Showing posts with label வைவாஹிகபர்வம். Show all posts
Showing posts with label வைவாஹிகபர்வம். Show all posts

Sunday, March 11, 2018

வியாஸர் காட்டிய இந்திரர்கள்




சாப விமோசனத்தினால் சோகம் தோய்ந்த முகத்தோடு இருந்த நான்கு இந்திரர்களும் சங்கரரிடம் பின்வருமாறு முறையிட்டார்கள்.
“துர்லபமான சாபவிமோசனம் எங்களுக்கு மனுஷ்ய லோகத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் நேரடியாக மனுஷ்யர்களின் கர்ப்பத்திலிருந்து ஜனிக்க மாட்டோம். ஆனால் தர்மன், வாயு, இந்திரன், அசுவினி தேவர்கள் ஆகிய தேவர்களே எங்களை ஒரு தாயினிடத்தில் கர்ப்பாதானம் செய்யவேண்டும்”
புதிதாக அங்கு வந்திருந்த இந்திரன் ஈஸ்வரனிடம் “நான் என்னுடைய வீரியத்தினால் பிறப்பவனை இவர்களுக்கு ஐந்தாமவனாகக் கொடுப்பேன்” என்றான்.
அந்த ஐந்து இந்திரர்களுள் முதலாமவன் விஸ்வபுக்; இரண்டாமவன் பூததாமன்; மூன்றாமவன் பராக்கிரமசாலியான சிபிச்சக்கரவர்த்தி, நாலாமவன் சாந்தி; ஐந்தாமவன் தேஜஸ்வி. ராஜலக்ஷ்மியாகிய அந்த பெண்ணை அவர்களுக்கு பாரியையாக பூலோகத்தில் கொடுத்தார்.
பிறகு அந்த ஈஸ்வரர் அவர்களுடன் சேர்ந்து திருமாலிடம் சென்றனர். அளவற்ற அவதாரங்கள் எடுக்கும் அவரும் ஈஸ்வரர் சொன்னபடியே நியமித்தார். தேவர்களில் முதன்மையானவனான நரன் என்னும் தேவதையை இந்திரனுக்கு ஜனிக்கும்படியான ஜிஷ்ணு என்பவனாக நிச்சயித்தார் நாராயணர். அவனே அர்ஜுனன்.
அவர்கள் அனைவரும் கூடியிருக்கும் பொழுது திருமால் தலையிலிருந்து ஒரு வெண்மையான கேசமும் ஒரு கறுப்பான கேசத்தையும் எடுத்தார். அந்த இரண்டு கேசங்களும் தேவகி ரோகிணி என்னும் இரண்டு யாதவகுலத்து ஸ்த்ரீ கர்ப்பங்களில் பிரவேசித்தன. அந்த இரண்டு கேசங்களில் வெண்மையாக இருந்த ஒன்று பலராமனாகவும் கறுத்த நிறமான கேசம் கேசவனாகவும் பிறந்தது.
வியாஸரின் இந்தக் கதையை ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தான் துருபதன். திருஷ்டத்யும்னனை இதைச் சொல்வதற்கு முன்னர் வெளியே அனுப்பியிருந்தார் வியாஸர்.
“துருபதா! அந்த மலையின் குகையில் இந்திர ரூபத்துடன் அடைக்கப்பட்டவர்களே இங்கே வீரர்களான பாண்டவர்களாக இருக்கிறார்கள். திவ்யரூபத்துடன் இருக்கும் இந்த திரௌபதி அவர்களுக்காக முன்னரே நிச்சயிக்கப்பட்டவள்தான். இவளுடைய ரூபம் சந்திரனையும் சூர்யனையும் போல ஒளியுள்ளதாக இருக்கிறது. தேகமணம் வெகுதூரம் வீசுகிறது. உன் மேல் எனக்கிருக்கும் அன்பின் காரணமாக உனக்கு சிறிது நேரம் திவ்ய திருஷ்டியைத் தருகிறேன். தேவ ரூபத்துடன் கூடிய பாண்டவர்களை நீ காண்பாயாக”
வியாஸர் இப்படிச் சொன்னதும் துருபதனுக்கு திவ்ய திருஷ்டி சித்தித்தது. வியாஸருக்கு வலதுபுறம் இருந்த சுவற்றில் நேரில் காண்பது போலக் காட்சிகள் ஓடியது. துருபதனுக்கு மட்டும் பிரத்யேகமாகத் தெரிந்தது. அதில்...
தேவதேகங்களோடு க்ரீடமும் பொன்னாடைகளும் ஆபரணங்களும் தரித்த திவ்ய புருஷர்கள் ஐவர் இருந்தார்கள். வாடாத மலர் மாலைகள் தரித்திருந்தார்கள். இங்கே பிராமண ரூபத்தில் மிகவும் எளிமையாக அமர்ந்திருந்தவர்கள் பொற் கிரீடங்களை அணிந்துகொண்டு சுந்தர புருஷர்களாக காட்சியளித்தார்கள். அதில் அர்ஜுனனும் இருக்கக்கண்டு ஆனந்தமடைந்தான் துருபதன்.
இது தேவ மாயை. தனது சிற்றறிவுக்கு எட்டாது என்று உணர்ந்த துருபதன் ராஜலக்ஷ்மியாகிய அந்த திரௌபதியை பாண்டவர்களுக்கு விவாஹம் செய்துகொடுக்க முடிவுசெய்துவிட்டான்.
தனது ஆசனத்திலிருந்து எழுந்து வியாஸர் இருக்குமிடத்திற்கு ஓடினான். அவரது காலடியில் பொதேர் என்று விழுந்து அவரது பாதசரணங்களைப் பிடித்துக்கொண்டான். அவர்மேல் எழுந்த மரியாதையிலும் பக்தியிலும் அவன் கண்ணில் உருவான கங்கையைக் கொண்டு அவரது பாதத்தை கழுவினான்.
“ரிஷி ஸ்ரேஷ்டரே! இப்படி காண்பிப்பது உமக்கு புதுமையல்லவே!” என்று மீண்டும் மீண்டும் நமஸ்கரித்தான் துருபதன்.
“ராஜனே! இதில் நீ திருப்தியடைந்திருந்தாலும்... பூர்வகாலத்து ராஜரிஷிகளின் பூர்வ சரித்திரத்தையும் சொல்கிறேன் கேள்”
இப்புவியில் நிதந்து என்ற ராஜரிஷியொருவன் இருந்தான். அதிவீரன். பராக்கிரமசாலி. அவனுக்கு ஐந்து புத்திரர்கள். இனியன செய்வார்கள். இன்சொல் பேசுவார்கள். தர்மம் தெரிந்தவர்கள். சூரர்கள். வேள்விகள் புரிபவர்கள். ஸால்வேயன், சூரஸேனன், ஸ்ருதஸேனன், திந்து ஸாரன், அதிஸாரன் ஆகிய அந்த ஐந்து வீரர்களும் வில்லாளிகள்.
சிபியின் புதல்வி பௌமாஸ்வி என்பவள் இந்த ஐந்து ராஜபுத்திரர்களையும் ஸ்வயம்வரத்தில் வரித்தாள். அவளே அந்த ஐந்து வீரர்களுக்கும் பாரியையாக இருந்தாள். நிதந்து புத்திரர்களுக்கு ஐந்து புதல்வர்களை ஐந்து காலங்களில் ஈன்றாள். அப்படிப் பிறந்த பௌமாஸ்வியின் புத்திரர்களுக்கு பிறந்தவர்களின் வம்சத்திற்கு ஸால்வேயர்கள், சூரஸேனர்கள், ஸ்ருதஸேனர்கள், திந்துஸாரர்கள் மற்றும் அதிஸாரர்கள் என்று பெயர் பெற்றனர்.
