Sunday, March 11, 2018

பகாஸுரனைப் பந்தாடிய பீமன்




குந்தியைப் பார்த்ததும் கண்களைத் துடைத்துக்கொண்ட பிராமணனும் அவன் மனைவியும் சகஜமாகப் பேசுவது போல ஆரம்பித்தார்கள்.
“ஏன் மரணத்தைப் பற்றிப் பேசி அழுதுகொண்டிருந்தீர்கள்? என்ன காரணம்? எதாவது எங்களால் ஆன உதவியாக இருந்தால் கட்டாயம் செய்கிறேன்.” என்றாள் குந்தி. பின்னால் அவளை விட உயரமாக பீமன் நின்றுகொண்டிருந்தான்.
பீமனும் குந்தியும் உள்ளே சென்று அமர்ந்தார்கள்.
“இங்கு சமீபத்தில் யமுனையின் உற்பத்தி ஸ்தானம் இருக்கிறது. அங்கிருக்கும் குகையில் பகன் என்னும் ராக்ஷசன் வசிக்கிறான். அவனுக்கு நரமாமிசம் தின்பதில் அதிக விருப்பம். அவன் மனித மாமிசத்தினாலேயே வளர்ந்திருக்கிறான். நினைத்த ரூபத்தை எடுத்துக்கொண்டு சாகசம் பல புரிவான்.”
“எவ்வளவு நாட்களாக இருக்கிறான். அவனை அடக்குவதற்கு உங்கள் ராஜா இல்லையா?”
“இல்லையப்பா! இந்த ஊர் ஜனங்களாகிய நாங்கள் நாதனற்று இருக்கிறோம். ஒன்றிரண்டு நாட்கள் அல்ல. பதிமூன்று வருடங்களாக இங்கே இருக்கிறான். அவன் அந்தக் குகையில் இருந்துகொண்டு போவோர் வருவோரையெல்லாம் துன்புறுத்தி அடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். பின்னர் குகையை விட்டு வெளியே நகரத்துக்கு வந்து கண்ணில் படுபவரை அடித்துச் சாப்பிடுவான். ஆகையால் ஊர்ஜனங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்து பகாஸுரனிடம் பேசினோம்”
“அது என்ன தீர்மானத்துக்கு வந்தீர்கள்?”
“வாராவாரம் ஒரு வண்டியில் அன்னம் நெய் மாமிசம் மற்றும் பலவகையான உணவுகள் ஏற்றி அதோடு சேர்த்து ஒரு மனிதனையும் ஆகாரமாகத் தருகிறோம். நகரத்துக்குள் புகுந்து யாரையும் அடித்துச் சாப்பிடவேண்டாம் என்றோம். அதற்கு சந்தோஷமாக ஒத்துக்கொண்டான். அநேக வாரங்களாக நடந்துவரும் இந்தக் கொடுமையில் இந்த வாரம் எங்கள் வீட்டு முறை. நாங்கள் ஒருவர் அவனுக்கு போஜனமாகப் போக வேண்டும். யார் போவது என்பது பற்றி முடிவெடுத்துக்கொண்டிருக்கிறோம்”
குந்தி மிகவும் விசனத்தோடு பீமனைப் பார்த்தாள். அவனும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தான்.
“ஒரு வண்டி நிறைய பதார்த்தங்களுக்கு ஏற்பாடு செய்துவிட்டேன். மனிதனை விலை கொடுத்து வாங்க முடியுமா? எனக்கு வேண்டியவர்களைத்தான் விட முடியுமா? அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டுதான் ஓடமுடியுமா? நான் போகிறேன் என்றால் இவர்கள் விட மாட்டேன் என்கிறார்கள். ஆகையால் இவர்கள் அனைவரும் அழைத்துக்கொண்டு அவனிடம் செல்வேன். எல்லோரையும் உண்டு ஏப்பம் விடடா என்று கேட்கப்போகிறேன்”
இந்தச் சொல்லைக் கேட்டதும் அந்த பிராமணனின் மனைவியும் மக்களும் சேர்ந்து கதறினார்கள். அந்தக் குடும்பமே இப்படி அழுததும் குந்தி அவர்களைத் தேற்ற ஆரம்பித்தாள்.
