Monday, March 12, 2018

பீஷ்மாதிகளின் அறவுரையும் பாண்டவர்களின் அஸ்தினாபுர பிரவேசமும்


பீஷ்மர் ராஜசிம்மமாக கம்பீரத்துடன் அமர்ந்திருந்தார். திருதராஷ்டிரனின் அழைப்பினால் துரோணர் மற்றும் விதுரர் அங்கே வந்திருந்தார்கள். கர்ணனும் துரியோதனனும் அருகருகே அமர்ந்து காதோடு காதாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். கண் தெரியாத திருதராஷ்டிரன் பீஷ்மரிடம் முதலில் கேட்டான்.

“பிதாமகரே! கர்ணன் பாஞ்சாலத்திற்கு படையெடுத்து பாண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்கிறான். துரியோதனனும் அதை செய்யவே துடிக்கிறான். சகுனிக்கும் இஷ்டம்தான். உம்முடைய ஆலோசனையை வழங்க வேண்டுகிறேன்”
இப்படிக் கேட்ட திருதராஷ்டிரனை கூர்ந்து சில கணங்கள் பார்த்தார் பீஷ்மர். கர்ணனும் துரியோதனனும் பீஷ்மரைப் பார்த்தார்கள். சகுனி கண்களால் விஷத்தை உமிழ்ந்து அவை நடவடிக்கைகளை நோக்கினான்.
”பாண்டு புத்திரர்களோடு துரியோதனன் விரோதம் வளர்ப்பதில் எனக்கு இஷ்டமில்லை.”
கர்ணனும் துரியோதனனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சகுனியைப் பார்த்தார்கள். பீஷ்மர் தொடர்ந்தார்.
“எனக்கு திருதராஷ்டிரன் எப்படியோ அப்படியே பாண்டு. குந்தி புத்திரர்களுக்கும் காந்தாரி புத்திரர்களுக்கும் எனக்குப் பேதமில்லை. அவர்களுக்கு ராஜ்ஜியத்தில் பாதியை தருவதுதான் நியாயம். அவர்களோடு கலகம் புரிவது அநியாயம். அவர்களோடு சமாதானம் செய்துகொண்டு ராஜ்ஜியத்தைப் பகிர வேண்டும். துரியோதனா! உன்னைப் போலவே இது அவர்களுக்கும் பாட்டன், தகப்பன் வழியாக வந்த ராஜ்ஜியம்தான். நீ ராஜ்ஜியத்தை முறைதவறி அடைந்திருக்கிறாய்”
பீஷ்மரின் கடைசி வரியில் உருவி விட்டதுபோல நிமிர்ந்து உட்கார்ந்தான் திருதராஷ்டிரன். விதுரரும் துரோணரும் பீஷ்மரின் பிரகாசமான வார்த்தைகளில் கட்டுண்டு கிடந்தார்கள். சகுனியும் கர்ணனும் துரியோதனனும் இருக்கையில் நெளிந்தார்கள்.
”புருஷ ஸ்ரேஷ்டனே! ஜனங்களின் விருப்பம் இதுதான். இது போல நடக்காவிட்டால் உனக்கு அபகீர்த்தி உண்டாகும். புகழ்தான் சிறந்த வன்மை. புகழ் அழிந்தவன் அனைத்தையும் இழந்தவனே! நல்லவேளையாக குந்தியும் அவளது புத்திரர்களும் உயிர் பிழைத்தார்கள். பாபியான புரோசனன் போய்ச் சேர்ந்தான். இவையெல்லாம் உன் நன்மைக்காகவே நடந்திருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். உன் சதித்திட்டத்தில் பாண்டவர்கள் தப்பிப் பிழைத்திருப்பது உன்னுடைய தவறுதலுக்குப் பரிகாரமாகிவிட்டது. இறுதியாகச் சொல்கிறேன். நீ தர்மத்தையும் என் விருப்பத்தையும் உன் க்ஷேமத்தையும் கடைபிடிப்பதாக இருந்தால் அவர்களுக்குப் பாதி ராஜ்ஜியம் கொடுத்துவிடு”
பீஷ்மர் நிறைவு செய்துவிட்டார். மீசையை ஒரு முறை தடவிக் கொடுத்து தாடியைக் கோதிக்கொண்டார்.
