Friday, March 9, 2018

அக்னியில் ஜனித்த இருவர்



பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரின் அனைத்து யுத்த பயிற்சிகளையும் முடித்திருந்தார்கள். ஏற்கனவே துருபதனால் அவமானப்படுத்தப்பட்ட துரோணாசாரியார் இப்போது அவனை பழிவாங்க எண்ணினார். பயிற்சி அரங்கிற்கின் வாசலில் ஒரு நாள் காலை நின்றுகொண்டிருந்தார் துரோணார்.

“வீரர்களே! நீங்கள் அனைவரும் எல்லா பயிற்சிகளிலும் தேர்ச்சியடைந்துவிட்டீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு ஒரு உயர்ந்த தக்ஷிணையைக் கொடுக்கவேண்டும்”
இதைக்கேட்ட யுதிஷ்டிரர் அர்ஜுனன் பீமஸேனன் துரியோதனன் கர்ணன் துச்சாஸனன் யுயுத்ஸு விகர்ணன் என்று மஹாரதர்கள் அனைவரும் துரோணரைச் சூழ்ந்து கொண்டார்கள். காலைச் சூரியனின் புத்தொளி அவர்களின் முகங்களில் பட்டு பளபளவென்று ஜொலித்தார்கள்.
“குருவே! என்னவென்று கட்டளையிடுங்கள். தருகிறோம்” ஒருமித்த மனத்தோடு அனைவரும் கேட்டார்கள்.
”பாஞ்சாலதேசத்து அரசனான துருபதனை போர்முனையில் பிடித்து என்னிடம் அழைத்துவாருங்கள். அதுவே நீங்கள் தரும் சிறந்த குருதக்ஷிணை ஆகும்”
அவர் மனதில் அர்ஜுனன் நிச்சயம் செய்துமுடிப்பான் என்று நினைத்துக்கொண்டார்.
புழுதிபறக்க பல ரதங்களில் ஏறி அனைவரும் புறப்பட்டார்கள். துரோணரும் உடன் சென்றார். பயிற்சிக்குப் பின்னர் பாண்டவர்களும் கௌரவர்களும் புரியப்போகும் முதல் நேரடி யுத்தம். குருவிற்கு காணிக்கை செலுத்த வேண்டும் என்பதால் ஒருவரையொருவர் ”நான் முன்னே.. நான் முன்னே..” என்று முந்திக்கொண்டு பாஞ்சால தேசம் விரைந்தார்கள்.
[அனைவரும் பாஞ்சால தேசம் நெருங்குவதற்குள் துருபதனின் பிறப்பு பற்றிய குறிப்பு வருகிறது. அதைப் பார்த்துவிடலாம்]
பாஞ்சாலதேசத்தரசன் புத்திர சந்தானம் வேண்டும் என்பதற்காக வனத்தில் தவமியற்றுகிறான். வெகுகாலம் மான்களும் புலிகளும் உலவும் வனாந்திரமான பிரதேசத்தில் காற்றை மட்டும் புசித்து தவம் புரிந்துவந்தான். வசந்தகாலம் வந்தது. வனத்திலிருந்த மரங்களெல்லாம் புஷ்பித்திருந்தது. கங்காதீரத்தில் அமர்ந்து தவம் இயற்றும்போது ஒரு நாள் மேனகை என்னும் அப்சரஸ் அங்கே மரங்களுக்கிடையே மறைந்து மறைந்து வந்தாள். அந்த பாஞ்சாலதேசத்தரசனின் கண்களில் அவள் பட்டவுடன் அவளது சௌந்தர்யத்தில் மனம் லயித்த அந்த அரசனுக்கு வீரியம் வெளிப்பட்டது.
வெட்கத்துடன் வெளிப்பட்ட வீரியத்தைத் தனது காலால் மறைத்துக்கொண்டான். ஆனால் அவனது தவ வன்மையினால் வீரியத்தின் மீது கால் வைத்தவுடன் ஒரு புத்திரன் உண்டானான். மரத்தடியில் (துரு) கால் வைத்தவுடன் உண்டானவன் (பதன்) என்பதினால் துருபதன் என்று அந்த வனத்திலிருந்த ரிஷிகளும் தபோதனர்களும் சேர்ந்து நாமகரணம் சூட்டினார்கள்.