“கவலைப்படாதீர்கள். உங்களை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு என்னிடம் ஒரு உபாயம் இருக்கிறது”
சட்டென்று அந்த பிராமணனின் முகத்தில் சந்தோஷக் கீற்று தோன்றியது. அவனோடு சேர்ந்து அழுதுகொண்டிருந்தவர்கள் நிறுத்திவிட்டு குந்தியையும் பீமனையும் பார்த்தார்கள்.
“உம்மிடமிருப்பது ஒரேயொரு புத்திரன். அவனும் சிறு குழந்தை. என்னிடம் ஐவர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவனை அந்த ராக்ஷசனுக்கு இரை கொடுக்கச் சொல்கிறேன்.”
பிராமணன் பதறி விட்டான். சட்டென்று எழுந்து நின்று
“அம்மா! இப்படியொரு பாப காரியத்தை நான் செய்யமாட்டேன். வீட்டுக்கு வந்தனவையும் அடைக்கலம் வேண்டியவனையும் யாசிப்பவனையும் கொல்வது கொடியது. பிரம்மஹத்தி பாவங்களின் உச்சம். அதற்கு பிராணஹத்தி பண்ணிக்கொள்வது பரவாயில்லை. ஒரு போதும் உங்களைப் போன்ற பிராமணவதம் கொடியது. இதை நான் செய்யமாட்டேன்.”
“பிராமணர்கள் காப்பாற்றப்பட வேண்டியவர்கள். எனக்கும் தெரியும். ஆனால் என் புத்திரன் சூரன். பலசாலி. அந்த ராக்ஷசனால் என் புத்திரனைக் கொல்ல முடியாது. இரையைக் கொண்டு போய் அவனைக் கொன்றுவிடுவான். இவன் ஏற்கனவே ராக்ஷசனைக் கொன்றவன்”
இதைக் கேட்டதும் அவர்கள் அதிசயமாகப் பீமனைப் பார்த்தார்கள். அவன் ஒரு மதயானை அமர்ந்திருப்பது போல தரையில் அமர்ந்திருந்தான்.
“பீமா! அந்த பகாஸுரனை ஒழித்து இவர்களுக்குச் சந்தோஷத்தைத் தா” என்றாள் குந்தி.
“அப்படியே ஆகட்டும் அம்மா!”
”நீங்கள் உணவுகளைத் தயார் செய்யுங்கள். நாளைக் காலை பீமன் செல்வான்” என்று கூறிவிட்டு பீமனுடன் வீடு திரும்பினாள் குந்தி.
சாயந்திரம் தர்மரும் அர்ஜுனரும் நகுலசகதேவர்களும் பிக்ஷை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார்கள். பீமன் அதீத சந்தோஷத்தில் இருந்தான். பீமனின் மகிழ்ச்சிக்கு காரணம் என்ன என்று தெரியாமல் தர்மர் குழம்பிப்போனார். நாம் கொண்டு வந்த உணவைப் பார்த்ததாலா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று அறிந்து கொள்வதற்காக குந்தியிடம் சென்று கேட்டார்.
பகாஸுரனைப் பற்றிய முழு கதையையும் யுதிஷ்டிரரிடம் சொன்னாள். பீமனை பகாஸுரனிடம் அனுப்புகிறேன் என்று அவர்களுக்கு உறுதி அளித்து வந்ததையும் தெரிவித்தாள். யுதிஷ்டிரர் முகம் இருண்டு போனது.
“நாளை அவர்களது முறை. ஒரு வண்டி முழுக்க ஆகாரம் கிடைக்கப்போகிறது என்ற ஆனந்தத்தில் இருக்கிறான் பீமன்” என்று சொல்லிவிட்டு அவளும் கூடவே சிரித்தாள்.
யுதிஷ்டிரருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“தாயே! இது நகைப்புக்குரிய விஷயமல்ல. துக்கமான விஷயம். எவனால் நாம் நிம்மதியாக இரவில் தூங்குகிறோமோ, எவனைக் கண்டு துரியோதனனும் சகுனியும் இரவில் தூக்கமில்லாமல் நிம்மதியற்று இருக்கிறார்களோ, எவனைக் கொண்டு நாம் நம்முடைய ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற நினைக்கிறோமோ அவனை பகாஸுரனுக்கு விருந்தாக அனுப்புகிறேன் என்று நீ ஒத்துக்கொண்டு புத்திசாலித்தனமான காரியமாகப் படவில்லை”
இதே பயம் இப்போது ஏனைய சகோதரர்களுக்கும் தொற்றிக்கொண்டது. குந்தி மீண்டும் சிரித்தாள்.
