Showing posts with label கல்மாஷபாதன். Show all posts
Showing posts with label கல்மாஷபாதன். Show all posts

Sunday, March 11, 2018

விஸ்வாமித்திரரைக் காப்பாற்றிய ஸுப்ரமண்யர்


அந்த வனாந்திரத்தில் கற்பாறையில் அமர்ந்திருந்த ஒரு கொடிய ராக்ஷசன் வசிஷ்டரை நோக்கி ஆக்ரோஷமாக ஓடிவந்துகொண்டிருந்தான். அதிருஸ்யந்தி பயந்து நடுநடுங்கி அவர் பின் ஒடுங்கினாள்.
“தவ ஸ்ரேஷ்டரே! அந்த ராக்ஷசன் நம்மை கொன்று தின்ன ஓடி வருகிறான். காப்பாற்றுங்கள்...”
“இல்லையம்மா. அவன் அரக்கனல்ல. அவன் இப்பூமியில் புகழ்பெற்ற இக்ஷ்வாகு குலத்து அரசன். கல்மாஷபாதன். எனது புத்ரன் சக்தியின் சாபத்தால் ராக்ஷச குணம் பெற்றான். ”
வசிஷ்டர் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களை நெருங்கிவிட்டான் கல்மாஷபாதன். இருகைகளையும் அவர்களை நோக்கி நீட்டிக்கொண்டே வந்தவனை நோக்கி தனது தண்டத்தைத் தூக்கிக் காட்டி “ஹும்” என்று சீறினார். அவன் கைக்கெட்டும் தூரத்தில் அப்படியே நின்றான். கையிலிருந்த கமண்டலத்திலிருந்து ஜலத்தை வலது கையில் ஊற்றி மந்திரம் ஜெபித்து அவன் முகத்தில் சொத்தென்று அடித்தார்.
அவரது யோக மகிமையால் அவன் சாப நிவர்த்தி பெற்றான். பன்னிரெண்டு வருஷங்களுக்குப் பிறகு ராக்ஷசத்தன்மை நீங்கி வசிஷ்டரை நமஸ்கரித்தான்.
“ரிஷிபுங்கவரே! உங்களுக்கு நான் செய்யவேண்டும். கட்டளையிடுங்கள்” என்று கைகூப்பி எழுந்து நின்றான்.
“கல்மாஷபாதா! காலத்தின் கட்டாயமாக என் புத்திரனை நீ கொன்றாய். இனி உன் ராஜ்ஜியத்தை சிறப்பாக ஆட்சி செய். ஆனால், பிராமணனை மட்டும் ஒருபோதும் அவமதிக்காதே”
“தங்கள் கட்டளைப்படியே பிராமணர்களை பூஜிப்பேன். என்னோடு தாங்களும் அயோத்தி மாநகருக்கு எழுந்தருளி ஆசீர்வதிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
ராஜா சாபம் நீங்கித் திரும்புகிறான் என்ற விஷயம் கேள்விப்பட்டவுடன் நகரம் விழாக்கோலம் பூண்டது. எங்கும் மங்கல வாத்தியங்கள் முழங்கின. வீதிகளில் நீர் தெளிக்கப்பட்டு கோலமிட்டார்கள். எங்கும் வேதகோஷங்கள் கேட்டன. கல்மாஷபாதன் தன் முன்னே வசிஷ்டர் நடக்க ராஜ தோரணையுடன் நகருக்குள் பிரவேசித்தான்.
மதயந்தி என்னும் அவனுடைய மனைவி மிகவும் அழகானவள். குணவதி. ஒருநாள் காம இச்சையில் அவளுடன் சேரப்போன கல்மாஷபாதனை அவள் தடுத்தாள். ராக்ஷசனாக அவன் காட்டில் திரிந்துகொண்டிருந்த போது அவனுக்குக் கிடைத்த சாபம் ஒன்றை அவளுக்கு அவன் சொல்லியிருந்தான். அந்த சாபத்தை அவள் கூறியபின்னர் வசிஷ்டரின் பாதம் பணிந்து தனது குல விருத்திக்காக வேண்டிக்கொண்டான். வசிஷ்டரும் தேவர்கள் போல ஸ்பரிச மாத்திரத்தினாலேயே அந்த அரசிக்கு கர்ப்பம் உண்டு பண்ணினார்.
பின்னர் கல்மாஷபாதனும் மதயந்தியும் அவருக்கு மரியாதைகள் செய்து ஆஸ்ரமத்திற்கு அனுப்பிவைத்தனர்.
*
”சித்ரரதனே! வசிஷ்டர் கல்மாஷபாதன் அரசியுடன் சேர்ந்ததற்கு ஏதோ சாபம் என்றாயே, அது என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாயிருக்கிறேன்”
குந்தியும் ஏனைய சகோதரர்களும் அர்ஜுனன் எப்போது இந்த கந்தர்வனுடன் பேச்சைப் முடித்துக்கொண்டு புறப்படுவான் என்று பெரும் ஆலமரத்தடியில் காத்திருந்தார்கள். எல்லாக் கதைகளையும் “ம்..” போட்டுக் கேட்டுக்கொள்வது போல கங்கை சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது.
