துரோணர் அரண்மனையிலிருந்து கிருபரின் இல்லம் திரும்பினார். சிறிது நேரத்தில் அந்த வீதி முழுவதும் ராஜாங்க ரதங்களாக நின்றது. பீஷ்மர் பாண்டவர்களையும் துரியோதனாதிகளையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார்.
“இவர்கள் உமது சிஷ்யர்கள். அனுக்ரஹம் செய்யுங்கள்” என்று துரோணரைப் பார்த்துக் கைக்கூப்பினார். துரோணருக்கு கிருபர் முன்னால் இப்படி பீஷ்மர் சொன்னது சங்கடமாக இருந்தது.
“பீஷ்மரே! யுத்தங்களில் வென்றவரே! இதோ என் பக்கத்தில் கிருபாசாரியாரும் இருக்கிறார். இந்த செயலால் அவருக்கு மனவருத்தம் எனில் உம்மிடம் நான் கொஞ்சம் தனம் யாசித்துப் பெற்றுக்கொண்டு என்னுடைய ஆஸ்ரமத்திற்கு திரும்பிவிடுகிறேன்”
கிருபாசாரியைப் பார்த்தார் பீஷ்மர். துரோணரையும் பார்த்தார்.
“கிருபர் எப்பொழுதும் எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர். அவரை நாங்கள் பூஜிக்கிறோம். போஷித்துக்கொள்கிறோம். ஆனால் நீர் அவர்களுக்கு குருவாக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுக்கொடுங்கள்” என்று வேண்டிக்கொண்டார் பீஷ்மர்.
துரோணர் சம்மதித்த பிறகு அவருக்கு தனியாக ஒரு பெரிய இல்லம் தரப்பட்டது. ராஜகுமாரர்கள் அனைவரும் குருகுலவாசம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
சிஷ்யர்களாக சேர்ந்த அனைவரும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்கள். ராஜ லக்ஷணத்துடன் கூடிய அவ்வளவு பேரையும் ஆசீர்வதித்த துரோணர்
“குழந்தைகளே! எனது நெஞ்சை நிரடிக்கொண்டிருக்கும் சம்பவத்தால் நான் அல்லும்பகலும் துயரத்தில் இருக்கிறேன். எனது மனது அந்த பாரத்தை தாங்க வலுவில்லாமல் தள்ளாடுகிறது. நீங்கள் அனைவரும் அஸ்திரங்களில் தேர்ந்தபிறகு அதனை நிறைவேற வேண்டும்”
ஒருவருக்கும் ஒன்றும் புரியாமல் முழித்தார்கள். கௌரவர்கள் பதிலேதும் பேசாமல் மௌனமாக நின்றிருந்தார்கள். அர்ச்சுனன் ஒருவன் மட்டும் துடிப்பாக முன்னே வந்து “நான் நிறைவேற்றித் தருகிறேன்” என்றாள் கைகளைத் தூக்கி. துரோணர் அர்ச்சுனனை அப்படியே கட்டிப் பிடித்து பலமுறைகள் உச்சி மோந்தார். அவனைக் கட்டித் தழுவிக்கொண்டு ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார்.
பக்கத்தில் அஸ்வத்தாமா இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.
“அஸ்வத்தாமா இங்கே வா! இவன் தான் இனிமேல் உன்னுடைய நெருங்கிய நண்பன். அர்ச்சுனன” என்று இருவரது கையையும் பற்றி இழுத்து கோர்த்துவிட்டார். இருவரும் கட்டி அணைத்துக்கொண்டார்கள்.
அர்ச்சுனன் துரோணரின் காலில் விழுந்து பிடித்துக்கொண்டு “குருவே! இன்று முதல் நான் உங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். நான் உமது சிஷ்யன். உமது அருளினால் ஜீவிக்கிறேன்” என்றான்.
**
குருகுலவாசம் ஆரம்பித்தது. துரோணாசாரியார் பலவிதமான அஸ்திரசஸ்திர வித்தைகளை அனைவருக்கும் பேதமில்லாமல் கற்பித்தார். காலையிலிருந்து அந்தி சாயும் நேரம் வரை குதிரையேற்றம், யானையேற்றம், ஈட்டி எறிதல், கத்திச் சண்டை, தனுர்வேதம் என்று எல்லா வகுப்புகளும் நடக்கும். இதில் அவர்களது தேகத்தை வைரம் பாய்ந்த கட்டையாக மாற்றுவதற்குத் தேவையான பயிற்சிகளும் அடக்கம்.
