மூச்சை நன்றாக இழுத்துப் பிடித்தான் ஹிடிம்பன். மனித வாசனை உள்ளுக்கு ஏறியதும் அந்தப் பெரிய ஆச்சா மரத்திலேயே எழுந்து உட்கார்ந்தான். பக்கத்து மரத்தில் அமர்ந்திருந்த சகோதரி ஹிடிம்பையைக் கூப்பிட்டான்.
”சகோதரி! இன்றைக்கு நல்ல வேட்டை நமது பிரதேசத்தில். மனித வாசனை வீசுகிறது. நாவில் நீர் சுரக்கிறது. அந்த ஆலமரத்தடியில் தூங்கிக்கொண்டிருக்கும் நரர்களைப் போய் அடித்து இழுத்து வா. நாமிருவரும் தின்போம்”
மரத்தை விட்டு கீழே இறங்காமல் மரங்கள் ஒவ்வொன்றாகக் கிளைகளில் கால் வைத்து தாண்டினாள். குந்தியும் நான்கு வீரர்களும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஒரேயொருவன் மட்டும் கண்களை விழித்துக்கொண்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான். ஆச்சா மரத்தின் பருத்த அடிப்பிரதேசம் போல இருந்தான். அவன் தான் அவர்க்ளை காப்பாற்றியிருக்கிறான் என்பது அவர்களது நம்பிக்கையான தூக்கத்தில் தெரிந்தது.
ஹிடிம்பை அந்த ஆடவனைப் பார்த்து காமமுற்றாள். ”கரு நிறமும், தாமரை மலர் போலக் கண்களும், சிம்மம் போன்ற தோள்களும் கொண்டு பெரும் தேஜஸோடு இருந்த பீமனைப் பார்ப்பதற்கு தனது கொடூரமான அரக்கி உருவத்தை அழகான பெண்ணுருவாக எடுத்துக்கொண்டு அவன் முன்னால் நின்றான்.
குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த பீமன் அவன் முன்னால் தரையில் சதங்கைகள் பூட்டிய இருகால்கள் தெரிய அண்ணாந்து பார்த்தான். சுருட்டை முடி, பூர்ணசந்திரன் போல முகம், சங்கு கழுத்து, தாமரை மலர்கள் போன்ற கண், கோவைப்பழம் போன்ற இதழ்கள், வெண்மையான பற்களும் கறுப்பு நிறத்தோடும் ஒளிரும் பெண்ணொருத்தியைக் கண்டான்.
பொற்காசுகளைத் தரையில் கொட்டுவது போல சிரித்தாள். அடுத்த கணம் நாணம் நெட்டித் தள்ள தலையைக் குனிந்து கொண்டாள். காட்டிற்கே களை வந்துவிட்டது போல உணர்ந்தான் பீமன். யாரிவள்? சிந்தித்தான். அவள் பேச ஆரம்பித்தாள்.
“புருஷ சிரேஷ்டரே! நீர் யார்? தேவர்கள் போல கீழே படுத்திருப்பவர்கள் யார்? தலைக்குக் கையைக் கொடுத்துத் தூங்கும் அந்தப் பெண் யார்?”
“இத்தனை கேள்விகள் கேட்கும் நீ யார்? இந்தக் காட்டின் அதிபதியா?” என்று கேட்டான் பீமன்.
“இது ராக்ஷசர்கள் வசிக்கும் வனம் என்று நீ அறிவாயா? இங்கே ஹிடிம்பன் என்னும் ராக்ஷசஅரசன் இருக்கிறான். அவன் என் சகோதரன். மனித மாமிசம் வேண்டும் என்பதற்காக என்னை இங்கே அனுப்பினான்”
பீமன் இதற்கு அச்சப்படவில்லை.
“ஏ பெண்ணே! இவர்கள் என் சகோதரர்கள். என்னை மீறி யாரொருவரும் அவர்களை ஒன்றும் செய்யமுடியாது. அது என் தாய். குந்திதேவி. நான் அமர்ந்திருக்கும் தைரியத்தில் அவர்கள் அனைவரும் நிம்மதியாக உறங்குகிறார்கள். உனக்கு என்ன வேண்டும்?”
“நீங்கள் வேண்டும். உங்களை நான் கணவனாக அடையவேண்டும். “
“என்னுடைய சகோதரர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர் மணம் புரியாமல் நான் செய்துகொள்வது தர்மமாகாது.”
“இன்னும் சற்று நேரத்தில் என் சகோதர்ன் ஹிடிம்பன் வந்து விடுவான். அவன் எல்லோரையும் விழுங்கிவிடுவான். சீக்கிரம் வா. என் மேல் ஏறிக்கொள். உன்னை ஏற்றிக்கொண்டு பறந்துவிடுவேன்”:
“ஊஹும். என் சகோதரர்களும் என் தாயாரையும் விட்டு எங்கும் ஓடமாட்டேன். அந்த ஹிடிம்பனை தைரியம் இருந்தால் என் முன்னே வரச்சொல். துவந்த யுத்தம் செய்துபார்த்துவிடலாம்” என்று திட்டவட்டமாக மறுத்தான் பீமன்.