*
ராக்ஷச சாபம் பீடிக்கப்பட்டு கல்மாஷபாதன் காட்டினுள் திரிந்துகொண்டிருந்தான். அகோரப்பசி. காய்கனிகள் கூட கிடைக்கவில்லை. அப்போது ஒரு பிராமணன் தனது மனைவியுடன் சேர்ந்துகொண்டிருந்தான். மகிழ்ச்சிக்கடலில் நீந்திக்கொண்டிருந்த அவர்களை ராக்ஷச சொரூபத்தில் இருந்த கல்மாஷபாதன் பார்த்துவிட்டான். அவர்கள் இருவரும் உடனே காட்டினுள் மரச்சருகுகள் காலில் சரசரவென்று மிதிபட வேகமாக ஓட ஆரம்பித்தார்கள். அவன் இலகுவாக அவர்களைப் பிடித்துவிட்டான்.
அந்த பிராம்மணி அவனிடம் கைகூப்பித் தொழுதாள்.
“வேந்தனே! நீ சூர்யகுலத்தில் பிறந்தவன். தர்மம் தவறாதவன். இந்தக் கொடிய சாபத்தினால் இப்படி ஆகிவிட்டாய். ருதுகாலம் வந்த பிறகு சந்ததிக்காக என் கணவனுடன் நான் சேர்ந்திருக்கிறேன். இதை நீ தடுக்கக்கூடாது”
இதைப் பற்றி அவன் துளியும் கவலை கொள்ளவில்லை. ஒரு புலி மானை அடித்துச் சாப்பிடுவது போல அவள் கண் முன்னேயே அந்த பிராமணனை அடித்துத் தின்றான்.
கோபாக்கினியில் தகித்தாள் அந்த பிராம்மணி. அவளது கண்ணீர் தரையில் விழுந்து காய்ந்த சருகுகள் தீப்பற்றி எரிந்தன. கல்மாஷபாதன் திகைத்தான்.
“என் அன்புக் கணவரை என் கண் முன்னே தயை சிறிதும் இல்லாமல் தின்றாய். அயோக்கியனே! அதமனே! நீயும் உன் பார்யாளுடன் கூடிய உடன் மரணம் எய்துவாய்”
கல்மாஷபாதன் செய்வதறியாது நின்றான். கண்ணீர் சொரிய அந்த பிராம்மணி மூச்சிரைக்க பேசினாள்.
“எந்த வசிஷ்ட மகரிஷியின் புத்திரர்களை நீ அழித்தாயோ... அதே வசிஷ்ட மகரிஷியினால் உன் வம்சத்தை விருத்தி செய்யப்போகிறாய்”
அவள் அங்கிரஸ் வம்சத்துப் பெண். வார்த்தையில் சத்தியம் இருந்ததால் சாபம் நிச்சயம் பலிக்கும் என்று உணர்ந்தான் கல்மாஷபாதன்.
ஏற்கனவே அவள் சிந்திய கண்ணீர் தரையில் கிடந்த காய்ந்த சருகுகளை தீ மூட்டிவிட்டிருந்தது. இப்போது சில மரங்களைப் பற்றிக்கொண்டு கொழுந்து விட்டு எரிந்தது அக்னி.
கல்மாஷபாதன் வருத்தமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பக்கத்தில் எரிந்த தீயில் இறங்கிவிட்டாள் அந்த பிராம்மணி.
*
கல்மாஷபாதன் பிராம்மணியிடம் சாபம் பெற்றக் கதையைச் சொல்லிவிட்டு மீண்டும் விட்ட இடத்தில் தொடர்ந்தான் அங்காரபர்ணன் என்னும் கந்தர்வன். அர்ஜுனன் சிந்தையைச் சிதறவிடாமல் இந்தக் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
கல்மாஷபாதனின் பாரியாள் மதயந்தி கர்ப்பம் தரித்து பன்னிரண்டு வருஷகாலம் வரை பிரசவிக்கவில்லை. ஆகையால் மனம் தளர்ந்து பெரிய கல்லை எடுத்து வயிற்றினில் இடித்துக்கொண்டாள். அஸ்மகன் பிறந்தான்.
*
வசிஷ்டரின் ஆஸ்ரமத்திலிருந்த அவரது மருமகள் அதிருஸ்யந்தி ஒரு குமாரனைப் பெற்றாள். தான் இறந்துபோகும் தறுவாயில் வயிற்றிலிருந்தே வேதகோஷமிட்டு அவரைப் பாதுகாத்ததினால் அதிருஸ்யந்தியின் புத்திரனுக்கு பராசரர் என்று பெயரிட்டார். அந்தப் பராசரர் வசிஷ்டரைப் பார்த்து “தந்தையே!” என்று அழைத்தார்.
அதிருஸ்யந்தி அழுதாள். துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது.
“மகனே! இவர் உன் தந்தையின் தந்தை. உனது தாத்தா. உனது தந்தை நடுக்காட்டில் ஒரு ராக்ஷசனால் கொல்லப்பட்டார். அந்த ராக்ஷசனே உன் தந்தையை தின்றுவிட்டான்.
பராசரருக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. எல்லா லோகங்களையும் அழித்துவிடுகிறேன் என்று கிளம்பினார். அப்போது வசிஷ்டர் அவரைத் தடுத்தார். அவரது சினத்தைப் போக்க ஒரு கதை சொன்னார்.
