Sunday, March 11, 2018

விதுரரின் வழிகாட்டுதல்




துரியோதனன், துச்சாஸனன், கர்ணன் மற்றும் சகுனி பேசிக்கொண்டிருந்தபோது வாசலில் நிழலாடியது. பேச்சைத் நிறுத்தித் திரும்பிப்பார்த்தார்கள். கையில் வேல் பிடித்து வந்த வாயிற்காப்போனுக்குப் பின்னால் ஆஜானுபாகுவான ஒருவன் வந்தான். கழுத்திலும் கையிலும் அணிகலன்கள் இருந்தது.
“மஹாராஜாவுக்கு வணக்கம்” என்று துரியோதனனைப் பார்த்துக் குனிந்து சொன்னான்.
“வா புரோசனா! உன்னால் ஒரு முக்கியமான காரியம் ஆக வேண்டியிருக்கிறது” என்று அவனது வலது கையைப் பிடித்துக்கொண்டான். பக்கத்தில் திரும்பி சகுனியிடம் “புரோசனன் நமது மந்திரிகளில் ஒருவர். மதியூகம் நிரம்பியவர்” என்று சொல்லிச் சிரித்தான் துரியோதனன்.
“ப்ரபோ! என்ன காரியம்”
“இப்போது நாம் ஈடுபடும் இந்த மந்திராலோசனையை நீ ரகசியமாக வைத்திருக்க வேண்டும். நான் சொல்வதைக் கவனமாகக் கேள்”
என்றவுடன் ஐவரும் ஒரு வட்டமாக நின்றுகொண்டார்கள். குரலை சற்று தாழ்த்திக்கொண்டு துரியோதனன் பேச ஆரம்பித்தான். புரோசனன் தனது காதுகளைத் தீட்டிக்கொண்டு தயாரானான்.
“பாண்டவர்கள் எனது பிதாவினால் வாரணாவதத்திற்கு அனுப்பட்டிருக்கிறார்கள். அங்கே உத்ஸவம் நடந்துகொண்டிருக்கிறது. நீ அங்கு உடனே செல்ல வேண்டும்”
ஒன்றும் புரியாமல் முழித்தான் புரோசனன்.
“கோவேறு கழுதைகள் பூட்டிய ரதத்தை ஏற்பாடு செய்துகொள். உடனே நீ வாரணாவதம் செல். அந்த நகரத்தின் சமீபத்தில் சதுஸ்ஸாலம் என்ற ஒரு கிருகம் இருக்கிறது. அது பெருவிலை பெற்றது. அதில் நாலு சபா மண்டபங்கள் உள்ளன. அந்த கிருகத்தை நான்கு பக்கமும் பிரகாரம் இருக்கும்படி முதலில் செய். அந்த பிரகாரத்தை நீ நான் சொல்வது போல வடிவமைக்க வேண்டும். அதில் தான் உன் திறமை உள்ளது”
புதிர்போட்டபடி பேசிய துரியோதனனைப் பார்த்து புரோசனன் நெற்றி சுருக்கினான்.
“அந்த பிரகாரத்தை அமைக்கும் போது சணல், குங்கிலியம், மெழுகு, நெய், எண்ணெய், கொழுப்பு இவைகளோடு மிகுதியாக அரக்கு சேர்த்து மரக்கட்டைகளை அடுக்கி மண்ணைச் சேர்த்து சுவர்களில் பூசச்சொல். ம்... தேன்மெழுகினாலும் அரக்கினாலும் உத்தரங்களையும் சேர்த்துப் பூசு. இவையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் தெரிகிறதா?”
வில்லத்தனமாக சிரித்தான் துரியோதனன்.
“புரிகிறது ப்ரபோ! எளிதில் தீப்பிடிக்கும்படியாக நான் அதை அமைக்க வேண்டும். சரிதானே?”
“மாமா.. நான் சொன்னேனல்லவா? புரோசனன் மதியூகத்தில் சிறந்தவன் என்று... நிரூபிக்கிறான் பாருங்கள்..” என்று வெடிச்சிரிப்பு சிரித்தான்.