அங்கேயே பரத்வாஜரின் ஆஸ்ரமத்தில் வேதாப்பியாஸத்திற்காக விட்டுச்சென்றான். அவன் அங்கே துரோணருடன் சேர்ந்து தனுர் வித்தைகளையும் வேதங்களையும் கற்றுக்கொண்டான். பாஞ்சாலதேசத்தரசன் ஸ்வர்க்கம் சென்றபின் அந்நாட்டு மக்கள் பரத்வாஜரின் ஆஸ்ரமம் வந்து துருபதனை அழைத்துச் சென்று ஆட்சிபுரிய வைத்தார்கள்.
**
இதோ பாஞ்சலதேச எல்லைக்குள் அனைவரும் பிரவேசித்துவிட்டார்கள். கௌரவர்கள் “நாங்கள் சென்று அவனைச் சிறைப்பிடித்து வருகிறோம்” என்று வீராவேசமாகப் புறப்பட்டார்கள். பாண்டவர்கள் துரோணருடன் ஊர் எல்லையில் நின்றுவிட்டார்கள்.
வெள்ளை ரதமேறி வந்தான் துருபதன். அவனது உக்கிரமான பாணங்களினால் கௌரவர்கள் திக்குமுக்காடினர். பாஞ்சாலதேசம் முழுவதும் பாஞ்சாலர்களின் வீடுகளில் சங்கமும் பேரிகைகளும் மிருதங்கங்களும் ஆயிரக்கணக்கில் வாசிக்கப்பட்டது. அது போர் புரிவதற்கான உத்வேகத்தைக் கொடுத்தது. துருபதன் சுற்றிவிடப்பட்ட எரிகொள்ளியைப் போன்று சுழன்று சுழன்று தாக்கினான்.
துரியோதனன், விகர்ணன், ஸுபாஹு, தீர்க்கலோசனன், துச்சாஸனன் ஆகியோர் தீவிரமாகச் சண்டையிட்டார்கள். பாஞ்சால தேசத்து ஜனங்களும் தங்கள் வீடுகளிலிருந்து உலக்கைகளையும் தடிகளையும் கொண்டு வந்து கௌரவர்கள் மேல் வீசினார்கள். கௌரவர்கள் கதறிச் சிதறி ஓடினார்கள். அவர்கள் பின்வாங்கி துரோணரும் பாண்டவர்களும் காத்திருக்கும் நகரத்தின் எல்லைக்கு வந்தார்கள்.
அர்ஜுனன் இது நம் வேலை என்று தயாரானான்.
“தர்மண்ணா! நீர் எங்களுடன் வரவேண்டாம். ஆசாரியருடன் இரும்” என்று சொல்லிவிட்டு “நகுலா, சகதேவா நீங்கள் இருவரும் சாரதிகளாக வாருங்கள். எடுங்கள் ரதத்தை. பீமண்ணா, நீர் முன்னால் போம்” என்று ஒரு வ்யூகம் அமைத்துக்கொண்டு புறப்பட்டான்.
அந்த பாஞ்சால சேனையை நாசப்படுத்தியதில் பீமன் பெரும்பங்கு வகித்தான். அவன் தனியொருவனாக கதையுடன் அந்த சதுரங்கசேனையை மத்தைக் கொண்டு கடைவது போலக் கடைந்தான். அவனது கதையினால் தும்பிக்கைகளில் அடிவாங்கிய யானைகள் ரத்தம் சிந்தி சரிந்தன. துருபதன் பீமனின் ஆற்றலைக் கண்டு மலைத்துப்போனான்.
அர்ஜுனன் காண்டீவம் என்னும் தனது வில்லினால் சரமாரி பொழிந்து அந்த யுத்தம் நடக்கும் இடத்தையே இருட்டாக்கினான். அவன் அம்பை எடுப்பதும் தொடுப்பதும் கண்ணிமைக்கும் நேரத்தில் இடைவிடாது நடந்துகொண்டிருந்தது. பீமனும் அர்ஜுனனும் இதுபோல தொடர்ந்து அடித்துக்கொண்டு முன்னேறியபோது துருபதனின் நண்பனான ஸத்யஜித் என்பவன் அர்ஜுனனை எதிர்த்துப் போனான்.