இப்படி பௌஸ்மாவி அநேகருக்கு ஒரு மனைவியாக பூமியில் பெயர் பெற்றிருந்தாள். அந்த பௌஸ்மாவி போலவே உன் மகளான கிருஷ்ணையும் ஐவருக்காக விதிக்கப்பட்டிருக்கிறாள்.
பூர்வ ஜென்மத்தில் அவள் ஒரு ரிஷிகன்னிகை. அழகாகயிருந்தும் கணவன் வாய்க்காததால் கடுந்தவம் புரிந்து சங்கரரைத் தோன்றச் செய்தாள். அவரிடம் ”பதியைக் கொடும்” என்று ஐந்து முறை வரம் கேட்டாள். அவரும் “அப்படியே ஆகட்டும்:” என்று சொல்லி மறைந்தார். ஆகவே அவளுக்கு ஐந்து பதிகள் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவளேதான் நாளாயனியாகப் பிறந்து மௌத்கல்யரை அடைந்து பின்னர் சிவபெருமானைத் துதித்து அவரிடம் வரம் பெற்றவள். இது தேவ ரஹஸ்யம். ஆகையால் உனக்கு மட்டும் சொன்னேன். இதன் ரஹஸ்யத்தை நீ காக்க வேண்டும். தேவர்களுடைய ராஜலக்ஷ்மிதான் உனது யாகத்தில் பிறந்தாள். அதுவும் பாண்டவர்களுக்காகத்தான். ஐவருக்கு ஒரு மனைவியாக பிரம்மதேவரால் படைக்கப்பட்டிருக்கிறாள். இனிமேல் உன் விருப்பம் போலச் செய்”
வியாஸர் எழுந்துவிட்டார்.
“மஹரிஷியே! சங்கரரிடத்திலேயே இப்படி இவள் வரம் வாங்கியமையால் நான் என்னச் சொல்லக் கடவது? விதியினால் இது இப்படிச் செய்யப்படுகிறது. நானென்ன நடுவில் செய்வது? ஈஸ்வரரால் இது விதிக்கப்பட்டிருக்கிறது. தர்மமோ அதர்மமோ என்னுடைய தவறு ஏதுமில்லை. இவர்கள் நிச்சயித்தப்படியே பாணிக்கிரஹணம் செய்துகொள்ளட்டும்”
என்று சொல்லிவிட்டு அவரை வணங்கினான் துருபதன்.
வியாஸர் பின்னர் அவனை எச்சரிக்கும்படி பேசினார்.
“வெறும் மானிடர்களின் விவாஹத்தில் இது நியாயமாகாது. இவர்கள் தேவர்கள். அவளும் தன் முன் ஜென்ம தவத்தால் ஐவருக்கு பாரியையானாள். தெய்வத்தன்மையுள்ள திரௌபதி மற்றும் பாண்டவர்கள் போல உள்ளவர்களுக்கே இந்த விவாஹம் சாஸ்திர விஹிதமாகும்.”
இதன் பின்னர் தனியாக அமர்ந்திருந்த துருபதனும் வியாஸரும் குந்தியும் அவளது புத்திரர்களும் திருஷ்டத்யும்னனும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார்கள்.
கிருஷ்ணத்வைபாயனர் யுதிஷ்டிரரின் கையைப் பிடித்துக்கொண்டு “ஜ்யேஷ்டனே! புஷ்ய நக்ஷத்திரமான இந்த சுபதினத்தில் க்ருஷ்ணையைப் பாணிக்கிரஹணம் செய்துகொள்” என்றார்.
பின்பு பீமன் மற்றும் அர்ஜுனாதிகளைப் பார்த்து “தருமனுக்குப் பின்னர் நீங்களும் முறையே திரௌபதியின் கரம் பற்றிக்கொள்ளுங்கள்”
வியாஸரின் இந்த வாக்கு அவர்களுக்கு அமுதானது. திரௌபதியை மங்கள ஸ்நானம் செய்வித்துப் பட்டாடைகளையும் ஆபரணங்களையும் பூட்டுவதற்காக அழைத்துச்சென்றார்கள். ராஜாவின் ஸ்நேகிதர்களும் பிராமணர்களும் மந்திரிப்பிரதானிகளும் விவாஹம் பார்க்கக் குவிந்தார்கள். ஐவரும் மங்கள ஸ்நானம் செய்துவிட்டு புத்தாடைகளையும் அங்கமெங்கும் வளையல்கள் மற்றும் கவசங்களை அணிந்துகொண்டும் ராஜகம்பீரத்தோடு அங்கே வந்தார்கள்.
தௌமியர் அக்னி வளர்த்தார். கிருஷ்ணையின் கரத்தை தர்மரிடத்தில் கொடுத்தார். வேதத்தில் கரைகண்ட தௌமியர் பாணிக்கிரஹணம் செய்துகொண்ட யுதிஷ்டிரரையும் க்ருஷ்ணையையும் அக்னியை வலம் வரச் செய்தார். அப்போது விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்கின.
”அரசே! இனி மற்ற ராஜகுமாரர்களும் இதுபோல பாணிக்கிரஹணம் செய்துகொள்ளலாமே” என்று துருபதனைப் பார்த்துக் கேட்டார் தௌமியர்.
”அப்படியே செய்யுங்கள்” என்றான் துருபதன்.
பின்னர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக கிருஷ்ணையைப் பாணிக்கிரஹணம் செய்துகொண்டார்கள்.
அங்கு ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. மனிதர்களுடைய விவாஹம் அல்ல அது என்பதை அது பறைசாற்றியது.
ஒவ்வொருநாள் கடந்த பின்னர் கிருஷ்ணை மீண்டும் கன்னித்தன்மை அடைந்தாள். கணவனின் மூத்த சகோதரனிடத்தில் (அர்ஜுனன் கணவன் என்று வைத்துக்கொண்டால்) கணவனும் மாமனும் என்னும் எண்ணத்தையும், கணவனின் கடைத் தம்பியினிடத்தில் கணவனும் மைத்துனனும் என்ற எண்ணத்தையும் இதற்கிடையில் இருப்பவர்களிடம் கணவன் மாமன் மைத்துனன் என்னும் மூவகை எண்ணத்தையும் வைத்திருந்தாளாம்.
விவாஹம் முடிந்ததும் துருபதன் சீர் நிறையச் செய்தான். பொற்கடிவாளங்கள் போட்டு நான்கு குதிரைகள் பூட்டிய நூறு ரதஙக்ள், பொற்குன்றுகள் போல பொன்னால் தாமரைப்பூ வடிவான பொன் அம்பாரிகள் போட்ட நூறு யானைகள், ஆடை ஆபரணங்கள், நூறு தாதிப்பெண்கள் என்று தாராளமாகச் செய்தான். விவாஹத்திற்குப் பின்னர் ரத்னங்கள் நிரம்பிய அந்த பாஞ்சால நகர மாளிகையில் சந்தோஷமாக இருந்தனர்.
குந்திக்கு கிருஷ்ணை தினமும் நமஸ்காரம் செய்வாள். துருபதன் அளித்த தாதிப்பெண்கள் பணிவிடைகள் செய்ய ராஜமாதாவாக வலம் வந்தாள் குந்தி. திரௌபதியை வாழ்த்தி பல உபதேசங்கள் செய்தாள்.
“இந்திரனுக்கு இந்திராணி போலவும், அக்னிக்கு ஸ்வாஹா தேவி போலவும், சந்திரனுக்கு ரோஹிணி போலவும், நளனுக்கு தமயந்தி போலவும், குபேரனுக்கு பத்ராதேவி போலவும், வசிஷ்டருக்கு அருந்ததி போலவும் திருமாலுக்கு ஸ்ரீதேவி போலவும் நீ உன் கணவர்களுக்கு இருப்பாயாக. தீர்க்காயுள் உள்ள புத்திரர்களைபொ பெறுவாயாக. யாகத்திற்குரிய பத்னியாகவும் பதிவிரதையாகவும் இருப்பாய். நம்மைத் தேடி வந்த விருந்தினர்கள், முனிவர்கள், இளைஞர்கள், முதியோர்கள், பெரியோர்களை முறைப்படி ஆதரி. தர்மத்தில் அன்புள்ள நீ ராஜ்ஜாபிஷேகம் பெறுவாய்.”
