Monday, March 12, 2018

அர்ஜுன சன்னியாசி



”அப்போது அங்கு வந்தவர் மகிமையுள்ள நாரத மஹரிஷி”
“உம்” என்றான் அர்ஜுனன். வர்க்கை என்ற அந்த அப்சரஸ் கதையைத் தொடர்ந்தாள்.
நாங்கள் ஐவரும் அவரை வலம் வந்து நமஸ்கரித்தோம். பின்னர் வாய் பேசாமல் துயரத்துடன் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு நின்றோம்.
“உங்கள் துயரத்திற்கு என்ன காரணம்?” என்று கேட்டார் நாரத மஹரிஷி.
பிராமணனை நாங்கள் சீண்டிப் பார்த்தக் கதையைச் சொன்னோம். பின்னர் அந்த பிராமணன் அளித்த சாபத்தையும் அதன் விமோசனத்தையும் சொன்னோம்.
“தென்சமுத்திரக்கரையில் புண்ணியமானதும் ரம்மியமுமான ஐந்து தீர்த்தங்கள் இருக்கிறது. நீங்கள் அனைவரும் உடனே அங்கே சென்று முதலையாக நீந்துங்கள். பாண்டு புத்திரனான தனஞ்செயன் அங்கு வருவான். அப்போது உங்களுக்கு இந்த சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்கும்” என்று உபாயம் சொல்லி அருளினார்.
இதைச் சொன்னவுடன் நாரதர் ஒரு புகையாக மேலே எழும்பி மறைந்துவிட்டார்.
அவர் வாக்கின் பேரில் நாங்கள் இங்கே வந்து முதலையாய்க் கிடந்தோம். இன்னும் நான்கு பேர் பக்கத்து தீர்த்தங்களில் முதலையாகக் கிடக்கிறார்கள். நீ சென்று அனைவருக்கும் சாப விமோசனம் தர வேண்டும். இது என் வேண்டுகோள்.
அந்த அப்ஸரஸின் பேச்சுக்கிணங்க ஒவ்வொரு தீர்த்தமாக இறங்கி முதலையாக இருந்தவர்களை அழகிய அப்சரஸாக மாற்றினான். அனைவரும் கண்ணைக் கவரும் நெஞ்சை அள்ளும் ஸர்வாலங்கார பூஷிதைகளாக கரையில் ஜொலித்தார்கள்.
அழகுடன் ஜொலித்துக்கொண்டிருந்த அந்த அப்ஸரஸ்களைக் கண்டவுடன் அர்ஜுனனுக்கு சித்ராங்கதையின் ஞாபகம் வந்தது. உடனே மணலூருக்கு ஓடினான். அங்கு சென்று சித்ராங்கதையுடன் சேர்ந்து பப்ருவாகனன் என்ற புத்ரனை உண்டு பண்ணினான். பின்னர் சித்ரவாகனனிடத்தில் சென்றான் அர்ஜுனன்.
“அரசனே! கன்னியாசுக்லமாக பப்ருவாகனனை நீ வாங்கிக்கொள். நான் கடன் நீங்கியவன் ஆவேன்.”
சித்ராங்கதையின் கண்களில் நீர் முட்டியது.
“சித்ராங்கதையே! நீ இங்கேயே இரு.பப்ருவாகனனைப் போஷித்து வா. இந்திரப்பிரஸ்தம் வந்த பிறகு நீ என்னுடன் சேர்ந்திருப்பாய். குந்தி, பீமன், தர்மன் மற்றும் என் சகோதரர்களை நீ அங்கே வந்து பார்க்கலாம். யுதிஷ்டிரர் பூமி முழுவதையும் ஜெயித்து ராஜசூய யாகம் செய்யப்போகிறார். அதற்கு உன் பிதாவும் வருவார்.நீ அவர்களுடன் வந்து சேர். ராஜசூய யாகத்தில் நாம் பார்ப்போம். புத்திரனைக் காப்பாற்று. அவன் தர்மப்படி பூருவம்சத்தை விருத்தி பண்ணுகிற பாண்டவர்களின் புத்திரன். என் பிரிவினால் வருந்தாதே” என்று சொல்லி புறப்பட்டான்.
சித்ராங்கதை கண்களில் நீர் முட்டியது. தனது பிள்ளையுடனும் தகப்பனுடனும் அவனுக்குப் பிரியாவிடை கொடுத்தாள். அர்ஜுனன் அங்கிருந்து கிளம்பி கேரள தேசம் வழியாக கோகர்ண க்ஷேத்திரத்தை நோக்கிச் சென்றான்.
*

மேற்கு சமுத்திர ஓரத்தில் இருந்த க்ஷேத்திரங்களுக்கும் தீர்த்தங்களும் சென்று கடைசியில் பிரபாஸ தீர்த்தம் வந்தடைந்தான். அப்போது அவனுக்கு கதன் என்னும் யாதவன் ஒருவன் நட்பாகி “கிருஷ்ணனுடைய தங்கை சுபத்திரையின் அழகு சொல்லில் அடங்காது.” என்று காதல் நெருப்பு மூட்டிவிட்டுச் சென்றான். அந்த நினைப்பில் அவன் உருகிக்கொண்டிருந்த போது அவளை எப்படி அடையலாம் என்று திட்டம் தீட்டினான்.
கற்பனையில் சன்னியாசி ஆனான். ஜடாமுடியும் கமண்டலக் கையுமாக சன்னியாசி வேஷத்தில் தந்திரமாகக் கிருஷ்ணனுடைய ராஜ கிருஹத்தில் நுழைந்து சுபத்திரையைக் கவர்ந்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டான்.
தலையை மொட்டையடித்துக்கொண்டான். திரிதண்டம் ஏந்தினான். கமண்டலம் ஒரு கையில். அக்ஷமாலையை விரலுக்கிடையில் மோதிரம்போல் சுற்றிக்கொண்டான். சின்னச் சின்னத் தூறலாக ஆரம்பித்த மழை பெரும் மழையாக காற்றோடு சேர்ந்துகொண்டுக் கொட்டியது. அடி பெருத்த பெரும் ஆலமரம் ஒன்று அருகில் இருக்க அதனடியில் நுழைந்துகொண்டான். ஸ்ரீகிருஷ்ணபகவானை மனதில் நினைத்தான்.
அங்கே சத்தியபாமாவுடன் திவ்யசயனத்தில் இருந்த ஸ்ரீகிருஷ்ணரின் முகத்தில் புன்னகை அரும்பியது. சத்தியபாமாவுக்கு கிருஷ்ணர் இப்படி திடீரென்று சிரித்தது ஆச்சரியமாக இருந்தது.
“பகவானே! ஏன் சிரித்தீர்? நானும் தெரிந்துகொள்ளலாமா?”
புருஷோத்தமன் வாய் திறக்காமல் தனது திவ்யஞானத்தால் அர்ஜுனன் மனதில் நினைத்துக்கொண்டதை எண்ணி எண்ணி சிரித்தான். சத்யபாமா திரும்பத் திரும்பக் கேட்டு அலுப்புற்று கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
”சத்யபாமா! என் அத்தை மகன் அர்ஜுனன் வியவஸ்தை காரணமாக தீர்த்தயாத்திரை சென்றான். அதை முடித்து திரும்பி வரும் வழியில் சுபத்திரையை மனதில் நினைத்தான். அவளை யதி வேஷம் தரித்து துவாரகைக்கு வந்து அடையலாம் என்று சிந்தித்தான். அந்த சந்தோஷத்தினால் சிரித்தேன். கோபிக்காதே” என்று அவளின் தாவாங்கட்டையைச் செல்லமாகப் பிடித்தான்.