*
”பராசரா! கிருதவீர்யன் என்று ஒரு கியாதி பெற்ற அரசன் இருந்தான். அவன் பிருகு வம்சத்தவர்களாகிய பார்க்கவர்கள் யாகம் செய்விக்க சிறப்பாக ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தான். அவன் ஸோமபானமானவுடன் நிறைய தனங்களை அவர்களிடம் தானம் செய்தான். அவன் ஸ்வர்க்கம் சென்றபின் அவன் குலத்தோருக்கு திரவிய வறட்சி ஏற்பட்டது. அந்த அரசர்கள் பார்க்கவர்களிடம் திரவியங்கள் இருப்பதைக் கண்டு அவர்களிடம் யாசிக்கச் சென்றார்கள்.
க்ஷத்ரியர்கள் திரவியத்தைத் தேடிக்கொண்டு வருகிறார்கள் என்று தெரிந்தவுடன் பார்க்கவர்களில் சிலர் பூமியில் போட்டுப் புதைத்துப் பாதுகாத்தனர். இன்னும் சிலர் பிராமணர்களுக்கு தானம் கொடுத்துவிட்டார்கள். சிலர் க்ஷத்ரியர்களுக்கே கொடுத்துவிட்டார்கள்.
ஒரு சமயம் க்ஷத்ரியன் ஒருவன் தற்செயலாக பார்க்கவர் வீட்டில் நோண்டிப் பார்த்தபொழுது நிறைய திரவியங்கள் கிடைத்தது. அப்போது நிறைய க்ஷத்ரியர்கள் அந்த பெருஞ்செல்வத்தைக் கண்டார்கள். கோபம் மேலிட பார்க்கவர்களை வெட்டிச் சாய்க்க ஆரம்பித்தார்கள் க்ஷத்ரியர்கள். பார்க்கவர்களின் மனைவிகள் பெரும் கவலையையும் பயத்தையும் அடைந்தார்கள்.
தனது பர்த்தாவின் கர்ப்பத்தைத் தாங்கிய ஒருத்திக்கு பயத்தினால் அது வெளிப்பட அதை தனது தொடையில் தாங்கிக்கொண்டாள். இதைக் கண்ட ஒருத்தி கலக்கமடைந்து க்ஷத்ரியர்களிடம் சென்று ரகஸியமாகத் தெரிவித்தாள். அவர்கள் ஒரு கூட்டமாக சேர்ந்துகொண்டு அந்த கர்ப்பத்தை அழித்துவிடுவதற்காகப் புறப்பட்டார்கள்.
அங்கே அந்த பார்க்கவ குல பிராம்மணப் பெண் தனது தேஜஸினால் ஜொலித்துக்கொண்டிருந்தாள். அந்தக் கர்ப்பத்தை அழிப்பதற்காக வந்தவர்களுக்கு எதிரிலேயே அவளது தொடையிலிருந்து கண்ணைப் பறிக்கும் மத்தியான காலத்து சூரியன் போல அந்த கர்ப்பம் வெளிப்பட்டது. அதில் உண்டான ஒளியினால் அவர்கள் அனைவருக்கும் கண் பார்வை பறிபோனது.
க்ஷத்ரியர்கள் கண் பார்வை பறிபோனதில் தடுமாறினார்கள். அந்தப் பிராம்மணியிடம் வேண்டிக்கொண்டார்கள்.
“நாங்கள் இனிமேல் எங்களைத் திருத்திக் கொள்கிறோம். க்ஷத்ரியஜாதியின் க்ஷேமத்திற்காக உன்னிடம் வேண்டுகிறோம். மீண்டும் பார்வையளித்து எங்களைக் காத்தருள்”
“நான் கோபம் கொண்டு உங்கள் கண்பார்வையை பறித்துவிடவில்லை. பிருகு வம்சத்தவனான , தொடையில் ஜனித்த, இந்த ஊருஜன் மிகுந்த கோபத்தில் இருக்கிறான். தனது வம்சத்தவர்களைக் கொன்றவர்களின் பார்வையைப் பிடிங்கிவிட்டான். நீங்கள் பிருகுவம்சத்தவர்களை கொன்ற போது நூறுவருஷ காலம் என் தொடையில் அடக்கி வைத்திருந்தேன். அவனுடைய திவ்ய தேஜஸினால்தான் உங்கள் பார்வை பறிபோனது. ஔர்வனாகிய என் உத்தம புத்திரனையே நீங்கள் உங்கள் பார்வையை மீண்டும் பெற வேண்டிக்கொள்ளுங்கள்” என்றாள்.
அந்த அரசர்கள் அனைவரும் கண் பார்வையின்றி ஊருஜர் இருக்கும் திக்கை நோக்கி நமஸ்கரித்தார்கள்.
“ஔவரே! எங்களுக்கு தயை செய்யும். ரக்ஷியுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்கள். அவரும் அவர்களுக்குத் தயை செய்தார். அரசர்கள் அனைவரும் கண்ணொளி பெற்றார்கள்.
