Showing posts with label வசிஷ்டர். Show all posts
Showing posts with label வசிஷ்டர். Show all posts

Sunday, March 11, 2018

விஸ்வாமித்திரரைக் காப்பாற்றிய ஸுப்ரமண்யர்


அந்த வனாந்திரத்தில் கற்பாறையில் அமர்ந்திருந்த ஒரு கொடிய ராக்ஷசன் வசிஷ்டரை நோக்கி ஆக்ரோஷமாக ஓடிவந்துகொண்டிருந்தான். அதிருஸ்யந்தி பயந்து நடுநடுங்கி அவர் பின் ஒடுங்கினாள்.
“தவ ஸ்ரேஷ்டரே! அந்த ராக்ஷசன் நம்மை கொன்று தின்ன ஓடி வருகிறான். காப்பாற்றுங்கள்...”
“இல்லையம்மா. அவன் அரக்கனல்ல. அவன் இப்பூமியில் புகழ்பெற்ற இக்ஷ்வாகு குலத்து அரசன். கல்மாஷபாதன். எனது புத்ரன் சக்தியின் சாபத்தால் ராக்ஷச குணம் பெற்றான். ”
வசிஷ்டர் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களை நெருங்கிவிட்டான் கல்மாஷபாதன். இருகைகளையும் அவர்களை நோக்கி நீட்டிக்கொண்டே வந்தவனை நோக்கி தனது தண்டத்தைத் தூக்கிக் காட்டி “ஹும்” என்று சீறினார். அவன் கைக்கெட்டும் தூரத்தில் அப்படியே நின்றான். கையிலிருந்த கமண்டலத்திலிருந்து ஜலத்தை வலது கையில் ஊற்றி மந்திரம் ஜெபித்து அவன் முகத்தில் சொத்தென்று அடித்தார்.
அவரது யோக மகிமையால் அவன் சாப நிவர்த்தி பெற்றான். பன்னிரெண்டு வருஷங்களுக்குப் பிறகு ராக்ஷசத்தன்மை நீங்கி வசிஷ்டரை நமஸ்கரித்தான்.
“ரிஷிபுங்கவரே! உங்களுக்கு நான் செய்யவேண்டும். கட்டளையிடுங்கள்” என்று கைகூப்பி எழுந்து நின்றான்.
“கல்மாஷபாதா! காலத்தின் கட்டாயமாக என் புத்திரனை நீ கொன்றாய். இனி உன் ராஜ்ஜியத்தை சிறப்பாக ஆட்சி செய். ஆனால், பிராமணனை மட்டும் ஒருபோதும் அவமதிக்காதே”
“தங்கள் கட்டளைப்படியே பிராமணர்களை பூஜிப்பேன். என்னோடு தாங்களும் அயோத்தி மாநகருக்கு எழுந்தருளி ஆசீர்வதிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
ராஜா சாபம் நீங்கித் திரும்புகிறான் என்ற விஷயம் கேள்விப்பட்டவுடன் நகரம் விழாக்கோலம் பூண்டது. எங்கும் மங்கல வாத்தியங்கள் முழங்கின. வீதிகளில் நீர் தெளிக்கப்பட்டு கோலமிட்டார்கள். எங்கும் வேதகோஷங்கள் கேட்டன. கல்மாஷபாதன் தன் முன்னே வசிஷ்டர் நடக்க ராஜ தோரணையுடன் நகருக்குள் பிரவேசித்தான்.
மதயந்தி என்னும் அவனுடைய மனைவி மிகவும் அழகானவள். குணவதி. ஒருநாள் காம இச்சையில் அவளுடன் சேரப்போன கல்மாஷபாதனை அவள் தடுத்தாள். ராக்ஷசனாக அவன் காட்டில் திரிந்துகொண்டிருந்த போது அவனுக்குக் கிடைத்த சாபம் ஒன்றை அவளுக்கு அவன் சொல்லியிருந்தான். அந்த சாபத்தை அவள் கூறியபின்னர் வசிஷ்டரின் பாதம் பணிந்து தனது குல விருத்திக்காக வேண்டிக்கொண்டான். வசிஷ்டரும் தேவர்கள் போல ஸ்பரிச மாத்திரத்தினாலேயே அந்த அரசிக்கு கர்ப்பம் உண்டு பண்ணினார்.
பின்னர் கல்மாஷபாதனும் மதயந்தியும் அவருக்கு மரியாதைகள் செய்து ஆஸ்ரமத்திற்கு அனுப்பிவைத்தனர்.
*
”சித்ரரதனே! வசிஷ்டர் கல்மாஷபாதன் அரசியுடன் சேர்ந்ததற்கு ஏதோ சாபம் என்றாயே, அது என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாயிருக்கிறேன்”
குந்தியும் ஏனைய சகோதரர்களும் அர்ஜுனன் எப்போது இந்த கந்தர்வனுடன் பேச்சைப் முடித்துக்கொண்டு புறப்படுவான் என்று பெரும் ஆலமரத்தடியில் காத்திருந்தார்கள். எல்லாக் கதைகளையும் “ம்..” போட்டுக் கேட்டுக்கொள்வது போல கங்கை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது.
*
ராக்ஷச சாபம் பீடிக்கப்பட்டு கல்மாஷபாதன் காட்டினுள் திரிந்துகொண்டிருந்தான். அகோரப்பசி. காய்கனிகள் கூட கிடைக்கவில்லை. அப்போது ஒரு பிராமணன் தனது மனைவியுடன் சேர்ந்துகொண்டிருந்தான். மகிழ்ச்சிக்கடலில் நீந்திக்கொண்டிருந்த அவர்களை ராக்ஷச சொரூபத்தில் இருந்த கல்மாஷபாதன் பார்த்துவிட்டான். அவர்கள் இருவரும் உடனே காட்டினுள் மரச்சருகுகள் காலில் சரசரவென்று மிதிபட வேகமாக ஓட ஆரம்பித்தார்கள். அவன் இலகுவாக அவர்களைப் பிடித்துவிட்டான்.
அந்த பிராம்மணி அவனிடம் கைகூப்பித் தொழுதாள்.
“வேந்தனே! நீ சூர்யகுலத்தில் பிறந்தவன். தர்மம் தவறாதவன். இந்தக் கொடிய சாபத்தினால் இப்படி ஆகிவிட்டாய். ருதுகாலம் வந்த பிறகு சந்ததிக்காக என் கணவனுடன் நான் சேர்ந்திருக்கிறேன். இதை நீ தடுக்கக்கூடாது”
இதைப் பற்றி அவன் துளியும் கவலை கொள்ளவில்லை. ஒரு புலி மானை அடித்துச் சாப்பிடுவது போல அவள் கண் முன்னேயே அந்த பிராமணனை அடித்துத் தின்றான்.
கோபாக்கினியில் தகித்தாள் அந்த பிராம்மணி. அவளது கண்ணீர் தரையில் விழுந்து காய்ந்த சருகுகள் தீப்பற்றி எரிந்தன. கல்மாஷபாதன் திகைத்தான்.
“என் அன்புக் கணவரை என் கண் முன்னே தயை சிறிதும் இல்லாமல் தின்றாய். அயோக்கியனே! அதமனே! நீயும் உன் பார்யாளுடன் கூடிய உடன் மரணம் எய்துவாய்”
கல்மாஷபாதன் செய்வதறியாது நின்றான். கண்ணீர் சொரிய அந்த பிராம்மணி மூச்சிரைக்க பேசினாள்.
“எந்த வசிஷ்ட மகரிஷியின் புத்திரர்களை நீ அழித்தாயோ... அதே வசிஷ்ட மகரிஷியினால் உன் வம்சத்தை விருத்தி செய்யப்போகிறாய்”
அவள் அங்கிரஸ் வம்சத்துப் பெண். வார்த்தையில் சத்தியம் இருந்ததால் சாபம் நிச்சயம் பலிக்கும் என்று உணர்ந்தான் கல்மாஷபாதன்.
ஏற்கனவே அவள் சிந்திய கண்ணீர் தரையில் கிடந்த காய்ந்த சருகுகளை தீ மூட்டிவிட்டிருந்தது. இப்போது சில மரங்களைப் பற்றிக்கொண்டு கொழுந்து விட்டு எரிந்தது அக்னி.
கல்மாஷபாதன் வருத்தமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பக்கத்தில் எரிந்த தீயில் இறங்கிவிட்டாள் அந்த பிராம்மணி.
*
கல்மாஷபாதன் பிராம்மணியிடம் சாபம் பெற்றக் கதையைச் சொல்லிவிட்டு மீண்டும் விட்ட இடத்தில் தொடர்ந்தான் அங்காரபர்ணன் என்னும் கந்தர்வன். அர்ஜுனன் சிந்தையைச் சிதறவிடாமல் இந்தக் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
கல்மாஷபாதனின் பாரியாள் மதயந்தி கர்ப்பம் தரித்து பன்னிரண்டு வருஷகாலம் வரை பிரசவிக்கவில்லை. ஆகையால் மனம் தளர்ந்து பெரிய கல்லை எடுத்து வயிற்றினில் இடித்துக்கொண்டாள். அஸ்மகன் பிறந்தான்.
*
வசிஷ்டரின் ஆஸ்ரமத்திலிருந்த அவரது மருமகள் அதிருஸ்யந்தி ஒரு குமாரனைப் பெற்றாள். தான் இறந்துபோகும் தறுவாயில் வயிற்றிலிருந்தே வேதகோஷமிட்டு அவரைப் பாதுகாத்ததினால் அதிருஸ்யந்தியின் புத்திரனுக்கு பராசரர் என்று பெயரிட்டார். அந்தப் பராசரர் வசிஷ்டரைப் பார்த்து “தந்தையே!” என்று அழைத்தார்.
அதிருஸ்யந்தி அழுதாள். துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது.
“மகனே! இவர் உன் தந்தையின் தந்தை. உனது தாத்தா. உனது தந்தை நடுக்காட்டில் ஒரு ராக்ஷசனால் கொல்லப்பட்டார். அந்த ராக்ஷசனே உன் தந்தையை தின்றுவிட்டான்.
பராசரருக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. எல்லா லோகங்களையும் அழித்துவிடுகிறேன் என்று கிளம்பினார். அப்போது வசிஷ்டர் அவரைத் தடுத்தார். அவரது சினத்தைப் போக்க ஒரு கதை சொன்னார்.
*
”பராசரா! கிருதவீர்யன் என்று ஒரு கியாதி பெற்ற அரசன் இருந்தான். அவன் பிருகு வம்சத்தவர்களாகிய பார்க்கவர்கள் யாகம் செய்விக்க சிறப்பாக ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தான். அவன் ஸோமபானமானவுடன் நிறைய தனங்களை அவர்களிடம் தானம் செய்தான். அவன் ஸ்வர்க்கம் சென்றபின் அவன் குலத்தோருக்கு திரவிய வறட்சி ஏற்பட்டது. அந்த அரசர்கள் பார்க்கவர்களிடம் திரவியங்கள் இருப்பதைக் கண்டு அவர்களிடம் யாசிக்கச் சென்றார்கள்.
