சித்ரரதன் என்னும் அந்த கந்தர்வன் அர்ஜுனனுக்கு வரிசையாகக் கதைகளை அடுக்கிக்கொண்டிருந்தான்.
“கந்தர்வனே! உனக்கு எல்லாம் தெரிகிறது. வேதம் தெரிந்தவர்களுள் நாங்கள் யாரை புரோகிதராக வரிக்கலாம்?” என்று கேட்டான் அர்ஜுனன்.
“அர்ஜுனா! தேவல முனிவரின் இளைய சகோதரர் தௌம்யர் இருக்கிறார். இதோ இங்கிருக்கும் புண்ய தீர்த்தமான உத்கோசத்தின் அருகில் தவம் செய்துகொண்டிருக்கிறார். உங்களுக்கு விரும்பமிருந்தால் அவரைப் புரோகிதராக வரிக்கலாம்”
பாண்டவர்கள் தங்களுக்கு ஒரு மார்க்கம் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தார்கள். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு கங்கைக்கரையில் இருந்து புறப்படும் போது கந்தர்வன்
“என்னிடம் சிறந்த குதிரைகள் இருக்கிறது. பெற்றுக்கொள்ளுங்கள். சாக்ஷூஷி என்னும் மோஹ வித்தையையும் கற்றுக்கொள்.” என்று வேண்டினான்.
“கந்தர்வனே! குதிரைகளை நீயே வைத்துக்கொள். உபயோகப்படும் காலத்தில் பெற்றுக்கொள்கிறேன்” என்று ஸ்நேகத்துடன் சிரித்தான் அர்ஜுனன்.
பாண்டவர்கள் அனைவரும் கந்தர்வராஜனுக்கு மரியாதை செய்தார்கள். அவன் ஒரு பக்கம் அவர்கள் உத்காசதீர்த்தம் செல்லும் பாதையிலும் பிரிந்து சென்றார்கள். உத்கோசதீர்த்ததில் தவத்தில் இருந்தார் தௌம்யர். வசீகரமான வதனத்துடன் அழகாக இருந்தார். தங்களுடைய தேவையைப் பாண்டவர்கள் சொன்னதும் சம்மதித்தார். தன் ஆஸ்ரமத்தில் சேமித்து வைத்திருந்த காய் கனிகளைக் கொடுத்து உபசரித்தார். தௌம்யர் கிடைத்தவுடன் தங்களுக்கு ராஜ்ஜியமும் திரௌபதியும் கிடைத்துவிட்டதாக பாண்டவர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் உள்ளம் மகிழ்ந்தார்கள். பாஞ்சாலதேசத்துக்கு விரைய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.
[சைத்ரரரத பர்வம் முடிந்தது]
*
தௌம்யர் முன்னே செல்ல ஐவரும் தன் அன்னையுடன் பின் தொடர்ந்தார்கள். பாஞ்சாலதேசத்தின் வனப்பும் செழிப்பும் பற்றி அறிந்ததிலிருந்து அதைக் காணும் ஆர்வம் மேலிட வேகமாக நடக்க ஆரம்பித்தார்கள். அழகான வனங்கள் கடந்தார்கள். தாமரை பூத்த தடாகங்கள் அருகே சற்று இளைப்பாறி தண்ணீர் பருகி மீண்டும் முன்னேறினார்கள். அப்போது திரிகாலமும் அறிந்தவரும் ஞானதிருஷ்டியினால் அனைத்தையும் அறிந்துகொண்டவருமாகிய க்ருஷ்ணத் த்வைபாயனரை எதிரில் சந்தித்தார்கள்.
“யுதிஷ்டிரா! பீமா!! அர்ஜுனா! நகுலசகதேவர்களே! எல்லோரும் பாஞ்சால தேசம் அடைந்து மிகச்சிறந்த நன்மை பெறுவீர்கள். எனது ஆசிகள்” என்று கை தூக்கி ஆசீர்வதித்தார். அந்தக் கானக புற்களில் விழுந்து அவருக்கு நமஸ்கரித்தார்கள். தௌம்யரும் வியாஸபகவானிடம் நமஸ்காரங்கள் சொன்னார்.
தொடர்ந்து நடந்தார்கள். இருள் சூழும் நேரத்தில் பாஞ்சால தேசம் வந்தடைந்தார்கள். நகரம் முழுவதும் ஒரு முறை சுற்று வந்து பின்னர் ஒரு குயவனுடைய வீட்டில் அவனது வேலை செய்யும் இடத்தில் தங்கிக்கொள்ள வேண்டிக்கொண்டார்கள். அவனும் உடனே சம்மதித்தான். குயவனும் அக்கம்பக்கத்தவர்களும் அவர்களை தௌம்யரோடு சேர்ந்து வந்த பிராமணர்கள் என்று நினைத்துக்கொண்டார்கள்.