அன்பாய் ஆசீர்வதித்த மாமியாரைக் கண்ட திரௌபதிக்கு கண்களில் ஜலம் கட்டியது. மீண்டுமொருமறை குந்திக்கு பாத வந்தனம் செய்யும் போது கண்ணீர்ச் சொட்டுகளினால் பாதத்தை ஈரமாக்கினாள்.
”இப்போது பட்டு உடுத்தின உன்னைக் கண்டு எப்படி சந்தோஷிக்கிறேனோ அதுபோலவே உனக்குப் புத்திரர்கள் பிறந்தவுடன் மகிழ்வேன்” என்றாள் குந்தி ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டே.
பாண்டவர்களுக்குத் திருமணம் ஆன பின்னர் ஸ்ரேயஸ்பதியான கிருஷ்ண பகவான் நிறைய பரிசுகளை அனுப்பினார். கோடிக்கணக்கான பொன் நாணயங்கள் தங்கக் கட்டிகள் விசித்திரமான பொன் ஆபரணங்கள், நூற்றுக்கணக்கான பாத்திரஙக்ள், பற்பல தேசத்து பணிப்பெண்கள், பத்ரங்கள் எனப்படும் யானைகள், உயர்ந்த குதிரைகள் என்று யுதிஷ்டிரரை அன்பு வெள்ளத்தில் திணற்டித்தார்.
மாளிகை முழுவதும் பரிசுப் பொருட்களோடு யுதிஷ்டிரரும் பீமனும் அர்ஜுனனும் நகுல சகதேவர்களும் மகிழ்ந்திருந்தார்கள். குந்திக்கும் துருபதனுக்கும் மன நிறைவு.
[வைவாஹிக பர்வம் முடிந்தது]

நாளாயனியின் கதை


"துருபதா! தன் மகள் ஐவருக்கு மனைவியா என்கிற அவஸ்தை உனக்கு வேண்டாம்”
தாடி அசைய இதைச் சொன்ன வியாஸரை கூர்ந்து நோக்கினான் த்ருஷ்டத்யும்னன். தந்தை என்ன சொல்வார் என்று துருபதனையும் பார்த்தான். சலனமில்லாமல் அமர்ந்திருந்தான் துருபதன். க்ருஷ்ணையின் வாழ்க்கை பந்தயத்தால் தோற்கடிக்கப்பட்டுவிட்டதோ என்று உள்ளுக்குள் அவனுக்கு அச்சம் பிறந்தது. இது என்ன தர்மம்? என்று குழம்பிப்போனான்.
“ஒன்று சொல்லட்டுமா?”
என்ன என்பது போல வியாஸரைப் பார்த்தான் துருபதன்.
“யாஜ உபயாஜர்களை வைத்து நீ யாகம் செய்தபோது யாகசாலைக்குள் நுழையாத உன் மனைவி ‘என் பெண் ஐவருக்கு பாரியையாக இருக்க வேண்டும்’ என்று மனதில் வேண்டிக்கொண்டாள். தர்மம் தவறாத அந்த ரிஷிகள் உன் புத்ரிக்கு ஐவர் பதியாக ஆகும்படி செய்தார்கள். வருந்தாதே! உன் குலம் மகிழ் வேண்டும். இப்படி இவள் ஐவருக்குப் பத்னியாவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. உன் துயரத்தை மூட்டைக்கட்டி வை. சொல்கிறேன் கேள்”
நிமிர்ந்து உட்கார்ந்தான் துருபதன். தந்தைக்கு அருகில் அமர்ந்தான் த்ருஷ்டத்யும்னன். பாண்டவர்கள் வியாஸரைப் பார்த்தபடி கவனம் குவித்தார்கள்.
“இவள் பூர்வ ஜென்மத்தில் நாளாயனி. அழகு கொஞ்சும் எழில் வடிவானவளாக இருந்தாள். கிழவரும் குஷ்டரோகியுமான மௌத்கல்யர் இவளது கணவர். அவருக்கு சிறப்பாக பணிவிடைகள் செய்துவந்தாள். எலும்பும் தோலுமாக இருந்தாலும் கடும் முன்கோபி. நேற்றிருந்தது போல இன்று இருக்க மாட்டார். நாளை முழுவதும் புது மனிதன். அவரோடு குடும்பம் நடத்துவது இயலாத காரியம்.
நெருங்கவே முடியாதது போல வாயில் துர்கந்தமடிக்கும். சதையெல்லாம் மடிந்து தொங்கும். தலையெங்கும் வெண்காடாய் நரைமயிர். குஷ்டரோகியானதால் அருவருக்கத்தக ரூபத்தோடு இருந்தார். நகங்களும் தோல்களும் உதிர்ந்துவிடும். அவர் உண்ட மிச்சத்தை உண்டு ஜீவனம் செய்துகொண்டிருந்தாள் நாளாயனி. அவளது சகிப்புத்தன்மைக்கும் புருஷன் மேல் கொண்ட பக்திக்கும் ஒரு உதாரணம் சொல்லட்டுமா?”
நிறுத்தினார் வியாஸர். என்ன சொல்வாரோ என்று குந்தி அவரையே உற்று நோக்கினாள். அவர்கள் அந்தரங்கமாக அமர்ந்திருந்த சபை அமைதியானது. நிசப்தம். ஆளுயர அலங்கார விளக்குகளின் தீபச்சுடரொளியை விஞ்சியது வியாஸரின் கண்ணொளி.
“ஒரு நாள் மௌத்கல்யர் போஜனம் செய்துகொண்டிருந்தார். அருகில் அமர்ந்து பரிமாறிக்கொண்டிருந்தாள் நாளாயனி. குஷ்டரோகியான அவரது கட்டைவிரல் அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்த இலையில் உதிர்ந்துவிட்டது. போதும் என்று அவர் எழுந்துவிட்டார். அந்த உதிர்ந்த கட்டைவிரலை இலையிலிருந்து எடுத்துப் போட்டுவிட்டு அருவருப்பின்றி அந்த எச்சில் அன்னத்தை புசித்தாள் அந்த கற்புக்கரசி.
இதற்கு மேல் அவளை சோதித்துப் பார்க்க விரும்பாத மௌத்கல்யர் அவளிடம் ‘உனக்கு என்ன வரம் வேண்டும். கேள்’ என்றார். குனிந்த தலை நிமிராமல் அவர் பக்கத்தில் அழகுச்சிலையாக அவள் அமர்ந்திருந்தாள்.
‘பெண்ணே! நான் கிழவனல்ல. கோபிஷ்டனல்ல. கொடியவனல்ல. பொறாமைக்காரனல்ல. வாயில் துர்நாற்றமில்லாதவன். உன்னை நான் எவ்வாறு இன்புறமுறச் செய்யவேண்டும். சொல். அப்படியே செய்கிறேன்”
மௌத்கல்யர் இவ்வளவு பேசிய பிறகு வாய் திறந்தாள் நாளாயனி.
“உலகங்களிலெல்லாம் புகழ் பெற்ற பகவானாகிய நீர் உமது சரீரத்தை ஐந்து பாகங்களாக்கியும் மற்றுமொரு ரூபத்தையும் எடுத்துக்கொண்டு என்னிடம் ரமிக்க வேண்டும்”
மௌத்கல்யர் உடனே “அப்படியே ஆகட்டும்” என்று வரமருளி ஐந்து விதமான சரீரங்களை எடுத்துக்கொண்டு அவளுடன் ரமித்துக்கொண்டிருந்தார். பின்னர் ஸ்வர்க்கம் ஏகினார். அங்கே தேவலோகத்தில் அமிர்தபானம் செய்துகொண்டு தேவலோக ரிஷிகளுடன் சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.