க்ஷத்ரியர்கள் திரவியத்தைத் தேடிக்கொண்டு வருகிறார்கள் என்று தெரிந்தவுடன் பார்க்கவர்களில் சிலர் பூமியில் போட்டுப் புதைத்துப் பாதுகாத்தனர். இன்னும் சிலர் பிராமணர்களுக்கு தானம் கொடுத்துவிட்டார்கள். சிலர் க்ஷத்ரியர்களுக்கே கொடுத்துவிட்டார்கள்.
ஒரு சமயம் க்ஷத்ரியன் ஒருவன் தற்செயலாக பார்க்கவர் வீட்டில் நோண்டிப் பார்த்தபொழுது நிறைய திரவியங்கள் கிடைத்தது. அப்போது நிறைய க்ஷத்ரியர்கள் அந்த பெருஞ்செல்வத்தைக் கண்டார்கள். கோபம் மேலிட பார்க்கவர்களை வெட்டிச் சாய்க்க ஆரம்பித்தார்கள் க்ஷத்ரியர்கள். பார்க்கவர்களின் மனைவிகள் பெரும் கவலையையும் பயத்தையும் அடைந்தார்கள்.
தனது பர்த்தாவின் கர்ப்பத்தைத் தாங்கிய ஒருத்திக்கு பயத்தினால் அது வெளிப்பட அதை தனது தொடையில் தாங்கிக்கொண்டாள். இதைக் கண்ட ஒருத்தி கலக்கமடைந்து க்ஷத்ரியர்களிடம் சென்று ரகஸியமாகத் தெரிவித்தாள். அவர்கள் ஒரு கூட்டமாக சேர்ந்துகொண்டு அந்த கர்ப்பத்தை அழித்துவிடுவதற்காகப் புறப்பட்டார்கள்.
அங்கே அந்த பார்க்கவ குல பிராம்மணப் பெண் தனது தேஜஸினால் ஜொலித்துக்கொண்டிருந்தாள். அந்தக் கர்ப்பத்தை அழிப்பதற்காக வந்தவர்களுக்கு எதிரிலேயே அவளது தொடையிலிருந்து கண்ணைப் பறிக்கும் மத்தியான காலத்து சூரியன் போல அந்த கர்ப்பம் வெளிப்பட்டது. அதில் உண்டான ஒளியினால் அவர்கள் அனைவருக்கும் கண் பார்வை பறிபோனது.
க்ஷத்ரியர்கள் கண் பார்வை பறிபோனதில் தடுமாறினார்கள். அந்தப் பிராம்மணியிடம் வேண்டிக்கொண்டார்கள்.
“நாங்கள் இனிமேல் எங்களைத் திருத்திக் கொள்கிறோம். க்ஷத்ரியஜாதியின் க்ஷேமத்திற்காக உன்னிடம் வேண்டுகிறோம். மீண்டும் பார்வையளித்து எங்களைக் காத்தருள்”
“நான் கோபம் கொண்டு உங்கள் கண்பார்வையை பறித்துவிடவில்லை. பிருகு வம்சத்தவனான , தொடையில் ஜனித்த, இந்த ஊருஜன் மிகுந்த கோபத்தில் இருக்கிறான். தனது வம்சத்தவர்களைக் கொன்றவர்களின் பார்வையைப் பிடிங்கிவிட்டான். நீங்கள் பிருகுவம்சத்தவர்களை கொன்ற போது நூறுவருஷ காலம் என் தொடையில் அடக்கி வைத்திருந்தேன். அவனுடைய திவ்ய தேஜஸினால்தான் உங்கள் பார்வை பறிபோனது. ஔர்வனாகிய என் உத்தம புத்திரனையே நீங்கள் உங்கள் பார்வையை மீண்டும் பெற வேண்டிக்கொள்ளுங்கள்” என்றாள்.
அந்த அரசர்கள் அனைவரும் கண் பார்வையின்றி ஊருஜர் இருக்கும் திக்கை நோக்கி நமஸ்கரித்தார்கள்.
“ஔவரே! எங்களுக்கு தயை செய்யும். ரக்ஷியுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்கள். அவரும் அவர்களுக்குத் தயை செய்தார். அரசர்கள் அனைவரும் கண்ணொளி பெற்றார்கள்.
ஆனாலும் ஔர்வரின் ஆத்திரம் அடங்கவில்லை. அனைத்து லோகங்களையும் அழித்துவிட கடும் தவம் செய்தார். தேவாசுர உலகங்கள் கொதிப்படைந்தது. பிதிர்லோகத்திலிருந்த அவரது முன்னோர்கள் அவர் முன் தோன்றினார்கள்.
“ஔர்வனே! உன் கோபத்தை அடக்கு. க்ஷத்ரியர்கள் எங்களை வெட்டி வீழ்த்தும் போது சக்தியில்லாமல் நாங்கள் தடுக்காமல் இருக்கவில்லை. ஆத்மஹத்தி செய்து கொள்ள ஒரு உபாயமாக பார்க்கவன் வீட்டில் திரவியத்தைப் புதைத்து அதை அவர்கள் கண்ணில் படுமாறு செய்தோம். ஆத்மஹத்தி செய்துகொள்பவன் நல்ல பல லோகங்களை அடைகிறான். நாங்கள் அனைவரும் நீண்ட காலம் ஆயுளோடு இருந்தோம். யமனால் எங்கள் உயிரைப் பறிக்க முடியாமல் தவித்தபோது நாங்களாக தேடிக்கொண்ட உபாயம் இது. ஆகையால் க்ஷத்ரியர்களை அழிக்காதே. தவ வலிமையைப் போக்கும் இந்த கோபத்தைக் விடு” என்றார்கள்.
“பிதிர்க்களே! நான் கோபத்தினால் மூன்று லோகங்களையும் அழிப்பதாக பிரதிக்ஞை செய்து உள்ளே அந்த அக்னியை மூட்டிவிட்டேன். பிருகுவம்சத்தவர்கள் அழிந்த போது கதறியதை கர்ப்பப்பையில் அடங்கித் தொடையில் வைத்திருந்த என் தாயிடம் இருந்தபோது கேட்டேன். அந்த ஆவேசம் இன்னும் இருக்கிறது. பாபம் செய்பவனைக் கண்டிப்பவனும் தடுப்பவனும் இருந்தல்தான் பாபம் செய்பவன் எந்த உலகத்திலும் இருக்க மாட்டான். கோபாக்னி என்னுள் கொழுந்துவிட்டு எரிகிறது. அதை வெளியில் விடாமல் இருந்தால் அது என்னை அழித்துவிடும். இப்போது என்ன செய்வேன்?” என்றார்.
பிதிர்கள் நிதானமாக ஔர்வருக்கு அறவுரை பகர்ந்தார்கள்.
“குழந்தாய்! உன் கோபத்தினால் உண்டான அக்னியை ஜலத்தில் விடு. லோகங்கள் ஜலத்தை ஆதாரமாய்க் கொண்டவை. எல்லா ரஸங்களும் ஜலமயம். உலகமே ஜலமயம். கோபத்தினால் உண்டான இந்த அக்னி ஜலத்தை எரித்துக்கொண்டு சமுத்திரத்தில் நிற்கட்டும். உலகம் ஜலமயமானது என்பதால் உலகங்களை அழிப்பேன் என்ற உன் சத்தியமும் காப்பாற்றப்படும்”
பராசரர் வசிஷ்டரைப் பார்த்துக்கொண்டு நின்றார். வசிஷ்டர் மேலும் தொடர்ந்தார்.
”பராசரா! அந்த ஔர்வர் தனது கோபத்தை சமுத்திரத்தில் விட்டார். அதுதான் வடவாமுகாக்கினி என்னும் பெயர் கொண்ட பெருங் குதிரைத்தலையாகி வாயிலிருந்து அக்னியை கக்கி ஜலத்தைக் குடிக்கிறது. ஆகையால் நீயும் லோகங்கள் முக்கியம் என்று அறிந்துகொண்டு அவற்றை அழிக்காமல் இருப்பாய்”
வசிஷ்டர் சொன்னதும் பராசரர் உலகங்களை அழிக்கும் கோபத்தை விட்டொழித்தார். ஆனாலும் தனது பிதா சக்தியின் மரணத்துக்குக் காரணமான ராக்ஷசர்களை மன்னிக்க அவருக்கு மனம் வரவில்லை. அந்த ராக்ஷசர்களை அழிக்கும் பொருட்டு ராக்ஷஸ ஸத்ரம் என்னும் யாகம் செய்தார். அதில் தனது பிதாவான சக்தியை நினைத்துக்கொண்டு முதிர்ந்த இளைய பால்ய ராக்ஷசர்களை அந்த யாகத்தில் எரிக்க ஆரம்பித்தார். இம்முறை வசிஷ்டர் பராசரைத் தடுக்கவில்லை.
முப்புறமும் எரிகின்ற அக்னிகளின் முன்னே நான்காவது அக்னியாக ஜொலித்தார் பராசரர். சிறந்த புத்திமானாகிய அத்ரி முனிவர் அந்த ராக்ஷச ஸத்ரத்தை நிறுத்துவதற்காக வந்தார். அவருடன் புலஸ்தியர் புலகர் க்ரது என்ற முனிசிரேஷ்டர்களும் சேர்ந்து வந்தார்கள். புலஸ்தியர் பராசரரிடம் அந்த ஸ்த்ரத்தை நிறுத்துவதற்காகப் பேசினார்.
“புத்திரனே! அறியாதவர்களும் நிரபராதிகளுமான ராக்ஷசர்களை அழிப்பதினால் நீ சந்தோஷப்படுகிறாயா? தபஸ்விகளான பிராம்மணர்களுக்கு இது தர்மம் அல்லவே. தம்மிடத்தில் உண்டான கோபத்தினால் சக்தி கொல்லப்பட்டார். விஸ்வாமித்திரர் ஏவிய ராக்ஷசனான கல்மாஷபாதனால் பக்ஷிக்கப்பட்ட வசிஷ்ட புத்திரர்கள் தங்களைக் காத்துக்கொள்ள முடியாமல் மரணமடையவில்லை. இந்தத் தேகம் போய் வேறு தேகம் வரட்டும் என்றுதான் பிதிர்லோகம் சென்றார்கள். கல்மாஷபாதனும் ஸ்வர்க்கம் ஏறி விட்டான். அனைவரும் அங்கே சந்தோஷமாக இருக்கிறார்கள். நீ இந்த யாகத்தை விட்டுவிடு” என்று அறிவுரை கூறினார்.
அங்கு குழுமியிருந்த மற்ற முனிவர்களும் இதை ஆமோதித்தார்கள்.
பராசரர் அந்த ஸத்திரத்தை முடித்தார். எல்லா ராக்ஷசர்களையும் சம்ஹரிக்க வளர்க்கப்பட்ட அந்த யாகத் தீயை இமயமலையின் வடபுறத்தில் உள்ள பெருங்காட்டில் கொட்டிவிட்ட்டார். அந்த அக்னி இன்னமும் அவ்விடத்தில் எப்போதும் ராக்ஷசர்களையும் மரங்களையும் கற்களையும் சாப்பிட்டுக்கொண்டு பர்வகாலந்தோறும் காணப்படுகிறது.
சக்திபுத்திரரான பராசரர் விஸ்வாமித்திரர் மீது கோபம் கொண்டு அவரை வதம் செய்வதற்காக ஒரு யாகம் வளர்த்தார். விஸ்வாமித்திரரைக் காப்பாற்றும் பொருட்டு அந்த அக்னியை ஸுப்ரமண்யர் விழுங்கினார்.
[முருகப்பெருமான் விஸ்வாமித்திரரைக் காப்பாற்றிய இந்த இடம் மஹாபாரதத்தில் வருகிறது. வாய்பிளந்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். நாளை தொடரும்..]