கற்றுக்கொள்ளும் அனைவரிடமிருந்தும் அர்ச்சுனன் மட்டும் பிரத்யேகமான தீரனாக இருந்தான். வில்லிலும் சொல்லிலும் தேர்ந்தவனாக இருந்தான். துரோணர் உபதேசிக்கும் போது சட்டென்று எதையும் பிடித்துக்கொள்வதில் கெட்டிக்காரனாக இருந்தான் இந்திர புத்திரனான அர்ச்சுனன். பலவிதமான பரீட்சைகள் வைத்தார் துரோணாசாரியார்.
ஒருநாள் வாய் குறுகலான ஒரு குடத்தைக் கொடுத்து அதில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு வரும்படி சொன்னார். பக்கத்தில் குளம் இருந்தது. குடத்தின் வாய் அடைக்கப்பட்டு அதில் சொட்டுச் சொட்டாக நீரின் போக்குவரத்து இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.
துரோணர் சொன்னதும் அனைவரும் குளத்துக்கு ஓடினார்கள். குடத்தை தண்ணீரில் முங்கிப் பிடித்தபடி நின்றிருந்தார்கள். வெகுநேரமாக அப்படியே நின்றிருந்தார்கள். ஆனால் அர்ச்சுனன் மட்டும் சில கணங்களில் அந்தக் குடத்தை நிரப்பிக்கொண்டு துரோணரிடம் சென்றுவிட்டான்.
அர்ச்சுனன் சென்றதைப் பார்த்ததும் அனைவரும் துரோணரிடம் ஓடினார்கள். அவனது குடத்தில் மட்டும் பெரிய வாய் இருப்பதாக நினைத்துக்கொண்டு அந்தக் குடத்தைச் சுற்றிச் சுற்றி பார்த்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே போன்ற குடம்தான்.
ஒன்றும் புரியாமல் அனைவருக்கும் தலையைச் சுற்றியது. எல்லோர் முன்னிலையிலும் அர்ச்சுனனை துரோணர் விசாரித்தார்.
“அர்ச்சுனா! இவ்வளவு குறுகிய வாய் ஓட்டையுள்ள இந்தக் குடத்தில் எப்படி நீ சீக்கிரமாக நீர் பிடித்தாய்?”
“குருவே! நேற்றுதான் நீங்கள் வாருணாஸ்திரத்தினால் தண்ணீர் கொண்டுவருவது பற்றி பயிற்றுவித்தீர்கள். நான் அந்த வாருணாஸ்திரத்தால் இந்தக் குடத்தை நிரப்பிவிட்டேன்” என்றான்.
துரோணர் சிஷ்யனின் புத்திக்கூர்மையை பாராட்டினார். கற்றுக்கொள்ளும் அனைவரையும் அர்ச்சுனனைப் போல புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். துரியோதனனுக்கு எரிந்தது.
எப்போதும் அஸ்திரங்களைப் பற்றியும் பாணங்களைப் பற்றியுமே நினைவாக அர்ச்சுனன் திரிந்துகொண்டிருந்தான். இதைக் கண்ட துரோணர் இன்னொரு பரீட்சை செய்ய எண்ணினார்.
குருகுலத்தின் சமையற்காரனைக் கூப்பிட்டார்.
“நீ எப்போதும் அர்ச்சுனனுக்கு இருட்டான இடத்தில் அன்னம் போடாதே! இப்படி நான் உன்னிடம் சொன்னேன் என்று அர்ச்சுனனுக்குத் தெரியவேண்டாம். சரியா?” என்று அவனிடம் சொல்லி அனுப்பினார்.
இப்படி நாட்கள் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு நாள் அர்ச்சுனன் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் காற்று பலமாக வீசி விளக்கை அணைத்துவிட்டது. விளக்கு அணைந்தாலும் கையிலிருந்து எடுத்த சாப்பாடு அழகாக வாய்க்குள் சென்றது. இப்போது அர்ச்சுனன் யோசித்தான். இரவு விளக்கு இல்லாவிட்டாலும் கைக்கு வாய் இருக்கும் இடம் தெரிகிறது. இது எப்படி சாத்தியமாயிற்று. தினமும் சோறு தின்பதால். அப்படியானால் ஒரு செயலை அனுதினமும் செய்யும்போது அது பழக்கமாகிவிடுகிறது. பின்னர் பகல் இரவு வெளிச்சம் இருட்டு என்று எதுவும் தெரிவதில்லை. தானாக அந்தச் செயல் நடந்துவிடுகிறது.