“இப்படிக் கட்டப்பட்ட அந்த வீட்டில் எப்படியாவது மரியாதைகள் பல செய்து குந்தியையும் அவர்களுடைய புத்திரர்களையும் அங்கு வசிக்கும்படி செய். என்னுடைய தகப்பனாருக்கு சந்தோஷம் வருவது போல அவர்களுக்கு வாகனங்களையும் சயனங்களையும் ஆசனங்களையும் ஏற்பாடு செய். இப்படியாகப்பட்ட வீடு என்று வாரணாவதவாசிகளுக்கு தெரியாமல் செய்ய வேண்டும். புரிந்ததா?”
“ம்.. மஹாராஜா... அப்புறம்?”
“அவர்கள் அங்கே இன்பமாகவும் சந்தேகமில்லாமலும் சயனத்திக்கொண்டிருக்கும் வேளையில் அந்த வீட்டை எல்லாப் பக்கங்களிலும் பூட்டிவிட்டு வாசலுக்கு தீ வைத்துவிடு”
கர்ணனும் துச்சாஸனனும் சகுனியும் துரியோதனன் அப்படிச் சொல்லும்போது அவன் கண்களில் தெறித்த வெறியைப் பார்த்தார்கள். ஒரு முறை குனிந்து நிமிர்ந்தார்கள்.
“அப்படியே செய்கிறேன் ராஜா” என்று துரியோதனனிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றான் புரோசனன்.
**
வாரணாவதத்திற்கு கிளம்புவதற்குப் பாண்டவர்கள் தயாரானார்கள். தேவையான வஸ்திரங்களையும் வழியில் பசித்தால் புசிப்பதற்கு ஆகாரங்களையும் ஏற்றிக்கொண்டு காற்றாகப் பறக்கும் சிறந்த குதிரைகள் பூட்டிய தேர்களில் ஏற ஆரம்பித்தார்கள்.
நெடுநெடுவென்று பீஷ்மர் நின்றிருந்தார். அவரின் கால்களைத் தொட்டு வணங்கினார்கள். பக்கத்தில் துரியோதனன். அவன் காலையும் தொட்டு வணங்கி நிமிரும்போது பக்கத்தில் துரோணர், கிருபர், விதுரர் என்று அனைவரின் காலையும் தொட்டு வணங்கி தொங்கு முகத்துடன் எழுந்திருந்தார்கள். துக்கம் அவர்களின் தொய்வடைந்த முகத்தில் தொணித்தது.
தாய்மார்கள் அனைவரும் அரண்மனை வாசலுக்கு வந்தார்கள். அவர்களூக்கும் நமஸ்காரம் செய்தார்கள். பின்னர் ஒரு பிரதக்ஷிணம் வந்தார்கள். தங்கள் வயதை ஒத்தவர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்தால் தழுவிக்கொண்டார்கள். ஊர் ஜனங்கள் வெள்ளமாகத் திரண்டுவிட்டது. அவர்கள் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வாரணாவதம் புறப்பட்டார்கள்.
விதுரருக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது. தந்தையை இழந்து பாண்டவர்களும் குந்தியும் படும் பாட்டில் அவர் மிகவும் வருத்தமடைந்தார். அவரும் ஐவர் மேல் வாஞ்சையுடைய சிலரும் அவர்கள் பின்னாலேயே சென்றார்கள். சில பிராமணர்கள் உள்ளம் குமுறி “திருதராஷ்டிர மஹாராஜா தனது தம்பியின் பிள்ளைகளை வித்தியாசமாக நடத்துகிறார். அதர்மம் செய்கிறார். பாண்டவர்கள் யாருக்கும் தீங்கே நினைப்பதில்லை. தந்தையின் ராஜ்ஜியத்தை அடைந்தவர்களைக் கண்டு திருதராஷ்டிரன் பொறுக்கவில்லை.” என்று புலம்பினார்கள்.