சயனத்திலிருந்து எழுந்தார். சபைக்கு வந்தார்.
“பாண்டு புத்திரனான அர்ஜுனன் பிரபாஸ தீர்த்தம் வந்திருக்கிறார்” என்று ஒற்றர்கள் வந்து மதுசூதனரிடம் சேதி சொன்னார்கள்.
தனது தேரில் புறப்பட்டு அர்ஜுனனைக் காண தனியே சென்றார். புறப்படுவதற்கு முன்னர் சில அரண்மனைச் சேவகர்களைக் கூப்பிட்டு சில கட்டளைகள் கொடுத்துவிட்டு பிரபாஸ தீர்த்தம் சென்றார்.
அர்ஜுனன் சன்னியாச வேஷத்தில் நிற்பதைக் கண்டு சிரித்தார். கிருஷ்ணரை நோக்கி ஓடிவந்தான். இருவரும் ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்துகொண்டார்கள். ஆலமரத்தடியில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். நீ ஏன் தீர்த்த யாத்திரை வந்தாய் என்று அறியாத சிறுவனாக கிருஷ்ணன் கேட்க அர்ஜுனனும் முழுக் கதையையும் சொன்னான்.
பின்னர் இருவரும் ரைவதக பர்வம் என்னுமிடத்திற்கு கிளம்பினார்கள். இங்கு வருவதற்கு முன்னரே கிருஷ்ணன் இட்ட கட்டளையினால் அரண்மனை சேவகர்கள் அந்த மலையை அலங்கரித்து போஜனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தோரணங்களும் நாடக நாட்டியக் கலைஞர்களுமாக ரைவதக பர்வம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் அவர்கள் நாடகம் காட்டினார்கள். சிறு குழுக்களாகப் பிரிந்து நர்த்தனம் ஆடினார்கள். இவைகளின் ஊடே பலவகையான பதார்த்தங்களுடன் விருந்தும் அளிக்கப்பட்டது.
அவர்களுக்கு சம்பாவனைகள் செய்து அனுப்பிவிட்டு கண்ணன் எதிரில் அமர்ந்திருக்க உயர்ந்த மஞ்சத்தில் படுத்துக்கொண்டே தான் பார்த்த க்ஷேத்திரங்களையும் தீர்த்தங்களையும் பற்றி நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தான். சிரித்த முகத்துடன் ஸ்ரீகிருஷ்ணர் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். களைப்பு மேலிட அந்த மஞ்சத்தின் சொகுசினால் கண்கள் சொருக பேசிக்கொண்டிருக்கும் போதே தூங்கிவிட்டான் அர்ஜுனன்.
காலையில் வீணை மீட்டி அர்ஜுனனை துயில் எழுப்பினார்கள். ஒரு குழுவாக நின்றவர்கள் அவன் துதி பாடினார்கள். கிருஷ்ணர் வந்தார். அவருக்கு மரியாதை செய்தான் அர்ஜுனன்.
“நான் இங்கேயே சிலகாலம் வசிக்கலாமா?” என்று அவரிடம் அனுமதி பெற்றான்.
“தாராளமாக..” என்று இருகை விரித்துச் சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர்.
அவனிடம் விடைபெற்றுக்கொண்டு ஸ்ரீகிருஷ்ணர் துவாரகை வந்தடைந்தார்.
[அர்ஜுன வனவாச பர்வம் முடிந்தது]
அர்ஜுனன் கிருஷ்ணன் ஏற்பாடு செய்த வேலைக்காரர்களால் சௌக்கியமாக ரைவதக பர்வத்தில் வசித்துவந்தான். ஒருநாள் அந்த பர்வதத்தில் கிரிபூஜை என்னும் திருவிழா நடைபெற்றது. வ்ருஷ்ணிகுலத்தவர்களுக்கு பிரதான பூஜை. பொன்மயமான தேர்களில் ஏறி குடும்பம் குடும்பமாக அந்த மலையில் யாதவர்கள் குவிந்தார்கள். ஆங்காங்கே மேடையமைத்து நர்த்தனம் ஆடினார்கள். சிறு சிறு மண்டபம் போன்ற இடங்களில் சங்கீதக் கச்சேரி நடந்தது. நாடகம் ஒரு பக்கம் விடிய விடிய போய்க்கொண்டிருந்தது.
பலராமர் சோமரஸம் பருகிக் களித்திருந்தார். பாடல் இசைக்கும் கந்தர்வர்கள் புடைசூழ ரேவதியுடன் அங்குமிங்கும் சென்றுகொண்டிருந்தார். யாதவ அரசன் உக்கிரசேனன் பல பாடல் மங்கையருடன் உலாவினான். பிரத்யும்னன், சாம்பன் ஆகியோர் உயர்ந்த வஸ்திர்ங்கள் தரித்தும் கழுத்தில் மலர் மாலைகளை அணிந்துகொண்டும் கள்ளுண்டு மயங்கித் திரிந்தனர். அக்ரூரர், ஸாத்யகி உள்ளிட்ட அனேக யாதவ சிரேஷ்டர்கள் பெண்களால் சூழப்பட்டும் ஆடலும் பாடலுமாக ரைவதக பர்வதத்தில் சுற்றி சந்தோஷமாக இருந்தார்கள்.


ஸ்ரீகிருஷ்ணர் தனது ஸ்திரீகளுடன் பொன்னால் ஆன ரத்தினங்கள் இழைக்கப்பட்ட ரதத்தில் வந்திறங்கினார். அங்கே வந்திருந்த பிராமணர்களுக்கு தானங்கள் பல அளித்தார். கபட சன்னியாசி வேஷத்தில் திரிந்த அர்ஜுனன் அவரை கடைக்கண்ணால் பார்த்து விஷமமாகச் சிரித்தான். அதைப் புரிந்துகொண்ட கிருஷ்ணர் தனது ஸ்திரீகளை விட்டுவிட்டு அவனை ஒதுக்கிக்கொண்டு நகர்ந்தார்.
அவர்கள் இருவரும் கூட்டத்திலிருந்து விலகிச் சென்றுகொண்டிருக்கையில் தோழிகளுடன் சுபத்திரையைப் பார்த்தார்கள். அர்ஜுனன் மனதைப் பறிகொடுத்தான். அவளைக் கண்ட கண்கள் வேறு எதையும் பார்க்காமல் நிலைகுத்திக் கிடந்தன. ஸ்ரீகிருஷ்ணர் அவனது இடுப்பில் ஒரு முறை முட்டியால் இடித்து தன் பக்கம் திருப்பினார். சன்னியாசி வேஷத்தில் இருந்த அர்ஜுனன் அவரின் முகம் பார்க்க முடியாமல் வெட்கப்பட்டான்.
“அர்ஜுனா! இதென்ன கூடாத காரியமாக இருக்கிறது. காட்டிலிருக்கும் ஜிதேந்திரியனுக்கு சிற்றின்பத்தில் மனம் லயிக்கிறதே” என்று கிண்டலடித்தான் கிருஷ்ணன்.
தலையை தொங்கப்போட்டுக்கொண்டான் அர்ஜுனன்.
“இவள் என் உடன் பிறந்தவள். சுபத்திரை. என் பிதாவின் அன்பு மகள். உனக்கு விருப்பமிருந்தால் சொல், நான் என் பிதாவிடம் உனக்காக பெண் கேட்கிறேன்” சீண்டினான் கிருஷ்ணன்.
“வஸுதேவருடைய பெண். வாஸுதேவனின் சகோதரி. இவள் அழகில் மயங்காதவர் இப்பூவுலகில் இருக்கமுடியுமா? இவளை நான் அடைய என்ன செய்யவேண்டும். ஜனார்த்தனரே! உபாயம் சொல்லும்” கைகூப்பினான் அர்ஜுனன். கூட்டத்திலிருப்பவர்கள் யாரேனும் ஒரு சன்னியாசி தன்னிடம் கை குவிப்பதை பார்த்துவிடப்போகிறார்களே என்று ஒரு மரத்தின் பின்னால் அவனை இழுத்துக்கொண்டு போனான் கிருஷ்ணன்.
“அர்ஜுனா! ஸ்வயம்வரம்தான் க்ஷத்ரியர்களுக்கு தர்மமான விவாஹம். பலவந்தமாக கவர்ந்துசெல்வதும் கூட க்ஷத்ரியர்களுக்கு தர்மம்தான். காலம் கனியும் வரை காத்திரு. பின்னர் என் சகோதரியை பலவந்தமாக கவர்ந்து சென்று விடு. ஸ்வயம்வரம் வைத்தால் அவள் உன்னை வரிப்பாளோ மாட்டாளோ” என்று சொல்லி வெடியாய்ச் சிரித்தான் ஸ்ரீகிருஷ்ணன். அர்ஜுனனை கண்டமேனிக்கு ஏற்றிவிட்டான்.
தனக்கு அனுக்கமான சில தூதர்களை அழைத்தான் ஸ்ரீகிருஷ்ணன். இந்திரபிரஸ்தத்தில் இருக்கும் தர்மருக்கும் குந்திக்கும் இதுவிஷயமாகச் சொல்லி அனுப்பினான். அதிசீக்கிரம் சென்று அனுமதி வாங்கிக்கொண்டு திரும்பவும் வந்து விபரம் சொன்னார்கள். கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நிம்மதியாக இருந்தது. அர்ஜுனனை அழைத்து இக்காரியத்தை எவ்விதம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை செய்து விட்டு தனது தூதர்களுடன் துவாரைகைக்குத் திரும்பினான் ஸ்ரீகிருஷ்ணன்.
நாள் குறித்த்க்கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார் கிருஷ்ணன். அந்த நாளில் ரைவதக பர்வதத்திலிருந்து இறங்கினான் அர்ஜுனன். துவாரை நோக்கி நடைப்பயணமாகச் சென்றான். நகரின் சமீபத்தில் எழில் கொஞ்சும் சோலையில் தங்கினான். ரைவத மலையின் கிரிபூஜை உற்சவம் முடிந்து யாதவர்கள் அனைவரும் தத்தம் இல்லம் திரும்பியிருந்தார்கள்.
சுபத்திரையின் நினைவில் ஒரு கற்பாறையின் மேல் அமர்ந்திருந்தான். அவளது நடையும் பேச்சும் வனப்பும் அவனை என்னவோ செய்தது. சிந்தையில் தோன்றி தோன்றி மறைந்தாள் சுபத்திரை. அவள் நினைவால் அவன் அனுதினமும் வாடினான். கற்பனையில் அவளருகே நின்று அவளோடு பேசுவது போலவும் ஆலிங்கனம் செய்துகொள்வது போலவும் நினைத்துக்கொண்டு சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தான்.
குதிரையின் குளம்பொலிக் கேட்டது. உஷாரானான். அப்போது யாதவ வீரர்கள் சிலர் பலராமர் தலைமையில் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள்.
என்ன செய்வது? என்று மனது அடித்துக்கொள்ள அவர்கள் அவனிடம் வரும்வரை அமைதியாக கற்பாறையில் தவம் செய்வது போல அமர்ந்துவிட்டான் அர்ஜுனன்.
பலராமர் குதிரையிலிருந்து குதித்து இறங்கினார். உடனே பப்ரு, ஸாம்பன், பிரத்யும்னன், கதன், ஸாரணன், விதூரதன், ஹரிதன் என்று யாதவ வீரர்களும் இறங்கி அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.
கண்களைத் திறப்பதா வேண்டாமா என்ற யோசனையில் கற்பாறையின் மேல் கற்சிலையாய் இருந்தான் அர்ஜுனன்.