“யுதிஷ்டிரா! நீ அப்போது விவரம் தெரியாத பிள்ளை. காட்டில் பீமன் பிறந்ததும் நாங்கள் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டிருந்தோம். அவன் என் கை தவறி ஒரு பெரும் பள்ளத்தில் விழுந்துவிட்டான். நானும் உன் தந்தையும் பதறிப்போய் எட்டிப் பார்த்தான். பீமன் சிரித்தபடி அந்தப் பள்ளத்தில் கிடந்தான். அதில் ஆச்சரியம் என்ன தெரியுமா?”
நிறுத்தினாள். சகோதரர்கள் அனைவரும் அந்தக் கதை சொல்லும் குந்தியை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“அவன் விழுந்த பாறாங்கல் ஒன்று பொடிப்பொடியாக சிதறியிருந்தது. அவன் இந்திரனையே ஜெயிக்கும் பராக்கிரமம் படைத்தவன். வாரணாவதத்திலிருந்து யானைப் போல் உங்கள் அனைவரையும் அவன் ஒருவனே தூக்கிக்கொண்டு வந்தான். செய்நன்றி மறப்பது நல்லதல்ல. இந்தப் பிராமணனின் வீட்டில் நாம் வசிக்கிறோம். நமக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறான். துரியோதனாதிகளுக்குத் தெரியாமல் இங்கு நிம்மதியாக இருக்கிறோம். மேலும் வியாஸ பகவான் சில க்ஷத்ரிய தர்மங்களை எனக்குச் சொல்லியிருக்கிறார்”
ஐவரும் குந்தியைச் சுற்றிக் குழந்தைகள் போல அமர்ந்துகொண்டார்கள்.
“எந்த க்ஷத்திரியன் பிராமணர்களுக்கு உதவிகள் புரிகிறானோ அவன் பல உன்னத லோகங்களை அடைவான். ஒரு க்ஷத்ரியன் இன்னொரு க்ஷத்ரியனைக் காப்பாற்றினால் இந்த லோத்திலும் பரலோகத்திலும் புகழை அடைவான். வைசியனுக்குச் செய்யும் உதவினால் எல்லா லோகங்களிலும் வசிக்கும் பிரஜைகளின் அன்புக்குப் பாத்திரமாவான். நான்காம் வர்ணத்தவனுக்கு உதவி செய்தால் செல்வம் பெருகி அனைத்து அரசர்களாலும் பாராட்டப்படும் ஜன்மத்தை அடைவான்.”
யுதிஷ்டிரர் கைகூப்பி வணங்கினார். சகோதரர்கள் குந்தியை நமஸ்கரித்தார்கள். பீமன் வண்டி சாப்பாட்டை எதிர்பார்த்து எப்போது விடியும் என்று காத்திருந்தான்.
*
ஊரே மணக்க சாப்பாடு தயார். அண்டா அண்டாவாகக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றினார்கள். வண்டிக்காரனாக மேலாடை இல்லாமல் தேக்கு போன்ற தேகத்தோடு பீமன் கையில் சாட்டையோடு பக்கத்தில் நின்றான்.
இரண்டு பெரிய வெங்கல அண்டாக்கள் ஆவி பறக்கும் அன்னம் ஏற்றப்பட்டது. பின்னர் கொஞ்சம் சிறியதாய் இருக்கும் அண்டாக்களில் எருமை பன்றி கரடி என்று பலவகையான மாமிஸங்கள் ஏற்றினார்கள். எள்ளுப்பொடியோடும் நெய்யோடும் கலந்த அன்னங்கள் அடுத்த வரிசையில் நான்கு பேர் தூக்கமுடியாமல் கொண்டு வந்து சேர்த்தார்கள். வண்டி மாட்டோடு நின்ற பீமனுக்கு வாயில் நீர் ஊறியது. அப்போது கண்ணால் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
பருப்பு உருண்டைகளும் பொரி அப்பங்களும் சுமார் பத்து விதம்விதமான பாண்டங்களில் இருந்தது. அண்டாக்கள் முடிந்தவுடன் குடங்கள் வரிசை வரிசையாக வந்தன. முதலில் வந்த குடங்களில் நெய் தளும்பியது. அடுத்ததாக வந்த ஏழெட்டுக் குடங்களில் தயிர் வழிந்தது. பால் ஒரு பத்து குடம் வந்தது. கள் மற்றும் சாராயம் கடைசியாக ஏற்றப்பட்டது.