துருபதனுக்கு பீஷ்மர் மேல் பயம் அதிகம். கடைசியாகத் தோற்றபிறகு துரோணரிடத்திலும் பயமிருந்தது. ஆனால் த்ருஷ்டத்யும்னனைப் பெற்ற பிறகு துரோணர் பயம் நீங்கினாலும் பீஷ்மர் மேல் இன்னமும் ஒரு படபடப்பு இருந்தது. பாண்டவனாகிய அர்ஜுனனுக்குக் க்ருஷ்ணையைக் கொடுத்துவிட்டால் பீஷ்மரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது அவன் திட்டம். அதனால் ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்து அதில் ஒரு வில் போட்டி வைத்தால் பாண்டவர்கள் நிச்சயம் வருவார்கள், அதில் வில்லாளியான அர்ஜுனன் ஜெயித்து திரௌபதியை அடைவான் என்று மனக்கணக்கு போட்டான் துருபதன்.
அர்ஜுனன் மட்டுமே ஜெயிப்பதற்காக விற்போட்டி வைப்பதற்கு சிறந்த வில்லைத் தேடினான். கிந்துரம் என்பது சிறந்த வில். அது வியாக்ரபதன் என்பவனின் புத்திரன் ஸ்ருஞ்சயனுக்கு தேவர்களினால் பரிசாகக் கொடுக்கப்பட்டது என்ற விஷயம் கேள்விப்பட்டு அவனுக்கு தூது அனுப்பி அந்த வில்லை ஒரு பெரிய தேரில் வைத்து பாஞ்சால தேசம் கொண்டு வந்தான்.
இரும்பினால் நாண் கட்டிய வில். அதை இழுக்கவே யானை பலம் தேவைப்படும். அதற்கும் மேலே அந்த வில்லினால் அடிக்கக்கூடிய இலக்கு ஒன்றைத் தீர்மானித்தான். அந்த இலக்கினை துவாரமுள்ள ஒரு எந்திரத்தின் பின்னால் சேர்த்துக் கட்டச்சொன்னான். அந்த எந்திரம் சக்கரமாகச் சுழன்றுகொண்டே இருக்கும்படி செய்தான். இந்த ஸ்வயம்வரம் இப்படியொரு வீரவிளையாட்டோடு நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரிய சபா மண்டபத்தை நிர்மாணித்தான்.
இந்த ஏற்பாடுகளுக்குப் பிறகுதான் துருபதன் அநேக ராஜ்ஜியங்களை ஆளும் அரசர்களை ஸ்வயம்வரத்துக்கு வரும்படி ஓலை அனுப்பியிருந்தான்.
வாசலில் அகழி தோண்டப்பட்ட ஒரு பெரிய மாளிகையொன்றில் அந்த சபா மண்டபம் இருந்தது. அந்த மாளிகைக்கு பல வாசல்கள். ஒவ்வொரு வாயிலிலும் வண்ணமயமான மலர்த் தோரணங்கள் தொங்கி காற்றடிக்கும் போது மெதுவாக ஆடியது. மண்டபத்தினுள் மேகக்கூட்டங்கள் நுழைந்தது போல அகிற்புகை போடப்பட்டிருந்தது. அதில் எழும்பிய வாசனை நூறு யோஜனை தூரம் வரை மணத்தது. ஆகாயத்தை கிழிக்குமளவிற்கு அந்த மாளிகையின் கோபுரங்கள் நின்றன.
மங்கள வாத்தியங்கள் முழங்கின. கின்னரர்கள் கீதம் இசைத்தார்கள். பலவகை கோஷ்டி கானங்கள் பாடப்பெற்றன. அரசர்கள் ஒவ்வொருவராக வரத் துவங்கினார்கள். ஸ்வயம்வரம் காண விரும்பிய சில ரிஷிகளும் வந்தார்கள். கர்ணனோடு கூடிய துரியோதனாதிகளான கௌரவர்கள், கிருஷ்ணனுடன் கூடிய யாதவர்களும் வ்ருஷ்ணிகளும் அங்கே வந்து சேர்ந்தார்கள். ஸ்வயம்வர மண்டபத்தின் நடுவே வில்லும் அதற்கு மேலே கூரையில் அந்த லக்ஷியத்தைக் கட்டியிருந்த இயந்திரமும் சுற்றிக்கொண்டிருண்டிந்தது.