அர்ஜுனன் தனது காண்டீவத்தின் நாணை இழுத்து விட்டான். அது எழுப்பிய பேரொலி அங்கு அனைவரின் காதுகளின் செவிப்பறையைக் கிழித்தது. ஸத்யஜித்தின் வில்லை பலமுறை தனது அஸ்திரங்களால் முறித்தான் அர்ஜுனன். இப்போது துருபதன் சண்டையிட்டிக்கொண்டிருக்கும் இடம் நோக்கி வேகமாக நகர்ந்தான் அர்ஜுனன். இன்னொரு வில்லை எடுத்துக்கொண்டு ஸத்யஜித் துரத்திக்கொண்டு வந்து போர்புரிந்தான். திரும்பவும் அந்த வில்லையும் முறித்தான் அர்ஜுனன். இப்படி வரிசையாக அவனது விற்களை முறித்துப்போட்டு துருபதனை நோக்கி முன்னேறினான்.
பலவகையிலும் அடிபட்ட ஸத்யஜித் தோற்று ஓடிவிட்டான். துருபதனுக்கு நேருக்கு நேர் போய் நின்ற அர்ஜுனன் ஐந்து பாணங்களினால் அவனது வில்லையும் முறித்து தேர்ச் சாரதியையும் கொன்றான். வேகமாக முன்னேறி அவனது தேர்ச்சக்கரக்காலில் காலை வைத்து ஏறி துருபதனின் தேருக்குள் குதித்தான். கத்தியையும் கேடயத்தையும் உருவி சண்டையிட்டு அவனைப் பின்னுக்குத் தள்ளி கருடன் நாகத்தை கௌவுவது போல அர்ஜுனன் துருபதனைப் பிடித்துவிட்டான்.
பீமஸேனன் பாஞ்சாலவீரர்களை கொல்லும் பணியில் ஈடுபட ஆரம்பித்தான்.அவனது கதை ஒவ்வொரு சுழற்சிக்கும் ஐந்து பத்து பேரை கீழே தள்ளியது.
“பீமா! வேண்டாம். வீணாக அவர்களது வீரர்களைக் கொல்லாதே! துருபதனைப் பிடித்துவிட்டோம். இதுதான் குருதக்ஷிணை. வா கிளம்பலாம்” என்று அவனை அடக்கி துருபதனையும் அவனது மந்திரியையும் கைகளைக் கட்டிக் கொண்டு வந்து துரோணர் முன் நிறுத்தினார்கள்.
துருபதனின் கர்வம் அழிந்திருக்கவேண்டும் என்று நினைத்தார் துரோணர். அவர் மனதிலும் த்வேஷம் படர்ந்திருந்தது. வெறுமையாகச் சிரித்தார் துரோணர்.
“துருபதா! இப்போது உனது தேசம் என்னால் பிடிக்கப்பட்டுவிட்டது. நீ என்னுடன் ஸ்நேகமாக இருக்கமுடியுமா?”
அவமானத்தில் தலைகுனிந்து நின்றான் துருபதன்.
“ஊஹும்.முடியாது. ஏனென்றால் இப்போது உனக்கு ராஜ்ஜியமில்லை. ஒன்று செய்கிறேன். உனக்கு பாதி ராஜ்ஜியத்தைத் தருகிறேன். பின்னர் நாமிருவரும் ஸ்நேகிதர்களாக இருக்கலாம்”
இதைச் சொல்லிவிட்டு எகத்தாளமாக சிரித்தார் துரோணர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போலிருந்தது துருபதனுக்கு. மனசுக்குள் கறுவினான்.
“கங்கைக்கு தென்கரையில் உன்னுடைய ராஜ்ஜியம். வடகரை பக்கம் என்னுடையது. வா.. ஸ்நேகமாக இருக்கலாம்” என்று அழைத்தார்.
“பிராமணரே! உமது பிரீதியை விரும்புகிறேன். நானும் உங்களை விரும்புகிறேன். மன்னிக்கவேண்டும்” என்றான் துருபதன்.