“திருதராஷ்டிர மஹாராஜனே! ராஜ்ய ஆலோசனைக்காக ஆப்தர்களாக எங்களை அழைத்திருக்கிறீர்கள். மஹாத்மாவான பீஷ்மரின் அபிப்ராயம்தான் என்னுடைய அபிப்பிராயமும். பாண்டவர்களுக்கு ராஜ்யபாகம் அளிக்கவேண்டும். அதுதான் தர்மம். உடனே நீ ஒரு தூதனை பாஞ்சால தேசம் அனுப்பு. அவனிடம் மிகுதியான பொருட்களைக் கொடுத்தனுப்பவேண்டும். அவன் துருபதனிடம் சென்று நீங்கள் அழைத்துவரச் சொன்னதாக பாண்டவர்களை இங்கே இங்கே அனுப்பவேண்டும். குந்திக்கும் திரௌபதிக்கும் அணிகலன்களைக் கொடுத்தனுப்பவேண்டும். அவர்களிடத்தும் உன் பிள்ளைகள் இடத்தும் இப்படிதான் நீ நடந்துகொள்ள வெண்டும். பீஷ்மர் கருத்தே என் கருத்தும்.”
துரோணரும் பீஷ்மரின் கருத்தையே சொன்னவுடன் கர்ணன் வெகுண்டெழுந்தான். அவையில் பெரியோர்கள் இருந்ததையும் மதிக்காமல் வெறுப்பைக் கக்க ஆரம்பித்தான்.
“ராஜாவே! உன்னுடைய பொருளையும் பெருமையையும் பெற்றுக்கொண்டு எல்லாக் காரியங்களிலும் உமக்கு அந்தரங்கமாக இருப்பவர்கள் கூட உம்முடைய நன்மையைக் கருதாமல் இருக்கிறார்களே! இதென்ன விந்தை!!”
பெருங்குரலுடன் அவை எதிரொலிக்கப் பேசினான் கர்ணன்.
“மனதில் கெடுதியை நிறைத்துக்கொண்டு வெளியில் ஆப்தர்கள் போல நடிக்கிறார்கள். காரியங்களில் கஷ்டம் வரும்போது நன்மை தீமைக்கு அணுக்கமானவர்கள் உபயோகமில்லை என்பதை நிரூபிக்கிறார்கள். எவனுக்குமே இன்பமும் துன்பமும் விதிப்படியே நடக்கும். புத்திசாலியோ நிர்மூடனோ பெரியவனோ சிறியவனோ சகாயமுள்ளவனோ இல்லாதவனோ எல்லாமே விதிப்படிதான் நடக்கிறது”
துரோணருக்கு கோபம் வந்தது. சபையின் மாண்பு கெடக்கூடாது என்பதற்காக அமைதியாக அமர்ந்திருந்தார். பீஷ்மருக்கு கர்ணனின் இப்பேச்சு வெறுப்பேற்றியது. துரியோதனனும் சகுனியும் தங்கள் பக்கம் கர்ணன் பேசுவதற்காக மகிழ்ச்சியடைந்தார்கள்.
“ராஜகிருகம் என்ற தேசத்துக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அம்புவீசன் என்பவன் அரசாட்சி செய்துகொண்டிருந்தான். அவன் எல்லாக் காரியங்களையும் மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு வெறுமனே இருந்தான். மஹாகர்ணி என்ற அந்த மந்திரி தனக்கு பலம் கிடைத்துவிட்டதாக அந்த ராஜாவை அவமதித்தான். அந்த மூடன் ராஜபோகத்திற்கு உரிய ஸ்திரீகளையும், ரத்னங்களையும் தனங்களையும் ஐஸ்வர்யங்களையும் அதிகாரத்தையும் முழுமையாக எடுத்துக்கொண்டான். அது போதாதென்று அந்த ராஜ்ஜியத்தையே அபகரிக்க எண்ணம் கொண்டான். ஆனால் அவனால் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த ராஜ்ஜியத்தை அடையமுடியவில்லை.ஏன் தெரியுமா? அந்த ராஜாவுக்கு ராஜ்யாதிகாரம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதை யாராலும் தட்டிப் பறிக்க முடியாது. இவ்வாறே மந்திரிகளுடைய யோக்கிதைகளையும் அயோக்கியத்தனத்தையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்”
துரோணரின் இரத்தம் கொதித்தது. மந்திரிகளின் யோக்கியதை என்பது பற்றி கர்ணன் சொன்ன கதை நேரடியாக அவரையும், விதுரரையும், பீஷ்மரையும் குறிப்பதாகப்பட்டது. கோபாவேசமாக தனது ஆசனத்தில் இருந்து எழுந்தார்.