அர்ஜுனனைக் கடத்திய நாககன்னிகை



தர்மம் தவறாத அர்ஜுனன் தர்மர் வேண்டாம் என்றாலும் வனவாசம் செல்கிறான். வேதமோதும் பிராமணர்கள் அவன் பின்னே சென்றார்கள். புராணங்கள் சொல்லும் சூதர்கள் அவன் இடப்புறம் நடந்தார்கள். மேலும் நிறைய பேர் அர்ஜுனனைப் பின் தொடர்ந்தார்கள்.

வனவாசம் என்றதும் அர்ஜுனன் மனதில் தோன்றிய இடம் கங்கோத்பத்தி. அங்கு சென்று வசிக்கவேண்டும் என்று நேரே அந்த இடத்தை அடைந்தான். அவனுடன் சென்ற பிராமணர்கள் அங்கே அக்னி ஹோத்திரங்கள் செய்தார்கள். அக்னி மூட்டப்பட்டு வனமும் கங்கா ஜலமும் ஜ்வலித்தது. நித்யமும் புஷ்பார்ச்சனைகள் நடைபெற்றன. பிராமணர்களின் வேதகோஷம் அந்தக் காட்டை புனிதமடையச்செய்தது. புலிகள் மான்களை துரத்தவில்லை. யானைகளுக்கு மதம் பிடிக்கவில்லை. சிங்கங்கள் குகையில் அமைதியாக உறங்கின. எங்கும் சாந்தி நிலவியது. அந்த ரம்மியமான சூழலில் ஸ்நானம் செய்து பவித்திரமாக இருந்தான் அர்ஜுனன்.
தினமும் காலையும் மாலையும் அந்த கங்கையில் ஸ்நானம் செய்வான். கரையில் அக்னி ஹோத்திரங்களும் அர்ச்சனைகளும் ஹோமங்களும் நடந்தவண்ணம் இருக்கும். கரையேறி பிராமணர்களுடன் அமர்ந்து வேதம் சொல்வான். தினமும் இது தொடர்ந்தது. மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் கடும் பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்தான் அர்ஜுனன்.
ஒரு நாள் கங்கையில் மூழ்கியவனை உலூபியென்னும் நாக கன்னிகை ஜலத்திற்குள்ளிருந்து அவனது காலைப் பற்றி பிடித்து இழுத்துப்போனாள். கீழே...கீழே..கீழே.... என்று வெகுதூரம் பயணப்பட்டு அவர்கள் நாகலோகம் சென்றடைந்தார்கள்.
நாகலோகம் மிகவும் செழிப்பாக இருந்தது. அங்கு கௌரவ்யன் என்னும் நாகராஜன் மாளிகையில் அக்னியைக் கண்டான். அந்த அக்னியில் அக்னிஹோத்ரம் செய்தான். ஹோமம் செய்ததினால் அக்னிபகவான் திருப்தியடைந்தான். நாகராஜனின் பெண் உலூபி அப்போது இந்தப்பக்கம் அந்தப்பக்கம் சென்று பின்னர் அர்ஜுனன் எதிரில் வந்து நாணத்துடன் தலை குனிந்து நின்றாள்.

“யே பெண்ணே! யார் நீ? என்ன பெரிய சாகசம் செய்துவிட்டாய்? இது எந்த இடம்?”
அர்ஜுனன் தொடர் கேள்விகளால் அவளுக்கு மேலும் வெட்கம் பிறந்தது. அவனிடம்
“என் பெயர் உலூபி. நாகராஜனாகிய கௌரவ்யனின் பெண். புருஷஸ்ரேஷ்டனே ஸ்நானத்திற்காக இந்த மகாநதியில் இறங்கிய உன்னைக் கண்டவுடன் மன்மதனால் அடிக்கப்பட்டேன். நான் இன்னும் விவாகம் ஆகாதவள். உன்னை நீ ஆத்ம தானமாகக் கொடு. எனக்கு ஆனந்தத்தை உண்டாக்கு”
அர்ஜுனனுக்கு தயக்கமாக இருந்தது. உலூபி அழகாகத்தான் இருந்தாள். ஆனால் பிரம்மச்சரியம் இருக்கவேண்டும் என்பது நிபந்தனை.
“பெண்ணே! எனக்கு பன்னிரெண்டு மாதங்கள் வரையில் தர்மராஜாவினால் பிரம்மசரியம் விதிக்கப்பட்டிருக்கிறது. நான் ஒருபோதும் பொய் சொன்னதில்லை. என்னுடைய தர்மம் கெடாமலிருக்க நீதான் உதவ வேண்டும்”
”பாண்டவனே! உங்களுடைய தர்ம ஒப்பந்தம் எனக்கும் தெரியும். தர்மரின் அரண்மனைக்குள் நீ நுழைந்து ஆயுதமெடுத்ததால் பன்னிரண்டு மாதங்கள் வனவாசம் வந்திருக்கிறாய். ஆனால், என் விஷயத்தில் உன் தர்மம் கெடாது” என்றாள்.
அது எப்படி என்பது போல பார்த்தான் வாயைத் திறக்காமல் அர்ஜுனன்.

“நான் உன்னால் காமம் பீடிக்கப்பட்டு கஷ்டப்படுகிறேன். கஷ்டப்படுபவரைக் காப்பாற்றுவதான் கடமை. இதுதான் தர்மம். உன்னைச் சரணடைந்திருக்கிறேன். விருப்பத்துடன் உன்னை வேண்டுகிறேன். ஆகையால் என் விருப்பத்தை நிறைவேற்று” என்று கெஞ்சினாள் உலூபி.
நாககன்னிகையான உலூபியினால் இவ்வாறு சொல்லப்பட்ட அர்ஜுனன் தர்மார்த்தமாக அவளுடன் அந்த இரவு முழுவதும் சேர்ந்தான். அவர்களுக்கு பராக்கிரமசாலியாக இரவான் என்னும் அழகிய புத்திரன் பிறந்தான்.
சூர்யோதயம் ஆயிற்று. அந்த கௌரவ்யன் கிருஹத்திலிருந்து எழுந்து அவளுடன் சேர்ந்து கங்கோத்பத்திக்கு சென்றான். அர்ஜுனனை அங்கே கொண்டு வந்த விட்ட பிறகு உலூபி அவனுக்கு சில வரங்கள் தந்தாள்.
“எந்த ஜலத்திலும் யாராலும் உன்னை ஜெயிக்கமுடியாது. ஜலசரங்கள் எல்லாம் உனக்கு வசப்படும்”
கரையில் இருந்து அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஜலத்தில் மூழ்கினாள். ஒன்றிரண்டு நீர்க்குமிழிகள் கங்கையில் எட்டிப் பார்த்தது. போய்விட்டாள்.
ஓரு பகல் ஓரிரவு அங்கே இல்லாத அர்ஜுனனிடம் பிராமணர்கள் நாகலோகத்துக் கதைகளைக் கேட்டறிந்தார்கள். உலூபியைப் பற்றிய அர்ஜுனனின் விவரணையில் கட்டுண்டார்கள்.
பிராம்மணர்களுடன் அங்கிருந்து கிளம்பி இமயமலைச் சாரலுக்கு சென்றார்கள். முதலில் அகஸ்தியவடம் அடைந்தார்கள். பின்னர் விசிஷ்ட பர்வதம் ஏரி பிருகுதுங்கம் என்ற இடத்தில் அர்ஜுனன் ஸ்நானம் செய்தான். அங்கே கோதானங்கள் செய்தான். பின்னர் ஹிரண்யபிந்து மஹரிஷியின் தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தான். கிழக்கு திக்கை நோக்கிச் சென்றான்.
அலகநந்தா நதி, அபர நந்தா நதி, கௌசிகி நதி, கயாக்ஷேத்திரம், மஹாநதி, கங்கையின் தீர்த்தங்கள் என்று எல்லாவற்றையும் தரிசித்து ஆத்மசுத்தி செய்துகொண்டு பிராமணர்களுக்கு தானங்கள் பல செய்தான். அங்க வங்க கலிங்க தேசத்திலிருக்கும் புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்றான். அவனுடன் சென்ற பிராமணர்கள் கலிங்க தேசத்திலேயே அவனிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டார்கள்.
அங்கிருந்த சில துணைவர்களுடன் கடற்கரைக்குச் சென்றான். பின்னர் அங்கிருந்து கடற்கரை ஓரமாகவே நிறைய ஆலயங்களைத் தரிசித்துக்கொண்டே மஹேந்திரபர்வதம் வந்தான். பின்னர் கோதாவரியில் ஸ்நானம் செய்து தென் திசை நோக்கிப் புறப்பட்டான். காவிரி நதிதீரம் அடைந்தான். அங்கு ஸ்நானம் செய்து தேவரிஷி பிதிர் தர்ப்பணம் செய்தான். சமுத்திரக்கரை ஓரமாகவே சென்று மணலூர் என்னும் இடத்தை அடைந்தான்.