ஆனாலும் ஔர்வரின் ஆத்திரம் அடங்கவில்லை. அனைத்து லோகங்களையும் அழித்துவிட கடும் தவம் செய்தார். தேவாசுர உலகங்கள் கொதிப்படைந்தது. பிதிர்லோகத்திலிருந்த அவரது முன்னோர்கள் அவர் முன் தோன்றினார்கள்.
“ஔர்வனே! உன் கோபத்தை அடக்கு. க்ஷத்ரியர்கள் எங்களை வெட்டி வீழ்த்தும் போது சக்தியில்லாமல் நாங்கள் தடுக்காமல் இருக்கவில்லை. ஆத்மஹத்தி செய்து கொள்ள ஒரு உபாயமாக பார்க்கவன் வீட்டில் திரவியத்தைப் புதைத்து அதை அவர்கள் கண்ணில் படுமாறு செய்தோம். ஆத்மஹத்தி செய்துகொள்பவன் நல்ல பல லோகங்களை அடைகிறான். நாங்கள் அனைவரும் நீண்ட காலம் ஆயுளோடு இருந்தோம். யமனால் எங்கள் உயிரைப் பறிக்க முடியாமல் தவித்தபோது நாங்களாக தேடிக்கொண்ட உபாயம் இது. ஆகையால் க்ஷத்ரியர்களை அழிக்காதே. தவ வலிமையைப் போக்கும் இந்த கோபத்தைக் விடு” என்றார்கள்.
“பிதிர்க்களே! நான் கோபத்தினால் மூன்று லோகங்களையும் அழிப்பதாக பிரதிக்ஞை செய்து உள்ளே அந்த அக்னியை மூட்டிவிட்டேன். பிருகுவம்சத்தவர்கள் அழிந்த போது கதறியதை கர்ப்பப்பையில் அடங்கித் தொடையில் வைத்திருந்த என் தாயிடம் இருந்தபோது கேட்டேன். அந்த ஆவேசம் இன்னும் இருக்கிறது. பாபம் செய்பவனைக் கண்டிப்பவனும் தடுப்பவனும் இருந்தல்தான் பாபம் செய்பவன் எந்த உலகத்திலும் இருக்க மாட்டான். கோபாக்னி என்னுள் கொழுந்துவிட்டு எரிகிறது. அதை வெளியில் விடாமல் இருந்தால் அது என்னை அழித்துவிடும். இப்போது என்ன செய்வேன்?” என்றார்.
பிதிர்கள் நிதானமாக ஔர்வருக்கு அறவுரை பகர்ந்தார்கள்.
“குழந்தாய்! உன் கோபத்தினால் உண்டான அக்னியை ஜலத்தில் விடு. லோகங்கள் ஜலத்தை ஆதாரமாய்க் கொண்டவை. எல்லா ரஸங்களும் ஜலமயம். உலகமே ஜலமயம். கோபத்தினால் உண்டான இந்த அக்னி ஜலத்தை எரித்துக்கொண்டு சமுத்திரத்தில் நிற்கட்டும். உலகம் ஜலமயமானது என்பதால் உலகங்களை அழிப்பேன் என்ற உன் சத்தியமும் காப்பாற்றப்படும்”
பராசரர் வசிஷ்டரைப் பார்த்துக்கொண்டு நின்றார். வசிஷ்டர் மேலும் தொடர்ந்தார்.
”பராசரா! அந்த ஔர்வர் தனது கோபத்தை சமுத்திரத்தில் விட்டார். அதுதான் வடவாமுகாக்கினி என்னும் பெயர் கொண்ட பெருங் குதிரைத்தலையாகி வாயிலிருந்து அக்னியை கக்கி ஜலத்தைக் குடிக்கிறது. ஆகையால் நீயும் லோகங்கள் முக்கியம் என்று அறிந்துகொண்டு அவற்றை அழிக்காமல் இருப்பாய்”
வசிஷ்டர் சொன்னதும் பராசரர் உலகங்களை அழிக்கும் கோபத்தை விட்டொழித்தார். ஆனாலும் தனது பிதா சக்தியின் மரணத்துக்குக் காரணமான ராக்ஷசர்களை மன்னிக்க அவருக்கு மனம் வரவில்லை. அந்த ராக்ஷசர்களை அழிக்கும் பொருட்டு ராக்ஷஸ ஸத்ரம் என்னும் யாகம் செய்தார். அதில் தனது பிதாவான சக்தியை நினைத்துக்கொண்டு முதிர்ந்த இளைய பால்ய ராக்ஷசர்களை அந்த யாகத்தில் எரிக்க ஆரம்பித்தார். இம்முறை வசிஷ்டர் பராசரைத் தடுக்கவில்லை.
முப்புறமும் எரிகின்ற அக்னிகளின் முன்னே நான்காவது அக்னியாக ஜொலித்தார் பராசரர். சிறந்த புத்திமானாகிய அத்ரி முனிவர் அந்த ராக்ஷச ஸத்ரத்தை நிறுத்துவதற்காக வந்தார். அவருடன் புலஸ்தியர் புலகர் க்ரது என்ற முனிசிரேஷ்டர்களும் சேர்ந்து வந்தார்கள். புலஸ்தியர் பராசரரிடம் அந்த ஸ்த்ரத்தை நிறுத்துவதற்காகப் பேசினார்.