“துஷ்டா! கர்ணா!!” இடியிடிப்பது போல குரல் எழுப்பினார். சபை நிசப்தமானது.
”பாண்டவர்களுக்காக நாங்கள் பேசினோம் என்பதால் எங்கள் மேல் குற்றம் சுமத்தப் பார்க்கிறாயா? குல நன்மைக்காக நாங்கள் பேசுகிறோம். எது நன்மை தீமையென்று திருதராஷ்டிரன் முடிவு செய்யட்டும். நாங்கள் சொல்லும் சிறந்த நன்மைக்கு மாறாக செயல்பட்டால் கௌரவர்கள் வெகுசீக்கிரத்தில் அழிந்து போவார்கள்”
பொத்தென்று அமர்ந்துவிட்டார்.
இப்போது விதுரரின் முறை. மென்மையான குரலில் நிதானமாகப் பேச ஆரம்பித்தார் விதுரர்.
“பீஷ்மரும் துரோணரும் உமக்கு நன்மை தரும் சொல்லைச் சொன்னார்கள். அதில் உமக்கு விருப்பம் இல்லையென்றாலும் அதுதான் சத்தியம். பீஷ்மதுரோணர்களான இந்த இரண்டு புருஷ சிம்மங்களைக் காட்டிலும் அறிவில் சிறந்தவர்கள் உன்னிடத்தில் யார் உளர்? உமக்கு எந்த சமயத்திலும் தீங்கு சொல்லாதவர்கள். இருவரும் தோல்வியடையாத பராக்கிரமம் உள்ளவர்கள். உனது நன்மைக்காக சொல்கிறார்கள். துரியோதனன் முதலியோர் எப்படி உன் புத்திரர்களோ அதுபோலவே பாண்டவர்களும்.”
துரியோதனன் எரிச்சலடைந்தான். கர்ணன் வெறுப்புற்று சபைக்கு வெளியே பார்க்க ஆரம்பித்தான். சகுனிக்கு ஏமாற்றம்.
“பீஷ்மதுரோணர்கள் சொன்னது போல பாண்டவர்களை வெற்றி கொள்வது எளிதல்ல. தனஞ்சயன் ஸவ்யஸாசி*. அவனை வெல்வதற்கு இந்திரனாலும் முடியாது. பீமஸேனன் பதினாயிரம் யானை பலம் கொண்டவன். ஜெயிக்கும் கரங்களை உடையவன். தேவர்களே இறங்கி வந்தாலும் அவனை தோற்கடிக்கமுடியாது. அவர்கள் பக்ஷத்தில் இருப்பவர்களைப் பார்த்தால் எத்தனை சைனியம் வந்தாலும் வெற்றிகாண முடியாது.”
திருதராஷ்டிரன் விதுரருக்குக் காதுகளைக் கொடுத்துவிட்டு ஆடாமல் அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.
“புரோசனனால் உனது கீர்த்திக்கு களங்கம் ஏற்பட்டது. பாண்டவர்களுக்கு பாதி ராஜ்ஜியம் தருவதால் அதை நீ துடைத்தெறிந்துவிடலாம். யாதவர்கள், துருபதன், அவனது புத்திரர்கள், சேதி தேசத்தரன் சிசுபாலன் என்று பாண்டுவின் புத்திரர்களுக்கு பெரும் ஆதரவு இருக்கிறது. கடைசியாக ஒன்று சொல்லட்டுமா?”