சித்ரவாஹனன் என்ற ராஜா அவ்விடத்தை ஆண்டுகொண்டிருந்தான். அவனுடைய பெண் சித்ராங்கதை மயக்கும் அழகோடு திகழ்ந்தாள். அவளைக் கண்டு காதலுற்ற அர்ஜுனன் நேரே அரண்மனைக்குச் சென்று சித்ரவாகனனிடம் “அரசே! நான் க்ஷத்ரியன். எனக்கு உங்கள் பெண்ணைத் தருவீர்களா?” என்று கேட்டான்.
சித்ரவாகனனுக்கு ஒரே ஆச்சரியம். அரண்மனை வந்து சபை நடுவில் நின்று பெண் கேட்கும் இவனுக்கு எவ்வளவு துணிச்சல் என்று வியந்தான்.
“நீ யார்? யாருடைய புதல்வன்? உன் பெயர் என்ன?” என்று கேட்டான்.
“நான் பாண்டவன். குந்தி புத்திரன். அர்ஜுனன்”
அர்ஜுனனைப் பார்த்து விழி விரிந்தான். சட்டென்று குதூகலமடைந்தான்.
“எங்களுடைய முன்னோர்கள் பற்றிய கதை ஒன்று சொல்கிறேன். அதன் முடிவில் உன்னிடம் ஒரு வேண்டுகோள் வைப்பேன். நீ தட்டாது சம்மதிக்கவேண்டும்”
“ம்..சொல்லுங்கள்”
“பிரபஞ்சன் என்றொரு ராஜா எங்களின் வம்சத்தில் சில தலைமுறைகளுக்கு முன்னர் ராஜ்ஜியம் ஆண்டுகொண்டிருந்தான். அவனுக்கு சந்ததியே இல்லை. சிவபெருமானைத் துதித்து கடும் தவம் புரிந்தான். பினாகபாணியும் தேவர்க்கு தேவரும் உமாபதியுமான சங்கரர் “இக்குலத்தில் இனி ஒவ்வொரு குழந்தை பிறக்கும். ஆனால் ஒன்றுதான் பிறக்கும்” என்ற வரத்தை அருளினார். அதுமுதல் இந்தக் குலத்தில் ஒரு சந்ததிதான் உண்டாகிறது. முன்னார்கள் எல்லோருக்கும் ஒரு புத்திரன் பிறந்தான். அது இப்போது என்னோடு முடிவடைந்துவிட்டது. எனக்கு ஒரே ஒரு பெண் பிறந்துவிட்டாள்”
இந்த இடத்தில் கதையை நிறுத்தினான் சித்ரவாகனன்.
”அதனால்...” என்று நகர்த்தினான் அர்ஜுனன்.
“என் குலத்தை இவள்தான் விருத்தி செய்யவேண்டும். *புத்ரிகா தர்மம் என்னும் சாஸ்திரத்தினால் இவளைப் புத்திரன் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறேன். உனக்கு இவளிடம் பிறக்கும் புத்திரன் எனக்கு கன்யாசுல்கமாக இருக்கட்டும். அவன் இங்கிருந்து என் சந்ததியை விருத்தி செய்வான். இந்த உடன்பாட்டின்படி நீ இவளை விவாஹம் செய்துகொள்ளலாம்”
“சரி” என்று தலையாட்டினான் அர்ஜுனன். சித்ராங்கதையின் அழகு அவனை வாட்டியது.
அவளை அவன் விவாஹம் செய்துகொள்ளும் போது ஏற்கனவே பதிமூன்று மாதங்கள் ஆகியிருந்தது. மேலும் மூன்றுமாத காலம் அங்கிருந்தான்.
தென் சமுத்திரக்கரையில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்றான். அங்கு ஐந்து தீர்த்தங்களை ரிஷிகள் விலக்கிவைத்திருந்தனர். ரிஷிக்கூட்டம் அந்த தீர்த்தங்களுக்கு அருகில் செல்லவே பீதியடைந்தார்கள்.
“ரிஷிபுங்கவர்களே! ஏன் அந்த ஐந்து தீர்த்தங்களை மட்டும் நெருங்காமல் இருக்கிறீர்கள்?”
“இந்த தீர்த்தஙக்ளில் ஐந்து முதலைகள் இருக்கின்றன. கால் வைத்தாலே ரிஷிகளை இழுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றன. ஆகையால் நாங்கள் இதில் ஸ்நானம் செய்வதில்லை”
வீரனான அர்ஜுனன் அந்த முதலைகளை ஒருகை பார்த்துவிடுவது என்று ஸுபத்ரர் என்னும் மஹரிஷியின் பெயரால் ஸௌபத்ரம் என்னும் தீர்த்தத்தில் இறங்கிவிட்டான். கரையிலிருந்த ரிஷிகள் பதறினார்கள். அவன் ஸ்நானம் செய்துகொண்டிருக்கும்போது ஒரு முதலை அவனது காலைக் கவ்வியது. அதை அப்படியே கையால் தூக்கி உடம்போடு சேர்த்து அணைத்து கரையை நோக்கி முன்னேறினான். உடனே அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது.
அர்ஜுனன் கையில் அகப்பட்டிருந்த முதலை உடனே ஆபரணங்கள் அங்கமெங்கும் பூட்டி மனதைக் கவரும் அழகோடு ஒரு பெண்ணானது.
“அழகியே! நீ யார்? நீ ஏன் முதலையானாய்?” என்று கேட்டான்.
“நான் ஒரு அப்சரஸ். என் பெயர் வர்க்கை. நான் குபேரனுக்குப் பிரியமானவள். என்னுடைய தோழிகள் ஸௌரபேயி, ஸமீசி, புத்புதை மற்றும் லதை. நாங்கள் ஐவரும் குபேரனுடைய கிருகத்துக்குச் சென்றுகொண்டிருந்தோம். போகும் வழியில் ஒரு அடர்ந்த வனம். அங்கே ஒளிபொருந்திய பிராமணன் ஒருவன் தவம் செய்துகொண்டிருந்தான். அவனைச் சீண்டிப் பார்ப்பதற்காக நானும் எனது தோழிகளும் அவன் முன்னே ஆடியும் பாடியும் தவத்தைக் கலைக்கப் பார்த்தோம். அப்போது அதில் கோபமுற்ற அந்த பிராமணன் “நீங்கள் முதலைகளாக நூறு வருஷ காலம் ஜலத்தில் சஞ்சரிக்கக்கடவது” என்று சாபமிட்டான்.
நாங்கள் அனைவரும் துயரமுற்று வாடிய முகத்துடன் பேசாமல் நின்றிருந்தோம். பின்னர் சாபம் கொடுத்த பிராமணனிடத்தில் சென்று சாபவிமோசனம் தருவதற்காக மன்றாடினோம்.
“பிராணிகளை ஹிம்சிக்காதவனே பிராமணன். நாங்கள் அழகினாலும் யௌவனத்தினாலும் காமத்தினாலும் பீடிக்கப்பட்டு இந்த தவற்றைச் செய்தோம். பொருத்தருள வேண்டும்.”
“நூறு என்பது ஒரு எண்ணிக்கைதான். நீங்கள் ஜலத்தில் இருந்துகொண்டு மனிதர்களை பிடித்துக்கொண்டிருக்கும்போது ஒரு புருஷஸ்ரேஷ்டன் உங்களை ஜலத்திலிருந்து கரைக்குத் தூக்குவான். அப்போது நீங்கள் சாபவிமோசனம் பெருவீர்கள். நூறு வருஷகாலம் முடிந்தவுடன் தான் விமோசனம் என்பது இல்லை” என்று சகாயமளித்தான்.
நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் எந்த தீர்த்தத்தில் முதலையாகக் கிடப்பது?
“உங்களுக்கு சாபவிமோசனம் கிடைத்த பிறகு நீங்கள் முதலையாகக் கிடந்த தீர்த்தங்கள் நாரீ தீர்த்தங்கள் என்ற பெயர் பெறும்.”
அந்தப் பிராமணனை நமஸ்காரம் செய்துவிட்டு எந்த தீர்த்தத்தில் முதலையாகிக் கிடப்பது என்று விழித்துக்கொண்டே ஐவரும் அந்த வனத்தில் நடந்துகொண்டிருந்தோம்.
“வெகு சீக்கிரத்தில் நம்மை கரையேற்றும் மனிதன் எந்த தீர்த்தம் வருவான்? எங்கு அவனைக் காலைப் பிடித்தால் நம்மை இந்தப் பாபத்திலிருந்து விமோசனம் பெற வைப்பான்?” என்று பேசிக்கொண்டே ஒரு பெரும் மரத்தைத் தாண்டும் போது நேரே ஒரு ஒளி வெள்ளம் தோன்றியது. யாரோ மகரிஷி போன்று தெரிந்தது. யாரது? என்று யோசிக்கும் போதே அருகில் வந்துவிட்டார்.
அவரைக் கண்டு ஆனந்தம் அடைந்தோம்.
அவர் யார் தெரியுமா?
அர்ஜுனன் வர்க்கையின் பேச்சைக்கேட்டு அசையாமல் நின்றிருந்தான்.

