Friday, March 9, 2018

கணிகர் சொன்ன நரிக் கதை



பாண்டு புத்திரர்களின் வளர்ச்சி திருதராஷ்டிரனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. துரியோதனன் பிதாவாகிய திருதராஷ்டிரனை பாண்டவர்களைத் துரத்திவிட வேண்டும் என்று தொடர்ந்து நச்சரித்து வந்தான். ராஜநீதி சாஸ்திரங்களை நன்றாகத் தெரிந்த கணிகர் என்பவரைக் கூட்டிவரச் சொன்னான். நீதி கேட்டால் தனக்கு எதாவது உபாயம் தோன்றும் என்று எண்ணினான்.

கணிகர் சகுனியின் மந்திரி. திருதராஷ்டிரன் கணிகரை அழைத்தது தனது மாமா சகுனி மூலம் தெரிந்துகொண்ட துரியோதனன், கர்ணன், துச்சாஸனன், சகுனி ஆகியோர் கணிகரைப் பின் தொடர்ந்து திருதராஷ்டிரன் இல்லம் அடைந்தார்கள்.
எல்லோரும் அங்கே அமர்ந்துகொண்டு கணிகருக்கு ஆசனம் கொடுத்து ராஜநீதி கேட்க ஆரம்பித்தார்கள்.
“கணிகரே! பாண்டவர்கள் நாங்கள் பயப்படத்தக்கவர்களாக இருக்கிறார்கள். வீரதீரபராக்கிரமங்கள் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். எங்களுக்கு க்ஷேமம் உண்டாக்குவதையும் அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதைப் பற்றியும் நீதி போதனை எதுவும் இருந்தால் எங்களுக்கு எடுத்துரையுங்கள். அதன்படி செய்கிறோம்”
திருதராஷ்டிரன் துரியோதனனின் வெறுப்பு நிறைந்த கரகரக் குரலைக் கேட்டு ஒரு கணம் பயந்துபோனான். துரியோதனனின் பொறாமை ஆறாக அங்கே ஓட ஆரம்பித்தது.
கணிகர் ராஜ நீதியை சொல்ல ஆரம்பித்தார்.
“ராஜா என்பவன் எப்போதும் தண்டிப்பதையே வழக்கமாகக் கொள்ளவேண்டும். எப்போதும் தண்டனை கிடைக்கும் என்பதை அறிந்து அந்த மன்னனிடம் மக்கள் அச்சப்படுவார்கள். அதனால் தண்டம் என்பதே சிறந்த மார்க்கம். தன்னுடைய குற்றத்தை பிறர் அறியா வண்ணம் செய்ய வேண்டும். ஆமை தனது அங்கங்களை வைத்திருப்பது போல ராஜாங்க விஷயங்களை ரஹஸ்யமாக வைத்திருக்கவேண்டும். பிராம்மணர்களைக் காக்கவும் துஷ்டர்களை அடக்கவும் மன்னன் படைக்கப்பட்டிருக்கிறான். துஷ்டநிக்ரஹமும் சிஷ்ட பரிபாலனமும் தர்மத்தை விருத்தியடைச் செய்கின்றன”
கணிகரின் தர்மோபதேசம் தெளிவாக இருந்தது. துரியோதனன் காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்டான். திருதராஷ்டிரன் அவர் சொல்வதில் எவையெல்லாம் தமது புத்திரர்களுக்கு நன்மை பயக்கும் என்று மனதில் எழுதிக்கொண்டிருந்தான். இப்படியொரு உபகாரம் தனது மருமக்களுக்குச் செய்கிறோம் என்று சகுனி சந்தோஷத்தில் மிதந்துகொண்டிருந்தான்.
“குற்றவாளியை மன்னித்து விடும் அரசனுக்கு இந்த லோகத்தில் அவமானமும் பரலோகத்தில் நரகத்தை அடைவான். ராஜாவினிடத்தில் செல்வத்தை அடைந்து அவனுக்கே தீங்கு செய்யும் அதமனைப் பிடித்து கொல்ல வேண்டும். அவனிடமிருந்தப் பொருட்களைக் கைப்பற்றி ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். ராஜாங்க கார்யங்களை நிர்வஹிக்க நியமிக்கப்பட்டவர்கள் ராஜாவிடமிருந்த கட்டுப்பாட்டை இழந்து சென்றால் தர்மசாஸ்திரம் அர்த்தசாஸ்திரம் தெரிந்தவர்களை மன்னன் நியமித்து அவர்களும் நெறிதவறாமல் இருக்கிறார்களா என்று மாறுவேடம் அணிந்த பிரத்யேக காவலர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும்.”
துரியோதனன் கணிகரின் இந்த உபதேசங்களைக் கேட்டு முகம் மலர்ந்தான். இதில் எதாவது ஒரு வழியை தலைச்சொல்லாக எடுத்துக்கொண்டு பாண்டவர்களை தீர்த்துக்கட்டிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது கணிகர் அவனின் உள்ளப்போக்குக்கு தகுந்தவாறு மேலும் சில நீதிகளை அளிக்கத் தொடங்கினார்.
