Friday, March 9, 2018

ஐவரின் அஸ்தினாபுர பிரவேசம்



பாண்டுவை எரித்த சிதை அடங்கிய மறுநாள் அந்த சதஸ்ருங்கமெனும் மலையில் இருக்கும் மகரிஷிகள் கலந்து ஆலோசித்தார்கள்.

“இங்கிருந்து பாண்டு மாத்ரியுடன் சொர்க்கம் சென்றான். அவனது பத்னியையும் புத்திரர்களையும் தகனம் செய்தும் கலையாத எலும்புக் கோவையையும் உடன்கட்டை ஏறிய மாத்ரியின் எலும்புக் கூட்டையும் எடுத்துக்கொண்டு நாம் அவர்கள் நகரம் செல்வோம்.”
“அரண்மனை வரை செல்வோமா?” மகரிஷிகளுள் ஒருவர் வினவினார்.
மற்றொருவர் “திருதராஷ்டிர மகாராஜாவிடமும் பீஷ்ம பிதாமகரிடத்தும் ஒப்படைத்துவிட்டு திரும்புவோம்” என்றார்.
எல்லா மகரிஷிகளும் ஒன்றுசேர்ந்து குந்தியையும் அந்த புத்திரர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்கள். பின்னாலேயே ஒரு வண்டியில் பாண்டு மற்றும் மாத்ரியின் எலும்புக் கோவைகளையும் எடுத்துக்கொண்டு அஸ்தினாபுரம் நோக்கி நகர ஆரம்பித்தார்கள். ஜடாமுடியும் மரவுரியுமாக பல ரிஷிகளும் அவர்தம் பத்னிகளும் சாரணர்கள் என்றழைக்கப்படும் சில கந்தர்வர்களும் சேர்த்து ஒரு பெரும் சேனையாக குருஜாங்கல தேசம் நோக்கிச் சென்றார்கள்.
சூரியன் கிளம்பியிருந்தான். வெய்யில் சூடு ஏறாத முன்பகல். வீதிகளைக் கடந்து அரண்மனை நோக்கி அனைவரும் வந்துகொண்டிருந்தார்கள். அப்போதே நிறைய பேர் “யாரிவர்கள்?” என்ற சந்தேகத்துடன் அவர்களைத் தொடர ஆரம்பித்தார்கள்.
குந்தி முன்னிலை வகிக்க அந்த மகரிஷிகளும் சாரணர்களும் பாண்டு புத்திரர்களும் அரண்மனை கோட்டை வாசலை அடைந்தார்கள். ரிஷிகளில் ஒருவர் முன்னே சென்று வாயில்காப்போனிடம் இன்னாரின்னார் வந்திருக்கிறார்கள் என்று விளக்கி “போ... ராஜாவிடம் தெரிவித்துவிட்டு வா” என்று அனுப்பினார்.
ஸபையில் சென்று அந்த வாயிற்காப்பவர்கள் சொன்னபின் திருதராஷ்டிரன், பீஷ்மர், விதுரன், ஸத்யவதி, அம்பாலிகை என்று அனைவரும் அவர்களைக் காணத் துடித்தார்கள். காந்தாரியும் அவளது நூறு புத்திரர்களும் பட்டும் அணிகலன்களுமாக அணிந்து கொண்டு பாண்டுவின் புத்திரர்களைப் பார்க்க அரண்மனை வாசலுக்கு வரத் தயாரானார்கள்.
குந்தி தனது ஐந்து புத்திரர்களுடன் நின்றுகொண்டிருக்க அவளுக்குப் பின்னாலும் பக்கத்திலும் நின்ற ரிஷிக்கூட்டத்தைப் பார்த்தவுடன் துரியோதனனும் அவன் சகோதரர்களும் அவர்கள் அருகில் சென்று மரியாதையாக தலை அசைத்துவிட்டு அமர்ந்தார்கள். பின்னர் குந்தியையும் அந்த ரிஷிகளையும் நகரின் வாயிலிலிருந்து தொடர்ந்து வந்த நாட்டுப் பிரஜைகளும் அமர்ந்தார்கள். பீஷ்மர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார். ரிஷிகளுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்துவிட்டு அவர்கள் வந்ததன் நோக்கமென்ன? என்று கேட்டார்.
மிக முதிர்ந்தவரும் ஜடாமுடியுடன் மான் தோல் உடுத்திய ரிஷியொருவர் அந்தக் கூட்டத்திலிருந்து எழுந்து முன்னே வந்தார். அங்கு கூடியிருந்த அனைத்து ஜனங்களும் அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆர்வத்துடன் அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார்கள்.