“புத்திரனே! அறியாதவர்களும் நிரபராதிகளுமான ராக்ஷசர்களை அழிப்பதினால் நீ சந்தோஷப்படுகிறாயா? தபஸ்விகளான பிராம்மணர்களுக்கு இது தர்மம் அல்லவே. தம்மிடத்தில் உண்டான கோபத்தினால் சக்தி கொல்லப்பட்டார். விஸ்வாமித்திரர் ஏவிய ராக்ஷசனான கல்மாஷபாதனால் பக்ஷிக்கப்பட்ட வசிஷ்ட புத்திரர்கள் தங்களைக் காத்துக்கொள்ள முடியாமல் மரணமடையவில்லை. இந்தத் தேகம் போய் வேறு தேகம் வரட்டும் என்றுதான் பிதிர்லோகம் சென்றார்கள். கல்மாஷபாதனும் ஸ்வர்க்கம் ஏறி விட்டான். அனைவரும் அங்கே சந்தோஷமாக இருக்கிறார்கள். நீ இந்த யாகத்தை விட்டுவிடு” என்று அறிவுரை கூறினார்.
அங்கு குழுமியிருந்த மற்ற முனிவர்களும் இதை ஆமோதித்தார்கள்.
பராசரர் அந்த ஸத்திரத்தை முடித்தார். எல்லா ராக்ஷசர்களையும் சம்ஹரிக்க வளர்க்கப்பட்ட அந்த யாகத் தீயை இமயமலையின் வடபுறத்தில் உள்ள பெருங்காட்டில் கொட்டிவிட்ட்டார். அந்த அக்னி இன்னமும் அவ்விடத்தில் எப்போதும் ராக்ஷசர்களையும் மரங்களையும் கற்களையும் சாப்பிட்டுக்கொண்டு பர்வகாலந்தோறும் காணப்படுகிறது.
சக்திபுத்திரரான பராசரர் விஸ்வாமித்திரர் மீது கோபம் கொண்டு அவரை வதம் செய்வதற்காக ஒரு யாகம் வளர்த்தார். விஸ்வாமித்திரரைக் காப்பாற்றும் பொருட்டு அந்த அக்னியை ஸுப்ரமண்யர் விழுங்கினார்.
[முருகப்பெருமான் விஸ்வாமித்திரரைக் காப்பாற்றிய இந்த இடம் மஹாபாரதத்தில் வருகிறது. வாய்பிளந்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். நாளை தொடரும்..]

வசிஷ்டரின் தற்கொலை முயற்சி



காமதேனுவின் “ம்மா...” என்ற உரத்தக் குரலுக்கு அந்த வனமே நடுங்கியது. விஸ்வாமித்திரரின் சேனை பயந்தது. அவர்களை துரத்த ஆரம்பித்தது. வனமெங்கிலும் கூச்சல் எதிரொலித்தது. சாட்டையாலும் தடிகளாலும் அதை அடித்தார்கள். கோபம் உச்சத்தில் ஏற அதன் வால் தீப்பிடித்தது போல பற்றிக்கொண்டு பெரும் நெருப்பு மழையை அங்கே பொழிந்தது. நந்தினியை அடிக்கப் பக்கத்தில் வந்தவர்கள் பற்றிக்கொண்டு எரிந்தார்கள். அந்த வனமே தகித்தது. அநேக மரங்கள் தீப்பிடித்து திகுதிகுவென்று எரிய ஆரம்பித்தன.
அதன் மேனியின் பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு வீரர்கள் போன்றவர்கள் தோன்றி களத்தில் ஆயுதஙக்ளோடு குதித்தார்கள். அங்கிருந்த விஸ்வாமித்திரரின் சேனை கதிகலங்கியது. நந்தினியிடமிருந்து உருவாக்கப்பட்ட அந்த வீர சேனை விஸ்வாமித்திரரின் சேனையை சிதறடித்தது. காமதேனுவால் விஸ்வாமித்திரரின் சேனை ஜெயிக்கப்பட்டது. அவர் முகத்தில் கோபச்சுடர் தெறித்தது.
நந்தினி விஸ்வாமித்ர சேனைகளில் ஒருவரையும் கொல்லவில்லை. அவர்கள் அனைவரையும் மூன்று யோஜனை தூரம் விரட்டிவிட்டது. தனியாளாய் கோபக்கனல் தெரிக்க வில்லோடு நின்றார் நெடிய விஸ்வாமித்திரர். எண்ணெற்ற பாணங்களை ரிஷி ஸ்ரேஷ்டரான வசிஷ்டர் மீது பொழிய ஆரம்பித்தார். அந்த அஸ்திரங்கள் பிரளய காலத்தில் பொங்கி வரும் சூரிய ரஸ்மிகளைப் போல நாலா பக்கமும் ஜ்வாலைகளை வாரி இறைத்துக்கொண்டு வந்தது.
அம்பு மாரி தன்னை நோக்கி வந்ததை வசிஷ்டர் தனது தண்டத்தால் அலட்சியமாக தட்டிவிட்டார். விஷமமாகச் சிரித்தார். விஸ்வாமித்திரருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. க்ஷத்ரிய குலத்துக்கே அவமானமாக நினைத்து உள்ளுக்குள் புழுங்கினார்.