இந்திரனுடைய கிருஹத்தில் மஹேந்திரசேனை என்ற அந்த நாளாயனியினால் பூஜிக்கப்பெற்று ரமித்துக்கிடந்தார். அங்கிருந்து சூர்யனுடைய திவ்ய ரதத்தில் ஏறி மஹாமேருவை அடைந்து அங்கே வசிக்க எண்ணினார். அப்போது அவர் ஆகாய கங்கையில் ஸ்நானம் செய்து சந்திரனுடைய கிரணங்கள் படும்படியாக காற்றைப் போல நாளாயினியுடன் வாசம் செய்தார். பின்னர் அவர் மலை உருவம் எடுத்தார். அப்போது அந்த நாளாயினியை மலைநடுவில் மஹாநதியாக்கினார். அவர் மலர்கள் நிரம்பிய மரமாக ஆனபோது நாளாயினை அந்த மரத்தைச் சுற்றிய கொடியானாள். அவர் எந்த உருவம் எடுத்தாலும் அவளும் அதற்கு ஒத்த உருவத்தை எடுத்தாள்.
இருவருடைய அன்பும் பன்மடங்கு விருத்தியாயிற்று. அவள் தமது தாயாராகிய தமயந்தியைக் காட்டிலும் மேன்மையடைந்தாள். அந்த நாளாயனிதான் எதோ ஒரு விதிவசத்தால் கிருஷ்ணையாக உனது யாகத்தீயில் பிறந்திருக்கிறாள். அந்த மௌத்கல்ய முனிவரிடத்தில் பற்று வைத்த அவளது மனம் லேசில் மாறுவதில்லை”
நீண்ட நேரம் இந்தக் கதை கேட்டபடி அனைவரும் அமர்ந்திருந்தனர். சாளரங்கள் வழியாக வெளியே மழை பொழிவது கேட்டது. வியாஸர் கதையை நிறுத்தியதும் தூறலின் சப்தமும் நீரின் சலசலப்பும் தெளிவாகக் கேட்டது.
துருபதன் அந்த அறையை விட்டு இயற்கையின் அழைப்புக்காக வெளியே சென்றுவிட்டு சிறிது நேரத்தில் திரும்பினான்.
“பிராமணோத்தமரே! நாளாயனி என் யாகத்தில் வந்து ஏன் கிருஷ்ணையாகப் பிறக்க வேண்டும்?”
”துருபதா! முன் ஜென்மத்தில் இந்திரசேனை என்னும் நாளாயனி மௌத்கள்யரின் பாரியை. ஒரு கவலையில் இல்லாமல் சுகமாக இருந்தாள். அவருடன் அநேக வருஷகாலங்கள் கூடிக் கழித்தது ஒரு நொடி போல ஓடிவிட்டது. திடீரென்று ஒரு நாள் மௌக்லக்யர் காம ஸுகங்களை விட்டொழித்து வரைக்கியம் அடைந்துவிட்டார். கண்களை மூடி தியானத்தில் அமர்ந்துவிட்டார். நாளாயினி யார் என்பதையே மறக்குமளவிற்கு தியானம். காஷ்ட மௌனம்.
அவரது காலடியில் விழுந்தாள் நாளாயினி.
“தபோதனரே! இதுவரையில் விரும்பினவற்றையெல்லாம் அனுபவித்தேன். இருந்தாலும் போகங்களில் திருப்தி ஏற்படவில்லை” என்றாள்.
“நீ என் தவத்திற்கு இடையூறாக இருக்கிறாய். நீ மனுஷ்ய லோகத்தில் துருபதனுக்கு பாஞ்சால ராஜ புத்ரியாக ஜனிப்பாய். அந்த ஜன்மத்தில் புகழபெற்ற ஐந்து கணவர்கள் வாய்ப்பார்கள். அவர்களுடன் நெடுங்காலம் இன்பம் அடைவாய்” என்றார் மௌத்கல்யர்.
நாளாயனி இப்படி சபிக்கப்பட்டதால் மிகவும் துயரமடைந்து வனாந்திரங்களில் சுற்றித் திரிந்தாள். காமஸுகங்களை அவளை அலைக்கழித்தது. இந்திரியங்களை அடக்கி தேவதேவரான மஹேஸ்வரரை நோக்கி தவமியற்றினாள். உணவை மறந்து காற்றைப் புசித்தாள். பசுபதி அவள்முன் தோன்றினார். அப்போது அவள் “பதியைக் கொடும்.. பதியைக் கொடும்.... பதியைக் கொடும்.. பதியைக் கொடும்.. பதியைக் கொடும்” என்று ஐந்து முறை கேட்டாள்.
“புண்ணியவதியே உனக்கு அடுத்த ஜென்மம் வரப்போகிறது. அப்போது அழகும் திடமும் உள்ள ஐந்து கணவர்களை நீ அடைவாய்” என்று வரமருளினார். பதைபதைத்த நாளாயினி “ஸ்வாமி! எதற்கு ஐந்து கணவர்கள்?” என்று கேட்டாள். நீ பதியைக் கொடும் என்று ஐந்து முறை கேட்டாய். அதனால் உனக்கு ஐந்து கணவர்கள். அவர்கள் அனைவரும் உனக்கு இன்ப சுகத்தைத் தருபவர்களாக இருப்பார்கள்” என்றார் சங்கரர்.
“ஐயனே! ஒருத்தி ஒரு பர்த்தாவுக்கே துணையாக இருந்து தர்மானுஷ்டானம் செய்ய வேண்டும். இதுதான் முதலிலேயே ரிஷிகளால் விதிக்கப்பட்ட ஸ்த்ரீதர்மம். பெண்களுக்கு ஒரு கணவன் இருப்பதுதான் முறை. சந்ததி இல்லாத காலங்களில் கணவனீன் கட்டளையின் பேரில் பெண்ணுக்கு இரண்டாவது புருஷன் சொல்லப்பட்டிருக்கிறான். மூன்றாவது கணவனை அவள் வரிக்கக்கூடாது. ஆனாலும் அதற்கும் பிராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது. நான்காமவனைச் சேர்ந்தால் ஸ்த்ரீ பதிதையாகிறாள். ஐந்தாவது ஆடவனைச் சேர்ந்தால் அவள் விபசாரியாவாள். இதுவே தர்ம மார்க்கம். ஆகையால் உலகத்தில் அனுஷ்டிக்கப்படாத அந்த அதர்மத்திலிருந்து நான் எப்படி விடுபடுவேன்?”
மஹேஸ்வரர் சிரித்தார்.
“முன்பு பெண்கள் கட்டில்லாமல் இருந்தார்கள். நீ பதியைக் கொடும் என்று ஐந்துமுறை கேட்டதால் உனக்கு ஐவரைக் கொடுத்தேன். இது அதர்மம் ஆகாது.
“அப்படியென்றால் நான் அவர்களுடன் தனித்தனியே ரமிக்கவே விரும்புகிறேன். அவர்கள் ஒவ்வொருவருடனும் சேர்க்கை நேரும்போதெல்லாம் நான் இளமைப்பருவமே அடையவேண்டும். போகசுகம் மட்டும் எனக்குத் தீரவேயில்லை”
புண்ணியவதியே! காமஸுகமும் தவப்பயனும் சேர்ந்து வராது. ஆனால் நீ மட்டும் இவையிரண்டையும் சேர்ந்து பெரும் பயனை அடைவாய். இப்போது ஒன்று செய். இங்கிருந்து நீ செல். கங்கா ஜலத்தில் நீ இருக்கும்;போது எவனைப் பார்க்கிறாயோ அவனை என்னிடத்திற்கு அழைத்துவா” என்றார் ஈஸ்வரன்.