வந்திருந்த அரசர்கள் அகிற்புகை சூழ்ந்த மண்டபத்தில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த மஞ்சங்களில் ஒய்யாரமாக அமர்ந்தார்கள். பல தேசங்களிலிருந்து பிராமணர்களும் அந்த ஸ்வயம்வரம் காணக் குவிந்திருந்தார்கள். அவர்களுடன் தௌம்மியரும் அவரோடு ஐவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அந்த பிரம்மாண்டமான மண்டபத்தின் வேலைப்பாடுகளும் மஞ்சங்களின் நேர்த்தியும் தூண்களின் சிற்பங்களும் பார்த்து அனைவரும் அதிசயித்தினர்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த மண்டபத்தின் மேலே ஆகாயத்தில் ஸ்வயம்வரம் காண வட்டமிட்டார்கள். நகரத்தார்களும் அந்த தேசத்து ஜனங்களும் கூட மண்டபத்தைச் சுற்றிக் குழுமி நின்று திரௌபதியைப் பார்ப்பதற்காக நின்றார்கள். தினமும் நாடகங்களும் நாட்டியங்களும் பாடல் கச்சேரிகளும் நடந்தது. வந்திருந்த பல்வேறு தேசத்து அரசர்களுக்கும் மற்றவர்களுக்கும் எப்போதும் தடபுடலாக பல்வேறு பதார்த்தங்களுடன் விருந்தளிக்கப்பட்டது. தினமும் அங்கு சென்று இவைகளைப் பார்த்து அறிந்துகொண்டு இரவில் குயவன் வீட்டிற்கு திரும்புவார்கள் பாண்டவர்கள்.
இந்தக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்து பதினாறாவது தினம், மைத்ரம் என்னும் எட்டாவது தாராபலத்தோடு கூடிய முகூர்த்தத்தில் அரண்மனையில் திரௌபதிக்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்து ஸ்வயம்வரத்திற்கு தயார் செய்தார்கள்.
வைர வைடூர்யங்களால் ஆன பலகை ஒன்றில் திரௌபதியை புத்திரவதிகளான சில ராஜஸ்திரீகளை அழைத்துவரச் சொல்லி அமர வைத்தார்கள். பொற்குடங்களில் மஞ்சள் கரைத்த நீரால் அவளுக்கு மங்கள ஸ்நானம் செய்தார்கள். ஸ்நானம் ஆன பின்னர் இரண்டு பட்டு வஸ்திரங்களினால் மேலும் கீழும் தரித்துக்கொண்டாள். பின்னர் ரத்னங்களால் ஆன கம்புடைய மேடைக்கு அழைத்துச் சென்று அலங்கரிக்க ஆரம்பித்தார்கள்.
கிழக்குமுகமாக உட்காரவைத்தார்கள். ராஜஸ்திரீகளில் சிலர் அகிற்புகை போட்டு அவளது கூந்தலை காய வைத்தார்கள். சரம்சரமாக கொண்டு வந்த புஷ்ப மாலைகளினால் அவளது கூந்தலை கட்டினார்கள். அறுகம்புல்லும் இலுப்பைப் பூக்களும் சேர்த்துத் தொடுத்த மாலையைக் கையில் கொடுத்தார்கள். அகிற் சாந்தினால் இரண்டு ஸ்தனங்களிலும் மகரிகாபத்ரம் என்னும் இலை இலையாக இருக்கும் சித்திரத்தை வரைந்தார்கள். அவளுடைய மந்தகாசப் புன்னகையோடு விளங்கும் அன்றலர்ந்த முகம் சுருள் சுருளாய் சுருண்டிருந்த அவளது கூந்தலினால் பொலிவாக விளங்கிற்று.
தாமரைப் புஷ்பம் போன்ற அவளது வதனத்தில் வண்டுகள் மொய்பது போன்ற கண்களுக்கு மை எழுதினார்கள். ரத்னங்களினால் இழைத்த ஆபரணங்களை அவள் அங்கமெங்கும் பூட்டினார்கள். தேவதையே மண்ணில் கால் பதித்து நடப்பது போன்று எழிலாக நடந்தாள் திரௌபதி. அவளைச் சுற்றி நின்ற ஸ்திரீகள் மணமகளாக அவளை அலங்கரித்துவிட்டோம் என்று பெருமையுடன் சிரித்துக்கொண்டார்கள். ஆனால் திரௌபதியின் மாதாவான ப்ருஷதி பெண்ணிற்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைப்பானோ என்றக் கவலையில் முகம் வாடினாள்.
ஸ்வயம்வர மண்டபத்தில் எல்லாம் தயாராக இருக்கிறது என்ற செய்தி அரண்மனையை எட்டியது. துருபதன் “யாரங்கே! திரௌபதியை யானை மீது ஏற்றி ஸ்வயம்வர மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டான்.