“உம்மை நான் கணவராக வரித்துவிட்டேன். என் இடுப்பில் அமர்ந்து கொள். உன் தாயாரையும் வேண்டுமானால் தூக்கிக்கொண்டு சென்றுவிடலாம். அனைவரையும் சாப்பிடும் அந்த ஹிடிம்பன் வரும்முன் நாம் தப்பித்துவிடலாம்”
”தாயாரையும் சகோதரர்களையும் ராக்ஷசனிடம் இரையாக்கிவிட்டு ஓடுபவன் கோழையல்லவா?”
“சொன்னால் கேள்! உன்னையும் உன் சகோதர்களையும் என் சகோதரன் சாப்பிட்டுவிடுவான். அவர்களை விட்டுவிடு. என்னோடு வா. நான் காப்பாற்றுகிறேன்”
“எனக்கு இதில் இஷ்டமில்லை. அந்த ராக்ஷசன் இங்கு வரட்டும் நான் ஒருவனே அவனை ஒருகை பார்த்துக்கொள்வேன். அதற்காக அசந்து தூங்குபவர்களை நான் எழுப்ப மாட்டேன்” என்றான் பீமன் உறுதியாக.
"சரி..உனக்கு விருப்பப்பட்டதைச் செய். அவர்களை எழுப்பு. நான் ஆகாயமார்க்கமாகச் செல்பவள். உங்கள் அனைவரையும் பிழைக்க வைக்கிறேன்””
“நான் சாதாரண மனிதனல்ல. ராக்ஷசியே! அவன் இங்கு வரட்டும்.என்னுடன் மோதிப் பார்க்கட்டும்.”
சடசடவென்று மரக்கிளைகள் முறிந்து விழுவது போல சப்தம் வந்தது.மரங்கள் ஒன்றோடு ஒன்று வளைந்து முட்டிக்கொள்ள ஹிடிம்பன் வந்து இறங்கினான். அழகிய ரூபமெடுத்து நிற்கின்ற சகோதரியை முதலில் பார்த்தான். அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்து.
“ஹிடிம்பை! நமது ராக்ஷசகுலத்தோருக்கு இழிவு தேடும் செயலைச் செய்திருக்கிறார். ஒரு மானுடன் மீதுள்ள காமத்தினால் அவனை அடைய விரும்பி ரூபத்தை மாற்றிக்கொண்டாயா?” கோபத்தின் உச்சத்தில் கேட்டான் ஹிடிம்பன்.
பீமன் சற்று தள்ளி நின்று அவர்களின் பேச்சை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். சகோதரர்களும் குந்தியும் எழுந்திருக்கவில்லை.
கோரைப்பற்களைக் கடித்துக்கொண்டு கோபத்தின் உச்சியில் இருந்த ஹிடிம்பன் பாண்டவர்களைக் கொல்ல ஓடிவந்தான்.
வழியை மறித்துக்கொண்டு நின்ற பீமன் “நில்..நில்...” என்றான்.
கண்கள் சிவந்து உர்ர்ர்ர்..உர்ர்ர்ர்ரென்று சப்தம் எழுப்பிக்கொண்டிருந்த ஹிடிம்பனைப் பார்த்து “எனது சகோதரகளும் தாயும் தூங்குகிறார்கள். அவர்களை நாம் தொந்தரவு செய்யவேண்டாம். அந்தப் பக்கம் போகலாம் வா. யார் உயிரோடு இருக்கிறார்கள் என்று முடிவு செய்துவிடலாம்” என்று அவனை தூண்டில் போட்டான் பீமன்.
சண்டையிட நகர்ந்த போது சகோதரியை எரித்துவிடுவதுப் போல பார்த்தான் ஹிடிம்பன்.
“உன் சகோதரியே உன்னிடம் பாசம் வைக்கவில்லை. என் மீது காமவசப்பட்டிருக்கிறாள். யானை தனது காலால் உனது தலையை பிளந்தது போல சிதைக்கப்போகிறேன். என்னால் கொல்லப்படும் உன் தேகத்தை நரிகளும் பருந்துகளும் போட்டி போட்டுக்கொண்டு தின்னட்டும். உன்னைக் கொன்றபின்னர் ராக்ஷசர்கள் இல்லாத இந்த வனத்தில் மக்கள் உபத்திரவமின்றி உலவட்டும்”
இதைக் கேட்ட ஹிடிம்பன் பற்களை நரநரவென்று கடித்தான். கண்களில் கொலைவெறி ஏறியது.
“அனாவசியமாக தற்பெருமை பேசித் திரியாதே! முதலில் என்னுடன் யுத்தம் செய். பின்னர் யார் பெரியவர் என்பதை தீர்மானிக்கலாம். உன்னை கொன்று தீர்த்தபின்னர் இவளைக் கவனித்துக் கொள்கிறேன்” என்று கைகளை ஒன்றோடு ஒன்று பரபரவென்று தேய்த்துக்கொண்டான் ஹிடிம்பன்.