வசிஷ்டரின் தற்கொலை முயற்சி



காமதேனுவின் “ம்மா...” என்ற உரத்தக் குரலுக்கு அந்த வனமே நடுங்கியது. விஸ்வாமித்திரரின் சேனை பயந்தது. அவர்களை துரத்த ஆரம்பித்தது. வனமெங்கிலும் கூச்சல் எதிரொலித்தது. சாட்டையாலும் தடிகளாலும் அதை அடித்தார்கள். கோபம் உச்சத்தில் ஏற அதன் வால் தீப்பிடித்தது போல பற்றிக்கொண்டு பெரும் நெருப்பு மழையை அங்கே பொழிந்தது. நந்தினியை அடிக்கப் பக்கத்தில் வந்தவர்கள் பற்றிக்கொண்டு எரிந்தார்கள். அந்த வனமே தகித்தது. அநேக மரங்கள் தீப்பிடித்து திகுதிகுவென்று எரிய ஆரம்பித்தன.
அதன் மேனியின் பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு வீரர்கள் போன்றவர்கள் தோன்றி களத்தில் ஆயுதஙக்ளோடு குதித்தார்கள். அங்கிருந்த விஸ்வாமித்திரரின் சேனை கதிகலங்கியது. நந்தினியிடமிருந்து உருவாக்கப்பட்ட அந்த வீர சேனை விஸ்வாமித்திரரின் சேனையை சிதறடித்தது. காமதேனுவால் விஸ்வாமித்திரரின் சேனை ஜெயிக்கப்பட்டது. அவர் முகத்தில் கோபச்சுடர் தெறித்தது.
நந்தினி விஸ்வாமித்ர சேனைகளில் ஒருவரையும் கொல்லவில்லை. அவர்கள் அனைவரையும் மூன்று யோஜனை தூரம் விரட்டிவிட்டது. தனியாளாய் கோபக்கனல் தெரிக்க வில்லோடு நின்றார் நெடிய விஸ்வாமித்திரர். எண்ணெற்ற பாணங்களை ரிஷி ஸ்ரேஷ்டரான வசிஷ்டர் மீது பொழிய ஆரம்பித்தார். அந்த அஸ்திரங்கள் பிரளய காலத்தில் பொங்கி வரும் சூரிய ரஸ்மிகளைப் போல நாலா பக்கமும் ஜ்வாலைகளை வாரி இறைத்துக்கொண்டு வந்தது.
அம்பு மாரி தன்னை நோக்கி வந்ததை வசிஷ்டர் தனது தண்டத்தால் அலட்சியமாக தட்டிவிட்டார். விஷமமாகச் சிரித்தார். விஸ்வாமித்திரருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. க்ஷத்ரிய குலத்துக்கே அவமானமாக நினைத்து உள்ளுக்குள் புழுங்கினார்.
“காதி புத்திரனே! இன்னும் ஏதேனும் பாணம் மீதம் இருக்கிறதா? நான் அப்படியே நிற்கிறேன். ஏவு பார்க்கலாம்” என்று சவால் விட்டார்.
தலை குனிந்து நின்றார் விஸ்வாமித்திரர். ஆயிரமாயிரம் சேனைகள் இருந்தும் அஸ்திரங்கள் பிரயோகிக்கத் தெரிந்தும் பிரம்மதேஜஸ்வியாக இருக்கும் வசிஷ்டரிடம் தோற்றுவிட்டோம் என்று புரிந்துகொண்டார்.
“க்ஷத்ரியனுடைய பராக்கிரமம் பிரம்மதேஜஸின் முன் நில்லாது. செல்லாது.” என்று ஒப்புக்கொண்டார். பிரம்மதேஜஸின் பலாபலன்களையும் க்ஷத்ரியனின் பராக்கிரமத்தையும் தராசுத்தட்டில் வைத்தால் பிரம்மதேஜஸின் எடை அதிகம் காட்டும். ஆகையால் தவவலிமையே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தவராக ராஜ்ஜியத்தைத் துறந்தார். தவமியற்ற வனம் ஏகினார்.
தனது தபோவலிமையால் பிரம்மதேஜஸ் பெற்றார். ஜ்வலிக்கின்ற தேஜஸ் நிரம்பிய பிராமணத்தன்மையை அடைந்தார். இந்திரனும் ஸோமரஸம் பானம் செய்யுமளவிற்கு உயர்ந்தார்.
இதுவே ராஜரிஷி பிரம்மரிஷியான கதைக்கான பூர்வாங்க சரித்திரம்.
**
“அங்காரபர்ணா! இதற்குப்பிறகு வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் பகை தொடர்ந்ததா? விஸ்வாமித்திரர் ஏதாவது பழி வாங்கினாரா? எனக்கு பூர்ணமாகச் சொல்” என்று கேட்டான் அர்ஜுனன். ஸ்வயம்வரத்துக்குச் செல்வோமா மாட்டோமா என்று நால்வரும் குந்தியும் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தக் கந்தர்வனும் மிகவும் சுவாரஸ்யமாக அடுத்த கதைகளை அடுக்கத் துவங்கினான்.
“பார்த்தனே! இப்போது நான் சொல்லப்போவது வசிஷ்டரின் சரித்திரம். கேள்”
இக்ஷ்வாகு வம்சத்து அரசன் கல்மாஷபாதன். ஒப்பற்ற பராக்கிரமம் படைத்தவன். வீரன். வில்லாளி. ஒரு சமயம் வனம் புகுந்து மான் பன்றி என்று அடித்தது போதாதென்று ஏகத்துக்கும் காண்டாமிருகங்களையும் வேட்டையாடினான். விஸ்வாமித்திரர் அவனுக்கு யாகம் செய்விக்கிறேன் என்று ஏற்கனவே தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
மிகவும் அதிகமாக வேட்டையாடியதால் களைப்புற்ற கல்மாஷபாதன் ஒரு ஒற்றையடிப்பாதையில் நடந்து வந்துகொண்டிருந்தான். எதிரில் வசிஷ்டரின் நூறு புத்திரர்களுள் மூத்தவரான சக்தி நடந்து வந்துகொண்டிருந்தார். கல்மாஷபாதன் அவரைப் பார்த்து “ம்... இந்த வழியை விட்டு விலகும். ம்..ம்.. நகருங்கள்.” என்று அதட்டினான்.
“மஹாராஜா! இது என் வழி. கிழவன், பயந்தவன், அரசன், ஸ்நாதகன், பெண், ரோகிஷ்டன், கலியாணப் பிள்ளை, வண்டிக்காரன் இவர்களுக்கு வழிவிடவேண்டும். இதில் சிலர் அரசனுக்கு விடவேண்டும். இன்னும் சிலருக்கு அரசன் வழிவிடவேண்டும். அரசன் பிராமணனுக்கு வழிவிட வேண்டும் என்று எல்லா தர்மங்களிலும் இருக்கிறது. ஆகவே நீர் வழியை விடும்” என்று உறுதியான குரலில் சொன்னார்.
வழிவிடும் சர்ச்சை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
“நீ விடு.. நீ விடு..” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள். பின்னர் சினம் கொண்ட கல்மாஷபாதன் சக்திரிஷியைக் கசையால் அடித்தான். வசிஷ்ட புத்திரருக்கும் கோபம் வந்தது.
“ஒரு ரிஷியை ராக்ஷசனைப் போல அடிக்கிறாயே! நீ ராக்ஷசனாகி நர மாம்ஸம் தின்பதில் ஆசை ஏற்பட்டு இந்தப் புவி எங்கும் திரிவாய்” என்று சபித்துவிட்டார்.
ஏற்கனவே அந்த கல்மாஷபாதனின் புரோகிதராக இருப்பதில் விஸ்வாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் விரோதம் இருந்துவந்தது. சக்தி ரிஷி சபித்தபிறகுதான் கல்மாஷபாதனுக்கு அவர் வசிஷ்ட புத்திரர் என்பது தெரியவந்தது. அந்த சமயத்தில் அந்தப் பக்கமாக விஸ்வாமித்திரர் வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் நடுவழியில் நிற்பதைப் பார்த்து காற்றோடு காற்றாக மறைந்து அந்த வழியைத் தாண்டிச் சென்றுவிட்டார் .
கல்மாஷபாதன் சக்தி ரிஷி சாபம் கொடுத்தவுடன் செய்வதறியாது திகைத்து அவரது காலில் தஞ்சமடைந்தான். அவர்களைத் தாண்டி அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்த விஸ்வாமித்திரர் இதைப் பார்த்துவிட்டார். வசிஷ்ட புத்திரன் காலில் விழும் கல்மாஷபாதனைத் தண்டிப்பதற்காக அவன் மீது ஒரு ராக்ஷசனை ஏவினார். கிங்கரன் என்னும் ராக்ஷசன் கல்மாஷபாதன் மேல் ஆவேசமானான்.