மூன்று முறை அவரை பிரதக்ஷிணம் செய்தாள் நாளாயனி. காற்றோடு கலந்து மறைந்தார் சங்கரர். கங்கையை நோக்கிச் செல்லலானாள் நாளாயனி.
**
நைமிசாரண்யத்தில் தேவர்கள் ஒரு சத்ரயாகம் செய்தார்கள். அதில் யமன் சாமித்ரம் என்னும் பசுவைக் (யாகத்தில் பலியாகக் கொடுப்பது எதுவும் பசு எனப்படும். சாமித்ரம் என்பது என்ன என்று தேடிக்கொண்டிருக்கிறேன். பசுமாடு அல்ல) கொல்லும் வேலையைச் செய்தான். யமன் அந்த யாகத்தில் முனைப்போடு ஈடுபட்டதால் மனிதர்களைக் கொல்லும் வேலையை விட்டுவிட்டான். அதனால் ஜனங்கள் அதிகமாக விருத்தியானார்கள். யாரும் மரணமடையவில்லை. தேவாதிதேவர்கள் குழுவாகக் கிளம்பி பிரம்மதேவரிடம் முறையிடுவதற்கு சென்றார்கள்.
“தேவாதிதேவா! பிரஜா விருத்தி அதிகமாகயிருக்கிறது. எங்களுக்குப் பயம் வந்துவிட்டது. நீங்கள்தான் சுகம் தரவேண்டும்” என்று கைகூப்பித் தொழுதார்கள்.
“மனிதர்களின் இடம் வேறு. உங்கள் தேவலோகத்தில் அவர்களைப் பற்றிய பயம் எதற்கு?
“இறப்பவர்கள் இறக்காதவர்களாகி எங்களைப் போன்று ஆகிவிட்டார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் ஒன்றும் வித்யாசமில்லை.”
பிரம்மதேவர் “யமன் சத்ரயாகத்தில் இருக்கிறான். அவனாலேதான் இவர்கள் இறப்பதில்லை. யாகம் முடிந்ததும் திரும்பவும் தொழிலை ஆரம்பித்துவிடுவான்.” என்று சொன்னார்.
பிரம்மதேவரின் சொல்லைக்கேட்டு யமன் சத்ரயாகம் செய்யும் இடத்திற்கு சென்றார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்திருக்கும்போது பக்கத்தில் ஓடிய கங்கையில் ஒரு அதிசய பொற்றாமரைப் பூவைக் கண்டார்கள். தேவர்களில் சூரனான இந்திரன் கிளம்பி அந்த பூ மிதந்து வந்த திசையை நோக்கிப் போனான்.
கங்கை பிரவாகமாக பொங்கிக்கொண்டிருந்த இடத்தில் ஒரு பெண்ணைக் கண்டான். அந்தப் பெண் தனது இடை வரை கங்கையில் இறங்கி நின்று கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அவளது கண்ணீர்த் துளி கங்கையில் விழுந்தவுடன் பொற்றாமரையாக மாறியது. இந்திரன் ஆச்சரியமடைந்தான். அவளை நெருங்கினான்.
“பெண்ணே! நீ யார்? எதற்காக அழுகிறாய்?” என்று கேட்டான்.
“அரசனே! நான் முன்னே செல்கிறேன். நீ என் பின்னே வா. நான் எதற்காக அழுகிறேன் என்று உனக்குப் புரியும்” என்றாள் அந்தப் பெண்.
அவள் முன்னே செல்ல இந்திரன் பின் தொடர்ந்தான். அவர்கள் பெரிய மலையை அடைந்தார்கள். அங்கே சித்தாசனம் போட்டு வீற்றிருந்த ஒரு சிறுவன், சிறுமி ஒருத்தியுடன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தான். இந்திரனான தன்னைக் கண்டு கொள்ளாமல் சொக்கட்டான் ஆடும் சிறுவன் மேல் இந்திரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“ஏய்! யார் நீ? இந்த உலகம் என் வசத்தில் உள்ளது. நான் இவ்வுலகிற்கு ஈஸ்வரன்.” என்று அந்தச் சிறுவனை விரட்டினான். அந்தச் சிறுவனாக அமர்ந்து ஆடிக்கொண்டிருந்த சங்கரர் நகைத்தார். அவனை ஏறிட்டுப் பார்த்தார். அவ்வளவுதான். அவன் அசைவில்லாமல் சிலைபோல நின்றுவிட்டான். அவனை அங்கேயே அந்தக் கோலத்தில் நிற்கவைத்து இன்னும் சிறிது நேரம் சொக்கட்டான் ஆடினார். பக்கத்தில் அழுதுகொண்டு நின்றாள் அந்த நாளாயினி.
“நீ அவனைத் தொட்டு இங்கே கொண்டு வா” என்றார் சங்கரர்.
நாளாயினி கற்சிலையாக சமைந்து நின்ற இந்திரனைத் தொட்டாள். பொலபொலவென்று கற்கள் உதிர்ந்து அவன் சங்கரர் எதிரில் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்தான்.
“இந்திரா! இனிமேல் இப்படி இறுமாப்பாக எதையும் செய்யாதே! இந்த பர்வதத்தில் ஒரு குகை உள்ளது. அதனுள் நுழை. உன்னைப் போன்றவர்கள் சூரியனைப் போல பிரகாசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.”
அந்தப் பர்வதத்தின் குகை இருக்குமிடத்திற்கு ஓடினான் இந்திரன். வெளியே ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த குகையினுள் நுழைந்ததும் அவனைப்போல ஒளியுள்ள நால்வரைக் கண்டான். ஸ்தம்பித்துப்போய் நின்றான். நாமும் இவர்களைப் போல இந்தக் குகையினுள் கைதிபோல ஆகிவிடுவோமோ என்று எண்ணினான்.
ஈஸ்வரர் பின்னால் வந்து நின்றுகொண்டு “இந்திரா! சிறுபிள்ளைத்தனமாக என்னை அவமதித்தாய். இங்கு இருப்பவர்களும் உன்னைப் போலவே நடந்துகொண்டவர்கள்தான். போ.. இந்த குகையில் நுழை...” என்று கட்டளையாகச் சொன்னார். அரச இலை புயல் காற்றில் அடித்துக்கொண்டு நடுநடுங்குவதைப் போல இந்திரன் நடுங்கினான்.
ஈஸ்வரரை நோக்கிக் கை கூப்பினான். மண்டியிட்டான்.
“நீரே உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரன். முதன்மையானவர்” என்று தொழுதான்.
மஹேஸ்வரர் நகைத்தார்.
“இந்த உலகத்தில் உங்களுக்கு அனுக்ரஹம் கிடையாது. இங்கிருக்கும் இவர்களும் உன்னைப் போலவே நடந்தவர்கள். நீயும் இந்த குகையினுள் செல். நீங்கள் அனைவரும் மானிட ஜென்மம் அடைந்து இவளை பாரியையாக அடையுங்கள். மனிதஜென்மத்தில் பகைவர்களை மடியச்செய்து பூபாரம் காப்பீர். யுத்தங்கள் பல செய்து புண்ணியகாரியங்களில் ஈடுபட்டு பின்னர் சிறந்த இந்த இந்திரலோகத்திற்கு திரும்புவீர்கள்”
புதியதாய் அந்த குகைக்குள் நுழைந்த இந்திரனை அங்கேயே இருந்த இதர நான்கு இந்திரர்கள் அவனை அனுகூலமாகப் பார்த்தார்கள்.
அவர்கள் அப்போது....

ஐவருக்கு ஒருத்தியா?


துருபதராஜன் த்ருஷ்டத்யும்னனிடம் க்ருஷ்ணையை மணந்துகொண்டு போனவன் அர்ஜுனனா என்பதைக் கேட்டறிய அரண்மனை வாசலுக்கே வந்து நின்றான்.