அவை முழுவதும் விதுரரைக் கவனித்தது. திருதராஷ்டிரன் விதுரர் குரல் நின்ற திக்கைப் பார்த்தான். பீஷ்மரும் துரோணரும் கவனம் குவித்தார்கள். துரியோதனன் தரப்பு எல்ல சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விதுரர் மேல் கண்களை நிலை குத்தியது.
“கிருஷ்ணன் எங்கேயோ அங்கேயே ஜயம். கிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கம்”
பீஷ்மரும் துரோணரும் அதை ஆமோதிப்பது போல சிரித்தார்கள். திருதராஷ்டிரன் செய்வதறியாது அப்படியே அமர்ந்திருந்தான்.
“துரியோதனனும் ஸுபலபுத்திரனான சகுனியும் கெட்ட எண்ணத்துடன் இருக்கிறார்கள். புத்தி கெட்டவர்கள். சிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்காதே. துரியோதனன் ஒருவனால் இந்தக் குலமே அழியப்போகிறது என்பதை நான் உனக்கு முன்னமே கூறியிருக்கிறேன்.”
விதுரர் அமர்ந்துவிட்டார்.
தொண்டையைச் செருமிக்கொண்டு திருதராஷ்டிரன் பேச ஆரம்பித்தான்.
”விதுரா! நீயும் பிதாமகரும் துரோணாசாரியாரும் எனக்கு நன்மையையே சொல்கிறீர்கள். துரியோதனன் எப்படியோ அப்படியே எனக்கு பாண்டவர்களும். அவர்களும் எனது புத்திரர்கள்தான். நீ பாஞ்சாலம் செல் விதுரா. நீ சென்று குந்தியையும் திரௌபதியையும் பாண்டவர்களையும் அழைத்து வா. இரத்தினங்களையும் தனங்களையும் கொண்டு செல். அவர்களுக்குக் கொடுத்து அழைத்துவா. நம்மிடத்தில் ராஜதர்மம் நன்றாகத் தெரிந்தவன் நீ. ”
சில ரதங்களில் ரத்னங்களும் தனங்களும் ஏற்றிக்கொண்டு சில வீரர்கள் புடைசூழ வேகமாகச் செல்லக்கூடிய ஒரு ரதத்தில் ஏறினார் விதுரர். இரவுபகல் தொடர்ந்து பயணித்து பாஞ்சாலம் வந்தடைந்தார். துருபதனுக்கு விதுரர் வந்த செய்தி தெரிவிக்கப்பட்டது.
“யாதவ அரசர் கிருஷ்ணர் வந்திருக்கிறார். துருபதராஜாவின் அரண்மனையில் தங்களுக்காக பாண்டவர்களுடன் காத்திருக்கிறார்”
விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த விதுரருக்குத் தெரிவிக்கப்பட்டது. ரதம் ரதமாக கொண்டு வந்திருந்த ரத்தினங்களும் பவளங்களும் பொற்காசுகளோடும் துருபதன் அரண்மனைக்குச் சென்றார். ஆசனத்திலிருந்து எழுந்து வந்து எதிர்கொண்டு அழைத்துப் போனான் துருபதன். ஒருவருக்கொருவர் மரியாதை செய்துகொண்டார்கள். யோகக்ஷேமம் விசாரித்துக்கொண்டார்கள். கொண்டு வந்த செல்வங்களைக் கொடுத்தார்.