தன்னை ஒரு ராக்ஷசன் பிடித்திருக்கிறான் என்று தெரிந்தும் அந்த அரசன் புத்தியினால் அடக்கப்பட்டு அமைதியாக தனது ராஜ க்ருஹத்துக்கு திரும்பினான் .தன்னுடைய அரண்மனை வாசலில் ஒரு பிராமணன் கையிரண்டையும் ஏந்திக் கொண்டு பிக்ஷைக்காக நின்றுகொண்டிருந்தான். ஏற்கனவே காலையில் வனத்துக்கு வேட்டையாட வந்த போதே தனக்கு மாமிஸம் வேண்டும் அன்று அந்த பிராமணன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான்.
“நீ இங்கேயே காத்திரு! நான் வேட்டைக்குப் போகிறேன். வந்து உனக்கு மாமிசம் தருகிறேன்” என்று வாக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்தான். அரசன் இரவில் திரும்பினான். அந்தப் பிராமணனைப் பார்த்துக்கொண்டே அரண்மனைக்குள் சென்றுவிட்டான். பின்னர் நேரே அந்தப்புரம் சென்றான். மகிழ்ச்சியாக இருந்தான். நள்ளிரவில் வாசலில் மாமிசம் பிச்சையெடுத்து நிற்கும் பிராமணன் நினைவு வந்தது. உடனே சமையற்காரனை அழைத்தான்.
”இங்கே ஒரு பிராமணன் அன்னம் வேண்டி நிற்கிறான். மாமிசத்துடன் கூடிய அன்னத்தை அவனுக்கு அளி” என்று உத்தரவிட்டான்.
அந்த நேரத்தில் மாமிசம் எப்படி கிடைக்கும்? வெளியே சென்று திரும்பிய அந்த சமையற்காரன் கல்மாஷபாதனிடம் மாமிசம் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தான்.
“மனித மாமிசமாவது அவனுக்குப் போஜனம் செய்துவை” என்று பலமுறை அழுத்திக் கூறி சமையற்காரனை மீண்டும் விரட்டினான் கல்மாஷபாதன்.
கொல்லத்தக்கவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொல்பவர்களின் இடம் தேடிச் சென்ற சமையற்காரன் அங்கிருந்து நர மாமிசத்தைக் கொண்டு வந்து சமைத்துக் காத்திருக்கும் பிராமணனுக்கு இட்டார்கள். அவன் தனது யோக சிருஷ்டியினால் அந்த அன்னம் புசிக்கத்தக்கதன்று. அது நரமாமிசம். தெரிந்துகொண்டான்.
“அதமனான அரசன் நான் உண்ணத்தகாத உணவை எனக்களித்தான். ஆகையால் முன்பே சக்தி சாபமிட்டது படி மனிதர் மாமிசம் உண்பவனாகத் திரிவான்” என்று வசிஷ்ட புத்திரரின் சாபத்தை உறுதிசெய்தான்.
இரண்டாம் தரம் அந்த சாபத்தை வாங்கிய பின் அது உறுதியாகி கல்மாஷபாதன் உள்ளேயிருந்த ராக்ஷசன் பலம் பெற்றான். ராக்ஷசனாக வெகுகாலம் திரிந்தான். பலகாலத்திற்குப் பின்னர் அவன் சக்தி ரிஷியை ஓரிடத்தில் சந்தித்தான். அவரால்தான் ராக்ஷசனாகத் திரிகிறோம் என்று பெரும் கோபம் கொண்டு ஒரு புலியானது பசுவை அடித்துச் சாப்பிடுவது போல சக்தி ரிஷியை சாப்பிட்டு ஏப்பம் விட்டான்.
விஸ்வாமித்திரர் ராக்ஷசனான கல்மாஷபாதனை மீண்டும் மீண்டும் வசிஷ்ட புத்திரர்கள் மேலே ஏவி விட்டு அனைவரையும் கல்மாஷபாதனே தின்னும்படி செய்தார்; தனது புத்திரர்களை அழித்தவர் விஸ்வாமித்திரர்தான் என்று தெரிந்து கொண்டும் வசிஷ்டர் அவரை ஒன்றும் செய்யவில்லை. மாறாக மனம் ஒடிந்தார்.
நூறு புத்திரர்களையும் பறிகொடுத்த சோகம் தாங்காமல் இமயமலையின் உச்சியில் இருந்து குதித்தார். பஞ்சு போல பறந்துவந்து தரையை அடைந்தார். கீழே விழுந்ததும் எழுந்து தனது அங்க அவயங்களைப் பார்த்துக்கொண்டார். ஏதும் ஆகவில்லை. பின்னர் செம்மையாக எரிந்து கொண்டிருந்த அக்னியில் பாய்ந்தார். துளிக்கூட சுடாமல் வெளியே வந்தார். வருத்தம் மேலோங்கிட கழுத்தில் ஒரு கற்பாறையைக் கட்டிக்கொண்டு சமுத்திரத்தில் இறங்கினார். அழகாக அலைகளால் அடிக்கப்பட்டு உயிரோடு கரை ஒதுங்கிவிட்டார். தனது உயிர்கூட போகமாட்டேன் என்கிறதே என்ற வருத்தத்தோடு தனது ஆஸ்ரமம் திரும்பிவிட்டார்.
புத்திரர்கள் இல்லாத ஆஸ்ரமத்தில் தான் மட்டும் வசிக்க இஷ்டமில்லாமல் மீண்டும் பிராணஹத்தி செய்து கொள்வதற்காக ஓடி வந்தார். அப்போது கார்காலத்தில் புதுஜலம் நிரம்பி கரையினுள்ளே புகுந்து மரத்தை இழுத்துக்கொண்டு வேகமாகச் செல்லும் நதியினைப் பார்த்தார். தனது சரீரத்தை கயிற்றினால் கட்டிக்கொண்டு அந்த நதியில் மூழ்கினார். கொஞ்ச தூரத்தில் அவருடைய கட்டுக்களை அவிழ்த்து கரையில் இழுத்துப் போட்டுவிட்டு சென்றுவிட்டது. அவரது கட்டுக்களை விடுவித்ததால் விபாசை என்று அந்த நதிக்குப் பெயர் வைத்தார் வசிஷ்டர்.
கொடிய முதலைகள் நிரம்பிய நதிக்குச் சென்று அங்கும் விழுந்தார். அந்த பிரம்மரிஷியை அக்னிக்கு ஒப்பாக நினைத்த அந்த நதியும் நூறு பிரிவுகளாகப் பிரிந்து ஓடியது. அதனால் அதற்கு சதத்ரு என்ற பெயர் பெற்றது. அதுவும் வரை தரையில் பிடித்துத் தள்ளிவிட்டு ஓடியது. பல மலைகள் பல தேசங்கள் சென்றார். மனதின் சஞ்சலம் அடங்கவில்லை. கடைசியாக தனது புத்திரன் சக்தியின் மனைவியும் தனது மருமகளுமான அதிருஸ்யந்தி தனியாக இருக்கிறாள் என்கிற நினைவு வந்து ஆஸ்ரமம் அடைந்தார்.
கனிகளுக்காகவும் தர்ப்பைப் புல் போன்றவைகளை சேகரிக்கவும் வசிஷ்டரும் அதிருஸ்யந்தியும் காட்டுக்குள் சென்றார்கள். அங்கே வேதம் ஓதும் குரல் ஒன்று கேட்டது. சுற்றும் முற்றும் யாருமில்லை. ஆனால் சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம், கல்பம் இவற்றினால் அலங்கரிக்கப்பட்ட வேதம் ஓதுகிற குரலைக் கேட்டார். அதுவும் சமீபத்தில் கேட்டது.
“மகளே! யாரது நம் பின்னே வருகிறார்கள்?” என்று வனத்தில் ஒரு குட்டி நீரருவி கடக்கும் போது கேட்டார் வசிஷ்டர்.
“நான் ஒருத்திதான் வருகிறேன்”
“இல்லையம்மா. வேதம் ஓதும் குரல் கேட்கிறதே! அதுவும் சக்தி வேதாத்தியயனம் செய்வது போலவே கேட்கிறதே” என்று கேட்டார் வசிஷ்டர்.
“முனி ஸ்ரேஷ்டரே! ஆமாம்.உமது மகன் சக்தியின் கர்ப்பம் என் வயிற்றில் உண்டாகியிருக்கிறது. இந்த வயிற்றிலேயே இந்தக் கர்ப்பம் வேதாத்தியயனம் செய்ய ஆரம்பித்து பன்னிரண்டு வருஷங்கள் ஆகின்றன” என்றாள் அதிருஸ்யந்தி.
“ஆஹா! சந்தானம் இருக்கிறது” என்று மகிழ்ந்தார் வசிஷ்டர்.
நிர்ஜனமான அந்த அடர்ந்த காட்டில் வசிஷ்ட ரிஷியும் அவரது மருமகளும் மட்டும் வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அந்த கரும் பாறையில் யாரோ அமர்ந்திருப்பது தெரிந்தது. அவர்களது நடை கொஞ்சம் மெதுவானது. அது யார்? என்று இருவரும் கேள்வியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கும் போது அந்த உருவம் எழுந்திருந்து வசிஷ்டரை.......
அது யார்? என்று நாளை பார்க்கலாம்...