மறுநாள் அர்ச்சுனன் ஒரு முடிவுக்கு வந்தவனாய் இரவு படுக்கையிலிருந்து எழுந்து தனியாக வில் வித்தை பயிற்சிசெய்யுமிடத்திற்குச் சென்றான். நாணேற்றி சரேல் சரேல் என்று வரிசையாக பாணங்களைக் குறி பார்த்து எய்தான். அவனது வில்லின் நாண் விரல்களில் உராயும் போது ஏற்படும் சத்தத்தால் துரோணர் வெளியே ஓடி வந்து பார்த்தார். அர்த்தராத்திரியில் அர்ச்சுனன் மட்டும் கையில் வில்லம்போடு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தான்.
இரவிலும் அவன் குறிதவறாமல் இலக்கை அடித்தது கண்டு வியப்புற்றார் துரோணர். “இந்த உலகத்திலேயே உன்னைப் போன்ற வில்லாளி வேறுயாருமில்லை என்று எல்லோரும் அதிசயிக்கும்படி உனக்கு எல்லா அஸ்திரசஸ்திர வித்தைகளையும் கற்றுக்கொடுக்கிறேன்” என்று பிரக்ஞை செய்தார்.
அர்ச்சுனனுக்கும் இன்னும் பிற ராஜகுமார்களுக்கும் மீண்டும் குதிரையேற்றம், யானைச் சண்டை, கதாயுத்தம் சிலம்பம் என்று எல்லாம் கற்றுக்கொடுத்தார்.இதைக் கேள்விப்பட்ட அயல் தேசத்து ராஜாக்கள் அனைவரும் தத்தம் பிள்ளைகளைத் துரோணாஸ்ரமத்தில் சேர்த்தார்கள். நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் சேர்ந்து பயிற்சி பெற்றார்கள்.
தலையில் இறகுகள் சொருகிய கிரீடத்துடன் கானக ஆடைகள் தரித்து வேடுவ இளைஞன் ஒருவன் ஒருநாள் துரோணரின் குருகுலத்திற்கு வந்தான். அன்று பயிற்சிக்கு விடுமுறை அளித்து சிஷ்யர்களை வெளியில் அனுப்பியிருந்தார் துரோணர்.
“நமஸ்கரிக்கிறேன் குருவே” என்று அவரை விழுந்து நமஸ்கரித்தான்.
“யாரப்பா நீ? எழுந்திரு” என்றார் துரோணர்.
”நான் ஏகலவ்யன். என் தந்தை ஹிரண்யதனுஸ் வேடுவர் குல தலைவன்”
கௌரவர்கள் பாண்டவர்கள் என்று ராஜபுத்திரர்கள் நிறைந்த அந்தக் குருகுலத்தில் ஒரு வேடுவனா? என்று ஒரு கணம் யோசித்தார் துரோணர்.
“நிஷாதபுத்திரனே! உனக்கு பாணப்பிரயோகங்கள் சித்திக்கட்டும். இங்கே உன்னை சேர்த்துக்கொள்ளமுடியாத கட்டாயத்தில் இருக்கிறேன். நீ திரும்ப உன் வீட்டிற்கு செல்” என்றார்.
கானகத்திற்கு திரும்பிய ஏகலவ்யன் துரோணரைப் போன்ற தொரு மண் பதுமை செய்தான். அதை நடுவில் நிறுத்தி வைத்து அஸ்திரங்களைப் பிரயோகிக்க பழகிக்கொண்டான். நகரத்தில் தனது சிஷ்யர்களுக்குத் துரோணர் கற்பிக்கும் அனைத்தும் இங்கே இவனும் சுயமாகக் கற்றுக்கொண்டான்.
நிறைய அஸ்திரங்களைப் பழகிக்கொண்ட சிஷ்யர்களை வனம் சென்று வேட்டையாடி வரும்படி துரோணர் அனுப்பினார். ரதங்களில் ஏறிக்கொண்டு பாண்டவர்களும் கௌரவர்களும் காட்டிற்குள் சென்றார்கள். அஸ்திரங்களை ஏற்றிக்கொண்டு ஒரு ரதமும் ஒரு வீரனும் பின்னர் ஒரு நாயும் சென்றது.
அடர்ந்த காட்டில் கறுத்துப் போய் உடம்பில் அழுக்கோடு மான் தோலை உடுத்திருந்த ஒரு வேடச்சிறுவனைப் பார்த்து அந்த நாய் குரைத்துக்கொண்டு நின்றது. சட்டென்று தனது வில்லை உறுவி ஏழு அஸ்திரங்களைப் பூட்டினான். விட்டதில் குரைத்த நாயின் வாயை மூடமுடியாமல் பூட்டு போல தைத்து நின்றது. கௌரவர்களும் பாண்டவர்களும் அதிசயித்து நின்றார்கள்.
“நீ யார்?” என்று அர்ச்சுனன் கேட்டான்.