அவனது கட்டுக்களை விடுவித்து அவனுக்கு கங்கைக்கு தென்கரை ராஜ்ஜியத்தைக் கொடுத்தார் துரோணர்.மனம் வெம்பிய துருபதன் தனது க்ஷத்ரியபலத்தினால் தோற்கவில்லை என்றும் பிரம்மதேஜஸ் என்னும் புத்திரபலம் தனக்கில்லை என்பதால் தோற்கடிக்கப்பட்டோம் என்றும் புத்திரன் ஜனிக்க உபாயம் தேடி அலைய ஆரம்பித்தான்.
துரோணர் அஹிச்சத்ரம் என்னும் தேசத்தை குருதக்ஷிணையாக அர்ஜுனனிடமிருந்து பெற்றுக்கொண்டார். சிஷ்யர்கள் ராஜ்ஜியம் ஜெயித்துக் கொடுத்ததில் பெருமிதம் கொண்டார்.
**
துருபதன் தூக்கம் தொலைத்தான். க்ஷத்ரியபலத்தினால் துரோணரை ஜெயிக்க முடியாமல் போனதை எண்ணியெண்ணி வருந்தினான். பிரம்மதேஜோபலம் எனப்படும் புத்திரபலத்துக்காக கர்மங்களில் ஸித்திபெற்ற பிராம்மணர்களைத் தேடி அலைந்தான்.
கடைசியில் கங்காதீரத்தில் கல்மாஷி எனும் நகரத்துக்கு அருகில் ஒரு பரிசுத்தமான பிராமண கிராமத்தை வந்தடைந்தான். அங்கே வித்தையிலும் தவத்திலும் இல்லாத பிராமணன் எவனும் இருக்கவில்லை. அங்கே யாஜர் உபயாஜர் என்று சிறந்த தவமுள்ள இரு பிரம்மரிஷிகளைக் கண்டான்.அவர்களுக்கு சிஷ்ருஷை செய்யத் துவங்கினான். அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுப்பேன் என்று சொல்லி அவர்களை தனது புரோகிதர்களாக வரித்துக்கொண்டான்.
உபயாஜருக்கு குருபணிவிடைகள் தொடர்ந்து செய்துவந்தான். தனது விருப்பம் என்னவென்று அவர்களுக்குச் சொல்லாமலேயே வெகுநாட்கள் கடந்தது. உபயாஜர் அவனது சிஷ்ருஷையில் உள்ளம் மகிழ்ந்தார். துருபதனை ஒரு நாள் உட்காரவைத்து கனிகள் கொடுத்து உபசரித்தார்.
“என்ன காரியத்திற்காக எனக்கு இவ்வளவு பணிவிடைகள் செய்கிறாய்?” என்று கேட்டார்.
“பிராம்மணரே! உபயாஜரே! துரோணரைக் கொல்லத்தக்க ஒரு புத்திரன் வேண்டும். அதற்கு என்ன தர்மம் செய்ய வேண்டுமோ அதை நீங்கள் எனக்குச் செய்ய வேண்டும். உமக்குப் பொன்னும் பொருளும் தாராளமாக அள்ளித் தருவேன் ” என்று வேண்டினான்.
“துருபதனே! நான் இதுபோன்ற பிரயோஜனங்களை விரும்புகிறவன் இல்லை. இதுபோன்றவைகளுக்கு ஆசைப்படுபவர்களைத் தேடி நீ செல்லலாம்” என்று மறுத்துவிட்டார்.
ஸாதுக்கள் பலர் நிறைந்திருந்த அந்த சபையில் உபயாஜர் இப்படி மறுத்துவிட்டதில் மனம் சோர்ந்தான் துருபதன்.இருந்தாலும் எதுவும் பேசாமல் இன்னும் ஒரு வருஷம் அவருக்கு சிஷ்ருஷைகள் பல செய்தான். பின்னர் ஒரு நாள் உபயாஜர் குளிர்ந்த மனதுடன் இருந்தபோது துருபதனை அழைத்துப் பேச ஆரம்பித்தார்.