பீமனுக்கு இப்போதே இதை வேட்டையாட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
“ம்... சீக்கிரம் ஏற்றுங்கள்.. நான் கிளம்பலாமா?”
வண்டியோட்டிச் சென்று பகனுடன் யுத்தம் புரிவதற்காக பீமனுக்கென்று பிரத்யேகமாக நெய்யும் எள்ளும் பருப்பும் சேர்ந்த சித்ரான்னங்களை ஏகசக்ர நகரவாசிகள் கொணர்ந்து வந்து கொடுத்தனர். அவையெல்லாவற்றையும் தின்றுவிட்டு பகனுக்கென்று வண்டியில் ஏற்றிய ஒரு குடம் தயிரைக் குடித்தான். இவன் பகனுக்கு இந்த உணவைத் தருவானா? என்று சிலருக்கு சந்தேகம் எழுந்தது.
வண்டியைக் கட்டிக்கொண்டு புறப்படுவதற்காக ஏறினான். ஊர்க்காரன் ஒருவன் இரண்டு காளை மாடுகளை விரட்டிக்கொண்டு ஓடிவந்தான்.
“இந்தாருங்கள். இந்த மாடுகளை வண்டியின் பின்னால் கட்டுகிறேன். பகனது சாப்பாட்டில் இவைகளும் அடக்கம்”
பீமன் சிரித்துக்கொண்டே கிளம்பினான். ஊர்ஜனங்களில் தைரியம் நிரம்பியவர்கள் என்று அறியப்பட்ட சிலர் வண்டியின் பின்னால் பீமனோடு சேர்ந்து பகன் வசிக்கும் குகைக்குச் சென்றார்கள். சிலர் அங்கிருந்தே ஜய..ஜய கோஷமெழுப்பி வாழ்த்தினார்கள். குழுவாக வந்த சிலர் வாத்தியங்கள் முழங்கி துந்துபி வாசித்து பேரிகைகள் முழங்க வழியனுப்பினார்கள்.
மாமிசத்துக்காக அலையும் பருந்துகள் வட்டமிடும் பகன் குகையருகே வந்தான். அதுவரை அவனுடன் பேசிக்கொண்டே வண்டியோடு நடந்து வந்தவர்கள் பயத்துடன் பின்வாங்கினார்கள். குகை வாசலில் பெரிய மரம் இருந்தது. அந்த மரம் முழுவதும் பல பிராணிகளும் மயிர்களும், கொழுப்புகளும் சிதறியிருந்தன. செத்துப்போன அவைகளின் உடல்கள் தொங்கின. சில இரத்தத்தோடும் சில ரத்தம் கீழே ஊற்றி உலர்ந்து போன சதைகளாய் தொங்கின. கழுகளும் பருந்துகளும் அந்த மாமிசத்தைக் கொத்த வட்டமிட்டன. நரிகள் ஒரு கூட்டமாக ஊளையிட்டு சுற்றி வந்தன. துர்நாற்றம் அடித்தது. சுடுகாடு போல காட்சியளித்தது அந்த இடம்.
பகன் எங்கே இருக்கிறான் என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தான் பீமன். வண்டியில் ஏற்றப்பட்ட அன்னங்களும் இன்ன பிற பதார்த்தங்களும் அவன் கண்களைச் சுண்டி இழுத்தது. பகனைக் கொன்று விட்டால் தீட்டாகிவிடும். பின்னர் அனாசாரமாக இந்த அன்னத்தைப் புசிக்க வேண்டியிருக்கும் என்று எண்ணினான் பீமன்.
