
சிறிது நேரம் விளையாடிய பின் அரண்மனை சாப்பாடு வந்தது. மீண்டும் பீமனுக்குக் கொடுக்க காளகூட விஷம் தடவிய பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது. துரியோதனன் பாசம் மிகுதியானது போல பீமனுக்கு அருகில் வந்து அவனுக்கு அந்த பட்சணங்களை ஊட்டிவிட்டு நடித்தான். பின்னர் எல்லோரும் ஜலக்கிரீடை செய்தார்கள்.
வெகுநேரம் நீந்திக் களைத்ததினால் கரையேறி அந்தக் கூடாரத்தில் ஓய்வு எடுத்தார்கள். விஷம் தேகத்தில் பரவியதாலும் அதிக நேரம் நீச்சல் அடித்ததாலும் அசதியுற்ற பீமன் பிணம் போல தூங்கினான். அறுக்கமுடியாத கொடிகளைக் கொண்டு பீமனின் கைகால்களை இறுகக் கட்டினான் துரியோதனன். பின்னர் தனது சகோதரர்களை துணைக்கு அழைத்து... அந்த சூலங்கள் நடப்பட்ட பகுதிக்குப் படகில் கொண்டு சென்று தூக்கி வீசினான்.
அதிர்ஷ்டவசமாக எந்த சூலத்தின் மீதும் பீமன் விழவில்லை. ஆனால் கங்கையின் ஜலத்துக்குள் மூழ்க ஆரம்பித்தான். விஷமேறியிருந்ததால் அவனால் சுயநினைவு வந்து கைகால் கட்டுக்களை அவிழ்க்க முடியவில்லை. கொஞ்ச தூரம் நீரில் அடியில் சென்றவுடன் நிறைய பாம்புகள் பீமனை மொய்யத் துவங்கின. அதில் ஒன்றிரண்டு பாம்புகள் அவனைக் கடிக்க ஆரம்பித்தன.
ஒருமுறை கடிபட்ட பின்னர் பீமன் விழித்துக்கொண்டான். நினைவு திரும்பியதும் கைகால் கட்டுகளை அறுத்துக்கொண்டான். அப்போது அவனது உடலில் அதிக வலுவில்லாமல் இருந்தது. இருந்தாலும் கையில் அகப்பட்டுக்கொண்ட நாகங்களையெல்லாம் நசுக்கினான். எவ்வளவோ பாம்புகள் அவனது மேனியைத் தீண்டினாலும் அதன் பற்கள் பீமன் மேனியில் பதியவில்லை. அவனது வஜ்ரதேகத்தில் அவைகளால் தீங்கு எதுவும் ஏற்படவில்லை.
பீமனிடம் தப்பித்துக்கொண்டு சில நாகங்கள் ஸர்ப்பராஜா வாஸுகியிடம் ஓடின.
“ஒரு மனதின் ஜலத்தில் கட்டுண்டு விழுந்தான். அவன் பிரக்ஞை தவறியிருந்தான். நாங்கள் கடித்தவுடன் விழித்துக்கொண்டான். அவன் விஷம் குடித்திருக்கவேண்டும். விழித்துக்கொண்டவுடன் எங்களை நசுக்க ஆரம்பித்துவிட்டான். நீர் அவனைச் சந்திக்கவேண்டும்”
இதைக்கேட்டவுடன் வாஸுகி இன்னும் சில நாகங்கள் தன்னை சூழ்ந்துவர பீமன் நாகங்களைத் தேடித் தேடி நசுக்கிக்கொண்டிருக்கும் இடத்தை அடைந்தான். மலைபோல மேனியும் நீண்ட கரங்களையும் பெருத்த தொந்தியுடைய பீமனைப் பார்த்தான் வாஸுகி. அப்போது வாஸுகியுடன் ஆர்யகன் என்ற நாகனும் வந்திருந்தான். அந்த ஆர்யகனின் பெண் வயிற்றுப் பிள்ளை சூரன். சூரனின் பெண் குந்தி. குந்தியின் குமாரன் பீமன்.
பீமன் தனது பேரன் என்று தெரிந்துகொண்ட ஆர்யகன் அவனை இறுகத் தழுவிக்கொண்டான். வாஸுகியும் மனம் மகிழ்ந்தான். பின்னர் “இரத்தினக் குவியல்களை இவனுக்குப் பரிசளியுங்கள்” என்று உத்தரவிட்டான் வாஸுகி. உடனே அதை இடைமறித்த ஆர்யகன் “இந்த இரத்தினக்குவியல்களை வைத்துக்கொண்டு இவன் என்ன செய்வான்? நாகராஜாவே! ஆயிரம் யானை பலமுள்ள ரஸம் ஒரு குடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதை இவனுக்குக் கொடுப்போம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இவன் குடிக்கட்டும்” என்றான் ஆர்யகன்.
ரஸம் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு பீமசேனனை அழைத்துச்சென்றார்கள். ஒரே மூச்சில் ஒரு குடம் அந்த யானை பலமுள்ள ரஸத்தைக் குடித்தான். பின்னர் அதுபோல எட்டுக் குடங்களை வரிசையாக மடமடவென்று குடித்தான். சுற்றி நின்று அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நிறைய குடித்தவுடன் அவனுக்கு நித்திரை வந்தது. பீமசேனன் உறங்குவதற்கு ஒரு உயர்ந்த சயனம் கொடுத்தார்கள். அதில் அவன் சுகமாக நித்திரை செய்தான்.
**
பிரமாணகோடியில் இரவு கழிந்தது. காலைப்பொழுதில் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். கங்கையில் தள்ளிய பீமன் வந்துசேரவில்லை.
“பீமன் நமக்கு முன்பே எழுந்து நகரம் சென்றுவிட்டான் போலிருக்கிறது. வாருங்கள் நாம் அனைவரும் அரண்மனைக்குச் செல்வோம். நம் மாதாக்கள் நம்மைத் தேடுவார்கள்” என்று சமர்த்தாகச் சொல்லிக்கொண்டு புறப்பட்டான் துரியோதனன். அவனைத் தொடர்ந்து யுதிஷ்டிரர், அர்ஜுனன், நகுலசகதேவர்கள் மற்றும் துரியோதனாதிகள் அனைவரும் சென்றார்கள்.
வழியெங்கும் பீமனைப் பற்றிய நினைவுகளுடனேயே தர்மபுத்திரர் வந்துகொண்டிருந்தார். அரண்மனை வந்தடைந்தவுடன் அன்னைக் குந்தியைப் பார்க்க ஓடினார். குந்தியைப் பார்த்து நமஸ்கரித்தார்.
எழுந்து நின்று “அம்மா! பீமன் இங்கே வந்தானா?” என்று கேட்டார்.
“இல்லையே!” என்று குந்தி சொன்னவுடன் அதிர்ச்சியடைந்து சிலை போல நின்றார்.

No comments:

Post a Comment