“காதி புத்திரனே! இன்னும் ஏதேனும் பாணம் மீதம் இருக்கிறதா? நான் அப்படியே நிற்கிறேன். ஏவு பார்க்கலாம்” என்று சவால் விட்டார்.
தலை குனிந்து நின்றார் விஸ்வாமித்திரர். ஆயிரமாயிரம் சேனைகள் இருந்தும் அஸ்திரங்கள் பிரயோகிக்கத் தெரிந்தும் பிரம்மதேஜஸ்வியாக இருக்கும் வசிஷ்டரிடம் தோற்றுவிட்டோம் என்று புரிந்துகொண்டார்.
“க்ஷத்ரியனுடைய பராக்கிரமம் பிரம்மதேஜஸின் முன் நில்லாது. செல்லாது.” என்று ஒப்புக்கொண்டார். பிரம்மதேஜஸின் பலாபலன்களையும் க்ஷத்ரியனின் பராக்கிரமத்தையும் தராசுத்தட்டில் வைத்தால் பிரம்மதேஜஸின் எடை அதிகம் காட்டும். ஆகையால் தவவலிமையே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தவராக ராஜ்ஜியத்தைத் துறந்தார். தவமியற்ற வனம் ஏகினார்.
தனது தபோவலிமையால் பிரம்மதேஜஸ் பெற்றார். ஜ்வலிக்கின்ற தேஜஸ் நிரம்பிய பிராமணத்தன்மையை அடைந்தார். இந்திரனும் ஸோமரஸம் பானம் செய்யுமளவிற்கு உயர்ந்தார்.
இதுவே ராஜரிஷி பிரம்மரிஷியான கதைக்கான பூர்வாங்க சரித்திரம்.
**
“அங்காரபர்ணா! இதற்குப்பிறகு வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் பகை தொடர்ந்ததா? விஸ்வாமித்திரர் ஏதாவது பழி வாங்கினாரா? எனக்கு பூர்ணமாகச் சொல்” என்று கேட்டான் அர்ஜுனன். ஸ்வயம்வரத்துக்குச் செல்வோமா மாட்டோமா என்று நால்வரும் குந்தியும் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தக் கந்தர்வனும் மிகவும் சுவாரஸ்யமாக அடுத்த கதைகளை அடுக்கத் துவங்கினான்.
“பார்த்தனே! இப்போது நான் சொல்லப்போவது வசிஷ்டரின் சரித்திரம். கேள்”
இக்ஷ்வாகு வம்சத்து அரசன் கல்மாஷபாதன். ஒப்பற்ற பராக்கிரமம் படைத்தவன். வீரன். வில்லாளி. ஒரு சமயம் வனம் புகுந்து மான் பன்றி என்று அடித்தது போதாதென்று ஏகத்துக்கும் காண்டாமிருகங்களையும் வேட்டையாடினான். விஸ்வாமித்திரர் அவனுக்கு யாகம் செய்விக்கிறேன் என்று ஏற்கனவே தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.
மிகவும் அதிகமாக வேட்டையாடியதால் களைப்புற்ற கல்மாஷபாதன் ஒரு ஒற்றையடிப்பாதையில் நடந்து வந்துகொண்டிருந்தான். எதிரில் வசிஷ்டரின் நூறு புத்திரர்களுள் மூத்தவரான சக்தி நடந்து வந்துகொண்டிருந்தார். கல்மாஷபாதன் அவரைப் பார்த்து “ம்... இந்த வழியை விட்டு விலகும். ம்..ம்.. நகருங்கள்.” என்று அதட்டினான்.
“மஹாராஜா! இது என் வழி. கிழவன், பயந்தவன், அரசன், ஸ்நாதகன், பெண், ரோகிஷ்டன், கலியாணப் பிள்ளை, வண்டிக்காரன் இவர்களுக்கு வழிவிடவேண்டும். இதில் சிலர் அரசனுக்கு விடவேண்டும். இன்னும் சிலருக்கு அரசன் வழிவிடவேண்டும். அரசன் பிராமணனுக்கு வழிவிட வேண்டும் என்று எல்லா தர்மங்களிலும் இருக்கிறது. ஆகவே நீர் வழியை விடும்” என்று உறுதியான குரலில் சொன்னார்.
வழிவிடும் சர்ச்சை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
“நீ விடு.. நீ விடு..” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தார்கள். பின்னர் சினம் கொண்ட கல்மாஷபாதன் சக்திரிஷியைக் கசையால் அடித்தான். வசிஷ்ட புத்திரருக்கும் கோபம் வந்தது.
“ஒரு ரிஷியை ராக்ஷசனைப் போல அடிக்கிறாயே! நீ ராக்ஷசனாகி நர மாம்ஸம் தின்பதில் ஆசை ஏற்பட்டு இந்தப் புவி எங்கும் திரிவாய்” என்று சபித்துவிட்டார்.