வண்டியிலிருந்த எல்லா பாத்திரங்களையும் இறக்கி வைத்து குகை வாசலில் சம்மணமிட்டு அமர்ந்தான். கள் சாராயம் போன்ற குடங்களை எடுத்து மடமடவென்று குடித்தான். கண்கள் சிவப்பேறிய பின்னர் ஒவ்வொரு அண்டாவாகவும் குடங்களாகவும் இருந்த அன்னம் மாமிஸம் என்று எல்லா பதார்த்தங்களையும் தின்றான். அங்கிருந்து பயந்து ஓடிப்போனவர்கள் குகை பக்கத்திலிருந்த வனத்திலிருந்த ஒரு உயர்ந்த மரத்தின் உச்சியில் ஏறி இதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“டேய்! இது பீமனல்ல. பகன் தான் அந்த பிராமணன் உருவம் எடுத்துக்கொண்டு இவைகளை தின்கிறான்” என்றான் ஒருவன். பக்கத்தில் பயந்து வெளிறிய முகத்துடன் இருந்த மற்றொருவன் அதை ஆமோதித்தான்.
பீமன் எல்லாவற்றையும் தின்ற பிறகு காலியான பாத்திரங்களில் பெரும் அண்டா ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு குகை வாசலுக்குச் சென்றான். பயங்கர சிரிப்போடு வெறும் அண்டாவைக் காட்டி...
“யே.. பகா.. உனக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன். வந்து புசி” என்று அந்தப் பிரதேசமே எதிரொலிக்கும்படி சிரித்துக் கூப்பிட்டான்.
உள்ளே படுத்திருந்த பகன் எழுந்து வெளியே வந்தான். ஆகிருதியான சரீரத்துடன் ஒருவன் மலைபோல நின்று வெற்றுப் பாத்திரத்தைக் காட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தான். புருவங்களை நெறித்தான்.
“என்ன முறைக்கிறாய்? உன்னுடைய போஜனத்தை நாந்தான் உண்டேன்.இப்போது என்னை என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டுக்கொண்டே பின்னால் திரும்பிப் பார்த்தான். ஒரு பாத்திரத்தில் மட்டும் நெய்யும் எள்ளூம் கலந்த அன்னம் அப்படியே இருந்தது. பகனைப் பார்த்துக்கொண்டே அவன் முன் அமர்ந்து அதை உண்ண ஆரம்பித்தான் பீமன்.
பகன் அவனைக் கொல்ல ஓடிவந்தான்.
பீமனின் முதுகில் ஓங்கி அறைந்தான். பீமன் அதை துளிக்கூட சட்டை செய்யாமல் அன்னத்தைப் புசித்துக்கொண்டிருந்தான். திரும்பவும் அடிக்க வந்த ராக்ஷசனின் கையை பக்கத்தில் இருந்த மரத்தோடு சேர்த்து அணைத்து தனது இடது கையால் பிடித்துக்கொண்டு இரண்டு தயிர் பாத்திரங்களில் இருந்த தயிரை வாயில் சரித்துக்கொண்டான்.
அவனிடமிருந்து பகன் விடுவித்துக்கொண்டு சற்று தூரம் தள்ளி நின்றான். பீமன் எழுந்து தொடைகளையும் தோள்களையும் தட்டிக்கொண்டு “வாடா...” என்று அவனைப் பார்த்து சிம்மகர்ஜனை செய்தான். பீமன் எழுப்பிய சத்தமே அங்கு தூரத்தில் மரத்தில் ஏறிப் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் வயிற்றைக் கலக்கியது.
அவர்கள் இருவரும் மோதிக்கொண்ட போது பூமி அதிர்ந்தது. பகன் பீமனைத் தூக்கி வீசினான். பீமன் சிரித்துக்கொண்டே எழுந்திருந்து வந்து அவனை தலைக்கு மேலே தூக்கி சுழற்றினான். ஓங்கித் தரையில் அடித்து கொஞ்ச தூரம் இழுத்துப்போனான். அதிலிருந்து விடுபட்ட பகன் பீமனின் பின்னாலிலிருந்து கட்டி இறுக்கினான். பின்னர் முதுகில் அறைந்தான். கோபாவேசமாகத் திரும்பிய பீமன் பகனது முட்டியில் அடித்தான். கால்களைப் பிடித்துக்கொண்டு குனிந்தவனின் முதுகில் ஓங்கி அறைந்து உருட்டி விட்டான். பின்னர் உருண்டவனின் பின்னாலேயே ஓடிப்போய் தூக்கி எழுப்பி வயிற்றிலும் முதுகிலும் மார்பிலும் உதைத்தான்.