வேரோடு மரங்களைப் பிடிங்கி அடித்துக்கொண்டார்கள். அவர்கள் சண்டையிடும் பிரதெசேதமெங்கும் வனத்தை மொட்டையாக்கினார்கள். அந்த இடம் ஆமை முதுகுபோல ஆயிற்று. இருவரும் கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு சண்டையிட்டார்கள். சில நேரங்களில் பீமனை மல்லாக்கப் போட்டு ஹிடிம்பனும் சில சமயம் ஹிடிம்பன் மீது பீமனுமாக உக்கிரமான சண்டை நடந்துகொண்டிருந்தது. ஆவேசத்தினால் அவர்கள் எழுப்பிய ”பூ! பூ!” என்ற சப்தம் வனமெங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது.
இந்த சப்தம் சீரிய இடைவெளியில் தொடர்ந்து வர...குந்தியும் பாண்டவர்களும் எழுந்துகொண்டார்கள். கண்ணை விழித்தவுடன் அவர்கள் எதிரில் ஹிடிம்பை தெரிந்தாள். இந்த அத்துவானக் காட்டில் ஒரு அழகிய பெண்ணைக் கண்டவுடன் குந்தி அவளோடு பேசத்துவங்கினாள்.
“நீ இந்த வனத்திற்கு தேவதையா? அப்ஸரஸா? எதற்காக இங்கே நிற்கிறா’ய்” என்று கேட்டாள் குந்தி.
“இருண்ட மேகத்துக்கு ஒப்பான இந்த இடம் எனது சகோதரன் ஹிடிம்பனின் ஆளுகைக்கு உட்பட்டது. உன்னுடைய பலசாலியான மகனைக் கண்டேன். அவன் மீது காதலுற்றேன். அவனை என் கணவராக வரித்துவிட்டேன். அவர் என் சகோதரனைக் கசக்கி எடுத்துக்கொண்டு அருகாமையில் போர்புரிந்துகொண்டிருக்கிறார். வாருங்கள் செல்லலாம்” என்று ஹிடிம்பை முன்னால் செல்ல பாண்டவர்களும் குந்தியும் பின்னால் சென்றார்கள்.
இரண்டு சிங்கங்கள் சண்டையிட்டுக் கொள்வதைப் போல அவர்கள் இருவரும் இன்னமும் யுத்தம் புரிந்துகொண்டிருந்தார்கள். சகோதரர்களும் குந்தியும் ஹிடிம்பையும் வேடிக்கைப் பார்க்க வெகுநேரம் யுத்தம் நடந்தது.
“பீமா.. சீக்கிரம் இவனைக் கொல். அந்திசாயப் போகிறது. இரவில் ராக்ஷசர்களுக்கு பலம் அதிகம். உன்னால் முடியவில்லை என்றால் நானும் உதவிக்கு வருகிறேன்” என்று காண்டீபத்தைக் கையில் எடுத்துக்கொண்டான் அர்ஜுனன்.
பீமன் கோபம் கொண்டு அந்த ராக்ஷசனை தலைக்கு மேலே தூக்கி ஒரு சக்கரம் போல சுழற்றினான். ஹிடிம்பன் அலறினான். கிர்கிர்கிர்ரென வேகமாக சுற்றியதும் ஹிடிம்பன் பயந்தான்.
“இனிமேல் நீ மனிதர்களுக்கு பயத்தைக் கொடுக்ககூடாது” என்று இரைந்துகொண்டே ஹிடிம்பனைப் பிடித்து தரையில் வைத்துத் தேய்த்தான். தலை கரடுமுரடான தரையில் தேயும் போது ஹிடிம்பன் எழுப்பிய இரைச்சல் அந்த வனமெங்கும் எதிரொலித்தது. இன்னும் வேகமாகத் தேய்த்தான். பின்னர் அவனது உடலைக் காலால் அழுத்திக்கொண்டு தலையை சரசரவென்று சுழற்றி அதை கழுத்தோடு பிய்த்து வானத்தை நோக்கி எறிந்தான். ரத்தம் சொட்டச் சொட்ட அந்தத் தலை மேலிருந்து கீழே விழும்போது அருகில் நின்ற பீமஸேனனின் சகோதரர்கள் கூட அவனது பராக்கிரமத்தை எண்ணி பயந்தார்கள்.
அர்ஜுனன் காண்டீபம் இல்லாமல் பீமன் செய்த துவந்த யுத்தத்தை எண்ணியெண்ணி வியந்தான்.
“அருகில் நகரம் எதுவுமிருக்கும் போல தெரிகிறது. வாருங்கள் போகலாம்” என்று அனைவரையும் அழைத்தான். எல்லோரும் கிளம்பினார்கள். சகோதரன் இறந்ததன் வருத்தம் சிறிதும் இல்லாமல் ஹிடிம்பையும் பின் தொடர்ந்தாள்.
பீமன் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அவளையே முறைத்துப் பார்த்தபடி நின்றான்.
No comments:
Post a Comment