அண்ணனர்கள் (அலிகள்) நால்வர் ஓடிவந்து திரௌபதியின் கையைப் பிடித்து ஒத்தாசை செய்து பெண் யானை மீது ஏற்றினார்கள். அப்போது மங்கள சப்தங்கள் விண்ணை எட்டியது. துந்துபி வாத்தியங்கள் முழங்கியது. பாங்கிமார்கள் பலரும் திரௌபதியின் யானை அருகே வரும்படி இன்னும் சில யானைகளில் ஏறிச் சென்றார்கள். த்ருஷ்டத்யும்னன் வெண்ணிற புரவியில் ஏறி முன்னால் சென்றான். யானைகள் வீதிகளில் வரும்போது ஊரே கொண்டாடியது. இருபுறங்களிலும் ஜனவெள்ளம் திரண்டு நின்று வாய் பிளந்து வேடிக்கைப் பார்க்க பொன் நதி போல திரௌபதி சென்றுகொண்டிருந்தாள்.
கையில் பொன்மயமான மாலையோடு யானையிலிருந்து இறங்கிய திரௌபதி ஸ்வயம்வர மண்டபத்தினுள் நுழைந்தாள். அங்கிருந்த அரசர்கள் அனைவருக்குள்ளும் மோகத்தீ படர்ந்தது. நாணத்தினால் தலை குனிந்து கடைக்கண்ணால் பார்த்த்துக்கொண்டே உள்ளே சென்றாள். அந்த மண்டபத்தின் நடுவே சென்று அவள் நின்றவுடன் பிராமணர்கள் அக்னி வளர்த்து அதில் நெய் விட்டு அக்னியைத் திருப்திப்படுத்தினார்கள்.
த்ருஷ்டத்யும்னன் கிருஷ்ணையின் கையைப் பிடித்துக்கொண்டு ஸ்வயம்வர மண்டபத்தின் நடுவில் வந்து நின்றான். உரத்தக் குரலில் ஸ்வயம்வரத்தின் விதிமுறைகளைப் பேச ஆரம்பித்தான்.
“அரசர்களே! இது வில். இரும்பு நாண் பூட்டிய வில். மேலே பாருங்கள். அந்த இயந்திரம் சுற்றுகிறதே அதில் துளைகள் உள்ளன. அதற்கும் மேலே மீன் போன்ற லக்ஷியம் இருக்கிறது. ஐந்து அம்புகள் வில்லுக்குப் பக்கத்தில் வைத்திருக்கிறோம். அந்த ஐந்து அம்புகளால் அந்த லக்ஷியத்தை அடித்து வீழ்த்தவேண்டும். குலமும், ரூபமும், வித்தை பலமும் இருப்பவனுக்கு எனது சகோதரியான கிருஷ்ணை மாலையிடுவாள். அவனுக்கே பாரியையாவாள்.”
பின்னர் த்ருஷ்டத்யும்னன் அங்கு வந்திருக்கும் ராஜாக்களின் பெயர், குலம் மற்றும் சக்திகள் பற்றி திரௌபதிக்கு சொல்ல ஆரம்பித்தான்.
[பெரும் பட்டியலில் சிலரை மட்டும் எழுதுகிறேன்]
”துரியோதனன், விகர்ணன், துச்சாஸனன், யுயுத்ஸூ போன்ற திருதிராஷ்டிர புத்திரர்களுடன் கர்ணனும் உனக்காக வந்திருக்கிறார்கள். க்ஷத்ரியர்கள் பலர் குழுமியிருக்கிறார்கள். சகுனியும் மற்றும் சில காந்தார ராஜாக்கள் இருக்கிறார்கள். இதோ நல்ல அலங்காரத்துடன் அஸ்வத்தாமா வந்திருக்கிறார். சங்கன் உத்திரன் என்னும் தன் புத்திரர்களோடு விராடராஜன் வந்திருக்கிறார். தந்தையும் புதல்வனுமாகிய விதண்டனும் தண்டனும் வந்திருக்கிறார்கள். பலராமன், கிருஷ்ணன் வந்திருக்கிறார்கள். பிரத்யும்னன் வந்திருக்கிறார் அவரது புத்திரன் அனிருத்தனும் இருக்கிறார். ஜயத்ரதன், உலூகன், ஸாத்யகி இன்னும் புகழ்பெற்ற பல பராக்கிரமசாலிகள் வந்துள்ளார்கள். இந்த லக்ஷியத்தை எவன் அடிக்கிறானோ அவனை நீ இப்போதே வரிக்கக்கடவாய்”
அந்த ஸ்வயம்வர மண்டபம் இப்போது அந்த போட்டிக்கும் க்ருஷ்ணையின் கையிலிருந்த மாலையை தன் கழுத்திற்கு மாற்றிக்கொள்ளவும் தயாரானது.
போட்டி நாளை......
No comments:
Post a Comment