“அரசனே! உனது சம்பந்தத்தினால் திருதராஷ்டிர மஹாராஜா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறான். சந்தனுபுத்திரரான பீஷ்மர் குசலம் விசாரிக்கச்சொன்னார். பரத்வாஜ புத்திரர் துரோணாசாரியார் உன்னைத் தழுவிக்கொண்டு குசலப்ரசனம் செய்கிறார். கௌரவர்களும் திருதராஷ்டிரனனும் பாண்டவர்களைக் காணத் துடிக்கிறார்கள். குந்தியையும் கிருஷ்ணையையும் கௌரவ ராஜஸ்திரீகள் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறார்கள். தேசம் விட்டு வந்த பாண்டவர்களுக்கும் மீண்டும் அந்த மண்ணையும் மக்களையும் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு விடை கொடு. "
"ஞானவானான விதுரரே! இந்த சம்பந்தம் செய்ததில் எனக்கும் அதீத சந்தோஷம். இந்த மஹானுபாவர்களான பாண்டவர்கள் தேசம் போவது உசிதம்தான். ஆனால் நான் என் வாக்கினால் அதைச் சொல்லலாகாது. வீரர் யுதிஷ்டிரரும் அர்ஜுனரும் பீமரும் நகுலசகதேவர்களும் இதோ இங்கே வீற்றிருக்கும் பலராமகிருஷ்ணரும் என்ன நினைக்கிறார்களோ அதன்படி செய்யட்டும்.”
துருபதன் அடக்கமாகச் சொன்னான்.
“ராஜாவே! நீர் அன்புடன் எதைச் சொன்னாலும் செய்வோம்” என்றார் துருபதனை நோக்கி யுதிஷ்டிரர்.
“துருபதராஜாவின் எண்ணமென்ன?” என்று கேட்டான் கிருஷ்ணன்.
கிருஷ்ணர் கேட்டதும் துருபதன் சரேலென்று எழுந்துவிட்டான்.
“புருஷோத்தமராகிய கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு நன்மையைச் சிந்திப்பதுபோல யுதிஷ்டிரர் கூட சிந்திப்பதில்லை. உம்முடைய முடிவு இறுதியானது ப்ரபோ” என்று கைகூப்பினான் துருபதன்.
இவ்வளவு நேரமாக குந்தி விதுரரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் பார்வையில் நன்றி தோய்ந்திருந்தது. விதுரரின் அறிவுரை இல்லாவிட்டால் அரக்குமாளிகையில் தீக்கிரையாகியிருப்போம் என்ற உணர்வில் அவள் கண்களில் நீர் தாரைதாரையாய் வழிந்தது. இவ்வளவு நேரத்துக்குப் பின்னர்தான் விதுரர் குந்தியிருக்கும் பக்கம் வந்தார். தரை தலையில் பட விழுந்து வணங்கினார். மைத்துனர் இப்படிச் செய்ததும் குந்தி இன்னும் உணர்ச்சிப் பெருக்கில் தேம்பினார். அவை நாகரீகம் கருதி கண்களைத் துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“விசித்ரவீரிய புத்திரரே! நீர்தான் உம் குழந்தைகளை பிழைப்பித்தீர். அரக்குமாளிகையில் போயிருக்கவேண்டியவர்கள் உமது கருணையினால் இங்கு இருக்கிறார்கள். ஆமை எந்த விதத்தில் தான் இருந்தாலும் குஞ்சுகளைப் பற்றியே நினைவில் இருக்குமாம். அதுபோல உம்முடைய நினைவினால் இவர்கள் க்ஷேமமாக இருக்கிறார்கள். குயில் குஞ்சுகளைக் காக்கை வளர்ப்பது மாதிரி நீர் என் புத்திரர்களைக் காப்பாற்றுகிறீர்கள். இதற்குமேல் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அநேக தர்மம் தெரிந்த நீரே இதற்கு வழி சொல்வீர்” என்று கைகூப்பினாள். சபை உணர்ச்சிப்பெருக்கில் நிறைந்தது. குந்தியின் சொற்களில் பாண்டவர்களின் கண்களிலும் கங்கை. விதுரரும் அந்த அன்பில் விக்கித்துப்போனார்.
“குந்தி! இவ்வுலகில் உன் புத்திரர்கள் மஹா பலசாலிகள். அவர்கள் ராஜ்ஜியம் அடைவார்கள். நீ துயரப்படாதே!”
துருபதன் அனுமதி கொடுத்தான். புக்ககம் செல்லும் தன் பெண்ணிற்கு கணக்கிலடங்கா சீர்கள் கொடுத்தான்.