“துருபதா! எனது மூத்த சகோதரர் நிர்ஜனமான காட்டில் சஞ்சரிக்கையில் சுத்தமில்லாத இடத்தில் ஒரு கனி கிடந்தது. அதை அவர் எடுத்துக்கொண்டார். அவரின் பின்னால் சென்றுகொண்டிருந்த நான் இந்த தகாத செயலைக் கண்டேன். இதுபோல பிரயோஜனங்கள் அடைவதற்கு அவர் எந்த விசாரணையும் செய்யாமல் எதையும் செய்ய ஒத்துக்கொள்வார். உனக்கு அவர் யாகம் செய்வித்து புத்ரோத்பத்திக்கு வழிவகுப்பார் என்று என் ஊகக் கண்ணால் அறிகிறேன்.”
உபயாஜரை நமஸ்கரித்து யாஜருடைய ஆஸ்ரமத்திற்குச் சென்றான் துருபதன். மனசுக்குள் யாஜரைப் பற்றிய ஒரு அருவருப்பு இருந்தது. அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் யாஜரிடம் புத்ரனுக்காக யாகம் வளர்க்கச் சொல்லிக் கேட்டான்.
“யாஜரே! நான் இப்போது துரோணர் விரோதத்தை சம்பாதித்துக்கொண்டேன். அவரை என்னுடைய க்ஷத்ரிய பலத்தினால் வெல்ல முடியவில்லை. ஆறுமுழமுள்ள அவரது வில்லையும் எதையும் அறுக்கும் அவரது கத்தியையும் வெல்ல முடியவில்லை. ஸ்நேகிதர்களான எங்களுக்குள் சண்டை வந்தது. க்ஷத்ரியனான என்னை ஒழிப்பதில் பரசுராமர் போலிருக்கிறார். அவருடைய மரணத்திற்கு காரணமான ஒரு புத்திரன் வேண்டும்”
இதைச் சொன்னவனுக்கு உடனே மனதில் இன்னொரு ஆசை உண்டானது. அர்ஜுனன் மிகச்சிறந்த வில்லாளி வீரன் என்பதினால்...
“மேலும்.. அர்ஜுனனை மணந்து கொள்ளும் ஒரு புத்ரியும் வேண்டும்” என்றான்.
தக்ஷிணையாக என்ன தருவேன் என்று சொல்லாமல் யாகம் வளர்க்கக் கூப்பிட்ட துருபதனை நோக்கி யாஜர் சிரித்தார்.
“துரோண மரணத்திற்குக் காரணமான ஒரு புத்திரனையும் அர்ஜுனன் மனைவியாகும் பாக்கியமுள்ள ஒரு புத்ரியையும் எந்த கர்மத்தினால் எனக்கு செய்துகொடுப்பீரோ அதற்கு தக்ஷிணையாக உமக்கு பத்துகோடி பசுக்களைக் கொடுப்பேன்”
“சரி.. என் கிரியையினால் உனக்கு வேண்டியற்றவைச் செய்துதருகிறேன்”
”ஸௌத்ராமணியென்னும் யாகம் செய்தால் துருபதனுக்கு துரோணரை அழிக்கும் வல்லமையுடைய புத்திரன் பிறப்பான்” என்று உபயாஜரையும் தனக்கு உதவிக்கு அழைத்துக்கொண்டார். யாஜர் தனக்கு குரு ஸ்தானத்தில் இருந்ததால் உபயாஜரும் ஒன்றும் பேசாமல் ஒத்துக்கொண்டார்.
சாஸ்திரப்படி கிரமமாக அந்த யாகத்தை யாஜரும் உபயாஜரும் செய்தார்கள்.
அநேக பிராமணர்களைக் கொண்டு மிகவும் சிறப்பாக அந்த யாகம் நடைபெற்றது. துருபதனின் ராஜபத்னியை ஹவிஸைப் புசிக்க அழைத்தார் யாஜர்.
“ப்ருஷதியே! சீக்கிரம் வந்து இந்த ஹவிஸை சாப்பிடு. துரோணரை வெல்லும் ஒரு புத்திரனும் அர்ஜுனனை கணவனாக அடையும் ஒரு புத்ரியும் சீக்கிரத்தில் உண்டாவார்கள்” என்றார்.
ப்ருஷதி யாகம் நடைபெறும் இடத்திற்கு தூரத்தில் நின்றுகொண்டாள்.