“இதை எப்படி பீஷ்மர் பொறுத்துக்கொள்கிறார்” என்றார் ஜனக்கூட்டத்தில் இருந்த இன்னொரு பிராமணர்.
“திருதராஷ்டிரன் பாண்டு புத்திரர்கள் மீது பொறாமையுடன் இருக்கிறான். நமக்கு இதில் இஷ்டமில்லை. நாம் அனைவரும் அவர்கள் பின்னாலேயே நாமும் போவோம்” என்று பெருந்திரளான மக்கள் அவர்களைத் தொடர ஆரம்பித்தார்கள்.
ரதங்கள் மெதுவாக வீதிகளைக் கடக்க ஒவ்வொரு வீதியிலிருந்தும் வீட்டுக்குள்ளிருந்து பல பேர் வந்து பாண்டவர்களை தொடர்ந்து சென்றார்கள். யுதிஷ்டிரர் திரும்பிப் பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தலைகளாகத் தெரிந்தது. துணுக்குற்றார்.
“பிதாவும் பூஜிக்கத்தக்கவருமான எங்கள் பெரியப்பாவின் கட்டளை இது. அதை நாங்கள் தட்டாமல் செய்வோம். நீங்கள் அனைவரும் எங்களை பிரதக்ஷிணம் செய்து ஆசீர்வதித்து இல்லம் திரும்புங்கள். தக்க சமயத்தில் உங்களின் உதவியை நாங்கள் கோருவோம்”
யுதிஷ்டிரரின் வார்த்தைக்கு அந்தப் பிரஜைகள் கட்டுப்பட்டார்கள். அவர் சொன்னதுபோலவே செய்துவிட்டு இல்லம் திரும்பினார்கள்.
சிறிது நேரத்தில் எல்லா மக்களும் போனபின் ஒரேயொருவர் மட்டும் தனித்து நின்றுகொண்டிருந்தார். அது விதுரர். யுதிஷ்டிரர் ரதத்தை விட்டு இறங்கி அவரிடம் சென்றார். வணக்கம் சொல்லி நமஸ்கரித்து எழுந்தார். விதுரர் யுதிஷ்டிரரின் தோளிரண்டிலும் இருகையையும் வைத்துக்கொண்டார். கண்களைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார்.
“கூர்மையான ஆயுதம் எது என்பதை அறிந்து அதைத் தடுக்கும் உபாயத்தையும் எவனொருவன் அறிந்திருக்கிறானோ அவனைப் பகைவர்களால் கொல்லமுடியாது. பெருங்காடுகளையே பொசுக்கும் பெருந்தீ ஆனது வளைக்குள் வசிக்கும் எலியைத் தகிக்காது என்று அறிந்து தன்னை காப்பாற்றிக்கொள்பவன் ஜீவித்திருப்பான். கண்ணில்லாதவன் வழிகளை அறியான்.”
யுதிஷ்டிரருக்கு புரிந்துவிட்டது. இருந்தாலும் விதுரர் மேலும் தொடர்ந்தார்.
“உலோகத்தினால் செய்யப்படாததும் பகைவர் பிரயோகிக்கும் ஆயுதத்தை நாம் வாங்கித் திருப்பிப்போட வேண்டும். முள்ளம்பன்றி சுரங்கத்தில் புகுந்து கொண்டு தீயிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும். நடப்பவன் நட்சத்திரங்களினால் திசைகளை அறிகிறான்”
“தெரிந்து கொண்டேன்” என்றார் நன்றியாகப் பார்த்த வண்ணம் யுதிஷ்டிரர்.
விதுரர் அவர்களை பிரதக்ஷிணம் வந்தார். வலது கையைத் தூக்கி அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். பின்னர் தனது ரதமேறி அரண்மனை சென்றார்.
அவர் சென்றதும் குந்தி யுதிஷ்டிரரிடம் வந்தாள்.