ஏற்கனவே அந்த கல்மாஷபாதனின் புரோகிதராக இருப்பதில் விஸ்வாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் விரோதம் இருந்துவந்தது. சக்தி ரிஷி சபித்தபிறகுதான் கல்மாஷபாதனுக்கு அவர் வசிஷ்ட புத்திரர் என்பது தெரியவந்தது. அந்த சமயத்தில் அந்தப் பக்கமாக விஸ்வாமித்திரர் வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் நடுவழியில் நிற்பதைப் பார்த்து காற்றோடு காற்றாக மறைந்து அந்த வழியைத் தாண்டிச் சென்றுவிட்டார் .
கல்மாஷபாதன் சக்தி ரிஷி சாபம் கொடுத்தவுடன் செய்வதறியாது திகைத்து அவரது காலில் தஞ்சமடைந்தான். அவர்களைத் தாண்டி அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்த விஸ்வாமித்திரர் இதைப் பார்த்துவிட்டார். வசிஷ்ட புத்திரன் காலில் விழும் கல்மாஷபாதனைத் தண்டிப்பதற்காக அவன் மீது ஒரு ராக்ஷசனை ஏவினார். கிங்கரன் என்னும் ராக்ஷசன் கல்மாஷபாதன் மேல் ஆவேசமானான்.
தன்னை ஒரு ராக்ஷசன் பிடித்திருக்கிறான் என்று தெரிந்தும் அந்த அரசன் புத்தியினால் அடக்கப்பட்டு அமைதியாக தனது ராஜ க்ருஹத்துக்கு திரும்பினான் .தன்னுடைய அரண்மனை வாசலில் ஒரு பிராமணன் கையிரண்டையும் ஏந்திக் கொண்டு பிக்ஷைக்காக நின்றுகொண்டிருந்தான். ஏற்கனவே காலையில் வனத்துக்கு வேட்டையாட வந்த போதே தனக்கு மாமிஸம் வேண்டும் அன்று அந்த பிராமணன் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான்.
“நீ இங்கேயே காத்திரு! நான் வேட்டைக்குப் போகிறேன். வந்து உனக்கு மாமிசம் தருகிறேன்” என்று வாக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்தான். அரசன் இரவில் திரும்பினான். அந்தப் பிராமணனைப் பார்த்துக்கொண்டே அரண்மனைக்குள் சென்றுவிட்டான். பின்னர் நேரே அந்தப்புரம் சென்றான். மகிழ்ச்சியாக இருந்தான். நள்ளிரவில் வாசலில் மாமிசம் பிச்சையெடுத்து நிற்கும் பிராமணன் நினைவு வந்தது. உடனே சமையற்காரனை அழைத்தான்.
”இங்கே ஒரு பிராமணன் அன்னம் வேண்டி நிற்கிறான். மாமிசத்துடன் கூடிய அன்னத்தை அவனுக்கு அளி” என்று உத்தரவிட்டான்.
அந்த நேரத்தில் மாமிசம் எப்படி கிடைக்கும்? வெளியே சென்று திரும்பிய அந்த சமையற்காரன் கல்மாஷபாதனிடம் மாமிசம் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தான்.
“மனித மாமிசமாவது அவனுக்குப் போஜனம் செய்துவை” என்று பலமுறை அழுத்திக் கூறி சமையற்காரனை மீண்டும் விரட்டினான் கல்மாஷபாதன்.
கொல்லத்தக்கவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொல்பவர்களின் இடம் தேடிச் சென்ற சமையற்காரன் அங்கிருந்து நர மாமிசத்தைக் கொண்டு வந்து சமைத்துக் காத்திருக்கும் பிராமணனுக்கு இட்டார்கள். அவன் தனது யோக சிருஷ்டியினால் அந்த அன்னம் புசிக்கத்தக்கதன்று. அது நரமாமிசம். தெரிந்துகொண்டான்.
“அதமனான அரசன் நான் உண்ணத்தகாத உணவை எனக்களித்தான். ஆகையால் முன்பே சக்தி சாபமிட்டது படி மனிதர் மாமிசம் உண்பவனாகத் திரிவான்” என்று வசிஷ்ட புத்திரரின் சாபத்தை உறுதிசெய்தான்.
இரண்டாம் தரம் அந்த சாபத்தை வாங்கிய பின் அது உறுதியாகி கல்மாஷபாதன் உள்ளேயிருந்த ராக்ஷசன் பலம் பெற்றான். ராக்ஷசனாக வெகுகாலம் திரிந்தான். பலகாலத்திற்குப் பின்னர் அவன் சக்தி ரிஷியை ஓரிடத்தில் சந்தித்தான். அவரால்தான் ராக்ஷசனாகத் திரிகிறோம் என்று பெரும் கோபம் கொண்டு ஒரு புலியானது பசுவை அடித்துச் சாப்பிடுவது போல சக்தி ரிஷியை சாப்பிட்டு ஏப்பம் விட்டான்.
விஸ்வாமித்திரர் ராக்ஷசனான கல்மாஷபாதனை மீண்டும் மீண்டும் வசிஷ்ட புத்திரர்கள் மேலே ஏவி விட்டு அனைவரையும் கல்மாஷபாதனே தின்னும்படி செய்தார்; தனது புத்திரர்களை அழித்தவர் விஸ்வாமித்திரர்தான் என்று தெரிந்து கொண்டும் வசிஷ்டர் அவரை ஒன்றும் செய்யவில்லை. மாறாக மனம் ஒடிந்தார்.