“காலில் தைத்த முள்ளை பிசகாக எடுத்தால் மீதம் மாட்டிக்கொண்டு பெரிய சீழ் வைத்த புண்ணை தந்துவிடும். அதுபோல தீங்கு செய்யும் பகைவர்களைக் கொல்லுதலே சிறந்த செயல். சிறிய நெருப்புப் பொறி ஆதாரமாக இருந்து பெரும் வனத்தை சாம்பலாக்குவது போல எதிரி பலஹீனனாக இருந்தாலும் அவனைத் தப்பவிடக்கூடாது.”
“சபாஷ்! மாமா கணிகரின் ராஜநீதிகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன” என்று தொடையைத் தட்டி ஆர்ப்பரித்து மாமன் சகுனியைப் பார்த்து சத்தமாகச் சிரித்தான் துரியோதனன். அதை ஆமோதிப்பது போல சேர்ந்துகொண்டனர் கர்ணனும் துச்சாஸனனும். மாமன் மௌனமாக விஷமுள்ள சிரிப்பை உதிர்த்தான்.
”ஒரு மன்னன் குருடனாக இருக்கும் நேரத்தில் குருடனாகவும் செவிடனாக இருக்கும் காலத்தில் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாதவனாகவும் இருக்க வேண்டும். மான் எப்படி எச்சரிக்கையா படுத்துக்கொள்ளுமோ அதுபோல நித்திரையின் போது கூட எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வில்லைப் புல்லைப் போல பிரயோகிக்கவேண்டும்.”
”மாமா! சத்ருக்களை எப்படிக் கொல்ல வேண்டும் என்று கணிகர் இன்னும் சொல்லவில்லையே!” என்று அவசரப்பட்டான் துரியோதனன்.
“துரியோதனா! பொறுமை அவசியம். காத்திரு. கணிகர் தொடரட்டும்”
“சத்ருவையும் முன்னால் அபகாரம் செய்தவனையும் அவனால் நம்பப்பட்ட சமையற்காரனுக்கு லஞ்சம் கொடுத்துக் கொல்ல வேண்டும். எதிரி பக்ஷத்திலுள்ள ராஜா, மந்திரி, மித்ரன், கோசாதிபதி, சேனாதிபதி, தேசரக்ஷகர், துர்க்கரக்ஷகர் என்ற எழுவரையும் கொல்ல வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஐவர். அதுவும் முடியாவிட்டால் மூவர்.”
:”சபாஷ்!” துரியோதனன் தொடை தட்டி உத்தரீயத்தை சரி செய்துகொண்டான்.
“தனக்கு அனுகூலகாலம் வருகிற வரை சத்ருவை தோளில் சுமக்கலாம். பின்னர் பானையைப் போட்டு உடைப்பது போல கொன்றுவிட வேண்டும். பகைவனுக்கு தயைக் காட்டக்கூடாது. அவனது இரக்கமான சொல்லில் மயங்கக்கூடாது. தீங்கு செய்தவர்களைக் கொன்றுவிட வேண்டும். விரோதியை சாம தான பேத தணடம் என்னும் எதாவது ஒரு உபாயத்திலாவது கொன்றுவிட வேண்டும்”
வெகுநேரத்திற்குப் பிறகு திருதராஷ்டிரன் முழித்துக்கொண்டான்.
“கணிகரே! சாமதானபேததண்டங்களினால் சத்ருவை எப்படி கொல்வது? எனக்கு அதை தெளிவாகச் சொல்லவேண்டும்”
“மஹாராஜரே! அதற்கு தர்மசாஸ்திரங்கள் தெரிந்த நரி ஒன்றின் கதையைச் சொல்கிறேன்”
கணிகர் இவ்வாறு சொன்னவுடன் அனைவரும் ஒருமுகமாக கணிகரிடம் கதை கேட்கத் தயாராகினர்.
“தேர்ந்த புத்தியுள்ளதும் தனது காரியத்தை ஸ்வயமாகச் சாதித்துக்கொள்ளும் திறமை படைத்த நரி ஒன்று இருந்தது. புலி, எலி, செந்நாய், கீரிப்பிள்ளை என்ற நான்கும் அதன் ஸ்நேகிதர்கள். அந்தக் காட்டில் வலிமை வாய்ந்த மான்கூட்டம் ஒன்று வசித்தது. கிழப்புலியாகிவிட்டதால் அந்த மான்களை பிடிக்கமுடியவில்லை. நரி அந்த மானை ருசிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது. அதற்கு ஒரு திட்டம் தீட்டியது”