“யார்?” என்று கண்களில் ஆர்வம் பற்றி எரியக் கேட்டான் துருபதன்.
“இந்திரனுக்கு ஒப்பான தோற்றமுடைய அந்த பிராமண ரூபத்தில் லக்ஷியத்தை அடித்தவன் அர்ஜுனன் என்பது என் எண்ணம். நம்முடைய க்ருஷ்ணையை அவன் அழைத்துக்கொண்டு போனபோது துரத்திச் சென்ற கர்ணனின் வில்லை முறித்துத் துரத்தினான். மேலும் சல்லியன் போன்றவர்களை ஒரு பெரும் மரத்தை பிடிங்கிச் சுழற்றியவன் பீமனாகத்தான் இருக்கக்கூடும்.அவர்கள் எல்லோரும் பிக்ஷை எடுத்துச் சென்றார்கள். குடிலில் அவர்களது தாயார் இருந்தார். கிருஷ்ணையிடம் கொடுத்துப் பாகம் செய்து அனைவரும் உண்டார்கள். கால்பாகத்தில் கிருஷ்ணை படுத்துக்கொண்டாள். தலைப்புறத்தில் அவர்களது அன்னை உறங்கினாள். மேலும் இரவு அவர்கள் பேசிக்கொண்டது பிராமணர்களின் பேச்சோ வைசியர்களின் பேச்சோ அல்ல.. படைபலம், குதிரைகள், யுத்தமுறைகள் என்று எல்லாம் க்ஷத்ரியப் பேச்சு. ஆகையால் அரக்குமாளிகை தீயின் பிடியிலிருந்து அவர்கள் தப்பிவிட்டார்கள் என்று நாம் கேள்விப்பட்டது உண்மைதான்”
துருபதன் முகத்தில் வெற்றிச் சிரிப்புப் படர்ந்தது. தனது முதல் சபதம் நிறைவேறிய திருப்தியில் பக்கத்தில் இருந்த அரண்மனைச் சேவகனை அழைத்தான்.
“நீ ஓடிப்போய் அரசவைப் புரோஹிதர் ஒருவரை அழைத்து வா” என்று விரட்டினான்.
புரோஹிதர் வந்து வந்தனம் செய்தார்.
“நீர் அங்கு போய் அவர்கள் மஹாத்மாக்களாகிய பாண்டவர்களா என்று நான் அறிய விழைகிறேன் என்று கேட்டு வரவும்”
குயவன் குடிலில் ஐவரும் அன்னையுடன் அமர்ந்திருந்தார்கள். புரோஹிதர் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
”வீரர்களே! துருபதராஜன் தங்களைப் பற்றிச் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார். உங்களின் பிறந்த வம்சபரம்பரையை அறிந்துகொள்ள பிரியப்படுகிறார். பாண்டு மஹாராஜாவின் உயிருக்கொப்பான நண்பராக இருந்தார். பாஞ்சாலராஜர் தனது புத்ரியை பாண்டுமஹாராஜாவுக்கு மருமகளாக்கிப் பார்க்க சித்தம் கொண்டிருந்தார். அந்த அர்ஜுனன் தான் தனது பெண்ணை அடைந்திருக்கிறானா என்றும் தனது விருப்பம் நிறைவேறியிருக்கிறதா என்றும் தெரிந்துகொள்ள என்னை உங்களிடம் விசாரிக்க அனுப்பியிருக்கிறார்”
தர்மபுத்திரர்தான் அந்த புரோஹிதருக்கு எதிரே நின்றுகொண்டிருந்தார். அருகில் பீமஸேனன் இருந்தான்.
“இவர் துருபதராஜாவின் புரோஹிதர். இவருக்கு விசேஷ பூஜை செய்யுங்கள்”
அவருக்கு ஆசனம் கொடுத்து பூஜை செய்தார்கள். பின்னர் நிதானமாக தர்மபுத்திரர் பேச ஆரம்பித்தார்.
“பாஞ்சாலராஜன் மன விருப்பப்படி பெண்ணைக் கொடுக்கவில்லை. ஒரு பந்தயம் வைத்து அதில் ஜெயிப்பவனுக்கு பெண்ணைக் கொடுத்தார். அதில் வர்ணம், குலம், கோத்திரம், ஒழுக்கம் போன்றவைகளைப் பற்றிய விதிமுறைகள் இல்லை. வில்லை நாணேற்றுபவனுக்கும் லக்ஷியத்தை அடிப்பவனுக்கும் பெண் என்று சொல்லப்பட்டது. அவ்வாறாகவே மஹாத்மாவான இவன் ஜெயித்தான்.”
அர்ஜுனன் பதிலேதும் பேசாமல் கைகட்டிப் பக்கத்தில் நின்றிருந்தான்.
“அசக்தனால் அது நானேற்றப்பட முடியாது. அஸ்திர தேர்ச்சியில்லாதவனாலும் கீழ்க்குலத்தோனாலும் அந்த லக்ஷியத்தை அடித்து வீழ்த்த முடியாது. அதுபற்றி இனிமேல் துருபதராஜர் கவலை கொள்வது நல்லதல்ல. இலக்கை வீழ்த்தியவன் சாமானியன் அல்ல”
இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருந்தபோது வெளியே புரவியின் குளம்பொலி கேட்டது. வீரனொருவன் குதித்து இறங்கினான்.
“எல்லோருக்கும் அரண்மனையில் அன்னம் சித்தமாகயிருக்கிறது. விசேஷமான விருந்து தயாராகிக்கொண்டிருக்கிறது. மஹாராஜா ரதங்களை அனுப்பியிருக்கிறார். அனைவரும் வரவேண்டும்” என்று கை கூப்பினான்.
அனைவரும் குயவன் குடிலிலிருந்து வெளியே வந்தார்கள்.
கண்களைப் பறிக்கும் ஒளியிடன் அரசர்கள் சவாரி செய்வதற்கு தகுதியான ரதங்கள் வெண்நிறப் புரவிகள் பூட்டி தயாராக நின்றது. பொற்தாமரைகள் கொண்டு அந்த ரதங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புரோஹிதருக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள். உயர்ந்த தேர்களில் அனைவரும் ஏறினார்கள். குந்தியும் கிருஷ்ணையும் ஒரு தேரில் ஏறினார்கள்.
புஷ்பமாலைகளை அணிவித்தார்கள். வாசனாதி திரவியங்களைக் கொடுத்துப் பூசிக்கொள்ளச் சொன்னார்கள். மங்கள தீபங்கள் ஏற்றி அரண்மனை புதுப்பொலிவுடன் ஜொலித்துக்கொண்டிருந்தது. புரோஹிதர் தர்மபுத்திரரிடம் பேசியதை துருபதனிடம் பகிர்ந்துகொண்டார். தர்மர் பிடிகொடுக்காமல் பேசியது துருபதனுக்கு வருத்தமாக இருந்தது.
அவர்கள் பாண்டவர்கள்தானா என்பதை அறிந்துகொள்வதற்காக மாளிகையில் பல திரவியங்களை குவித்தான். நானாவித பழங்கள், புஷ்ப மாலைகள், கவசங்கள், பசுக்கள், கயிறுகள், விதைகள், சிற்ப வேலைகுரிய சாதனங்கள், விளையாட்டுக்குரியவைகள் என்று அனைத்தையும் சேகரித்தான். மேலும் பிரகாசமுள்ள கேடகங்கள் கத்திகள் விசித்திரமான குதிரைகள் தேர்கள் உயர்ந்த தனுஸுகள் பலவகை அம்புகள் பொன்னால் அலங்கரிக்கப்பட்ட சக்தி ஆயுதங்கள், தடிகள், ஈட்டிகள், முசுண்டி, கோடாலி என்று பலவிதமான ஆயுதங்களையும் ஒரு இடத்தில் அவர்கள் பார்வை படும்படி தோதாக வைத்தான்.