நூறு புத்திரர்களையும் பறிகொடுத்த சோகம் தாங்காமல் இமயமலையின் உச்சியில் இருந்து குதித்தார். பஞ்சு போல பறந்துவந்து தரையை அடைந்தார். கீழே விழுந்ததும் எழுந்து தனது அங்க அவயங்களைப் பார்த்துக்கொண்டார். ஏதும் ஆகவில்லை. பின்னர் செம்மையாக எரிந்து கொண்டிருந்த அக்னியில் பாய்ந்தார். துளிக்கூட சுடாமல் வெளியே வந்தார். வருத்தம் மேலோங்கிட கழுத்தில் ஒரு கற்பாறையைக் கட்டிக்கொண்டு சமுத்திரத்தில் இறங்கினார். அழகாக அலைகளால் அடிக்கப்பட்டு உயிரோடு கரை ஒதுங்கிவிட்டார். தனது உயிர்கூட போகமாட்டேன் என்கிறதே என்ற வருத்தத்தோடு தனது ஆஸ்ரமம் திரும்பிவிட்டார்.
புத்திரர்கள் இல்லாத ஆஸ்ரமத்தில் தான் மட்டும் வசிக்க இஷ்டமில்லாமல் மீண்டும் பிராணஹத்தி செய்து கொள்வதற்காக ஓடி வந்தார். அப்போது கார்காலத்தில் புதுஜலம் நிரம்பி கரையினுள்ளே புகுந்து மரத்தை இழுத்துக்கொண்டு வேகமாகச் செல்லும் நதியினைப் பார்த்தார். தனது சரீரத்தை கயிற்றினால் கட்டிக்கொண்டு அந்த நதியில் மூழ்கினார். கொஞ்ச தூரத்தில் அவருடைய கட்டுக்களை அவிழ்த்து கரையில் இழுத்துப் போட்டுவிட்டு சென்றுவிட்டது. அவரது கட்டுக்களை விடுவித்ததால் விபாசை என்று அந்த நதிக்குப் பெயர் வைத்தார் வசிஷ்டர்.
கொடிய முதலைகள் நிரம்பிய நதிக்குச் சென்று அங்கும் விழுந்தார். அந்த பிரம்மரிஷியை அக்னிக்கு ஒப்பாக நினைத்த அந்த நதியும் நூறு பிரிவுகளாகப் பிரிந்து ஓடியது. அதனால் அதற்கு சதத்ரு என்ற பெயர் பெற்றது. அதுவும் வரை தரையில் பிடித்துத் தள்ளிவிட்டு ஓடியது. பல மலைகள் பல தேசங்கள் சென்றார். மனதின் சஞ்சலம் அடங்கவில்லை. கடைசியாக தனது புத்திரன் சக்தியின் மனைவியும் தனது மருமகளுமான அதிருஸ்யந்தி தனியாக இருக்கிறாள் என்கிற நினைவு வந்து ஆஸ்ரமம் அடைந்தார்.
கனிகளுக்காகவும் தர்ப்பைப் புல் போன்றவைகளை சேகரிக்கவும் வசிஷ்டரும் அதிருஸ்யந்தியும் காட்டுக்குள் சென்றார்கள். அங்கே வேதம் ஓதும் குரல் ஒன்று கேட்டது. சுற்றும் முற்றும் யாருமில்லை. ஆனால் சீக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம், கல்பம் இவற்றினால் அலங்கரிக்கப்பட்ட வேதம் ஓதுகிற குரலைக் கேட்டார். அதுவும் சமீபத்தில் கேட்டது.
“மகளே! யாரது நம் பின்னே வருகிறார்கள்?” என்று வனத்தில் ஒரு குட்டி நீரருவி கடக்கும் போது கேட்டார் வசிஷ்டர்.
“நான் ஒருத்திதான் வருகிறேன்”
“இல்லையம்மா. வேதம் ஓதும் குரல் கேட்கிறதே! அதுவும் சக்தி வேதாத்தியயனம் செய்வது போலவே கேட்கிறதே” என்று கேட்டார் வசிஷ்டர்.
“முனி ஸ்ரேஷ்டரே! ஆமாம்.உமது மகன் சக்தியின் கர்ப்பம் என் வயிற்றில் உண்டாகியிருக்கிறது. இந்த வயிற்றிலேயே இந்தக் கர்ப்பம் வேதாத்தியயனம் செய்ய ஆரம்பித்து பன்னிரண்டு வருஷங்கள் ஆகின்றன” என்றாள் அதிருஸ்யந்தி.
“ஆஹா! சந்தானம் இருக்கிறது” என்று மகிழ்ந்தார் வசிஷ்டர்.
நிர்ஜனமான அந்த அடர்ந்த காட்டில் வசிஷ்ட ரிஷியும் அவரது மருமகளும் மட்டும் வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அந்த கரும் பாறையில் யாரோ அமர்ந்திருப்பது தெரிந்தது. அவர்களது நடை கொஞ்சம் மெதுவானது. அது யார்? என்று இருவரும் கேள்வியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கும் போது அந்த உருவம் எழுந்திருந்து வசிஷ்டரை.......
அது யார்? என்று நாளை பார்க்கலாம்...