ஸுந்தோபஸுந்தர்கள்



யுதிஷ்டிரரின் தர்ம ஆட்சி இந்திரபிரஸ்தத்தில் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு நாள் ஆகாய மார்க்கமாக தேவலோக ரிஷி நாரதர் அங்கு வந்தார். நேரே யுதிஷ்டிரரின் சபையில் வந்து இறங்கினார். காதுகளில் பொற்குண்டலங்கள் ஆடிக்கொண்டிருந்தது. வெள்ளிக்குடையைப் பிடித்திருந்தார். முகத்தில் பிரம்மதேஜஸ் பொங்கியது.

[நாரதரின் குண விசேஷங்கள் பற்றிய இரண்டு பக்க குறிப்பு வருகிறது. இதில் நாரதரின் புத்தி பலம், ஆன்ம பலம், பக்தி பலம், தேஜோ பலம் என்று பல அரிய செய்திகள் இடம் பெற்றிருக்கிறது. முடிந்தால் தனி பதிவாக பின்னர் எழுதுகிறேன்]
நாரதர் வந்திறங்கியதும் சிம்மாசனத்திலிருந்து எழுந்து எதிர்கொண்டு அழைக்க ஓடினார் யுதிஷ்டிரர். அவருக்கு அபிவாதனம் செய்தார். பின்னர் கிருஷ்ணாஜினம் போடப்பட்ட ஆஸனத்தில் அவரை அமரவைத்தார். பின்னர் அவருக்குப் பூஜை செய்து நின்ற போது “நீயும் அமரலாம்” என்று நாரதர் சொன்னவுடன் சென்று தனது ஆசனத்தில் தர்மன் அமர்ந்தார். அருகில் இருந்த ராஜ்ய சேவகனை அழைத்தார். அவன் காதில் ஏதோ சொல்லியனுப்பினார்.
சிறிது நேரத்தில் திரௌபதி அங்கு வந்தாள். நேரே நாரத மகரிஷியின் காலில் விழுந்து வந்தனம் செய்தாள். நாரதர் அவளுக்கு அநேக ஆசீர்வாதங்களை வழங்கினார். பின்னர் “நீ செல்லலாம்” என்று உள்ளே அனுப்பினார்.
”புகழ்பெற்ற உங்கள் ஐவருக்கும் பாஞ்சாலி ஒரே தர்ம பத்னியாக இருக்கிறாள். அவள் பொருட்டு உங்களுக்குள் விரோதம் வளர்ந்துவிடக்கூடாது. அதற்கான வழிமுறைகளை நீங்களே வகுத்துக்கொள்ளுங்கள். முன்பொரு காலத்தில் ஸுந்தோபஸுந்தர்கள் என்ற சகோதரர்கள் யாராலும் வெல்லமுடியாமல் இருந்தார்கள். ஆனால் ஒரு பெண்ணின் பொருட்டு அவர்கள் இருவரும் அடித்துக்கொண்டு செத்தார்கள். அதுபோல இல்லாமல் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்”
யுதிஷ்டிரர் எழுந்திருந்தார்.
“மஹா முனிவரே! ஸுந்தோபஸுந்தர்கள் யார்? அவர்களது கதையை நீங்கள் எங்களுக்கு அருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்.
“ஹிரண்யகசிபுவின் அஸுர வம்சத்தில் வந்தவன் நிகும்பன். அவனுக்கு ஸுந்தன் உபஸுந்தன் என்று இரு புத்திரர்கள். இருவரும் ஒரே எண்ணமுள்ளவர்கள். அவர்களுக்கு ஆஸனம் ஒன்று. கிருஹம் ஒன்று. ராஜ்யம் ஒன்று. படுக்கை ஒன்று. போஜனம் ஒன்று. ஒருவனை விட்டு மற்றொருவன் உண்ணமாட்டான். பேசமாட்டான். மூவுலகையும் ஜெயிப்பதற்காக விந்தியமலை அருகே தவமியற்றச் செய்தார்கள். அவர்கள் நீண்ட காலம் உக்கிரமான தவம் செய்தார்கள். காற்றைப் புசித்தார்கள். கால் கட்டைவிரலில் நின்றார்கள். கையிரண்டும் விண்ணை நோக்கித் தூக்கியிருந்தார்கள். அவர்களின் தவத்தின் உக்கிரம் எப்படியிருந்தது தெரியுமா?”
சபை முழுவதும் அந்தக் கதையில் மூழ்கியிருந்தது. நாரதரின் இந்தக் கேள்வியில் அனைவரும் வெளியே வந்தார்கள்.

”விந்தியமலை புகையைக் கக்கியது. அப்போது அவர்களின் தவத்தைக் கண்டு தேவர்கள் அச்சமுற்றனர். ஸ்த்ரீகளையும் ரத்னங்களையும் பல முறை காட்டி ஆசை மூட்டினார்கள். அவர்கள் கொண்ட உறுதியை விடவில்லை. கடைசியில் பிரம்மதேவர் அவர்கள் முன் தோன்றினார். இருவரும் அவருக்கு கை கூப்பி வந்தனம் செய்தார்கள்.
“எங்களுடைய தவத்தினால் நீங்கள் சந்தோஷமடைந்துள்ளீர்கள். நாங்கள் இருவரும் மாயைகளையும் அஸ்திரங்களையும் அறிந்தவர்களாகவும் பெரும் பலம் வாய்ந்தவர்களாகவும் நினைத்தால் நினைத்த ரூபமெடுக்ககூடியவர்களாகவும் மரணமில்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். இதுவே நாங்கள் வேண்டும் வரம்”
நான்முகன் மெல்ல நகைத்தவாறே “மரணத்தைத் தவிர நீங்கள் வேண்டிய மற்றவைகள் உங்களுக்கு தந்தேன்” என்றார்.
இரு அசுரர்களுக்கும் இது ஏமாற்றமாக இருந்தது. உடனே பிரம்மதேவரிடம் “நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் கொல்லலாமே ஒழிய மற்ற எவராலும் எதாலும் எங்கும் எங்களுக்கு மரணம் நிகழக்கூடாது.” என்று வேண்டினார்கள்.
“மரணத்தைப் பற்றிய உங்களது கோரிக்கையையும் ஏற்று அந்த வரத்தைத் தருகிறேன்” என்று சொல்லி மறைந்தார் பிரம்மா.
ஜடாமுடிகளைக் களைந்து கிரீடம் தரித்து உயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு மிகவும் சந்தோஷமாக அந்தச் சகோதரர்கள் இருவரும் கொண்டாட்டமாக பொழுதைக் கழித்தார்கள். பல வருஷங்கள் ஒரு தினம் போலச் சென்றது.
மூவுலகையும் வெல்வதற்காக ஸுந்தோபஸுந்தர்கள் இருவரும் பெரும் சேனையுடன் புறப்பட்டார்கள். இந்திரலோகத்தை ஜெயித்தார்கள். பூமியின் உட்புறமாக சென்று பாதாள லோகத்தையும் பிடித்தார்கள். பின்னர் பிராமணர்களின் ஹோமங்களைத் தடுத்தார்கள். ரிஷிகளைக் கொன்றார்கள். அந்தணர்கள் அனைவரும் அனுஷ்டானங்களை விட்டுவிட்டு ஓடினார்கள். புலி சிங்கம் போன்ற கொடிய மிருகங்களின் ரூபங்களை எடுத்துக்கொண்டு தவமியற்றும் ரிஷி சிரேஷ்டர்கள் அனைவரையும் வேட்டியாடினர்.