வசிஷ்டர் மஹாத்மியம்



ஸம்வரணன் புதுத் தெம்பு வந்தவனாய் எழுந்து நின்றான். மலைச்சரிவிலிருந்த அந்த வனத்தில் தலையைத் தூக்கிப் பார்த்தால் சூரியன் தெரியும் இடத்திற்கு நடந்து வந்தான். அன்னாந்து சூரியனைப் பார்த்துக் கொண்டு தவமியற்றத் துவங்கினான். அப்படித் தவமியற்றும் போது மனதில் வசிஷ்டரை நினைத்துக்கொண்டான். இரவும் பகலும் ஒரே நினைவாக நின்றுகொண்டிருந்தான். பன்னிரெண்டாவது தினம். வசிஷ்டர் நேரே தோன்றினார்.
மூடிய கண்களைத் திறக்காமல் தவத்தில் இருந்தான் ஸம்வரணன். தனது திவ்யஞானத்தினால் அவனது மனம் தபதியினால் அபகரிக்கப்பட்டது என்பதை அறிந்துகொண்டார் வசிஷ்ட ரிஷி. இருந்தாலும் அவனது விருப்பத்தை அறிந்துகொள்ள அவனருகே சென்றார்.
“இந்தத் தவத்தினால் நீ அடைய விரும்பது என்ன?” என்றார்.
“தபதி எனும் பேரழகியைக் கண்டேன். அவளை மணம் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்”
உடனே அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே வசிஷ்டர் நின்ற கோலத்திலேயே விண்ணை நோக்கி காற்றிலே ஏற ஆரம்பித்தார். அந்த பிரம்மரிஷி ஒரு நொடியில் லக்ஷம் யோஜனை தூரம் சென்றார். பின்னர் சூரியனைப் பார்க்க நின்று கொண்டு
“நான் வசிஷ்டன்”
”மஹரிஷியே! உமக்கு என்ன தேவையோ அதை நான் தருவேன். கேளும்”
வசிஷ்டர் உடனேயே ஸம்வரணனுக்காக பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்று ஆரம்பிக்கவில்லை. முதலில் சூர்யபகவானைத் துதித்தார்.
“கிரஹங்களுக்கு அதிபதியே! ஜனனமில்லாதவரே! உலகத்தின் பெருவிளக்கே! எல்லாப் பிராணிகளுக்கும் அந்தராத்மாவே! உலகங்களுக்கு ஒரு கண்ணாக இருப்பவரே! மூன்று வேத ரூபியே! முக்குணங்களாலாகிய சரீரங்களைத் தரிப்பவரே! ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வர ஸ்வரூபியே! மஹா தயாளுவே! ஞானத்திற்கு நிதியான ஸவிதாவை நமஸ்கரிக்கிறேன்”
சூரியன் குளிர்ந்து போனான்.
“உம்மால் துதிக்கப்பட்ட நான் இப்போது உமக்கு வரம் கொடுக்கும் ஸ்திதியில் இருக்கிறேன். இப்போது உம்மால் சொல்லப்பட்ட இந்த துதி என்னிடம் பக்தி கொண்டவர்கள் பூஜை செய்வதற்குரியது. இதை பூஜிப்பவர்களுக்கு நான் வரம் கொடுப்பேன். நீர் கேளும்”
உள்ளமும் குளிர்ந்து சிரித்தான் சூரியன்.
“ஸாவித்ரிக்கு இளையவளான இந்த தபதியை ஸம்வரண ராஜாவுக்காக பெண் கேட்டு வந்திருக்கிறேன். அவன் தர்மாத்மா. உயர்ந்த புத்தியுள்ளவன். பெரும் கீர்த்தி படைத்தவன்” என்று வேண்டி நின்றார் வசிஷ்டர்.
“அரசர்களில் சிறந்தவன் ஸம்வரணன். பெண்களில் சிறந்தவள் தபதி. கொடுக்காமல் இருக்க முடியுமா? தருகிறேன்” என்றான் உள்ளன்புடன் சூரியன்.
பன்னிரண்டு இரவுகள் சமாதி நிலையில் காத்திருந்தான் ஸம்வரணன். பின்னர் விண்ணில் வசிஷ்டர் இறங்கிவருவது தெரிந்தது. அவருடன் கூடவே தபதியும் வந்தாள். ஸம்வரணன் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. ஆகாயத்தில் இருந்து மின்னல் துண்டொன்று நழுவியது போல பிரகாசமாக தபதி வந்திறங்கினாள். வசிஷ்டர் அவளை ஸம்வரணனுக்கு பாணிக்கிரஹணம் செய்துவைத்தார்.
தபதி கிடைத்த மகிழ்ச்சியில் அவனுக்கு நாடு திரும்ப இஷ்டமில்லை. அந்த மலைச்சாரல் வனத்திலேயே காலத்தை இன்பமாகக் கழிக்க எண்ணி அவனது அமைச்சனையே ராஜ்ஜியத்தை ஆளச் சொன்னான். பன்னிரண்டு வருஷ காலம் தபதியுடன் அந்த வனத்தில் ரமித்திருந்தான்.
அந்த பன்னிரண்டு வருஷகாலமும் ஸம்வரணனின் தேசத்தில் இந்திரன் மழையை வர்ஷிக்கவில்லை. வறட்சியில் பஞ்சம் ஏற்பட்டது. செல்வமில்லாததால் எல்லோரும் சண்டையிட்டுக்கொண்டனர். வீடு விட்டு தேசாந்திரியாக அலைந்தவர்கள் அடித்துக்கொண்டு இறந்தார்கள். நாடெங்கும் வீதிகளில் பிரேதங்கள் கிடந்து யமபுரம் போல ஆனது.
வசிஷ்ட மஹரிஷிக்கு ஞானதிருஷ்டியில் இது தெரிந்தது. அவர் ஸம்வரணனை கல்யாணம் செய்து விட்டுவிட்டு வந்த காட்டிற்குச் சென்றார். அவனைத் தபதியுடன் மீண்டும் நகரத்திற்கு அழைத்து வந்தார். நகரத்தின் எல்லையில் அவன் தபதியுடன் கால் வைத்ததும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது. பாளம் பாளமாக வெடித்திருந்த நீர் நிலைகள் நிரம்பின. பயிர்கள் செழித்தன. ஊர் மலர்ந்தது.
அந்த ஸம்வரண ராஜன் தபதியுடன் பன்னிரண்டு வருஷகாலம் யாகங்களும் ஹோமங்களும் செய்து தேவாதிதேவர்களை திருப்தியடைய வைத்தான்.
**
அர்ஜுனன் இந்தக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த போது கங்கைக்கரையில் விடிந்திருந்தது. அங்காரபர்ணன் அலுக்காமல் கதை சொல்லிக்கொண்டிருந்தான். ஸம்வரணன் கதையை இவ்வாறாக முடித்தான்.
“அர்ஜுனா! அந்த தபதிக்கும் ஸம்வரணராஜனுக்கும் குரு என்பவனைப் பெற்றான். அந்த குருவம்சத்தில் நீ வந்ததால் உன்னை தாபத்யன் என்றேன்”
ஒருமுறை தூங்கி எழுந்த குந்தியும் நகுலசகதேவர்களும் காட்டினுள் சென்று சில கனிகளைப் பறித்து வந்தார்கள். யுதிஷ்டிரரும் பீமனும் பாஞ்சால தேசத்து ஸ்வம்வரத்துக்குப் எப்போது செல்லப்போகிறோம் என்ற ஆவல் கண்களில் மிதக்க உட்கார்ந்திருந்தார்கள். அர்ஜுனன் மீண்டும் அங்காரபர்ணன் என்ற சித்ரரதனாகிய கந்தர்வனிடம் மீண்டுமொரு கேள்வி கேட்டான்.
“கந்தர்வனே! எங்கள் குரு வம்சத்து ராஜாவுக்கு புரோஹிதராக இருந்த வசிஷ்டர் இருந்தார் என்ற கதையைச் சொன்னாய். அவருக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? அவர் எப்படிப்பட்டவர்?”
சித்ரரதன் அர்ஜுனனின் ஆர்வத்தை மெச்சினான். அவனுக்கு வசிஷ்டரின் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.
“அர்ஜுனா! வசிஷ்டர் பிரம்மாவின் மானஸ புத்திரர். வருணனுடைய வீரியத்திலிருந்து பிரம்மாவின் அனுக்கிரஹத்தால் பிறந்தவர். வசிஷ்டர் என்றால் இந்திரியங்களை ஜெயித்தவர் என்பது பொருள். அவர் அருந்ததியின் பர்த்தா. மனிதர்களால் வெல்லப்படாத காமக்குரோதங்கள் வசிஷ்டரால் எப்படி வெல்லப்பட்டதோ அதுபோலவே அவரது எதிரிகளையும் அவர் ஜெயித்தார். விஸ்வாமித்ரர் செய்த பிழைகளை பொறுத்துக்கொண்டு குசிக வம்சத்தவர்களை அழிக்காமலிருந்தார். புத்திரசோகம் தாக்கியபோதும் விஸ்வாமித்ரரை அழிக்கும் வல்லமையிருந்தும் அடங்கியிருந்தார். இக்ஷ்வாகு வம்சத்தவர்கள் வசிஷ்டரைச் சேர்ந்து இப்புவனியை அடைந்தார்கள்.”