“இந்த நாட்டின் பிரஜைகளே ராஜர்களே! பாண்டு என்னும் பெயர் பெற்ற அரசன் காமஸுகங்களை துறந்துவிட்டு கானகம் வந்தான். அங்கே தபஸ்வியாகி அங்கு வசித்திருக்கும் ரிஷிகளின் பேரன்பைப் பெற்றான். புத்ர பாக்கியம் இல்லாததால் மிகவும் வருத்தப்பட்டான். பின்னர் பத்னிகளோடு ஸ்வர்க்கம் செல்வதற்கு தயாரானான். அப்போது ரிஷிகளாகிய நாங்கள் எங்களது ஞானதிருஷ்டியினால் அவனுக்கு சந்தான பாக்கியம் இருப்பதைக் கண்டு கொண்டோம். அந்தப் புத்திரர்களினால் பிதிர்க்கடனில்லிருந்தும் விடுபடுவான் என்று தேற்றினோம்”
கூட்டம் அசையாமல் உன்னிப்பாக அந்த ரிஷி சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு பெரும் மாநாடு நடந்துகொண்டிருந்தது.
“எதிர்பாராத விதமாக மான் வேட்டையாடப் போனவன் கிந்தம முனிவர் என்பவர் மான் வடிவில் புணர்ந்துகொண்டிருப்பவரைப் பார்த்தான். அது மான் என்று எண்ணி அம்பு போட்டுக் கொன்றுவிட்டான். சாகும் தருவாயில் அவர் புணர்ச்சியில் இருக்கும் போது உன் உயிர் பிரியும் என்று சபித்துவிட்டு இறந்துபோனார். பின்னர் பாண்டுவின் கட்டளைப்படி குந்தி துர்வாஸஸின் மந்திர பலனை உத்தேசித்து தர்மதேவதையை பூஜித்து யுதிஷ்டிரனையும், வாயுவைப் பஜித்து பீமஸேனனையும், இந்திரனை வருவித்து “அர்ஜுனன்” என்ற புத்திரர்களையும் மாத்ரியும் இதை சாஸ்தரோக்தமாக குந்தியிடம் கற்றுக்கொண்டு அஸ்வினி தேவர்கள் உதவியினால் இரட்டையர்களான நகுல சஹதேவர்களைப் பெற்றாள். இதோ அவர்கள் அனைவரும் உங்கள் முன்னே இருக்கிறார்கள். அதோடு பாண்டு மற்றும் மாத்ரியின் பிரேதஙக்ளை எலும்புக்கூடுகளாக கொண்டு வந்துள்ளோம். கிரமப்படி அதற்குண்டான பிரேதக்கிரியைகளைச் செய்யுங்கள்”
இந்த ஒவ்வொரு புத்திரர்கள் பற்றியும் அந்த ரிஷி சொல்லச் சொல்ல அங்கு தரையில் அமர்ந்திருந்த பெரும் கூட்டம் ஒருவரையொருவர் முகம் பார்த்துக்கொண்டும் முணுமுணுத்துப் பேசிக்கொண்டார்கள்.
“இன்றிலிருந்து பதினேழாவது நாள் பாண்டு உயிரிழந்தான். அவனது இறப்பைக் கண்டு சகியாமல் மாத்ரியும் அவனை எரியூட்ட சிதையில் அக்னிப் பிரவேசம் செய்தாள். அவனுடன் அவளும் பதிலோகம் அடைந்தாள். இதோ அவர்களின் பிரேதங்கள்”
அவர் கைகாட்டிய திக்கில் முழுவதும் போர்த்தப்பட்டு இரு பிரேதங்கள் இருந்தன.
“அவனது பத்னியாக குந்தியையும் அவளது புத்திரர்களையும் காப்பாற்றுங்கள். அந்த பாண்டு மற்றும் மாத்ரியின் பிரேதங்களுக்கு கிரியைகள் செய்து தர்மத்தைக் காப்பாற்றுங்கள்”
கௌரவர்களும் பீஷ்மரும் விதுரரும் சத்தியவதியும் அம்பாலிகையும் காந்தாரியும் மற்றும் அந்நாட்டு பிரஜைகளும் அமர்ந்திருக்கும் அந்த இடத்திலிருந்து கண் இமைக்கும் நேரத்தில் அந்த ரிஷிகளும் சாரணர்களும் மறைந்தார்கள். ஒரு பெரும் கூட்டமாக அவர்கள் மாயாஜாலமாக மறைந்ததைப் பார்த்து அங்கு குழுமியிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
திருதராஷ்டிரன் விதுரனை அழைத்தான்.