ஸுந்தோபஸுந்தர்களின் இந்த செய்கைகளைக் கண்டு சூரிய சந்திரர்கள் நவக்ரஹங்கள், ஸப்தரிஷிகள் அஸ்வினி தேவர்கள் ஆகியோர் துயரம் அடைந்தனர். எல்லா திசைகளையும் ஜெயித்தார்கள். எதிரிகளே இல்லாதவர்களாகிவிட்டார்கள். குருக்ஷேத்திரத்தில் வாசம் செய்ய ஆரம்பித்தார்கள்.
தேவாதிதேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் ஓடினார்கள். ஸுந்தோபஸுந்தர்களின் அக்கிரமங்களையும் அழிச்சாட்டியங்களையும் எடுத்துரைத்தார்கள். இதற்கு ஒரு உபாயத்தை அவர்தான் காட்டவேண்டும் என்று வேண்டினார்கள்.
பிரம்மா சிறிது நேரம் யோசித்தார். பின்னர் விஸ்வகர்மாவை அழைத்தார்.
”மூவுலகத்தோரும் ஆசைப்படும்படியான ஒரு பெண்ணை உருவாக்கு” என்று கட்டளையிட்டார். விஸ்வகர்மா நான்முகனுக்கு நமஸ்காரம் செய்து ஆகச் சிறந்த பெண் ரூபத்தை சிந்தனை செய்தான். உலகந்தோரும் இருக்கும் அசைவன அசையாதவைகளில் இருந்து காட்சிக்கு இனியதாக உள்ளவைகளைக் கொண்டு ஒரு பெண்ணை தயாரித்தான். கோடிகோடியான ரத்னங்களிலிருந்து எள்ளளவு எடுத்து அவளது அவயங்களில் பதித்தான். மூன்று லோகங்களில் இருக்கும் ஸ்தீரிகளில் அவளைப் போன்றதொரு அழகை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள்.
அவளைப் பார்ப்பவர்களின் பார்வை ஒரு இடத்தில் பதிந்து போனால் அதைவிட்டு அந்தக் கண்கள் அகலாதவாறு அவளது தேகம் இருந்தது. நினைத்த ரூபம் எடுப்பவளாக அவள் படைக்கப்பட்டிருந்தாள். அந்த தேவ சபையே ஆச்சரியமாக அவளைப் பார்த்தது.
பிரம்மாவிடம் சென்று நமஸ்கரித்தாள்.
“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள்.
அநேக இரத்தினங்களில் இருந்து எள்ளளவு எள்ளளவாக எடுத்து அவளைப் படைத்ததினால் அவளுக்கு “திலோத்தமை” என்று பெயரிட்டார் பிரம்மதேவர்.


“திலோத்தமா! ஸுந்தோபஸுந்தர்கள் என்னும் அரக்கர்களிடம் செல். உன்னுடைய தேஜோன்மயமான அழகினால் அவர்களுக்கிடையே விரோதம் உண்டாகும்படி செய்.”
“அப்படியே ஆகட்டும்” என்ற திலோத்தமை அந்த தேவர் சபையை ஒரு முறை திருவலம் வந்தாள். அவள் பிரதக்ஷிணம் செய்யும் போது பிரம்மதேவர் கிழக்குப் புறம் இருந்தார். சங்கரர் தென்புறத்திலும் தேவர்கள் வடபுறத்திலும் இருந்தார்கள். ரிஷிகள் நாற்புறமும் கூடியிருந்தார்கள். அவள் பிரதக்ஷிணம் வரும்போது இந்திரனும் சங்கரரும் சஞ்சலமடைந்தார்கள். தென்புறம் வரும் போது சங்கரருக்கு அந்தத் திசையில் ஒரு முகம் முளைத்தது. மேற்க்கு திசை வரும்போது அங்கு ஒரு முககும் வடதிசையில் ஒரு முகமும் கீழ்த்திசையில் ஒரு முகமும் மலர்ந்து நான்முகரானார். இந்திரன் அவள் செல்லும் திசையெல்லாம் கண்களை உண்டாக்கி சகஸ்ரநேத்திரனானான்.தேவக்கூட்டமெல்லாம் அவள் மேலேயே கண்ணாக இருந்தார்கள். அவள் செல்லும் காரியம் ஜெயம் என்று அனைவரும் நம்பிக்கையுடன் பிரம்மாவிடம் விடைபெற்றார்கள்.
ஸுந்தோபஸுந்தர்கள் எதிரிகள் யாரும் இல்லாததால் வனப் ப்குதிகளில் மகிச்சியுடன் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள். தேவலோகத்தின் உயர்ந்த பொருட்களைக் கொண்டு வந்து விந்தியமலைச்சாரலில் வைத்துக்கொண்டு மகிழ்ந்தவண்ணம் இருந்தார்கள். அப்போது ஒற்றையாடையில் கவர்ச்சி சிந்தும் கண்களுடன் திலோத்தமை அங்கு சென்றாள்.
மதுபான மயக்கத்தில் இருந்த அசுரர்கள் இருவரும் அவளைக் கண்டதும் காமவசப்பட்டனர். ஸுந்தன் வலக்கையையும் உபஸுந்தன் இடக்கையையும் பிடித்துக்கொண்டு “இவள் எனக்குத்தான்” என்று இழுத்தார்கள். புருவம் நெறித்தார்கள்.
“இவள் என்னுடைய மனைவி. நீ மரியாதை செய்” என்றான் ஸுந்தன்.
“இவள் உனக்கல்ல. என்னுடையவள்” என்றான் உபஸுந்தன்.
இருவருக்கும் வெறி ஏறியது. கள்ளுண்ட மயக்கதில் இருந்த இருவரும் கதைகளை எடுத்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டார்கள். பயங்கரமான அந்த அசுரர்கள் இருவரும் அந்தப் பெண்ணின் பொருட்டால் அடித்துக்கொண்டு செத்து விழுந்தார்கள்.
பிரம்மா அவ்விடம் வந்தார்.
“சூரியன் சஞ்சரிக்கும் காலமெல்லாம் நீயும் இருப்பாய். ஆனால் உன்னுடைய பிரதிபலிக்கும் ஒளியால் யாரும் உன்னைப் பார்க்க முடியாது” என்று வரமளித்தார். இந்திரன் திரிலோகத்தையும் ஆளத்தயாரானான்.
இப்படி நெருங்கிய ஸ்நேகிதம் நிரம்பியவர்களாகவும் அன்பைப் பொழிபவர்களாகவும் இருந்த ஸுந்தோபஸுந்தர்கள் இருவரும் திலோத்தமைக்காக அடித்துக்கொண்டார்கள். மரணமடைந்தார்கள். அதுபோல அல்லாமல் நீங்கள் அனைவரும் திரௌபதியைக் காரணமாக வைத்து சண்டையிடக்கூடாது. அவளுடன் வசிக்கும் உபாயத்தைக் கண்டறிந்து சுகமாக இருக்கக்கடவீர்” என்று நாரதர் கதையை முடித்தார்.
தேவரிஷியாக நாரதர் முன்னிலையில் பாண்டவர்கள் ஒரு விதி செய்துகொண்டார்கள்.
“கிருஷ்ணை ஒவ்வொருவன் கிரஹத்திலும் ஒரு வருஷம் வசிப்பாள். நமக்குள் ஒருவன் திரௌபதியோடு இருக்கும்போது இன்னொருவன் பார்த்தால் அவன் பன்னிரண்டு மாதம் பிரம்மசாரியாக வனம் போக வேண்டும்”
அனைவரும் இதை ஒத்துக்கொண்டார்கள். நாரதருக்கு சந்தோஷம். வந்த காரியம் முடிந்ததென்று அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
[ராஜ்யலாப பர்வம் முடிந்தது]
*