கனியைப் புசித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தவர்கள் கங்கை நீரை அள்ளி கைகளைத் துடைத்துக்கொண்டு நடந்தபடி சம்பாஷித்தார்கள்.
“பாண்டவ ஸ்ரேஷ்டனே! அந்த ப்ரம்மரிஷி ராஜஸ்ரேஷ்டருக்கெல்லாம் ப்ருஹஸ்பதி போல யாகங்களை செய்தார். வேதமும் சாஸ்திரமும் தர்மம் தெரிந்தவராகிய அவரை புரோஹிதராக வரித்தபின்னர் ராஜாக்கள் அனைத்து சௌபாக்கியங்களையும் அடைந்தார்கள். ஆகையால் அது போல ஒரு புரோஹிதரை உங்களுக்காக அமர்த்திக்கொள்ளுங்கள். பூமியை ஜெயிக்க விரும்பிய அரசன் இதுபோன்ற பிராமணனை தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும்”
இத்தோடு இந்த உரையாடல் முடிந்ததென்று நகுலசகதேவர்களும் குந்தியும் அமர்ந்திருந்த மரத்தடியில் இருந்து எழுந்திருந்தார்கள். யுதிஷ்டிரர் வெகுதூரத்தில் கங்கையில் முங்கி எழுந்திருந்தார். பீமன் கங்கையைக் கலக்கிக் குளித்துக்கொண்டிருந்தான். அர்ஜுனன் மேலும் வசிஷ்டர் பற்றியும் விஸ்வாமித்திரர் பற்றியும் அறியும் ஆவலில் இருந்தான். கந்தர்வனை அவன் லேசில் விடுவதாகயில்லை.
“கந்தர்வனே! என்ன காரணத்தால் வசிஷ்டருக்கும் விஸ்வாமித்ரருக்கும் விரோதம் உண்டாயிற்று?”
“அர்ஜுனா! கான்யகுப்ஜ தேசத்தில் குசிகரின் புத்திரர் காதி ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தார். அவருடைய புத்திரர் விஸ்வாமித்திரர். புஜபலமும் சைன்ய பலமும் மிக்கவராக இருந்தார். அவர் சேனைகளுடன் பெருங்காட்டில் வேட்டையாடிக்கொண்டிருந்தார். அந்த மலை முழுவதிலும் உள்ள வனத்திலிருக்கும் மான்களையும் பன்றிகளையும் விரட்டி விரட்டி வேட்டையாடினார். பசியும் களைப்பும் மிகுந்து நா வறண்டது. தண்ணீராவது எங்கேயாவது கிடைக்குமா என்று காட்டில் அலைந்தபோது வசிஷ்டரின் ஆஸ்ரமம் கண்ணில்பட்டது. தனது சேனையோடும் மந்திரிமார்களோடும் உள்ளே நுழைந்தார்.
விஸ்வாமித்திரர் களைப்புற்று வந்ததினால் வசிஷ்டர் அவருக்கு விருந்தளிக்க எண்ணினார். இத்தனை பேருக்கும் வசிஷ்டரால் என்ன தரமுடியும் என்று மனசுக்குள் எண்ணினார் விஸ்வாமித்திரர். வசிஷ்டரின் ஆஸ்ரமத்தில்தான் காமதேனுவாகிய நந்தினி என்கிற பசு வளர்ந்து கொண்டிருந்தது. வசிஷ்டரே அதை நேரடியாக போஷித்துக்கொண்டிருந்தார்.
“தேனுவே! இந்த ராஜனும் இவரது சேனையும் புசிப்பதற்கு வேண்டியவற்றைக் கொடு” என்று நந்தினியிடம் கட்டளையிட்டார் வசிஷ்டர்.
ஆவிபறக்கும் அன்ன மலை ஒன்றை முதலில் கறந்தது. பருப்பு, துவையல், மோர், ரஸம் ஆகியவைகளை சிறு சிறு குட்டைகள் போல கொடுத்தது. பிறகு தயிர் வாய்க்கால்கள் உருவாகின. பக்கத்திலேயே நெய்க் கிணறுகள் முளைத்தன. சர்க்கரைப் பொங்கல் குளம் போல தாராளமாத் தோன்றியது. கரும்புத் தோட்டத்தை அறுத்துக் கொண்டு வந்து விண்ணையெட்டுமளவிற்கு அடுக்கப்பட்டது. இன்னதென்று இனம் காண முடியாத பக்ஷணங்களும் பானங்களும் குவிக்கப்பட்டன. அமிர்தத்துக்கு ஒப்பான லேகியங்கள் தருவிக்கப்பட்டன. தேன் ஆறு போல பக்கத்தில் ஓடியது. மைரேயம் எனும் உயர்ந்த சாராயம் சிற்றாறாக ஓடியது.
இவையெல்லாம் முடிந்த பிறகு விருந்தினர்களை கௌரவிக்க ரத்னங்களையும் ஆடைகளையும் கொடுத்தது.
விஸ்வாமித்திரரும் அவரது சேனையும் வாய் பிளந்து அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் பரம திருப்தி. நந்தினைப் பற்றி பலவாறாகச் சிலாகித்துப் பேசினார் விஸ்வாமித்திரர்.
“பிராமணரே! நான் பத்துகோடி பசுக்கள் தருகிறேன். போதவில்லை என்றால் எனது ராஜ்ஜியத்தையும் உன் பேரில் எழுதித்தருகிறேன். அந்த நந்தினியை என்னிடம் கொடுத்துவிடும்”
அப்போதே வசிஷ்டர் அவிழ்த்து தன் கையில் கொடுத்துவிடுவார், அதை அழைத்துக்கொண்டு தனது நாட்டிற்கு சென்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் அங்கே நின்றிருந்தார் விஸ்வாமித்திரர்.
“தேவதைகளுக்கும் அதிதிகளுக்கும் பிதிர்க்களுக்கும் எம்மை புரோஹிதராக வைத்து யாகம் செய்பவர்களுக்கும் ஆதாரமாக இந்த நந்தினி என்னோடு இருக்கிறது. உமது ராஜ்ஜியத்தையே இதற்காக என்னிடம் கொடுத்தாலும் இதை உமக்குத் தரலாகாது” என்றார் வசிஷ்டர்.
”முனிவரே! நான் அரசன். க்ஷத்ரியன். நீர் அமைதியாக தவம் செய்யும் பிராமணர். வேதாத்தியயனம் செய்பவர். உமக்கு எதற்கு வீண் பிடிவாதம்? பத்துக்கோடி பசுக்களை வாங்கிக்கொண்டு என்னிடம் அந்த நந்தினியை ஒப்படைத்துவிடுங்கள். நான் பலாத்காரமாக பசுவைக் கொண்டு போக மாட்டேன்” சாந்தமாகவே சொன்னார் விஸ்வாமித்திரர்.
“நீர் க்ஷத்ரியர். சேனை பலம் கொண்டவர். அப்படித்தான் அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்றால் பலாத்காரமாக நந்தியினை கொண்டு போங்கள். ஆட்சேபணையில்லை.” சொல்லிவிட்டு ஒதுங்கி நின்றார் வசிஷ்டர்.
விஸ்வாமித்திரர் ஆசனத்திலிருந்து எழுந்து சென்று நந்தினை இழுத்தார். நகவில்லை. நாலைந்து சேனை வீரர்களைக் கூட்டி வந்து இழுக்கச்சொன்னார். ஊஹும். நகரவில்லை. கசையடி கொடுத்தார்கள். தடிகளால் பலம் கொண்டமட்டும் அடித்தார்கள். ஊஹும். எதற்கும் காமதேனு மசியவில்லை. விஸ்வாமித்திரரின் சேனை முழுவதும் போராடியது. எல்லோரும் அடித்துத் துரத்த முற்பட்ட போது “அம்மா” என்று கதறிக்கொண்டு இங்குமங்கும் ஓடியது.
வசிஷ்டரால் அது படும் பாட்டைக் காணச் சகிக்கவில்லை.
“நந்தினியே! விஸ்வாமித்திரரால் நீ பலவந்தமாக இழுக்கப்படுகிறாய். நீ கதறும் சப்தம் என் மனதைப் பிசைகிறது. பொறுமையுள்ள பிராமணனாகிய நான் இதற்கு என்ன செய்ய முடியும்” என்று கேட்டார்.
“கொடியவர்களாகிய விஸ்வாமித்திரரின் சேனையினால் அடிக்கப்பட்டும் இழுக்கப்பட்டும் சித்ரவதை செய்யப்படுகிறேன். நீர் ஏன் சும்மா இருக்கிறீர்? எதுவும் செய்யக்கூடாதா?”
“நந்தினியே! க்ஷத்ரியர்களுக்கு பராக்கிரமம் வன்மை. பிராமணர்களுக்குப் பராக்கிரமம் பொறுமை. ஆதலால் உனக்கு இஷ்டமிருந்தால் செல்” என்று ஆஸ்ரமத்திற்குள் நுழைய முனைந்தார்.
“நீர் என்னை விடாவிட்டால் என்னை அவர்கள் பலாத்காரமாக கொண்டு போக முடியாதே” என்று கெஞ்சியது.
“சரி! நந்தினியே நான் உன்னை விடவில்லை. முடிந்தால் இங்கேயே நீ நிற்கலாம்.”
”நிற்கலாம்” என்ற வார்த்தை நந்தினியின் காதுகளில் எட்டியபிறகு அதற்கு புது சக்தி வந்தது. கோபத்தினால் கண்கள் சிவந்தது. அடுத்தது அது என்ன செய்யப்போகிறதோ என்று விஸ்வாமித்ர சேனை பயந்தது.
நந்தினி அடுத்தது என்ன செய்யும் என்பதை நாளை பார்க்கலாம்.