தரையில் விழுந்து பாதி அடிபட்ட பாம்பு போல துள்ளினான். அவன் மேல் விழுந்த பீமன் தலையைத் திருகினான். கை கால்களை முறுக்கினான். நெஞ்சில் ஓங்கி அறைந்துப் பிளந்தான். பகனின் மரண ஓலம் ஊர்வரைக் கேட்டது. எல்லாவற்றையும் பிளந்து பகனை வதம் செய்து எழுந்த பீமனின் உடம்பு முழுவதும் சிகப்பாக ரத்தம் தெறித்திருந்தது.
பகனின் ராக்ஷச உடலை அந்தக் குகை வாயிலிருந்து இழுத்து வந்து வண்டியில் போட்டான். வண்டியை ஓட்டிக்கொண்டு ஏகசக்ர நகரம் வந்தடைந்தான். நகர்த்து வாசலில் அந்த உடலை இழுத்துப் போட்டுவிட்டு பிராமணனின் இல்லம் அடைந்து “இந்தாரும் இந்த வண்டியையும் காளையையும் வைத்துக்கொள்ளும்.இனிமேல் உங்கள் யாருக்கும் எந்த துன்பமுமில்லை” என்று தனது இல்லம் போனான்.
இரவு குந்தியிடமும் தனது சகோதரர்களிடமும் பகனை வதம் செய்த கதையைக் கூறிச் சிரித்துக்கொண்டிருந்தான்.
காலையில் ஊர் வாயிலில் பகனின் உடல் கிடந்ததைப் பார்த்து ஜனங்கள் குதூகலமடைந்தார்கள். பிராமணன் வீட்டிலிருந்த அதிதி பிராமணன் ஒருவன் கொன்றான் என்ற செய்தி கேட்டு ஆச்சரியமடைந்தனர். உடனே ஊரே திரளாகத் திரண்டு சென்று அவன் வீட்டு வாசலில் நின்று ஜெய கோஷம் எழுப்பினார்கள். வெளியே வந்த பிராமணனிடம் பகனைக் கொன்றவரைக் காட்டுமாறு பணித்தார்கள்.
”நாங்கள் துயரம் கொண்டு ஒருநாள் அழுதுகொண்டிருந்தோம். அப்போது மந்திரசக்தி நிரம்பிய இந்தப் பிராமணர் வந்தார். பின்னர் இந்த உணவை நான் கொண்டு போய் அவனுக்குக் கொடுத்து அவன் கதை முடிக்கிறேன் என்று புறப்பட்டுப் போனார். அவனை வதம் செய்துவிட்டார்” என்று ஊருக்கு அறிமுகப்படுத்தினார்.
பீமனிடம் அனைவரும் மரியாதையாகப் பணிந்தார்கள். தினமும் அவர்கள் பிக்ஷைக்குப் போகாமல் ஊர் ஜனங்களே ஒவ்வொருநாளும் ஒவ்வொருவராக விதம்விதமான பதார்த்தங்களை சமைத்து வந்து அன்பாகக் கொடுத்தார்கள். பாண்டவர்கள் பிராமணர்கள் போல ஜடை தரித்து தவமியற்றி வேதாத்யயனங்களில் ஈடுபட்டு நீண்ட காலம் சந்தோஷமாக தாயாருடன் வசித்துக்கொண்டிருந்தார்கள்.
[பகவதபர்வம் முடிந்தது]
ஒரு நாள் ஒரு அதிதி பாண்டவர்கள் தங்கியிருந்த பிராமணன் வீட்டிற்கு வந்தான். துரியோதனன் அனுப்பிய ஒற்றனோ என்று வீட்டிற்குள்ளிருந்து சகோதரர்கள் ஐவரும் ஐயத்துடன் எட்டிப் பார்த்தார்கள். அப்போது....

No comments:

Post a Comment