முன்னும் பின்னும் வீரர்களும் சேவகர்களும் சூழ ரதங்கள் அரண்மனை வாசலை அடைந்தது. குந்தியும் கிருஷ்ணையும் இறங்கி அரண்மனையின் அந்தப்புரத்திற்கு சென்றார்கள். மங்கையர்கள் குந்தியை எதிர்கொண்டு அழைத்து மகிழ்ச்சியுடன் உள்ளே அழைத்துச்சென்றார்கள்.
ராஜசிம்மங்களான பாண்டவர்கள் கிருஷ்ணாஜினத்தை உத்தரியமாகத் தரித்திருந்தார்கள். ஆனால் மஹா சர்ப்பத்தின் உடலைப் போல நீண்ட கைகளை உடையவர்களாயிருந்தனர். அவர்களது புஜங்களின் திரட்சியைப் பார்த்த ஆடவர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள். விலையுயர்ந்த ஆசனங்களில் அமர்ந்தார்கள். பின்னர் விருந்துசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள். பொன் மற்றும் வெள்ளி மயமான பாத்திரங்களில் பலவிதமான பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
சிறப்பான விருந்து. உண்டு முடித்தபின் துருபதராஜனால் அந்த அநேக திரவியங்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள். எல்லா பொருட்களையும் விட்டு யுத்தத்திற்கு உரிய சாமான்கள் இருக்குமிடம் சென்று அவற்றை கையில் எடுத்து அதன் விவரங்களைப் பேசிக்கொண்டார்கள். துருபதனும் மந்திரிமார்களும் அதைக் கண்டு சந்தோஷமடைந்தார்கள். பாண்டுவின் புத்திரர்கள்தான் என்று துருபதன் நிச்சயம் செய்துகொண்டான்.
துருபதன் தர்மபுத்திரரை அழைத்துப் பேசலானான்.
“நீங்கள் க்ஷத்ரியர்களா? பிராம்மணர்களா? மாய ரூபத்தோடு அலையும் சித்தர்களா? கிருஷ்ணையைப் பார்ப்பதற்காக அன்று தேவர்களும் வந்திருந்தார்கள். நீங்கள் யார் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. அரசர்களிடத்தில் சத்தியம்தான் பிரகாசிக்கும். யாகம் செய்வது குளம் வெட்டுவது போல பொய் சொல்லாதிருப்பதும் தர்மம்தான். நீங்கள் யார் என்பதைச் சொன்னவுடன் சாஸ்திரப்பிரஹாரம் விவாஹம் செய்வதற்கான பூர்வாங்க காரியங்களை ஆரம்பிப்பேன்”
தர்மம் துருபதன் கண்களில் தெரிந்த அசௌகரியத்தையும் வருத்தத்தையும் காணச் சகியாமல் சிரித்துக்கொண்டே சத்தியம் பேச ஆரம்பித்தார்.
“பாஞ்சால ராஜரே! உமக்குச் சந்தோஷம் உண்டாகட்டும். நாங்கள் க்ஷத்ரியர்கள்”
துருபதன் முகம் சந்தோஷத்தில் ஒளிபடர ஆரம்பித்தது.
“வேந்தனே! மஹாத்மாவான பாண்டுவின் புத்திரர்கள். நான் குந்தியின் ஜ்யேஷ்டபுத்திரன். யுதிஷ்டிரன். லக்ஷியத்தை அடித்தவன் அர்ஜுனன். மரத்தை வேரோடு பிடிங்கித் துரத்தியவர்களை அடித்தவன் பீமன். அழகுள்ளவர்களா அங்கே வீற்றிருக்கும் இருவரும் நகுலசஹதேவர்கள். கிருஷ்ணையுடன் அங்கிருப்பவள் எங்களது தாயார் குந்தி. நீர் எங்களுக்கு முக்கியமான ஆதரவு”
இதைக்கேட்டவுடன் துருபதன் கண்களில் கங்கை பொங்கியது. ஆனந்தக்கண்ணீர் வடித்தான். பின்னர் அவர்கள் அரக்குமாளிகையிலிருந்து தப்பித்ததைக் கேட்டறிந்தான். தர்மபுத்திரர் எவ்வாறு அங்கிருந்து தப்பித்தார்கள் என்றும் திருதராஷ்டிர புத்திரர்களின் சதிவேலைகள் பற்றியும் விஸ்தாரமாகச் சொன்னார். கையிரண்டையும் சிம்மாசனத்தில் ஆவேசமாகக் குத்திக்கொண்டு திருதராஷ்டிரனைச் சபித்தான். பின்னர் ஆறுதலாக யுதிஷ்டிரரைத் தழுவிக்கொண்டு தேற்றினான். அவர்களுக்கு ராஜ்ஜியம் வாங்கித்தருவதாக வாக்குத்தத்தம் செய்தான்.
அனைவரையும் ஒரு பெரிய மாளிகையில் கிரஹப்பிரவேசம் செய்தான் துருபதன். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தவன் எல்லோருக்கும் பரிசுகளை வாரி வழங்கி இன்பமாகச் சிலகாலம் கழித்தான். பின்னர் ஒரு நாள் சுபமுகூர்த்தம் பார்த்து விவாஹப் பேச்சை ஆரம்பித்தான்.
“அர்ஜுனன் சுபதினமாகிய இன்று சாஸ்திரப் பிரகாரம் பாணிக்கிரஹணம் செய்துகொள்ளட்டும்”
யுதிஷ்டிரர் துருபதனைப் பார்த்தார்.
“அரசரே! எனக்கும் இன்னும் விவாஹம் ஆகவில்லை. ஆதானல் நான் முதலில் விவாஹம் செய்துகொள்ள நீர் அனுமதி வழங்கவேண்டும்” என்றார்.
“தர்மரே! என் பெண்ணை சாஸ்திரப் பிரஹாரம் நீர் விவாஹம் செய்தாலும் சரி அல்லது உம்மிஷ்டப்படி கிருஷ்ணையை யாருக்குச் செய்வித்தாலும் சரி” என்றான் துருபதன்.
ஆனால் பாஞ்சாலராஜன் இடிந்து விழுவதைப் போல பதில் சொன்னார் தர்மபுத்திரர்.
“ராஜரே! நாங்கள் ஐவருமே திரௌபதியை விவாஹம் செய்துகொள்வோம். அவள் எங்களுக்கு மனைவியாய் இருப்பாள்”
துருபதன் முகத்தில் ஈயாடவில்லை. இது சரியா? இயற்கை இதை மன்னிக்குமா? ஆயிரமாயிரம் கேள்விகள் அவனது நெஞ்சை அம்புகளாய்த் துளைத்தன. யுதிஷ்டிரர் வாய்பேசமுடியாமல் நின்றிருந்த துருபதனிடம் மேலும் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தார்.
“ரத்னம் போன்ற உம் மகள் அர்ஜுனனால் பந்தயத்தில் ஜயிக்கப்பட்டாள். கிடைத்த எதுவாகிலும் சேர்ந்து அனுபவிப்பது என்பது எங்களுக்குள் உடன்பாடு. என் அன்னையும் அனைவரையும் பகிர்ந்துகொள்ளச் சொன்னாள். தர்மப்பிரகாரமே கிருஷ்ணை எங்களை கணவனாக அடையலாம். அனைவரும் அக்னி சாக்ஷியாக அவளை விவாஹம் செய்துகொள்கிறோம்”
“நீர் அதர்மம் பேசலாமா? ஒருவனுக்கு அநேக மனைவிகள் இருக்கலாம். அது சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஒருத்திக்கு பல கணவர்கள் என்பதை எங்கும் கேள்விப்பட்டதில்லை. நீர் சொல்வது தர்மமேயில்லை”
வார்த்தைகளில் கொஞ்சம் உஷ்ணம் தடவிப் பேசினான் துருபதன்.