“நான் ஸ்நானம் செய்யாமல் இருக்கிறேன். புத்ரோத்பத்திக்குரிய உம்முடைய இந்த யக்ஞத்தில் நான் பலனடையும் நிலையில் இல்லாமல் இருக்கிறேன்.” என்றாள்,
“யாஜரால் பாகம் செய்யப்பட்டு உபயாஜரால் மந்திரிக்கப்பட்ட இந்த ஹவிஸ் எப்படி இஷ்டபலனைக் கொடுக்காமலிருக்கும். நீ வந்தாலும் வராவிட்டாலும் பாதகமில்லை” என்று அக்னியினால் சிவந்த முகம் மேலும் கோபத்தால் சிவக்கச் சொன்னார் யாஜர்.
பின்னர் அந்த ஹவிஸை ஹோமத் தீயில் கவிழ்த்தார். யாகசாலையே பார்த்துக்கொண்டிருக்கும் அப்பொழுது க்ரீடமும், கவசம், கத்தி, வில், அம்பு இவற்றோடு ஜ்வாலை நிறமுள்ள ஒரு குமாரன் கர்ஜனையோடு அந்த அக்னியிலிருந்து எழுந்து வந்தான்.
அப்போது விண்ணில் அசரீரி எழுந்தது.
“இவன் துரோணரை வதம் செய்து துருபதராஜாவின் துயரத்தைப் போக்குவான்”
இரண்டாவது ஹோமகாலத்தில் மீண்டும் அந்த ஹவிஸை ஹோமத்தீயில் இட்டார்கள். அப்போது பாஞ்சாலியாகிய குமாரி யாகவேதிகையின் மத்தியிலிருந்து எழுந்துவந்தாள். கறுத்த நிறம். தாமரை இதழ். பெண்களுக்கே உரித்தான அங்கங்களின் அற்புத வளர்ச்சியோடு தேவாசுரர்களைக் கவரும்படி இருந்தாள். அவளுடைய தேகமணம் கருநெய்தல் மலருக்கு ஒப்பாக நெடுந்தூரம் வீசியது. அவளுக்கு மீறிய அழகு பூமியில் இல்லை என்று சொல்லத்தோன்றியது.
இப்போதும் அசரீரி ஒலித்தது
“சிறந்தவளாகிய இந்த க்ருஷ்ணை க்ஷத்ரியர்களுக்கு நாசத்தை உண்டாக்கப்போகிறாள்.”
ப்ருஷதி யாகசாலையின் ஓரத்திலிருந்தே யாஜர் இருந்த பக்கம் தரையில் விழுந்து தொழுது “இவர்கள் இருவரும் என்னையே தாயாராக நினைக்கும்படி அருள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள். யாஜரும் அப்படியே ஆசீர்வதித்தார்.
பயப்படாமல் த்ருஷ்டனாக (ஜயிக்கமுடியாதவன்) இருப்பதாலும் த்யும்னன் எனப்பட்ட பொன்மயமான கவசகுண்டல முதலானவற்றோடு பிறந்ததனாலும் இவனுக்கு த்ருஷ்டத்யும்னன் என்ற பெயர் இருக்கட்டும். இந்தக் கன்னிகை கருமை நிறத்தோடு இருப்பதால் க்ருஷ்ணை என்ற பெயருள்ளவளாக இருக்கட்டும்” என்று அவர்கள் இருவருக்கும் அந்த ரிஷிக்கூட்டத்தினர் நாமகரணம் சூட்டினார்கள்.
துருபதன் இப்போதே துரோணரை அழித்து அர்ஜுனனை மாப்பிள்ளையாக்கிக்கொண்ட திருப்தியடைந்தது அவனது கண்களில் தெரிந்தது.
துரோணர் த்ருஷ்டத்யும்னனை தனது மாணவனாக ஏற்றுக்கொண்டார். அவனுக்கு எல்லா அஸ்திரசஸ்திரங்களை பயிற்றுவித்தார். விதியை வெல்லமுடியாது என்று தெரிந்த துரோணர் அவனைப் பற்றிய சங்கதிகள் தெரிந்தும் அவனுக்கு எல்லா வித்தைகளையும் கற்றுக்கொடுத்தார். அவனும் வெகு சீக்கிரத்தில் எல்லா அஸ்திரவித்தைகளையும் கிரஹித்துக்கொண்டான்.

No comments:

Post a Comment