“அவர் சங்கேத மொழியில் ஏதோ சொன்னார். நீயும் தெரிந்து கொண்டேன் என்று தலையாட்டினாய். என்ன புரிந்தது? அவர் என்ன சொன்னார்?” என்று கேட்டாள்.
“விஷத்திலிருந்தும் தீயிலிருந்தும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். வழிகளைத் தெரிந்துகொண்டு நக்ஷத்திரங்களினால் திசைகளை அறிந்துகொள்ள வேண்டும். சுவர்களை பார்த்துக்கொண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்”
பங்குனி மாதம் எட்டாவது நாள் ரோகிணி நக்ஷத்திரத்தில் புறப்பட்டு வாரணாவதம் சென்றடைந்தார்கள்.
**
வாரணாவதத்தை பாண்டவர்களது ரதங்கள் அடையும் முன்னர் அந்த நகரத்து எல்லையில் ராஜபுத்திரர்களை வரவேற்க பெருங்கூட்டம் நின்றது. பேரிகைகள் முழங்கின. துந்துபி வாத்தியங்கள் வாசிக்கப்பட்டன. கையில் பூர்ண கும்பத்தோடு பிராமணர்களும் மற்ற வர்ணத்தாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.
ரதங்கள் அருகில் நெருங்கியவுடன் ஜனங்கள் “ஜய..ஜய..ஜய..” என்று கோஷங்கள் எழுப்பினார்கள். யுதிஷ்டிரரை எல்லா ஜனங்களும் சூழ்ந்துகொண்டார்கள். சகல மரியாதைகளையும் வாரணாவதத்தவர்கள் செய்து பாண்டவர்களை நகரத்துள் பிரவேசிக்கச் செய்தார்கள். புரோசனன் மந்திரியாதலால் அங்கே நடுநாயகமாக நின்று இந்த மரியாதைகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்தான்.
பின்னர் பாண்டவர்கள் அனைவரையும் புரோசனன் ஒரு கிருகத்திற்கு அழைத்துச் சென்றான். சுகமுள்ள சயனங்கள் ரத்ன ஆசனங்கள் மற்றும் மிக மிக உயர்வான பொருட்களைக் கொண்டு ஆதரிக்கப்பட்டார்கள். அந்த கிருகத்தில் அவர்கள் பத்து ராத்திரிகள் வாசம் செய்தார்கள். பின்னர் மங்களமென்ற ஒரு அமங்களமான கிருகத்திற்கு புரோசனன் பாண்டவர்களை அழைத்துச் சென்று குடியமர்த்தினான்.
ஒரு நாள் காலை சுவற்றின் மிக அருகாமையில் சென்று முகம் உரசிக்கொண்ட யுதிஷ்டிரர் ஒரு வித்யாசமான வாசனை அந்த சுவற்றிலிருந்து எழுவதைக் கண்டார். பின்னர் மூக்கை வந்து முகர்ந்து பார்த்தார். புருவம் உயர்ந்தது.
“என்ன அண்ணா ஆயிற்று?” என்று கதாயுதபாணியான பீமஸேனன் அருகில் வந்தான்.
“குங்கிலியம், சணல், முஞ்சம்புல், விழல், மூங்கில் போன்ற பொருட்களை நெய்யில் நனைத்து கட்டியிருக்கிறார்கள். இந்தப் பொருட்கள் மிகவும் சுலபமாகத் தீப்பற்றக்கூடியவை”
கதாயுதத்தை ஒரு முறை தலைக்கு மேலே சுழற்றிய பீமஸேனனுக்கு இப்போதே சென்று துரியோதனன் திருதராஷ்டிரன் என்று அனைவரையும் பந்தாடிவிட வேண்டும் என்ற அவா எழுந்தது.
இதைப் பற்றி மேலும் சொல்ல வாயெடுத்த யுதிஷ்டிரரின் அடுத்த சொல்லுக்காக அமைதியானான்.
நாமும் அமைதியாய் நாளைத் தொடருவோம்...

No comments:

Post a Comment