ஐந்து யானைகளுடன் கூடிய சரஸ்வதி என்னும் நதிபோல திரௌபதி பாண்டவர்களுடன் கூடியதாலும் அவர்கள் ஒவ்வொருவரும் திரௌபதியுடன் கூடியதாலும் மிகுந்த சந்தோஷமாக இருந்தார்கள்.
நீண்ட காலம் ஆனந்தமாகச் சென்றது.
ஒருநாள் பிராமணன் ஒருவன் அர்ஜுனனின் மாளிகை வாசலில் வந்து நின்று குரல் கொடுத்தான்.
“இந்த அக்கிரமத்தைக் கேட்க ஆளில்லையா? சாந்தமான பிராமணனின் சொத்து கொள்ளை போகிறது”
வெளியே ஓடிவந்தான் அர்ஜுனன்.
“என்னவாயிற்று?”
“என்னுடைய பசுக்களை திருடர்கள் கவர்ந்து சென்றார்கள். நீங்கள்தான் மீட்டுத் தரவேண்டும். ஆறில் ஒரு பங்கை வரியாக வாங்கும் ராஜா ஜனங்களின் துயரை நீக்கி ரக்ஷிக்க வேண்டும். இல்லையேல் பாபிஷ்டனாகிறான்”
தனஞ்செயனின் ஆயுதங்கள் யுதிஷ்டிரர் கிருகத்தில் இருந்தது. இப்போது திரௌபதி யுதிஷ்டிரருடன் இருக்கும் காலம். அங்கே சென்றால் நிபந்தனையை மீறியவன் என்ற அவப்பெயர் வரும். என்ன செய்யலாம் என்று ஆழ்ந்த யோசனையில் இருந்தான் அர்ஜுனன். அங்கே நின்றிருந்த பிராமணன் புலம்ப ஆரம்பித்தான்.
“புலியின் குகையை அது இல்லாத போது அல்ப நரி மிதிக்கிறது. பிராம்மணனுடைய ஹவிஸ் காக்கைகளினால் கெடுக்கப்படுகிறது. இதைக் கேட்பார் இல்லையா?”
அழும் இந்த பிராமணனை ரக்ஷிக்காவிட்டால் தர்மம் காக்க தவறியவன் ஆகிவிடுவோம். அண்ணாவாகிய தர்மம் இல்லத்தின் வாசற்படி மிதித்தால் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி சத்தியம் தவறியவன் ஆகிவிடுவோம். பின்னர் பன்னிரெண்டு மாதகாலம் வனவாசம் செல்ல வேண்டும். சரீரமே போனாலும் பரவாயில்லை. பிராமணனின் பசுக்களை மீட்க வேண்டும்.
இவ்வாறு மனதில் எண்ணிக்கொண்டு தர்மர் மாளிகையினுள் புகுந்தான். தனது ஆயுதத்தை எடுத்துக்கொண்டு முகத்தை மூடிக்கொண்டே வெளியே வந்துவிட்டான்.
வில்லை எடுத்துக்கொண்டு வந்தவன் அந்த பிராமணனையும் தேரில் ஏற்றிக்கொண்டு பசுக்களை கவர்ந்து சென்றவர்களின் திசையில் விரைந்தான். அதிசீக்கிரத்தில் அவர்களைக் கண்டுபிடித்து சரமாரி பொழிந்து அவர்களை வதைத்து பசுக்களை மீட்டு பிராமணனிடம் ஒப்படைத்தான். கண்களில் கண்ணீரோடு அதைப் பெற்றுக்கொண்ட பிராமணன் அவனை ஆசீர்வதித்தான்.
அரண்மனை திரும்பிய அர்ஜுனன் தர்மரிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.
“நான் நாம் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டேன். ஆகையால் வனம் செல்கிறேன்”
“அர்ஜுனா! பெரியவன் கிரஹத்தினுள் சிறியவன் நுழைவது தர்மலோபமில்லை. சிறியவன் இருக்கும்போது நான் நுழைந்தால் அதுதான் பிழை. நீ எங்கும் செல்ல வேண்டாம். இங்கேயே இரு.” என்று நா தழுதழுக்க கேட்டுக்கொண்டார் தர்மபுத்திரர்.
“கபடமாக தர்மம் செய்வது தகாது. நான் சத்தியத்திலிருந்து விலகமாட்டேன். ஆயுதத்தைத் தொட்டு சத்தியம் செய்கிறேன்”
அர்ஜுனன் பிரம்மசாரியாக வனவாசம் கிளம்பிவிட்டான். ஒன்றல்ல இரண்டல்ல பன்னிரெண்டு மாதங்கள்.

யுதிஷ்டிர பட்டாபிஷேகம்


பாண்டவர்களின் வருகையால் அரண்மனை களை கட்டியது. துரியோதனனின் மனைவி காசிராஜனின் மகள். அவள் மற்ற திருதராஷ்டிர புத்திரர்களின் மனைவிகளோடு திரௌபதியை மரியாதை செய்து அழைத்தாள். அந்தப்புரத்தில் நுழைந்த குந்தியும் திரௌபதியும் காந்தாரிக்கு நமஸ்காரம் செய்தார்கள். காந்தாரி அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்தாள். அப்போது திரௌபதியை அவள் தழுவிக்கொண்டாள். சட்டென்று அவள் மனதில் “இவள் தான் நம் புத்திரர்களுக்கு நமன்” என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. துணுக்குற்றாள்.