Saturday, December 16, 2017

வஸுக்களுக்கு வசிஷ்டர் இட்ட சாபம்

”கங்காதேவி உனது புத்திரனை நான் பர்த்தாவாக அடையப் போகிறேன்” என்று மறைந்து போன பெண்ணையே நினைத்துக்கொண்டு அரண்மனை சென்றான் பிரதீபன். ஏற்கனவே வயதாகியிருந்த பிரதீபனும் அவனது மனைவியும் புத்திரனை விரும்பி தவம் இருந்தார்கள்.

பிரதீபனின் பாரியை கர்ப்பமுற்றாள். பத்தாவது மாதத்தில் குழந்தை பிறந்தது. மஹாபிஷக் அவர்களுக்கு புத்திரனாகப் பிறந்தான். பிரதீபனுக்கு முதுமையில் அந்தக் குழந்தை பிறந்ததால் சந்தனு என்று அழைக்கப்பட்டான். (சம்=சாந்தமானபோது; தனு=உண்டாக்கப்பட்டவன்). தனுர்வேதத்திலும் வேதங்களிலும் உயர்ந்த ஞானத்தை அடைந்தான். யௌவனம் எட்டினான்.

வெற்று மார்போடு கங்கைக்கரையில் நின்றுகொண்டிருந்தான் பிரதீபன். சந்தனு ஒரு தேரில் வந்து இறங்கினான். பக்கத்தில் கங்கை பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்தது.

“சந்தனு...” என்று அழைத்தான் பிரதீபன். ஆகிருதியானவன் அருகில் வந்து கைகட்டி நின்றான்.

“ஒரு நாள் நான் இதே கங்கைக்கரையில் நான் ஓய்வாக அமர்ந்திருந்தபோது ஒரு தேவலோகத்துப் பெண் வந்தாள். அவள் உனது ஸ்ரேயஸ்ஸுக்காகவும் புத்திரனை பெற வேண்டியும் உன்னிடம் வந்தால் நீ யார்? யாருடைய பெண்? என்றெல்லாம் கேட்காதே. அவள் எந்தக் காரியம் செய்தாலும் அவளை நீ கேள்வி கேட்காதே. இதை என் கட்டளையாக ஏற்றுக்கொள். அவளை திருமணம் புரிந்துகொள்”

இருவரும் அரண்மனை திரும்பினார்கள். பிரதீபன் சந்தனுவிற்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தான். அடுத்த முகூர்த்தத்தில் அவனும் பாரியாளும் வானபிரஸ்தம் கிளம்பினார்கள். சந்தனு சிறப்பாக ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தான். பிரஜைகள் கவலையின்று வாழ்க்கை நடத்தினார்கள். எல்லோருக்கும் பாதுகாப்பாக இருந்தான்.

ஒரு சமயம் தனிமையில் கங்கைக்கரையோரம் நடந்துகொண்டிருந்தான். அப்போது அவனெதிரே உத்தம ஸ்திரீ ஒருத்தி வந்தாள். மெல்லிய ஆடை அணிந்திருந்தாள். முத்துக் கோர்த்தாற்போல பற்கள். சிவந்த அதரங்கள். மின்னலிடை. அன்னநடை. கடைக்கண் பார்வை கட்டி இழுத்தது. அவனை அடித்துப்போட்ட அழகு. அவள் மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்தான் சந்தனு. நேரம் ஆகிக்கொண்டே இருந்தது

அப்ஸரஸ் போலிருந்த கங்கையும் இவனை விழுங்கிவிடுவது போல பார்த்துக்கொண்டேயிருந்தாள். எவ்வளவு நேரம் அப்படி ஒருவரை ஒருவர் குடித்துவிடுவது போல பார்த்தார்கள் என்று கணக்கில் இல்லை. கடைசியில் சந்தனு மௌனத்தைக் கலைத்து

”அழகான இடையுள்ளவே! நீ அப்ஸரஸா? அஸுரப்பெண்ணா? கந்தர்வப்பெண்ணோ? மானிடப் பெண்ணா? நாக கன்னிகையா? நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு மனைவியாகிவிடு. என் தனம் உயிர் இரண்டும் உனக்கு சமர்ப்பணம்”

கங்காதேவி மகிழ்ந்தாள். அவளது உதடு சுழிப்பிலும் பற்கள் தெரிய சிரித்ததிலும் மயங்கினான் சந்தனு.

“ராஜாவே! நீயோ மற்றவர்களோ எந்த வழியிலும் என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டக்கூடாது. நல்லதோ கெட்டதோ... நான் என்ன செய்தாலும் அதை கேள்வி கேட்கக்கூடாது. தடுக்கக்கூடாது. இப்படியிருந்தால் நன் உன்னுடம் இருப்பேன். இதை மீறும் பொழுது உன்னை விட்டுச் சென்றுவிடுவேன். இதற்கு சம்மதமா?” என்று கேட்டாள்.

இரு கண்களையும் காமத்தைக் குழைத்துச் சேர்த்த காதல் மறைத்தது. எல்லாவற்றுக்கும் சரி என்பதைப் போல தலையாட்டினான்.

“உன் பிதாவினால் நான் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டாய். உன்னை நான் பர்த்தாவாக அடைகிறேன்” என்று சந்தனுவுடன் கரம் கோர்த்தாள். பக்கத்திலிருந்த கங்கை ஒரு முறை பொங்கி அடங்கியது போலிருந்தது.

கைபிடித்த கங்காதேவியை தேரில் ஏற்றிக்கொண்டு நகரத்திற்கு விரைந்தான் சந்தனு. மனிதரூபம் எடுத்துள்ள கங்காதேவியுடன் களித்திருந்தான். எப்போதும் அவளது காலடியிலேயே தவம் இருந்தான். அவளும் புணர்ச்சியினாலும் முகமலர்ச்சியினாலும் தினமும் விளையாடி சந்தோஷிக்கச் செய்தாள். அவளது குணங்களினால் ஈர்க்கப்பட்டு சந்தனு போகத்திலேயே திளைத்திருந்தான்.

ருதுஸ்நானம் கழிந்து சந்தனுவுடன் கலந்து கர்ப்பமுற்றாள். நகரமே பட்டமஹிஷியின் பிள்ளைப் பேறு பற்றிப் பேசியது. பிறக்கும் நாளன்று விழா எடுத்துக் கொண்டாட தயாரானது. அழகான ஆண் குழந்தை பிறந்தது. சேடிப்பெண்கள் ஓடிப்போய் சந்தனுவிடம் விஷயம் சொல்லி அந்தப்புரத்துக்குள் அழைத்து வருவதற்குள் குழந்தையின் குரல்வளையைப் பிடித்து அப்படியே தூக்கிச்சென்று கங்கையில் வைத்து அழுத்திக் கொன்று விட்டாள்,.

இதைக் கேள்விப்பட்ட சந்தனு செய்வதறியாது திகைத்தான். இவள் பேயா? பெண்ணா? என்று சந்தேகித்தாலும் அவளிடம் ஏன்? யார்? என்று கேட்டால் தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்று அஞ்சி வாய்பொத்தி பேசாதிருந்தான். காமம் கண்ணை மறைத்தது.