யுதிஷ்டிரர் சிறிது நேரம் மௌனம் காத்தார்.
“மஹாராஜனே! தர்மம் நுட்பமானது. எது தர்மம் என்பது நாமறியோம். முன்னோர்கள் விட்டுச் சென்ற பாதையை அனுசரிக்கிறோம். என்னுடையது சத்ய வாக்கு. முன்பொரு நாள் வியாஸபகவான் இதையேதான் என்னிடம் சொன்னார். சந்தேகம் வேண்டாம். இது தர்மமே”
தீர்க்கமாக பேசி நிறைவுசெய்தார் தர்மர்.
இப்போது இதைப் பற்றி எதுபேசினாலும் வம்புக்கு வழிவகுக்கும் என்று எண்ணினான் துருபதன். வெள்ளிச் சொம்பில் இருந்த நீரை வாயில் சரித்துக்கொண்டான். சிந்திய நீரை உத்தரீயத்தில் துடைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் பேசினான்.
“தர்மபுத்திரரே! நீரும் குந்தியும் என் புத்ரன் திருஷ்டத்யும்னனும் கலந்தாலோசித்து இன்னது செய்யவேண்டும் என்று நாளைக் காலையில் சொல்லுங்கள். பார்க்கலாம்” என்றான்.
அப்போது சபையின் வாசலில் ஒளியுடன் வெண்மையான வஸ்திரத்தோடும் வெண் தாடியோடும் கையில் கமண்டலத்துடன் வியாஸபகவான் தோன்றினார். துருபதனும் சபையோரும் ஆச்சரியத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். துருபதன் தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து அவரை எதிர் கொண்டழைக்க ஓடினான்.
துருபதனும் திருஷ்டத்யும்னனும் வியாசரை பொன் ஆசனத்தில் அமர வைத்து பாத பூஜை செய்தார்கள். குசலம் விசாரித்துக்கொண்டார்கள். சபை சிறிது நேரம் அமைதியாக இருந்தது. திரிகாலஞானியாகிய வியாஸபகவானால் எதன் நிமித்தம் அவர்கள் மௌனிகளாக அமர்ந்திருக்கிறார்கள் என்று உணர்ந்துகொண்டார்.
துருபதன் தொண்டையை செருமிக்கொண்டே ஆரம்பித்தான்.
“வியாஸபகவானுக்கு வந்தனம். ஒருத்தி பலருக்கு எப்படி பாரியையாகக் கடவாள்? தர்மம் எப்படி பரிசுத்தமாகயிருக்கும்? பகவான் உள்ளது உள்ளபடி கூற வேண்டும்”
கை கூப்பினான் துருபதன்.
”லோகத்திற்கும் வேதத்திற்கும் விரோதமானதும் நிச்சயமாக யாவர்க்கும் தெரியாததாகவும் இந்த தர்மத்தின் விஷயத்தில் யார்யாருக்கு என்னென்ன அபிப்பிராயம் என்பதை முதலில் தெரிவியுங்கள்”
வியாஸபகவானே விரோதமான தெரியாத தர்மம் என்று ஆரம்பித்து வைத்தார். துருபதன் தொடர்ந்தான்.
“இது வேதத்திற்கும் உலகத்திற்கும் விரோதமானது. ஒருத்தி பலருக்கு பாரியையாவது இல்லையே. இந்த நடை முன்னோர்களாலும் அனுசரிக்கப்படவில்லையே. ஆகையால் இது அதர்மம். செய்யக்கூடாது.”
திருஷ்டத்யும்னன் எழுந்து வியாஸபகவானை வந்தனம் செய்தான்.
“பிராமண சிரேஷ்டரே! நன்நடத்தையோடு இருக்கிற ஜ்யேஷ்ட சகோதரன் தன் இளையவன் பாரியையிடம் எப்படி சேர முடியும்? தர்மம் நுட்பமானதால் எங்களால் தெளிவாக அறிய முடியவில்லை. க்ருஷ்ணை ஐவருக்கு பாரியை ஆகலாம் என்பதை எங்களால் ஏற்கமுடியவில்லை”
வியாஸர் அவையில் இருந்த யுதிஷ்டிரரைப் பார்த்தார். யுதிஷ்டிரர் திருஷ்டத்யும்னனைப் பார்த்து பேசினார்.
“என் வாக்கு பொய் சொல்வதில்லை. என் புத்தி என்றும் அதர்மத்தில் செல்லாது. தர்மங்களில் கரைகண்டவளும் கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஜடிலை என்பவள் சப்தரிஷிகளுடன் சேர்ந்திருந்தாள் என்று புராணங்களில் கேள்விப்படுகிறோம்.”
புராண சம்பந்தம் இருப்பதாக யுதிஷ்டிரர் சொன்னதும் அவை நிசப்தமானது.
“ரிஷிபுத்திரியான வார்ஷி (மாரிஷா) என்பவள் கதையைச் சொன்னால் நீங்கள் மூர்ச்சையாகிவிடுவீர்கள்” பொடி வைத்தார் தர்மர். சபை நிமிர்ந்தது. காதுகளைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தது.
“மனதாலும் வாக்காலும் துய்மையடைந்த பிரசேதஸுகள் என்று ஒரே பெயர் கொண்ட பத்து சகோதர்களிடம் வார்ஷி சேர்ந்திருந்தாள்.”
பத்து பேரா? துருபதன் அதிர்ந்தான். திருஷ்டத்யும்னன் செய்வதறியாது திகைத்தான்.
“மேலும்... பெரியோருடைய சொல் தர்மம். பெரியோர் எல்லாரையும் விட மாதா முதன்மையானவள். அவள் ஐவரும் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று சொன்னாள். அதனால் இதை சிறந்த தர்மமென்று சொல்கிறேன்”
தனக்குத் தெரிந்த தர்மத்தை ஆணி போல அந்தச் சபையில் அடித்துவிட்டு அமர்ந்துவிட்டார் தர்மர்.
அவையோரத்தில் அமர்ந்திருந்த குந்தி எழுந்திருந்தாள்.
“ஆமாம். நான் தான் பிக்ஷை என்றதும் ஐவரையும் பகிர்ந்துகொள்ளச் சொன்னேன். இது சத்தியம்” என்றாள்.
வியாஸர் சிரித்துக்கொண்டார். குந்தியைக் கண்ணாலேயே ஆமோதித்தார்.
“பாஞ்சால ராஜனே! இது எல்லோருக்கும் எக்காலத்திற்கும் உள்ள தர்மம்தான் என்பதைப் பற்றியும் இது சாஸ்திரப்படி கடைபிடிக்கலாம் என்பதைப் பற்றியும் சொல்லப்போகிறேன். யுதிஷ்டிரன் சொன்னபடியே இந்த தர்மம் பொய்யில்லை. சந்தேகப்பட வேண்டாம்” என்றார்.
தனது ஆசனத்திலிருந்து எழுந்த வியாஸபகவான் துருபதன் அமர்ந்திருக்கும் இடத்துக்குச் சென்று அவனது கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு ராஜகிருஹத்துக்குள் பிரவேசித்தார். பாண்டவர்கள், குந்தி, துருபதன், திருஷ்டத்யும்னன் என்று எல்லோரும் அங்கு குழுமியிருக்க அநேகருக்கு ஒரு மனைவி இருப்பது எப்படி தர்மமாகும் என்பதையும் துருபதனின் மகளாக அக்னியில் ஜனித்த கிருஷ்ணை ஐவருக்குப் பத்தினியாக இருப்பதை அவள் வரமாக வாங்கி வந்திருப்பதைப் பற்றியும் சொல்லத் தொடங்கினார்.
நாளை நாளாயனியின் கதை....