”விதுரர் இங்கே வந்திருக்கிறாரா?” என்று வினவினாள் காந்தாரி.
“இங்கேதான் இருக்கிறேனம்மா” விதுரர் பதில் கொடுத்தார்.
“விதுரரே! ராஜபுத்ரியான குந்தியை அவள் மருமகளோடும் அவள் கொண்டு வந்த சீர் வரிசைகளோடும் பாண்டுவின் கிரஹத்திற்கு சீக்கிரமே அழைத்துப் போகவேண்டும். அங்கே அவர்கள் மகிழ்ந்திருக்கட்டும்” என்றாள்.
"அப்படியே ஆகட்டும்” என்று தலை வணங்கிச் சொன்னார் விதுரர்.
**
வஸந்தமும் வெப்பமும் மாறி மாறி காலம் ஓடியது. கிருஷ்ணனும் பாண்டவர்களுடன் சிலகாலம் அஸ்தினாபுரத்தில் வசித்திருந்தார். ஒரு நாள் திருதராஷ்டிரரிடம் இருந்து பாண்டவர்களுக்கு அழைப்பு வந்தது. விரைந்து சென்று வணங்கினர். ஆஜானுபாகுவாக பக்கத்தில் பீஷ்மர் நின்றிருந்தார். அவையில் துரோணர் கிருபர் என்று மரியாதைக்குரியவர்களின் தலைகள் தென்பட்டன.
“யுதிஷ்டிரா!” வாஞ்சையுடன் அழைத்தான் திருதராஷ்டிரன். பீஷ்மர் கண்களில் சிரிப்பு.
“இந்த ராஜ்ஜியம் பாண்டுவினால் விஸ்தரிக்கப்பட்டது. உனது தந்தை எனது கட்டளையை மீறியதில்லை. நீயும் மீறமாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு”
விஷயத்தில் பொடி வைத்தான் திருதராஷ்டிரன். பீமனும் அர்ஜுனனும் திருதராஷ்டிரனைக் கூர்ந்து நோக்கினார்கள். பரந்த சபையில் இவர்கள் ஐவர் இருக்க விதுரர் மற்றும் பீஷ்மரோடு திருதராஷ்டிரனும் இன்னபிற அமைச்சர்களும் அமர்ந்திருக்க வாயிற்காப்போர்கள் சிறியதாக தெரியும் அளவிற்கு வெகுதூர வாசலில் நின்றிருந்தார்கள். பெரும் சபை அது.
“என் மைந்தர்கள் அனைவரும் துராத்துமாக்கள். அகங்காரத்தின் உருவங்கள். என் கட்டளையை ஒருபோதும் மதிக்கமாட்டார்கள். கர்விகள். இவர்களோடு மீண்டும் விரோதம் வேண்டாம். நீ பேசாமல் காண்டவபிரஸ்தத்துக்கு சென்றுவிடேன். தேவேந்திரனைப் போல அர்ஜுனன் உன்னைக் காப்பான். அங்கே உங்களை யாராலும் அசைக்கமுடியாது. கிருஷ்ணனிடமும் கேட்டுக்கொள். அவனும் சம்மதிப்பான்”
இவர்கள் பின்னாலேயே கிருஷ்ணனும் அந்த அவைக்கு வந்து தூரத்தில் அமர்ந்திருந்தான். பாண்டவர்கள் ஐவரும் கிருஷ்ணன் அமர்ந்திருக்கும் இடம் சென்று சுற்றி அமர்ந்துகொண்டனர். ஆலோசனை செய்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டேயிருக்கும் போது திருதராஷ்டிரன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து நின்றான்.
“விதுரா!”
திருதராஷ்டிரன் பக்கத்தில் ஓடிச்சென்று நின்றார் விதுரர்.
“ராஜ்ஜிய அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை தயார் செய்யச் சொல். யுதிஷ்டிரனுக்கு இப்போதே ராஜ்யாபிஷேகம் செய்யப் போகிறேன். பிராமணர்களுக்கும் நகரத்திலுள்ள பெரிய மனிதர்களுக்கும் அழைப்பு அனுப்புங்கள். மந்திரிகளையும் பந்துக்களையும் அழைக்க வேண்டும். ஆயிரம் கோ தானம் செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள். பிராமணர்களுக்கு கிராமங்களை தானம் செய்ய வேண்டும்”
விதுரர் சந்தோஷத்தில் விக்கித்து நின்றார். பீஷ்மர் ஏற்கனவே பாண்டவர்களைப் பார்த்து பெருமிதத்துடன் நின்றிருந்தார். துரோணரும் கிருபரும் சந்தோஷத்தின் எல்லையில் இருந்தார்கள்.
“விதுரா! நீ ஓடிப்போய் கிரீடங்களையும் முத்து மாலைகளையும் பொன்னாலான மாலைகளையும், அரைஞானையும் பொற்பூணூலையும் அரைக்கச்சையையும் கொண்டு வா. ஆயிரத்தெட்டு யானைகளில் கங்கை நீர் கொண்டு வரட்டும். குந்தியின் ஜ்யேஷ்ட புத்திரன் யுதிஷ்டிரன் இராஜ வாகனத்தின் மீதேறி மக்கள் ஜெய கோஷமிட வலம் வரட்டும். எனக்கு உபகாரம் செய்த பாண்டுவுக்கு நான் செய்யும் பிரதியுபகாரமாக இருக்கட்டும்”
பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர் என்ற பெரும் அறிஞர் கூட்டம் “சரி...சரி...சரி...” என்று ஆதரித்து கோஷம் எழுப்பினார்கள். ஒரு ஓரத்தில் நின்றிருந்த அத்தையின் முகத்தைப் பார்த்தார் ஸ்ரீகிருஷ்ணர். அவளுடைய ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை என்பதுபோல அமர்ந்திருந்தாள்.
“அரசர்க்கு அரசே! உம்முடைய இந்தச் செயல் கௌரவர்களுக்கு கீர்த்தி தரக்கூடியது. இதை உடனே நடத்துங்கள்” என்றார் கிருஷ்ணர்.
சில நாழிகைகள் ராஜ்யாபிஷேகத்தை நடத்துவதற்கான முஸ்தீபுகளில் சென்றது. அனைவரும் பெரிய மனிதர்களுக்காகக் காத்திருக்க அங்கே கிருஷ்ண த்வைபாயனர் ப்ரவேசித்தார். குந்தியும் பீஷ்மரும் அவையோரும் அவர் ராஜ்யாபிஷேகம் செய்து வைப்பதை சிலாக்கியமாகக் கருதினர். அனைவரும் வேண்டிக்கொள்ள அவரே யுதிஷ்டிரரருக்கு பட்டாபிஷேகம் செய்ய ஒப்புக்கொண்டார்.
கிருஷ்ணர், கிருபர், துரோணர், தௌமியர், வியாஸர் என்று அனைவரும் சேர்ந்து யுதிஷ்டிரரை சிம்மாசனத்தில் அமரவைத்தார்கள். பொற்குடத்தில் கொண்டு வரப்பட்ட கங்கை நீரால் வியாஸர் யுதிஷ்டிரருக்குப் பட்டாபிஷேகம் செய்தார். எல்லோரும் “ஜய..ஜய” என்று வெற்றி கோஷமிட்டார்கள். யானை மீதேறி அஸ்தினாபுரத்தை வலம் வந்தார். அரண்மனைக்குள் அவர் பிரவேசிக்கும் முன்னர் காந்தாரியின் புத்திரர்களான துரியோதனாதிகள் அனைவரும் சென்று திருதராஷ்டிரனை தங்களுக்கு வஞ்சம் இழைத்துவிட்டதாக முறையிட்டனர்.
கிருஷ்ணன், குருவம்சத்தார் அனைவரும் சபையில் அமர்ந்திருக்க பட்டாபிஷேகம் ஆன யுதிஷ்டிரரிடம் திருதராஷ்டிரன் பேசினார்.
“யுதிஷ்டிரா! ராஜ்யாபிஷேகம் ஆயிற்று. நீ உடனே காண்டவபிரஸ்தம் செல். ஆயுவும் புரூரவஸும் நகுஷனும் யயாதியும் காண்டவபிரஸ்தத்தில்தான் வாசம் செய்தனர். பூருவம்சத்தவர்க்கு அதுதான் ராஜதானி. புதன் புத்திரனான புரூரவஸின் லோபத்தனத்தினால் ரிஷிகள் அதனை அழித்தார்கள். ஆதலால், நீ சென்று காண்டவபிரஸ்தத்தை விருத்தி செய்.”
பாண்டவர்கள் இதற்கு மறுபேச்சே பேசவில்லை. சபையில் பெரியவர்களுக்கு நமஸ்கரித்து தேர்கள், குதிரைகள், யானைகள், காலாட்படைகளோடும் அங்கிருந்து புறப்பட்டார்கள். பாண்டவர்கள் மீதிருந்த அன்பின் காரணத்தினால் அவர்கள் பின்னாலேயே அஸ்தினாபுரத்து மக்களும் புறப்பட்டார்கள். சகுனியும் துரியோதனனும் அப்படிப் புறப்பட்ட மக்களை “பாண்டவர்களுடன் சேர்ந்து யாரும் செல்லக்கூடாது” என்று தடுத்தார்கள்.
காண்டவபிரஸ்தத்தை பாண்டவர்கள் அடைந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணர் இந்திரனை நினைத்தார். தேவலோகத்தில் இந்திரன் உடனே அவர்களுடைய தேவதச்சனாகிய விஸ்வகர்மாவை அழைத்தான்
“இன்றுமுதல் அந்த நகரம் அழகில் சிறந்த இந்திரபிரஸ்தம் என்ற பெயரில் புகழ்பெற்று பூமியில் இருக்கும் தேவலோகமாகத் திகழ வேண்டும்”
அடுத்த கணம் பூலோகத்தில் கிருஷ்ணர் முன்னால் நின்றான் விஸ்வகர்மா.
“ப்ரபோ! நான் என்ன செய்ய வேண்டும்?”
“இந்திரனுடைய அமராவதிக்கு நிகரான நகரமாக இதை நிர்மாணம் செய்.” என்று கட்டளையிட்டார் கண்ணபிரான். அவ்விடத்தில் பாண்டவர்கள் சாந்திஹோமம் செய்தார்கள். விஸ்வகர்மா தனது வேலையைத் துவங்கினான்.
விஸ்வகர்மா மாட மாளிகைகளை உருவாக்கினான். ஆங்காங்கே தாமரைத் தடாகங்கள் முளைத்தன. மாமரத்திலிருந்து பலவிதமான மரங்கள் ஆங்காங்கே நட்டுவைக்கப்பட்டு சிறிது நேரத்தில் காய் தள்ளத் துவங்கின. நந்தினி என்ற ஒரு நதி அந்த நகரத்தைச் சுற்றி ஓடியது. கோக்களும் குதிரைகளும் மேய்ந்தன. வீதிகள் ஒழுங்கோடு நிர்மாணிக்கப்பட்டன. மயில்களின் நடனமும் குயில்களின் பாட்டும் அந்த நகரத்தின் அமைதியைப் பறைசாற்றின.
மொத்தம் முப்பத்திரண்டு வாயில்கள் கொண்ட நகரம். ராஜ வாஹனத்தில் கிருஷ்ணனுடன் யுதிஷ்டிரர் பிரவேசித்தார். சகுனி, துரியோதனன், கர்ணன் என்று பெரும் கௌரவக் கூட்டமே அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். வியாஸருக்கும் விஸ்வகர்மாவுக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு யுதிஷ்டிரர் அரண்மனையினுள் ஓடிவந்தார். கண்கள் அரக்கப்பரக்க ஸ்ரீகிருஷ்ணரைத் தேடியது.
“யாதவ திலகமே! உம்மால் எனக்கு இந்த ராஜ்ஜியம் கிடைத்தது. பாண்டவர்களுக்கு எந்த ஆபத்துக்காலத்திலும் நீரே கதி. உங்கள் அனுக்கிரஹத்தால் நாங்கள் ராஜ்யாதிகாரத்தில் இருக்கிறோம்” என்றார்.
“யுதிஷ்டிரா! உம்முடைய சக்தியினால் இந்த ராஜ்ஜியம் கிடைத்தது. தகப்பன் பாட்டன் என்று வம்சாவழியாக வரும் ராஜ்ஜியம் உனக்குக் கிடைக்காமல் போகுமா? திருதராஷ்டிர புத்திரர்கள் கெட்ட நடத்தையுள்ளவர்கள். மேன்மேலும் சந்தோஷமாயிருக்க பிராமணர்களைக் காப்பாற்றும். மஹிமை பொருந்திய நாரத மாமுனிவர் இன்னும் சற்று நேரத்தில் இங்கே வருவார். அவரது அறிவுரைகளை வாங்கிக்கொள்ளுங்கள். அவரின் உபதேசத்தின்படி ஆட்சி செலுத்தும்”
குந்தியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் சமுத்திரமானது.
“நீ நாதனாக இருப்பதினால் நாங்கள் உயிர் பிழைத்து இருக்கிறோம். அரக்குமாளிகை தீப்பற்றியது உனக்குத் தெரிந்திருக்கிறது. நீ இல்லையென்றால் நாங்கள் பிழைப்பதெப்படி? உன்னைப் பார்த்தவுடனேயே எங்கள் துயரங்கள் விலகிவிடுகின்றன. கோவிந்தா!”
கண்ணபிரான் தன் அத்தையாகிய குந்தியை வணங்கி விடைபெற்றார். பலராமருடன் குதிரையேறி துவாரகா நகரம் சென்றார்.
**
யுதிஷ்டிரர் தர்மபரிபாலனம் செய்துகொண்டிருக்கிறார். திரௌபதியுடன் பாண்டவ சகோதரர்களுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறாள்.
அப்போது நாரதமகரிஷி தர்மபுத்திரைப் பார்க்கும் பொருட்டு அஸ்தினாபுரம் வந்தார்.