“என் பெயர் ஏகலவ்யன். ஹிரண்யதனுஸ் என்னும் வேட்டுவ ராஜாவின் புத்திரன் நான்” என்றான்
“நீ இந்த வில் பயிற்சி யாரிடம் பெறுகிறாய்? என்று அடுத்த கேள்வி கேட்டான் அர்ச்சுனன். அந்த வேடுவனின் பதிலுக்காக அவனை ஊடுருவிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“துரோணாசாரியார்”
அர்ச்சுனனுக்கு :”நீதான் என் பிரதான சிஷ்யன். உனக்கு சொல்லிக்கொடுக்காதது நான் யாருக்குமே சொல்லிக்கொடுக்கவில்லை: என்று துரோணர் நேற்றுச் சொன்னது ஞாபகம் வந்தது.
எல்லோரும் நகரத்துக்கு விரைந்தார்கள். காட்டில் கண்ட வேடச் சிறுவனைப் பற்றி புகழ்ந்து தள்ளினார்கள். அர்ச்சுனன் மட்டும் துரோணரின் அருகில் சென்று “என்னை விட சிறந்த சிஷ்யன் கிடையாது என்றும் எனக்குதான் அனைத்து அஸ்திர வித்தைகளும் கற்றுக்கொடுத்தேன் என்றும் சொன்னீர்கள். ஆனால் அங்கே ஒருவன் என்னை விட சிறந்த வில்லாளியாக நிற்கிறான்” என்று குறையாகச் சொன்னான்.
அர்ச்சுனனை அழைத்துக்கொண்டு தேரேறி கானகம் சென்றார் துரோணர். அங்கே மரங்களடர்ந்த பகுதியில் சரசரவென்று மின்னலென பாணங்களை விட்டு பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தான் ஒரு வேடச் சிறுவன்.
துரோணரைப் பார்த்ததும் ஓடி வந்து அவர் காலில் விழுந்து “குருவே! ஆசீர்வதிக்கவேண்டும்” என்றார். அவன் எழுந்ததும் அவனை அடையாளம் கண்டுபிடித்துவிட்டார் துரோணர். அன்று தன்னை தனியே சந்தித்தவன் இன்று எப்படி எல்லா அஸ்திர முறைகளையும் கற்றுக்கொண்டான் என்று ஆச்சரியப்பட்டார். இப்போது என்ன விசாரித்தாலும் அர்ச்சுனன் நம்மை நம்பமாட்டான் என்று நினைத்தார்.
“நிஷாதபுத்திரனே! நீ என் சிஷ்யன் என்று சொல்லியிருக்கிறாய். அதற்கு நீ குரு தக்ஷிணை தர வேண்டும். தெரியுமா?” என்றார் அதிகாரமாக.
“நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன். குருவிற்கு மிஞ்சியது எனக்கு வேறென்ன?”
“உனது வலக்கை கட்டைவிரலை எனக்குத் தக்ஷிணையாகக் கொடு” என்று கொடுஞ்சொல் கூறினார்.
கணமும் தாமதிக்காமல் தன்னுடைய் இடைவாளை உருவி சரக்கென்று வலக்கை கட்டைவிரலை இடக்கையால் அறுத்து அவர் காலடியில் சமர்ப்பணம் செய்தான்.
அர்ச்சுனன் சந்தோஷமடைந்தான். துரோணரும் தனது சொல்லைக் காப்பாற்றினார்.
நாடு திரும்பியதும் கடும் பயிற்சியில் ஈடுபட்டார்கள். துரியோதனனும் பீமனும் கதைப் பயிற்சியில் ஈடுபட்டார்கள். அசுவத்தாமா மந்திரங்கள் பிரயோகிக்கும் அஸ்திரசஸ்திரங்களைப் பயின்றான். யுதிஷ்டிரர் தேர்ச்சண்டையில் நிபுணரானார். நகுலசகதேவ இரட்டையர்கள் சிலம்பம் சுழற்றுவதில் வல்லமை பெற்றனர். அர்ச்சுனன் எல்லாவற்றிலும் தேர்ச்சிபெற்று நிகரற்ற வீரனாகத் திகழ்ந்தான். அஸ்திரோபதேசம் ;அனைவருக்கும் ஒன்றாக இருந்தும் வீரனாகிய அர்ச்சுனன் மட்டும் எல்லோரையும் விட கற்றறிருந்திருந்தான்.
ஒருநாள் அவர்களுடைய திறமையைச் சோதித்துப் பார்ப்பதற்கு ஒரு முக்கிய பரீக்ஷை வைப்பதற்காக காட்டில் சிறிது தூரம் அழைத்துச்சென்றார். அங்கே...
No comments:
Post a Comment