கணிகர் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததால் நீர் அருந்தலாம் என்று சற்று நிறுத்தினார். துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் அந்த கண நேரம் கூட பொறுக்கமுடியவில்லை. முகத்தில் பரபரப்பு அடங்காமல் கணிகர் தொண்டையில் நீர் இறங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“புலியே! உனக்கு வயதாகிவிட்டது. உன்னால் அந்த மானைப் பிடிக்கமுடியவில்லை. நம் நண்பனாகிய எலியை அதன் காலைக் கடித்துவிடச் சொல்கிறேன். அந்த மானால் வேகமாக ஓடமுடியாது. நீ சுலபமாக அடித்துக் கொன்றுவிடலாம். பின்னர் நாம் ஐவரும் அதைப் பங்குபோட்டு தின்னலாம்” என்றது. எல்லோரும் இதை ஒத்துக்கொண்டார்கள். திட்டம் போட்டபடி எலி மானின் காலைக் கடித்தது. விந்திவிந்தி ஓடிய மானை இலகுவாக அடித்தது புலி. மான் செத்துக்கிடந்ததும் நரி தனது நண்பர்களிடம் ”எல்லோரும் ஸ்நானம் செய்துவிட்டு வாருங்கள். இதை நான் காவல் காக்கிறேன். பின்னர் நானும் சென்று ஸ்நானம் செய்துவிட்டு வந்தவுடன் எல்லோரும் தின்னலாம்” என்று சொன்னது.
ஸ்நானம் செய்துவிட்டு முதலில் வந்தது புலி. நரி புலியைப் பார்த்து இளக்காரமாகச் சிரித்தது
“ஏன் இப்படி கிண்டலாகச் சிரிக்கிறாய்” என்று கேட்டது புலி.
“இல்லை. எலி சொன்னதை நினைத்துப்பார்த்தேன். சிரிப்பு வந்தது” என்றது நரி.
“எலி என்ன சொன்னது? சொல்” என்று காலை அடிப்பது போல தூக்கியது புலி.
“அது கடித்ததால்தான் வலிமையான உன்னாலேயே மானைப் பிடிக்க முடிந்ததாம். அதன் உதவி இல்லாமல் உன்னால் உன்னுடைய உணவை சம்பாதிக்கமுடியாதாம். அதான் சிரிப்பாக வந்தது” என்றது நரி.
புலிக்கு ரோஷம் வந்துவிட்டது.
“அப்படியொன்றும் எனக்கு இந்த மான்கறி வேண்டாம். நானே அடித்து ஒரு மானைச் சாப்பிடுகிறேன்” என்று கிளம்பியது.
பின்னர் எலி வந்தது.
“எலியாரே! கீரிப்பிள்ளைக்கு மான் மாமிசம் விஷமாம். ஆகையால் அது உன்னைதான் புசிக்கப்போகிறேன் என்று என்னிடம் சொல்லிவிட்டு ஸ்நானம் செய்யக்கிளம்பிப் போயிற்று. உனக்கு நண்பன் என்ற முறையில் சொன்னேன்” என்றது
எலி பயந்து போய் பக்கத்திலிருந்த வளைக்குள் புகுந்து கொண்டது.
அடுத்தது செந்நாய் குளித்துவிட்டு வந்தது.
“புலி உன் மேல் பயங்கர கோபத்தில் உள்ளது. தனது மனைவியுடன் திரும்பி வருவதாகவும் அதன் மனைவிக்கு செந்நாய்க்கறி மிகவும் பிடிக்கும் என்று சொல்லிச் சென்றது. பார்த்துக்கொள்ளப்பா” என்று சொன்னது நரி.
உடம்பை சுருக்கிக்கொண்டு செந்நாய் ஓடிவிட்டது. கடைசியாக கீரிப்பிள்ளை வந்தது.
நரி தனது காலை மடக்கி புஜபலம் காட்டுவது போலக் காட்டியது. கீரிப்பிள்ளை சிரித்தது.
“யே! இப்போதுதான் புலி, செந்நாய் எல்லோருடனும் சண்டைப் போட்டு விரட்டியிருக்கிறேன். நீயும் வா. வந்து என்னுடம் மோது. ஒரு கைப் பார்த்துவிடலாம். பின்னர் நீயாவது நானாவது இந்த மானை புசிக்கலாம்” என்று நரி கீரிப்பிள்ளையை சண்டைக்கு அழைத்தது.
“ஐயய்யோ! புலி செந்நாயையே நீ ஜெயித்துவிட்டாய். நீதான் வீரன். எனக்கு இந்த மான் வேண்டாம்” என்று கீரிப்பிள்ளையும் பயந்து ஓடியது.
கடைசியில் அந்த மான்கறியை நரி இஷ்டம் போல தின்றது.
திருதராஷ்டிரன் கதை முடிந்ததை புரிந்துகொண்டான். கணிகரின் கதையில் குதூகலமடைந்தான் துரியோதனன். கர்ணனும் துச்சாதனனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். சகுனி இதில் என்ன திட்டம் போட்டால் பாண்டவர்கள் அழிவார்கள் என்று மனக்கணக்கில் இறங்கினான்.
மதிய வேளையில் அங்கே வரவழைக்கப்பட்ட கணிகர் அந்தி சாயும் நேரமாகியும் இந்த ராஜ நீதிகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த ஐவரும் உன்னிப்பாக கணிகர் நீதியைக் கேட்டு அதில் எதாவது உபாயம் பாண்டவர்களை அழிக்க தேறுமா என்று ஆர்வத்துடன் அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
நாம் நாளையும் கணிகர் நீதிகளைத் தொடருவோம்.

No comments:

Post a Comment