ஒவ்வொரு முறையும் குழந்தை பிறந்தது என்பார்கள், சந்தனு ஓடிப்போய் பார்ப்பதற்குள் கங்கையில் குழந்தையை விட்டுவிட்டு வந்திருப்பாள். சந்தனுவைப் பார்த்தால் ஓடி வந்து கட்டிக்கொள்வாள். ஆனால் சந்தனுவால் ஏனிப்படி செய்தாய்? என்று கேட்க அச்சமாக இருந்தது.

இது போல ஏழு முறை நடந்தது.

எட்டாவது பிள்ளை பிறந்தது. இவள் அதைக் கொல்ல குரல்வளை நோக்கிக் கையைக் கொண்டு போன போது சந்தனு உள்ளே வந்தான்.

“கொல்லாதே! நீ யார்? பெற்ற பிள்ளைகளையே கொல்கிறாயே பாதகி... உன்னை பாபம் வந்து சேரட்டும்” என்று சத்தம் போட்டான்.

“நாம் செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டாய். நாம் இனி சேர்ந்து வாழ முடியாது. நான் கிளம்புகிறேன்”

“சற்று நேரம் நில்! இவ்வளவு நாட்களாக உன்னிடம் கேட்கவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தேன். இப்போதாவது பதில் சொல்லிவிட்டுப் போ. நீ யார்?”

“ராஜாவே! நான் ஜன்ஹு மஹரிஷியின் புத்ரி. கங்கை.”

“எதற்காக குழந்தைகளைக் கொன்றாய்? அந்த பாபக் காரியத்தை ஏன் செய்தாய்?” கேட்டபோது சந்தனுவின் மீசை துடித்தது. நா தழுதழுத்தது.

“அவர்கள் அனைவரும் தேவர்கள். மிகுந்த புண்ணியமும் சக்தியும் கொண்ட அஷ்ட வஸுக்கள். வசிஷ்டருடைய சாபத்தால் மனுஷ்யர்களாகப் பிறந்தார்கள். சாப நிவர்த்திக்காக அவர்கள் என்னிடம் கர்ப்பவாஸம் செய்தார்கள். அவர்களைப் பெற்றதினால் நீயும் அழியா லோகங்களை ஜெயித்தாய். இந்த புத்திரனை கங்காதத்தன் என்று வளர்ப்பாயாக!”

“எட்டு வசுக்களில் எழுவர் சாபம் நீங்கிச் சென்றுவிட்டார்கள். எட்டாவதாகப் பிறந்த இவன் மட்டும் ஏன் மேலுலகம் செல்லவில்லை?”: என்று கேட்டான் சந்தனு.

அரண்மனையின் மேல் மாடத்திற்கு வந்தாள் கங்கை. மன்னன் அவளைப் பின் தொடர்ந்தான். தூரத்தில் கங்காநதி கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே அஷ்டவஸுக்கள் சாபம் பெற்றக் கதையைச் சொல்லத் துவங்கினாள் கங்காதேவி.

“வருணனின் புத்திரர் வசிஷ்டர். அவர் ஆபவர் என்றும் பிரசித்திப் பெற்றார். மேரு பர்வதத்தின் சரிவில் அவரது ஆஸ்ரமம் இருந்தது. வருண புத்திரர் வசிஷ்டர் அந்தச் சரிவில் காய்கனிகள் காய்த்துக் குலுங்கும் நந்தவனத்தில் தவமியற்றிக்கொண்டிருந்தார். தக்ஷ புத்ரி ஸுரபி கஸ்யபரின் மனைவி. அவள் நினைத்தையெல்லாம் கறக்கின்ற சிறந்த பசுவை பெற்றாள். அந்தப் பசுவை தனது ஹோமத்திற்கு தேவைப்படும் பாலைக் கறந்துகொள்வதற்காக வசிஷ்டர் வைத்துக்கொண்டார்.

அந்த தபோவனத்தில் அந்த தேனு சஞ்சரித்துக்கொண்டிருந்தது. அப்போது தேவர்களாகிய வஸுக்கள் அந்தப் பக்கமாக வந்தார்கள். தனது பத்னிகளுடன் அந்த வனத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ப்ரபாஸன் என்ற வஸுவின் பத்னி மடி பெருத்து புஷ்டியாக எல்லா வகையிலும் சிறப்பாக இருந்த அந்த தேனுவை அவனிடம் காட்டினாள்.

“எவ்வளவு அழகாக இருக்கிறது!! பார்த்தாலே மனம் கொள்ளை போகிறது” என்றாள்.

“இந்த தேனு வசிஷ்ட மஹரிஷியுடையது. இதன் சுவையான பாலைக் குடித்தால் பதினாயிர வருஷகாலம் யௌவனம் அழியாமல் வாழலாம்”

இதைக் கேட்ட ப்ரபாஸனின் பத்னிக்குக் கண்கள் ஒளிர்ந்தன. முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. அவள் ப்ரபாஸனைக் கட்டிக்கொண்டு ஒரு விண்ணப்பம் செய்தாள்.

“இந்த கோவை அதன் கன்றோடு தூக்கிச் செல்ல வேண்டும்” என்றாள்.

“ஏன்?” என்று பதற்றத்துடன் கேட்டான் ப்ரபாஸன்.

“பூலோகத்தில் ஜிதவதி என்று என் தோழி இருக்கிறாள். அழகுக்கு அழகானவள். அவளது யௌவனம் கரையாமல் இருக்க இந்த பசுவையும் கன்றையும் அவளுக்குப் பரிசளித்து மகிழ்வேன்” என்றாள்.

[பெண்டாட்டி சொன்னா தட்டக்கூடாது என்பதில் தேவலோகத்துக் கதையும் விலக்கல்ல.]

ப்ருது என்ற வஸுவும் அவன் சகோதரர்களும் ப்ரபாஸனுக்கு உதவி புரிய களம் இறங்கினார்கள்.

அந்த மேரு பர்வத சரிவில் மேய்ந்துகொண்டிருந்த நந்தினி என்ற தேனுவையும் அதன் கன்றையும் சேர்த்துக் கவர்ந்து கொண்டு வந்து தனது மனைவியிடம் கொடுத்து “உன் ஸ்நேகிதிக்குப் பரிசு” என்று சிரித்தான் ப்ரபாஸன்.

அந்த நந்தவனத்தின் மூலையில் தவம் செய்துகொண்டிருந்த வசிஷ்டர் தவம் முடிந்தவுடன் அங்கே மேய்ந்துகொண்டிருந்த நந்தினியைக் காணாது தவித்தார். பின்னர் தன்னுடைய ஞானதிருஷ்டியினால் அஷ்ட வஸுக்கள் அதைக் கவர்ந்து சென்றதைக் கண்டுபிடித்தார்.

“எனது பசுவைக் கவர்ந்து சென்ற அஷ்டவசுக்கள் அனைவரும் பூலோகத்தில் மானிடர்களாக பிறக்கக்கடவது” என்று சபித்தார்.

வசிஷ்டரால் சபிக்கப்பட்டதை அறிந்து அனைவரும் அடுத்த கணம் அவரது காலடியில் கிடந்தார்கள்.பின்னர் எழுந்து நின்று ப்ருது சொன்னான்

“முனிவரே! நாங்கள் இந்தக் களவுக்குத் துணை போனோம். ஆனால் இதைக் கவர்ந்தது ப்ரபாஸன் என்னும் இவன் தான்.. ஆகையால் எங்களை நீங்கள் உங்கள் சாபத்திலிருந்து விடுவிக்க வேண்டும்” என்றார்கள்.

“என்னுடைய வாக்கு பொய்க்காமல் போகாது. ஆனால் நீங்கள் ஏழு பேரும் மண்ணில் பிறந்ததும் உடனே மேலுலகம் வந்தடைவீர்கள். இந்தப் ப்ரபாஸன் மட்டும் நீண்ட காலங்கள் திருமணம் புரிந்துகொள்ளாமல், ஸ்திரீ போகங்களை விட்டு, தன் தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றி வைத்து வாழ்வான்” என்று சாபத்தை திருத்தியமைத்தார்.

அந்த வஸுக்கள் மேலுலகத்தில் என்னைப் பார்த்து என் வயிற்றில் பிறப்பதாகவும் அவர்கள் பிறக்கப் பிறக்க ஜலத்தில் வீசியெறிந்து காப்பாற்றும்படியும் வேண்டிக்கொண்டார்கள். அதன்படி நானும் செய்தேன். இவன் ஒருவன் மட்டும் இந்தப் பூமியில் வெகுகாலம் ஜீவித்திருப்பான். இப்போது இவனை நான் எடுத்துச்செல்கிறேன். இவன் பெரியவனானதும் உன்னிடம் வருவான்.நானும் நீ அழைத்தால் மீண்டும் உன் முன் தோன்றுவேன்”

கங்காதேவி கதையைச் சொல்லிவிட்டு அந்தக் குழந்தையும் தூக்கிக் கொண்டு கங்கையில் இறங்கினாள். அப்படியே நீரோடு கரைந்து கலந்து மறைந்துபோனாள்.

சந்தனு எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்ற ஸ்திதியில் உறைந்து போய் அங்கேயே நின்றிருந்தான். கங்கையின் வேகமான நீரோட்டத்தினால் அங்கே இரைச்சல் நிரம்பியது.


#ஸ்ரீவியாஸ_பாரதம்
#மஹாபாரதம்
#ஆதிபர்வம்
#சந்தனு
#கங்காதேவி
#ஸம்பவபர்வம்
#பகுதி_40