பொன் மயமான கச்சைகள் கழுத்துப்பட்டைகள் பொன்னாபரணங்கள் எல்லா ஆயுதங்களும் கூடிய ஆயிரம் யானைகள் திடகாத்திரமான பாகர்களுடன் முன்னே சென்றது. பொன்னாலும் ரத்தினத்தாலும் சித்திரமாகச் செய்த நாலு குதிரைகள் பூட்டப்பட்ட பிரகாசமுள்ள ஆயிரம் தேர்கள் வீதியை அடைத்து நகர்ந்தன. உயர்ந்த சாமரங்களை உடைய ஐம்பதினாயிரம் உயர்ந்த ஜாதிக்குதிரைகள் இருபுறமும் அணி வகுத்தன. சிறந்த அணிகலன்களோடு பதினாயிரம் தாதிமார்களும் சிறந்த வீரர்களான பதினாயிரம் வீரர்களையும் ஐவருக்கும் சீதனமாகக் கொடுத்தான்.
பொனாலான படுக்கைகள், ஆஸனங்கள் பாத்திரங்கள் என்று வண்டிவண்டியாக தனியாகச் சென்றது. கோடி கோடியான பசுக்கள் “ம்மா...” என்று கன்றுகுட்டிகளுடன் இரண்டு ஊர்கள் அளவிற்கு ஐவருக்கு சீர் பொருளாக நிறுத்தப்பட்டிருந்தது. நூறு பல்லக்குகளும் அதை எடுப்பதற்கு ஐநூறு மனிதர்களையும் தயாராக நிறுத்தியிருந்தான்.
ஆயிரக்கணக்கான வாத்தியகோஷங்கள் முழங்கின. திருஷ்டத்யும்னன் தன்னுடன் பிறந்தவளை அழைத்துக்கொண்டு வந்தான். தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீர்வரிசைகள் சுற்றும் முற்றும் நகர அவனும் திரௌபதியுடனும் பாண்டவர்களுடனும் குந்தியுடனும் ஹஸ்தினாபுரம் வந்தடைந்தான்.
**
அஸ்தினாபுர எல்லைக்கு கௌரவர்கள் அநேகம் பேர் வந்திருந்தார்கள். விகர்ணன் சித்ரசேனன் இருவரும் வரவேற்புகளைக் கவனித்துக்கொண்டார்கள். துரோணரும் கிருபரும் வந்திருந்து ஆசி வழங்கி நகருக்குள் பிரவேசிக்கச் சொன்னார்கள். அவர்களைக் கண்டதும் உற்சாகமடைந்த பாண்டவர்கள் மெல்ல மெல்ல அஸ்தினாபுரத்திற்குள் பிரவேசித்தார்கள். பாண்டவர்களின் வருகையைக் கேள்வியுற்ற ஜனங்கள் நகரத்தை அலங்கரித்தார்கள். தெருவெங்கும் தோரணங்கள். வாழைமரங்கள் நட்டார்கள். வீதிகளில் தண்ணீர் தெளித்துக் கோலமிட்டார்கள். சங்கம் பேரி போன்ற பற்பல வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
யுதிஷ்டிரைக் கண்ட மக்கள் “பாண்டு மஹராஜாவே திரும்ப வனத்திலிருந்து வந்ததுபோலிருக்கிறது” என்று சந்தோஷப்பட்டார்கள். வயது முதிர்ந்த பிராமணன் ஒருவன் “நாம் செய்த தானமும் ஹோமமும் தவமும் பயன் அளிக்குமாயின் இந்தப் பாண்டவர்கள் இன்னும் நூறாண்டு காலம் வாழ்ந்து இங்கு ஆட்சி புரியவேண்டும்” என்றான். அவனைச் சுற்றி அமர்ந்திருந்த அனைவரும் அதை ஆமோதிப்பது போல ஜெயகோஷமிட்டார்கள்.
பாண்டவர்கள் அரண்மனையை அடைந்தார்கள். திருதராஷ்டிரனுக்கும் பீஷ்மருக்கும் பாதவந்தனம் செய்தார்கள். திருதராஷ்டிரன் அவர்களுடைய கிருஹத்திற்கு பிரவேசம் செய்ய கேட்டுக்கொண்டான்.
*இருகைகளினாலும் பாணம் விடுபவன்.

No comments:

Post a Comment