“விதுரனே! ராஜாவுக்கு பிரேதகாரியங்கள் செய்வது போல பாண்டுவுக்கும் மாத்ரிக்கும் செய்யவேண்டும். பசுக்களையும் வஸ்திரங்களையும் பலவிதமான தானியங்களையும் ரத்னங்களையும் தானம் தரவேண்டும். தேவர்களுக்கு ஒப்பான ஐந்து புத்திரர்களைப் பெற்ற பாண்டுவை பற்றி நாம் கவலை கொள்ளாமல் சிலாகிக்க வேண்டும்” என்றான்.
பல்லக்கு தயாராகியது. பலவகையான மணமுள்ள புஷ்பங்களைக் கொண்டு அந்தப் பல்லக்கை அலங்கரித்தார்கள். மந்திரிகளும் உறவினர்களும் சேர்ந்து பாண்டுவை அந்தப் பல்லக்கில் ஏற்றினார்கள். பின்னர் மாத்ரியை அதேபோல இன்னொரு பல்லக்கு தயார் செய்து மாத்ரியையும் அதில் ஏற்றி ஊர்வலமாகக் கங்கைக் கரை ஓரம் சென்றார்கள். பெரும்கூட்டம் அந்த இறுதி மரியாதையில் கலந்துகொண்டது.
ரித்விக்குகளும் புரோகிதர்களும் அக்னி கொண்டு வேதோக்தமான விதிகளை அனுசரித்து ஸம்ஸ்காரங்கள் செய்தனர். அகிற்சேரும், சந்தனமும் அந்த பிரேதங்களுக்குப் பூசினார்கள். பின்னர் பொன்குடங்களில் நீர் கொணர்ந்து ஊற்றினார்கள். வெண்சந்தனத்தையும் புன்னை ரஸத்தையும் எங்கும் பூசினார்கள். பின்னர் பாண்டுவையும் மாத்ரியையும் நெய்பூசி அலங்கரித்தார்கள். இரு பெரும் கட்டைகளால் ஆன கட்டில் சிதை மூட்டத் தயாரானது. புன்னை, பத்மகம் எனும் வாசனை மரக்கட்டை, நல்ல வாசனையுள்ள சந்தன மரம், ஸரள மரம், தேவதாருமரம், குங்கிலிய மரம், கொம்பரக்கு, செஞ்சந்தனமரம், அலரிச்செடி, வெட்டிவேர் போன்ற கட்டைகளால் சாஸ்திரரப்பிரகாரம் தகனம் செய்தார்கள்.
திகுதிகுவென்று பிரேதங்கள் எரியும் போது அம்பாலிகை “ஹா...புத்திரனே!” என்று அலறிக்கொண்டு மூர்ச்சையானாள். அந்த துயரத்தைக் கண்ட பிரஜைகளில் சிலர் கதறி அழுதார்கள். பீஷ்மர் கேவிக்கேவி அழுதார். விதுரர் கண்ணில் கங்கை கொட்டியது. பின்னர் பீஷ்மர், விதுரர், திருதராஷ்டிரன் ஆகியோர் ஜலதர்ப்பணம் செய்தார்கள்.
அரண்மனைக்குத் திரும்பிய அனைவரும் மிகவும் வருத்தத்துடன் இருந்தார்கள். பன்னிரண்டு ராத்திரிகள் கட்டிலை விட்டு தரையில் படுத்தார்கள். அந்நகரமே அந்த பன்னிரெண்டு நாட்கள் துயரத்தின் பிடியில் இருந்தது.
வியாஸர், பீஷ்மர், விதுரர், திருதராஷ்டிரன் ஆகியோர் நெய்யுடன் சேர்ந்த அன்னத்தை ஹோமம் செய்து பாண்டுவுக்கு சிராத்தம் செய்தார்கள். ஆயிரக்கணக்கான பிராமணசிரேஷ்டர்களுக்கு அன்னபானங்கள் அளித்து இரத்தினக் குவியல்களையும் சிறந்த கிராமங்களையும் தானம் செய்தார்கள். பின்னர் பாண்டவர்களை அழைத்துக்கொண்டு அஸ்தினாபுரம் வந்தடைந்தார்கள்.
சத்யவதி தாங்கமுடியாத துக்கத்தில் இருந்தாள். வியாஸர் அவரது தாயாருக்கு ஆறுதல் கூறத்துவங்கினார்.
“தாயே! சென்ற காலங்கள் நமக்கு சுகமானவை. இனி வரும் காலங்கள் மிகவும் துன்பமானவையாக மாறிவிடும். பூமிக்கு யௌவனம் போய்விட்டது. அதிக கெடுதல்கள் ஏற்படும் என்று எனக்குத் தெரிகிறது. அதிக வஞ்சகங்களும் பாபங்களும் மேலிடும். நல்ல காரியங்களும் நல்ல ஒழுக்கங்களும் குறைந்துவிடும். வர்ணாசிரமதர்மங்கள் கெட்டுப்போய்விடும். கௌரவர்களின் அநீதியினால் இந்த பூமி நிலைக்காது. நீ யோகாப்யாசம் செய். தபோவனம் செல். இந்தக் குலத்துக்கு நேரப்போகும் கஷ்டமான நாசத்தை உன்னால் காண சகிக்கமுடியாது.”
சத்தியவதியை வானபிரஸ்தம் போகத் தூண்டினார் வியாஸர். சத்தியவதி அம்பிகையையும் அம்பாலிகையையும் சந்தித்தாள்.
“அம்பிகையே! உன் பேரன் துரியோதனனால் இந்த பரதகுலம் நாசமடையப்போகிறதாம். நீ அதைக்காண இங்கே இருப்பாயா? இல்லை என்னுடனும் அம்பாலிகையுடனும் வானபிரஸ்தம் வருகிறாயா?” என்று கேட்டாள்.
அவளும் சம்மதித்து சத்யவதி பீஷ்மரிடம் சொல்லிக்கொண்டு தனது மருமகள்களுடன் வனம் ஏகினாள். அங்கு கடும்தவம் செய்தார்கள். பின்னர் அவர்கள் விரும்பின லோகங்களை அடைந்தார்கள்.
**
பாண்டவர்களுக்கும் உபநயனம் செய்வித்தார் பீஷ்மர். திருதராஷ்டிர புத்திரர்களுடன் விளையாடி சுகமாக பொழுதைக் கழித்தார்கள். பாண்டுவின் புத்திரர்கள் எல்லா விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினார்கள். பீமஸேனன் வேகத்திலும் குறித்ததை எடுப்பதிலும் போஜனத்திலும் திருதிராஷ்டிர புத்திரர்களை புழுதியில் இழுப்பதிலும் தேர்ந்தவனாக இருந்தான்.
பீமனின் அட்டகாசம் தொடர்ந்தது. நாலைந்து கௌரவர்களைப் பிடித்து இழுத்துக்கொண்டே ஓரிடத்தில் போய் ஒளிந்துகொள்வான். இரண்டு இரண்டு பேர்களாக இழுத்து வந்து பாண்டவர்களின் தலைகளோடு முட்டுவான். வலிக்கிறது என்று அழுவார்கள். பத்துப் பதினைந்து பேராக சேர்ந்துகொண்டு பீமஸேனனை அடிக்க வந்தால் தான் ஒருவனாக அனைவரும் அடக்கிவிட்டு சந்தோஷப்படுவான். பின்புறமாக இருவர் வந்து அவனை இறுகக் கட்டிக்கொண்டு அடிக்க நினைத்தபோது கையினால் அவர்கள் தலைமயிரைக் கொத்தாகப் பிடித்து இழுத்து தரையில் விழச் செய்து மயிரை விடாமல் தரதரவென்று அவர்கள் கை கால் தேய இழுத்துச்செல்வான்.
ஜலத்தில் நீந்தி விளையாடிக்கொண்டிருக்கும் போது இரு கைகளாலும் பத்து பிள்ளைகளை இறுக்கி அணைத்து நீருக்குள் மூழ்கி திணற அடிப்பான். மரத்தின் மீதேறி அவர்கள் பழங்கள் பறித்துக்கொண்டிருக்கும் போது கீழே இருந்து மரத்தை கால்களால் உதைத்து அசைத்து அவர்கள் அனைவரையும் கிளைகளிலிருந்து விழச்செய்வான். துரியோதனன் முதலிய சகோதரர்கள் அனைவரும் பீமனிடம் மாட்டுக்கொண்டு திண்டாடினார்கள். பீமஸேனின் இந்த விளையாட்டுகளில் விரோதம் கிடையாது. இவையனைத்தும் பால சேஷ்டைகளாகவே இருந்தது. கெட்ட எண்ணம் எதுவுமில்லை.
துரியோதனனுக்கு வன்மம் வளர்ந்தது. இவன் நம் அனைவரையும் மிகவும் ஆட்டிவைக்கிறான். பலவானாக இருக்கிறான். குந்தியின் புத்திரர்களிலேயே இவன் மிகவும் சூரத்தனம் வாய்ந்தவன். அதிக சக்தியுள்ளவன். இவனை மோசத்தினால் மட்டுமே ஜெயிக்க முடியும். தோட்டத்தில் தூங்கும்போது இவனைக் கங்கையில் தள்ளிவிடவேண்டும். பின்னர் இவன் அண்ணனாகிய தர்மனையும் தம்பியாகிய அர்ஜுனனையும் சிறைபிடித்துவிட்டு நாமே நாடாள வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.

No comments:

Post a Comment